இன்று எழுத்தாளர் மு.தளையசிங்கம் அவர்களை; மார்க்சிய ஆர்வலராகவும் சாதி மறுப்பாளராகவும் காட்டும் முயற்சிகள் இணைய ஊடகங்கடே முன்னெடுக்கப்படுகிறது. இதே போன்ற விவாதங்கள் 80-களில் முளைத்தவேளை, சிவசேகரம் அவர்கள்; தளையசிங்கம் மார்க்சியர் அல்லர் என்பதை தாயகம் இதழ் 1983.6 இல் விபரமாக நிறுவியுள்ளார். இச் சிறு பதிவின் நோக்கம் தளையசிங்கத்தை சாதியத்துக்கு எதிரான போராளி என சித்தரிப்பதை கேள்விக்குள்ளாக்குவதேயாகும்.

தனிப்பட்ட மனிதர் எழுத்தாளர் மு.தளையசிங்கம் எனக்கு பழக்கமானவரும் அல்ல. அவரின் எழுத்து எனக்கு பரீட்ச்சயமானதுமல்ல. அதேவேளை, அவர் பல்லாயிரம் பக்க இலக்கியமும், தத்துவார்த்த உசாவல்களையும் எழுதவில்லை. இது ஒருபக்கமிருக்க மு.தளையசிங்கம் இணைந்து செயற்பட்ட சமூக இயக்கத்தின் தத்துவார்த்த அடிப்படை, அவரது சமூகப் பின்புலம், மற்றும் சில சமூக செயற்பாடுகளின் தன்மையை மேலோட்டமாக ஆராய்ந்தாலே அவர் மார்க்சியரோ அல்லது சாதி ஒழிப்பாளரே கிடையாது என்ற உண்மையை கண்டடைய முடியும்.

சர்வோதய காலம்

1958- இல் இலங்கை சர்வோதய அமைப்பு திரு.A.T,ஆரியரட்ன அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அது இந்திய காந்திய வழியில் சமூக அபிவிருத்தி மற்றும் “விடுதலையயை” புத்த ஞானமரபு சார்ந்த அடிப்படையில் முன்னெடுப்பதாக அறிவித்துக் கொண்டது. தென்னிலங்கையில் ஆசிரியராக பணிபுரிந்த காலத்தில் திரு.யு.வு.ஆரியரட்னவின் சர்வோதயம் பற்றி தெரிந்து வைத்திருந்தார் தளையசிங்கம். குறிப்பாக, அக் காலத்தில் சர்வோதயம் தென்னிலங்கையில் நடத்திய தியான மற்றும் மெடிடேஷன் நிகழ்வுகளில், திருநாவுக்கரசு என்ற அவரின் சொந்த ஊர்காரருடன் பங்குகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் 1964 இல், திரு.A.T.ஆரியரட்னவின் இலங்கை சர்வோதய நிறுவனத்தின் கிளையாக –திருநாவுக்கரசுவின் தலைமையில் சு.வில்வரத்தினம்– கருணாகரன் சகோதரர்களினால் புங்குடுதீவில் சர்வோதயம் ஆரம்பிக்கப்பட்டது. சிலர் கூறுவது போல சர்வோதயம் மு.தளையசிங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டதென்பது தவறான தகவல்.

1966இல், சைவமத குருவான நந்தகோபாலகிரியை இரத்தினபுரியில் சந்தித்து தீட்சை பெற்ற பின்பு, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தனது சொந்த ஊரான புங்குதீவு பாடசாலைக்கு மாற்றலாகி போனார் தளையசிங்கம். அங்கு அவர் திருநாவுக்கரசு தலைமையிலான சர்வோதயத்தில் சு.வில்வரத்தினம் –கருணாகரன் சகோதரர்களுடன் சேர்ந்து செயற்பட்டார். இக் காலத்தில் பாடசாலை மட்டத்தில் சில தியான நிகழ்வுகளை தென்னிலங்கையில் இருந்து வந்த சர்வோதய வழிகாட்டிகளின் உதவியுடன் புங்குடுதீவில் நடத்தியது சர்வோதயம். மு.தளையசிங்கம் அப் பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிந்த காரணத்தினாலும், சர்வோதய உறுப்பினர் என்பதனாலும் அந்த தியான நிகழ்வுகளை முன்னின்று நடத்தினார். இதற்கு மேல் இக் காலத்தில் அவர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவும் செயற்பாட்டாளராகவும் இயங்கினார்.

தமிழர் சுயாட்சிக் கழகம்

1968- இறுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளைக்குள் இரு பிரிவுகள் சில “அரசியல் ” முரண்பாடுகளை முன்னிறுத்தி இயங்கத் தொடங்கின. ஒரு பிரிவு கா.பொ.இரத்தினத்தின் தலைமையிலும் மற்றொரு பிரிவு பின்னாளில் சுயாட்சிக் கழகத்தை இஸ்தாபித்த திரு. வைத்தியநாதன் நவரத்தினத்தின் தலைமையிலும் இயங்கியது. 1969 இல் நவரத்தினத்தின் தலைமையிலான குழு தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி “தமிழர் சுயாட்சி கழகத்தை ” ஆரம்பித்தது. இதன் விளைவாக புங்குடுதீவு கிளையும் இரண்டாக பிரிந்தது. கவிஞர் சு.வில்வரெத்தினம் மற்றும் அவரின் மூத்த தமையனார் சு.கருணாகரன் தலைமையில் இக்குழு அங்கு இயங்கியது. இந்த குழுவுடனேயே மு.தளையசிங்கமும் சேர்ந்து இயங்கினார்.

இதன் தொடர்ச்சியாக, ஊர் இரண்டு பட்டது. கவிஞர் சு.வில்வரெத்தினம் மற்றும் அவரின் மூத்த தமையனார் சு.கருணாகரன் குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் என்ற காரணத்தின் அடிப்படையில்; 1970 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புங்குடுதீவு ஒடுக்கப்பட்ட மக்கள் நவரத்தினத்தின் சுயாட்சிக் கழகத்துக்கே பெரும்பான்மையாக வாக்களித்தனர். இதன் காரணமாக புங்குடுதீவு 11 ஆம் வட்டார மக்கள்; கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் அமைத்திருந்த நன்னீர் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதை, அக் கோவில் தர்மகர்த்தாக்களாகவிருந்த தமிழரசுக் கட்சி –கே.பி.இரத்தினத்தின் ஆதரவாளர்கள் தடுத்தார்கள்.

1971, சித்திரை மாத இறுதிப்பகுதியில் ஒருநாள் நடந்த வாய்த்தர்க்கம் மற்றும் சிறு கைகலப்பில் தண்ணீர் அள்ளும் உரிமைக்காக வாதாடியவர்களுக்காக முன்னின்றவர் சு.வில்வரெத்தினமாவர். இது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், தண்ணீர் அள்ளுவதை தடுக்கப்பட்ட சமூக பெண்களையும் ஆண்களையும் கிணற்றருகில் அழைத்துச் சென்று தண்ணீர் அள்ள வைத்தவர் திரு. கருணாகரன் ஆவர். தண்ணீர் அள்ளும் உரிமைக்காக குரல்கொடுத்தவர்களுடன் மு.தளையசிங்கமும் சேர்ந்து நின்றார் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

இந்த நிகழ்வுக்கு பழிவாங்கும் முகமாக தமிழரசுக் கட்சி –கே.பி.இரத்தினத்தின் ஆதரவாளர்கள், ஊர்காவற்துறை போலீசாரை கொண்டு அரசியல் செல்வாக்கு மூலம் கவிஞர் சு.வில்வரெத்தினம், தளையசிங்கம் மற்றும் சிலரை கைதுசெய்ய வைத்தனர். வழக்குப்போட்டு சட்டரீதியாக வெல்ல முடியாதென தெரிந்து கொண்ட அவர்கள், போலீசாரை கொண்டு வன்முறையை கைது செய்யப்பட்டடோர் மீது பிரயோகித்தனர். இதில்; கவிஞர் சு.வில்வரெத்தினமும், தளையசிங்கமும் மற்றும் சில ஒடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் தாக்கப்பட்டார்கள். இத்தாக்குதலால் தான் தளையசிங்கம் இறந்தார் என்று கூறுவது மிகைப்படுத்தல் அல்லது நேரடியான பொய்யாகும். உண்மையில், நன்னீர் பிரச்சனைக்கு தலைமை தாங்கிய வில்வரெத்தினமே மிகவும் பாதிக்கப்பட்டர். அவரின் இறுதிக்காலம் வரை போலீசாரின் தாக்குதலினால் முதுகெலும்பில் ஏற்பட்ட பாதிப்பு அவரை துன்புறுத்திக் கொண்டே இருந்தது. 1973-இல் தளையசிங்கம் இருதய வருத்தம் காரணமாகவே மரணமடைந்தார். கவிஞர் சு.வில்வரெத்தினதின் தந்தையார் அக் கிணற்றை கட்டியதனாலும், அவர்களுக்கு குடும்ப பாரம்பரிய உரிமை இருந்ததனாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தண்ணீர் அள்ளுவதை பின்னாளில் ஒருவராலும் தடுக்க முடியவில்லை.

புங்குடுதீவு சர்வோதயம் உள்ளக முரண்பாடு காரணமாகவும்; தலைமையில் இருந்தோர் நிதி கையாடினார்கள் என்ற குற்றச்சாட்டையும் அடிப்படையாக கொண்டு இரண்டாகப் பிரிந்தது. சு.வில்வரெத்தினத்தின் தலைமையில் விலகியோர் 1972 நடுப்பகுதியில் “புராண சர்வோதயம் ” என்ற அமைப்பை ஆரம்பித்தனர். மறுபகுதியினர், வட இலங்கை சர்வோதயம் என்ற பெயரில் இயங்கினர். “புராண சர்வோதயம் ” சிலவருடங்களிலேயே தனது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டது. அது இயங்கிய காலங்களில் தளையசிங்கம் “தத்துவார்த்த ” தலைவராக இயங்கினார். பின்னாளில் சு.வில்வரத்தினம் அவர்கள் “புராண சர்வோதயம்” இயக்கத்தின் சிந்தனையை அடிப்படையாக் கொண்ட “சூழகம்” அமைப்பை நிறுவினார்.

சாதியமும் தளையசிங்கமும்

மேலே கூறியது போல் சாதிய ஒடுக்குமுறை சார்ந்த ஒரு சம்பவத்திலேயே தளையசிங்கம் பங்குகொண்டதாக, நிரூபிக்கத்தக்க தகவல்கள் உள்ளன. அதேவேளை, அக் காலத்தில் சாதிய ஒடுக்குமுறைக்குப் பெயர்போன தீவுப்பகுதியில் பல நூறு சாதிய போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. அங்கு நடந்த போராட்டங்கள் எனக்கு தெரிந்த மட்டில் எந்த கட்சியினாலே அல்லது வெளியாரின் NGO– உதவியினாலே முன்னெடுக்கப்படவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகங்களே சுயமாக போராட்டங்களை முன்னெடுத்தனர்.

சில சந்தர்ப்பங்களில் ஒடுக்கும் சாதியை சேர்ந்த முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களும் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்நிலையில், தளையசிங்கம் ஒரு எழுத்தாளர் என்பதற்காக அவரின் ஒரு பங்கெடுப்பை ஊதிப்பெருக்கி, உண்மையாகவே போராடியவர்கள்- போராடிய மக்களின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்வது முறையான காரியமல்ல. எழுத்தாளர் ஜீவா, ஏன் தளையசிங்கம் தாக்கப்பட்டதை தனது மல்லிகை இதழில் பிரசுரிக்கவில்லை என கேள்வி கேட்பதுவும், அத் தாக்குதலால் இறந்தவருக்கு ஏன் மல்லிகை அஞ்சலி செலுத்தவில்லை என வாய்ச்சவடால் விடுவதுவும் எந்தவிதத்திலும் உண்மையும் “சத்தியமும்“சார்ந்ததல்ல.

மு.தளையசிங்கம் ஆசிரியராக புங்குடுதீவு பாடசாலையில் பணியாற்றிய காலப்பகுதியில் ஒடுக்கபட்ட சாதிய சமூக மாணவர்கள் மீது படு கீழ்த்தரமான கொடுமைகள் நிகழ்ந்தது. அங்கு கற்ற மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் முன்னின்று அக் கொடுமைகளையும்- சாதிய வன்முறைகளையும் நிகழ்த்தினார்கள். குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்துப் பெண்கள் மீது நடந்த கொடுமைகள் சொல்லிமாளாது. அதனால் அன்று 5 அல்லது 6 ஆம் வகுப்புக்குப் பின்னர் அவர்கள் பெரும்பாலும் கல்வியை தொடர்வதில்லை. இன்று சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக பாரிய பங்களிப்பை தளையசிங்கம் செய்தார் என கூறுபவர்கள் யாரவது, மேலே கூறியுள்ள மாணவர்கள் மீதான வன்கொடுமைகள் நடந்த போது அவர் என்ன செய்தார் –எங்கிருந்தார் என்று யாராவது கூறுங்களேன் ???!!

இந்த கேள்வியின் அர்த்தமாகப்பட்டது தளையசிங்கத்தை சாதிமான் என்று குற்றம் சுமத்துவதோ அல்லது நாசுக்காக சாதியத்தை கடைப்பிடித்தவர் அவர் என்று குற்றம் சுமத்துவதோ என் நோக்கமல்ல. அந்த தேவையும் எனக்கில்லை. அதேவேளை, அவரை சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய போராளியாக சித்தரித்து, சாதிய –சமூக விடுதலைக்காக வாழ்வையே அர்ப்பணித்தவர்களை சிறுமைப்படுத்துவதையே விமர்சனத்துக்கு உட்படுத்துகிறேன்.

சர்வோதய சிந்தனையும் சாதிய விடுதலையும்

“பொருள்முதல்வாத அடிப்படையிலான மார்க்சிஸ கோட்பாடு சார்ந்த விடுதலை மட்டும் போதாது – கருத்துமுதல் வாதம் சார்ந்த அக விடுதலையும் இணையும் போதே இச் சமுகம் பூரணமடையும்” என்ற கருத்தைக் கொண்ட தளையசிங்கத்தின் சிந்தனைப் போக்கு அடிப்படையில் “இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே ” என்ற வரிக்கு நெருக்கமானது. ஜோண் ரஸ்கினின் சிந்தனையால் கவரப்பட்டு காந்தியால் உருவாக்கப்பட்ட சர்வோதய சிந்தனையால் ஆகர்ஷிக்கப்பட்ட தளையசிங்கதின் சர்வோதய –பூரண கற்பனாவாத “கோட்பாடு” சாதியத்தை கட்டிக்காக்க –அதை சமூகத்தின் ஒரு பிரிவாக பாதுகாப்பதையே அடிப்படையாக் கொண்டது. இந்நிலையில், அவரை ஒரு சாதி எதிர்ப்பு கோட்பாட்டாளராக –மானிட விடுதலையின் சிந்தனாவாதியாக முன்னிறுத்துவதும் கூட அவரை சரியாக தெரிந்து கொள்ளாததால் ஏற்படும் விளைவே. இது பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

18.03.2021.