"திருமணம் செய்வதாக எவருக்கும் நான் வாக்களித்ததில்லை" என்று கூறும் மயூரன், தனது பாலியல் நடத்தையை "பெண்ணியம்" என்கின்றார். இவர் பெண்ணியம் குறித்து கட்சி சார்பாக பெண்களுக்கு போதித்தது, இத்தகைய பாலியல் நடத்தையையே. தனது பாலியல் வேட்டைக்கு கட்சியையும், கட்சிக்கு வந்த பெண்களையும் பயன்படுத்தி இருக்கின்றார் என்பது வெளிப்படையான உண்மை. இதை மறுத்து "பெண்ணியம் - தனிமனித சுதந்திரத்தின்" பெயரில்  நியாயப்படுத்த "பெண்ணியல்வாதிகளின்" ஒரு பகுதியினர் தயாராகவே இருக்கின்றனர்.

பாலியலுக்கு பணத்தைக் கொடுத்தும் - வாங்கியும் ஈடுபடும் போது "திருமணம் செய்வதாக எவருக்கும்" எவரும் வாக்களிப்பதில்லைத் தான். அங்கு "பாலியல் வன்முறை - பயமுறுத்தலும்" இருப்பதில்லை தான். அதனால் அதை நியாயப்படுத்த முடியுமா?

மயூரன் தன் நடத்தையை நியாயப்படுத்த பயன்படுத்துவது "சுதந்திரமான" பெண்ணின் முடிவு. இது தான் பலரின் கண்ணோட்டமும் கூட. இதை கேள்வி கேட்கக் கூடாது. இதன் மூலம் தன்னை நியாயவாதியாக, ஜனநாயகவாதியாக முன்னிறுத்துகின்றார். கட்சி இந்த பாலியல் நடத்தையையே பெண்ணியமாக கூறுமாறு உங்களை அரசியல்ரீதியாக வழிநடத்தியதா!? உங்களை அந்த பாலியல் நடத்தையில் ஈடுபடுமாறு கூறியதா!? இந்தப் பாலியல் நடத்தையை அம்பலப்படுத்த, இன்னுமொரு பெண்ணின் பெயரை பயன்படுத்தி அவரை பலிக்கடாவாக்கி இருக்கின்றனர். அதன் பின்னணியில் இருப்பவர்கள் கட்சியைச் சுற்றி இருக்கின்ற பொறுக்கிகளும் அயோக்கியர்களும் தான். இது எதைக் காட்டுகின்றது?. இது கட்சியுடன் இருந்த அனைத்து பெண்களையும் பலிக்கடாவாக்குகின்றது. கட்சி என்ற வகையில் கடுமையான விமர்சனங்களைக் கடந்து அதன் மேல் எமக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. இன்னுமொரு பெண்ணும், ஒட்டுமொத்த பெண்களும் இதையொட்டி பாதிக்கப்படுவதை கட்சி எப்படி அனுமதிக்கின்றது என்ற கேள்வியோடு, கடந்தகாலத்தில் மயூரனின் நடத்தையை இதேபோல் கட்சி கண்டும் காணாமல் அனுமதித்ததா என்ற கேள்வியும் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.

மயூரன் தன் நடத்தையைக் குறித்து "ஒரு வேளை நான் இடது அரசியலில் இல்லாமல் இருந்திருந்தால் அக் குற்றச்சாட்டுக்கள் ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. எவரும் கேள்வி கேட்கவும் மாட்டார்கள்" என்று கூற எத்தகைய "பெண்ணிய" சிந்தனைமுறை இது. நிலவும் ஆணாதிக்க குடும்ப அமைப்பையே கேள்விக்குள்ளாக்கும் போது, உங்கள் பாலியல் நடத்தை சார்ந்த பாலியல் சிந்தனைமுறையை கேள்வி கேட்கவே இடமில்லை என்று கூறியதா கட்சி? நீங்கள் எதற்காக பெண்களை சேர்க்கின்றீர்கள்?. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவா, உங்களின் சுய பாலியல் நடத்தைக்காகவா?

ஒரு பெண் - ஆண் தமக்கான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்து சேர்ந்து வாழ்வது, சமூக அறம். இதற்கு மாறாக தனியுடமையிலான நுகர்வு சமூக அமைப்பில் திருப்தியற்ற, நுகர்வானது வரைமுறையற்ற நுகர்வாக மாறியிருக்கின்ற சமூகப் பின்னணியில், பாலியலிலும் வரைமுறையற்ற ஆணாதிக்க நுகர்வு வேட்கை - ஆண் - பெண் இருதரப்பிலும் இணக்கமான நிலைக்கு இட்டுச் செல்லுகின்றது. தங்களின் இந்த நடத்தைக்கு "பெண்ணியம், ஜனநாயகம்" என்று பெயர் வைக்கின்றனர்.

இந்த பின்னணியிலேயே மயூரன்

"பாலியல் வன்முறை - பயமுறுத்தல் என்றெல்லாம் பலர் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையில்லை. அதை கட்சியே தெளிவுபடுத்தியுள்ளது"

என்ற கூறுவதன் மூலம், ஆணாதிக்க பொறுக்கியாக – அறிவுரீதியான அயோக்கியத்தனத்தை கொண்டு நியாயப்படுத்துவதை தாண்டி, அது சமூக அறம் சார்ந்தது கிடையாது.

பெண் அரசியல் - இலக்கியத்துக்கு வந்தது வருவது உன்னுடன் பாலியலில் ஈடுபடவா? இப்படி மயூனர் பேசுகின்;ற பொறுக்கித்தனத்தை, பெண்ணியமாக கட்சி அனுமதித்திருக்கின்றது என்பது, கட்சி மீதான பல கேள்விகளை எழுப்புகின்றது. அரசியல் இலக்கியத்துக்கு வந்த பெண்களை இப்படி தங்கள் பாலியல் தேவைக்குள் சீரழித்ததை, எந்தக் குற்ற உணர்வுமின்றி சொல்லுகின்ற தைரியம் என்பது, ஆணாதிக்க பொறுக்கித்தனமே. கட்சிக்கு வந்த எந்தப் பெண்ணும் கட்டற்ற சுதந்திரமான வரைமுறையற்ற பாலியலில் ஈடுபடும் உணர்வுடன் வந்தது கிடையாது. ஆணாதிக்க தற்பாதுகாப்பு சமூக உணர்வுடன் வந்தவர்களே. அவர்களின் தற்காப்பு உணர்வை உடைத்தால் மட்டும் தான், "திருமணம் செய்வதாக எவருக்கும் நான் வாக்களிக்காத" பாலியல் உறவில் ஈடுபடுவார்கள். அது அந்தப் பெண்ணின் குற்றமல்ல, அறியாமையே. இதைத்தான் மயூரன் போன்ற பல ஆணாதிக்க அயோக்கியர்கள் "பெண்ணியத்தின்" பெயரில் செய்கின்றனர்.

மனிதர்கள் தமக்குள் சேர்ந்து வாழும் சமூக உறவுக்குள் வாழ்வதே பெண்ணியம், இல்லாத வரை அது ஆணாதிக்கமே. பாலியலை வெறும் பண்டமாக, நுகர்வாக, சமூக உறவில் இருந்து துண்டித்து நுகர்கின்ற பொறுக்கித்தனமே ஆணாதிக்கம். இது ஆணுக்குரியதல்ல, பெண்ணுக்குரியதே.

இங்கு பெண்ணியல்வாதி என்பது பெண்ணைக் குறிப்பதல்ல. பெண்ணியம் பேசும் ஆண்-பெண் இருவரையும் குறிக்கும். இதேபோல் ஆணாதிக்கம் என்பது ஆணைக் குறிப்பதல்ல ஆண் - பெண் இருவரையும் குறிக்கும்.

மயூரனை முன்னிறுத்தி இன்று "பெண்ணியம்" பேசும் பலரின் கடந்தகால யோக்கியதை என்ன? இது போன்ற குற்றச்சாட்டுகள் உங்களையும், உங்களைச் சுற்றியும் முன்பு வந்த போது, நீங்கள் எல்லாம் என்ன செய்தீர்கள்? சொல்லுங்கள்.

தமிழ் சூழலில் சமூகம் சார்ந்து முற்போக்கு அரசியல் இலக்கியத்துக்கு வந்த பெண்களை, "முற்போக்கு" ஆண்களும் பெண்களும் எப்படி எந்த வடிவத்தில் கையாண்டீர்கள்;? பொது சமூக வாழ்வுக்கு வந்த பெண்ணை பாலியல் பண்டமாக மாற்ற, வரைமுறையற்ற பாலியல் நடத்தைக்கு இணங்க வைக்கும் போலிப் "பெண்ணியத்தை" ஊட்டினீர்கள் அல்லவா?. இத்தகைய ஆண்களின் நடத்தைக்கு, ஒத்தோடிய பெண்களின் கண்ணோட்டத்தையே, பெண்களாகிய நீங்கள் "பெண்ணியமாக" முன்னிறுத்தினீர்களே மறந்துவீட்டீர்களா! பாலியல் குறித்த போலிப் "பெண்ணியக்" கண்ணோட்டம் இதுதான். குறித்த பெண் "பெண்ணியத்தின்" பெயரில் தான் பாலியல் ரீதியாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த போது, இந்த "முற்போக்கு பெண்ணியம்" அதை அந்தப் பெண்ணின் இணங்கிய சுய பாலியல் நடத்தையாக எதிர்க் குற்றச்சாட்டை முன்வைத்த உங்கள் கடந்த காலத்தை நினைத்துப் பாருங்கள். நீயும் சேர்ந்து ஈடுபட்டதுதானே என்று கூறி குற்றம் சாட்டி, பொது வாழ்விற்கு வந்த பெண்ணை தனிமைப்படுத்தியதை பெண்ணியத்தின் பெயரில் செய்யவில்லையா? (மயூரன் பின்னணியில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதியும் இதுதான்.) ஆணாதிக்க "பெண்ணியக்" கண்ணோட்டம் இவற்றை தானே வழிநடத்தியதென்ற உண்மைகளுக்;கு பொறுப்பேற்பதில்லை. அடிப்படையில் ஆணாதிக்கப் பொறுக்கிகளுக்கு துணையாக புலம்பெயர் "பெண்ணியம்" முன்வைக்கப்பட்டது.

இத்தகைய ஆண் பெண் பாலியல் நடத்தை, சமூக வாழ்வியலின் அங்கமாக இருப்பதில்லை. சமூகம் குறித்து பேசுகின்ற ஆணாதிக்க பொறுக்கித்தனத்தின் மேல், வெறும் நுகர்வு என்ற வரம்புக்குள், பாலியலை நுகர்வது. ஆண் பெண் தங்கள் பாலியல் நுகர்வுக்குள், இதை நியாயப்படுத்தி விடுகின்றனர். ஒரு நாள், சில நாட்கள், சிறிது காலம் என்று விதவிதமான ஆணாதிக்க பாலியலுக்காக சேர்வதும், அதற்கு "பெண்ணியம்" என்று போலி முகமூடி மூலம் நியாயப்படுத்தி விடுகின்றனர்.

இன்று மயூரனை முன்னிறுத்தி இந்த விடையம், புதிதானதல்ல. இத்தகைய ஆணாதிக்க ஒழுக்கக்கேடுகள் சமூகத்தின் பெயரில் அரங்கேறிய காலங்களில் பல தடவைகள் அம்பலப்படுத்தி முன்பு எழுதி இருக்கின்றோம். புலம்பெயர் இலக்கிய அரசியல் பின்னணியில் அரங்கேறிய இத்தகைய ஆணாதிக்க பாலியல் வக்கிரத்துக்கு எதிராக, புலம்பெயர் "பெண்கள் சந்திப்பு" கூட எதையும் முன்வைக்கவில்லை. மாறாக பாலியல் நடத்தைக்கு ஒத்தோடியவர்களே. இந்த விடையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் எழுப்பிய சந்தர்ப்பத்தில், பெண்ணின் "நடத்தை" பற்றியே இலக்கிய சந்திப்பு பேசியது. அதை எதிர்த்த "பெண்ணிய" போராட்டத்தைக் காணமுடியாது. "முற்போக்குகள்" பெயரில் இருந்த ஆணாதிக்கப் "பெண்ணியம்;" மூச்சுக் கூட விடவில்லை.

பாலியல் "நடத்தை" குறித்த "முற்போக்குகளின்" அளவுகோல் என்பது, பாலியலில் இணங்கி இருந்தால் அதில் ஆணாதிக்கமில்லை என்பது தான். இந்த பாலியல் இணக்க கோட்பாட்டுக்கு ஏற்ப அரசியல் இலக்கியத்துக்கு வந்த பெண்கள், இணங்க வைக்கும் நோக்கில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டனர். இதில் தப்பிப் பிழைத்தவர்கள், பாலியல் குறித்த பெண்ணின் தற்பாதுகாப்பு உணர்வில் இருந்துதானே ஒழிய, ஆணாதிக்கமற்ற பெண்ணிய கண்ணோட்டத்திலான தோழமையிலான சமூக உணர்விலோ - வாழ்விலோ அல்ல.

இதற்கு பலியான பெண்கள், நுகர்வுக் கண்ணோட்டத்தில் பாலியலில் ஈடுபடுவதை "பெண்ணியம்" என்று கூறுமளவுக்கு, "பெண்ணியத்தை" கொச்சைப்படுத்தினர், கொச்சைப்படுத்துகின்றனர். இத்தகைய நுகர்வில் ஈடுபடும் ஆணாதிக்கப் பெண்கள், அதை "பெண்ணியத்தின்" பெயரில் நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.

குறிப்பாக பெண்ணை பாலியலுக்கு இணங்க வைக்கும் முறையில், ஆணாதிக்க நடத்தையே இருக்க முடியாது என்பதும், பாலியலில் நுகர்வு ஆணாதிக்க கண்ணோட்டத்தில் ஆண் - பெண் இருவரிடமும் இருக்க முடியாது என்று கூறுவது, பெண்ணியமல்ல.

பெண்ணியம் பேசுகின்ற பெண்கள், பெண்ணியத்தின் பெயரில் தங்கள் ஆணாதிக்கத்துக்கு பலியானதை வெளிப்படையாக பெண்ணிய கண்ணோட்டத்தில் இருந்து பேசாத வரை, அவர்கள் "பெண்ணியல்வாதிகளும்" அல்ல.

ஒரு பெண் தானும் இணங்கி பாலியலில் ஈடுபட்டாலே "பெண்ணியம்" என்பது, குடும்பம் என்ற ஆணாதிக்க அமைப்புமுறையில் பாலியல் எப்படி நோக்கப்படுகின்றதோ, அதே போன்றதே. பெண் பாலியலுக்கு இணங்கிவிட்டால், ஆண் பெண் நடத்தையில் கேள்விக்கு இடமில்லை. அதை சமூக நோக்கில் கூட கேள்வி கேட்கக் கூடாது. இது தான் "முற்போக்கு பெண்ணியம்" என்று கூறுமளவுக்கு நடைமுறையற்ற அரசியலும் இலக்கியமும் சீரழிந்து இருக்கின்றது. இன்றைய ஆணாதிக்க குடும்ப அமைப்பை கேள்வி கேட்க முடியும் என்றால், "திருமணம் செய்வதாக எவருக்கும் நான் வாக்களித்ததில்லை" என்று கூறி, நடத்தும் பாலியல் வேட்டையையும் - நடத்தையையும் கேள்வி கேட்பது தான் பெண்ணியம். குடும்ப அமைப்பில் சமூக நோக்கமும் - சமூக இலக்கும் இருக்கின்றது. அங்கு வெறும் பாலியலுக்காக மட்டும் இணைவதில்லை, சமூக வாழ்வியல் கூறுகளைக் கொண்டு வாழ்கின்றனர. கூடி வாழாத பாலியல் என்பது, வெறும் நுகர்வு வேட்டை தான். இழிந்து போன நவதாராளவாத நுகர்வு கலாச்சாரத்தின், பாலியல் வக்கிரம்.

ஒரு பெண்ணை பாலியலுக்கு இணங்க வைக்க பணம், அந்தஸ்து, அதிகாரம், இலக்கியம், அரசியல், தத்துவம், மொழி ஆளுமை என்று எல்லா வகையான முறைமையையும் கையாள்வதன் மூலம், இணங்கிய பாலியல் நுகர்வாக தூண்டப்படுகின்றது. குறிப்பாக வரலாற்று ரீதியான வாழ்வியல் சார்ந்து பெண்ணைவிட மொழி ஆளுமையற்ற ஆணுக்கும், மொழி ஆளுமை கொண்ட பெண்ணுக்கும் இடையிலான பிரிந்து நிற்கும் ஆளுமைகளால், இலக்கிய அரசியல் ஆளுமை கொண்ட ஆணின் வலையில் பெண் சிக்குகின்றாள். "திருமணம் செய்வதாக எவருக்கும் வாக்களிக்காத" பாலியல் நடத்தையின் பொதுப் பின்னணி இதுதான். பெண் இதற்கு பலியாகின்றாள். கடந்த வரலாற்றில் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சிவராம்.. போன்ற ஆணாதிக்க பொறுக்கிகளும் இதையே செய்தனர். சிவராம் என்ற கொலைகாரப் பொறுக்கி புளட் பாசறை ஒன்றில் வரைமுறையற்ற பாலியலே பெண்ணியம் இதை நடைமுறைப்படுத்துமாறு கூறி, அங்கு கூடியிருந்த ஆண் - பெண்களுக்கு வழிகாட்டியவன். இப்படிப்பட்ட இவனை இயக்கத்துக்குள் குறுக்கு வழியாக கொண்டு வந்து அவனின் மரணம் வரை உறவு வைத்து இருந்தவர்கள், இன்று பெண்ணியம் பேசுகின்றனர். இந்தப் பொறுக்கி சிவராம் இறுதி யுத்த காலத்தில் பாதுகாப்பு கோரி ஊடகவியல் துறையைச் சேர்ந்த பெண் இவனிடம் பாதுகாப்பு கேட்டுச் சென்ற போது, பாதுகாப்பு தருவதாக இருந்தால் "படு" என்று கோரியவன். அந்தப் பெண் இன்று உயிருடன் இருக்கின்றார். இணங்க வைத்த பாலியல் நடத்தைகள் புலம்பெயர் இலக்கிய பின்னணியிலும் காண முடியும்;. இன்று "பெண்ணியம்" பேசுகின்றவர்களில் எவர், இதை எதிர்த்துப் போராடினார்கள்?

ஆணாதிக்க சமூகப் பொருளாதார சூழல் காரணமாக பலவீனமான பெண்கள், குடும்ப ரீதியான ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்கள், பாலியல்ரீதியான தேவைக்குள் சிக்கி இருக்கும் பெண்களை குறிவைக்கின்றனர். தங்கள் பாலியல் வேட்டைக்கு அப்பாவி பெண்களை பலியாக்குகின்ற அரசியல் இலக்கிய பொறுக்கிகள் கொண்டதாக பரிணமித்த "முற்போக்குகள்", ஒடுக்கப்பட்ட மக்களுடன் நடைமுறையில் போராடவும் வாழவும் முடியாத ஆணாதிக்க கோட்பாடுகளை கொண்ட பொறுக்கிகளாகவே, எதார்த்தத்தில் இருக்கின்றனர்.