பகுதி 18
1983 ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி காலை 11 மணி போல், இந்திய அரசு கொடுத்த காரில் சாவகச்சேரி எம்.பி. நவரட்ணம் அவர்களும், யாழ்ப்பாண எம்.பி. யோகேஸ்வரன் அவர்களும் நான் இருந்த நோர்த் அவென்யூ L. கணேசன் எம்.பி வீட்டுக்கு வந்து என்னை கூட்டிக்கொண்டு போனார்கள்.
மூவரும் சிரித்துப் பேசிக்கொண்டு சந்தோசமாக எல்லா வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கும் கொடுத்தோம். அப்படி போய் வரவேற்பறையில் கொடுக்கும் போது என்னோடு நவரத்னம் எம்.பி அல்லது யோகேஸ்வரன் வந்து தாங்கள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று கூறி புத்தகங்கள் கொடுக்க உதவி செய்வார்கள். பல இடங்களில் இவர்கள் வந்தது எனக்கு உதவியாக இருந்தது. நாங்க திரும்ப தமிழ்நாடு இல்லத்திற்கு வரும்போது கிட்டத்தட்ட பகல் ஒன்றரை மணி இருக்கும். அவர்களுடன் அங்கேயே சாப்பிட்டுவிட்டு நான் கிளம்பும்போது, அவர்கள் இருவரும் என்னிடம் முக்கியமான இடத்துக்கு கொடுக்கவில்லை என்றார்கள். எல்லா இடத்துக்கும் கொடுத்து விட்டேனே என்று கூற, அவர்கள் இல்லை இலங்கை ஹைகமிஷனுக்கு கொடுக்கவில்லை என்றார்கள். நான் வேண்டாம் அண்ணா பிரச்சினையாகிவிடும் என்று கூறினேன். என்னை தனியாக போய் கொடுக்கச் சொன்னார்கள். தாங்கள் வந்தால் தான் பிரச்சனை என்றும், ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கு தனக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று தெரியவரும் என்று என்னை உசுப்பேத்தி விட்டார்கள். நானும் சரி என்றேன். விதி விளையாடுகிறது என்று அப்போது தெரியவில்லை. தமிழ்நாடு இல்லத்தில் இருந்து இலங்கை தூதுவராலயம் பத்து நிமிட நடைதூரத்தில் தான் இருந்தது.
நான் நான் அப்படியே வீட்டுக்கு போவதாக கூறிவிட்டு, என்னிடம் மிச்சமிருந்த 4 புத்தக கவர்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அங்கு எங்களை கண்காணித்துக் கொண்டிருந்த IB அதிகாரி என்னோடு கதைத்துக் கொண்டு வந்தார். என்னிடம் இருந்த புத்தகங்களை எல்லாம் பார்த்துவிட்டு, இந்த நேரம் நீங்கள் இலங்கை எம்பசி போய் கொடுப்பது நல்லதல்ல, நீங்கள் தபால் மூலம் அனுப்புங்கள் என்று அறிவுரை கூறினார். விதி யாரை விட்டது. பிரச்சினை ஒன்றும் வராது ரிஷப்ஷனில் கொடுத்துவிட்டு வந்து விடுவேன் என்று கூறினேன். அவர் தனக்கும் ஒரு செட் புத்தகங்கள் கேட்க அவரிடம் இரண்டு செட் புத்தகங்களை கொடுத்தேன். இலங்கை எம்பசிக்கு 50 மீட்டர் முன்னாலேயே அவர் இருந்துவிட்டார். நான் உடன் திரும்பி வரும்வரை தான் காத்திருப்பதாகச் சொன்னார். அன்று அந்த அதிகாரி காத்திருந்தபடியால் தான், இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என நினைக்கிறேன்.
எம்பஸ்ஸி வாசலில் வெளி கேட்டில் நின்ற பாதுகாவலரிடம் புத்தகங்கள் ரிஷப்சனில் கொடுக்க வேண்டும் என்று கூறினேன், அவர் போன் செய்து ரிசப்ஷனில் கேட்டுவிட்டு என்னை உள்ளுக்குள் அனுப்பினார். வாசலுக்கும் ரிசப்ஷனுக்கும் ஒரு முப்பது மீட்டர் இடைவெளி இருக்கும். ரிசப்ஷனில் இரண்டு ஒட்டிய புத்தகக் கவர்களையும் கொடுத்தபோது, ரிசப்சனில் இருந்த பெண்மணி இந்தக் கவர்களில் என்ன இருக்கிறது என கேக்க புத்தகங்கள் என கூறினேன். யார் கொடுத்தது என கேக்க நான் பதில் கூற தடுமாறியது, அவருக்கு சந்தேகத்தை கொடுத்தது. உடன் கவரைப் பிரித்துப் பார்க்க, உள்ளே இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான படங்களுடன் கூடிய பிளாட் இயக்க பெயருடன் கூடிய புத்தகங்கள். அந்தப் பெண்மணி உடனடியாக «கொட்டியா கொட்டியா» என்று கத்த தொடங்கி விட்டாள். நான் நடுங்கி விட்டேன். அப்பொழுது அங்கு இருந்த J.R ஜெயவர்தனவுக்கு பாதுகாப்பாக வந்த ஆறேழு இலங்கை போலீஸ் பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து என்னை பிடித்து அடிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள எப்படித்தான் அந்த வேகம் வந்ததோ தெரியாது, எல்லோரையும் தள்ளிவிட்டு கதவை திறந்துவிட்டு வாசலுக்கு ஓடினேன். எனக்குப் பின்னால் அங்கு வேலை செய்த கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைந்து பேர் ஓடி வர தொடங்கினார்கள். வெளிகேட்டில் பாதுகாப்புக்காக நின்ற அலுவலர் என்னை கட்டிப்பிடிக்க அவரை தள்ளிவிட்டு, எம்பஸ்ஸியை விட்டு ரோட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.
சாணக்கியபுரி என்ற மிகப் பாதுகாப்பான இடத்தில் தெருவில் ஓடிக்கொண்டிருந்தேன். பின்னால் துரத்துகிறார்கள். நான் வெடிகுண்டு வீசிவிட்டு ஓடுவதாக கத்துகிறார்கள். அப்பொழுது அங்கு மாநாட்டுக்காக பாதுகாப்புக்காக நின்ற போலீஸ்காரர்கள் துப்பாக்கியை என்னை நோக்கி திருப்பி, அவர்கள் துப்பாக்கியை லோடு செய்யும் சத்தம் கேட்டது. நான் அவர்களுக்குப் பக்கத்தில் போய் கையை தூக்கிக்கொண்டு முழங்காலில் இருந்து சரணடைந்தேன்.
என்னை துரத்திக் கொண்டு வந்தவர்கள், நான் கைக்குண்டு வீசிவிட்டு ஓடுவதாக நான் சரணடைந்த போலீசாரிடம் கூறிவிட்டு என்னை அடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு போனார்கள்.
எம்பஸ்ஸி உள்ளுக்குள் வைத்து அடித்து அடித்து விசாரிக்கத் தொடங்கினார்கள். அதே நேரம் வெளியில் எனக்காக காத்திருந்த IB அதிகாரி நிலைமையை உணர்ந்ததோடு மட்டுமில்லாமல், அவருக்கு நான் கையில் வெடிகுண்டு எதுவும் வைத்திருக்கவில்லை என்ற உண்மையும் தெரியும். அவர் உடனடியாக தமிழ்நாடு இல்லம் போய் யோகேஸ்வரன், நவரட்ணம் ஆகியோருடன் விபரத்தைக் கூறி அமிர்தலிங்கம் அவர்களிடமும் நடந்த விபரத்தைக் கூறி விட்டு, தனது உள்துறை அமைச்சகம் போய் அவர்களது IB உயர் அதிகாரிகளிடமும் முழு விபரமும் கூறியுள்ளார். அமிர்தலிங்கம் அவர்கள் ஜி.பார்த்தசாரதி இடம் உடனடியாக இந்த தகவலை கூறியுள்ளார். IB ஐபி மூலம் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று இந்திரா காந்தியின் செயலாளர் அலெக்சாண்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்த மாநாட்டின் முதல் நாளிலே இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடு அசம்பாவிதம் நடந்து விட்டது என்று.
உடனடியாக அந்த ஏரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சவுத் அவென்யூ பொலிஸ் நிலையத்திலிருந்து எம்பஸ்சி வந்து விசாரித்தார். அப்பொழுது இருந்த நடைமுறை, இப்பவும் இருக்கலாம் தூதுவரால சுற்றுச் சுவருக்குள் அசம்பாவிதம் எதுவும் நடந்தால், பிடித்தால், இலங்கைக்கு கொண்டு போகலாம். இந்திய சட்டம் அதை தடுக்காது. அவர்கள் என்னை இலங்கை கொண்டு போக ஆயத்தங்கள் செய்து வீடியோக்கள் போட்டோக்கள் எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். போலீஸ் அதிகாரி என்னிடம் ரகசியமாக உன்னை இலங்கைக்கு கொண்டு போகப் போகிறார்கள், பாக்கெட்டில் ரகசிய போன் நம்பர்கள் எதுக்கும் இருந்தால் தன்னிடம் கொடுத்துவிடும்படி கேட்டார். நானும் கண்ணை காட்ட, என்னை செக் பண்ணுவது போல் எனது பேர்ஸ் மற்றும் சில முக்கிய பொருட்களை அவர் எடுத்து ஒளித்து வைத்து விட்டார்.
திடீரென பாதுகாப்பு படைகள் புடைசூழ உயரதிகாரி உள்ளே வந்தார். அங்கிருந்த இந்திய போலீஸ் அதிகாரிகள் அவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தார்கள். அவர் அங்கிருந்த இலங்கை அதிகாரிகளிடம் தான் இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு படையின் சீப் செக்யூரிட்டி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். என்ன நடந்தது என விசாரித்தார். அவரிடம் அவர்கள் வெடிகுண்டு கதையைச் சொல்லவில்லை. புத்தகங்கள் கொடுத்ததாக கூறினார்கள். அதற்காக ஏன் இவரை அடித்தீர்கள், ஏன் கைது செய்தீர்கள் என அவர்களிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டார். அவர்கள் இவர் புலிப் பயங்கரவாதி விரைவில் இலங்கை கொண்டு போக போகிறோம் என கூறினார்கள். அப்போது அவர் இவரை எங்கே பிடித்தீர்கள் என கேக்க, அவர்கள் எம்பசியில் உள்ளே என்றார்கள். அந்த அதிகாரி நான் விசாரித்துவிட்டு தான் வருகிறேன். ரோட்டில் இந்தியன் போலீசார் தான் இவர் சரணடைய கைது செய்ததாக தகவல் இருக்கிறது என்று கூறிவிட்டு என்னை ரோட்டில் கைது செய்த போலீஸ்காரர்களை வரவழைத்து அவர்களுக்கு முன் விசாரித்துவிட்டு, அங்கு இருந்த அந்த ஏரியா போலீஸ் அதிகாரியை கூப்பிட்டு சத்தம் போட்டர். என்னை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிருக்க வேண்டும் என்று. அதோடு என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் FIR போட்டு விசாரிக்கும்படி. என்னை இன்ஸ்பெக்டர் கூட்டிப் போகும் வரை, அந்த அதிகாரி தனது படையினருடன் அங்கிருந்தார். அவருடன் இலங்கை அதிகாரிகள் கடும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் அதை பொருட்படுத்தவில்லை.
என்னை கைது செய்த சவுத் அவென்யூ போலீஸ் அதிகாரி தனது அலுவலகம் போய் என்னை கதிரையில் இருக்கச் சொல்லி என் மேசையில் அடித்த காயங்களுக்கு மருந்து தடவ சொல்லி மருந்து கொடுத்தார். நல்ல ஒரு ஏலக்காய்-டீயும் வாங்கிக் கொடுத்து சிரித்து சிரித்து எல்லா விபரங்களையும் கேட்டு பதிவு செய்து கொண்டார். நான் கொடுத்த புத்தகங்களின் ஒரு கவரை எடுத்து வந்திருந்தார். அதை பிரித்துப் பார்த்து இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டவர்களின் படங்களை எல்லாம் பார்த்து ரொம்ப கவலைப்பட்டார். நான் பிடிபட்ட நேரம் பகல் ரெண்டு மணி இருக்கும். போலீஸ் நிலையம் கொண்டு வந்த நேரம் மாலை ஆறு மணி இருக்கும். இரவு 8 மணி போல் டெல்லி போலீஸ் கமிஷனர் வந்தார். எனது வாக்குமூலம் எல்லாம் பார்த்தார். எம்பஸ்ஸிகாரர் கொடுத்த வாக்குமூலம் கொண்டுவந்து புத்தகம் கொடுத்ததாக மட்டும் இருந்தது. போலீஸ் கமிஷனர் இது பாரதூரமான குற்றம் ஒன்றுமில்லை, என்னை தேவையான விபரங்களை எடுத்துவிட்டு என்னை விடுதலை செய்யும்படி கூறினார்.
ஆனால் வெளியில் நின்ற இலங்கை அதிகாரிகள் உடனடியாக இலங்கை எம்பசிக்கு அறிவித்திருக்கிறார்கள் போல. இலங்கை எம்பசி முதன்மைச் செயலாளர் வந்து, டெல்லி போலீஸ் கமிஷனரிடம் இலங்கை ஜனாதிபதி JR ஜெயவர்தனா மாநாட்டுக்காக டெல்லியில் நிற்பதால் அவருக்கு என்னால் உயிர் ஆபத்து இருப்பதாக எழுத்து மூலம் புகார் கொடுத்தார்கள். போலீஸ் கமிஷனரும் என்னிடம் வந்து என்னை கைது செய்ததற்கு உண்மையான ஒரு ஆதாரமும் இல்லை என்றும், ஆனால் அவர்கள் புகார் கொடுத்திருப்பதால் எம்பஸ்ஸி என்றபடியால் அதை அலட்சியப்படுத்த முடியாது. அதனால் என்னை கைது செய்து மாநாடு முடியும் வரை சிறையில் வைப்பதாக கூறி விட்டு போய்விட்டார். காவல் நிலைய அதிகாரி அன்றிரவு நான் அங்கு படுப்பதற்கு ஒழுங்குகள் செய்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து நான் ஓடிவிடாமல் இருக்க துப்பாக்கி காவலர்களையும் வைத்துவிட்டார்.
பகுதி 19
நான் போலீஸ் நிலையத்தில் இருக்கும் போது, நான் தங்கியிருந்த எல்.கணேசன் எம்.பி யின் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் போன் பண்ணி எனது டெல்லி நண்பர் சித்தார்த்தன் இடம் நான் கைது செய்யப்பட்ட விபரத்தை கூறி என்னையும் பேசச் சொன்னார். நானும், ஒரு பிரச்சினையும் இல்லை யோசிக்க வேண்டாம் என கூறினேன். சித்தார்த்தன் தான்அடுத்த நாள் காலையில் வந்து பார்ப்பதாக சொன்னார்.
இரவு முழுக்க தூங்க முடியாதபடி சரியான குளிர், யோசனை. காலையில் 5 மணிக்கு சுடச்சுட டீ கொடுத்தார்கள். காலை 7:00 மணி போல் டெல்லி நண்பர்கள் சித்தார்த்தன், சம்பத், பேங்க் வெற்றிச்செல்வன் அவர்களுடன் கூட ஒருத்தரும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்.
கூட வந்திருந்தவர் அண்ணா தி.மு.க.வை சேர்ந்த கோபி, செட்டிபாளையம் பாராளுமன்ற உறுப்பினர் திரு சின்னசாமி. அவர் வக்கீலும் கூட. அந்த மாநாடு நடக்கும் நேரத்தில் பார்லிமென்ட் இல்லாததால் எங்களுக்கு வேண்டிய எல்.கணேசன், வைகோ, கல்யாணசுந்தரம் போன்ற எம்.பி.க்கள் எல்லாம் ஒரு ஊருக்குப் போய் இருந்திருக்கிறார்கள். அண்ணா தி.மு.க வின் முதல் எம்.பி மாயத்தேவர், இவர் பின்பு தி.மு.க வுக்கு மாறிவிட்டார். இவர் டெல்லியில் இருந்தபடியால் இவரிடம் போய் சித்தார்த்தன் நண்பர்கள் விஷயத்தை சொல்லி போலீஸ் நிலையம் வரச் சொல்லியிருக்கிறார்கள். அவர் தனக்கு ஏர்போர்ட், பாராளுமன்றம், தனது எம்.பி குவாட்டர்ஸ் இம் மூன்றும் தான் தெரியும் என்று கூறி வர மறுத்து விட்டாராம். முன்பு முதன்முறை எல்.கணேசன் எம்.பி உடன் டெல்லி வந்தபோது தி.மு.க பாராளுமன்ற அறையில் இவரை சந்தித்திருக்கிறேன். அப்பொழுது அவர் என்னிடம் இலங்கையில் ஒரு 10 ஆயிரம் தமிழர்கள் இருப்பார்களா என கேட்டார். நான் இல்லை 35 லட்சம் தமிழர்கள் இருப்பதாக கூறினேன். அவருடன் இந்தியாவிலிருந்து போனவர்கள் தானே என்றார். நான் இல்லை என்று கூறி அங்கு நடக்கிறது என்ன பிரச்சினை, கொலைகளைப் பற்றி விபரமாக கூறினேன். எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசியாக ஒரு வார்த்தை சொன்னார். அப்ப நாங்க பப்ளிக் மீட்டிங்ல தமிழனை கொல்கிறான், வெட்டுகிரான் என்று பேசுவதெல்லாம் உண்மைதான் போல என்று கூற, பக்கத்தில் இருந்த மற்ற எம்.பி.கள் பேசாமா சும்மா இருங்க என்று கூறி அவரை தடுத்து விட்டார்கள். கழுத்தில் ஒரு கர்ச்சீப் போட்டு இருப்பார். கால் சட்டைப் பையில் விஸ்கி பாட்டில் இருக்கும். நடந்து போகும்போது பெரிய மரங்களுக்குப் பின்னால் நின்று குடித்துவிட்டு தான் போவார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கின் விபரத்தை அவர்களிடம் விலக்கிவிட்டு மாநாடு முடியத்தான் ஜாமீன் எடுக்கலாம் என்று கூறினார். அவர்களும் எனக்கு டீயும், காலைச் சாப்பாடும் வாங்கி கொடுத்துவிட்டு போனார்கள். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டுக்கு கொண்டு போவதற்கு வாகனத்தை எதிர்பார்த்திருந்தார்கள். மாநாட்டு பாதுகாப்புக்காக வாகனங்கள் போனதால் வாகனம் கிடைக்கவில்லை. உடனே எனது, கையிலும் காலிலும் சங்கிலி வைத்துப் பூட்டி ஒரு போலீஸ்காரர் தனது கையில் சங்கிலியைப் போட்டுக் கொண்டார்.
துப்பாக்கி ஏந்திய நாலு போலீஸ்காரர் பாதுகாப்பில் நடந்து போய் கோர்ட்டுக்கு பஸ்ஸில் போனோம். எல்லாம் மக்களும் எனது கோலத்தை பெரும் பயங்கரவாதி போல என்று பயத்துடன் பார்த்தார்கள். எனது வழக்கு பின்னேரம் 3 மணிக்கு நடந்தது. 15 நாள் ரிமாண்ட் பண்ணிவிட்டார்கள். பகல் உணவு ரெண்டு சப்பாத்தி. இரவு சாப்பாட்டுக்கு நான்கு சப்பாத்தி, கிழங்கு கறி பார்சல் கட்டி தந்தார்கள். மாலை ஆறு மணி போல் வரிசையாக ஐந்துக்கு மேற்பட்ட பெரிய பஸ்களில் நான் உட்பட எல்லா குற்றவாளிகளையும் ஏற்றிக்கொண்டு, ஆசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலை திகார் ஜெயிலுக்கு கொண்டு போனார்கள். இரவு எட்டு மணியாகிவிட்டது. புதிதாக வந்தவர்களை டாக்டர் செக் பண்ணி, அதன் பின்பு போர்த்திக் கொள்ள ஒரு நாத்தம் புடிச்ச ஒரு கம்பளி போர்வையும் கொடுத்து வெளிநாட்டு கைதிகள் தங்கியுள்ள சிறையில் என்னை அடைத்தார்கள்.
அன்றைய தேதி 24/11/1983. நான் அடைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினர் சிறையில் இலங்கை கொழும்பு தமிழர், சிங்களவர், பல வெளிநாட்டவர் உட்பட, அதில் முக்கியமானது ஆப்கான் புரட்சிப் படையை சேர்ந்தவர்கள். அவர்கள் அங்கு தனி ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருந்தார்கள். அன்று காலை பத்திரிகைகளில் என்னைப் பற்றிய செய்திகள் வந்து இருந்தபடியால், என்னை அந்த ஆப்கான் விடுதலை வீரர்கள் மரியாதையாக நன்றாக நடத்தினார்கள். ஜெயிலர்கள் கூட அவர்களுக்குப் பயம். கிட்டத்தட்ட 10 பேர் இருந்தார்கள். அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிடுவார்கள். தினசரி அவர்களுக்கு வெளியிலிருந்து இறைச்சி வரும். முதல் இரண்டு நாட்கள் எனக்கும் கொடுத்தார்கள். பின்பு நான் சிறை நிர்வாகம் கொடுக்கும் உணவு சாப்பிட்டேன். இந்த ஆப்கான்காரர்கள், வெள்ளைக்காரர்களை தான் தங்களது வேலைக்காரராக வைத்திருந்தார்கள். டாய்லெட் கழுவுவது, சமையல் எடுபுடி, அவர்களுக்கு கை கால் பிடித்து விடுவது எல்லாம் வெள்ளைக்காரர்கள் தான். ஆப்கான்காரர்கள் தாங்கள் சாப்பிட்டு மிச்சம் இருக்கும் இறைச்சிகளை அவர்களுக்கு கொடுப்பார்கள். எமது சிறைக்குள்ளேயே சிகரெட், அபின் போன்ற பொருட்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும். நான் சிறையில் இருக்கும்போது V.N நவரட்ணம், யோகேஸ்வரன் ஆகியோர் இரண்டு தரம் வந்து என்னை பார்த்தார்கள். நவரட்ணம் யோகேஸ்வரன் தங்களது இலங்கை எம்.பி என்ற விசிட்டிங் கார்டை கொடுத்து சீப் ஜெயிலரிடம் நன்றாக பேசி விட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் போகும்போது நவரட்ணம் எம்.பி தனது மூக்கு கண்ணாடியை அங்கு மறந்து விட்டுப் போயிருக்கிறார்.
பின்பு அதைப் பார்த்த ஜெயிலர் இலங்கை எம்பசிக்கு போன் செய்து இப்படி « இலங்கை எம்.பிகள் இங்கு வந்தார்கள். போகும்போது கண்ணாடியை மறந்து விட்டுவிட்டு போயிருக்கிறார் » என அவர்களிடம் கூறும்படி கூறியிருக்கிறார். இவர்களின் பெயரை கேட்ட இலங்கை எம்பசிகாரர்கள் ஜெயிலர் இடம் அப்படி யாரும் எம்.பி இல்லை, அவர்கள் உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கூறி போனை வைத்து விட்டார்களாம். அடுத்த முறை அவர்கள் என்னை பார்க்க வரும்போது ஜெயிலர் முழு விபரங்களையும் விசாரித்திருக்கிறார். அவர்கள் இலங்கைப் பிரச்சினை பற்றிய விபரங்கள் தாங்கள் இந்திராகாந்தியின் விருந்தினராக டெல்லியில் தங்கியிருப்பது போன்ற விபரங்களை கூறியிருக்கிறார்கள். ஜெயில் அதிகாரி அவர்களே மிகச் சிறப்பாக கவனித்து தேனீர் எல்லாம் வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி இருக்கிறார். அவர்கள் என்னோடு பேசும் போதும் எனக்கும் ஒரு கதிரை ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்பு அடிக்கடி ரவுண்ட்ஸ் வரும்போது என்னை தனியாக கூப்பிட்டு சுகம் விசாரிப்பார்.
ஒரு வாரம் ஜெயிலில் இருந்தேன். முதல் இரண்டு நாட்கள் கஷ்டமாக இருந்தது. பழகிவிட்டது. மாநாடு முடிந்து JR ஜெயவர்தன இலங்கை போகும்வரை எனக்கு ஜாமீன் கிடைக்காது என தெரியும்.
29 ஆம் தேதி மாநாடு முடிந்தாலும், ஜாமீன் கிடைக்க வேண்டும். ஆதலால் இன்னும் இரண்டு மூன்று நாள் செல்லும் என நினைத்தேன்.
பகுதி 20
நான் சிறையில் இருந்த நேரத்தில் இந்திய பாராளுமன்றம் கூடியபோது 1/12/1983 ராஜ்யசபாவில் என்னை உடனடியாக விடுதலை செய்யும்படி வை.கோபால்சாமி காரசாரமாக பேசியுள்ளார். அவருக்கு ஆதரவாக M.கல்யாணசுந்தரம் எம்.பி யும் பேசியுள்ளார். இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனா இலங்கை போன பின்பு, எனது டெல்லி நண்பர்கள், நவரட்ணம் எம்.பி, யோகேஸ்வரன் எம்.பி வக்கீலை பிடித்து என்னை ஜாமீனில் எடுத்தார்கள். 5000 ரூபாய் ஆள் பிணை. வங்கியில் வேலை செய்த எனது இந்திய நண்பர் வெற்றிச்செல்வன் தனது தகுந்த விபரங்களைக் கொடுத்து, எனக்காக பிணை நின்றார். ஒரு பலனையும் எதிர்பாராமல் பயப்படாமல் அந்த காலத்தில் இவர் செய்த உதவி பெரியது.
இரவு 8 மணிக்கு போல் தான் என்னை சிறையிலிருந்து வெளியில் விடுதலை செய்தார்கள். என்னை வரவேற்க யோகேஸ்வரன் எம்.பி, மாவை சேனாதிராஜா மற்றும் டில்லி நண்பர்கள் சித்தார்த்தன், சம்பத் போன்றவர்கள் வந்திருந்தார்கள். மாவை சேனாதிராஜா எனக்கு ஒரு மாலையும் போட்டார். கையோடு ஒரு கேமராவும் கொண்டுவந்து மாலையோடு நின்ற என்னோடு தனித்தனியாகவும் யோகேஸ்வரன், மாவை சேனாதி சேர்ந்தும் பல போட்டோக்கள் எடுத்துக் கொண்டார்கள். பின்பு இவர்கள் இந்தப் படங்களை தங்கள் பிரச்சாரத்துக்காக பயன்படுத்திக் கொண்டதாக அறிந்தேன். இலங்கைப் பத்திரிகைகளில் இவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கை விடுதலை இயக்கங்களுடன் மிக நெருங்கிய உறவில் நிற்பதாகவும், விடுதலை இயக்கங்களுக்கு உதவிகள் செய்வதாகவும் இப்படத்தின் மூலம் விளம்பரப்படுத்திக் கொண்டார்கள்.
பின்பு அவர்கள் என்னை எல்.கணேசன் எம்பியின் வீட்டில் விட்டு விட்டு போய்விட்டார்கள். நானும் ஏதோ வீர சாகசம் செய்த மாதிரி நினைத்துக் கொண்டு, சென்னையில் இருந்த உமாமகேஸ்வரன் இடம் சிறையில் இருந்து வந்து விட்டேன் எனக் கூறினேன். அவரும் சரி சரி அடுத்த வேலைகளை அதாவது சந்திக்க வேண்டியவர்களை சந்திக்க அடுத்த லெபனான் பயிற்சி குழுவை அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யும்படி கூறினார். உடன் எனக்கு டெல்லி பிரதிநிதி என போட்டோ அடையாள அட்டை அனுப்புவதாகவும் கூறினார். அதோடு தனது விசிட்டிங் கார்டில் எனது பெயரை போட்டு அனுப்புவதாகவும் கூறினார்.
நான் ஜெயிலுக்குப் போயிட்டு வந்த பின்பு தமிழ்நாட்டு எல்லா எம்.பிக்களும் என்னை சந்திக்க விரும்பினார்கள். சரியாக முகம் கொடுத்து பேசாத முரசொலி மாறன் எம்.பி அதன் பிறகு தனது வீட்டுக்கு வரச்சொல்லி அடிக்கடி இலங்கை பிரச்சினைகள் பற்றிய விபரங்கள் எல்லாம் கேப்பார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வாழப்பாடி ராமமூர்த்தி தி.மு.க பாராளுமன்ற குழு தலைவர் தண்டபாணி எம்.பி, அண்ணா தி.மு.க ராஜ்யசபா எம்பிக்கள் குழு தலைவர் மோகனசுந்தரம் மற்றும் பல எம்.பிக்கள். நினைவில் வரும் போது அவர்களின் பெயர்களை கட்டாயம் குறிப்பிடுவேன். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கருப்பையா மூப்பனார், திண்டிவனம் ராமமூர்த்தி போன்றவர்கள் என்னை சந்தித்து இலங்கை நிலவரம் அறிய ஆர்வம் காட்டியவர்கள். பின்பு நான் ஜி. பார்த்தசாரதி இடம் அவர் செய்த உதவிக்கு நன்றி சொன்னேன். அவரும் பிரச்சினைகள் வரக்கூடிய வேலைகளை இனிமேல் செய்யாதே. அன்று எம்பஸ்ஸி உள்ளுக்குள் உன்னை கைது செய்திருந்தால் எங்களால் எதுவும் செய்திருக்க முடியாது எனக் கூறி இன்னும் சில அறிவுரைகளையும் கூறினார்.
எனது வழக்கு இழுத்துக் கொண்டு போக கூடாது என்பதற்காக, காரணம் எனக்கு பிணை நின்ற வங்கி ஊழியர் வெற்றிச்செல்வன் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக. வை.கோபாலசாமி உள்துறை அமைச்சரிடம் வழக்கை வாபஸ் வாங்கும்படி பலமுறை கூறியும் நடக்கவில்லை. கோபாலசாமியின் நண்பர் உள்துறை இணை அமைச்சர் பல முயற்சிகள் எடுத்த பின்பு, எங்கள் லண்டன் சித்தார்த்தன், சென்னையிலிருந்து டெல்லி வந்து, அவரும் டெல்லி நண்பர் சம்பத்தும் சேர்ந்து சிறந்த அட்வகேட் ஒருவரை பிடித்து வெற்றிகரமாக வழக்கை முடித்து விட்டார்கள். இந்த கைது விவகாரம் டெல்லியில் எனது இயக்க சந்திப்புகளுக்கு மிகப்பெரும் துணையாக இருந்தது என்பதும் மறுக்க முடியாது.
டேவிட் ஐயாவின் மறைக்கபட்ட இருண்ட பக்கங்களில் ஒன்று.
பீமன்.
தமிழரின் விடுதலைக்காக, அவர்களின் மேம்பட்ட வாழ்வுக்காக அனலாக கொழுந்து விட்டெரிந்த எஸ்.ஏ.டேவிட் என்ற அக்கினிப்பிழம்பு இந்தியாவில் தனக்கே அளவான சிறியதொரு அறையில் நுளம்புக்கு எரியும் சுக்கு விறகுக்கட்டை போன்று கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக புகைந்து கொண்டிருந்து, இறுதியாக கிளிநொச்சியில் அணைந்திருக்கின்றது. இறுதிக்கிரிகையும் முடிந்தாயிற்று. பலர் டேவிட் ஐயாவின் புகழ் பேசியிருக்கின்றார்கள். பலர் அவரின் தியாகம், திறமை, வாழ்வியல் என்பன பற்றி எழுதியிருக்கின்றார்கள். ஆனால் அக்கினி பிழம்பு வெறும் புகையாக மாற காரணம் யாது, 3 தசாப்தங்கள் அவர் இருண்ட யுகத்தில் வாழக் காரணம் யாது என்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும்.
புகைந்து கொண்டிருந்த அந்த விறகுக்கட்டை மீது கொஞ்சம் எண்ணையூற்றி பிரகாசிக்கச் செய்வோம் என சிலர் முயற்சி செய்திருக்கின்றார்கள். ஆனால் அவை யாவும் முறியடிக்கப்பட்டிருக்கின்றது. காரணம் ஐயாவின் அர்ப்பணிப்பில், விடுதலையின் மீது அவர் கொண்டிருந்த பற்றுறுதியின்பால், திறமையின்பால் சந்தேகமோ அல்ல. அவரை யாரும் சந்தேகிக்கவும் இல்லை. அதற்கு அவர் வாழ்நாளில் இடமளிக்கவுமில்லை. மாறாக டேவிட் ஐயா தான் நேசித்த அமைப்பிடம், இல்லாத கடுவன் பூனைக்குட்டியை கண்ணிரண்டும் தெரியாத குருடனொருவன் இருட்டறையில் தேடியதுபோல் சமத்துவத்தையும், மனிதநேயத்தையும், தலைமைத்துவப் பண்புகளையும் எதிர்பார்த்தமையேயாகும். வெளிப்படையாக கூறினால் உள்வீட்டு படுகொலையை நிறுத்து! என்று கூறியதால்.
புளொட் அமைப்பு தனிமனிதனின் சர்வாதிகார ஆளுகையின் கீழ் கொண்டுவரப்படுவதை உணர்ந்த டேவிட் ஐயா, சமரசத்திற்கோ, விட்டுக்கொடுப்புக்கோ வழிவிடாது போர்க்கொடி தூக்கிக்கொண்டு அவ்வமைப்பை விட்டு வெளியேறியிருக்கின்றார். புளொட் தனது சகதோழர்களை கொலை செய்வதை தடுப்பதற்கு அபார முயற்சிகளை எடுத்திருக்கின்றார். தமிழ் மக்களின் விடுதலை வேண்டி தம்மை அர்ப்ணித்த உயிர்கள் உமாமகேஸ்வரனின் தலைமை வெறிக்கு காவுகொடுக்கப்பட முடியாதவை என உரக்க குரல் கொடுத்திருக்கின்றார் அந்த உயர்ந்த மனிதர்.
தவறுகளை தட்டிக் கேட்டமைக்காக டேவிட் ஐயா 02.08.1985 ம் ஆண்டு இரவு 10.30 மணியளவில் அண்ணாநகர் பஸ்நிலையத்தின் பின்னால் வைத்து 4 இளைஞர்களால் அடித்து வீழ்த்தப்பட்டு அரைப்பிணமாக வான் ஒன்றில் அள்ளிச் செல்லப்பட்டிருக்கின்றார். இக்கடத்தல் தன்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி என தனது Tamil Eelam Freedom Struggle ( An inside Story) எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள டேவிட் ஐயா, தான் கடத்தப்பட்ட வாகனச் சாரதியின் தயவால் அன்று விடுதலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தெருவோரத்தில் வீசிச் செல்லப்பட்ட டேவிட் ஐயா அவ் வழியால் வந்த சைக்கிளோட்டி ஒருவரால் மீண்டும் அண்ணா நகருக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றார். அன்று உடனடியாகவே 11.45 மணியளவில் திருமங்களம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை விபரித்திருக்கின்றார். சந்ததியாரை கொல்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பிலும் முறையிட்டிருக்கின்றார். முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் கணக்கிலெடுக்கவில்லை என குற்றஞ் சுமத்தியுள்ள டேவிட் ஐயா அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் ஈழப் போராளிகள் தொடர்பிலான எந்த முறைப்பாடுகளையும் பதிவு செய்யவேண்டாமென அரச மேல்மட்ட உத்தரவு எனவும் தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் எழுதியுள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கையில் திருப்தியடையாத டேவிட் ஐயா, தான் கடத்தப்பட்ட விடயத்தையும், சந்ததியாருக்கு நேரவிருக்கும் அபாயத்தையும் அதே வாரம் அன்றைய தமிழ்நாடு முதலமைக்சர் எம்.ஜி ராமச்சந்திரனுக்கும் இந்திய ஊடகங்களுக்கும் முறையிட்டிருக்கின்றார். அம்முயற்சியும் பயனற்றதாகவே முடிவுற்றிருக்கின்றது.
19.09.1985 அன்று சந்ததியார் கடத்தப்பட்டிருக்கின்றார். டேவிட் ஐயாவுடன் ஒரே அறையில் தங்கியிருந்த சந்ததியார் அன்று மாலை வெளியே சென்று திரும்பி வராததையடுத்து 20.09.1985 திருமங்களம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருக்கின்றார். தொடர்ந்து தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் நாட்டின் அன்றைய பிரதமர் ரஜீவ் காந்தி ஆகியோருக்கும் முறையிட்டிருக்கின்றார். தீப்பொறி பத்திரிகை மற்றும் பல ஊடகங்கள் ஊடாக சந்ததியாரின் விடுதலைக்காக பாடுபட்டிருக்கின்றார்.
இச்செயற்பாடுகளால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளான டேவிட் ஐயா இந்தியாவின் பல மூலைகளில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து தனது உயிரை காத்திருக்கின்றார். உமாமகேஸ்வரன் இலங்கை அரசுடன் கைகோர்த்துக்கொண்டு கொழும்பில் நிலைகொண்டவுடன் தனது தலைமறைவு வாழ்வு முடிவுக்கு வந்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் டேவிட் ஐயா.
தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை நியாயமான வழியில் வெல்ல வேண்டுமென நேரிய வழிகாட்டிய உயரிய சிந்தனையாளர்கள், அப்பழுக்கற்ற தியாகிகள் தமிழீழ விடுதலை போராட்ட அமைப்புக்களின் சர்வாதிகாரப் போக்கினால் எண்ணிலடங்கா இன்னல்களை சந்தித்திருக்கின்றார்கள். அவர்களது கனவுகள் கலைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களது அறிவு, ஆற்றல், அனுபவங்களை தாங்கள் நேசித்த சமூகத்திற்கு பயனுள்ளதாக்க முடியாத செல்லாக் காசாக்கப்பட்டிருக்கின்றார்கள். தவறுகளை தட்டிக்கேட்ட நேர்மையான மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கெல்லாம் டேவிட் ஐயாவின் வாழ்வும் முடிவும் சிறந்த உதாரணமாகும்.
உங்களுக்கு பாடம் படிப்பிக்க எனக்கு தெரியும். டேவிட் ஐயாவை மிரட்டிய உமாமகேஸ்வரன்.
தொடரும்...
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 5
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 6
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode