05.04.2021 ஈழநாடு பத்திரிகையில், கச்சத்தீவில் கிறிஸ்தவர்களால் சிவன் ஆலயமொன்று அழிக்கப்பட்டதாகவும், அதற்கு குடமுழுக்கு செய்யப்போவதாகவும் மறவன்புலவு சச்சிதானந்தம் அறிவிப்பு செய்துள்ளார். அதற்கு பரவலான ஆதரவு கிடைத்து வருகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள சில சைவ மதநிறுவனங்கள் மற்றும் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் என அடையாளப்படுத்துவோரினாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மறவன்புலவு சச்சிதானந்தத்தின் திட்டத்துக்கு ஆதரவு வழங்கப்படுகிறது.

மறவன்புலவு சச்சிதானந்தமும் மீனவர் வாழ்வை- வரலாற்றை முடக்கும் இந்திய அடிவருடித்தனமும்!

இதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் மீன்பிடிக்குப் பொறுப்பான அமைச்சர் அனந்தி சசிதரன் மட்டுமே தற்போது பகிரங்கமாக மறவன்புலவு சச்சிதானந்துக்கு ஆதரவு வழங்கியுள்ள அரசியல்வாதியாவர். அதேவேளை, நெடுந்தீவைப் பின்னடியாகக் கொண்டவரெனக் கூறிக்கொள்ளும் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் பின்னணியிலிருந்து இயங்குவதாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாண இந்திய உப தூதுவர் அலுவலகமும் தம்மாலான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளதகாவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கொடுமைகள் எல்லாம் தமிழ் மக்களின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது.

«பனையால் விழுந்தவனை மாடேறி மிதிச்சுதாம்» என்ற நிலையில் பாரிய யுத்தப் பாதிப்புகளுடன் வாழும் வடக்கு மீனவரின் நிலை மேலும் மேலும் பாதிப்படையும் வேலைகளை தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளுவோரே செய்து வருகின்றனர். தமிழ் தேசிய இன வரலாற்றில், எந்தக் காலத்திலும் இலங்கையின் தேசியப் பிரச்சனையை தலைமை தாங்குவதாக கூறிக்கொண்ட எவரும் மீனவ மக்களின் பிரச்சனையை கவனத்தில் கொண்டவர்கள் அல்லர். இதற்கான இரு முக்கிய காரணிகளாக இன்றும் இருந்து வருபவை.

1. இந்தியாவை பகைத்துக் கொள்ளக் கூடாது
2.“எமது தொப்புள்கொடி உறவுகளை” பகைத்துக் கொள்வது தமிழ் தேசிய விடுதலைக்கான ஆதரவை தமிழ்நாட்டில் இல்லாதொழித்துவிடும் என்பதாகும்.

கச்சைதீவு சில அடிப்படை தகவல்கள்.

கச்சைதீவானது நெடுந்தீவுக்கு தென்மேற்குப் பக்கத்தில் 10.5 மைல் தூரத்தில் உள்ளது. அதேவேளை, இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவில் உள்ளது. 285.2 ஏக்கர் பரப்பளவையும், 300 அடி அகலம் மற்றும் ஒரு மைல் நீளத்தையும் கொண்டது. Corel reve எனப்படும் கடலடித்தள உயிரியான பவளப்பாறை அல்லது முருகை வளர்ச்சியடைந்து, ஒரு கட்டத்தில் இறந்து விடுகிறது. காலப்போக்கில் சுண்ணாம்புத்தன்மையைக் கொண்ட முருகை இறுகிப் போய் முருகைக் கல்லாக மாற்றமடையும். கடல் அரிப்பு, அலைகளின் அசைவுகள் மற்றும் பருவகால மாற்றங்களால் கடற்சிப்பிகள், இறந்த உயிரின எச்சங்கள் மற்றும் மணல் அக் கல்லைச் சுற்றிவர திரட்சியடையும். இதன் விளைவாக அது கற்பிட்டியாக வளர்ச்சியடையும். அக் கற்பிட்டியின் மேற்பரப்பு மண்ணால் பெரும்பாலும் கடல் மணலால் மூடப்பட்டு தாவரங்கள், புற்கள் முளைக்க தொடங்கியவுடன் அது தீவாக உருவெடுக்கிறது. இலங்கையில் வடக்கிலுள்ள அனைத்து தீவுகளும் இவ்வாறு உருவானவையே. கச்சத்தீவு இத் தீவுகளில் இளமையானது. சில ஆயிரம் வருடங்களே அதன் வயது. அங்கு தாவரங்கள், புல் முளைக்க தொடங்கியது மிக அண்மையில் தான். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஊர்காவற்துறையை (இன்றுள்ள கண்ணகை அம்மன் ஆலய பிரதேசம்) தலைமையகமாக கொண்டிருந்த ஆங்கிலேய கடற்படை, கச்சதீவை சுடு பயிற்சித் தளமாக பயன்படுத்தியது. இன்று இலங்கைக் கடற்படை தற்காலிக தளமாக பயன்படுத்துகிறது.

கச்சதீவு மீதான இலங்கை-இந்திய உரிமைகோரல்

இன்று நடைமுறையிலுள்ள நாடுகளுக்கிடையிலான கடல்சார் எல்லைகள் பற்றிய சர்வதேச சட்டம் 1973 ஆம் ஆண்டு, நியூயோர்க்கில் நடைபெற்ற சர்வதேச ஒப்பந்தத்தை அடிப்படையாக் கொண்டது. இவ் ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் 1974-1976 ஆம் ஆண்டுகளில் கடல் எல்லைசார் ஒப்பந்தங்கள் பல கைச்சாத்திடப்பட்டன. இந்த வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் இந்தச் சிறு தீவு பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று, 1974, ஆனி மாதம் 28 ஆம் திகதி இரு அரசுகளும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இருநாடுகளுக்குமிடையிலான புவியியல்/கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டது. கச்சைதீவு சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் இலங்கைக்கு சொந்தமாகியது. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் இந்தச் சிறு தீவைப்பற்றி கருத்துக் கூறிய இந்திரா காந்தி,( இது ) "ஒரு தீவு கூட இல்லை. வெறும் பாறை. அதற்கு எந்த வியூக முக்கியத்துவமும் கிடையாது.” என்றார்.

இதேவேளை, 1921 ஆம் ஆண்டு அன்றிருந்த ஆங்கிலேயே ஆட்சியினர், கச்சதீவை இலங்கையின் ஆளுமைக்கு உட்பட்டதாகவே வரையறுத்தனர். அதேபோல, இந்தியாவுடனான பேச்சுவார்த்தையொன்றில் இலங்கையின் சர்வதேச சட்ட ஆலோசகரான Moragodage Christopher Walter Pinto, இலங்கைக்கு வரலாற்று ரீதியாக 1665 ஆம் ஆண்டிலிருந்தே இருந்துவரும் உரிமையை நிரூபிக்க முடியுமென வாதிட்டார்.

இன்றைய முரண்பாட்டின் பின்னணி

இலங்கையில் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாக்குநீரிணையின் பிரதேசத்தில் உருவாகும் மீனினங்கள் மற்றும் கடல்வாழ் வாழ் உயிரிகளிலேயே தங்கியுள்ளது. இப்பகுதியில் உருவாகும்/பிறப்பாகும் கடல்சார் உயிரினங்களின் வாழ்வியல் சுழற்சியே வடபகுதி மீனவர்களின் கரையோர மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடியின் ஆதாரமாகவுள்ளது. கடல்சார் உயிரினங்கள் பிறப்பாகும் கடற்படுகையின் பெரும்பகுதி பாக்குநீரிணையில் அமைந்திருக்கும் கச்சைதீவை அண்டிய பகுதியிலேயே காணப்படுகிறது. பரம்பரை பரம்பரையாக இக் கடற்பரப்பில் கடற்தொழிலில் இலங்கை தமிழ் மக்கள் ஈடுபட்டு வந்தனர். அத்துடன், ஊர்காவற்றுறை முக்கிய துறைமுகமாக விளங்கிய காலத்தில் இக் கடற்பரப்பினூடாக இந்தியாவின் கிழக்குக் கரையோர நகரங்கள் உட்பட்ட பர்மா போன்ற நாடுகளுக்கு பாய்க் கப்பல்களில் பயணித்து வணிகத்தில் ஈடுபட்டனர்.

வணிக நடவடிக்கைகள் ஆங்கிலேயர் காலத்துக்குப் பின்னால் வழக்கொழிந்து போனாலும் கூட மீன்பிடி தொடர்ந்தது. இலங்கையின் மீன்பிடி நடவடிக்கை 1956 ஆம் ஆண்டிற்குப் பின்னால் இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஐக்கியநாடுகள் சபையின் அனுசரணையுடன் கடல்தள மற்றும் உயிரின ஆய்வு இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு, அவ் ஆய்வுகளின் அடிப்படையில் கடற்தொழில் நவீனமயப்படுத்தப்பட்டது. 1970 – 1983 வரை இலங்கையில் வடகரை மீனவர்கள் நவீன முறையில், உபகரணங்கள் மற்றும் இயந்திரமயப்படுத்தப்ட்ட படகுகளை உபயோகித்து இப்பிரதேசத்தில் மீன் பிடித்தனர். 70-களில் இந்தியாவின் தென்கரை மீன்பிடியில் பெரிய அபிவிருத்தி ஒன்றும் செய்யப்படவில்லை. அவர்கள் நாட்டுப்படகுகள் என்ற சிறு படகுகள் மூலம் 5 கடல் மைல்களுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மீன்பிடித்தனர். அப்பிரதேசம், இந்தியா தனது மீன்பிடியை இயந்திரமயப்படுத்திய 70 களின் நடுப்பகுதியில் கட்டற்ற மீன்பிடி காரணமாக வெகுவிரைவிலேயே "கருங்கடலாக" மாறியது. இக் காலத்தில் 80களின் நடுப்பகுதியில் இந்தியர்கள் ரோலர்களை உபயோகித்து கச்சத்தீவை சுற்றிய பிரதேசத்தில் மீன்பிடிக்கத் தொடங்கினர். இலங்கை மீனவர்கள் 1983 இனக் கலவரத்தின் பின்னான காலத்தில் கடலில் இறங்கவோ அல்லது தொழில் செய்யவோ முடியாத நிலைக்கு இலங்கையின் அரச படைகளினால் தடுக்கப்பட்டனர். தென்னிந்தியர்கள் தமது மீன்பிடி உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை 90-களின் ஆரம்பத்தில் அதிகரித்தனர். கச்சைதீவு பிரதேசத்தில் பிடிக்கப்படும் இறால் இனங்கள் மீதான சர்வதேச சந்தையில் கேள்வி(Demand)அதிகரித்தது. கடற்தொழிலில் பெரும் மூலதனம் முதலீடு செய்யப்பட்டது. இன்று ஆயிரக்கணக்கான இந்திய அதிதிறன் கொண்ட ரோலர்கள்/இழுவைப்படகுகள் இலங்கையில் வடகடலில் தொழில் செய்கின்றன. சரியான முறையில் கூறுவதானால், நமது வடகடலை சூறையாடுகின்றன!. 2009 வரை மீன்பிடிக்கும் ஏகபோக உரிமையை அனுபவித்து வந்த இந்தியர்கள் இன்று அக் கடற்பகுதிக்கும், கச்சதீவுக்கும் உரிமை கோருகின்றனர். சர்வதேச சட்டங்கள், இந்திய -இலங்கை ஒப்பந்தங்களை மீறி இலங்கையில் வடகடலின் வளங்கள் கொள்ளையிடப்படுகிறது.

1973 இல் எந்தவித பிரயோசனமும் அற்றதென இந்தியர்களால் வரையறுக்கப்பட்ட கச்சைதீவு, இன்று அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அதன் கடல்வளம் காரணமாக தேவைப்படுகிறது. இதன் பின்னணியிலேயே கச்சைதீவு பிரச்சனையில் மறவன்புலவு சச்சிதானந்தம், ஜெயபாலன், காசி ஆனந்தன், நாடுகடந்த தமிழீழ அரசு, மற்றும் பல தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்கு சார்பான நிலையெடுத்து செயற்படுகின்றனர். இவர்களின் கருத்து என்னவென்றால் இந்தியாவின் கச்சைதீவு மற்றும் இலங்கை மீதான அரசியல் -பாதுகாப்பு நெருக்கம் தமிழ் மக்களுக்கு விடிவைத் தேடித்தரும் என்பதாகும்.

கச்சத்தீவும் மதங்களும்

மறவன்புலவு சச்சிதானந்தம் பங்குனி 05, 2021 ஈழநாடு இதழில், கச்சத்தீவில் கச்சேச்சரநாதர் கோவில் இருந்ததாகவும். பத்தாயிரம் வருடங்களாக இருந்து வந்த அக் கோவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு "போர்த்துக்கீசர்களாலும் அவர்களால் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப்பட்டவர்களினாலும்" அழிக்கப்பட்டதாகவும் கூறுகிறார். இதன் அடிப்படையில், தான் "நெடுந்தீவு செல்கிறேன். அருள்மிகு கச்சேச்சரநாதர் திருப்பணிச் சபை அமைக்க உள்ளோம். அரசில் பதிவு கேட்போம். வங்கிக் கணக்குத் தொடங்கி நிதி கேட்போம். இந்திய அரசிடம் நிதி மற்றும் சரக்கேற்றும் தோணி கேட்போம். இலங்கை அரசிடமும் நிதி கேட்போம்" என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மறவன்புலவு சச்சிதானந்தம் சொல்லுவது போல கச்சத்தீவில் சிவன் ஆலயமோ அல்லது கயற்கண்ணி ஆலயமோ இருந்ததாக எந்தவித வரலாறும் கிடையாது. அதேபோலவே, அந்த ஆலயம் போர்த்துக்கீசர்களாலும் “அவர்களால் கத்தோலிக்க மதத்துக்கு மாற்றப்பட்டவர்களினாலும் அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடையாது.

1973 - இலிருந்து இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான எல்லை வகுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோது, கச்சைதீவிற்கும் தமிழகத்துக்குமான கலாச்சார, பொருளாதார, குடியியல் வரலாறு பற்றி இந்திய வெளியுறவுத் துறையினரின் ஏற்பாட்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில் கச்சதீவு இலங்கைக்கு உரிமையானது என ஏற்றுகொண்டு இந்திய அரசு இலங்கையுடன் ஒப்பந்தம் செய்யவிருப்பதை அறிந்த அன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாட்டின் வரலாற்று நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்தார். அவராலும் தென்னிந்தியர்களின் மரபு சார்ந்த எந்தவித சுவடுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மறவன்புலவு சச்சிதானந்தம் கூறுவது போல கச்சத்தீவில் சிவன் ஆலயமோ அல்லது வேறெந்த சைவ மதம் சார்ந்த கோவில் இருந்திருக்குமேயானால், கருணாநிதியோ அல்லது இந்திராகாந்தியோ இலங்கைக்கு கச்சதீவை "தாரைவார்த்து" கொடுக்க முன்வந்திருக்க மாட்டார்கள். இன்று கடற்கரை சார்ந்து வளரும் புல், பூண்டு, தாவரங்கள் வளர்ந்து கொஞ்சம் பசுமையாகத் தெரியும் கச்சைதீவு, பல் நெடுங்காலமாக வெறும் கற்கள் நிறைந்த இறங்க முடியாத "கற்பிட்டி" யாகவே இருந்து வந்துள்ளது. அது எந்தவித பெரும் திருவிழாக்களோ, போர்களோ, மதச் சண்டைகளோ நிகழ்ந்த பூமியுமல்ல.

கத்தோலிக்க மதமும் கச்சதீவும்

இலங்கையின் வட பகுதியில் கத்தோலிக்க மதம் இரண்டு வழிகளினூடாக உள் நுழைந்தது. எல்லோரும் அறிந்துள்ளது போல போர்த்துக்கீசர்கள் 1505 ஆம் வருடம் இலங்கையை ஆக்கிரமித்த பின், 1560 யாழ்ப்பாண இராட்ச்சியத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அவர்களின் மதப் பிரச்சாரம் காரணமாகவும், கல்வி மற்றும் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் சில ஆயிரம் -பெரும்பாலும் தம்மை வெள்ளாளர் என அழைத்துக்கொள்ளும் யாழ்ப்பாணக் குடிகள் கத்தோலிக்கத்தை தழுவினார்கள். ஆனால், இதற்கு 450 வருடங்களுக்கு முன்பே, கிறிஸ்துவை பின்பற்றினோர் இலங்கையின் வடக்கில் குடியேறியுள்ளனர்.

கிறிஸ்துவுக்குப் பின் 52 ஆம் வருடம், கிறிஸ்த்துவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையர்/தோமாஸ், முசிறி என்ற இடத்தில் –இன்று கேரளா மாநிலத்தின் தென்பகுதியில் வந்திறங்கினார். அவரின் போதனையின் பயனாக சில ஆயிரம் மக்கள் கிறீஸ்துவை நம்புவோராகினர். இவர்களில் பெரும்பான்மையானோர் மீனவ சமூகத்தினராக விளங்கினர். அக் காலத்தில் கத்தோலிக்க மதம் இன்றுள்ளது போல உலகளவில் நிறுவனமயப்பட்டு இருக்கவில்லை. கி.பி. 1050 இலேயே றோமன் கத்தோலிக்க திருச்சபை நிறுவனமயப்பட்டது. ஆதலினால், இவர்களை ஆதி கிறீஸ்த்தவர்கள் அல்லது தோமஸ் கிறீஸ்த்தவர்கள் என அழைப்பார்கள். புனித தோமையர் இன்றுள்ள சென்னையில்-மைலாப்பூரில் கி .பி 72 இல் கொல்லப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து கிறிஸ்துவை நம்பியோரில் சில குடும்பங்கள் இலங்கையைத் தேடி படகுகளில் கிளம்பினர்.

ஒரு பகுதியினர் மன்னார் பிரதேசத்தை சென்றடைந்தனர். சிலர் முதலில் கச்சதீவை வந்தடைத்தனர். அங்கிருந்து பின்னர் அவர்கள் நெடுந்தீவு, மற்றும் எழுவைதீவில் குடியேறினர். இவர்களின் வம்சாவழியே இன்றைய நெடுந்தீவு, எழுவைதீவு, மாதகல், மண்டைதீவு, பாசையூர், குருநகர் பிரதேச கத்தோலிக்கர்கள் ஆவர். இவ்வாறு குடியேறிய தோமஸ் கிறீஸ்த்தவர்கள், அக் காலத்தில் நெடுந்தீவு மற்றும் எழுவைதீவு பகுதியிலிருந்து கச்சைதீவு கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர். அப்போது, தமக்கு வேதம் போதித்து வேதசாட்சியான புனித. தோமையார் நினைவாக கச்சத்தீவில் குருசு ஒன்றை நட்டு செபம் செய்தனர். பல ஆண்டு காலம் ஊர்காவற்றுறை கத்தோலிக்க பங்குக்கு உட்பட்டதாக இருந்து வந்த கச்சைதீவில், தொம்மையார்/தோமஸ் நினைவுக் குருசு நட்ட இடத்தில் இந்திய மீன்பிடி தொழிலாளர்களால் புனித அந்தோனியாரின் சொரூபம் வைக்கப்பட்டது. இன்று அது சிறு கோவிலாக உருவெடுத்து, நெடுந்தீவு கத்தோலிக்க பங்குக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது. இன்றும் கூட எழுவைதீவு, மாதகல் பிரதேசத்தின் கத்தோலிக்கர்களின் பாதுகாவல் புனிதராக தோமஸ் எனப்படும் தோமையாரே விளங்குகிறார்.

மேற்கூறிய இந்த வரலாறு நிரூபிக்க கூடியது. பதியப்பட்டுள்ளது. அதற்காக, கத்தோலிக்கர்களோ அல்லது வேறு எந்த திருச்சபையோ கச்சதீவுக்கு பாரம்பரிய உரிமை கோர முடியாது. ஆனால், மறவன்புலவு சச்சிதானந்தம் கூறும் வரலாற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. மேற்கூறியது போல 1973 தொடக்கம் ஏன் இன்றுவரை, கச்சத்தீவு சார்ந்த இந்திய கலாச்சார-பொருளாதார தொடர்பை நிரூபிக்க பலர் முயன்றும் முடியாது போனது? ஏன், கருணாநிதி காலத்தில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தும் கூட ஒரு "பழைய” துரும்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மறவன்புலவு சச்சிதானந்ததின் அரசியல் திட்டம்

மறவன்புலவு சச்சிதானந்தமும், முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தியும் கச்சைதீவில் கோவில் கட்டுவதோ அல்லது யாருக்காவது குடமுழுக்கு செய்வதோ எதிர்க்கப்பட வேண்டியதல்ல. ஏன், இன்று கச்சதீவில் தங்கியிருக்கும் இலங்கை கடற்படையினர் அவர்களின் மத நடவடிக்கையை மேற்கொள்ள புத்தர் சிலை நிறுவினாலும் பிரச்சனை இல்லை. ஆனால், கச்சதீவுக்கு பத்தாயிரம் வருட "இந்துமத" வரலாற்று பின்னணியை பொய்யாகக் கட்டமைத்து மத வழிபாட்டு தலத்தை உருவாக்குவதே எதிர்க்கப்படல் வேண்டும்.

இந்தியாவின் கைத்தடியாக இலங்கையில் இயங்கும் மறவன்புலவு சச்சிதானந்தம் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லாவிடத்து, அவர் ஏன் இந்த பொய்களை அரங்கேற்றுகிறார்??? இப்பதிவின் ஆரம்பத்தில் கூறியது போல, இலங்கையின் வடகடல் தொழிலாளர்கள், பாரிய இந்திய கடல் கொள்ளையினால் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக இன்றுள்ள இலங்கை அரசு இந்திய கடற் கொள்ளைக்கார படகுகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தங்களின்படி இந்திய படகுகள் இலங்கையின் வடகடலுக்குள் நுழைவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையை, தடுத்து நிறுத்தி சுமுகமான சூழலை ஏற்படுத்த இந்திய அரசுகளால் முடியாதுள்ளது.

இந்த பின்னணியில், கச்சத்தீவுக்கு ஒரு பொய்யான பத்தாயிரம் வருட வரலாற்று தொன்மையை பொய்யாக கட்டமைப்பதன் மூலம், இந்தியர்கள் மறுபடியும் கச்சத்தீவு மீதான கலாச்சார -பொருளாதார மரபுரிமையை முன்னிறுத்த முடியும். ஒப்பந்தங்களை மறுபேச்சுவார்த்தை ஊடாக மாற்றியமைக்க ஏதுவாக இருக்கும். இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லைகளை மாற்ற இந்தியா முயலாவிட்டாலும், 1976 இற்கு முன்பிருந்ததுபோல கச்சைதீவு பிரதேசத்தில் மீன்பிடிக்கும் உரிமையை ஒப்பந்த அடிப்படையில் பெற்று கொள்ள முடியும்.

அவ்வாறு நடக்குமிடத்து அன்றாடங்காச்சிகளாக இன்று வாழ்வு நடத்தும் இலங்கையின் வடகடல் மீனவ சமுதாயம் முற்றாக வாழ்விழந்து போகும் நிலைக்கு தள்ளப்படும். மறவன்புலவு சச்சிதானந்தத்தின் செயலால் மீனவர் சமுதாயம் மட்டுமல்ல பாதிக்கப்படப் போவது, முதலில் சைவர்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் தாயும் பிள்ளையுமாக வாழும் நெடுந்தீவில் மதக்கலவரம் «சாதிக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதேவேளை, நீண்டகாலப் போக்கில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய கடல் வளம் மென்மேலும் பறிபோகும் நிலை ஏற்படும். மறவன்புலவு சச்சிதானந்ததின் இந்த அரசியல் திட்டம் முறியடிக்கப்படல் வேண்டும். அவரை ஏதோ «பெறுமதியில்லாத» வாய்ப்பேச்சாளன் என்று கணக்கிலெடுக்காமல் விடுவதனால் பாரிய பாதிப்பு நீண்டகாலப் போக்கில் நம் சமூகத்துக்கு ஏற்படும்! இலங்கையின் தமிழ் பேசும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கும் அனைவரும் இந்திய நலன் சார்ந்து இயங்கும் பொய்யான தமிழ் தேசிய நரிகளின் திட்டங்களை நிறுத்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

https://raseriart.wordpress.com/2021/03/07/2021/03/07/தமிழ்மக்களின்-விடுதலையை/