«மேதகு» வரலாற்றுண்மைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரபாகரன் என்பாரது உண்மைக் கதை எனப் புனைகிறார்கள். பல வரலாற்றுப் பொய்களை சாட்சியென காட்சிப்படுத்தி அதன் மூலம் கதையில் உலாவ விடப்பட்ட பாத்திரங்களான «தமிழினத் துரோகிகள்» மட்டும் எவ்வாறு பிரபாகரனை போராளியாக்கினர் என பிரபாகரனின் பாசிச வரலாற்றை தூக்கி நிறுத்துகின்றனர்.

ஆரம்பம் முதலே பிரபாகரனுக்கு அரசியல் பாடம் எடுத்ததே தமிழரசுக் கட்சியும், அதன் பின்வந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் தான். அவர்களால் துரோகிகளாகச் சுட்டி கைகாட்டப்பட்டவர்களைத்தான் அவர்களின் கைப்பாவையாக நின்று சுட்டுத் தள்ளினர் பிரபாகரன் குழுவினர். ஏன் உமாமகேஸ்வரன் குழுவும் தான்.

இலங்கைப் பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் என்றுமே எங்குமே மக்கள் மத்தியில் வெளிப்பட்டிராத குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் அரசியல் உரைகளில் பிரபாகரன் ஈர்க்கப்பட்டார் என வரலாறு திரிக்கப்படுகிறது.

எந்த விடுதலை இயக்கத்தினதும் வரலாறையோ அல்லது நூல்களையோ கற்பதற்கு அவற்றைக் கைகளில் ஏந்தாத அப்படி ஏந்துபவர்களை போட்டுத்தள்ளியதை, வெறுத்ததை நடைமுறையில் கொண்ட பிரபாகரன் கைகளில், சேகுவோராவின் மற்றும் பகத்சிங்கின் அட்டைப்படங்களோடு புத்தகங்கள் ஜொலிக்கின்றன. புத்தகங்களோடு இருப்பவர்களை, அவற்றை விவாதங்களினூடு நடைமுறையில் கொண்டுவர விவாதம் செய்தவர்களைக் கூட பிரபாகரன் துரோகிகளாகவே கண்டு கொண்டார். வலதுசாரிய இராணுவாத போக்கிலும் பாசிச நடைமுறையிலும் இறுதிவரை ஊறிப் போயிருந்த பிரபாகரன் கையில் இந்தப் புத்தகங்கள் வாசிப்பில் இருந்திருப்பதாக கூறுவது பிரபாகரனையே அவமதித்ததாகும். யாழ்ப்பாண சைவ வெள்ளாளிய தமிழ் தேசியத்துக்கு சேகுவேராவையும் பகத்சிங்கையும் காட்டி இடதுசாரிச் சாயம் பூசும் முயற்சி.

கல்வியங்காட்டு செட்டி, நன்நடத்தைப் பள்ளியிலிருந்து திரும்பி வந்த செட்டி தான் பிரபாகரனது ஆயுத நடவடிக்கைகளில் ஆசானே ஒழிய வேறு யாருமல்ல.

நிலவுடைமை மன்னர்களது வரலாற்றை வாசித்து, அதன் வழிப்பட்ட கனவுகளைச் சுமந்து, தனது குறுநில மக்களாக தமிழ் மக்களை நினைத்து, அவர்களை ஆள பாசிச வழிகளை நாடியவரே பிரபாகரன்.

சிங்கள பேரினவாதம் பெற்றெடுத்த தமிழினவாதம் தான் பிரபாகரனுக்கும் ஏனையோருக்கும் உரம் இட்டது. அது மறுக்க முடியாதது. அதேவேளை இருபக்க இனவாதங்களும் ஒன்றொன்றுக்கு உரமேற்ற, அதனை நீரூற்றி வளர்த்த தமிழரசுக் கட்சியின் அரசியல் தாலாட்டில் வளர்ந்து நிமிர்ந்தவர் தான் பிரபாகரன். பின்நாட்களில் வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போல் துரோகிகளைச் சுடச் சொன்னவர்களான அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரனும் சுடப்பட்டார்கள். எப்படி அல்பிரட் துரையப்பாவை துரோகியாக அமிர்தலிங்கம் சுட்டிக்காட்ட பிரபாகரனால் சுடப்பட்டாரோ, அதே துரோகிகளாகவே அவர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.

பிரபாரகரனை இயங்க வைத்தது «துரோகிகளை» அழிப்பது என்னும் கோட்பாடே ஒழிய எந்த விடுதலைக் கோட்பாடோ அல்லது தத்துவமோ அல்ல. தனிமனித சாகசமும் ஆயுத வெற்றிக் குவிப்புகளும் அதன் மேலான புகழுமே பிரபாகரனை யாழ்ப்பாணத்தார் இயக்கத் தலைமையில் வைத்துக் கொண்டாடக் காரணமானது.

சிங்கள சிறி இலக்கத்தின் மேல் தார் பூசும் இயக்கம் 1958 இன் ஆரம்பத்தில் நடந்தது.

பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது 26 யூலை 1957. ஒப்பந்தம் மே 1958 இல் கிழித்தெறியப்பட்டது.

இவையெல்லாம் நடக்கின்றபோது பிரபாகரனது வயதையும் கணித்துக் கொள்ளவும். பிரபாகரன் பிறந்த திகதி நவம்பர் 26 1954. பிரபாகனுக்கு அப்போது வயது அதிகபட்சம் 4 என்பதையும் குறித்துக் கொள்க.

பிரபாகரனின் ஆயுத நடவடிக்கை யூலை 27, 1975 அன்று பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலில் வைத்து அல்பிரட் துரையப்பா கொலையுடன் பகிரங்கமாகிறது. அப்போது பிரபாகரனுக்கு வயது 21. இந்த வயதை எட்டும் வரை பிரபாகரனிடம் கருக்கொண்ட அரசியலை வழங்கியவர்கள் அதுவும் ஆயுத நடவடிக்கை மூலம் துரோகிகள் களையெடுப்பு என்ற நடவடிக்கைக்கு சிங்களவன் தோலில் செருப்பு தைத்து போடுவோம் என்று மேடைப் பேச்சுக்களால் உசுப்பேத்தியவர்கள் தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியுமே.

செட்டி, தமிழரசுக் கட்சி ஆலாலசுந்தரத்தால் தேவைப்படும் போதெல்லாம் பாவிக்கப்படும் ஒரு அடியாள். அந்த அடியாளோடு கூட்டு வைத்து ஆயுத வன்முறையில் வந்தவர் தான் பிரபாகரன். பின்னர் அதே செட்டி பிரபாகரனால் இலக்கு வைக்கப்பட்டார்.

அதன் பின்னரே குட்டிமணியோடு கொள்ளை நடவடிக்கையில் பிரபாகரன் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

தமிழராய்ச்சி மாநாட்டில் நடந்ததாகக் காட்சிப்படுத்தப்படும் வன்முறையில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனதாக காட்டப்படுவது உண்மையில் நடந்த இழுபறியில் வானம் நோக்கி தீர்க்கப்பட்ட எச்சரிக்கை வெடி உயர் மின்னழுத்தக் கம்பியை அறுத்துவிட, மின்னொழுக்கு ஏற்பட்டதனால் 9 பேர் உயிரிழந்தனர். இதற்காக பழிவாங்கும் நடவடிக்கையாகவே சந்திரசேகரவின் வாகனம் மீது சிவகுமாரன் மறைந்திருந்து குண்டு வீசுகிறார். அந்த நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை.

அது தொடர்பாக சிவகுமாரன் பொலிசாரினால் தேடப்பட்டு பொலிசார் கைது செய்ய நெருங்கியபோது அதிலிருந்து தப்புவதற்காய் சிவகுமாரன் வயல்வெளிகளை தாண்டி ஓடித் தப்பும் முயற்சியில் தோற்றுப்போகவே சயனைட்டை கடித்து உயிரை மாய்க்கிறார்.

யுத்தம் தின்ற தேசத்தின் வரலாற்றை அதன் அணுவணுவான விபரங்களை எல்லாம் தெரிந்தவர் போல் தி.கிட்டு வியாபாரப் பொருளாக்கும் நோக்கமே «மேதகு».

பல்கலைக்கழக உயர்கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்ட தரப்படுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் பரம்பரை பரம்பரையாக கல்வியை தமது பிடிக்குள் வைத்துக் கொண்டவர்கள். தமது பிள்ளைகளை டொக்டராகவும், எஞ்சினியராகவும் உருவாக்க முடியாதவாறு அத்துறைகளுக்கான அனுமதி வெட்டுப்புள்ளி மொழிவாரியாக அதிகரிக்கப்பட்ட போது அசைந்து போனார்கள். அவர்களாலேயே கல்வி மறுக்கப்பட்டு பின்னடைந்து நின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் கல்வி வாய்ப்பில் கடைந்தெடுத்த சாதிமான்களாக நின்று நிலைபெற்ற அவர்கள், தரப்படுத்தல் வந்தவுடன் சீற்றத்துடன் தனிநாடே தீர்வென்றார்கள். தங்கள் மடியில் வைக்கப்பட்ட கை, கல்விக்குப் புறம்பாக்கி வைத்த ஒடுக்கப்பட்ட மக்களின் மடியிலும் வைக்கப்பட்டு விட்டதென ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதையாக நீயும் தமிழனே என்றார்கள்.

பின்னர் தரப்படுத்தல் என்பது மொழிவாரி அடிப்படையில் இருந்து மாவட்ட அடிப்படைக்கு மாற்றப்பட்டபோது பின்தங்கிய மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி குறைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கு வெளியே உள்ள ஏனைய பின்தங்கிய மாவட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல அது வழிவகுத்தது. யாழ்ப்பாணத்துக்குண்டான அதன் கல்வி மேலாதிக்கம் மற்றைய மாவட்ட தமிழ் மாணவர்களுக்கு வழிவிட மாவட்ட ரீதியான தரப்படுத்தல் வழிவகுத்தது.

பிரபாகரனுக்கு ஒரு வரலாறு உண்டு. அது ஒரு பாசிசத்தின் வரலாறு. இலங்கையின் பேரினவாதத்துக்கு எதிரான நியாயப்பாடுகளை வைத்து நியாயப்படுத்தப்படும் பாசிசத்தின் வரலாற்றில் பிரபாகரன் ஒரு பாத்திரம். அந்தப் பாத்திரத்தை வடிவமைத்தவர்கள் யாழ்ப்பாண வெள்ளாளியத்தின் அரசியல் பிதாமகர்கள். அந்த சித்தாந்தத்தின் வழி சென்று யுத்தத்தின் முடிவில் அதே சித்தாந்த மூலவர்களால் என்றென்றும் போற்றப்படும் ஏகாதிபத்திய நாடுகளின் துணைகளுடன் அழித்து முடிக்கப்பட்டவர் பிரபாகரன். பிரபாகரன் இந்த சித்தாந்தங்களின் கருவியாக யுத்தம் நடாத்தி இறுதியில் ஒரு அஞ்சலிக்கு கூட அருகதையற்றவராக ஆக்கப்பட்டார்.

சீமானும் தி.கிட்டுவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இனவாதத்தை இனவாதத்தால் எதிர்க்க முடியாது. எல்லா இனவாதமும் களையப்படவேண்டும் என்பதற்கு இந்திய தேசத்திலிருந்து கொண்டு தமிழன் என்ற பெயரில் இவர்கள் இடுகின்ற முட்டுக்கட்டை அவர்கள் யாரென்பதை காட்டித் தருகின்றது. எந்த உளவு இயக்கமோ யாரறிவார்?.

இலங்கையில் இன, மத, பேதங்களை விதைத்து வர்க்க உறவுகளைப் பிரிப்பதற்கு இவர்கள் அரும் பாடுபடுகிறார்கள்.

இவர்கள் போன்றவர்கள் போராட்டத்தின் வியாபார முகவர்கள் அவ்வளவே. தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் தோற்கடிக்க முனைபவர்கள் இவர்களே. இவர்கள் சிருஷ்டிக்கின்ற பொய்க்கதைகளை வரலாறாக்கும் முயற்சியில் மும்முரமாகவே இருக்கின்றார்கள்.

பிரபாகரனோ மற்றும் எவருமோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. எல்லாம் அறிந்தவர்களாக அவர்களது ஆரம்பக் காலம் இருக்க முடியாது. படிப்படியான மாற்றங்கள், அனுபவங்கள் எல்லாம் அவர்களை சரியான தடத்துக்கும் தலைமைக்கும் கொண்டுவர முடியாதபடி யாழ்ப்பாண வெள்ளாளிய சற்குருக்களும், இந்திய, ஏகாதிபத்திய தேசங்களும் தங்கள் நலனுக்கு ஏற்றபடி காவடியாட வைத்து இறுதியில் யுத்தத்தை முடித்து வைத்து எதை முடிவாக வழங்குவார்களோ அதையே வழங்கினார்கள்.