இந்த யாழ் பல்கலைக்கழகத்தை தமக்கு வேண்டாம் என்று, தமிழினவாதிகள் எதிர்த்தனர். சிவகுமாரன் போன்ற தனிநபர் பயங்கரவாதிகளே, பல்கலைக்கழகம் வருவதற்காக முன்னின்று உழைத்த கைலாசபதி, யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பதவி ஏற்கக் கூடாது என்று கூறி குண்டுகளை வீசினான். இப்படி இலங்கையின் போலி சுதந்தரத்தின் பின் உருவான முதல் இரு பல்கலைக்கழகங்களுக்கும், 1979 இல் பல்கலைக்கழக அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
தமிழ் சிந்தனைமுறை கற்பிப்பது போல், சிங்கள இனவாதம் மட்டும் இனவாத ஒடுக்குமுறை வரலாற்றுக்கு முன்னோடியாக இருந்ததில்லை. அதாவது இனவாதம் என்பது எண்ணிக்கையில் பெரும்பான்மையான இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. சிங்கள இனத்தின் இடத்தில் தமிழர்கள் இருந்திருந்தால், ஒப்பீட்டளவில் மிக மோசமான இனவாதிகளாகவே இருந்திருப்பார்கள்.
இலங்கை வரலாற்றில் கல்வியை இனரீதியாக வரையறுக்கக் கோரியவர்கள் தமிழினவாதிகளே. கல்வியை மதரீதியாக கோரியவர்களும் தமிழர்களே. தங்கள் கடந்தகால வரலாறுகளைக் கூட தெரிந்து கொள்ளமுடியாத குருட்டு சமூகமாக வாழ்ந்தபடி, இனமத ஒடுக்குமுறைகள் பற்றிய தமிழினவாத கற்பனையையும் - புனைவுகளையும் முன்னிறுத்தி போராடுவது என்பது, இனவழிவுக்கான அரசியல் அடித்தளமாகும்.
தமிழினவாதிகள் 1956 யூன் 6 ம் திகதி இனரீதியான தமிழ் பல்கலைக்கழகத்தை அமைக்கக் கோரி, "நாவலர் கழகம்" என்ற இனரீதியான பல்கலைக்கழக அமைப்பை உருவாக்கினர். பின்னணியில் தமிரசுக்கட்சி இருந்தது. இந்த இனவாத பல்கலைக்கழக கோரிக்கைகளை அரசு நிராகரித்த போது, 1960-1962 இல் தாங்களே இனவாத தமிழ் பல்கலைக்கழகத்தை கட்டினர். இப்படி தமிழினவாதிகள் தமிழ் மக்களிடம் பணம் திரட்டிக் கட்டிய தமிழ் பல்கலைக்கழகம், தமிழர் வரலாற்றில் இருந்தும் காணாமல் போய் இருக்கின்றது. இதைக் கண்டுகொள்ளாத சமூகம், எப்படி தன்னை முன்னேறிய முன்னோடி சமூகமாக முன்னிறுத்த முடியும்.
அன்று தமிழினவாதிகள் இனரீதியான தமிழ் பல்கலைக்கழகத்தை கோரிய போது, இதற்கு எந்த முன்னுதாரணமாக இலங்கையில் எந்தப் பல்கலைக்கழகமும் இலங்கை அரசினால் சொந்தமான உருவாக்கப்பட்டு இருக்கவில்லை. பிரிட்டிசாரினால் உருவாக்கப்பட்டிருந்த பேராதனை மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகம் போன்றன மட்டுமே அன்றிருந்தது. அதாவது இனரீதியான, மதரீதியான பல்கலைக்கழகம் என்று எதுவும் இலங்கையில் இருக்கவில்லை. இப்படி இருக்க கல்வியில் இனவாதத்தை கொண்டுவருமாறு அரசிடம், தமிழினவாதிகள் வலிந்து கோரினார். இனவாதம் மூலம் தமிழ் மக்களை உசுப்பேற்றி, உணர்ச்சியூட்டிப் பிழைக்கும் தங்கள் சுயநல அரசியலுக்காகவே, அன்று இனரீதியான தமிழ் பல்கலைக்கழகத்தை கோரினர். இந்த வரலாறு குறித்து, ஆவணங்கள் மூலம் விரிவாக தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.
1956 இல் தமிழினவாதிகள் தமிழ் பல்கலைக்கழத்தை கோரியபோது, இலங்கையில் ஜந்து பல்கலைக்கழகங்கள் இருந்தன. இவை அனைத்தும் பிரிட்டிஸ் காலனிய காலத்தில் உருவாக்கப்பட்டவை. இந்தப் பல்கலைக்கழகத்தில் இலங்கையில் வாழ்ந்த எல்லா இன-மதங்களையும் சேர்ந்தவர்களே கல்வி கற்றனர். சுதந்திரத்தின் பின் இப் பல்கலைக்கழகம் இன-மத ரீதியான பாகுபாடின்றி இருந்ததுடன், அதில் கல்வி கற்றவர்களில் பெரும்பான்மையினர் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான இன-மத பிரிவுகளைச் சார்ந்தவர்களே. இதுதான் உண்மை வரலாறு.
இப்படி வரலாற்று உண்மைகள் இருக்க, எதற்காக இனரீதியான பல்கலைக்கழகத்தை கோரினர்? மக்களை இனரீதியாக திரட்டவே, இந்த இனவாதக் கோரிக்கையை முன்வைத்தனர். இதே போன்று 1959 இல் மதரீதியாக திரட்ட, இந்துப் பல்கலைக்கழகத்தை கோரினர். தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் பின்னணியில், முறையே தமிழ் - இந்து பல்கலைக்கழகங்கள் கோரப்பட்டது.
1956 இல் தமிழினவாதிகள் இனவாத தமிழ் பல்கலைக்கழகத்தை கோரத்தொடங்கி, 1965 இல் அரசை ஆதரிக்கும் தங்கள் அரசியல் பித்தலாட்டத்தை மூடிமறைக்க, மீண்டும் 1968 இல் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரி இனவாதத்தை ஆழமாக்கினார். தமிழ் காங்கிரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை அமைக்கக் கோரி மதவாதத்தை ஆழமாக்கினர்.
தமிழினவாதிகள் கல்வியில் இனவாதத்தை, மதவாதத்தை கோரிய நிகழ்வே, கல்வியில் இனரீதியாக தரப்படுத்தலைக் கொண்டு வருவதற்கு அரசியல்ரீதியான தூண்டுதலாக இருந்திருக்கின்றது என்பதே உண்மை. மாணவர்கள் இனரீதியான, மதரீதியான கல்வியை கோரியதில்லை. மாறாக தமிழ்-சிங்கள இனவாதிகளே கோரினர், அதை நடைமுறைப்படுத்தினர்.
பிரிட்டிஸ் காலனிய காலத்தின் பின் அதிகாரத்துக்கு கொண்டு வரப்பட்ட கறுப்பு காலனிய அடிமைகளின் ஆட்சியில், அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் மொராட்டுவ பல்கலைக்கழகம். 1972 இல் உருவானது. மொராட்டுவ பல்கலைக்கழகமானது தொழில்நுட்ப கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. இதுபோல், 1974 இல் இராமநாதன் கல்லூரியை, யாழ் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது.
இந்த யாழ் பல்கலைக்கழகத்தை தமக்கு வேண்டாம் என்று, தமிழினவாதிகள் எதிர்த்தனர். சிவகுமாரன் போன்ற தனிநபர் பயங்கரவாதிகளே, பல்கலைக்கழகம் வருவதற்காக முன்னின்று உழைத்த கைலாசபதி, யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக பதவி ஏற்கக் கூடாது என்று கூறி குண்டுகளை வீசினான். இப்படி இலங்கையின் போலி சுதந்தரத்தின் பின் உருவான முதல் இரு பல்கலைக்கழகங்களுக்கும், 1979 இல் பல்கலைக்கழக அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
தமிழ் பல்கலைக்கழகத்துக்கு பதில் யாழ் பல்கலைக்கழகம், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் உருவானது. இதே போன்ற வேறு இரு பல்கலைக்கழகங்கள் 1981 இல் மட்டக்களப்பிலும், 1995 இல் அம்பாறையிலும் உருவானது.
இப்படி எதார்த்தம் இருக்க, இலங்கையில் சிங்கள - பௌத்த பல்கலைக்கழங்கள் என எதுவும் இல்லாத போது (அப்படி இருந்தால் அது தவறு), தமிழினவாதிகள் தமிழ் பல்கலைக்கழகத்தைக் கோர, தமிழ் இந்துத்துவ வெள்ளாளியவாதிகள் இந்துப் பல்கலைக்கழகத்தை கோரினர்.
தமிழர்களின் பெயரிலும், இந்துக்களின் பெயரில் கோரியவர்கள் பின்னிருந்தது, இனவாதமும் - மதவாதமுமே. இதுதான் வரலாறு. இலங்கைப் பல்கலைக்கழகங்களை சார்ந்து விரிவுபடுத்தப்பட்ட கற்கைளும், புதிய இடங்களும் கூட இனரீதியானதோ, மத ரீதியானதோ அல்ல. மதம், மொழி, கலாச்சாரம் சார்ந்த கற்கைகள் (இது எல்லா மொழி மற்றும் மதத்துக்கும் உண்டு) .. என்பது, இனம்- மதம் சார்ந்தது கிடையாது. கல்விமுறை சார்ந்த கற்கைகளே.
இன்று இலங்கையில் 16 பல்கலைக்கழகம் இருக்கின்றது. இதன் கீழ் பல பிரிவுகளும், அவை பல பிரதேசங்களிலும் இருக்கின்றது. இதில் மூன்று தமிழ் மொழி பேசும் மக்கள் அதிகம் வாழ்கின்ற பிரதேசத்தில் காணப்படுகின்றது.
இப்படி உண்மைகள் இருக்க பல்கலைக்கழகங்களை இனவாத, மதவாத அடிப்படையில் கோரியது என்பது, கல்வியை இன-மதவாத அடிப்படையில் பல்கலைக்கழகங்களை சீரழிப்பதற்கே வழிகாட்டி இருக்கும். தமிழ் இனவாத வெள்ளாளியமும் - இந்துத்துவ தமிழ் இனவாத வெள்ளாளிய அரசியல்வாதிகளும், கல்வியில் இனவாத-மதவாத அரசியல் முன்னோடியாக தம்மை முன்னிறுத்தி இருப்பதே எம் முன்னான வரலாறாக இருக்கின்றது. இந்தச் செயலே, மாணவர்களை இனரீதியாக தரப்படுத்தியதற்கு நிகரானதே.
இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் இந்த இனவாத-மதவாத நிகழ்ச்சிநிரலுக்கு வெளியில், சுதந்திரமான இயக்கமாகவும் - அதேநேரம் அரசுக்கு எதிரான பாதையிலுமே பயணித்திருக்கின்றனர்.
இலங்கை அரசின் இனவாத-மதவாத அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு முரணாகவே, இலங்கை பல்கலைக்கழகங்கள் இருப்பதுடன், அரசுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கின்றனர். இதற்கு விதிவிலக்காக யாழ் பல்கலைக்கழகம் மட்டும், தமிழ் இனவாத நிகழ்ச்சிப் போக்கில் இருக்கின்றது. தமிழினவாதம் சார்ந்து இருப்பதன் மூலம், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அன்னியமாக இருந்தபடி, செயற்படுகின்றனர்.
தமிழினவாத தேர்தல் கட்சிகள் முன்வைக்கும் அரசியலின் பின்னும், அவர்கள் உருவாக்கிய தனிநபர் பயங்கரவாத வலதுசாரி அரசியல் வழியிலுமே, தன்னை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றது. விதிவிலக்காக இருந்தது 1986-1988 காலமேயாகும்.
தமிழினவாதத்துக்கு வெளியில் சுதந்திரமான இயக்கமாக யாழ் பல்கலைக்கழகம் இருந்ததில்லை. தமிழினவாதம் மறுத்த ஜனநாயகத்தை அடியொற்றி, அதற்குள் அடிமையாகவே இருந்து வந்துள்ளது, இருந்து வருகின்றது. இன்றும் இதுதான் நிலைமை. தமிழ் இனவாத தேர்தல் கட்சிகளின் அரசியல் எடுபிடியாக தொடர்ந்து இருக்கின்றது. இந்த இனவாதத்துக்கு வெளியில் சுதந்திரமாக சிந்திக்கவும், செயற்படவும் முடிவதில்லை
தமிழிவாதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் உருவான யாழ் பல்கலைக்கழத்தில் அண்ணளவாக இன்று 8000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில் அண்ணளவாக 1000 மாணவர்கள் சிங்கள மொழி பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள். இதைவிட முஸ்லிம், மலையக சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள், கணிசமாக உள்ளனர்.
இப்படி இருக்க யாழ் பல்கலைக்கழக மாணவ அமைப்பு தமிழினவாதச் சங்கமாக குறுகி செயற்படுவது என்பது, எதிர்காலத்தில் இனரீதியான சிங்கள மாணவர் சங்கம் உருவாவதற்கான அரசியல் விதையாக இருக்கின்றது. இனவாதமற்ற முறையில் பிற இன-மத மக்கள் மேலான அனைத்து இன-மத ஒடுக்குமுறையை சுதந்திரமாக பேசும் மாணவர் அமைப்பாக தன்னை உருவாக்காத பட்சத்தில், எதிர்காலத்தில் இன-மதவாதம் பேசும் சிங்கள மாணவ அமைப்பு உருவாவதற்கான சூழல் காணப்படுகின்றது. இதற்கு முழுப்பொறுப்பும் தமிழினவாதம் பேசும் மாணவ சங்கத்தினதும், இந்தச் சங்கத்தை ஆட்டிப்படைக்கும் இனவாத தமிழ் தேர்தல் கட்சிகளுமே முழுப் பொறுப்;பாக இருக்கமுடியும். இலங்கையின் இனவாத ஒடுக்குமுறையை, இனவாதமற்ற சுதந்திரமான சிந்தனை மூலம் பேசியாக வேண்டும். அது நிச்சயமாக இனவாதமாக இருக்கக் கூடாது.
பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திரமான சிந்தனையைக் கொண்டு, அனைத்து இனவாதத்துக்கும் எதிராக, அனைத்து மாணவர்களை ஒருங்கிணைக்கும் முன்னேறிய இடத்தில் இன்று இல்லை. அதற்கான சிந்தனையும் கிடையாது. இது 1956 இல் இனவாத, மதவாத பல்கலைக்கழகத்தைக் கோரி, 1970 களில் தரப்படுத்தலை கல்வியில் கொண்டு வருவதற்கு முன்னோடியாக இருந்த அதே இடத்தில், யாழ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பு இனவாதமாக குறுகி தன்னை முன்னிறுத்துகின்றது. இது இனரீதியான சிங்கள மாணவ அமைப்பு தோன்றுவதற்கானதும், புதிய இனரீதியான மாணவ முரண்பாடு உருவாவதற்கான தமிழினவாத விதையாக இன்று இருக்கின்றது. 1956 இல் இனவாதம் பல்கலைக்கழகத்தை கோரிய போது, அரசியல் ரீதியாக என்ன நடந்தது என்பதை, ஆதாரங்களுடன் பார்ப்போம்.
தொடரும்
மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01
தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02
1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03
பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04
ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05
1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய போராட்டம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 06
சர்வதேசியத்தின் கருவாக இருந்த என்.எல்.எப்.ரி. - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 07
தேசியமும் - சர்வதேசியமும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 08
இன-மத பல்கலைக்கழகத்தைக் கோரியவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 09
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode