பகுதி 1
1
இன்று மே -17. 2021. நான் வாழும் நோர்வே நாட்டின் தேசிய தினம்.என்னைப் பொறுத்த மட்டில் , 2009 இல் இருந்து , தமிழ் மக்கள் மீதான இலங்கை பவுத்த-சிங்கள அரசின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமொன்று அஸ்தமித்த நாள். (மே -18 இலங்கை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக போராட்டம் தோற்றுப்போனதை அறிவித்த நாள்.) அழிக்கப்பட்ட, அஸ்தமிக்கப்பட்ட போராட இயக்கம் பற்றிய பல நூறாயிரம் விமர்சங்கள் உண்டு. அதேவேளை அவ் இயக்கத்தின் சரி-பிழைகளுக்கப்பால் ஏதோ ஒரு விதத்தில் அது ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியதென்பதும் உண்மை. 2009- மே மாதம் இலங்கையில் தமிழ்மக்கள் மீதான வரலாறு காணாத படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட அதே நேரத்தில், இஸ்ரேல் அரசு பலஸ்தீன மக்கள் மீது பத்தாயிரத்துக்கும் மேலான விமான மூலமான தாக்குதல்களை நிகழ்த்தியது. பலஸ்தீனத்திலும் இரத்த ஆறு ஓடியது. இன்று மே 17.2021. காலை 11 மணி. 48 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.
2
மேலே எழுதிய முகவுரை தொடர்ந்து “சர்வதேச ரீதியாக ஒடுக்கப்படும் தேசிய தேசிய இனங்கள் ” பற்றிய கட்டுரை ஒன்றை எழுத நினைத்தேன். ஆனால், முகப்புத்தகத்தில் வந்த பதிவொன்று சிந்தனையை திசை திருப்பியது. சக இயக்கங்களை அழித்து விட்டு புலிகள் தமிழ் தேசிய போராட்டத்தை தமது ஏக தலைமைதுவத்துக்குள் கொண்டு வந்தார்கள். புலிகள் சில ஆயிரம் உயிர்களை – தமிழ் தேசிய விடுதலைக்காக போராட சென்ற தமிழர்களை படுகொலை செய்தார்கள். அதுமட்டுமல்லாமல், பல பத்தாயிரம் போராளிகளையும், தமிழ் மக்களையும் சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள் .
இதிலிருந்து தப்பிய போராளி குழுக்களை சேர்ந்த பலர் புலம்பெயர்ந்தனர். புலப்பெயர் நாடுகளில் தொடர்ந்தும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். புலிகளின் தவறுகள் தம்மை தடுத்திராவிட்டால் தாம் “தமிழீழம் கண்ருடிப்பார்கள்” என்பதே இவர்கள் அனைவரினதும் அரசியற் தாரக மந்திரமாகவிருந்தது. புளொட் -இல் இருந்து வெளியேறி தீப்பொறி இயக்கம் மற்றும் அதன் தொடர்பில் உருவாக்கிய தமிழீழ கட்சி, வேறும் சில போராட்ட இயக்கம் கட்டும் திட்டங்கள், இதெல்லாம் சந்திக்கும் – சந்தியாகவிருந்த சரிநிகர் பத்திரிகை என்பவை 90-களில் புலிகளுக்கெதிரான மாற்று அரசியலை வளர்க்க முயன்ற செயற்பாடுகளாகும் .
90-களில் புலம்பெயர்ந்தவர்கள் மேற்படி மாற்று முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் சஞ்சிகைகள் வெளியிட்டார்கள். சரிநிகர் விற்பனை செய்தார்கள். பணம் திரட்டி அனுப்பினார்கள். அக் காலத்தில் 16-18 வயதுக்கு இடைப்பட்ட என் போன்றவர்கள் ஐரோப்பிய நகரத் தெருக்களில் போத்தல் பொறுக்கி விற்று, இலங்கைக்கு மற்றும் இந்தியாவுக்கு மாற்று இயக்க முயற்சிகளுக்கு பணம் அனுப்பிய வரலாறுகளுமுண்டு. ஆனால், அன்று புலிகளுக்கு மாற்றாக ஒரு தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தை உருவாக்க வேண்டுமென்கிற முனைப்பில் எவரும் மேற்படி மாற்று முயற்சிகளைப் பற்றியோ, சரிநிகரையும் அதன் ஆசிரியர் குழாமின் பின்கதவு செயற்பாடுகள் பற்றியோ கேள்வி கேட்கவில்லை. சரிநிகர் மற்றும் முயற்சிகளை புதிய” மூன்றாவது பாதைக்கான ” வழித்தடமாக கணித்தார்கள் .
2001 காலத்துக்கு பின்னால் வந்த சமாதான காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாற்று அரசியல் முயற்சிகளின் போலித்தன்மையும் புலிகளுடனான உறவுகளும் புலம் பெயர்ந்த “முற்போக்கு” சக்திகளுக்கு அம்பலப்பட தொடங்கியது. “கொள்ளு, தொட்டியில் முடித்த பின்னால், குதிரைகள் ஒருவரை ஒருவர் கடிக்க வெளிக்கிடுவார்கள்” என்பது வட ஐரோப்பிய சமூகங்களில் நன்கு அறியப்பட்ட பழமொழி. இதன் அர்த்தம்; நெருக்கடியான காலகட்டத்தில் நெருக்கமான நண்பர்கள் கூட எதிரிகளாவார்கள் என்பதாகும். தாயகத்தில் எடுக்கப்பட்ட அனைத்து மாற்று அரசியல் முயற்சிகளும் தோற்றுப்போன கசப்பான அனுபவத்தை முன்னிறுத்தி விவாதங்கள் வெளிவர தொடங்கின.
இக் காலகட்டத்தில் இலத்திரனியல் ஊடக பாவனை பரவலாகி வந்தமையானது, இவ் விமர்சனங்கள் வெளிவர இலகுவாகியது. கட்டுரை எழுதி அதை அச்ச்சடித்து தபால் முலம் அனுப்புவதை விட, மலிவானமுறையில் ஒரு பதிவை எழுதி சில நிமிடங்களிலேயே வாசர்களிடம் சேரும் விதமாக விளங்கின இலத்திரனியல் ஊடகங்கள். இடதுசாரியம் தோற்றது தொடக்கம் தமிழ் தேசிய போராட்டம் சார்ந்த இயக்கங்கள் அழிக்கப்பட்டது , உட்படுகொலைகள் – கட்டிக்கொடுப்புகள், இதற்கு யார் யாரெல்லாம் காரணம், தத்துவார்த்த பிரச்சனைகள் என பல பக்கங்கள் ஆராயப்பட்டது. இவ் “ஆராய்வு” மும்முரத்தில், தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தின் முதல் எதிரியான இலங்கை அரசாங்கத்தையும், கோட்பாடு மற்றும் நடைமுறை எதிரியான புலியையும் இவர்கள் மறக்கும் நிலைக்கு தள்ளியது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலைக்கும், அவதூறுகளை உபயோகித்து ஒருவரை ஒருவர் சேறடிக்கும் நிலையையும் இவர்கள் வந்தடைந்தார்கள் .
NLFT எடுத்த தொகை, அது போட்ட குட்டியான PLFT மற்றும் ஒரு சிறுபகுதி புளொட் இயக்கத்திலிருந்து வெளியேறிய தீப்பொறி அமைப்பிடம் போய் சேர்ந்தது. இன்று உலாவரும் இக் கொள்ளை பற்றிய கட்டுக் கதையில், கொள்ளை நடந்த காலத்தில் NLFT இயக்கத்தில் ஒரு சாதாரண அடிப்படை உறுப்பினராக விளங்கிய ரயாகரனே கொள்ளையில் பெறப்பட்ட முழு பணத்தையும் நகைகளையும் தனதாக்கியதாக சித்திரம் புனையப்பட்டு வருகிறது. இது ஒரு பச்சை அவதூறு! இவ் அவதூறுகளை பரப்புவதில் இன்றும் மும்முரமாக இயங்குவதில் முதன்மையானவர்கள் பாரிஸ் வாழ் அசோக் யோகன் கண்ணமுத்துவும், லண்டன் வாழ் முன்னாள் டெலோ உறுப்பினரான நாவலனுமாகும். லண்டனில் இருந்து வெளிவந்த தேசம் இணையத்திலும், பின்பு இனியொரு என்ற இணையத்திலும் திட்டமிட்ட வகையில் ஒரே நபர்கள் பல போலி பெயர்களில் ரயா மீதான அவதூறை பரப்பினார்கள். ஏன், இந்த கொள்ளையுடன் நேரடியாக சம்பந்தபட்ட முன்னாள் NLFT-PLFT உறுப்பினர்கள் / மத்தியகுழு உறுப்பினர்கள் கூட இச் சேறடிப்பில் மும்முரமாக பங்கெடுத்தார்கள்.
இதேபோல, புளொட் அமைப்புக்குள் நடந்த படுகொலைகளுக்கும் ஜனநாயக மறுப்புக்கும் ஜான் மாஸ்டர் /காந்தன் மற்றும் அசோக் யோகன் கண்ணமுத்து என்பவர்களை குற்றம் சாட்டுவது, தொடர்ச்சியாக இலத்திரனியல் ஊடக வெளியிலும் புத்தக மற்றும் பத்திரிகை வடிவிலும் வெளிவந்த வண்ணமுள்ளளது. இக் குற்றச்சாட்டுகளை பெரும்பாலும் புளொட் மற்றும் தீப்பொறியின் முன்னாள் உறுப்பினர்கள் முன்வைத்து வருகின்றார்கள். முன்னாள் புளொட் மற்றும் தீப்பொறியின் உறுப்பினர்கள் தமது தாய் அமைப்பை அல்லது அதன் தலைமையில் இருந்த தனிநபர்களை விமர்சிப்பது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால், NLFT இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர்களும் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
முன்னாள் NLFT உறுப்பினர்கள் பலர் தமது இயக்கத்தின் வரலாற்று வங்குரோத்தையோ -அதன் போலி புரட்சிகர முகத்தைப் பற்றியோ விமர்சிப்பதை விட, அதி தீவிரமாக விமர்சிப்பது புளொட் இயக்கத்தை தான்! இதற்கான காரணத்தை என்னால் விளக்க முடியாவிட்டாலும், எனக்கு தெரிந்தவரை NLFT -காரர்கள் EPRLF மற்றும் புளொட் இயக்கத்தை பகிரங்கமாகவே ஆரம்பத்திலிருந்து விமர்சித்து வந்தார்கள். தந்துரோபாய ரீதியில்- இடதுசாரிய தன்மை கொண்ட இந்த இயக்கங்களை – தமது இயக்கத்துக்கு எதிரி இயக்கங்களாக கணித்தார்கள். (அதேவேளை, புலிகளை முற்போக்கு தேசிய சக்தி-ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் எனவும் வானளாவ புகழ்ந்த வரலாறுமுண்டு) அத்துடன் புலிகள் இயக்கம் போல பாசிச தன்மை கொண்டவையாக இந்த இரு இயக்கங்களும் இருக்கவில்லை.
5
தமிழ் தேசிய அரசியல் சார்ந்த இயக்கங்கள் அரும்புவிட தொடங்கிய காலத்திலிருந்தே, எனது தந்தையாருக்கு பெரும்பாலான தமிழ் தேசிய இயக்க முயற்சிகளுடனும் தொடர்பிருந்து வந்தது. அதற்கான முக்கியகாரணம்; அவர் இலங்கையின் வடகரைகளிலிருந்து தென்தமிழகத்துக்கு கடல்வழி பயணப்படுவதற்கான கடல்சார் கட்டமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகும். அதேவேளை, 1984 ஆம் ஆண்டுக்கு பின் எங்கள் இரு வளவுகள் புலி, புளொட் மற்றும் சில இயக்கங்கள் தமது நடவடிக்கைகளுக்கு உபயோகப்படுத்தி வந்தன. இதன் காரணமாக, இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட மார்க்சிஸ புத்தகங்கள், ரஷியா கதைபுத்தகங்கள் மற்றும் அரசியல் சஞ்சிகைகளை வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. இதனால் 7.வகுப்பு படிக்கும் காலத்திலேயே தமிழ் தேசிய அரசியல் பற்றிய “அறிவு” எனக்குள் கருக்கட்ட தொடங்கியிருந்தது.
நான் படித்த பள்ளிக்கூடத்தில் NLFT உறுப்பினர் ஒருவர் கணக்கு வாத்தியாக பணிபுரிந்தார். எல்லா சந்தற்பங்களிலும் அரசியல் பேசுவதில் விண்ணனான அவர், படுகீழ்த்தரமான சாதிவெறியனாகவும் இருந்தான். ஏற்கனவே, கத்தோலிக்க வெள்ளாள சாதிவெறிக்கும் – ஒடுக்குமுறைக்கு பெயர் போன அந்த பள்ளிக்கூடத்தில், NLFT -கணக்கு வாத்தியின் சாதிய அட்டகாசங்களை அப் பள்ளிக்கூட தலைமை கண்டும் காணாமல் இருந்து கொண்டது. கத்தோலிக்க வேளாள சாதிவெறியினால் பல பரம்பரைகளாக கல்வியிழந்த சமூகங்களில் ஒன்றைச் சேர்ந்த எனக்கும், என் போன்ற பல மாணவர்களுக்கும் அந்த வாத்தியின் பகிரங்கமான சாதிய நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டவேண்டுமென்ற எண்ணம் உருவாகியது. அதை, 10 வகுப்பில் படித்த, அன்று EPRLF இயக்கத்தின் மாணவர் அமைப்புடன் தொடர்பில் இருந்த ஒருத்தன் நிறைவேற்றி வைத்தான்.
அந்த வாத்தி, கணித பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, 5 நிமிடங்கள் பிந்தி வந்தான் அந்த மாணவன். அவனை பார்த்து ” எந்த கக்கூசு கழுவிப்போட்டு பிந்தி வாராய்” என்று கேட்டான் அந்த NLFT- வாத்தி. வாத்தி சொல்லி முடிப்பதற்குள் வாத்திக்கு செம்மையான அடி !!! வாத்தியின் குழறல் கேட்டு பக்கத்து அறையில் இருந்த மற்ற வாத்திமார், கணக்கு வாத்தியின் மேலே இருந்தபடி அடித்த மாணவனை விலக்கினார்கள். அன்றிலிருந்து அந்த மாணவன் எங்கள் ஹீரோ!!! பாடசாலை நிர்வாகம் அந்த மாணவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கான காரணங்களில் ஒன்று, அந்த மாணவனின் EPRLF இயக்க பிண்ணனியாகும் . இவ்வாறு தான் எனக்கு NLFT -என்ற இயக்கம் அறிமுகமாகியது. மேலும், இந்த கட்டுரையை எழுதும் எனக்கு NLFT இயக்கம் பற்றிய நல்ல அபிப்பிராயம் இன்றுவரை கிடையாதென்பதை வெளிப்படையாக கூறி வைக்கிறேன்.
1. யாழ்.சைவ வேளாள மேலாதிக்க குணாம்சம்
2. எல்லாம் தங்களுக்கு தெரியுமென்ற மமதை
3. தங்களை தவிர மற்றவர்கள் எல்லோரும் பிழையானவர்கள் என்ற சிந்தனை போக்கு
4. ஒருவரும் கேட்காமலே தங்களை தாங்களாகவே தலைவர்களாக – தலைமையாக நிறுவிக்கொள்ளல்
5. புத்திசீவிகளாக, மார்க்சிஸ வல்லுனர்களாக, இலக்கிய செம்மல்களாக தம்மை காட்டிக்கொள்ளல்
6. மற்றவர்கள் தமது வழிகாட்டலுக்கு கீழ் படிந்து போக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு
7. அதை சில மாவோயிச- இஸ்டாலினிச வசனங்களை கொண்டது நியாயப்படுத்துவது
8. உலக வரலாற்றில் உருவாகிய இடதுசாரிய இயக்கங்கலேயே NLFT – யும் PLFT -யும் தான் சுத்தமான 100% மார்க்சிஸ இயக்கங்கள் என “படம்”காட்டுவது , போன்ற பல நல்ல குணங்களை கொண்டிருந்தார்கள்.
இவர்களுடன் சேர்ந்து பல அரசியல் முயற்சிகளில் நான் ஈடுபட்டிருந்தேன். அம் முயற்சிகளில் சிலவற்றில் ரயா- வுடன் சேர்ந்து செயல்பட்டுள்ளேன். ……….தொடரும் ……….இரண்டு பகுதிகளாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் சில நாட்களில் வெளிவரும்.
19.05.2021
https://raseriart.wordpress.com/2021/05/19/அவதூறுகளை-வரலாறாக்குவத/
“அவதூறுகளை வரலாறாக்குவது”- புளொட் உட்படுகொலைகளும், HNB வங்கி கொள்ளையும் அவதூறுகளும்…
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode