Language Selection

வெற்றிச்செல்வன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பகுதி 15

டெல்லி அனுபவத்தை தொடரும் முன், நினைவில் வந்த சென்னை அனுபவங்கள்.

Telo குட்டிமணிக்கு வழக்கு பேசிய வக்கீல் கரிகாலன் என்கிற நவரட்ணம் நமது எம்.எல்.ஏ ஹாஸ்டல் அறைக்கு வந்து கொண்டு வந்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். அப்போது அவர் பிரபாகரன் தான் குட்டிமணி மற்றும் தங்கதுரையை காட்டிக் கொடுத்ததாக குட்டிமணி கூறியதாக எங்களிடம் கூறினார். அதோடு பின்பு அவர் இதை ஜூனியர் விகடனில் எழுதினார்.

கண் சிவந்தால் மண் சிவக்கும் என்று ஒரு படம் வந்தது. அந்த பட டைரக்டர் ஜெமினி கணேசனின் மருமகன் என நினைக்கிறேன், பெயர் நினைவில் இல்லை, சந்ததியாரை சந்தித்து ஆனந்த் மினி தியேட்டரில் ஸ்பெஷல் ஷோ போட்டுக் காட்டினார். சந்ததியார் போகும் போது கந்தசாமியும் என்னையும் கூட்டிக்கொண்டு போனார். சந்ததியார் சுவாரசியமாக பட இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் பட ரசிகர்களான நாங்கள் பட்ட பாடு.

 மாணிக்கம்தாசன் காலை நேரம் டெல்லி வந்தார். தூங்கப் போவதாகக் கூறி, மாணிக்கம்தாசன் தூங்கப் போகும் போதும், எழுப்பும் போதும் அவரை காலால் மிதித்து மிதித்து எழுப்ப வேண்டும். காரணம் சிறையில் வாங்கிய அடிகளால் நரம்புகள் பலவீனப்பட்டு இருந்தன. மிதிக்காவிட்டால் அவரால் தூங்க முடியாது.

நானும் மாணிக்கம்தாசன் நிலைமைகளை அலசி ஆராய்ந்து இந்த PLO பயிற்சியை விட்டுவிடக் கூடாது. தான் உடனடியாக பாகிஸ்தான் போய், அங்கிருந்து சிரியா போவதற்கு ஏற்பாடு செய்வதாகவும், டில்லிக்கு பயிற்சிக்கு வருபவர்களை பாகிஸ்தான் லாகூருக்கு கூட்டிக் கொண்டு வரும்படியும், பெரியவர் (உமாமகேஸ்வரன்) வேண்டாம் என்று தட்டி கழித்தாலும், அவருக்கு நம்பிக்கையூட்டி, தாசன் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வதாக கூறினார் என்று கூறி, என்னை பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு கூட்டி கொண்டு வரும்படி கூறினார். உடனடியாக திலக் மூலம் என்னிடமிருந்த பாஸ்போர்ட்டுகள் ஒன்றை எடுத்து தலை மாற்றி கள்ள விசா அடித்து கொண்டு, தாசன் பாகிஸ்தானில் விற்பனை செய்ய வெற்றிலை கட்டுகளும், சின்னசின்ன விஸ்கி பாட்டில்களும் வாங்கி வைத்து, தாசன் டெல்லி பாலம் விமான நிலையம் மூலம் பாகிஸ்தான் லாகூருக்கு பயணமானார்.

சென்னைக்கு உமாவுக்கு தகவலை பரிமாறினேன். அடுத்து வரும் நாட்களில் தோழர்களை அனுப்புவதாக கூறி, தான் விமானம் மூலம் டெல்லி வருவதாகவும், டெல்லியில் சந்திக்க வேண்டியவர்களை தான் சந்திக்க ஏற்பாடு செய்யும்படியும் கூறினார்.

மூன்றாம் நாள் ரயிலில் வந்த தோழர்களை எட்டு பேரா, பத்து பேரா நினைவிலில்லை, 8 பேர் என தான் நினைக்கிறேன். கந்தசாமி, சீசர், சிறையை உடைத்து வந்த சுபாஷ், சுபாஷின் நண்பர் -பேர் மறந்து விட்டேன்- மட்டக்களப்பு மாமா என்று கூறுவார்கள் -ஜெர்மனியில் இருந்து வந்தவர். அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி கொழும்புக் கிளை தலைவராக இருந்த, இலங்கை வங்கியில் வேலை செய்த ரகுபதி பால ஸ்ரீதரனின் தம்பி, ரகுபதிபால சிறிதரனின் மனைவியும், மாமனாரும் -ரேடியோ சிலோனில் வேலை செய்தவர்கள். அவரின் மாமனார் ரேடியோ மாமா என்று கூறுவார்கள். பெயர் சண் என்றழைக்கப்படும் சண்முகநாதன் என நினைக்கிறேன். இவர்களோடு கண்ணன், மட்டக்களப்பு ஜெயில் வார்டனாக இருந்த தோழரும் வந்ததாக நினைவு. அடுத்தடுத்து பயிற்சிக்கு போனவர்கள் தான் இதைப் பற்றி கூறவேண்டும். மாணிக்கம்தாசன் லாகூர் ஓட்டல் விலாசத்தைக் கூறி உடனே எங்களை வரச் சொன்னார். தோழர்கள் டெல்லி வந்த பின் அடுத்த நாள் உமாமகேஸ்வரன் டெல்லி வந்தார். நானும் கந்தசாமியும் விமான நிலையம் போய் கூட்டிக் கொண்டு வந்தோம். எல்.கணேசன் எம்.பி  வீட்டில் எல்லோரும் தங்கியிருந்தோம். அங்கிருந்த எல்.கணேசன் உறவினர் எங்களுக்கு எல்லா வசதியும் செய்து கொடுத்தார். நாங்கள் தங்கியிருந்த எம்.பி வீட்டில் ஒரு பகுதியில் திருச்சியைச் சேர்ந்த சித்தார்த்தன் -இது வேறு சித்தார்த்தன்- என்பவரும் குடும்பத்தோடு தங்கியிருந்தார். இவர் இந்திய ராணுவ தலைமையகத்தில் சிவில் அதிகாரியாக பணி புரிந்தார். அங்கிருந்த எல்லா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளிலும் டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சு வெளிவிவகாரத் துறை அமைச்சர் போன்ற இந்திய மத்திய அரசு அலுவலங்களில் உயர்பதவியில் இருக்கும் தமிழர்கள் வாடகைக்கு குடி இருந்தார்கள். எல்லோரும் அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு உதவி செய்வதில் போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்தவர்கள் தான்.

உமாவும், நானும் ஜி.பார்த்தசாரதி அவர்களை போய் பார்த்தபோது அவர் உமாவுக்கு பல புத்திமதிகளை கூறினார். «தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள், காரணம் தமிழ்நாடு அரசாங்கம் எப்ப தவறு விடுவீர்கள் என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மத்திய அரசுக்குத்தான் கெட்ட பெயர்» என கூறினார். பின்பு நாங்கள் இந்து பத்திரிகையின் G.K ரெட்டி அவர்களையும் பார்த்தோம். பின்பு முதல் முறையாக ரா உளவு அமைப்பின் தென்னாசிய பிரிவுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் அதிகாரியை சந்தித்தோம். இவர்தான் இலங்கை பிரச்சனைக்கும் பொறுப்பாக இருந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் என்னை பற்றி விசாரித்தவர், தேநீர் எல்லாம் குடித்த பின்பு, அவர் உமாமகேஸ்வரன் உடன் தனிமையில் கதைக்க விரும்பினார். நான் வெளியில் போய் விட்டேன். பிற்காலத்தில் உமாமகேஸ்வரன் சார்பாக டெல்லியில் நான்தான் சந்திப்பேன். எங்கள் சந்திப்பு டெல்லியில் காச பிரகாஷ் ஹோட்டலில் நடந்தது.

லண்டனிலிருந்து கிருஷ்ணன், உமாவின் நண்பர் இலங்கை சுங்கத்துறை முக்கிய அதிகாரி விக்னேஷ்ராஜா அவர்கள் சென்னை போவதாகவும் டெல்லி ஏர்போர்ட்டில் அவரை சந்திக்கும் படியும் கூறினார். உமா, நான், கந்தசாமி மூவரும் விமானநிலையம் போய் விக்னேஷ்ராஜாவையும் அவரது மனைவியையும் சந்தித்தோம். அப்போது அவர் எங்களுக்கு பெருந்தொகையான சாக்லெட்டுகளை கொடுத்தார்.

இதற்கிடையில் பாஸ்போர்ட் செய்வதற்கு உமா உட்பட மற்றவர்களுக்கும் பாஸ்போர்ட் எடுக்க போட்டோ எடுத்து கள்ள பாஸ்போர்ட் தயாரித்தோம். எனக்கும் ஜெர்மனியில் இருந்து வந்த தோழருக்கும் ஒரிஜினல் பாஸ்போர்ட், கள்ள விசா தான் அடிக்க வேண்டும். அதோடு பாகிஸ்தான் கொண்டு போக வெற்றிலை கட்டுகளும், விஸ்கி, பிராந்தி பாட்டில்கள் வாங்கி வைப்பதிலும் பொழுது விடிந்தது.

அடுத்த நாள் மாலை இந்தியன் ஏர்லைன்ஸில் லாகூர் பயணம். வெற்றிலை கட்டுகளையும் விஸ்கி பிராந்தி பாட்டில்களையும் உடம்பில் மறைவாக வைத்துக் கொண்டோம். உமா இடம் ஒன்றும் கொடுக்கவில்லை. நமது பயணம் தொடங்கிவிட்டது. டெல்லி ஏர்போர்ட்டில் இமிக்ரேஷன் இல் 10 டாலர் லஞ்சம் கொடுத்து எமது பயணம் தொடர்ந்தது. எல்லோரது முகத்திலும் பயம் தான் தெரிந்தது.

பகுதி 16

மாலை ஐந்தரை மணி போல் டெல்லி பாலம் விமானநிலையத்தில் இருந்து பாகிஸ்தான் லாகூர் க்கு ஒரு மணி நேர பயணத்தில் போய் சேர்ந்தோம். அங்கு அப்போது மாலை ஆறு மணி தான். ஆனால் முழு இருட்டு. சரியான  குளிரும். சுங்க அதிகாரிகளிடம் வெற்றிலை கட்டுகளையும் விஸ்கி பாட்டில்களையும் காப்பாற்றி கொண்டு போக நாங்க பட்ட பாடு. அப்படியும் சிலதை பறித்து விட்டார்கள். அதே நேரம் உமாவிடம் சுங்க அதிகாரி  காசு கேட்க, அவர் மறுக்க பிரச்சினையாகி விட்டது. கடைசியில் அவன் கேட்ட 10 டாலருக்கு பதில் 50 டாலர் கொடுத்து வெளியில் வந்தோம்.

திக்கு திசை தெரியவில்லை. லாகூர் விமானநிலையத்திலிருந்து நகரத்துக்கு போவதற்கு, முன்பு யாழ்ப்பாணத்தில் ஓடிய தட்டிவான் மாதிரி போன்ற வாகனங்கள் வரிசையாக நின்றன. அதில் ஏறி நகரத்துக்குப் போய் சேர்ந்தோம். போகும் வழியெல்லாம் உடைந்த பாழடைந்த பெரிய பெரிய கட்டிடங்கள் இருந்தன. பின்பு அறிந்தோம் 1965,1971 காலப்பகுதியில் நடந்த இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் என்று. நாங்கள் மாணிக்கம்தாசன் குறிப்பிட்ட லாட்ஜை தேடி கண்டுபிடித்து அடைய மிக நீண்ட நேரம் ஆகிவிட்டது.

நாங்கள் லாட்ஜ் போய் மாணிக்கம்தாசனை விசாரித்தபோது அங்கிருந்த ஒரு இலங்கைத் தமிழர் ஒருவர், தான் மாணிக்கதாசன் நண்பர் என்றும், தாசன் இஸ்லாமாபாத் போயிருப்பதாகவும், அங்கு எங்கள் எல்லோரையும் குறிப்பிட்ட விலாசத்திற்கு வரச் சொல்லி இருப்பதாகவும் கூறினார். உமாமகேஸ்வரனுக்கு சரியான கோபம். மாணிக்கம்தாசனை எங்களிடம் கடுமையாகத் திட்டி கொண்டே இருந்தார். தாசனின் நண்பர் எங்களிடம் இருந்த வெற்றிலை கட்டுகள், விஸ்கி, பிராந்தி பாட்டில்களை மிக மிக ரகசியமாக வாங்கி கொண்டு போனார்.

எங்களுக்கு கன நேரமாய் அவரை காணாததால் அவர் ஏமாற்றி விட்டு ஓடி விட்டார் என நினைத்தோம். ஆனால் நீண்ட நேரத்தின் பின்பு அந்த நண்பர் வந்து பெரும் தொகை பணத்தை எங்களிடம் கொடுத்தார். அங்கு மதுபானம், வெற்றிலை தடை செய்யப்பட்டிருப்பதால் போலீசாரின் பிரச்சினை இருப்பதால்தான் நேரமாகிவிட்டது என கூறினார். நாங்களும் இரவு உணவை முடித்துவிட்டு அந்த நண்பர் இஸ்லாமாபாத் போகும் பஸ்ஸில் எங்களை ஏற்றி விட்டார். இஸ்லாமாபாத் தான் பாகிஸ்தானின் தலைநகரம். கிட்டத்தட்ட இரவு 11 மணிக்கு பஸ் ஏறிய நாங்கள் காலை 5 மணிக்கு இஸ்லாமாபாத் போய் சேர்ந்தோம். நாங்கள் மாணிக்கம்தாசன் குறிப்பிட்ட ஹோட்டலை சிரமமில்லாமல் அடைந்தோம். அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாணிக்கம்தாசனை அடித்து அடித்து எழுப்பி கஷ்டப்பட்டு முழிக்க வைத்தோம். நாங்களும் டீ குடித்துவிட்டு, எமது அறைகளில் கன நேரம் தூங்கி விட்டோம்.

பகல் போல் எழும்பி குளித்துவிட்டு எல்லோரும் பகல் சாப்பிட வெளியில் போனோம். இஸ்லாமாபாத் மிக அழகான நகரம். மிகப்பெரிய தெருக்கள். அங்கு முழுக்க அரச கட்டிடங்களும், வெளிநாட்டு எம் பசியாலும் அழகுற வடிவமைக்கப்பட்ட நகரம். பகலுணவு சோறு மாட்டு இறைச்சி அல்லது ஒட்டக இறைச்சி. நாங்கள் ஒரு வெட்டு வெட்டினோம். உமாமகேஸ்வரன்  தான் சாப்பிட மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார். அவருக்கு வெங்காயமும் வெறும் குழம்பும்தான். எல்லோரும் நடந்தே முக்கிய இடங்களைப் பார்த்தோம்.

மாணிக்கம்தாசன் நாங்கள் பாகிஸ்தான் வரும் முன்பு, ஆயுதங்கள் பற்றி விசாரிக்க பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் உள்ள பெஷாவர் என்ற இடத்துக்கு போய் இருந்திருக்கிறார். பெஷாவர் ஆப்கானிஸ்தான் எல்லையோர கிராமம். அங்கு பாகிஸ்தான் சட்டம் செல்லாது. அவர்களே தங்களுக்கு தனி சட்டம் வைத்துக் கொண்டவர்கள். அங்கு தெருவுக்கு தெரு பெட்டிக்கடைகள் போல ஆயுதங்கள் குவித்து வைத்திருப்பார்களாம். மாணிக்கம்தாசன் ஒரு சிறு பால் பாயிண்ட் பேனா மாதிரி ஒரு துப்பாக்கி வாங்கி வந்திருந்தார்.

அடுத்த நாள் உமா, நான், மாணிக்கம்தாசன் மூவரும் சிரியன் எம்பஸி தேடிப்போய் டிரான்சிட் விசா கேட்டோம். லண்டன் ரிட்டன் டிக்கெட் இருந்தால் உடன் தருவதாக கூறினார்கள். நாங்கள் சிரியன் விமான நிறுவனத்துக்கு போய் கேட்டபோது ரிட்டன் டிக்கெட் இருந்தால் டிரான்சிட் விசா தேவையில்லை எனக் கூறிவிட்டார்கள். நாங்கள் பயணத்துக்கு ஒரு முடிவு கிடைத்தது என்ற நம்பிக்கையோடும் சந்தோஷத்தோடும் நடந்தே மூவரும் நீண்ட தூரம் போய் விட்டோம். திரும்பி எமது ஹோட்டலுக்கு வரும்போது மாணிக்கம்தாசன் களைத்துப் போய் விட்டார். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களை நிறுத்தி லிஃப்ட் கேட்டார். ஒருத்தரும் கொடுக்கவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்த மாணிக்கம்தாசன் அந்த வழியாக போய்க்கொண்டு இருந்த சைக்கிள்காரரை நிறுத்தி லிப்ட் கேட்டார். அவர் மறுத்துவிட்டு போய்க்கொண்டிருக்க தாசன் ஓடிப்போய் அவரின் சைக்கிளை பின்பக்கத்தில் ஏறி அவரை கட்டிப்பிடித்து கொண்டார். சைக்கிள்காரன் மாணிக்கம்தாசனை கீழே தள்ளிவிட எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. ஒரு அளவு தூரம் போய் தாசன் இறங்கிக்கொண்டார். இதைப் பார்த்த எனக்கும் உமாவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஹோட்டலுக்கு வந்த பின்பு உமா லண்டன் கிளைக்கு தொலைபேசி மூலம் நிலைமைகளை கூறினார். லண்டன் கிருஷ்ணன் ரிட்டன் டிக்கெட் எடுக்க பணத்தோடு சீனிவாசன் என்ற லண்டன் தோழரை லண்டனிலிருந்து இஸ்லாமாபாத் அனுப்புவதாக கூறினார்.

உமாமகேஸ்வரன் உடனடியாக என்னை டெல்லி திரும்பும்படியும், அங்கு போய் சென்னைக்கு இந்திய பயிற்சிகள் பற்றிய சில விபரங்களை கூறச் சொன்னார். அதோடு டெல்லியில் நடக்கும் கூட்டுசேரா நாடுகளின் மாநாடு நடக்கும்போது அந்த நேரத்தில் வெளிநாட்டு எம்பஸி களுக்கு கொடுக்க வேண்டிய புத்தகங்களை எல்லாம் ரெடி பண்ண சொன்னார். மாணிக்கம்தாசன் விமானத்தில் திரும்பப் போக வேண்டாமென்றும் தரைவழியாக டெல்லி போகும்படியும் கூறினார். காரணம் காசு மிச்சம், புதிய புதிய அனுபவங்களும் வாழ்க்கையில் கிடைக்கும் என்றார். மாணிக்கம்தாசன் மிகச் சிறந்த தைரியசாலி, நல்ல ஒரு போராளியாக வந்திருக்க வேண்டியவர். மாணிக்கம்தாசன், கந்தசாமி போன்றவர்களுக்கு ஒரு சிறந்த தலைவர் கிடைத்திருந்தால் அவர்கள் வாழ்க்கையே மாறி இருக்கும். அவர்களின் திறமையை உமாமகேஸ்வரன் பயன்படுத்தாமல் இவர்களை மனிதவிரோத செயல்களுக்கு பயன்படுத்தியதால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவர்களின் பங்கு துரோகத்தனமாக பார்க்கப்படுகிறது.

நான் இஸ்லாமாபாத் இருந்து லாகூர் வந்து, பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதியான அட்டாரி என்ற இடத்துக்கு வந்து அதிகாலை முதல் பயணியாக இந்திய பகுதிக்கு வந்தேன். பாகிஸ்தான் அதிகாரிகள் எனது பாஸ்போர்ட் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் இந்திய அதிகாரிகள் கள்ள விசாவை பிடித்து விட்டார்கள். என்னைப் பிடித்த சீக்கியஅதிகாரி இரண்டு மணி நேரம் நிற்க வைத்துவிட்டு பின்பு காலை உணவும் டீயும் வாங்கி கொடுத்து அனுப்பினார். பஞ்சாப் அமிர்தசரஸ் போய் அங்கிருந்து டெல்லிக்கு பஸ் எடுக்க வேண்டும். அந்த சீக்கிய அதிகாரி அமிர்தசரஸ் போகும்போது சீக்கிய கோயிலுக்கு போய் கும்பிட்டுவிட்டு அங்கேயே சாப்பிட்டுவிட்டு டெல்லிக்கு போக சொன்னார். அவர் சொன்ன மாதிரியே தங்க முலாம் பூசிய தங்கக் பொற்கோயிலையும் தரிசனம் செய்துவிட்டு, சாப்பிட்டு வந்தேன். இந்த அனுபவம் மறக்க முடியாதது.

எமது தோழர்களின் முதல் வெளிநாட்டு பயிற்சி பயணம் பல கஷ்டங்களில் மத்தியில் நல்ல முறையில் முடிந்தது. ஒரு வாரத்தின் பின்பு உமாமகேஸ்வரன் திரும்ப டெல்லி வரும்போது, நான் பாகிஸ்தானில் இருந்து திரும்பி வந்த பின்பு அங்கு நடந்த கதைகளைக் கூறினார். லண்டனிலிருந்து சீனிவாசன் வந்ததாகவும், தாசன் எல்லோருக்கும் ரிட்டன் டிக்கெட் செய்து கூட்டிக்கொண்டு போய் டமஸ்கஸில் விமானம் மாறும் முன்பு வெளியில் அவர்களைக் கூட்டிப்போக வந்த PFLP ஆட்களும் அவர்களைக் கூட்டிப் போனதாக கூறினார். மாணிக்கம்தாசன் தோழர்கள் போகும் முன்பு தான் தனியாக போய் விட்டதாக கூறினார். சீனிவாசன் உமாமகேஸ்வரனின் கள்ள பாஸ்போர்ட்டை பார்த்துவிட்டு அவரை அந்த பாஸ்போர்ட்டில் போக விடவில்லையாம். சிரிய அதிகாரிகள் மோசமானவர்கள், கள்ள பாஸ்போர்ட்டை பிடித்தால் தூக்கி ஜெயிலில் போட்டு விடுவார்கள். அதனால்தான் விடமாட்டேன் என்றும் சீனிவாசன் தனது லண்டன் விசா உள்ள ஒரிஜினல் புத்தகத்தை கொடுத்து அப்படியே போய்வர சொன்னார். சீனிவாசனின் முகம் பாஸ்போர்ட்டில் பெரிய தெளிவாக இருக்கவில்லையாம். கிட்டத்தட்ட உமாமகேஸ்வரனின் முகம் போலத்தான் இருந்ததாம். தாசன் நீண்ட ஆராய்ச்சிக்கு பின் ஓகே சொல்லி இருக்கிறார். உமாவும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் சிரியா போய் திரும்ப இஸ்லாமாபாத் வந்து சீனிவாசனிடம் பாஸ்போர்ட்டை கொடுத்துவிட்டு சீனிவாசன் லண்டன் போக, உமா தனது பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு டெல்லி வந்தார். இந்த சம்பவங்கள் நடந்த காலம் 1983 அக்டோபர் மாதக் கடைசி அல்லது நவம்பர் மாத முற்பகுதியில் என நினைக்கிறேன்.

பகுதி 17

உமாமகேஸ்வரனும், இயக்கத் தோழர்களும் டெல்லி வரும் முன்பு, எழுத மறந்த ஒரு சம்பவம் முதல் பிரிவு இந்திய பயிற்சி எடுப்பவர்கள் ரயிலில் டெல்லி ஊடாக போகும்போது டில்லியில் ரயில் நிலையத்தில் அவர்களை வசதிப்பட்டால் சந்தித்து சில செய்திகளை கூறச் சொன்னார்கள். இவர்கள் பயிற்சி எடுக்கும் இடத்தில் வேறு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பயிற்சி எடுத்தால் அவர்கள் எவ்வளவு பேர், எல்லோருக்கும் ஒரேவிதமான பயிற்சியா, பயிற்சி அளிக்கும் இடம், போன்ற விபரங்களை கவனமாக பார்க்கும்படி தோழர்களிடம் ரகசியமாக கூறச் சொல்லி சென்னையில் இருந்து தகவல் வந்தது. நான் நினைக்கிறேன் என்னைப் பார்த்த விஜயபாலன் என்கிற சின்ன மென்டிஸ் என்னைப் பார்த்துவிட்டு -அவர்தான் எமது தோழர்களுக்கு தலைமை தாங்கியவர் என நினைக்கிறேன்- ரயிலிலிருந்து இறங்கிவர நான் முழு விபரங்களையும் கூறி பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களோடு வந்த இந்திய ராணுவ அதிகாரிகள் என்னை உடனடியாக திருப்பி அனுப்பிவிட்டு, அதைப்பற்றி மேலிடத்துக்கு தகவல் அனுப்பி உள்ளார்கள். உமா « அது சந்தித்தவர் எமது இயக்கத் தோழர் வெற்றிச்செல்வன் தான் » என கூற, இனிவரும் காலங்களில் யாரையும் இப்படி சந்திக்க அனுப்ப வேண்டாம் என கூறிவிட்டார்கள்.

டெல்லியில் கொமன்வெல்த் நாடுகளின் சர்வதேச மாநாடு நவம்பர் 23ஆம் தேதி ஆரம்பமாக இருப்பதால், அங்கு வரும் உலக நாட்டுத் தலைவர்களுக்கு கொடுப்பதற்காக சென்னையிலிருந்து இலங்கை அரசின் தமிழின விரோதப் போக்கு பற்றிய ஆங்கிலத்தில் உள்ள துண்டுப்பிரசுரங்கள், இலங்கையில் இனபிரச்சினை பற்றிய சிறு ஆங்கில கையேடு, இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் பெரும் தொகையாக எனக்கு அனுப்பப்பட்டது. இந்த நேரத்தில் அல்லது அதற்குப் பின்போ லண்டனிலிருந்து முதன்முறையாக சக்திதாசன் என்பவர் வந்தார். அப்போது அங்கிருந்த எல்.கணேசன் எம்பி அவருடன் பேசிவிட்டு பல் விளக்கி குளிக்க சொன்னார். L.கணேசன் எம்.பி என்னிடம் சக்திதாசனுக்கு பிரஷ் பேஸ்ட் கொடுக்கும்படி கூறினார். சக்திதாசன் வேண்டாம் என்று கூறிவிட்டு அவரது பேண்ட் இல் இருந்த பெரிய பெரிய பைகளில் இருந்து சோப், பிரஸ், சின்ன ஷாம்பு, பவுடர், சென்ட் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டினார். அப்படியே போய் குளித்தும் வந்து விட்டார். அவரையே அன்று எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தோம். சக்திதாசன் லண்டனில் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் கொணர்ந்து கொடுத்ததாக நினைவில் இருக்கிறது.

புது டில்லியில் இருக்கும் அனைத்து எம்பஸிகளுக்கும், ஹை கமிஷன் களுக்கும் கொடுப்பதற்காக புத்தகங்களை கவர்களில் போட்டு தயார் செய்தோம். அதே நேரம் கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கு கொடுப்பதற்காகவும் அந்தந்த நாடுகளின் ஜனாதிபதி அல்லது பிரதம மந்திரி பெயர் போட்டு கவர்கள் செய்தோம். எனக்கு இது உதவி செய்த டெல்லி நண்பர்கள் சித்தார்த்தன், சம்பத், மற்றும் ஒரு இந்தியன் வங்கியில் வேலை செய்த நண்பர். அவரின் பெயர் வெற்றிச்செல்வன் மிகவும் உயரமானவர்.

கொமன்வெல்த் மாநாடு நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பமாக இருந்தது. புதுடில்லி முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாநாட்டுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களோடு காசி ஆனந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா டெல்லி வரவழைக்கப்பட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்.

கொமன்வெல்த் மாநாட்டுக்கு இந்திய பிரதமர் இந்திரா காந்திக்கு எல்லாவிதத்திலும் ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தவர் திரு. ஜி.பார்த்தசாரதி அவர்கள். ஜி.பார்த்தசாரதி அவர்கள் அமிர்தலிங்கம் அவர்களுடனும் ரகசியமாக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருந்ததாக அறிந்தேன். அமிர்தலிங்கம் இந்திய அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தைக்கு போகும்போது M. சிவசிதம்பரம் மற்றும் சம்பந்தனை மட்டுமே கூட்டிக்கொண்டு போவார். நான் மரியாதை நிமித்தம் அமிர்தலிங்கத்தை சந்திக்க போயிருந்தேன். அவர் தன் ரொம்ப பிஸியான வேலையிலும் என்னை சந்தித்து பேசினார். பின்பு நான் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரு வார்த்தை பேசிவிட்டு, காசி ஆனந்தன் இருந்த ரூமில் போய் இருந்து விட்டேன். அங்கு மாவை சேனாதிராஜாவும் தங்கியிருந்தார். காசி ஆனந்தன் கொழும்பில் வேலை செய்த காலத்தில் எனக்கு அவரை நன்றாகத் தெரியும். எனது அண்ணாவும் அவரும் கொழும்பில் ஒரே ரூம் மேட்ஸ். அவருக்கு என்னை எனது 10 வயசிலிருந்து தெரியும். 1976,1977 ஆண்டுகளில் என நினைக்கிறேன். சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது, யாழ் வண்ணார்பண்ணை இல் நடந்த கூட்டத்தில் இவர்களுக்கு ரத்த பொட்டு வைத்து கொண்டாடினோம். அப்படி கொண்டாடிய இவர்கள் அன்று பார்க்கும்போது மாவை சேனாதிராஜாவையும், காசி ஆனந்தனையும் பார்க்க பாவமாக இருந்தது. அவர்கள் என்னை அன்று ஒரு பெரிய போராளியாக பார்த்தார்கள். திரும்பி வரும்போது வாசலில் என்னை பார்த்த யோகேஸ்வரன் எம் பி , சாவகச்சேரி எம்.பி நவரத்தினம் இருவரும் என்னை கூட்டிக்கொண்டு போய் என்னைப் பற்றியும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை பற்றியும் டெல்லியில் எனது வேலையைப் பற்றியும் விசாரித்துக் கொண்டார்கள். 23ஆம் தேதி நான் எல்லா தூதுவர் அலுவலகங்களுக்கும் புத்தகம் கொடுக்க போவதை கூறினேன். அவர்களுடன் தாங்களும் இன்னொரு நாள் வருவதாகவும், தங்களுக்கு இந்திய அரசு  எல்லா இடமும் போய்வர ஒரு கார் கொடுத்துள்ளதாகவும் கூறினார்கள். தாங்களும் புதுடில்லி சுத்தி பார்த்ததாகவும் இருக்கும் என்று கூறினார்கள். எனக்கும் செலவில்லாமல் காரில் போவது வசதியாக போய் விட்டது.

முதன்முதலில் இந்திய அரசின் சார்பாக சிறையில் உமாமகேஸ்வரனையும், பிரபாகரனையும் முதன் முதலில் சந்தித்த இந்திய அரசுக்கு ரிப்போர்ட் கொடுத்த IB அதிகாரிகள் இருவரும் இலங்கைப் பிரச்சினை டெல்லியில் தொடங்கி விட்டதால் டெல்லிக்கு மாற்றப்பட்டு, அவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் அமிர்தலிங்கம் அவர்களின், மற்றவர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு இருப்பதை பார்த்தேன். அவர்களை சென்னையில் நான் சந்தித்து இருப்பதால் அவர்களை தெரியும். ஆனால் அவர்கள் அங்கு என்னை தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.

தொடரும்...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 4