பகுதி 4

1982 முதல் 1987 வரை எனக்குத் நேரடியாக தெரிந்த இந்திய தொடர்புகளும் மற்றும் இயக்கங்களின் இந்திய அனுபவங்களும்.

நான் சென்னையில் வந்து இறங்கியதும் தமிழ்மன்னன் பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டல் சென்றார். நான், நான் தங்கியிருந்த லாட்ஜ் க்குப் போனேன். வாசலிலேயே என்னை பார்த்துவிட்ட லாட்ஜ் மேனேஜர் கண்ணாலேயே திரும்பிப் போகும்படி சைகை காட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வெளியில் வந்து பக்கத்தில் இருந்த டீக்கடையில் நின்றேன். டீ குடிப்பது போல் வெளியில் வந்த லாட்ஜ் மேனேஜர், என்னிடம் கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாட்டு உளவுத்துறை அதிகாரிகள் என்னைப்பற்றி விசாரித்ததாகவும் ஒரு அதிகாரி 24 மணி நேரமும் என்னை பிடிப்பதற்காக லாட்ஜ் அலுவலகத்தில் வந்து அமர்ந்து இருப்பதாகவும் கூறி வரவேண்டாம் என போகச் சொன்னார்.

 

‘நான் உடனடியாக தமிழ்மன்னன் இடமும், பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் தென்மொழி அச்சக அலுவலகம் போய் ஐயாவிடம் மாறன், கந்தசாமி வந்தால் தகவல் சொல்லும்படியும், நான் பழைய எம்.எல்.ஏ ஹாஸ்டல் இருக்கும் இடத்தில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயில் பக்கத்தில் இருப்பதாகவும் கூறினேன்.

மாலையில் மாறன் தமிழ்மணி என்பவருடன் வந்தார். தமிழ்மணி எனக்கு தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து தருவார், தகவல்கள் முக்கிய செய்திகள் தமிழ்மணி மூலம் வரும் எனவும் கூறினார். (தமிழ்மணியை பற்றி கூற வேண்டும். இவர் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர் சென்னை சட்டக் கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்தார். இளவழகன், ராமசாமி போன்றவர்களின் உறவினர். எமது ஈழ விடுதலைக்காக உதவி புரிந்தார். அவரைப் பற்றி ஒரு சம்பவம் ஒரு முக்கிய தகவலை கொடுப்பதற்காக புரசைவாக்கத்தில் அவர் தங்கியிருந்த விடுதியிலிருந்து எமது மறைமுக அலுவலகம் அமைந்திருந்த திருவல்லிக்கேணிக்கு -கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்- கையில் பஸ்ஸுக்கு காசு இல்லாமல் நடந்தே வந்தார், வேர்க்க விருவிருக்க. இப்போது தமிழ்மணி சென்னையில் வக்கீலாக இருக்கிறார்.)

என்னை கூட்டிக்கொண்டு போய் சென்னை மாநிலக் கல்லூரி இன் விக்டோரியாஆண்கள் விடுதியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்த மன்னார்குடியை சேர்ந்த பாண்டி தென்னவன் என்ற மாணவனிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அக் காலகட்டங்களில் இலங்கை பிரச்சனை பெரிதாக இல்லை. உமா பிரபா சுடப்பட்ட பிரச்சனை ஓரளவு விளங்கியவர்கள்.

தமிழ்மணி பாண்டி தென்னவன் இடம் விபரம் கூறி என்னை கவனமாக பார்த்துக் கொள்ள சொன்னார். அவரும் யாருக்கும் தெரியாமல் அவரது ஹாஸ்டல் ரூமில் என்னைத் தங்க வைத்துக் கொண்டு, அவரது மிக நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் என்னை பற்றிய விபரங்களைக் கூற, அவர்களும் என்னை கவனமாக பார்த்துக் கொண்டார்கள். மற்ற மாணவர்கள் கேட்டால் ஊரிலிருந்து தங்கள் உறவினர் பையன் வந்திருப்பதாகக் கூறினார்கள். எனக்கு உணவு வாங்கி வருவதிலிருந்து ஒரு படத்துக்கும் கூட்டிப் போனார்கள். டி ராஜேந்தர் நடித்த உயிருள்ளவரை உஷா படம்.(இன்று பாண்டி தென்னவன் தஞ்சாவூரில் வக்கீலாக இருப்பதாக அறிந்தேன் தொடர்பு இல்லை)

கிட்டத்தட்ட இருபது நாட்கள் அங்கு தலைமறைவாக இருந்தேன். பின்பு உமாமகேஸ்வரனும், மாறனும் வந்து வேலைகளுக்காக நிர்வாக வசதிக்காக ஒரு தலைமறைவு அலுவலகம் போட ஒரு வீடு தேடச் சொன்னார்கள். அப்போது நாங்கள் எடுத்த தலைமறைவு வீடுதான் 28CNK ரோடு திருவல்லிக்கேணி. தமிழ்நாடு போலீஸ் உளவுத்துறைக்கு கண்ணில் மண் தூவி விட்டோமென்று சந்தோஷத்தோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் இந்திய அலுவலகம் செயல்படத் தொடங்கியது. நானும் மாதவன் அண்ணனும் சேர்ந்து நிர்வாக வேலைகளை செய்தோம். பாவலரேறு பெருஞ்சித்தனார் ஐயாவின் தென்மொழி அச்சகமும், ஐயாவின் வீடும் நமக்கு மிக அருகாமையில் இருந்ததால் எமது தோழர்களுடன் தகவல் தொடர்புக்கு எளிதாக இருந்தது.

83ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உமாமகேஸ்வரன் எனது பெயரை வெற்றிச்செல்வன் என மாற்றினார். அந்தப் பேரோடு எனது இயக்க வேலைகள் தொடர்ந்தன. எனக்கு சென்னையின் வடசென்னை தென் சென்னை போன்ற எல்லா இடங்களையும் சைக்கிளில் போய்வர அறிமுகம் செய்தவர், குரு, பாவலரேறு ஐயாவின் மகனும் எனது நண்பருமான பொழிலன் தான். உமாமகேஸ்வரன் நாங்கள் அச்சிட்ட மக்கள் பாதை மலர்கிறது என்ற பத்திரிகையை சென்னை கடைகளுக்கு விற்பனை செய்ய போடுவதற்கு பொழிலன் இடம் உதவி கேட்டார். பொழிலன் தென்மொழி வெளியீடுகளான தமிழ்நிலம், தமிழ்ச்சிட்டு, தென்மொழி பத்திரிகைகளை கடைகளுக்கு போடபோகும் போது, நானும் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு எமது புத்தகங்களை சைக்கிளில் கட்டி காலை எட்டு மணி போல் முதலில் வடசென்னை பக்கம் போவோம். நாங்கள் சைக்கிளை எடுத்து புறப்படும் போது பெருஞ்சித்தனார் அய்யா வாசலில் வந்து தனது மகனை பார்த்து, தம்பியை மிகக் கவனமாக கூட்டிக்கொண்டு போ, தனியே விட்டு விடாதே என்று கூறும்போது அவருக்கு எங்கள் மேல் இருந்த அன்பும் பாசமும் தான். இதில் சிறப்பு என்னவென்றால் என்னை விட வயதில் சிறியவர் பொழிலன். இருவரும் முதல்நாள் வடசென்னை கடைகள் அடுத்தநாள் தென் சென்னை கடைகள் என போய் வருவோம். காலையில் போனால் மாலை ஏழு மணியாகும் வர. கையில் காசு இருந்தாலும் செலவழித்து சாப்பிட உரிமை இல்லை. அதேநேரம் மனமும் நமக்கு இல்லை. அம்பது காசு எலுமிச்சை சர்பத் மட்டும் குடிப்போம்.

இக் காலகட்டங்களில் எமது முதல் செங்கல்பட்டு முகாம் ரகசியமாக இயங்கத் தொடங்கியது. சந்ததியார், ஜான் மாஸ்டர் வந்து போவார்கள். கண்ணன் என்ற சோதிஸ்வரனும், நிரஞ்சன் என்ற சிவனேஸ்வரனும் வெளியூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இவர்களும் சென்னை வந்துவிட்டார்கள். நிரஞ்சன் என்னோடு தங்க வைக்கப்பட்டார். கந்தசாமியும், மாறனும் தான் மிக மிக மிக ஓய்வு இன்றி வெளியூர் உள்ளூர் என்று பயணப்பட்டு கொண்டு திரிவார்கள். சந்ததியார் ரகசியமாக என்னிடமும் மாதவன் அண்ணாவிடம் மாறனும், கந்தனும் என்ன செய்கிறார்கள் எங்கு போய் வருகிறார்கள் என கேட்பார். நாங்கள் எமக்கு தெரியாது என கூறுவோம். சந்ததியார் நாங்கள் பொய்கூறுவதாக நினைத்து எங்களிடம் கோபப்படுவார். உண்மையில் எங்களுக்கு தெரியாது.

இளவழகன், ராமசாமி சாமி தவுடன், தமிழ்மணி, எமது பத்திரிகை ஆசிரியர் மறைமலையான் போன்றவர்கள் அடிக்கடி வந்து போவார்கள். உமாமகேஸ்வரனும் அடிக்கடி ரகசியமாக வந்து போவார்.

தமிழ்நாடு மேலவை துணைத் தலைவரும் கவிஞருமான புலவர் புலமைப்பித்தன் அடிக்கடி உமாமகேஸ்வரனை தனது வீட்டுக்கு கூப்பிடுவார். உமா என்னையும் கந்தசாமியையும் சேர்த்துக் கூட்டி போவார். காரணம் காலை சாப்பாடாக இருந்தால் என்ன, பகல் சாப்பாடாக இருந்தால் என்ன, இரவு சாப்பாடாக இருந்தால் என்ன மீன், இறைச்சி, கோழி என பல உணவு வகைகளுடன் சாப்பாடு கட்டாயம் சாப்பிடணும் என்று கூறி வற்புறுத்தி சாப்பிட வைப்பார். இதற்கு பயந்து தான் உமா எங்களைக் கூட்டிக்கொண்டு போவார். உமா தனக்கு வேலை இருப்பதாக கூறி போய்விடுவார். புலவர் புலமைப்பித்தன் கவலைப்பட்டாலும், புலவரும் குடும்பமும் மிகமிக அன்போடு உணவு பரிமாறுவார்கள்.

ஒருமுறை அவர் வீட்டு விசேஷத்துக்கு அழைத்து இருந்தார். மாறன், நான், உமா போயிருந்தோம். அப்போது சென்னைக்கு வழக்கு தவணைக்காக வந்திருந்த பிரபாகரன் அவருடன் கூட பேபி சுப்ரமணியம், ராகவனும் என நினைக்கிறேன் அங்கு வந்தார்கள். அவர்கள் வந்து தங்குவதற்கு மொட்டை மாடியில் ஒரு அழகான குடிசை போட்டு வைத்திருந்தார். பிரபாகரன் குழுவினர் மொட்டைமாடிக்கு போய் விட்டார்கள். நாங்கள் அங்கு நிலைமை சரியில்லை என்று கூறி புலவரிடம் சொல்லிக் கொண்டு எமது இடத்துக்கு திரும்புவதற்கு முயற்சி செய்தபோது புலவர் புலமைபித்தன் எங்களை விடவில்லை. மிகவும் கவலைப்பட்டார். உமா மட்டும் தனக்கு வேலை இருப்பதாகச் சொல்லி போக அவருக்கு பாதுகாப்பாக மாறனும் போய், பின்பு கந்தசாமியை அழைத்துக்கொண்டு வந்தார். கந்தன் ஆயுதத்தோடு வந்து இருந்தார். அந்த அசைவ விருந்தை சாப்பிட முடியாமல் சாப்பிட்டோம். மாறன் கூறியபடி பிரபாகரன் ஆட்கள் போகும் வரை அங்கு இருந்தோம். நாங்கள் உரிமையோடு இருந்தது புலவருக்கும் மிக சந்தோசம். பின்பு தான் எனக்கு தெரிந்தது கந்தசாமி பிரபாகரன் போகும்போது ரோட்டில் வைத்து அவரை போடுவதற்கு முயற்சி செய்யப்போவதாக. எனக்கு ஆர்வமும் மிக பயமாக இருந்தது. ஆனால் என்ன காரணமோ மாறனும் கந்தசாமியும் அந்தத் திட்டத்தை கைவிட்டார்கள்.

நாங்கள் ரகசிய அறை அலுவலகம் என்று நினைத்திருந்த வீட்டுக்கு முன்னால் புதிதாக ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி அமர்ந்திருப்பார். அவருக்கு நாங்களும் வேலைகளை கொடுப்போம். கிட்டத்தட்ட அந்த இடத்தை நாங்கள் மூன்று வருடங்கள் வைத்திருந்தோம். 1988 ஆம் ஆண்டு நான் டெல்லி அலுவலகத்தை மூடிவிட்டு சென்னை வந்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இந்திய பிரதிநிதியாக பொறுப்பேற்ற போது மரியாதை நிமித்தம் தமிழ்நாடு உளவுத்துறை ஐஜி யை சந்திக்கச் சென்றபோது அங்கு ஒருவர் வந்து என்னை சுகம் விசாரித்து விட்டு என்னை தெரிகிறதா என்று கேட்டார். நான் மறந்துவிட்டேன் தெரியவில்லை என்று கூறினேன். அப்போதுதான் அவர் கூறினார், நான் தான் உங்கள் திருவல்லிக்கேணி அலுவலகம் முன்பு செருப்பு தைக்கும் தொழிலாளி என்று. அப்போதுதான் தெரியும் அப்போதே எங்களை கண்காணிக்க தமிழ்நாடு உளவுத்துறை ஏற்பாடு செய்திருந்தது என்று. ஆனால் நாங்கள் அது ரகசிய இடம் என்று நினைத்திருந்தோம்.

உமாமகேஸ்வரன் மற்றும் மற்றவர்களின் வழக்குகளை அப்போது தோழர் கணபதி என்ற விக்கி என்ற விக்னேஷ்வரன் பார்த்து கொண்டார். அதைப் பற்றி பின்பு எழுதுகிறேன். எமது தமிழகத்தின் குரல் வானொலி இயங்க முழுமூச்சாக வேலை செய்த டெக்னிக்கல் வேலை முழுவதும் தோழர் பார்த்திபன் தான் பொறுப்பு. ஜூலை கலவரத்துக்கு முன் நடந்த பல சுவாரசியமான விடயங்கள் அவருக்கு தெரியும். அவரும் தனது பங்களிப்பை பற்றியும் தனக்குத் தெரிந்த விடயங்களை எழுதினால் பல செய்திகள் எமக்கு அறியக்கூடியதாக இருக்கும். இந்த பதிவை படித்தால் கட்டாயம் பழைய செய்திகளை எழுத வேண்டும் என வேண்டுகிறேன்.

பகுதி 5

சென்னையில் எனதும் மாதவன் அண்ணாவினதும் வேலைகள் கூடிக்கொண்டு போய் கொண்டிருந்தன. கடிதத் தொடர்புகள், எங்கள் வெளியீடுகள் போன்ற பல வேலைகள். நாங்கள் எமது இறந்த தோழர்களின் நினைவாக சுந்தரம், ஊர்மிளா தேவி, காத்தான் கிருஷ்ணகுமார் போன்றவர்களின் நினைவுத் தபால்தலைகளை சிவகாசியில் அச்சடித்து பார்சல் சென்னைக்கு வரும் வழியில் மணப்பாறை வருவாய்த்துறை செக்போஸ்டில் பிடித்துவிட்டார்கள்.

உமாமகேஸ்வரன் எமது பயிற்சியாளர் சேகரை கூப்பிட்டு இரண்டு நாளில் மதுரை போகும் போது என்னையும் கூட்டிக்கொண்டு போய் மணப்பாறை விஷயத்தை கவனிக்க சொன்னார். சேகரும் நானும் மதுரை போய் சேகர் மதுரையில் தனது உறவுக்காரர் இன் மொத்த விற்பனைக் கடையில் என்னைத் தங்க வைத்தார். சேகர் முத்திரை பார்சல் பிடிபட்ட காரணத்தை அறிந்து வந்து கூறினார். வரி கட்டாததால் பிடிபட்டதாக. பின்பு நான் மட்டும் மணப்பாறை போய் செக்போஸ்ட் அலுவலகத்தில் விவரம் கோரி வரி விபரங்கள் கேட்டுகொண்டிருக்கும்போது, தூரத்தில் இருந்து என்னை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் என்ன விஷயம் என விபரம் கேட்டார். பின்பு நீங்கள் சிலோன் ஆ என கேட்டார். நான் மறுத்துவிட்டு பின்பு உண்மையை ஒத்துக் கொண்டேன். நீங்கள் விடுதலைப் புலிகளா எனக் கேட்க நான் ஆம் என்றேன். அக்காலத்தில் எல்லா இயக்கங்களையும் விடுதலை புலிகள் என்றே கூறுவார்கள்.

நான் துணிந்து ஒரு பொய்யை கூறினேன், வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் தான் அனுப்பினார் என்று. உடனடியாக என்னோடு பேசிக் கொண்டிருந்த நபர் வருவாய்துறை அதிகாரிகளிடம் போய், ரகசியம் பேசிவிட்டு, வரி கட்டாமல் முத்திரைத்தாள் வெளியில் எடுப்பதற்கு உரிய ஆவணங்களை எனது கையில் கொடுத்தார். அடுத்து வரும் லாரியில் சென்னைக்கு அனுப்பி விடுவதாகவும் சென்னையில் பெற்றுக் கொள்ளும்படியும் கூறினார். பின்பு என்னோடு பேசிக் கொண்டிருந்த நபர் என்னைக் கூட்டிக்கொண்டு போய் தேநீர், சாப்பாடு எல்லாம் வாங்கிக் கொடுத்து சென்னை போகும் பஸ்ஸில் அனுப்பி வைத்தார். பஸ் புறப்படும் முன் தன்னை யாரென்று அறிமுகப்படுத்தினார். அவர் மணப்பாறை கியூ பிரான்ச் இன்ஸ்பெக்டர். அவருக்கு நன்றி கூறி சென்னை புறப்பட்டு வந்தேன்.

சென்னையில் எங்களுக்கு ஒரு நாளைக்கு பத்து ரூபா படி. ஒரு மாதத்துக்கு 300 ரூபாய் சாப்பாட்டு செலவுக்கு தந்துவிடுவார்கள். நானும் மாதவன் அண்ணாவும் காலை உணவு சின்ன பிரெட் ஐம்பது காசு, தேநீர் 25 காசு, கடலை மிட்டாய் 10 காசு. நமக்கு காலை உணவு ஒரு ரூபாய்க்குள் முடிந்துவிடும். மதியம் எப்பவும் சைவ, அளவு சாப்பாடு தான். அளவுச் சாப்பாடு ஒரு ரூபாய் 50 காசு. நாங்கள் சர்வர் நண்பரை நன்றாக பழகிக்கொண்டு, அவரிடம் சாம்பார் திரும்பத் திரும்ப பெறுவோம். கடை முதலாளிக்கு தெரிந்தால் திட்டுவார். இப்படியாக மதிய உணவை முடித்துக்கொண்டு வெளியில் வந்து கடலை மிட்டாய் வாழைப்பழம் சாப்பிடுவோம். இரவு உணவு பக்கத்தில் இருக்கும் முனியாண்டி விலாஸ் க்கு போய் அளவுச் சாப்பாடு. அங்கு மீன் குழம்பு, மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு கிடைக்கும். வெறும் குழம்பும் மட்டும்தான். அளவு சாப்பாடு விலை ஒரு ரூபாய் 75 காசு. அங்கு மீன் மட்டும் வாங்க சாப்பிட ஆசை இருந்தாலும் வாங்கி சாப்பிட காசு பத்தாது. மீன், கோழி, மட்டன் எல்லாம் ஐந்து ரூபாய் தான் இருக்கும். சிலவேளைகளில் நமது உணவு செலவு கூடிவிட்டால் ( பத்து ரூபாய்க்கு) நானும் மாதவன் அண்ணாவும் போய் சைக்கிள் ரிக்க்ஷாகாரன் சாப்பிடும் கதம்ப சாப்பாடு வாங்கி சாப்பிடுவோம். சாப்பாட்டு கூடைக்காரர்கள் அலுவலகங்களில் வேலை செய்யும் ஆட்களுக்கு அவரவர் வீடுகளிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்துவிட்டு திரும்பி சாப்பாட்டு கேரியரை எடுத்து வரும்போது நிச்சயம் மிச்சம் இருக்கும் உணவு வகைகளை ஒன்றாகப் பிசைந்து மிக பெரிய ஒரு கைப்பிடி அளவு தரும் உணவுதான் கதம்ப சாப்பாடு. விலை 50 காசு.

எமது வீட்டில் வைத்து உமாமகேஸ்வரனுக்கு நிரஞ்சனுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது வளர்ந்து பிற்காலத்தில் நிரஞ்சனை கொலை செய்யும் அளவுக்கு போய்விட்டது. அது சம்பந்தமாக தொடர்கள் முடிந்த பின்பு எழுதுவேன்.

எமது வேலைகள் சுமூகமாகப் போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஜாமீனில் வெளிவந்திருக்கும் தமது தலைவர்களை ஜாமீனை ரத்து செய்து திரும்ப கைது செய்வதற்காக எம்.ஜி.ஆர். அரசு மோகனதாஸ் உளவுத்துறை தலைவர் முயற்சி செய்வதாக தகவல்கள் வந்தன.

ஒருநாள் புலவர் புலமைபித்தன் இடம் ஒரு செய்தியை எமது பத்திரிகை ஆசிரியர் மறைமலையான் அவர்கள் கொண்டு வந்தார். அவசரமாக உமாமகேஸ்வரனை, மாறனை சந்திக்க வேண்டுமென மிக அவசரமும் கூட என. மாறன் வந்த பின்பு மாறன் என்னையும் கூட்டிக்கொண்டு புலவர் புலமைப்பித்தன் வீடு போனபோது, மிக பதட்டத்தோடு, மதுரையில் இருந்து பிரபாகரன், அமைச்சர் காளிமுத்து மூலம் ரகசியசெய்தி அனுப்பி இருப்பதாக சொன்னார். தங்கள் ஜாமீன் ரத்து செய்து திரும்ப கைது செய்யும் முன். தானும் ராகவனும் இலங்கைக்கு தப்பி செல்வதாகவும் உமாமகேஸ்வரனையும் நண்பர்களையும் உடன் தப்பிப் போகும்படியும் செய்தி அனுப்பியிருந்தார். நாங்களும் நன்றி கூறி வந்து உமாமகேஸ்வரன் இடம் விபரத்தை கூறினோம். உமா, பிரபாகரனை நம்ப முடியாது எங்களை தப்பிப் போக சொல்லிவிட்டு தான் போக மாட்டான், அப்படி செய்தால் எங்களுக்கு தான் பிரச்சனை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார். பிரபாகரன் தப்பிப்போன செய்தி இரண்டு நாளில் எனக்கு கிடைத்தது. உடனடியாக நாங்களும் பரபரப்பாக அடுத்தகட்ட நிலைக்கு வேலைகளைத் தொடங்கினோம். உமாமகேஸ்வரன் அமைந்தகரையில் மிக ரகசியமாக தங்கியிருந்தார். வீட்டிலிருந்து இடம் மாறினார். மாறன் என்னை முதல்முறையாக அந்த இடத்துக்கு கூட்டிக்கொண்டு போய் அங்கிருந்த முக்கிய பொருட்கள், ஆவணங்கள், டைப்ரைட்டர், ரேடியோ போன்றவற்றை என்னிடம் ஒப்படைத்தார். நான் எமது ரகசிய அலுவலகம் என நினைத்த இடத்தில் அப் பொருட்களை கொண்டுவந்து வைத்தேன். உமாமகேஸ்வரன் தலைமறைவாக முடிவு செய்தார். எமது அலுவலகம் வந்து பணம், நாங்கள் செய்யவேண்டிய வேலைகள் என்பவற்றை குறித்துக் கொடுத்த அதேநேரம் மாறன், கந்தசாமி, பெரிய செந்தில், செங்கல்பட்டு முகாம் வேலைகள் எப்படி எப்படி செய்ய வேண்டும் என நாங்கள் ஒருவருக்கொருவர் தேவையேற்படின் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் கூறினார்.

இரவு அம்பாசடர் காரில் கந்தசாமியோடு வந்து என்னையும் காரில் ஏற்றிக்கொண்டு இரவு 11 மணி போல் கலைஞர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு சென்றோம். அங்கு கலைஞர் எல்லா விபரங்களையும் கேட்டுவிட்டு தப்பி ஓடுவது தவறு என்றும், அது உங்களை இந்தியாவில் ஒரு குற்றவாளி போல் காட்டும், நீங்கள் பிற்காலத்தில் இந்தியாவில் உங்கள் போராட்டத்தை தொடர முடியாது, உங்களை திரும்ப கைதுசெய்தால் பயப்பட வேண்டாம், நாங்கள் உங்களுக்கு துணையாக நின்று போராட்டம் நடத்துவோம், உங்களை அவ்வளவு எளிதில் இலங்கைக்கு ஒப்படைக்க முடியாது நாங்கள் மத்திய அரசோடும் அதைப்பற்றி பேசுகிறோம் என எங்களுக்கு தைரியம் சொன்னார்.

உமாமகேஸ்வரன் தலைமறைவாகும் எண்ணத்தைக் கைவிட்டார். எமது வேலைகளை எச்சரிக்கையாக செய்தோம். ஆனால் அடுத்த நாள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உமா, கண்ணன் நிரஞ்சன் கையெழுத்துப் போட போகும்போது அவர்கள் ஜாமின் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். மாறன் உடனடியாக எங்களுக்கு செய்தியை பரிமாறிவிட்டு, மிகத் திறமையாக எங்களை எங்களுக்குரிய வேலைகளை ஒழுங்குபடுத்தினார். ஆனாலும் நாங்கள் திகிலோடு ஒருவித பயத்தோடு தான் இருந்தோம்.

பகுதி 6.

நான் தொடரை எழுதும் போது முகமறியா சில தோழர்கள் நான் என்னை முன்னிலைப்படுத்தி எழுதுவதாக வசை பாடினார்கள். அவர்களது கருத்துக்களை எடுத்து விட்டேன். நான் நேரடியாக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தான் எழுதுகிறேன். நான் கேள்விப்பட்ட செய்திகளை இத்தொடரில் எழுதமாட்டேன். நான் கேள்விப்பட்ட செய்திகள், நிகழ்ச்சிகளை பின்பு எழுதுவேன்.

எமது தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்பு, சந்ததியார் வந்து இங்கு அரசியல் வேலைகளில் ஈடுபட்டார். நான் எனது நாலாவது பதிவில் குறிப்பிட்டது போல் சந்ததியாரை பற்றிய தகவல்கள் இந்தப் பதிவில் தான் வரவேண்டும். சந்ததியார் தனது கட்டுப்பாட்டில் என்னையும் மாதவன் அண்ணாவையும் வைத்திருந்தார். சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய அரசியல்வாதிகளை பார்க்கப் போகும்போது என்னை அல்லது மாதவன் அண்ணாவை கூட்டிப் போவார். ஒருநாள் சந்ததியார் இலங்கையில் இருந்து விமானத்தில் வந்த ஜான் மாஸ்டரை கூட்டி வந்தார். எங்களிடம் ஜான் மாஸ்டரை காட்டி மருத்துவக்கல்லூரி மாணவர், கழகத்தின் முக்கிய ஒருவர் எனக் கூறினார். நாங்கள் சந்தோஷப்பட்ட அளவுக்கு ஜான் மாஸ்டர் எங்களுடன் பழகவில்லை. எங்களை முட்டாள் போராளிகள் மாதிரிதான் பார்த்தார்.

ஆனால் சந்ததியார் அப்படி அல்ல. தவறு என்றால் கடுமையாக, கண்டிப்பாய் இருப்பார். சில வேலைகளை நாங்கள் திறமையாக செய்யும்போது எங்களை மிக மகிழ்ச்சியாக தட்டிக் கொடுப்பார். சந்ததியார் உடன் பழகும்போது எச்சரிக்கையாக இருப்போம். துரையப்பா கொலை வழக்கில் சந்ததியார் சிறைசென்று மீண்டு வந்த பின்பு 78ஆம் ஆண்டு காலங்களில் மானிப்பாய் நவாலியில் அவரும் இன்பமும் சேர்ந்து இரவு ரகசிய வகுப்புகள் எடுப்பார்கள். நான் கலந்து கொண்டிருக்கிறேன். அந்த வகுப்புகளில் எமது தோழர் பார்த்திபனும் கலந்து கொண்டதை நானும் பார்த்திருக்கிறேன். பார்த்திபன் உம் மானிப்பாய் இந்துக்கல்லூரி மாணவன் தான்.

அக்கால கட்டங்களில் வழக்கு சம்பந்தமான எல்லா வேலைகளையும் எமது தோழர் கணபதி என்கிற விக்கி பார்த்துக் கொண்டார். நிரஞ்சன், கண்ணன் எக்மோர் கோர்ட்டிலும், உமாமகேஸ்வரன் வழக்கு திருவள்ளூர் கோர்ட்டிலும் நடந்தது. அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு நடத்தியவர் புகழ்பெற்ற இடதுசாரி சிந்தனைகள் உள்ள வழக்கறிஞர் என்.டி.வானமாமலை அவர்கள். வழக்கு நடக்கும்போது எங்களிடம் இருந்து ஒரு பைசா பணமும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் போகும்போது தோழர் கணபதி காரை ஏற்பாடு செய்து கூட்டிக்கொண்டு போய் வருவார். கணபதி போக நேரம் ஆகிவிட்டால் தனது காரிலேயே போய்விடுவார். அதற்காக எங்களிடம் காசு கூட கேட்பதில்லை. எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதாவுக்கு ஆதரவாக ஆஜராகி வழக்கு நடத்தியவர். இவரைப் போன்றவர்கள் மிக அபூர்வமான மனிதர்கள். வேறு பல அரசியல் வழக்கறிஞர்கள் உமா- பிரபா வழக்கில் உதவி செய்வதாக கூறி பணம் பார்த்த விடயமும் உண்டு.

ஒரத்தநாட்டைச் சேர்ந்த இளவழகன், ராமசாமி, தமிழ்மணி போன்றவர்களும் எம்மோடு ஓடி திரிந்தார்கள். பாவலேறு பெருஞ்சித்திரனார் ஐயா தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு நாடுகடத்தக் கூடாது என கேட்டு ஆதரவு திரட்டினார். தஞ்சாவூரை சேர்ந்த இரா.இரத்தினகிரி கால்நடை மருத்துவரும், திராவிடர் கழக பகுத்தறிவாளர் சங்கத் தலைவருமாக இருந்தவர். சந்ததியாரையும் என்னையும் அழைத்துப் போய் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இடம் அறிமுகப்படுத்தினார். அப்போது திராவிடர் கழக வருடாந்த மாநாடு நடக்க இருந்தது. 1983 ஆண்டு மே மாதம் ஆக இருக்கலாம் என நினைக்கிறேன்.

அந்த மாநாட்டில் இவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றுவதாக பெரியவர் வீரமணி அய்யா கூறினார். அதோடு மாநாடு ஊர்வலத்திலும் மாநாட்டிலும் வைக்க, பிடிக்க அட்டைகள் தயாரித்து தரும்படி சொன்னார். மாறனும் உடனடியாக « உமாமகேஸ்வரன், கண்ணன், நிரஞ்சன் விடுதலை செய் », « விடுதலைப் புலிகளை விடுதலை செய் », « நாடு கடத்தாதே விடுதலைப் போராளிகளை », « இந்திய அரசே தமிழ் ஈழத்தை ஆதரிக்க வேண்டும் » போன்ற வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான அட்டைகளை கொடுக்க நாங்களும் அதை திராவிடர் கழகத் தோழர்களிடம் கொடுத்தோம். மாநாட்டுக்கு கலந்துகொள்ள வந்த கோவை ராமகிருஷ்ணன் என்ற இளைஞரை எமது வீட்டுக்கு அழைத்து வந்து ரத்தினகிரி அறிமுகம் செய்து வைத்த அந்த இளைஞர் ராமகிருஷ்ணன் மிக ஆர்வமாக இலங்கை அரசுக்கு எதிரான போட்டோக்கள் செய்திகள் இருந்தால் கேட்டார். ஆனால் சந்ததியார் தட்டிக் கழித்து விட்டார் பின்பு தருவதாக. பின்பு சந்ததியார் இடம் காரணம் நான் கேட்டபோது, இவர்களை எல்லாம் நாங்கள் ஆதரிக்க கூடாது, எங்கள் படங்களை வைத்து இவர்கள் கண்காட்சிகள் வைத்து பணம் சம்பாதித்துக் கொள்வார்கள் எனக் கூறினார். நாங்கள் தவறவிட்ட அந்த சந்தர்ப்பத்தை விடுதலை புலிகள் குறிப்பாக பேபி சுப்பிரமணியம் பயன்படுத்திக்கொண்டார். ராமகிருஷ்ணன் சுற்றிச் சுழன்று தமிழ்நாடு முழுக்க விடுதலைப்புலிகளை ஆதரித்தும் பணமும் சேகரித்தும் கொடுத்தார். அவர் தனது திறமையால் விடுதலைப்புலிகளுக்கு நினைத்துபார்க்க முடியாத உதவிகளைச் செய்து கொடுத்தார். இன்றும் அவர் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்களை நடத்துவார். பெரியார் திடலில் முதன்முதலில் பேபி சுப்பிரமணியத்தை (பிற்காலத்தில் இவர் இளங்குமரன் - விடுதலைப்புலிகளின் கல்வி பொறுப்பாளராக இருந்தார் என நினைக்கிறேன்)தூர இருந்து மாறன் காட்டினார். ஒரு பையுடன் வந்த பேபி சுப்பிரமணியம் தனியாக ஒரு இடத்துக்குப் போய் தான் போட்டிருந்த பேன்ட் சட்டையை கழட்டி மடித்து பையில் வைத்து விட்டு, பையிலிருந்து ஒரு கசங்கிய அழுக்கான வேட்டி சட்டையை எடுத்து அணிந்து கொண்டு திராவிடர் கழக தலைவர்களை சந்திக்க போவார்.

திராவிடர் கழக மாநாடு நடக்கும் நாள் பெரியார்திடலில் நானும் கந்தசாமியும் எமது புத்தகங்கள், இலங்கை அரசுக்கு எதிரான புத்தகங்கள், காந்தளகம் வெளியீடுகள் போன்றவற்றை விற்பனைக்கு வைத்தோம். நமக்கு அருகில், இன்று திராவிடர் கழக வழக்கறிஞர் அணி தலைவராக இருக்கும் திருமதி அருள்மொழி என்பவர் சிறுமியாக அவரின் தாயுடன் திராவிடர் கழகம் பெரியார் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். ரத்தினகிரி அவர்களிடம் விற்பனையில் எங்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். பகல் 2 மணி போல் ஊர்வலம் தொடங்கியது. எமது நூற்றுக்கணக்கான அட்டைகள் பொதுமக்களை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தன. மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் போட்டோ எடுத்து குறிப்புகள் எடுத்தார்கள். சென்னை மெரினா பீச்சில் மிகப் பெரிய மாநாடு நடக்க இருந்தது. ஆனால் ஊர்வலம் மெரினா கடற்கரையை நெருங்கியதும் பெரியமழை பிடித்துக் கொண்டது. மழையில் நனைந்து கொண்டே எல்லோரும் திரும்ப பெரியார்திடலுக்கு ஓடினோம் அங்கு இரவு 12 மணி வரை மாநாடு நடந்தது. நமக்கு ஆதரவான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பகுதி 7

சந்ததியார் மாறன் போன்றவர்கள் சிறையில் இருப்பவர்களை மீட்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் செல்வாக்கான தலைவர்களை போய் பார்ப்பதும் வருவதுமாக இருந்தார்கள். புலவர் புலமைப்பித்தன் எம்.ஜி.ஆருக்கு மிக மிக நெருங்கியவராக இருந்தாலும் அவர் முகுந்தன் மற்றவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் தான் தனது சட்டமேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.ஜி.ஆர் அரசுக்கு எதிராக போராடுவேன் என கூறினார். எம்.ஜி.ஆர் அரசின் மந்திரியாக இருந்த காளிமுத்து ஒருபடி மேலே போய், சிறையில் இருப்பவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பினால் தான் பறந்து போய் தடுப்பேன் எனக் கூறியதோடு அதை ஒரு கவிதையாகவும் படித்து பத்திரிகைகளுக்கு கொடுத்திருந்தார்.

அடுத்து என்ன நடக்குமோ என்ற மனநிலையோடு நாங்கள் எங்கள் வேலைகளைத் தொடர்ந்து செய்தோம். இக் காலகட்டத்தில் தமிழ்நாட்டின் சிறந்த தமிழ் அறிஞர் அருளி அவர்கள் பிறர் தொந்தரவு இல்லாமல் தமிழ் ஆராய்ச்சி புத்தகத்தை எழுத எங்களோடு வந்து தங்கியிருந்தார். அவர் தமிழ்ச் சொற்கள் பிற வெளிநாட்டு மொழிகளோடு எப்படி அடிப்படையாக இருந்தது என்று எழுதும் போது எங்களுக்கும் விளங்கப்படுத்தினார். சந்ததியார், மொழி ஆராய்ச்சி பற்றி அருளியோடு நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்.

நாங்கள் எமது அலுவலகத்தில் நாங்களே சமைப்பதற்கு உரிய வேலைகளைப் பார்க்கத் தொடங்கினோம். அருளி அண்ணாவும் உதவி செய்தார். பகல் உணவு மட்டும் தயார் செய்தோம். சோறு, பருப்பு கறி அல்லது மாட்டு இறைச்சி, இதுதான் நாங்கள் சமைத்து சாப்பிடுவது. சந்ததியாருக்கு நாங்கள் பருப்பு கறி சமைத்து இருந்தால் இருந்து பகல் சாப்பிட்டு விட்டுத்தான் போவார். சாப்பாட்டில் உப்பு புளி இல்லாவிட்டாலும் எங்களை பாராட்டி சாப்பாடு நன்றாக இருக்கிறது என்று அவர் சாப்பிடும் நாட்களில் கூறித் தான் செல்வார். அவர் அப்படிச் சொல்வது எமக்கு சந்தோஷத்தை கொடுக்கும். மாறன், கந்தசாமி சிலவேளைகளில் அடிக்கடி காலையில் வந்து மாட்டு இறைச்சி வாங்கி தந்து போவார்கள். வேலைகளையும் முடித்துவிட்டு வந்து பகல் சாப்பிட்டு விட்டுத்தான் போவார்கள்.

தமிழ்நாடு காவல்துறை எங்களை கண்காணித்துக் கொண்டிருந்தாலும் எங்களுக்கு எந்தவித தொந்தரவும் கொடுக்கவில்லை. ஆனால் உளவுத்துறை டி.ஜி.பி மோகனதாஸ் உமாமகேஸ்வரன் மற்றும் தோழர்களை இலங்கைக்கு பிடித்துக் கொடுப்பது பற்றியே தீவிரமாக இருந்தார். அதேநேரம் மத்திய உளவுத்துறை IB உயர் அதிகாரிகள் இருவரும் எங்களை வந்து சந்தித்து நிலைமைகளை செய்திகள் சேகரித்து செல்வார்கள். அவர்கள் எங்களிடம் உளவுத்துறை என்று கூறாமல் மத்திய உள்துறை அமைச்சகம் என்றுதான் கூறுவார்கள். உண்மையும் அதுதான். மத்திய உள்துறையின் கையில்தான் IB இயங்கியது. நாங்கள் இவர்களின் முக்கியத்துவம் அறியாமல் இவர்களை அலட்சியமாக தான் நடத்தினோம். ஆனால் இந்த இரண்டு தமிழ் அதிகாரிகளும் மிகமிக நேர்மையானவர்கள். இவர்களின் ஆரம்ப கால அறிக்கைதான் இந்திரா காந்திக்கு போன முதல் ரிப்போர்ட். ஆனால் நாங்கள் தமிழ்நாடு காவல்துறை உளவுத்துறைக்கு மிக பயந்தோம்.

சிறையில் இருப்பவர்கள் இலங்கைக்கு நாடுகடத்த படுவார்கள் என்ற வதந்திகள் பரவிக் கொண்டிருந்த நேரம். சந்ததியார் இடம் மாறன், கந்தசாமி பல ஆலோசனை செய்து முகுந்தனை மட்டுமாவது வழக்குக்காக திருவள்ளூர் கோர்ட்டுக்கு கொண்டுபோகும் போது அல்லது திரும்ப வரும்போது தாக்குதல் நடத்தி மீட்பது என ரகசிய திட்டம் போட்டார்கள். இதைபற்றி கேள்விப்பட்ட கணபதி எதிர்த்தார். காரணம் அவர்தான் வழக்கமாகப் கோர்ட்டுக்குப் போய் வருவது அது எல்லோருக்கும் தெரியும்.

மாறன் என்னை கூட்டிக்கொண்டு போய் பல நாட்கள் சென்னை மத்திய சிறைச்சாலையின் வெளியில் பார்வையாளர்கள் இருக்கும் இடத்தில் நிறுத்தி விடுவார். எனது வேலை சிறைக்காவலர்கள் மாறும் நேரத்தை தினசரி பதிவு செய்வது எத்தனை பேர் கைதிகளை எந்த வாகனத்தில் கூட்டிப் போகிறார்கள் எத்தனை போலீசார் போகிறார்கள் என்பது போன்ற தரவுகளை எடுக்கச் சொன்னார்கள். உண்மையில் அன்று அது எனக்கு மிகப் பெரிய சாகசம் போல் தோன்றியது. இன்று நினைக்கும் போது அது எவ்வளவு பெரிய சிறுபிள்ளைத்தனம் என்று நினைக்கத் தோன்றுகிறது. என்ன காரணமோ இந்த திட்டம் கைவிடப்பட்டு சந்ததியார் விடாமுயற்சியாக அரசியல்வாதிகளை சந்திக்கும் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

நான், மாறன், கந்தசாமி, மாதவன் அண்ணா மத்திய ஜெயிலுக்கு உமாமகேஸ்வரன் மற்றவர்களை பார்க்க போய் வருவோம். தினசரி மாறன் அல்லது கந்தசாமி போய் வருவார்கள். சில வேலைகளைப் பற்றி கதைப்பது ஆயின் என்னை அல்லது மாதவன் அண்ணையை வரச்சொல்லி நாங்கள் செய்யவேண்டிய வேலைகளையும் பற்றி பேசுவார். சந்ததியார் இந்தியா வந்த பின்பு முதன்முறையாக உமாமகேஸ்வரனை சந்திக்க போகும் போது நானும் கூட போனேன். நாங்கள் அவர்களை சிறையில் சந்திக்கும் போது என்னை தள்ளிப்போய் நிரஞ்சன் உடன் பேசிகொண்டு இருக்கும்படி கூறினார். நிரஞ்சன் என்னிடம் ரகசியமாக பெரியவருக்கும் தனக்கும் உள்ளே சரியான சண்டை எனவும், சண்டையை கண்ணன் தனக்கு எதிராக தூண்டி விடுவதாகவும் கூறி கவலைப்பட்டார்.

அதேநேரம் சந்ததியார் உமாமகேஸ்வரன் இடம் வாங்கி கட்டிக் கொண்டிருந்தார். இரண்டு விஷயங்கள் சம்பந்தமாக. முதலாவது இறைகுமாரன் உமைகுமாரன் கொலை, வவுனியாவில் வைத்து விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல். எமது இயக்க முக்கிய தளமாக இருக்கும் வவுனியாவில் வைத்து தாக்குதல் விமானப்படை வீரர்கள் மீது செய்யும்போது வவுனியாவில் எமது செயற்பாடுகள் எல்லாம் அழிந்து விடும் என்று கடுமையாக சந்ததியார் உடன் வாக்குவாதம் செய்தார். நாங்கள் இருவரும் பலவித மன குழப்பத்தில் வீடு திரும்பினோம்.

எங்களிடம் பல நண்பர்கள் கலைஞரை நேரடியாக சந்தித்து இதைப் பற்றி பேசும்படி கூறினர். சந்ததியார் கலைஞரை சந்தித்தார். இதன் பின்பு நடந்த செய்திகளை நான் முன்பே ஒரு பதிவு போட்டுள்ளேன். அதைப் பின்பு எட்டாவது பதிவாக போடுவேன்.

 

தொடரும்...

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- அதன் டெல்லி தொடர்பாளர் வெற்றிச் செல்வன் எழுதிய தொடர் - அங்கம் 1