1.

ஐரோப்பிய இலக்கியத் தளம் தனது பழைய ஆதர்ச எழுத்தாளர்களை அவர்களின் “உன்னத பீடங்களிலிருந்து ” இறக்கி ஆராயும் காலமிது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பற்றிய இவர்களின் கருத்துக்கள், எழுத்துக்கள், நடவடிக்கைகள் ஆராயப்படுகிறது. கடந்த வருடம் Gabriel Matzneff பாலர்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொடுமைகள் விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவர் மீதான குற்றப்பதிவுகள்

இவரால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட Vanessa Springora எழுதிய Le Consentement என்ற நூலில் விபரிக்கப்படுகிறது.
Gabriel Matzneff, 50 வயதைத் தாண்டியவராக இருந்த போது, 14 வயதான Vanessa Springora-வை தனது கீழ்த்தரமான இச்சைகளுக்கு உட்படுத்தினார். அதேவேளை, அந்த அனுபவங்களை இலக்கிய பதிவுகளாகவும், நாட்குறிப்புகளாகவும், விவாத கட்டுரைகளாகவும் பதிவு செய்தார். இவர் Vanessa Springora- வை மட்டுமல்ல பல பிலிப்பைன்ஸ் சிறுவர்கள் மீதும் பாலியல் வன்முறையை பிரயோகித்துள்ளார். அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

Les moins de seize ans (16 வயதினிலே ?) என்ற, 1974இல் வெளியிடப்பட்டு –மறுப்பதிப்பாக 2005 வெளிவந்த புத்தகத்தில் அவர் எழுதுகிறார்:

“ஒரு குழந்தையுடன் படுப்பது ஒரு உயர்ந்த- (உன்னத ) அனுபவம், ஞானஸ்நானம் போன்ற ஒரு நிகழ்வு, ஒரு புனிதமான அனுபவம்.” என.

Gabriel Matzneff-இன் சிறுவர்கள்-சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைசார்த்த எழுத்துக்கள் , அனுபவ பதிவுகள் சம்பந்தமான விமர்சனங்கள் ஏற்கனவே பலரால் முன்வைக்கப்பட்டாலும், அவை எதுவும் விவாதத்துக்கோ அல்லது சமுகத்தின் கவனத்துக்கோ எடுக்கப்படவில்லை. ஆனால், இன்று வேறெரு சமுக சிந்தனையும், புதியதலைமுறை சமுக சிந்தனையாளர்களும் , எழுத்தாளர்களும் கோலோச்சும் இலக்கிய -சமுகப்பரப்பில் Gabriel Matzneff மீதான விமர்சனமும் , குற்றச்சாட்டுகளும் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

Gabriel Matzneff மட்டுமல்ல. வேறும் பல மாபெரும் ஆளுமைகளின் பெண்கள், சிறுவர்கள் மீதனா வன்கொடுமைகள், பாலியல் கொடுமைகள் -வன்முறைகள்
ஐரோப்பிய இலக்கிய -சமுக- அரசியற் தளத்தில் விமர்சிக்கப்படுகிறது.

பிரான்ஸ் சமுகத்தின் /ஐரோப்பிய சமுகத்தின் பேர் அறிவாளர்களாக போற்றப்படுபவர்கள் மற்றும் சமுக மாற்றத்துக்கான அறிவுசார் வெளியீடுகளாக கணிக்கப்படுபவைகள் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

உதாரணமாக, தத்துவார்த்தி -சமூகவியலர் Michel Foucalt, Libération என்ற இடதுசாரி பத்திரிகை, மற்றும் Le Monde என்ற இலக்கிய -அரசியல் வெளியீடு, பெண்ணியம் மற்றும் இருப்பியல்வாத தத்துவார்த்திகளான Simone de Beauvoir மற்றும் Jean-Paul Sartre போன்றோர்களும் காரசாரமான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். இது மட்டுமல்லாமல் இவர்கள் அனைவரும் Gabriel Matzneff- இக்கு 60, 70, 80 களில் ஆதரவு வழங்கியவர்கள். அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள்.

2

இதில், Simone de Beauvoir 60/70 களின் பெண்விடுதலை சார்ந்து உலகளாவிய முறையில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கூட, தனக்கு நெருக்கமாகவிருந்த தனது “மாணவிகளை ” இருப்பியல்வாத தத்துவவாதி Jean-Paul Sartre உடன் “பகிர்ந்து கொண்டார் “. இன்று , இந்த இருவரின் பாலியல் செயற்பாடுகளும் – அந்த மாணவிகள் மீதான பாலியல் வன்முறையாகவே கணிக்கப்படுகிறது.

நான் வாழும் நோர்வே நாட்டின் அதி உன்னத மகிமைக்குரிய எழுத்தாளர்கள் மிகக் கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தப்படுகின்றனர். எனது இலக்கிய -சமுக ஆர்வத்துக்கு அடித்தளமிட்ட Jens Bjørneboe தொடக்கம் Agnar Mykle போன்ற இலக்கிய விற்பன்னர்களும் கூட விமர்சிக்கப்படுகின்றனர். இவர்கள் எவரும் உயிருடன் இல்லாதபோதும் கூட, இவர்களின் படைப்புகள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு – இவர்களின் பாலியல் கொடுங்கோன்மை – வன்புணர்வுகள் ஆராயப்படுகிறது.

“எல்லா வகை வரலாற்று சம்பவங்களையும் – விடையங்களையும் அவை நடைபெற்ற வரலாற்றுக் காலத்தின் தன்மை –அன்றிருந்த கருத்தியல் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள வேண்டும் ” என்ற பார்வை இவர்கள் விடையத்தில் மறுக்கப்பட்டு, இவர்கள் “உன்னதப்படுத்தப் பட்ட – பீடங்களிலிருந்து ” இறக்கப்படுகிறார்கள், விவாதத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக; வரலாற்றின் குப்பை தொட்டியில் இவர்களில் சிலர் வீசப்படலாம்.

3.

சில வருடங்களுக்கு முன் இந்தியாவை சேர்ந்த ஒரு எழுத்தாளர், Gabriel Matzneff போன்ற சில எழுத்தாளர்களை வாசித்து விட்டு, அதை கொப்பி அடித்து சிறுமிகள் மீதான வன்முறையை உன்னதப்படுத்தும் ”கதையை ” வெளியிட்டார். அவருக்கு எதிராக ஐரோப்பிய புலம்பெயர் சமுகத்தில் சிலர் கிளர்த்தெழுந்தனர். அதேவேளை, ஐரோப்பாவில் நடந்த “இலக்கிய சந்திப்புகள் ” சார்ந்த சூழலில் இயங்கியவர்கள் மற்றும் இன்றுள்ள சில “பிரபலங்கள்” மீதான பாலியல் வன்முறை, பாலியல் தவறான நடத்தைகள் சார்ந்த விமர்சனங்கள் முன்வைக்கப்ட்ட போது “விமர்சகர்கள் ” அனைவரும் பம்மினார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் -சிறுமிகள் மீதே குற்றமிருந்ததாக -victim blaming- கதையளந்தார்கள். இன்றும் அதே நிலை தான். கொலைகாரர்களும், பாலியல் வன்புணர்வாளர்களும், பெண்கள் – சிறுவர்கள் மீது வன்முறைபுரிந்தவர்களும் இலக்கியவாதிகளாக, அரசியல் தலைவர்களாக, சமுக முன்னோடிகளாக, எழுத்தாளர்களாக கொண்டாடப்படுகின்றார்கள். அரசியல் பின்புலம் (குறிப்பாக புலியெதிர்பு – அல்லது ஆதரவு என்ற அளவுகோல்) சாதி, சமுக அந்தஸ்து போன்ற அடிப்படையிலேயே பிரதிகள் மீதான விமர்சனங்கள் கூட வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், ஐரோப்பாவில் தனிப்பட்ட நபர்கள் மீதான- அவர்களின் சமுக-இலக்கிய நடவடிக்கைகள் சார்ந்த- விமர்சனத்தை முன்வைப்பது போன்ற நிலைமை, தமிழ் சமுக-இலக்கிய பரப்பில் எவ்வாறு-எப்போது நிகழுமென எதிர்ப்பார்ப்பது……. ????

 பாலியல் சுரண்டல்; தமிழ் இலக்கிய -அரசியல் பரப்பில் நியாயம் கிடைப்பது எப்போது ?!மகிமையின் பீடங்களிலிருந்து இறக்கப்படும் ஐரோப்பிய இலக்கிய-அரசியல் ஆளுமைகள்.

SEPTEMBER 14, 2020 / RASERIART

நியூட்டன் மரியநாயகம்