10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 8

பகுதி 25

நான் எழுதும் சம்பவங்கள் உண்மையானது. அவை நடந்த காலகட்டங்கள் மாதங்கள், ஆண்டுகள் எனக்கு மறந்து விட்டன. நினைவுகளை வரிசைப்படுத்தும் போது மாதங்கள் ஆண்டுகள் குழப்பமாக இருக்கின்றது. தயவு செய்து இதைப் படிக்கும் தோழர்கள் ஆண்டுகள் மாதங்கள் சரியாக சொன்னால் நான் திருத்திக் கொள்வேன்.

1984 ஆண்டு ஆரம்பம் முதல் பல தோழர்களின் வரவு டெல்லியில் இருந்தது. பெரிய செந்திலை கொஞ்சம் பணத்துடன் ஆயுதம் வாங்குவதற்காக என்று கூறி உமாமகேஸ்வரன் அனுப்பியிருந்தார். நல்ல தோழர். ஆனால் தான் ஒரு போராளி என்று கர்வம் கொண்டவர். டெல்லியில் இருந்த எமக்கு உதவி செய்யும் இந்திய நண்பர்களிடம் அவர் பேசுவது எல்லாம் வெற்று பெருமை கதைகள் தான். அங்கிருந்த இந்திய நண்பர்கள் பெரிய படிப்பு படித்தவர்கள் என்பதை மறந்து கதை சொல்வார்.

பெரிய செந்திலுக்கு இந்தி தெரியாது. டெல்லி அதன் சுற்றுவட்டார மாநிலங்களில் நாட்டுத் துப்பாக்கி கள்ளத்துப்பாக்கி தான் வாங்க முடியும். ஒரு விடுதலை இயக்கத்திற்கு நாட்டுத்துப்பாக்கி போதுமா? உமாமகேஸ்வரன் தனக்கு விசுவாசமான அதுவும் தன்னை பெரிய ஐயா என்று அழைப்பவர்களை நம்பியோ அல்லது விரும்பியோ அவர்களுக்கு தகுதியற்ற கழக வேலைகளை கொடுத்து அதை கண்காணிக்காமல் விட்டதும் பெரிய தவறு. நாங்கள் டெல்லியில் கூட எமது செலவைக் கட்டுப்படுத்தி நாக்கு ருசியை கட்டுப்படுத்தி செலவழித்து வந்தோம். ஆனால் செந்தில் போன்றவர்கள் கணக்கு வழக்கு பார்க்காமல் செலவழிப்பார்கள். அதெல்லாம் ஆயுதம் வாங்க ஓடித்திரிந்த கணக்கில் வந்துவிடும். இதே நேரம் வாமதேவன் இரு தோழர்களுடன் டெல்லி வந்து ஓட்டலில் தங்கியிருந்தார். காரணம் அந்த நேரம் டெல்லி வந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா, மற்றும் டக்ளஸ் தேவானந்தா இருவரையும் போடுவதற்கு. மட்டக்களப்பு சிறை உடைப்புக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் உரிமை கோரியதால் அதற்காக தண்டனை எனக் கூறினார்கள். இவர்கள் டெல்லி வந்ததை அறிந்த இந்திய உளவுத்துறை IB கடுமையாக என்னை எச்சரித்ததால், நான் உமாமகேஸ்வரனிடம் தொலைபேசி மூலம் கூறியதை அடுத்து வாமதேவன், மற்றும் தோழர்களை உடன் சென்னைக்கு வரச் சொன்னார்.

லண்டனிலிருந்து சீனிவாசன் டெல்லி வந்து சென்னை போனார். கழக வேலைகள் என்று கூறி லண்டனிலிருந்து வந்தவர்களில் சீனிவாசன் மட்டும் தான் உண்மையாக விடுதலைக்காக கழகத்துக்கு வேலை செய்தவர். இவர் கழகத்துக்கும் ஆயுதம் வாங்க முயற்சிகள் செய்து, ஆரம்பகட்ட பணம் சேகரிப்பு வேலைகளை தொடங்கினார். அது சம்பந்தமாக இரண்டு தோழர்களை இந்தியா அனுப்பியிருந்தனர் அவர்கள் ராஜா நித்தியன், அடுத்தவர் கப்பலில் கேப்டனாக இருந்தவர். பெயர் மறந்துவிட்டேன். அவரை நாங்கள் கூப்பிடுவது கப்பல் என்று. அவர்களை பணம் சேகரிப்புக்காக சீனிவாசன் சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து என வழி நடத்தியவர். ராஜா நித்தியன் 1979 ஆண்டு ஒன்றுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் பயிற்சி பெற இந்தியா வந்து இருந்தபோது புலிகள் இயக்கம் உடைந்த நேரம், இவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு கடைசியில் செஞ்சி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ இவர்களை பாதுகாத்து அனுப்பியதாக கூறினார். 1984 ஆம் ஆண்டு கடைசி பகுதியில் வந்து டெல்லியில் ஒரு மாதம் தங்கியிருந்து எனக்கு உதவியாக ஒரு மாதம் இருந்தார். கப்பல் வரும்போது சிறு பாவ ஃபுல் ரேடியோ கொண்டு வந்திருந்தார். அந்த டிஜிட்டல் ரேடியோவில் பாட்டு கேட்பதோடு, போலீஸ் ராணுவம் பாவிக்கும் வயர்லெஸ் செய்திகளையும் கேட்கக் கூடியதாக இருந்தது. அன்று அது எமக்கு புதுமையாக இருந்தது.

1984 ஆண்டு ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாக தெரிவாகியிருந்தார். எம்.ஜி.ஆர் சுகயீனம் காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரம். அதிமுக கட்சியில் ஜெயலலிதாவுக்கு மிகுந்த நெருக்கடி. அப்போது எனக்கு உதவி செய்த கோபி செட்டிபாளையம் mp சின்னசாமி அவர்கள் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர். ஜெயலலிதாவின் சென்னையில் இருந்த தீவிர ஆதரவாளர் மந்திரியாக இருந்த திருநாவுக்கரசு அவர்கள், சென்னையில் நடக்கும் செய்திகளை தொலைபேசி மூலம் சின்னசாமி MP அவர்களுக்குத்தான் செய்தி வரும். அவர் ஜெயலலிதாவிடம் போய் கூறுவார். ஜெயலலிதா ஆதரவாளர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தகவல் வந்தவுடன், சின்னச்சாமி எம்.பி அவர்கள் எல்.கணேசன் தி.மு.க. எம்.பியின் தொலைபேசி ஊடாக என் மூலம் தகவல்களைப் பெற்று ஜெயலலிதாவிடம் கொடுப்பார். சில வேளைகளில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் சேலம் கண்ணன் எம்பி. யின் வீட்டுக்குப் போய் சின்னச்சாமி எம்.பி தரும் செய்திகளை கொடுத்திருக்கிறேன். அப்போது டெல்லியில் இருந்த நானும் எனது இந்திய நண்பர்களும் சேர்ந்து செய்த இந்த உதவிகள் எமக்கு விளையாட்டாக இருந்தது. பிற்காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த அரசியல் மாற்றங்களுக்கு நாங்களும் சிறு துரும்பாக பயன்பட்டு இருக்கிறோம்.

பகுதி 26

84 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து எமது தோழர் கவிஞர் ஜெயபாலன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மிகவும் திறமைசாலி. கெட்டிக்காரர். சிறந்த கவிஞர் என்பதால் அவரை கட்டுப்படுத்தி வைப்பதும் கடினம். உமாமகேஸ்வரன் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து அவரை அனுப்பி இருப்பதாக ஜெயபாலன் நினைத்தாலும், மறைமுகமாக அவரை கட்டுப்படுத்தி வைக்கும்படி முக்கியமானவர்களை சந்திக்க விடவேண்டாம் எனவும் எனக்கு தொலைபேசி வாயிலாக அறிவித்தார். அருமையான நண்பர் ஜெயபாலன். கோபம் சட்டு சட்டென்று வரும். அவருக்கு செலவுக்கு காசு கொடுப்பதில்தான் இருவருக்கும் பிரச்சனை. ஆனால் ஜெயபாலன் காலையில் வெளியே புறப்பட்டால் பல முக்கிய நபர்கள் விடுதலை இயக்கங்களை சந்தித்துவிட்டு தான் வருவார். இவர் எமக்கு அறிமுகப்படுத்திய முக்கியமானவர்கள் டெல்லி இந்துஸ்தான் டைம்ஸ் ஆசிரியர் திரு. பட்னீஸ்,  அவரின் மனைவி ஊர்மிளா பட்னிஸ். ஊர்மிளா பட்னிஸ் டெல்லி ஜவகர்லால் நேரு யூனிவர்சிட்டியில் சவுத் ஏசியா பற்றிய படிப்புக்கும் பொறுப்பாக இருந்தார் என நினைக்கிறேன். அதோடு இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களும் இருந்த குழுவிலும் இருந்தார். அன்று இந்திய அரசின் அரசியல் சட்ட ஆலோசகர், அரசியல் சட்ட வரைவாளர் ஒரு தமிழர். அவரின் பெயரை மறந்துவிட்டேன், தாமோதரம்பிள்ளை என நினைக்கிறேன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வரைந்தவர். ஜெயபாலன் 84 ஆம் ஆண்டே இவரிடம் நட்பை வளர்த்துக்கொண்டார். ஆனால் உமாமகேஸ்வரன் தொடர்ந்து அவரை சந்திப்பதை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார். டெல்லியில் ஸ்டீபன் கல்லூரியில் உலக நாட்டு விடுதலை இயக்கங்களின் மாநாடு நடைபெற்றது. ஜெயபாலன் எப்படியோ இதை அறிந்து அதில் கலந்துகொண்டு நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். அதில் பல தென்னமெரிக்க விடுதலை இயக்கங்களின் சங்கமம். என்னையும் ஒரு நாள் கூட்டிக்கொண்டு போய் அவர்களிடம் அறிமுகப்படுத்தி பங்குபெற செய்த போதுதான் ஜெயபாலனின் கவிதைகள் ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது தெரியவந்தது. ஜெயபாலனின் தொடர்புகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் நல்ல முறையில் பயன்படுத்தவில்லை என்பது உண்மை. பின்புதான் நான் கேள்விப்பட்டேன், சென்னையிலிருந்து ஜெயபாலனை அப்புறப்படுத்துவதற்காக. ஜெயபாலன் டெல்லிக்கு அனுப்பப்பட்டதாகவும், உமாமகேஸ்வரனை சுற்றியிருந்த ஒரு அறிவுஜீவிகள் என்ற அறிவற்ற கூட்டம் ஜெயபாலன் வளர்வதை விரும்பவில்லை என அறிந்தேன். ஜெயபாலன் இடமும் ஒரு பிடிவாதம் இருந்தது. சில வேளைகளில் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சாதிப்பார். நான் டெல்லி கபூர் வைத்தியசாலையில் தொண்டையில் ஆபரேஷன் செய்வதற்காக சேர்ந்து இருந்த போது மூன்று நாளும் என்னை கூட இருந்து பார்த்துக் கொண்டவர் ஜெயபாலன் தான். அடிக்கடி சென்னையில் இருந்து எமது தலைவர், ஜெயபாலன் பற்றி எச்சரிக்கை செய்தபடி இருப்பார். அது என் மனதில் படிந்து ஜெயபாலனின் செய்கைகளை கட்டுப்படுத்துவதிலேயே இருந்தேன். நல்ல காலம் ஜெயபாலனை மொக்கு மூர்த்தியிடம் அனுப்பவில்லை. ஜெயபாலன் இருக்கும் போதும் இன்னொரு தோழரையும் எனக்கு உதவியாக அனுப்பி வைத்தார். அவர் பெயர் சங்கர். அமைதியான அருமையான தோழர். நான் எம்.பிக்களை சந்திக்கப் போகும் போது கூட வருவார். இந்த வருடம் தான் சென்னை விமான நிலையம் மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு நடந்தது. அது பற்றிய முன்பு பதிவு போட்டு இருந்தேன். இப்பவும் கீழே தருகிறேன்.

மீனம்பாக்கம்_விமானநிலைய_குண்டுவெடிப்பும்_எனக்குத் தெரிந்த பின்னணியும்

1984 ஆம் ஆண்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய குண்டுவெடிப்பு நடந்து இரண்டாம் நாள் டில்லியில் நான் தங்கியிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்  L. கணேசன் வீட்டுக்கு மாலை 5 மணி போல் சென்னையிலிருந்து இரண்டு இலங்கை தமிழர்கள் வந்தனர். அவர்கள் என்னிடம் முன்னாள் காலஞ்சென்ற யாழ்ப்பாணம் எம்.பி யோகேஸ்வரன் அவர்கள் கொடுத்த ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தார்கள். அதில் யோகேஸ்வரன் எம்.பி அவர்கள் இருவரையும் வை.கோபாலசாமி எம்.பி இடம் அறிமுகப்படுத்தி அவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் எடுத்துக் கொடுக்க முடியுமா என எழுதியிருந்தார். அந்த சமயத்தில் டெல்லியில் வை.கோ, நானிருந்த வீட்டு எம்.பி எல்.கணேசன் அவர்களோ டெல்லியில் இல்லை.

அந்த சமயத்தில் வெளியிலிருந்து வந்த டெல்லி தமிழ் நண்பர்கள்,  உங்களை கீழே தமிழ்நாடு போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களும் போலீசார் தங்களை தேடித்தான் வந்திருக்கிறார்கள் என பதறினார்கள். அப்போதுதான் அவர்கள் உண்மையை கூறினார்கள். ஒருத்தர் பெயர் தபேந்திரன், மற்றவர் பெயர் சரவணபவன். இவர் சென்னை விமான பயிற்சி நிலையத்தில் விமான பயிற்சி பெறுவதாகவும் குண்டு வெடித்த சம்பவத்தில் தாங்கள்தான் இரண்டு சூட்கேஸ்களை விமான நிலையத்தில் கொண்டுபோய் வைத்ததாகவும் கூறினார்கள். தங்களை தமிழ்நாடு உளவுத்துறை தொடர்ந்து வருவதாகவும் அவர்கள் தான் யோகேஸ்வரன் எம்.பி இடம் விபரங்கள் கூறி இன்று  டெல்லி வந்துள்ளதாகவும் கூறினார்கள். நான் உடன் அவர்களை வேறு வழியாக வெளியில் அனுப்பி விட்டேன்.

பின்பு தி.மு.க பாராளுமன்ற குழு தலைவர் சிடி தண்டபாணி அவர்களிடம் தொலைபேசியில் நிலைமைகளை கூறினேன். அவர் வீட்டுக்கு வெளியில் போய் போலீசாருடன் பேச வேண்டாம் கைது செய்து விடுவார்கள், அதனால் எம்.பி வீட்டுக்குள் இருந்து அவர்களிடம் பேசுங்கள், எம்.பி வீட்டுக்குள் வந்தால் உங்களை கைது செய்ய முடியாது என கூறினார். நான் இந்த போலீஸ் அதிகாரிகளை வீட்டுக்குள் அழைத்து விசாரித்தேன். வந்த போலீஸ் அதிகாரி தமிழ்நாடு கியூ பிரான்ச் எஸ்.பி திரு.பட் அவர்களும் அதிகாரிகளும் தாங்கள் சென்னையிலிருந்து அவர்களை தொடர்ந்து வருவதாகவும் யோகேஸ்வரன் தான் அவர்களை என்னிடம் போவதாக கூறியதாகவும் கூறினார்கள். நான் உடன் இவர்களை எனக்குத் தெரியாது எனவும் யோகேஸ்வரன் தான் என்னிடம் அனுப்பியதாகவும் கூறி யோகேஸ்வரன் அனுப்பிய கடிதத்தை காட்டினேன். அவர்கள் திரும்ப வந்தால் தங்களுக்கு அறிவிக்கும்படி தொலைபேசி இலக்கத்தையும் அல்லது லோக்கல் போலீஸ் இடம் ஒப்படைக்கும்படியும் கொஞ்சம் மிரட்டலாக கூறி விட்டுச் சென்றார்கள்.

நான் உடனடியாக சென்னையிலிருக்கும் நமது தலைவர் உமாமகேஸ்வரன் இடம் இது பற்றி கூறினேன். அவரும் இது சம்பந்தமாக முன்னாள் இலங்கை சுங்க இலாகா உயரதிகாரி கரவெட்டியைச் சேர்ந்த விக்னேஷ்ராஜா கைது செய்யப்பட்டுள்ளார் என கூறினார். விக்னேஷ்ராஜா உமாமகேஸ்வரனுக்கும், எனக்கும் மிக நெருங்கிய நண்பர். அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந்தமாக சில விபரங்கள் எனக்கு கிடைத்தன. விக்னேஷ்ராஜா சுங்க அதிகாரி என்ற முறையில் சென்னையில் இருந்த சுங்க அதிகாரிகளோடு நல்ல தொடர்பில் இருந்துள்ளார். இதைப் பயன்படுத்தி பனாகொடை மகேஸ்வரனும் விக்னேஸ்வரனுடன் போய் சென்னை சுங்க அதிகாரிகள் இடம் நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இரண்டு சுங்க அதிகாரிகளிடம் தலா 15 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சில கடத்தல் சாமான்கள் இருப்பதாக காரணம் கூறியுள்ளார். ரெண்டு சூட்கேஸ்களையும் செக் பண்ணாமல் இருக்க, இரண்டு சூட்கேஸ்களை கொண்டு போனவர்கள் தவேந்திரன் விமானம் ஓட்டும் பயிற்சி பெறும் சரவணபவன். போர்டிங் பாஸ் கிழித்துவிட்டு சூட்கேஸ்கள் சுங்க பகுதிக்கு போனபின்பு திரும்ப வெளியில் வந்து விட்டார்கள். அந்த காலத்தில் மீனம்பாக்கம் ஏர்போர்ட் மிகவும் சிறியது. வெளியிலிருந்து பார்த்தால் சுங்க பகுதி வரை தெரியும். மகேஸ்வரனின் ஐடியா கொழும்பு போகும் லங்கா விமானம் ஒரு மணி நேரம் கொழும்பில் இருந்து விட்டு பின்பு லண்டன் செல்லும், கொழும்பில் நிற்கும் நேரத்தில் வெடிக்கக்கூடிய மாதிரி சூட்கேஸ்களில் குண்டை செட் பண்ணி அனுப்பியிருந்தார். ஆனால் சுங்க அதிகாரிகளின் கெட்ட நோக்கம் 30000 ரூபா லஞ்சம் தரக்கூடிய அளவுக்கு இருந்தால் சூட்கேஸ்களில் இலட்சக்கணக்கான பெறுமதியான தங்கம் இருக்கும் என நினைத்து, அந்த இரண்டு சூட்கேஸ் எல்லாம் தனியாக விமானத்தில் ஏற்றாமல் எடுத்து வைத்து விட்டார்கள். இதை கவனித்துக் கொண்டிருந்த மகேஸ்வரனும் நண்பர்களும் பொது தொலைபேசி வழியாக சுங்க அதிகாரிகளுக்கு குண்டு இருக்கும் உண்மையை  கூறியுள்ளார்கள். அவர்கள் நம்பவில்லை. பின்பு ஏர்போர்ட் மேனேஜருக்கும் போலீசாருக்கும் தகவல் கூறியுள்ளார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது. குண்டு வெடித்து மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சென்னை வழியாக இலங்கை போகும் சிங்களத் தொழிலாளர்கள் முப்பது பேர் கிட்ட இறந்துவிட்டார்கள். சுங்க அதிகாரிகளும் செத்துவிட்டார்கள். சுங்க அதிகாரிகளின் பைகளில் பதினையாயிரம் பணம் இருந்திருக்கிறது. இது செய்தியாகும் பத்திரிகைகளில் வந்தது.

இந்த சம்பவங்கள் நடந்து சில மாதங்களில் -எனக்கு மாதம் திகதி நினைவில் இல்லை- விக்னேஷ்வர் ராஜாவின் அப்பா என நினைக்கிறேன், லண்டனில் காலமானார். விக்னேஷ்வர் ராஜா, இவர் தான் மூத்தவர் என்றபடியால் இறுதி கடமைகள் செய்ய ஜாமீனில் லண்டன் செல்ல விரும்பினார். ஜாமீன் கிடைக்கவில்லை. அவர் உமாமகேஸ்வரனுக்கு மேற்படி ஜாமீன் விஷயமாக தகவல் அனுப்பினார். உமாமகேஸ்வரனும் தமிழக சட்ட அமைச்சர் பொன்னையன் உடன் பேச தான் ஏற்பாடு செய்ய உதவி செய்வதாகவும், ஆனால் மத்திய அரசு தடுக்கக் கூடாது எனவும் கூறி அதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறினார். உமாமகேஸ்வரனும் டெல்லி வந்து நானும் அவரும் திரு ஜி.பார்த்தசாரதி அவர்களை போய்ப் பார்த்தோம். அவர் கடுமையாக திட்டினார். பின்பு நாங்கள் விக்னேஸ்வரனுக்கும் இந்த குண்டு வெடிப்புக்கும் எந்த நேரடி சம்பந்தமும் இல்லை என கூறி விபரங்களை கூறினோம். விக்னேஸ்வரனும் சென்னை விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுக்கும் இருந்த நட்பை பனாகொடை மகேஸ்வரன் விக்னேஸ்ராஜாவுக்கு தெரியாமல் பயன்படுத்திக்கொண்ட விபரத்தையும் கூறினோம். பின்பு பார்த்தசாரதி தான் மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசி ஏற்பாடு செய்வதாகவும் ஒருமாத ஜாமீன் முடிய இந்தியா திரும்ப வேண்டும் எனவும் கூறினார்.

பின்பு ஒரு மாத ஜாமீனில் வெளிவந்து, விக்னேஷ்ராஜா மதுரையில் தங்கியிருந்த தனது மனைவியுடன் லண்டன் போய்விட்டார். அந்த நேரம் இந்தியாவில் இந்திரா காந்தியின் மறைவும் அரசியல் சூழ்நிலைகள் மாறி இருந்தாலும் விக்னேஷ்ராஜா ஜாமீன் முடிந்து இந்தியா வரவில்லை. அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை ஓபன் வாரன்ட் பிறப்பித்து பத்திரிகையிலும் வந்து லண்டன் இந்திய எம்பசி மூலம் இந்தியா கொண்டுவர முயற்சி செய்தார்கள். விக்னேஷ்ராஜா தனது முயற்சி மூலம் லண்டன் நீதிமன்றம் மூலம் தான் கைது செய்து இந்தியா கொண்டு வரப்படுவதை தடுத்துக் கொண்டார். விக்னேஸ்ராஜா ஜாமீன் அல்லது தப்பியதால் சென்னையில் பனாகோட மகேஸ்வரன் உட்பட மற்றவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அதனால் பனாகொடை மகேஸ்வரன் விக்னேஸ்ராஜா மேல் கடுங்கோபத்தில் இருந்தார். விக்னேஸ்வரனை இந்தியா கொண்டுவர கடைசி முயற்சியாக பனாகொடை மகேஸ்வரன் தனது நண்பர்கள் மூலம் சேலத்தில் படித்துக் கொண்டிருந்த விக்னேஸ்ராஜா இரு மகன்களையும் கடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார்.

இதை அறிந்த இரு மகன்களும் தலைமறைவாக இருந்தார்கள். விக்னேஸ்ராஜா அவர்கள் உமாமகேஸ்வரனை தொடர்புகொண்டு விவரத்தை கூற உமா என்னிடம் அவர்களை லண்டன் அனுப்பும் பொறுப்பை ஒப்படைத்தார். சேலம் சட்டக்கல்லூரி மாணவர்களாய் இருந்த இருவரும் பின்பு என்னை தொடர்புகொண்டு டெல்லி வந்தார்கள். ஒரு வாரத்தில் நான் அவர்களை லண்டன் அனுப்ப ஒழுங்கு செய்து அனுப்பி வைத்தேன்.

(இதில் ஒரு சுவாரசியமான கதையும் உண்டு. விக்னேஸ்வரனின் மூத்த மகன் கிட்டத்தட்ட இருபது வயசு இருக்கும். அவர் தான் காதலித்த மதுரை பெண்ணையும் கூட அழைத்து வந்துவிட்டார். அந்தப் பெண்ணின் வீட்டார் ஒரு பக்கம் அவர்களை தேடுவதாக தகவல். இவர்களுடன் அந்த பெண்ணையும் லண்டன் அனுப்பி வைத்தேன்)

இங்கு ஜாமீன் கிடைக்காமல் பனாகொடை மகேஸ்வரனும் நண்பர்களும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் சிறையில் இருந்து இருந்திருக்கிறார்கள். பின்பு அவருக்கு ஜாமீன் கிடைத்து பலர் தலைமறைவாக சரவணபவான் சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவராக படித்தார்.  90 ஆம் ஆண்டுக்குப் பின்பு சரவணபவன் என்னோடு நல்ல தொடர்பில் இருந்தார். அவர் ஒரு சினிமாவில் கதாநாயகனாக நடித்தார். ஒரு புத்தகம் மாத இதழாக வெளியிட்டார். பெயர் மறந்து விட்டேன். தன் மேலுள்ள வழக்கில் ஜாமின் ரத்து செய்யப்படாமல் இருக்க சென்னை மருத்துவக்கல்லூரி சரித்திரத்தில் மிக நீண்ட காலம் படித்து மருத்துவராகி இருப்பவர் இவர் தான் என நினைக்கிறேன். இவரின் மருத்துவ படிப்பு முழுவிபரம் பத்திரிகையில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இதற்கிடையில் லண்டனில் இருந்த விக்னேஷ்ராஜா தனக்கு மேலுள்ள மற்றவர்களுக்கும் உள்ள வழக்கை நடத்த எனக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்த கடிதத்தின் நகலும் கீழே தந்துள்ளேன். அதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

இதுதான் சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பில் எனக்குத்தெரிந்த ஒரு பகுதி.

பகுதி 27

84 ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் என நினைக்கிறேன். டெல்லி வந்த கவிஞர் ஜெயபாலன் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் டெல்லியில் நின்றார். அவர் தான் செய்த வேலைகள் சம்பந்தமான ரிப்போர்ட்டை எனக்கு கொடுக்க மாட்டார். நேரடியாக உமாமகேஸ்வரனுக்கு தான் அனுப்புவார். அவர் ஒரு மிகப்பெரிய ஆயுதம் வாங்க கூடிய ஒரு தொடர்பை டெல்லியில் பெற்றிருக்கிறார். தொடர்பு பற்றிய விபரங்களை உமாமகேஸ்வரனுக்கு அனுப்ப, அந்த தொடர்பை தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி, ஜெயபாலனை ஒதுக்கிவிட்டு, ஷெர்லி கந்தப்பாவிடம் கொடுத்ததாகவும், கந்தப்பா தவறாகக் கையாண்டு தொடர்பு நமக்கு கிடைக்காமல் போய் விட்டதாகவும் அறிந்தேன். இந்த செய்தி நான் அறிந்தது தான். ஆனால் கந்தப்பா டெல்லி வந்து என்னோடு தங்கி இருந்தது உண்மை. இது பற்றி ஜெயபாலன் கூறினால் தான் இது உண்மையா பொய்யா என்று தெரியவரும். ஜெயபாலன் கடைசி வரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அங்கத்தவராக இருக்கவில்லை. அவருக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து எல்லா இயக்கங்களிலும் தலைவர்களிடமும் நல்ல தொடர்பு இருந்தது. இது உமாமகேஸ்வரனுக்கும் நன்றாக தெரியும். உமாமகேஸ்வரன் மற்ற இயக்க தலைவர்களின் நிலை கருத்துக்கள் பற்றி ஜெயபாலன் இடம் விவாதிப்பதை, பேசுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். எங்கள் பல முன்னணி தோழர்கள் மற்ற இயக்கங்களோடு ஜெயபாலன் தொடர்பு வைத்திருப்பதை பற்றி உமாமகேஸ்வரன் இடம் கூறி அவனை நம்ப வேண்டாம், ஜெயபாலனால் இயக்கத்துக்கு ஆபத்து என பலமுறை கூறியும், உமா பொருட்படுத்தவில்லை. எனக்குத் தெரியக் கூடியதாக ஜெயபாலனின் அறிவும் சிந்தனைகளும் ஒரு கிணற்றுக்குள் அடங்க கூடியது அல்ல. அவர் ஒரு காட்டாற்று வெள்ளம் போன்றவர். அன்று அவரோடு நான் எல்லாம் பழகும்போது அவரை விட நான் திறமையானவன் பெரியவன் என்ற நினைப்பு இருந்தது. பிற்காலங்களில் ஜெயபாலனின் கட்டுரைகள், கவிதைகள் படித்த போதும் சில தமிழ்நாட்டு அறிஞர்கள் ஜெயபாலனை பற்றி கூறும்போது தான் அவரைப் பற்றிய மதிப்பு கூடியது. அதற்காகத்தான் அவரை பற்றி இந்த அளவுக்கு எழுதுகிறேன்.

நான் டெல்லியில் கழுத்தில் ஆப்ரேஷன் செய்து இருந்தபோது வலதுபக்க உமிழ்நீர் சுரப்பிகள் கட்டியாகி மாணிக்கக்கல் போன்ற தோற்றத்தை கொடுத்தது. அதைத்தான் ஆப்ரேஷன் செய்து எடுத்தார்கள். அதை ஜெயபாலன் வெற்றி கழுத்தில் மாணிக்கக் கற்களை மறைத்து வைத்து கடத்துகிறான் என எல்லோரிடமும் சொல்லி ஏன் இந்தி டாக்டரிடம் கூடி சொல்லி சிரித்ததும் மறக்க முடியாது.

விடுதலைப்புலி பொட்டம்மானை எமது தோழர்கள் கடத்தி வைத்திருந்த போது, ஜெயபாலன் வந்து எமது கே.கே நகர் சென்னை அலுவலகத்தில் வைத்து உமாமகேஸ்வரன் இடம் தவறு செய்கிறீர்கள் பிரச்சினை கூடிவிடும் என்று கூறி சண்டை பிடித்ததாகவும் சென்னை அலுவலகப் பொறுப்பாளர் பொட்டம்மான் கைது பற்றி எனக்கு கூறியபோது கூறினார். உமாமகேஸ்வரன் டெல்லி வரும் போது நானும் ஜெயபாலனை பற்றி குறை கூறி அவரிடம் பேசியபோது உமா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் என்னிடம் கூறிய வார்த்தைகள் ஜெயபாலன் பார்க்க கதைக்க பைத்தியக்காரன் போல் இருந்தாலும் அவன் சொல்லும் பல விடயங்கள் சரியாகத்தான் இருந்திருக்கின்றன. அவனை பயன்படுத்தலாம் என்றால் அவனை கட்டுப்படுத்தி வைப்பது கஷ்டம் என்றார். சந்ததியாரை நாங்கள் கொலை செய்த பின்பு ஜெயபாலன் கொஞ்சம் கொஞ்சமாக எமது இயக்கத்தை விட்டு ஒதுங்கி விட்டதாக அறிந்தேன்.

டெல்லியில் வேலைகளும் வெளிநாட்டுப் பயிற்சி எடுக்க போய் வரும் தோழர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் பத்திரிகையாளர்கள் தொடர்புகள் கூடி விட்டதாலும் எமக்கான தனி இடம் தேவைப்பட்டது. அப்போது அண்ணா தி.மு.க பாராளுமன்ற குழுத் தலைவர் மோகனரங்கம் விரைவில் ஆலடி அருணா ராஜ்யசபா எம்.பியாக வருவதாகவும் எஸ்.டி சோமசுந்தரம் மூலம் அவரிடம் வீடு எடுக்கும் படியும் கூறினார். எஸ்.டி சோமசுந்தரம் ஐயா கூறியபடி ராஜ்யசபா எம்.பியாக வந்த ஆலடி அருணா தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த போது அவரை சந்தித்தேன். அவர் மிக நல்ல மனிதர். தனக்கு வீடு ஒதுக்கிய உடன் தருவதாக கூறினார். அதன்படி அவருக்கு பங்களா டைப் வீடு ஒதுக்கினார்கள். அவர் எமக்கு ஒரு பெரிய ரூம் அட்டாச் பாத்ரூம் உள்ளதை கொடுத்தார். அதற்கு பக்கத்தில் தான் டெல்லியின் மிகப்பெரிய சீக்கிய குருத்வாரா இருந்தது. எமது புதிய இடத்தை டெல்லி பத்திரிகையாளர்கள், இந்திய உளவுத்துறை அதிகாரிகள் மட்டும் சந்திக்கும் இடமாக இருக்க வேண்டும் எனவும் அமைப்பில் வந்து போகும் தோழர்களை தங்க வைக்க வேண்டாம் எனவும் கூறினார். உமாமகேஸ்வரன், லண்டன் கிருஷ்ணன், சித்தார்த்தன் மட்டுமே தங்கினார்கள். பின்பு PLO பவன் மூன்று மாதம் தங்க வைக்கப்பட்டிருந்தார். அதைப்பற்றி பின்பு விளக்கமாக எழுதுவேன். எமது புதிய அறையின் பின்புறம் பெரிய புல்வெளி. நடுவில் ஒரு பெரிய மாமரம். தினசரி அரசு ஊழியர்கள் வந்து துப்பரவு செய்து பராமரிப்பார்கள். நமது பக்கத்து அறை ஒரு பக்கம் ஆலடி அருணா எம்.பி  வசிப்பிடம். மறுபக்கம் கேரளாவின்  பெரிய கம்பெனியின் டெல்லி கிளையின் பெரிய அதிகாரி மாதவன் நம்பியார் என்பவர் குடும்பத்துடன் தங்கியிருந்தார். அவர் அந்த காலத்தில் இந்திய ஹாக்கி டீமில் விளையாடி இருக்கிறார் என நினைக்கிறேன். பின்பக்கத்தில் உள்ள பணியாளர் விடுதியில் ராஜன் என்ற கேரளாகாரர் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவர் பக்கத்தில் இருந்த டெல்லி காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு பக்கத்தில் தேனீர் கடை நடத்தி வந்தார். பிற்காலத்தில்  நல்ல உதவிகள் செய்தார். அவர் கடையில் கொடுக்கும் தேனீர் சாப்பாடுகளுக்கு பணம் வாங்க மாட்டார்.காரணம் கேட்டால் கூறு வார் « நீ ஊருக்கு போய் சண்டை பிடித்து தனிநாடு கிடைத்த பின்பு பெரிய ஆளாய் வருவாய், அப்போது தான் கஷ்டத்தில் இருந்தால் உதவி செய் போதும் » என்று கூறினார். அவர் நினைத்தது எதுவும் நடக்கவில்லை.

எல்.கணேசன் எம்.பி ராஜ்யசபா எம்.பி பதவி காலம் ஆறு ஆண்டுகள். 86 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை நாங்கள் L கணேசன் எம்.பி.யின் வீட்டை பாவித்தோம். அது முடிந்த பின்பு 88 ஆண்டு கடைசி வரை ஆலடி அருணா எம்.பி.யின் வீட்டைத்தான் பாவித்தோம். அந்த விலாசத்தில் விசிட்டிங் கார்டு அடித்து பயன்படுத்தினோம். கீழே உள்ள படங்கள் புது அலுவலகம் அதாவது ஆலடி அருணாவின் எம்.பி வீட்டில் எடுத்தது.

பகுதி 28

84 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சில சம்பவங்களை எனக்கு அறியக் கூடியதாக இருந்தது. உமாமகேஸ்வரன், எம்.ஜி.ஆர் இடையே கருத்து வேறுபாடுகள் கடுமையாக இருந்தன. தமிழ்நாட்டு உளவுத்துறை அதிகாரி மோகனதாஸ் ஒரு காரணம் என டெல்லியில் வைத்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளுடன் அவர் பேசும்போது நானும் இருந்தேன். எம்.ஜி.ஆர் உமாமகேஸ்வரன் உடன் நெருக்கமாக இருந்த காலத்தில் ரெலோ இயக்கத்தை மிகக் கடுமையாக விமர்சிப்பாராம். டெலோ இயக்கம் உங்களுக்கு எப்பவும் இடைஞ்சலாக தான் இருக்கும். அதைக் கட்டுப்படுத்தி வைக்க பலமுறை சொல்லியிருக்கிறார். உமாமகேஸ்வரனும் சிரித்து சமாளித்து வந்திருக்கிறார். ஆனால் உளவுத்துறை மோகனதாஸ் மிரட்டும் தொனியில் telo மேல் எப்ப நடவடிக்கை எடுப்பீர்கள் என கேட்டது உமாமகேஸ்வரனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. உமா நேரடியாக எம்.ஜி.ஆரிடம் இந்த அதிகாரி இருக்கும்போது நான் உங்களுடன் பேசுவதற்கு தயாராக இல்லை, அதோடு telo அமைப்போடு எங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறி விட்டு வெளியில் வந்து விட்டாராம். எம்.ஜி.ஆருக்கு telo கலைஞருக்கு ஆதரவாக நின்றது பெரிய பிரச்சனை. இதன் பின்பு தமிழ்நாட்டில் நமக்கு பலவித இடைஞ்சல்கள் ஏற்பட்டது உண்மை. அதே நேரம் எம்.ஜி.ஆர் மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா போனது எமக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.

அதேநேரம் எங்களுக்கு உதவி செய்த எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சர் S.D. சோமசுந்தரம், ஜெயலலிதாவுடன் கட்சியில் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து ஆட்சியில் ஊழல் கூடி விட்டது என எம்.ஜி.ஆரை பிரச்சினை பண்ண தொடங்கினார். அப்போது தமிழ்நாடு முழுக்க அமைச்சர் சோமசுந்தரத்துக்கு நல்ல ஒரு பெயர் இருந்தது. அதை நம்பி எம்.ஜி.ஆரை எதிர்த்துக் கொண்டு சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தார். இதற்கு தூபம் போட்டு அமைச்சர் சோமசுந்தரத்தை கனவுலகில் வாழச் செய்து அவரின் அரசியல் வாழ்வு பாதிக்கப்பட உமாமகேஸ்வரனும் ஒரு முக்கிய காரணம். சிகிச்சை முடிந்து வந்த எம்.ஜி.ஆர் பல கூட்டங்களில் சோமசுந்தரம் உமாமகேஸ்வரனிடம் பணம் வாங்கி கட்சி ஆரம்பித்ததாக கூறியது பத்திரிகைகளிலும் வந்தது. 84 டிசம்பர் மாத தமிழ்நாடு தேர்தல் முடிந்த போது சோமசுந்தரம் மக்களால் ஒதுக்கப்பட்டு விட்டார். இதன் பின்பு மோகனதாஸ் உளவுத்துறை அதிகாரி பாலசிங்கத்தின் உதவியோடு பிரபாகரனை எம்.ஜி.ஆரிடம் சேர்த்தார். எம்.ஜி.ஆர் கலைஞர் TELO வுக்கு எதிராக பிரபாகரனை வளர்த்தார் என்பதுதான் உண்மை. அதனால் தான் கலைஞர் தனது பிறந்தநாளுக்கு கொடுத்த கிடைத்த பணத்தை எல்லா இயக்கங்களுக்கும் பிரித்துக் கொடுத்த போது முதலமைச்சர் எம்.ஜி.ஆரை திருப்திப்படுத்த விடுதலைப் புலிகள் பணத்தை வாங்கவில்லை. அதற்காகவே விடுதலைப் புலிகளுக்கும் கோடி கோடியாக பணத்தை எம்.ஜி.ஆர் கொடுத்தார்.

நாங்கள் டெல்லியில் எந்தவித செலவும் இல்லாமல் ஒரே நேரத்தில் பல பேர் வந்து தங்கிச் செல்லவும், பத்திரிகையாளர்களை சந்திக்கும் இடமாகவும் எங்கள் சொந்த வீடு மாதிரி எல்.கணேசன் எம்.பியின் வீட்டை நாங்கள் பயன்படுத்தினோம். அவர் எந்த ஒரு தடையும் சொல்லவில்லை. எந்த ஒரு இயக்கத்துக்கும் கிடைக்காத வாய்ப்பு எல்.கணேசன் எம்.பி யுடன் பழகக் கிடைத்த வாய்ப்பு. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர் வீட்டில் நாங்கள் இருப்பது பற்றி சக mp மார், தலைவர் கலைஞர் ஒன்றும் சொல்ல மாட்டாரா என்று கேட்கும்போது, தலைவர் கலைஞர் ஒன்றும் சொல்லமாட்டார் விடுதலைப் போராளிகளுக்கு உதவி செய்வதைப் பற்றி, அதேநேரம் போராளிகளும் எங்களுக்கு கெட்ட பெயர்  தர மாட்டார்கள் என்று நம்பிக்கையோடு கூறுவார்.

எல்.கணேசன் எம்.பி அவர்கள் பாராளுமன்றம் கூட்டத்தொடர் நடக்கும்போது, டெல்லி வந்தால் நான் நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்று என்னை பகல் உணவுக்காக புகழ்பெற்ற பாராளுமன்ற உணவகத்துக்கும், இல்லாவிட்டால் கரோல் பாக் என்ற இடத்தில் இருக்கும் தென்னிந்திய உணவகத்துக்கும் அழைத்துச் சென்று நீ விரும்பியதை ஆர்டர் செய்து சாப்பிடப்பா என்று உண்மையான அப்பா போன்ற பாசத்தோடு கூறுவார். அப்போது அது ஒரு பெரிய விடயமாக தோன்றவில்லை. இப்போது நினைக்கும் போது அவரின் பாசமும் அன்பும் புரிகிறது. சில வேளைகளில் அங்கிருக்கும் தமிழ் கடையிலிருந்து பகலுணவு வரும். நான் சாப்பிட்டு இருந்தாலும் தனக்கு மட்டும் வரும் உணவில் இருக்கும் வறுத்த மீன், குழம்பு மீன் போன்றவற்றை தான் சாப்பிடாமல் எனக்கு சாப்பிடக் கொடுப்பார். அந்தக் காலத்தில் எங்களிடமிருந்து எந்தவிதப் பயனையும் எதிர்பாராமல் அவர்கள் உண்மையான அன்போடு உதவி செய்தார்கள். ஆனால் நாங்கள் அவர்களுக்கு கஷ்டத்தை தான் கொடுத்து இருக்கிறோம்.

எல்.கணேசன் எம்.பி அவர்கள் சிறந்த ஆங்கிலப் புலமை கொண்டவர். தனக்கு சரியெனப் பட்டதை செய்பவர். எந்த நேரமும் புத்தகங்களைத்தான் வாசித்துக் கொண்டிருப்பார். அதோடு அவர் அடிக்கடி பான் பீடா எனப்படும் வெற்றிலை போடுவார். இவரின் பணிந்து போகாத குணம் கட்சியில் இவரின் வளர்ச்சியை தடுத்தது என எனது கருத்து. 1965 ஆண்டு மாணவர் தலைவராக இருந்த இவரின் தலைமையில்தான் வைகோ, நடராஜன் போன்றவர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள். இந்தப் போராட்டத்துக்கு பின்பு தான் தி.மு.க தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தது.

லண்டனில் இருந்து வந்த சீனிவாசன், கணேசன் எம்.பி யோடு நன்றாக பழகினார். லண்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் ஆதரவை பெறுவதற்காக கணேசன் எம்,பியை லண்டனுக்கு கூட்டிப்போக முடிவு செய்தார். அங்கு பொதுக்கூட்டங்களை நடத்தி மக்கள் ஆதரவையும் பொருளாதார உதவிகளையும் பெறலாம் என கணக்கு போட்டார். எல்.கணேசன் எம்.பி யிடம் கேட்டபோது முதலில் மறுத்து விட்டார். பின்பு உமாமகேஸ்வரன் அவருடன் கதைத்து சம்மதத்தைப் பெற்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணா தி.மு.க எஸ்.டி சோமசுந்தரம் ஆதரவும், தி.மு.க-வில் கணேசன் எம்.பியின் ஆதரவும் எமக்கு மிக பக்கபலமாக இருந்தன. ஆனால் அதை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன். இப்பொழுது பலர் முகநூலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் காசு பணத்துக்காக ஈழபோராட்டத்தை ஆதரிக்கிறார்கள் போன்ற செய்திகளை எழுதி வருகிறார்கள். 1990 பின்பு தான் அதுவும் விடுதலைப் புலி இயக்கம் தமிழ்நாட்டில் தனது ஆதரவைப் பெருக்கிக் கொள்ள காசு கொடுத்து புதிய புதிய ஆதரவாளர்களை உருவாக்கியது. அவர்கள் மூலம் தமிழ்நாடு அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிரான விமர்சனங்களை வைத்து பொதுக் கூட்டங்களை தமிழ்நாட்டில் இப்படியான கூட்டங்கள் சாதாரண மக்களிடம் எங்களுக்கு ஈழமக்களுக்கு இருந்த உண்மையான அன்பான ஆதரவை இழக்க வைத்தது. பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் இந்திய விரோத பிரச்சாரங்களை ஏற்கவில்லை என்பதே உண்மை. கீழே உள்ள படத்தில் கணேசன் எம்.பி அவர்கள் லண்டன் போகும் முன்பு டெல்லி விமான நிலையத்தில் எடுத்த படம் டெல்லி திமுக ஆதரவாளர்கள் மாலை போட்டு வழி அனுப்பி வைத்தார்கள்.

தொடரும்...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 7கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்