இன்று ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்வைக்காது, கடந்தகாலம் குறித்த இன்றைய கண்ணோட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்திருப்பதில்லை. இது போன்று கடந்தகால சாதிய மரபு மீறல்களை இன்று முன்வைக்கும் போது, முன்வைப்பவர்கள் எத்தகைய சிந்தனைமுறையில் இருந்து ஏன் எதற்காக முன்வைக்கின்றனர்? வெள்ளாளிய சமூக அமைப்புக்கு எதிரான சாதியொழிப்புப் போராட்டத்திலா எனின், இல்லை.

இப்படி "நாங்கள்" "அவர்களின்" ஊர்களில் கூடியுண்டு வாழ்ந்தது முதல் "நாங்களும் - அவர்களும்;" எந்த வேறுபாடுமின்றி கூடி உண்டு வாழ்ந்த கதைகளை இன்று முன்வைக்கின்றனர்;. சாதிய சமூக அமைப்பில் தனிப்பட்ட அல்லது குழுவின் 'சாதிய மரபு மீறல்கள்" என்பது, வெள்ளாளிய சமூக அமைப்பின் வளர்ச்சியின் அகக்கூறு தான். சாதியம் ஓரே வடிவில் இருப்பதுமில்லை, இயங்குவதுமில்லை. பல வடிவங்களில் தன்னை தகவமைக்கின்றது. தமிழினவாதமாக, "முற்போக்காக", "மார்க்சியமாக" .. எங்கும் அது மரபு மீறல்களுடன் இயங்கக் கூடியது.

சாதிய சமூக அமைப்பில் தனிப்பட்ட அல்லது குழுவின் சமூக மீறல்களை, சுய பெருமை பீற்றும் பின்னணியில் இருந்தே இன்று அதை முன்வைக்கின்றனர். இப்படிப் பெருமை பேசும் சிந்தனைமுறை என்ன என்பதை பார்ப்போம்.

1. சாதிய சமூக ஒடுக்குமுறையிலான சாதிய மரபுகளை மீறியதாக நம்புகின்றவர்;கள் எவரும், சாதி ஒருங்கிணைந்த சிந்தனைமுறை என்பதை ஏற்றுக்கொண்டு, அது எத்தகைய சிந்தனைமுறை என்பதை இன்று வரை பேசுவதில்லை.

2. சாதிய சிந்தனைமுறை என்ன என்பதை முன்வைத்து, கடந்தகால "சாதிய மீறல்களை" அரசியல் ரீதியாக சுயவிமர்சனம், விமர்சனம் செய்வதில்லை.

3. சாதியம் எப்படி, எந்த வடிவில் சமூகத்தில் இயங்குகின்றது என்பதை முன்வைத்து, அதற்கு எதிராக நடைமுறையில் வாழ்வதுமில்லை, போராடுவதுமில்லை.

4. சாதிய சமூக ஒடுக்குமுறையிலான மரபுகளை மீறியமை, அரசியல் கோட்பாட்டு அடிப்படையிலானதாகவும் - நேர்மையானதாகவும் இருக்காமையே, இன்று அவர்களிடம் ஓடுக்கப்பட்ட மக்கள் அரசியல் கோட்பாட்டு அடித்தளத்தை காணமுடியாததற்கான காரணமாக இருக்கின்றது.

5. இன்று கடந்தகால சாதிய மீறல்களை பேசுகின்ற போது, ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலை முன்வைத்து பேசுவதில்லை. எதற்காக கடந்தகால தங்கள் தனிப்பட்ட சாதி மீறல்களை பேசுகின்றனர் என்றால், ஒடுக்கும் வெள்ளாளிய சமூக வாழ்வியல் பெருமைகளில் மற்றவர்களில் இருந்து தம்மை வேறுபடுத்தி காட்டத்தான்.

சாதிய ஒடுக்குமுறையானது வெள்ளாளிய சிந்தனை வடிவத்தில், தமிழினவாதமாக தன்னை முன்னிறுறத்திக் கொண்டு இயங்குகின்றது. தமிழினவாதம் குறித்த கண்ணோட்டம் வெள்ளாளிய சிநதனை வடிவில் இருக்கின்றதே ஒழிய, ஓடுக்கப்பட்ட மக்களின் சிந்தனை வடிவில் கிடையாது. அதை நிராகரிக்கும் வெள்ளாளிய சிந்தனை வடிவமே இன்று வரை இருக்கின்றது. இது தமிழினவாத எதிர்ப்பிலும் இந்த வெள்ளாளிய சிந்தனைமுறைதான் இயங்குகின்றது.

கடந்த வரலாற்றில் புலிப் பினாமிகள் தொடங்கி "முற்போக்காக" தாம் சிந்தித்;ததாக கூறும் தனிநபர்கள் வரை, சாதிய ஒடுக்குமுறை வடிவத்திற்கு எதிராக போராடியதாக, சாதி ஒடுக்குமுறையிலான மரபு வடிவத்தை மீறிய கதைகளை சொல்ல முற்படுகின்றனர். இதை இன்று எங்கே நின்று, எதற்காக எப்படி சொல்ல முனைகின்றனர் என்று பார்த்தால், ஓடுக்கப்பட்ட மக்களின் அரசியல் சிந்தனைமுறையில் இருந்ததல்ல.

தனிநபர் பாதிப்புக்கள், தனிமனித மீறல்கள் மூலம் சாதியை விளங்கவும், விளக்கவும் முடியாது. அதை போராட்டமாக காட்டுவது, அபத்தம்.

இயக்கங்களில் இருந்து ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த "நாங்கள்" என ஒடுக்கப்பட்ட வீடுகளில் கலந்துண்டு வாழ்ந்த கதைகளையும், "அவர்கள்" எமக்கு பாதுகாப்பு தந்த கதைகளையுமே கூறுகின்றனர். இந்த வெள்ளாளியக் கண்ணோட்டமானது தன்னை ஒடுக்கப்பட்ட தரப்பாக அல்ல – ஓடுக்கும் சாதியில் பிறந்த வேறுபட்ட மனிதனாக வித்தியாசப்படுத்தி தூக்கி முன்னிறுத்துகின்றது.

அன்று சமூகம் குறித்த பொது அறியாமை, ஒடுக்குமுறைக்கு எதிரான பொது உணர்வு சார்ந்த நடைமுறையிலான ஒன்று, இன்று ஓடுக்குமுறை அரசியலிருந்து அணுகப்படுகின்றது. அன்று தன் அறிவுக்கெட்டிய உணர்வு ரீதியான செயற்பாட்டின் பின் இருந்த பொது நேர்மை, அர்ப்பணிப்பு, அதை இன்று முன்வைக்கும் போது அதில் இல்லை.

மிக நுட்பமாக அரசியல் ரீதியாக பார்த்தால் "தங்கள்" நலன்களை அடையக் கையாளும் அத்துமீறல்கள். ஒடுக்குமுறைக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டமல்ல. இந்த நயவஞ்சகத்தை வரலாற்றில் இருந்து கண்டறிய முடியும். இந்திய விடுதலையை முன்வைத்து காந்தி தீண்டாமைக்கு எதிராக பேசியது, போராடியது இத்தகையதே.

இலங்கையில்

1.சாதி ஒடுக்குமுறையைக் காட்டி நடந்த மதமாற்றங்களைத் தடுக்க, 1926 ஆண்டு தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று வெள்ளாளிய சிந்தனையிலான வெள்ளாளிய குரல்கள் யாழ்ப்பாணத்தில் எழுந்தது. இதற்காக அவர்கள் ”யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினர். ”பஞ்சமர்களை முன்னேற்றமடைய விடாவிட்டால் மற்றத் தமிழ்மக்கள் முன்னேற்றமடைய ஏதுவில்லை” என்று கூறினர். ”எங்களுடைய மதத்தினர் எல்லோரும் ஒற்றுமையாய்ப் பலம் பெற்றால்தான் நாங்கள் சுய ஆட்சி அடைவதற்கு வழியாகும்” என்று, காந்திய கண்ணோட்டத்திலான பார்ப்பனியத்தைப் போன்று, வெள்ளாளிய கண்ணோட்டத்தில் தீண்டாமை ஓழிக்கப்பட வேண்டும் என்று 400 பேர் கொண்ட கூட்டத்தில் முடிவு எடுத்தனர். வெள்ளாளிய சிந்தனையிலான வெள்ளாள சமூக அமைப்பில் தீண்டாமை என்பது தங்கள் வெள்ளாளிய சைவ சாதிய அமைப்பை இல்லாதாக்கிவிடும் என்ற அச்சம், தீண்டாமை பற்றி பேச வைக்கின்றது. இதற்காக 1927 பெப்ரவரி 11ஆம் திகதி "திராவிடன்" எனும் மாத இதழ் வெளியிட்டதுடன், அது தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் வெளியாகியது.

2.1960 களில் பொது இடங்களிலான தீண்டாமைக்கு எதிரான இடதுசாரிகளின் போராட்டம் எழுந்த போது, தமிழினவாதிகள் தங்கள் தமிழினவாத வெள்ளாளியத்தை பாதுகாக்க "தீண்டாமை ஒழிப்பு" பற்றி அதிகமாக பேசத் தொடங்கினர். தமிழினவாத அரசியல் வெற்றி பெற, தீண்டாமை ஒழிப்பு பற்றி சுதந்திரன் பத்திரிகையில் தொடர்ச்சியாக தீண்டாமை ஓழிப்பு குறித்த கட்டுரைகள் வெளிவந்தன. தமிழரசுக் கட்சியினர் தீண்டாமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். தமிழரசுக் கட்சியின் முக்கிய மாநாட்டு – கட்சி தீர்மானங்களில் இந்த தீண்டாமை ஓழிப்பு பற்றிய - வெள்ளாளிய தீர்மானங்களுக்கு பஞ்சமில்லை. 1970 பின் இது கூர்மையடைந்ததுடன், 1970 களில் உருவான இளைஞர் அமைப்புகளின் முக்கிய பொறுப்புகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை முன்னிலைப்படுத்தி, வெள்ளாளிய தமிழினவாத சமூக அமைப்பிற்கு சேவை செய்ய வைத்தனர். இவைகள் வெள்ளாளியத்தை பாதுகாக்க நடத்திய அத்துமீறல்களே.

3.இயக்கங்கள் இதைப் பின்பற்றி சாதி ஓழிப்பு பற்றி வகைவகையான திட்டங்களை முன்வைத்தனர். இயக்கங்களில் வலது - இடது அரசியல் பிரிவுகளும் - பிளவுகளும் ஏற்பட்ட போது, இந்த இயக்க திட்ட வரைவு அடிப்படையில் ஓடுக்கப்பட்ட சாதியை முன்னிறுத்தும் வெள்ளாளிய கண்ணோட்டத்திலேயே அணுகினர். ஒடுக்கப்பட்ட சாதிகளை வெள்ளாளிய இயக்க இடது கண்ணோட்டத்தில் இருந்து அணுகினார். ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் கண்ணோட்டத்தில் அல்ல.

இப்படி இடது கண்ணோட்டத்தில் ஓடுக்கப்பட்ட சாதிகளை அணுகி இயங்கியவர்கள், இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலை முன்வைக்காது வெள்ளாளியப் பெருமை பேச அன்றைய தங்கள் அணுகுமுறைகள் பற்றிப் பெருமையாக முன்வைக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட சமூகமாக சிந்திக்காது, அதன் அடிப்படையில் போராடது, வெள்ளாளிய சிந்தனையிலான சமூகத்தில் வாழ்ந்தபடி, சாதி குறித்த கண்ணோட்டம் போலி "முற்போக்கான" கண்ணோட்டம் சாதிய பெருமைகளை முன்வைக்கின்றது. சாதிக்கு எதிரான இன்றைய போராட்டத்தையல்ல. இன்றைய ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும், போராட்டத்தையும் மறுக்கின்றவர்களாக இருக்கின்றனர். அதேநேரம் வெள்ளாளிய சிந்தனைமுறையிலான சாதிய வாழ்வியல் தொடங்கி, சடங்குகள் சம்பிரதாயங்கள் வரையிலான வெள்ளாளிய நடைமுறை சார்ந்து வாழ்க்கையைப் பின்பற்றுகின்றனர். இதை எதிர்த்து ஓடுக்கப்பட்ட அரசியலை முன்வைத்து செயல்படுவதை, நடைமுறை வாழ்க்கையில் காணமுடியாது.