பகுதி 11

சில சம்பவங்கள் முன்பின் இருந்தாலும் சில முக்கிய விடயங்களையும் இதில் குறிப்பிட வேண்டியுள்ளது. உமாமகேஸ்வரனும், இரா.ஜனார்த்தனனும் நேருக்கு நேர் சந்தித்தால் ஜனார்த்தனன் தலையை குனிந்து கொண்டு ஒதுங்கி போவதும், உமாமகேஸ்வரன் எங்களிடம் கள்ளன் போகிறான் என சத்தமாக சொல்லுவதும் வாடிக்கை. என்னைப் பொறுத்தளவில் ஜனார்த்தனன் ஒரு பெரிய ஆள் என நினைத்திருந்தேன். மாறன் ஏன் உமா கோபப்படுகிறார் என்ற விளக்கத்தைக் கூறினார்.

திரு அமிர்தலிங்கம், ஜெயவர்த்தனவிடம் அரசியல் சமரசம் செய்து மாவட்ட சபையை பெற்றது பின்பு கோப்பாய் எம்.பி கதிரவேற்பிள்ளை அவர்களுக்கும் அமிர்தலிங்கம் அவர்களுக்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கதிரவேற்பிள்ளை திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் மற்றும் அமெரிக்க, இலங்கை ரகசிய தொடர்புகள் சம்பந்தமான தமிழர் விடுதலைக் கூட்டணியால் தயாரிக்கப்பட்ட ரகசிய கோப்புகளை எடுத்துக்கொண்டு இந்தியா வந்து டெல்லியில் இந்திய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் இடம் கொடுக்கப் போவதாக கூறி -1981 மார்ச் மாதம் என நினைக்கிறேன் - இங்கு சென்னை வந்து அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அமிர்தலிங்கம் ஜனார்த்தனன் மூலம் தமிழ் கதிரவேற்பிள்ளை உடலை இலங்கை அனுப்புவதோடு அவரது உடமைகள் எல்லாம் மிக கவனமாக உடலோடு அனுப்பி வைக்கும்படியும் கூறுகிறார். தமிழ்நாட்டில் பெரியார் திடலில் அவரது கதிரவேற்பிள்ளையின் உடலை வைத்து அஞ்சலி செலுத்த ஏற்பாடு நடைபெற்றதாகவும் ஜனார்த்தனன் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதற்கு பல இடைஞ்சல்கள் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் உமாமகேஸ்வரன் ஜனார்த்தனன் மேல் கடுங்கோபத்தில் இருந்த சம்பவத்துக்கு காரணத்தை விளக்கினார்.

எமது பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டல் அலுவலகத்துக்கு லங்காராணி அருளர் அடிக்கடி வந்து பேசுவார். இவர்கள் உமா இடம் பேசும் போது நான், மாதவன் அண்ணா, சந்ததியார் போன்றோர்களும் இருப்போம். அருளர் விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் உள்ள சில பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பேச நடுநிலையாக வந்து இருந்தார். முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அந்த காலகட்டத்தில் சுந்தரம் புலிப் படைப்பிரிவு, காத்தான் புலிப் படைப்பிரிவு என்ற பெயர்களில் எமது சிறுசிறு தாக்குதல்களை மேற்கூறிய பெயர்களில் உரிமை கொண்டாடி வந்தோம். இது பிரபாகரனுக்கு பெரும் தலையிடியை கொடுத்து வந்தது போல. வேறு பல பிரச்சினைகளை சந்ததியாரும், உமாமகேஸ்வரனும் அருளர் இடம் விவாதித்து கொண்டிருப்பார்கள். இந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட ஒரு மாதம் நடந்தது. பேச்சுவார்த்தையின் முடிவில் இனிமேல் நாங்கள் விடுதலைப் புலி என்ற பெயரை பாவிப்பதில்லை என்று உறுதிமொழி கொடுத்தார்கள் சந்ததியாரும் உமாமகேஸ்வரனும்.

எமது இடத்துக்கு ஈரோஸ் ஐயர் பாலாவும் அடிக்கடி வந்து போவார். நாகராஜா, ஐயர் எல்லோரும் வருவார்கள். பழைய கதைகளை கூறுவார்கள். நாகராஜா ஆரம்பகாலத்தில் படுக்கையில் வைத்து சக நண்பர்களை  பிரபாகரன் சுட்ட கதைகள் எல்லாம் கூறுவார். PLO வில் பயிற்சி எடுத்த விடுதலைப்புலி ஆரம்பகால உறுப்பினர் விச்சு என்ற விஸ்வேஸ்வரன் அடிக்கடி வருவார். அவரும் உமாமகேஸ்வரனும் சிறுசிறு பயணங்களை மேற்கொண்டு வெளியூர்களுக்கும் போய் வருவார்கள். அதே மாதிரி நாகராஜா உடன் உமா பயணங்கள் போய் வருவார். அதோடு நாகராசாவிடம் பணம் கடன் வாங்குவதும் உண்டு. எமது அறைக்கு நாகராஜா வந்தால், எமக்கு சந்தோசம். காரணம் பகலுணவு மீன், இறைச்சி எல்லாம் வாங்கித் தருவார். இப்படியான நேரங்களில் தான் நாங்கள் நல்ல உணவு சாப்பிட முடியும். இல்லாவிட்டால் அந்த 10 ரூபாதான். விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு விலகி உமாமகேஸ்வரன் சென்னையில் தங்கியிருந்து கஷ்டப்பட்ட போது ஐ.நாவில் வேலை செய்த காந்தளகம் சச்சிதானந்தம் ஐயா, உமாமகேஸ்வரனுக்கு வருமானம் கிடைக்க காந்தளகம் புத்தகங்களை விற்பதற்கு உதவி செய்தார். சென்னையில் இருந்த தன்னோடு படித்த பச்சையப்பா கல்லூரி பேராசிரியருமான பிரித்திவிராஜ் என்பவரின் சென்னை நகர் வீட்டில் காந்தளகம் புத்தகங்கள் இருந்தன. பேராசிரியர் பிரித்திவிராஜ் அமைந்தகரையில் தனது தோட்ட வீட்டில் உமாமகேஸ்வரன் மறைந்து வாழ உதவி செய்துள்ளார். மிக ரகசியமான இடம். அமைந்தகரையில் கிளினிக் வைத்திருந்த பேராசிரியர் மூ.வரதராஜனின் மகன்தான் உமாமகேஸ்வரனுக்கு இலவச வைத்தியம் செய்பவர். பிற்காலத்தில் நாங்களும் போய் இலவசமாய் மருந்து எடுத்து இருக்கிறோம். அவரின் பெயர் மறந்து விட்டேன்.

ஜூலை கலவரம் நடந்து கொஞ்ச நாட்களில் இலங்கையிலிருந்து காந்தளகம் சச்சிதானந்த ஐயா கலவர நேரம் பாதிக்கப்பட்டு சென்னை ப்ளு டைமன்ட் ஓட்டலில் வந்து தங்கியிருந்தார். அங்குதான் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் தங்கியிருந்தார். காந்தளகம் சச்சிதானந்தம் தனது அறையில் பிரஸ் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தபோது உமாமகேஸ்வரனையும் அதற்கு அழைத்தார். உமாவின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு அது. கூட என்னையும் அழைத்துப் போய் இருந்தார். பிரஸ்மீட் டிங் முடிவில் சச்சிதானந்தம், உமா இடம் கூறிய ஒரு செய்தியை உமா பத்திரிகையாளர்களிடம் கூறச் சொல்லி அதாவது மொரிசியஸ் அரசாங்கம் ஈழப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவாக இருப்பதான செய்தி. இந்த செய்தி அடுத்த நாள் பத்திரிகையில் சச்சிதானந்தம் ஐயா, உமாமகேஸ்வரன் பேட்டிகளோடு, எனது பேட்டியும் வந்திருந்தது. விடுதலைப்புலி வெற்றிச்செல்வன் கூறுகிறார் என்று இருந்தது. அடுத்த நாள் காலையில் பத்திரிகையை வாசித்த சந்ததியார் என்னை அழைத்து கடுமையாக ஏசினார். முதலாவது நான் பேட்டி கொடுத்தது தவறு என்றும், அதைவிடத் தவறு விடுதலைப்புலி வெற்றிச்செல்வன் என்று கூறியது என்றும் திட்டினார். நல்ல காலம் அந்த நேரம் உமாமகேஸ்வரன் அங்கு வந்து தான்தான் பேட்டி கொடுக்க சொன்னதாகவும், இங்கு உள்ள பத்திரிகைகள்  இலங்கை போராளிகள் பற்றி எழுதும்போது எந்த இயக்கமாக இருந்தாலும் விடுதலைப் புலிகள்தான் என்று எழுதுகிறார்கள். இதில் வெற்றியின் தவறு ஒன்றும் இல்லை என்று கூறினார். ஆனாலும் சந்ததியார் கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற கதை போல், உமாவையும் இடித்துரைப்பது போல், பேட்டி கொடுக்கும் முன்பு விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை முதலில் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்று கூறினார். உமாவும் சிரித்துக்கொண்டு நீங்களே இந்த முயற்சியை எடுக்கலாம் தானே என்று கூறினார்.

இலங்கையிலிருந்து பெருமளவு இளைஞர்கள் சிறுவர்கள் இந்தியாவில் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்கள். இங்கு வந்த பெரும்பான்மையானவர்கள் 3 மாத பயிற்சி, திரும்பும்போது ஆயுதத்தோடு போவோம் என்ற நம்பிக்கையில்தான் வந்தவர்கள். சில பேர் இங்கு சினிமா நடிகர், நடிகைகளை பார்க்கலாம் என்ற கனவில் வந்தவர்களும் இருந்தார்கள். டெலோ இயக்கம், உமாமகேஸ்வரன் இயக்கத்துக்கு என்று ஏமாற்றி ஆள் சேர்த்த கதையும் உண்டு. வந்தவர்கள் ஸ்ரீ சபாரத்னத்தை பார்த்து இவரா உமாமகேஸ்வரன் என்று கேட்டு தாங்கள் பார்த்த படத்துக்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசமாக இருக்கிறார் என்று கூறியும் இருக்கிறார்கள்.

இன்னொரு மிக முக்கிய சம்பவத்தையும் கூற வேண்டும். இயக்கத் தலைமைகள் எல்லாம் மறைத்த சம்பவம். பங்களாதேஷ் அகதிகள் இந்தியாவுக்கு கூடுதலாக வந்து இந்தியா நேரடியாக பங்களாதேசில் தலையிட்டு பிரித்து கொடுத்தது போல், இங்கும் இலங்கை அகதிகள் பெருமளவு வந்தால் இயக்கங்களுக்கு பெருமளவு பயிற்சியும் ஆயுதமும் கிடைக்கும் என்ற கனவில் எல்லா இயக்கங்களும் பெருமளவு பொதுமக்களை மூன்று மாதத்தில் திரும்பி வந்து விடலாம், அகதிகள் கூடினால் இந்தியா தலையிடும், தமிழீழம் கிடைத்து விடும் என்று கூறி பொதுமக்களை தங்கள் தங்கள் இயக்க படகுகள் மூலம் கூட்டி வந்தார்கள். அத்தோடு இதை பணம் சேகரிப்பதற்கான வழியாகவும் கையாண்டார்கள். பணம் வாங்கிக்கொண்டு இயக்க, வெளி படகுகளில் அப்பாவி இலங்கைத் தமிழர்களை இந்தியா கொண்டு வந்து சேர்த்து இருபது முப்பது வருடங்கள் அவர்களின் வாழ்க்கையை சீரழித்ததில் இந்த விடுதலை இயக்கங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பகுதி 12

நான் இருந்த சென்னை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நடந்த சம்பவங்கள், மாதங்கள் நினைவில் இல்லை. உமாமகேஸ்வரன் எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகும்போது ஒருமுறை அவரிடம் என்னையும் அழைத்து போகும்படி உரிமையோடு கேட்டேன். காரணம் நான் சிறு வயதில் இருந்து எம்.ஜி.ஆர் ரசிகர். இன்று வரையும் தான். எம்.ஜி.ஆரை பொதுக்கூட்டங்களில் பக்கத்திலிருந்து பார்த்திருக்கிறேன். பக்கத்திலிருந்து பேச ஆசை. உமாவுடன் எம்.ஜி.ஆரை பார்க்க ராமாவரம் தோட்டத்துக்கு போன போது பக்கத்தில் எம்.ஜி.ஆரை பார்த்தேன். அவர் உமாவை கூட்டிக்கொண்டு தனி அறைக்கு போய் விட்டார்.

உமாவோடு நல்ல தொடர்பில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.கல்யாணசுந்தரம் அவர்கள் உமாவை தான் டில்லி போகப் போவதாகவும் தன்னுடன் டெல்லி வந்தால் ஜி.பார்த்தசாரதி அவர்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். ஆனால் இங்கு பயிற்சிகள் முகாம்கள் போன்ற பல வேலைகள் இருந்தபடியால் உமாமகேஸ்வரன் தயங்கினார். ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தை இழக்க விரும்பவில்லை. தனது டெல்லி வரமுடியாத நிலையை கூறி வேறு யாரையாவது அனுப்பி விடவா என்று கேட்டார். அவரும் சரி என்று சொல்லி விட்டார் போல.

உமாவும், சந்ததியாருடன் கதைத்து, என்னை டெல்லி அனுப்ப முடிவு செய்தார்கள். சந்ததியாரும் வெற்றியும் முன்பு தி.மு.க எம்.பி குழுவுடன் டெல்லி போய் போய் வந்த அனுபவம் இருக்கும் என கூறினார். இவர்களின் இந்த முடிவு எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

நானும், திரு கல்யாணசுந்தரம் எம்.பியுடன் டெல்லி போய் எம்.பி களுக்கான அவரது வீட்டில் தங்கினேன். அடுத்தநாள் ஜி.பார்த்தசாரதியை போய் சந்தித்தோம். அப்பொழுது ஜி.பார்த்தசாரதி இந்திய நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்பு குழுவின் தலைவராக இருந்தார். இந்திராகாந்திக்கு மிக நெருக்கமானவர். ஜூலை மாத கலவரத்தின் போது இலங்கைக்கு ஜி.பார்த்தசாரதியை தான் இந்திராகாந்தி அனுப்பினார். அடுத்து வந்த ராஜீவ்காந்தி காலத்தில் ஜி.பார்த்தசாரதியை இலங்கை பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள ஜே.ஆர் அனுமதிக்கவில்லை. இதை ராஜீவ்காந்தியும் ஏற்றுக்கொண்டார். இலங்கை பிரச்சினை தடம்புரண்டதுக்கு இதுவும் ஒரு காரணம்.

என்னை ஜி.பார்த்தசாரதி இடம் அறிமுகப்படுத்திவிட்டு கல்யாணசுந்தரம் எம்.பி தனது வேலையை பார்க்க போய் விட்டார். பார்த்தசாரதி அவர்கள் முதலில் எனது தனிப்பட்ட வாழ்க்கைமுறை, குடும்ப உறவுகள், படிப்பு போன்றவற்றை முதலில் விசாரித்தார். பின்பு உமாமகேஸ்வரன் பிளாட் மற்ற இயக்கங்கள் பற்றி எல்லாம் மேலோட்டமாக என்னிடன் கேட்டார். அவர் என்னை ஒரு சிறுவனாகவே பார்த்தார். அப்பொழுது எனது வயது 24. உமாமகேஸ்வரன் டெல்லி வரும்போது முடிந்தால் தன்னை வந்து சந்திக்கும்படி கூறினார். ஜி.பி. யின் செயலாளர் அய்யாசாமி அவர்கள் மிக நன்றாக பேசி, தேநீர் எல்லாம் கொடுத்து உபசரித்தார். அந்த நேரத்தில் இந்தியாவின் உச்சகட்ட செல்வாக்கில் இருந்த ஜி.பார்த்தசாரதி அவர்கள் சந்தித்தது எனக்கு ஒரு கனவு போலவே இருந்தது. அவர் எனக்கு விடை கொடுத்தபோது, உமாவை டெல்லி வரும்போது இந்து பத்திரிகையின் டெல்லி எடிட்டர் ஜி.கே ரெட்டி ஐயும் சந்திக்கச் சொன்னார்.

நான் திரும்ப வரும்போது நோர்த் அவன்யு வந்து எல்.கணேசன் எம்.பி விடுதிக்கும் போய் அங்கிருந்த எம்.பியின் உறவுக்கார நண்பரும் முன்பு போனபோது உதவி செய்தவருமான, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சித்தார்த்தனை சந்தித்தேன். இனிமேல் டெல்லி வந்தால் இங்கு தான் தங்க வேண்டும் என்று உரிமையுடன் கூறினார். நான் திரு. கல்யாணசுந்தரம் அவர்களின் வீட்டுக்கு திரும்பும்போது வழியில் இருந்த இந்து அலுவலகத்துக்கும் போய் இந்து பத்திரிகை டெல்லி ஆசிரியர் ஜி.கே ரெட்டி அவர்களை பார்த்தேன். மிக அருமையான மனிதர். இவரும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை வகுப்புகுழுவில் ஒருவர். பல புத்திமதிகளை கூறினார். நானும் நன்றி கூறி விடைபெற்றேன். திரு கல்யாணசுந்தரம் அவர்களின் உதவிக்கு நன்றி கூறி அவர் புக் பண்ணி தந்த ரயில் டிக்கெட்டில் அன்றே சென்னை திரும்பினேன்.

சென்னை பரபரப்பாக இயங்கிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் எமது இயக்கம் எல்லா இயக்கங்களையும் விட சிறந்த முறையில் இயங்க தொடங்கி இருந்தது உண்மை. மாறன் இந்திய உளவுபயிற்சிக்கு அனுப்பப்பட்டதாக அறிந்தேன். மாறன் மிகச் சிறந்த போராளி. தமிழ்நாட்டில் ரகசியமாக இருந்த காலகட்டத்திலும் அதன் பிறகும் மாறன் மிக கடுமையாக உழைத்தார். தோழர்களை சந்திப்பது, அவர்களுக்கு தேவையான பணம், பொருட்களை உடனுக்குடன் கொடுப்பது, பல நாட்கள் தூக்கம் இல்லாமல் ஓடியதை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு உதவியாக இதே மாதிரி கந்தசாமியும் அவருக்கு உதவியாக இருந்தார். மாறன், கந்தசாமி எல்லாம் கிளிநொச்சி வங்கிக்கொள்ளை, ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்ட மூத்த தோழர்கள். மாறனின் அண்ணா ஒரு இஞ்சினியர். அவரும் ஆரம்பகாலத்தில் விடுதலைக்கு உதவியவர்களில் ஒருவர் என கேள்விப்பட்டேன். மாறன் புதிய உளவுபயிற்சியை முடித்துக் கொண்டு 83 ஆம் ஆண்டு கடைசியில் இலங்கை போய் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு பூசா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 87 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்பு விடுதலை செய்யப்பட்டார். 89 ஆண்டு உமா பிளாட் தோழர்களுக்கு எதிராக இருந்தபோது தோழர்களுக்காக மிகக் கடுமையாக உமா இடம் வாதாடியதாக கேள்விப்பட்டேன். பின்பு வவுனியா அரச போக்குவரத்து சபை மேலாளராக இருந்தபோது சக நெருங்கிய தோழர் மாணிக்கம்தாசன் நெருக்குதல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் கொலை செய்யப்பட்டு தற்கொலையாக காட்டப்பட்டதாக உள்ளிருந்து செய்திகள் வந்தன. இதைப்பற்றி பின்பு விரிவாக எழுதுவேன். மாறனின் உண்மையான பெயர் தேவதாசன்.

எமது ஜெர்மனி அமைப்பாளர் பரமதேவா, ஜெர்மனியிலிருந்து பல தோழர்களை இந்தியாவுக்கு அந்த காலகட்டத்தில் அனுப்பியிருந்தார். அதில் ஒருவர் எனது நெருங்கிய நண்பராக இருந்த நந்தகுமார். இவர் ரேடியோ சிலோன் -மயில்வாகனத்தாரின் தங்கை மகன் . இந்திய பயிற்சியை முடித்துக் கொண்டு சில தோழர்களோடும் ஆயுதங்களோடும் படகில் மட்டக்களப்பு போகும்போது விமான குண்டு வீச்சில் படகில் வைத்தே கொல்லப்பட்டார்கள். பரமதேவா ஒன்றுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ஜெர்மன் கிளை பொறுப்பாளர். பின்பு பிளாட் இயக்கத்துக்காக வேலை செய்தவர். மட்டக்களப்பு சிறையை உடைத்து எமது தோழர்களும் மற்றைய இயக்கத் தோழர்களும் தப்பி விட்டதாக செய்திகள் வந்தன. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அடுத்த நாள் தமிழ்நாட்டு கரையோரம் வந்துவிடுவார்கள் என செய்திகள் வந்தன. இதே நேரம் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தோழர்கள் தாங்கள் தான் மட்டக்களப்பு சிறையை உடைத்தது என பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள். நாங்கள் இரவோடு இரவாக மட்டக்களப்பு சிறை உடைப்பு பற்றி போஸ்டர் அடித்து எங்கள் இயக்கம் உரிமை கோரி பெரிய பெரிய போஸ்டர்களாக இரவு சென்னையில் நானும், சட்டக்கல்லூரி மாணவர் தமிழ்மணி, இன்னும் இரண்டு தோழர்கள் -அவர்களின் பெயர் தெரியவில்லை மறந்துவிட்டேன்- விடிய விடிய போஸ்டர் ஒட்டினோம். அப்போது சென்னையில் விடிய விடிய தெருவில் மக்கள் நடமாட்டமாகத்தான் இருக்கும். காரணம் தண்ணீர் கஷ்டம். குடங்களோடு பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் எல்லோரும் தண்ணீர் லாரிக்காக காத்திருப்பார்கள். அவர்கள் போஸ்டர் வாசித்து விட்டு விபரங்கள் கேட்டு அறிந்து, எங்களை வாழ்த்தி திறந்து இருக்கும் டீக்கடைகளில் எங்களுக்கு நடு இரவு சாமத்தில் டீ எல்லாம் வாங்கித் தந்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். மறக்க முடியாத நாட்கள்.

இவற்றை பதிவு செய்தபோது சரியான தேதி மாதங்களை குறிப்பிட முடியாது உள்ளது நினைவிலில்லை. பிற்காலத்தில் இப்படி எழுத வேண்டி வரும் என அந்த காலத்தில் நினைக்கவில்லை. இப்போதுகூட பல சம்பவங்கள் நினைவில் இல்லை. நேரில் வரும்போது அந்த சம்பவங்களையும் பதிவில் இட யோசித்துள்ளேன்.

பகுதி 13

83 கலவரத்திற்கு பின்பு நினைவில் வந்த மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் பதியப்பட வேண்டும். உமாமகேஸ்வரன் மேல் இருந்த வழக்கை முடிப்பதற்கு சாட்சிகளை கலைப்பதற்கு முயற்சி செய்தது, அது மாறனும் கணபதியும ஈடுபட்டார்கள். தி.மு.கவைச் சேர்ந்த மணவைதம்பியிடம் உமா தனது கைத்துப்பாக்கியை கொடுத்து பழுது பார்த்ததை காவல்துறை கண்டுபிடித்து அரசு சாட்சியாக சேர்த்தது. உமா கும்மிடிப்பூண்டியில் சுட்டவரையும் அவரது உறவினர்களையும் லோக்கல் அரசியல்வாதிகள் மூலம் சாட்சியை விலைக்கு வாங்கியது. அப்ப இருந்த எமக்கு சாதகமான நிலையில் இது பெரிய காரியமாக இருக்கவில்லை.

வவுனியா எஸ்.பி. ஹேரத் என நினைக்கிறேன். இவரை அவரது அலுவலக மேஜையில் குண்டு வைத்து கொலை செய்த அம்பிகைபாகன், எங்களது  நடேசன் அண்ணையும் முதன்முதலாக யோகேஸ்வரன் எம்.பி இடம் ஒரு கடிதம் வாங்கிக் கொண்டு உமாமகேஸ்வரனை சந்திக்க எம்.எல்.ஏ ஹாஸ்டல் வந்தார்கள். மாதவன் அண்ணாவுக்கு அம்பிகைபாகனை முதலிலேயே தெரியும் என்பதால் உணவு வாங்கிக் கொடுத்து உமாவை சந்திக்க வைத்து, பின்பு முகாம் அனுப்பப்பட்டார்கள். இங்கு படித்துக்கொண்டிருந்த இலங்கை மாணவர்களை வசந்தி திருஞானம், குணசீலன், ஜெயசீலன் போன்ற பலரை அவர்கள் படிப்பை கெடுத்து இயக்க வேலைகளுக்கு அனுப்பியதால், இந்திய பயிற்சிக்கு அனுப்ப ஏற்பாடு செய்ததால், இவர்களுக்குப் பாதுகாவலனாக குறிப்பாக வசந்திக்கு, ராஜ்மோகன் என்பவர்- இவர் முன்பு மட்டக்களப்பில் கழுகுபடை என்ற பெயரில் இயங்கியவர் என நினைக்கிறேன்- அடிக்கடி எம்.எல்.ஏ ஹாஸ்டல் அலுவலகத்துக்கு வந்து, எங்களோடும், உமாவோடும் பல மணி நேரம் கதைத்துகொண்டிருப்பார். ஆனால் பின்பு படிக்கும் மாணவர்களை இயக்க வேலைகளில் நிரந்தரமாக ஈடுபடுத்தியதால், உமாமகேஸ்வரனோடு கடும் சண்டை பிடித்தார். படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் அப்பா அம்மா கடும் கஷ்டத்தில் பணம் அனுப்புவதாகவும் அவர்கள் படிப்பை கெடுத்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்க வேண்டாமென ராஜ்மோகன் கூறி சண்டை   பிடித்தார். சண்டை கூடி இருவரும் கண்ணியக் குறைவான வார்த்தைகளால் திட்டிக் கொண்டார்கள். இவர்கள் சண்டை பிடிக்கும் போது நாங்கள் வெளியில் வந்து விட்டோம். பின்பு நான் டெல்லி போன பின்பு கேள்விப்பட்டேன், சிறையில் தப்பி வந்த வாமதேவனை கொண்டு, அவரை கொலை செய்து எரித்து விட்டதாக. ராஜ்மோகன் கொலைதான் தமிழ்நாட்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் செய்த முதல் கொலை.

இரண்டொரு நாளில் மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பிய தோழர்கள் ஒரு பகுதியினர் என நினைக்கிறேன், பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டல் வந்திருந்தார்கள். அவர்களின் வரவு பரபரப்பாக இருந்தது. பரந்தன் ராஜன் அவர்களும், அற்புதமும் காயப்பட்டு இருந்தபடியால் மேலே ரூமுக்கு வரவில்லை. மாணிக்கம்தாசன் மேலே வந்தார். இவர்கள் யாரும் எனக்கு பழக்கம் இல்லை. கந்தசாமி, மாறன் பழைய கதைகளைச் சொல்லும்போது மாணிக்கம்தாசன் பற்றியும், பரந்தன் ராஜன் அவர்களைப் பற்றியும், ராஜனின் கார் ஓட்டும் திறமை பற்றியும் என்னிடம் கூறி இருந்தபடியால் அவர்களை ஒருவித பிரமிப்போடு பார்த்தேன் என்பதே உண்மை. பின்பு காயப்பட்டவர்களை சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அற்புதத்தை பற்றிய சில செய்திகள் வந்தன. எந்த கைவிலங்கையும் உடனடியாக திறந்துவிடக் கூடிய திறமை இருந்ததென்றும், இவரின் இந்த திறமையை ஜெயிலில் வீடியோ எடுத்ததாகவும் கதைகள் வந்திருந்தன. உண்மை பொய் தெரியாது.

லண்டனிலிருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்தது. டாக்டர் ஜார்ஜ் அப்பாஸ் என்பவரின் தலைமையில் இயங்கிய PFLP என்னும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தோடு எமக்கு லண்டன் கிளை மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பயிற்சிக்கு எமது தோழர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் அறிய முடிந்தது. எமது லண்டன் கிளை பொறுப்பாளர் கிருஷ்ணன் எட்டு பேருக்கான என நினைக்கிறேன் விமான டிக்கெட்டுகளை அனுப்பியிருந்தார். அந்தக் டிக்கெட் டெல்லி டமஸ்கஸ் (சிரியா) வரையான ஒருவழிப்பாதை டிக்கெட். கண்ணன், சந்ததியார், உமாமகேஸ்வரன் மூவரும் மிக நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார்கள். இடைக்கிடை மாணிக்கம்தாசனையும் அழைத்து பேசுவார்கள். அடுத்த நாள் உமாமகேஸ்வரன், சந்ததியார் என்னை அழைத்து உடனடியாக டெல்லிக்கு போக தயாராகும்படி கூறினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சி. PLO பயிற்சி பற்றி அறிந்திருந்த நான் என்னையும் பயிற்சிக்கு அனுப்பப் போகிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் டெல்லி போய் முதல் பட்ச் 8 பேரோ அல்லது 10 பேரோ நினைவில் இல்லை, டெல்லி வந்து தங்குவதற்கும் விமான டிக்கெட் புக் பண்ணி தேதியை அறிவிக்கும் படியும் கூறினார்கள். இதில் ஒரு பிரச்சனை வந்தது. பெயர் போட்டு வந்த டிக்கெட்டுகளுக்கு அந்தப் பெயரில் இலங்கை பாஸ்போர்ட் தயாரிக்கவேண்டும். நான் முழித்துக் கொண்டிருக்கும் போது, மாணிக்கம்தாசன் வந்து இது ஒரு சின்ன விஷயம் யோசிக்காதே, நீ டெல்லி போய், டெல்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் இருக்கும் பாகர்கஞ் ஏரியாவில் உள்ள ஹோட்டல் நவரங் தங்கியிருக்கும் கொழும்பு தமிழர் திலக்கை சந்தித்து தனது பெயரை சொல்லி உதவி கேட்கும்படி கூறினார். உமாமகேஸ்வரனும் தன்னிடமிருந்த பாஸ்போர்ட்டுகள், எனது பாஸ்போர்ட் உட்பட வெளிநாட்டு பயிற்சிக்கு வந்தவர்களின் பாஸ்போர்ட்டுகள் எல்லாவற்றையும் ஒரு சிறு மூட்டையாக என்னிடம் கொடுத்தார். விமான டிக்கெட்டுகளையும் என்னிடம் கொடுத்து டெல்லியில் எங்கு போய் தங்க போகிறாய் என கேட்டார். நானும் முதல் முறை டெல்லி போனபோது தங்கிய, எல்.கணேசன் எம்.பி வீட்டில் தங்கலாம் என கூறினேன். அவர் அங்கு தங்க சம்மதிப்பாரா? இல்லாவிட்டால் குறைந்த வாடகை விடுதியில் தங்கும் படியும் கூறினார்.

நாங்கள் இருந்த எம்.எல்.ஏ விடுதியின் உள்ளே இருந்த ஒரு அறையில் தான் L.கணேசன் அண்ணா தங்கியிருந்தார். நான் அவரிடம் விபரம் கூறி தங்குவதற்கு அனுமதி கேட்டேன். டெல்லி போவதற்கான காரணத்தையும் கூறினேன். அவர் உடனடியாக சம்மதம் கூறி, பயிற்சிக்கு போகும் தோழர்களையும் அங்கேயே தங்க வைக்கும் படியும் கூறினார். அங்கு தங்குவதற்கு தனது உறவினர் பையன் சித்தாத்தன், தான் கூறியதாக கூறினால் உதவி செய்வார் எனவும் கூறினார். அங்கிருந்த சில தி.மு.க கட்சிக்காரர்கள் தலைவர் கலைஞரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு செய்யலாம் தானே என்று கேட்டார்கள். « இலங்கை தமிழருக்கு இந்த நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய உதவிகளில் ஒன்றுதான் இது. இதற்காக தலைவர் கலைஞர் வருத்தப்பட மாட்டார், சந்தோசம்தான் படுவார். தான் போய் கலைஞரிடம் இதைப்பற்றி பேசும்போது அங்கிருக்கும் சிலர் இலங்கை தமிழருக்கு வீடு கொடுத்தால் வெடிகுண்டு துப்பாக்கி என்று பிரச்சனை வந்தால் தி.மு.க வுக்கு கெட்ட பெயர் என்று தலைவரிடம் போட்டுக் கொடுப்பார்கள். அதெல்லாம் தேவையில்லை பிறகு பார்த்துக் கொள்ளலாம் » என்று கூறினார்.

டெல்லியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்திய மத்திய அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதுவர், அதிகாரிகள் போன்றோரை சந்தித்து கழக பெயரை நான் முன்னிறுத்த பிள்ளையார் சுழி போட்டு உதவி செய்தவர் எல்.கணேசன் எம்.பி அவர்கள்தான். எந்த ஒரு உதவியும் எங்களிடமிருந்து அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து நாங்கள் பல உதவிகள் குறிப்பாக எமது தோழர்கள் வந்து போய் தங்குவதற்கும் அவரது அரசு தொலைபேசியை நாங்கள் பாவித்ததற்கும், அதில்தான் எல்லா வெளிநாட்டு அழைப்புகளை ஏற்படுத்தி பேசுவோம். அந்த காலத்தில் அவருக்கு எங்களால் வந்த தொலைபேசி பில் கூட நாங்க கட்டவில்லை.

எல்.கணேசன் அண்ணாவைப் பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன். அவர் இலங்கைத் தமிழருக்கான போராட்டத்திற்குதான் உதவி செய்தார். தனிப்பட்ட ஒரு இயக்கத்துக்காக செய்யவில்லை. நானும் அடுத்த நாள் டெல்லி போக ஏற்பாடுகள் செய்தேன். அப்போது இன்றுடன் எனது சென்னை வாழ்க்கை முடிகிறது என்று எனக்கு தெரியவில்லை.

பகுதி 14

சில நண்பர்கள் இந்த பதிவுகளால் என்ன பயன். உங்கள் பெருமையை தான் நாங்கள் வாசிக்க வேண்டுமா என கேட்கிறார்கள். எனது முகநூலில் எனது கடந்தகால வாழ்வில் நடந்த சம்பவங்களை நான் பதிவு செய்வது ஏன் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. பிடிக்காவிட்டால் வாசிக்காமல் விடுங்கள் அல்லது என் முகநூல் பக்கமே வர வேண்டாம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் என்பது ஆயிரக்கணக்கான கரையான்கள் போன்ற தோழர்கள் புற்று எடுத்து கட்டியது. இன்று கஸ்டப்பட்டு கட்டிய கரையான்கள் போன்ற தோழர்கள் இல்லை. ஆனால் இன்று நாகப்பாம்பு குடிகொண்டுள்ளது இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்.

நான் சென்னையில் இருந்து புறப்பட்டு மூன்றாம் நாள் காலையில் புதுடில்லி போய்ச் சேர்ந்தேன். எல்.கணேசன் எம்.பி இன் எம்.பி விடுதி இருக்கும் நோர்த் அவென்யு இருபக்கமும் இந்திய பாராளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா எம்.பி களின் ஒரு பகுதியினரின் அடுக்குமாடி குடியிருப்பாகும். அவர்களின் கார் விட கராஜ் விடுதிகளின் பின்பக்கம் இருக்கும். அநேகமா எல்லா கார் கராஜ் வாடகைக்கு விடப்பட்டு சாப்பாட்டுக் கடைகள் மற்றும் மக்கள் குடியிருப்பாக மாறி இருக்கும். நோர்த் அவென்யூ முடிவில் இந்திய ஜனாதிபதி மாளிகையும் மறுமுனையில் மிகப் பெரிய ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியும் இருக்கிறது. விடுதிகளுக்கு முன்னால் மிகப்பெரிய புல்வெளியும் இருக்கிறது.

186 நோர்த் அவென்யூ தான் எல்.கணேசன் எம்.பி வீடு. அங்கு அவரது உறவினர் சித்தார்த்தன் தங்கியிருந்தார். அவருக்கும் எங்கள் வயசு தான் இருக்கும். சித்தார்த்தன் அங்கு வந்து போகும் எங்கள் இயக்க தோழர்கள் எல்லோருக்கும் மிகமிக உதவி செய்தவர். அதோடு கீழ் வீட்டில் இருந்த வெங்கா எம்.பியின் மகன் சம்பத் டெல்லி யுனிவர்சிட்டியில் படித்துக் கொண்டிருந்தவர். எமக்கு மிக உதவி செய்தவர். இவர் தற்போது மதுராந்தகம் என்ற இடத்தில் வக்கீலாக இருக்கிறார். இப்ப இரண்டு கண்ணும் தெரியாது. பக்கத்தில் இருந்த இன்னொரு எம்.பியின் மச்சான் செல்வகணபதி டெல்லி ஜவஹர்லால் யுனிவர்சிட்டியில் படித்தவர். இவர் பின்னாட்களில் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். இவர்களோடு தங்கியிருந்த சம்பத், முருகேசன் போன்றவர்கள் டெல்லியில் நாங்கள் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி கண்காட்சி வைக்க டெல்லி ஐ.ஐ.டி, ஜவர்கலால் நேரு யுனிவர்சிட்டி, டில்லி யுனிவர்சிட்டி போன்றவற்றில் வைக்க உதவி செய்தார்கள். இவர்களில் சம்பத் இந்திய ராணுவத்தில் சேர்ந்து இந்திய அமைதிப் படையில் சேர்ந்து பிரிகேடியர் ஆக திருகோணமலைக்கு பொறுப்பாக இருந்தார் என கேள்விப்பட்டேன். அவர் பின்பு எமது இந்திய நண்பர்களிடம் தாங்கள் முன்பு கற்பனை செய்து இருந்த இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்கள் பற்றிய கனவு, திருகோணமலையில் தமிழ் இயக்க தலைவர்கள் நடந்து கொண்ட முறை மிக மோசமாக இருந்தது என்றும், அமைதிப்படை அதிகாரிகளுடன் சேர்ந்து குடிப்பதிலும் விருந்திலும் தான் பொழுதை கழித்தார்கள் என்றும் கூறியுள்ளார். நான் சந்திக்க கேட்டேன், மறுத்து விட்டார். மேற்கூறியவர்களை விட இன்னும் பலர் எமக்கு உதவி புரிந்தார்கள். அந்த காலத்தில் தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு உதவி புரிந்தவர்கள், உதவி செய்தவர்கள் யாரும் பணம் பொருள் தேவைக்காக எங்களுக்கு உதவி செய்யவில்லை என்பதை முக்கியமாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

நான் காலை டெல்லி  வந்தவுடன், எமது ரோட்டோர கடையில் காலை உணவு உப்புமா, சாம்பார், டி ரெண்டு ரூபா முடியும். கடை நடத்தியவர் கேரளாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர். டெல்லி வந்த எமது அனைத்து தோழர்களும் உமாமகேஸ்வரன், சித்தார்த்தன் உட்பட யாவரும் காலை உணவும் டீயும் அங்குதான். கையேந்தி பவன். அங்கு ஒரு சிறப்பு. நாங்கள் சாப்பிடும் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பல எம்.பி களும் காலை உணவு உப்புமா, வடை சாப்பிட வருவார்கள்.

அது PLO லெபனான் பயிற்சிக்கு அவர்களது விமான டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, Connaught place என்ற இடத்தில் இருந்த சிரியன் விமான அலுவலகம் போய், டெல்லி, டமஸ்கஸ், லண்டன் ஒருவழிப்பாதை டிக்கெட்டை கொடுக்க அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவழி பாதை டிக்கெட் இருந்தால் திகதி புக் பண்ணி தருவதாக கூறினார்கள். எங்கள் திட்டம் லண்டனுக்கு  போக டிக்கெட் புக் செய்து டமஸ்கஸில் விமானம் மாறும்போது, வெளியில் சிரியா நாட்டுக்குள் உள்ளிடுவது.

பின்பு நான் போய் மாணிக்கம்தாசன் கூறிய திலக் என்பவரை சந்தித்தேன். மாணிக்கம்தாசன் பெயரை கேட்டவுடன் எல்லா உதவியும் செய்து தருவதாக கூறினார். காரணம் மாணிக்கம்தாசன் 70-80 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் சிட்டி லொட்ஜ் என்ற இடத்தில் தங்கியிருந்த போது சிங்கள பையன்களுக்கும் அங்கிருந்த தமிழ் பையன்களுக்கும் சண்டை வந்தபோது மாணிக்கம்தாசன் லோக்கல் துப்பாக்கி வாங்கி சுட்டு அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக வந்ததாக கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் உமா, பிரபா உடைந்த பின்பு செல்லக்கிளி இங்கு திலக்கொடு தான் வந்து டெல்லியில் தங்கி இருந்திருக்கிறார். 1983 நவம்பர் மாதம் தீபாவளி நேரம் K.P என்று அழைக்கப்படும் பத்மநாபன் முதன்முறையாக இந்த திலக்கோடு தான் தங்கி இருந்து, தனது முதல் போதைப்பொருள் வியாபாரத்தை விடுதலைப் புலிகளுக்காக ஆரம்பித்தார். பின்பு K.P மும்பை போய் விட்டார். டெல்லி மும்பை பாகிஸ்தானில் கராச்சி லாகூர் போன்ற இடங்களில் இலங்கை தமிழ் சிங்கள இளைஞர்கள் ஈரான் ஊடாக வெளிநாட்டுக்குப் போக ஐரோப்பாவுக்கு போக வந்து, ஈரானில் மத ஆட்சி வந்த பிறகு பாகிஸ்தான் ஈரான் எல்லை மூடப்பட்டதால் பல இளைஞர்கள் இந்த நாடுகளில் தங்கி விட்டார்கள். மும்பை ஈரான் போய்விட்டால் லண்டன் வரை பஸ்ஸில் போக கூடிய வசதி இருந்தால்தான்.

நான்  சென்னைக்கு எம்.எல்.ஏ ஹாஸ்டல் எமது அலுவலகம் மூலம் உமாமகேஸ்வரனுக்கு விமான டிக்கெட் பிரச்சினை பற்றி கூறினேன். அவரும் விபரத்தை கேட்டுவிட்டு அன்று சாயங்காலம் தொலைபேசி மூலம் மாணிக்கம்தாசன் இரண்டு நாளில் ரயில் மூலம் டெல்லிக்கு வருவார். இருவரும் கலந்து பேசி என்ன செய்யலாம் என்று உடன் முடிவு எடுத்து அறிவிக்கும்படி கூறினார்.

தொடரும்...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 2

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 3