ஐ.பி.துரைரத்தினம் அதிபராக இருந்த காலத்தில் தான், அதாவது 1940 இல் «யூனியன் கல்லூரி» என்ற காரணப் பெயரை யூனியன் கல்லூரி பெற்றுக் கொண்டது. அதற்காக அவர் உழைத்தார்.

தெல்லிப்பழையில் அமைந்துள்ள இக் கல்லூரிக்கு, 200 வருட வரலாறு உண்டு. 1816 நவம்பர் 9 ஆம் திகதி "பொதுச் சுயாதீனப் பள்ளிக்கூடம்" நிறுவப்பட்டதன் மூலம், அதுவே இன்று இலங்கை வரலாற்றில், யூனியன் கல்லூரியானது ஐந்தாவது கல்லூரியாக வர ஏதுவாகியது.

வடக்கிலே முதலாவது பாடசாலையானது, ஆசியாவில் முதல் கலவன் பாடசாலையாகவும், இலங்கையில் முதலாவது மாணவர் விடுதியைக் கொண்ட பாடசாலையாகவும், வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றது.

1918 இல் ஆறு மாணவர்களைக் கொண்ட இந்த விடுதிப் பாடசாலையில், ஐவர் பெண்கள். அதில் ஒருவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வியை வழங்கிய முதல் பாடசாலையாகவும் வரலாற்றில் இடம் பிடித்திருக்கின்றது. அத்துடன் பெண்களுக்கு கல்வி வழங்கிய பாடசாலையில் ஒன்றாகவும், வரலாற்றில் இடம் பிடித்துக்கொண்டது.

இந்த வகையில் ஒடுக்கும் சாதியச் சிந்தனையைக் கொண்ட ஆணாதிக்க சாதியச் சமூகத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல் மாணவியாக மிராண்டா செல்லத்துரைக்கு, யூனியன் கல்லூரி கல்வியை வழங்கியது. அது தொடரமுடியவில்லை. சாதியச் சிந்தனையைக் கொண்ட சமூகம், ஒடுக்கப்பட்ட சாதிக்கு கல்வி வழங்குவதை எதிர்த்தது.

1901 இல் கல்லூரியின் அதிபரான டிக்சன், சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் பாடசாலையில் அனுமதி தந்தார். அதைத் தொடர்ந்து 1905 இல் சம ஆசனத்தையும் வழங்கினார். இதன் மூலம் சாதிய சிந்தனையிலான சமூக அமைப்பிற்கு இக் கல்லூரி சவால் விடுத்தது. இதை அடுத்து ஆசிரியர் சின்னப்பா வீடு எரிக்கப்பட்டது. சம ஆசனம் வழங்கியதை எதிர்த்து, ஒடுக்கும் சாதிய சிந்தனையிலான சமூகத்தைச் சேர்ந்த 65 மாணவர்கள் கல்லூரியை விட்டே வெளியேறினர். பெரும்பாலான மாணவர்கள் வெளியேறிய நிலையிலும், டிக்சன் இதற்கு அசைந்து கொடுக்க மறுத்து கல்வி நடவடிக்கையை தொடர்ந்தார். இதன்பின் 45 பேர் திரும்பி வந்து கல்வி கற்றனர். இப்படி ஒரு வரலாறு யூனியன் கல்லூரிக்கு உண்டு.

சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி மறுக்கும் ஒடுக்கும் சாதிய சிந்தனை கொண்ட சமூக அமைப்பிற்கு முரணாக, 1914 இல் வதிரியில் ஒடுக்கப்பட்ட மக்கள் உருவாக்கிய தேவரையாளி இந்துக் கல்லூரி எப்படி வரலாற்றில் தனித்துவத்தை பெற்றதோ, அதே போன்று யூனியன் கல்லூரியும் தனித்துவமான ஒரு இடத்தை பெற்றுக் கொண்டது.

இந்த தனித்துவமான யூனியன் முற்போக்கு வரலாறு தான், தனது கல்லூரி கீதத்தையும் தனித்துவமானதாக்கி கொண்டுள்ளது. இன, மத, சாதிய ஒடுக்குமுறையை சிந்தனையாகக் கொண்ட சமூகத்தில் யூனியன் கல்லூரியின் கீதமானது "சாதி சமய இன சமரச ஞான மொளிர்" என்று, வரலாற்று ரீதியான முற்போக்கு அறைகூவலை விடுத்திருப்பது என்பது, சாதிய சிந்தனையிலான வரலாற்றுக்கு முரண் தான். ஆனால் இந்தப் பாடசாலையில் எதார்த்தமோ, அதை மீறியது. சாதி ஒடுக்குமுறைகளிலாலான சமூகத்தின் பண்பாட்டுக் கூறை, ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு கல்வியை வழங்கி, சம ஆசனம் வழங்கியதன் மூலம் கேள்விக்குள்ளாகியது.

இப்படிப்பட்ட இந்தப் பாடசாலை தான் முதல் தமிழ் பத்திரிகையான "உதயதாரகையை" 1841 ஆம் ஆண்டில் வெளியிட்டதுடன், இப்பத்திரிகை 130 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்தது. இதைவிட இலங்கையில் வெளிவந்த இரண்டாவது ஆங்கிலப் பத்திரிகையான "வுhந ஆழசniபெ ளுவயச" த மோர்னிங் ஸ்ரார் 1941 இல் (அதே ஆண்டு) வெளிவந்தது.

இப்படி இன்றைய யூனியன் கல்லூரி வரலாற்றின் பின்னணியில் உருவான முற்போக்கான கூறுகளுக்குப் பின்னால், அமெரிக்கன் மிசனின்; மதம் மாற்றும் பிற்போக்கு கூறே இருந்து இருக்கின்றது என்பதை நாம் மறுக்க முடியாது. இந்த அமெரிக்கன் மிசனின்; பின்னணியில் இருந்து வந்தவர் தான் துரைரத்தினம்.

அமெரிக்கன் மிசன் குறித்த, புரிதல் அவசியம். ஏனெனின் இன்றும் அமெரிக்கன் மிசனின் தலையீடுகள் எல்லாம், பிற்போக்கு நோக்குடன் முற்போக்குத்தன்மை கொண்ட ஒன்றாக தன்னை தகவமைத்துக் கொண்டு சமூகத்தில் தலையிடுகின்றது.

அன்று அமெரிக்கன் மிசன்; மதம் பரப்பும் பிற்போக்கு நோக்குக்காக கல்வி, தமிழ் மொழி, ஒடுக்கப்பட்ட (சாதி - பெண்) மக்களுக்கு சமவுரிமை என்று முற்போக்கான வெளிவேசத்தைப் போட்டுக் கொண்டது. பிற்போக்கான பைபிள் கல்விக்கு பதில், முற்போக்குக் கூறுகள் வளர்ச்சி பெற்றதன் மூலம், கல்வி அறிவு பெற்ற சமூகத்துக்கு வித்திட்டது.

இந்த வகையில் அமெரிக்கன் மிசன் 1814 ஆண்டு மதம் பரப்புவதற்காகவே இலங்கை வந்தது. அதில் ஒரு பிரிவு யாழ்ப்பாணம் வந்ததன் மூலம், மதம் பரப்பி வந்த வெவ்வேறு நாட்டுக் குழுக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டது. இதன் மூலம் தன்னை ஒன்பதாவது மதக் குழுவாக, வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது.

முன்னாள் காலனியவாதிகளான ஒல்லாந்தர், போத்துக்கேயர்கள் கொடுமையாக மக்களின் உழைப்பைச் சுரண்டியதுடன், அவர்களின் சைவ மற்றும் சிறுவழிபாடுகள் மேலான ஒடுக்குமுறையானது, புதிதாக மதம் பரப்ப வந்தவர்களுக்கு தடையாக இருந்தது.

இதனால் மதம் பரப்புவதற்காக கல்வி, மருத்துவம்.. போன்றவற்றை அமெரிக்கன் மிசன் தேர்ந்தெடுத்தது. ஒடுக்கும் சாதிய சமய சிந்தனையிலான சமூகக் கட்டமைப்பில் இருந்து, பைபிள் கல்விக்கு மாணவர்களைக் கொண்டு வருவது என்பது சாத்தியமற்றதாக இருந்தது.

இதனால் சாதியரீதியாக ஒடுக்கப்பட்டவர்களையும், வர்க்கரீதியாக ஒடுக்கப்பட்ட ஏழைகளையும், ஆணின் அடிமையாகவும் வறுமையில் சிக்கியும் வாழ்ந்த பெண்களையுமே.. பைபிள் கல்வி நடவடிக்கைக்கு கொண்டுவர முடிந்தது. இப்படி ஒடுக்குமுறையில் இருந்து விடுபட முனைந்தவர்களும், காலனியவாதிகளின் நிர்வாகத்தில் வேலை பெற்று பொருளாதார ரீதியாக முன்னேற முடியும் என்று கருதிய ஆதிக்க சாதிகளின் ஒரு பிரிவினர், பைபிள் கல்வியை கற்க முன்வந்தனர். இப்படித்தான் 100 ஆண்டுகளுக்கு மேலான கல்விமுறை அமைந்திருந்தது.

அமெரிக்கன் மிசனின் மதம் மாற்றும் பிற்போக்கான நோக்கிற்காக, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான முற்போக்குப் பாத்திரத்தை வகித்தது. இப்படி அதன் வரலாற்றுப் போக்குத்தான், "யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரசை" 1924 இல் தோற்றுவித்தது. அதன் செயலாளராக இருந்த ஐ.பி.துரைரத்தினம் தான், யூனியன் கல்லூரியின் 26 வருட அதிபராக இருந்தவர்;. வடக்கில் புகழ் பூத்த பல அதிபர்கள், யாழ்ப்;பாணம் இளைஞர் காங்கிரஸ் பின்னணியைக் கொண்டவர்கள்.

"யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ்" தான் இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது இளைஞர் அமைப்பாகும். இவ்வமைப்பானது யாழ்ப்பாணத்தில் 1924 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இவ்வமைப்பு ஆரம்பத்தில் "யாழ்ப்பாண மாணவர் மாநாடு" (காங்கிரஸ்) என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 1926 ஆம் ஆண்டில் இளைஞர் காங்கிரசாகப் பெயர் மாற்றப்பட்டது.

இந்த அமைப்பே முழு இலங்கைக்குமான முழுமையான விடுதலை வேண்டும் என்ற கருத்தை முதல் முறையாக அமைப்புரீதியில் முன்வைத்தது. அதற்காக நேரடிப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமையும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசையே சாரும். அவர்களின் கொள்கை

1.ஆங்கிலேயரின் அதிகாரத்தை அகற்றுதல்,

2.முழுமையான சுயாட்சியைப் பெறுதல்,

3.தேசிய ஒற்றுமை

4.மது விலக்கு

5.தீண்டாமையை (சாதியை) ஒழித்தல்

இவர்களின் மாநாடுகளிலும், செயற்பாடுகளிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, முதற்தடவையாக இலங்கைக்கான சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்து உரையாற்றினார்.

1931 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட டொனமூர் அரசியலமைப்பில் போதிய சுயாட்சி வழங்கப்படாததைக் கண்டித்து, யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் யாழ்ப்பாணமெங்கும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டு தேர்தலைப் பகிஸ்கரிக்க வைத்தது. இவ்வமைப்பின் செல்வாக்கு 1939 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தில் நீண்டிருந்தது.

இளைஞர் காங்கிரஸ், கட்சியாக மாறவில்லை. இந்த அமைப்பின் இடது - வலது அடிப்படைகளைக் கொண்ட ஜனநாயகக் கூறானது, பின்னால் இரு எதிர்முறை அரசியலில் ஈடுபட வைத்தது.

இந்த அமைப்பில் இருந்த பலர், பின்னர் பாடசாலைகளின் அதிபர்களானார்கள். இளைஞர் காங்கிரஸ்சில் இருந்து வந்த ஐ.பி.துரைரத்தினம் யூனியன் கல்லூரியின் அதிபரானார். அவர் சிறந்த டெனிஸ், துடுப்பு, உதைபந்தாட்ட வீரர். 1925 இல் பட்டதாரியானவுடன், அவர் கல்வி கற்ற யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியரானார். 1927 இல் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பாளரானார். 1935 இல் யூனியன் கல்லூரியின் அதிபராக இருந்த வார்ட் நாடு திரும்புவதில் ஏற்பட்ட தாமதத்தால், 1935 இல் யூனியன் கல்லூரிக்கு ஐ.பி.துரைரத்தினத்தை அதிபராக பதவி ஏற்குமாறு கூறப்பட்டது. இப்படி முதல் இலங்கையர் ஒருவர் யூனியனுக்கு பதவியேற்ற போதும், இந்த இடமாற்றமும் - பதவியும், அவரின் விருப்பத்துக்குரிய தேர்வாக இருக்கவில்லை.

10 வருடம் வசதியான நகர்ப்புற பாடசாலையில் கற்பித்தவருக்கு, அவர் விரும்பி கற்பித்த பௌதிகம், கணிதம் இல்லாத மிகப் பின்தங்கிய கிராமப் பாடசாலையில் கற்பித்தல் ஏற்புடையதாக இருக்கவில்லை. நிர்வாகம் இட்ட கட்டளையை மறுக்க முடியாத நிலையில் பதவியேற்றார். யூனியனில் இருந்த அச்சுக்கூடம், கைத்தொழிற் பேட்டை, விற்பனை நிலையத்தையும் நடத்த வேண்டியும் இருந்தது.

150 மாணவர்களையும்; 8 ஆசிரியர்களையும்; கொண்ட இரு மொழி இலவசப் பாடசாலையாக, 8ம் வகுப்பு வரை இருந்தது. அதேநேரம் அங்கு விஞ்ஞானம் கற்பிக்கப்படவில்லை. கற்களால் கட்டப்பட்ட ஒரு மண்டபமும், மண்ணால் கட்டப்பட்ட ஓலையால் வேய்ந்த வகுப்பறைகளும் இருந்தன.

தமிழ் - ஆங்கில இருமொழி ஆசிரியர்களுக்கு இடையில் சுமுகமான உறவு இருக்கவில்லை. மிசன் பாடசாலையின் பிரதான தலைமையாசிரியராக இருந்த துரையப்பாபிள்ளை வெளியேறி அருகில் மகாஜனா கல்லூரியை உருவாக்கியதன் மூலம், அக்கல்லூரியுடனும் நல்ல உறவு இருக்கவில்லை.

இங்கு மகாஜனாவை உருவாக்கிய துரையப்பாபிள்ளை, யூனியன் கல்லூரியில் ஆங்கிலப் பிரிவின் அதிபராக இருந்தவர். ஆங்கிலக் கல்வி மதம் பரப்ப உதவாது என்று கருதிய மிசன், 1856 முதல் 1871 வரையான பதினைந்து ஆண்டுகள் யூனியனில் ஆங்கிலக் கல்வியை நிறுத்தியது. இந்தப் பின்னணியில் யூனியனுக்குள் 1869 இல் எஸ்.செல்லப்பாவால் ஆங்கிலக் கல்விக்கான பாடசாலை உருவாக்கப்பட்டது. ஆங்கிலக் கல்வி மூலம் வேலை பெற்ற மேட்டுக்குடிகள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கும், கட்டணப் பாடசாலையாக உருவானது. 1901 இல் எஸ்.செல்லப்பாவின் மறைவையடுத்து அமெரிக்க சிலோன் மிசன் என்ற பெயரை மாற்றி, அமெரிக்க மிசன் ஆங்கிலப் பாடசாலையாக மாற்றப்பட்டது. கிறிஸ்தவரான ஏ.ரி.துரையப்பா அதற்கு அதிபரானார். அவர் மீண்டும் சைவ மதத்தை தளுவியவுடன், மிசனை விட்டு வெளியேறி மகாஜனாக் கல்லூரியை உருவாக்கினார். யூனியன் கல்லூரி பிரிந்து இருந்த காலத்தில், தமிழ் அதிபர்கள் இருந்திருக்கின்றனர்.

ஐ.பி.துரைரத்தினம் அதிபரான போது அச்சகம், கைத்தொழில் பேட்டையில் வேலை செய்தவர்கள் வயதானவர்களாகவும், வெள்ளையர்களின் "ஏவல்" வேலை செய்தவர்களாகவும் இருந்தனர். அவர்கள் கறுப்புத் தோல் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த சூழலில், வேலையை வாங்குவது சிரமமாகியது.

சிறந்த நிர்வாகத்திற்கு அதிகாரமே சரியானது என்ற அதிபரின் நம்பிக்கை, இணங்கிப் போவதற்கு தடையாக மாறி இருந்தது. இது ஆசிரியர்கள் சிலருடன் முரண்பாடுகள் ஏற்பட, அதிருப்திகள் பல தடைகளை உருவாக்கியது. இப்படிப்பட்ட நெருக்கடிகள், தடைகள் மற்றும் அதிகார சிந்தனை முறைகளுக்கு மத்தியில் யூனியன் கல்லூரியை உருவாக்கினார்.

ஆங்கிலம் - தமிழ் இரண்டாக செயற்பட்ட பாடசாலையின் அதிகரித்த செலவு, மற்றும் நிர்வாக சிரமங்களை இல்லாதாக்க ஐ.பி.துரைரத்தினம், இரு பாடசாலைகளையும் இணைக்கும் திட்டத்தை முன்வைத்தார். இப்படி இணைத்ததன் மூலம் 1939 இல் "யூனியன் உயர்தரப் பாடசாலை" என்ற காரணப் பெயரைப் பெற்றது. இதையடுத்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, 1940 இல் பாடசாலைத் தரத்தை உயர்த்திய கல்வித் திணைக்களம், இரண்டாம் நிலைப் பாடசாலையாக அங்கீகரித்தது. அத்துடன் லண்டன் மெற்ரிக்குலேசன் வரை கற்பிக்க அனுமதி கொடுத்தது. இதன் மூலம் 1940 முதல் யூனியன் கல்லூரி என்ற இன்றைய பெயரைப் பெற்றது.

இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய பின்னணியில் சாரணர் படையையும், பெண்களுக்;கான வழிகாட்டும் குழுக்களையும், மாணவர் கிறிஸ்துவ இயக்கத்தையும் தோற்றுவித்தார். விளையாட்டு அணிகளை உருவாக்கியதுடன், பாடசாலை நிகழ்வுகளை படமாக்கி காட்சியாக்கினர்.

1940 இல் படிப்பித்த மிசனர்களின் மூவர் பெயரில் விளையாட்டு இல்லங்களை உருவாக்கினார். விளையாட்டுப் போட்டி, நிறுவியர் தினம், பரிசளிப்பு விழாக்களை 1940 இல் நடத்தினார்.

1878 இல் பாடசாலையின் கல்வியாக உருவாக்கப்பட்ட கைத்தொழில் பிரிவை – கல்வியுடன் இணைத்து அதை முக்கிய பாடமாக மாற்றினார். 1944 இல் பேப்பர் செய்யும் திணைக்களம், மரவேலை திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு, அதையும் கல்வியுடன் இணைத்தார். தொழிற் கல்வி மாணவர்களின், அறிவையும் வாழ்வையும் மேம்படுத்தியது.

ஒவ்வொரு வகுப்புக்கும் தோட்டங்களையும், பூந்தோட்டங்களையும் உருவாக்கி, அதற்கு பரிசுகளை வழங்கினார். பாடசாலைக்கு இடையில் தோட்டக் கல்வியில் யூனியன் முதலிடம் பெற்றது. பல்துறை சார்ந்த கல்வி, மாணவர்களின் எதிர்காலத்தையே அழகுபடுத்தியது.

1941 இல் எஸ்.எஸ்.சி முதன் முறையாக தேர்வை எழுதியதுடன், சிறந்த பெறுபேறுகளுக்கு வித்திட்டது. 1945 இல் பல்கலைக்கழகம் செல்வதற்கான எச்.எஸ்.சி கல்வியை கற்பிக்கும் அனுமதியை, கல்வித் திணைக்களம் யூனியன் கல்லூரிக்கு கொடுத்தது. 1947 இல் முதற்தர பாடசாலையாக உயர்த்தப்பட்டது.

1945 இல் ஐ.பி.துரைரத்தினம் யூனியனில் வெளிவந்த "வுhந ஆழசniபெ ளுவயச" த மோர்னிங் ஸ்ரார் என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு, ஆசிரியரானார். இக்காலத்தில் பழைய மாணவர் ஒருவரின் உதவியுடன், விளையாட்டு மைதானத்தை விலை கொடுத்து வாங்கினார். சிங்கப்பூர் வரை சென்று நிதி சேகரித்து, கட்டிடங்களை அமைத்தார். 1948 இல் எம்.ஏ படிப்புக்காக அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகம் சென்றார். 1964 இல் ஓய்வு பெற்றார். 1964 ஆண்டு ஓய்வு பெற்ற பின், 1966 இல் சமாதான நீதவானாகினார்.

இவரின் கல்லூரிப் பணி சார்ந்து அவரின் பெயரில் துரைரத்தினம் என்ற நான்காவது விளையாட்டு இல்லம் உருவாக்கப்பட்டது. இப்படி கல்லூரி சார்ந்த சமூகப் பணிக்கு வித்திட்ட இளைஞர் காங்கிரஸ்சின் பொதுக் கொள்கைக்கு முரணாகவே, துரைரத்தினம் அவர்களின் சிந்தனை அதிபராக இருந்த காலத்தில் வளர்ச்சியுற்றது.

ஐ.பி.துரைரத்தினம் 1927 இல் இளைஞர் காங்கிரஸ்சின் செயலாளராக இருந்த காலத்தில் மகாத்மா காந்தியை இலங்கைக்கு வரவழைத்தது முதல், யாழ் முற்றவெளியில் இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாழ்த்துரையை வழங்கியவர். தீண்டாமைக்கு எதிரான கொள்கையைக் கொண்ட இளைஞர் காங்கிரஸ் கொள்கை கொண்டிருந்தவர். இதற்கு முரணாக 1947 ஒடுக்கும் சாதிய சிந்தனையிலான தமிழ் காங்கிரஸ்சில் இணைந்து கொண்டதன் மூலம், சமூகம் குறித்த தனது முந்தைய முற்போக்கு நிலைப்பாட்டை கைவிட்டார். தமிழ் காங்கிரஸ்சின் கொள்கையை ஜி.ஜி.பொன்னம்பலம் முன்வைத்த போது, அதை முன்மொழிந்தவர். பாடசாலைகளை தேசியமயமாக்கிய போது அதை எதிர்த்தவர்.

தனியார் கல்விமுறை, கட்டணக் கல்வி, அதிகார முறைமை .. போன்றவற்றை கொள்கையாக கொண்டிருந்ததன் மூலம், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களின் கல்வியை நேரடியாகவோ - மறைமுகமாகவோ புறந்தள்ளினார்.

இளைஞர் காங்கிரஸில் இணைந்து பணியாற்றிய இடதுசாரிகள் 1940 களில் உருவான இடதுசாரிய கட்சிகளுடன் தங்களை இணைத்துக் கொள்ள, வலதுசாரிகள் பிற்போக்கான தமிழ் வரலாற்றுக்குள் பயணித்தனர். இதன் மூலம் கல்விக்கூடங்களின் முன்னோடியான முற்போக்காக முன்னிறுத்திய மனித வரலாற்றை, மனிதகுலத்திற்கு விட்டுச் செல்ல தவறிவிட்டனர்.

ஐ.பி.துரைரத்தினம் இளைஞராக இருந்தபோது கொண்டிருந்த முற்போக்கான சமூக நோக்கங்களை தன் வாழ்க்கை நடைமுறையில் இருந்து கைவிட்டது என்பது என்னவாகியது எனில், மற்றப் பாடசாலைகள் போன்றே யூனியன் கல்லூரியும் முடங்கியது. சமூகம் குறித்த அதிபர்களின் முற்போக்குக் கொள்கைகள் பாடசாலையை வழிநடத்தும் போதுதான், மற்றப் பாடசாலைகளை விட முன்னேறி அனைவருக்கும் வழிகாட்டியாக மாறும்.

பி.இரயாகரன்
17.11.2019