1986 இல் யாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் அரசியல் உந்துசக்தியாக இருந்தது தேசியக்கூறல்ல, சர்வதேசியக் கூறே. அதாவது தேசியவாத இடதுசாரியக் கூறு, 1986 இல் யாழ் பல்கலைக்கழக போராட்டத்தின் புரட்சிகர அரசியலை தீர்மானிக்கவில்லை, மாறாக அதில் பங்குபற்றிய சர்வதேசிய கூறுதான், போராட்டத்தில் புரட்சிகர அரசியலைக் கொண்டு வந்தது. புலிகள் அன்று தங்களுக்கு எதிரான "தீயசக்திகளே" போராட்டத்தைத் தவறாக வழி நடத்துவதாக கூறியது, இந்த சர்வதேசியக் கூறைத்தான். இதனால் தான் புலிகள் 1987 இல் இரயாகரனைக் கடத்தி காணாமலாக்கினர். 1988 இல் விமலேஸ்வரனை சுட்டுக் கொன்றனர். இந்தப் போராட்டத்தில் இணைந்து போராடிய தில்லை, செல்வி, மனோகரன்.. முதல், பலரைக் கடத்திச் சென்று சித்திரவதைகள் செய்து பின்னர் கொன்றனர்.

வரலாற்று ரீதியாக சர்வதேசியத்தை அக்கால கட்டத்தில் முன்வைத்திருந்தது என்.எல்.எப்.ரியே. இந்த போராட்டத்தின் அரசியலுக்கு கருவாக இருந்தது என்.எல்.எப்.ரியே. மற்றவர்கள் தேசியத்தில் இருந்து சர்வதேசியத்தை அணுக முற்பட்டனர். இதனால் மீண்டும் மீண்டும் தேசியவாதத்துக்கு வெளியில் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி பயணிக்க முடியவில்லை. அன்றைய வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்து மின்னியவர்கள் பலர், தொடர்ந்து தேசியத்துக்குள் காணாமல் போனார்கள். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் தேசியவாதத்திற்கு பதில் சர்வதேசியக் கூறே, அதன் புரட்சிகர தன்மைக்கு வித்திட்டது. இந்த வகையில் என்.எல்.எப்.ரியின் வரலாற்றுப் பாத்திரமும், அதன் அரசியல் வரலாறும் தனித்துவமானவை, விதி விலக்கானவை. என்.எல்.எப்.ரியை அதன் அரசியல் தவறுகளுக்கு அப்பால், விளங்கிக் கொள்வதே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல். 


என்.எல்.எப்.ரிக்கு முந்தைய அமைப்பான தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் உள்சுற்று பத்திரிகையில், இதற்கான அரசியல் வேரைக் காணமுடியும்;. 1982 இல் தை மாதம் வெளியாகிய "பயணம்", இதற்கான அரசியல் அடித்தளத்தை முன்வைத்திருக்கின்றது. ஒரேயொரு "பயணம்" இதழ் வெளியாகியது. நிதியின்மையால் தொடர்ந்து பயணம் வெளிவராவிட்டலும், இரண்டாவது இதழ் அமைப்பு அல்லாதவர்களின் கட்டுரைகளை தாங்கி வந்ததால், முற்றாக எரிக்கப்பட்டது.

பயணம் ஒரேயொரு இதழ் வெளிவந்த போதும், அக்காலத்தில் அரசியல் ரீதியாக நிராகரிக்க வேண்டிய அரசியலை, சர்வதேசியக் கண்ணோட்டத்தில் தெளிவுபடுத்தி இருக்கின்றது. அந்த வகையில் "பயணம்" நான்கு கட்டுரைகளை கொண்டிருந்தது.

1.சுத்த இராணுவக் கண்ணோட்டத்தை நிராகரிப்போம்!

2.தனிநபர் பங்கரவாதம் பற்றி..

3.தமிழ் மக்களின் இன்றைய நிலையும் - எம் முன்னுள்ள பணியும்

4.பயணம் தொடருகின்ற பயணம்

இந்த பயணம் வெளிவந்த அதே மாதம் (02.01.1982) சுட்டுக்கொல்லப்பட்ட சுந்தரத்துக்கு இறுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டு இருக்கின்றது. அன்று சுந்தரம் கொல்லப்பட்ட போது, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி மட்டுமே, சுவரொட்டிகள் மூலம் அதை கண்டித்து அம்பலப்படுத்தி இருந்தது.

இந்த "பயணத்தில்" "பயணம் தொடருகின்ற பணயம்" ஆசிரியர் தலையங்கத்தில் "..மக்களின் அரசியல் எழுச்சியை விட சில தனிநபர்களின் வீரசாகசங்கள் அல்லது அர்ப்பணிப்புகள் விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமெனக் கருதும் தனிநபர் பயங்கரவாதம், அரசியலையும் மக்களையும் விட ஆயுதங்கள் தீர்க்கமான அம்சமெனக் கருத வைக்கும் சுத்த இராணுவவாதம் ஆகிய சில தவறான கண்ணோட்டமும் நடைமுறைகளுமே.." ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தை அழிக்கின்ற அரசியலாக இருப்பதையும், அதை நிராகரிக்கவும் கோருகின்றது. பரந்துபட்ட மக்கள் திரள் போராட்டத்தை மறுக்கின்ற தேசியவாத அரசியலையும், அது போராட்டத்தை தவறாக வழிநடத்துவதையும் எதிர்த்து, சர்வதேசிய கண்ணோட்டத்தில் அணிதிரள "பயணம்" கோருகின்றது.

மக்கள்திரள் அல்லாத, தனிநபர் பயங்கரவாதமும், ஆயுதமே தீர்க்கமானது என்ற இராணுவவாதமும், எப்படி 2009 முடிவுக்கு வரும் என்பதை 1982 இல் மிகத் தெளிவாக சர்வதேசியவாத கண்ணோட்டத்தில் "பயணம்" முன்வைத்திருக்கின்றது. இந்த அரசியல் வழிமுறையை நிராகரிக்க கோரியிருக்கின்றது. மாறாக மக்கள்திரள் போராட்டத்தை, சர்வதேசிய கண்ணோட்டத்தில் கோருகின்றது. இப்படி தான் என்.எல்.எப்.ரி. சர்வதேசிய உள்ளடக்கம், தேசியவாத தனிநபர் பயங்கரவாதம், ஆயுதமே தீர்க்கமானது என்ற இராணுவ வாதத்துக்கு பதில், மக்கள்திரள் அமைப்பை முன்வைத்து அமைப்பாக உருவாக்கியது.

இப்படி "பயணம்" அன்று சர்வதேசிய கண்ணோட்டத்தில் தேசியவாத அரசியலின் வங்குரோத்தை கோட்பாடு மற்றும் நடைமுறை ரீதியாக அணுகியதுடன், தன்னை அரசியல் ரீதியாக மற்றவர்களில் இருந்து மிகத் தெளிவாக வேறுபடுத்தியே அமைப்பாகியது.

இப்படி உருவான தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி 1983 இல் தனது பெயரை தேசியவாத அரசியல் இலக்குகளுடன் என்.எல்.எப்.ரியாக மாற்றியது. என்.எல்.எப்.ரியானது புறநிலை அரசியல் சூழலுக்குள் கைதியாகியதுடன், சர்வதேசியம் - தேசியவாதத்துக்கு இடையில் ஊசலாடியது. அரசியல்ரீதியான பல தவறுகளுக்கும், முடிவுகளுக்கும் இட்டுச் சென்றது. அதேநேரம் சர்வதேசியத்தின் பக்கமாக இருந்த பெரும்பான்மையிலான அதன் சிந்தனைமுறையே அரசியலாக இருந்து வந்துள்ளது. உண்மையில் சூழல் சார்ந்த வலதுசாரியத்தால் ஏற்பட்ட தொடர் அரசியல் நெருக்கடிகள், அக முரண்பாடுகள் கொண்ட அமைப்பாகவே இருந்து வந்துள்ளது.

இது தேசியம் சார்ந்து பிற இயக்கங்கள் போன்ற அரசியல் வழிகளில் பயணிக்கத் தூண்டி இருக்கின்றது. இதுவே அக முரண்பாடாக கூர்மையாகி, 1985 இல் இறுதியில் விசுவானந்ததேவனின் தலைமையில் தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி) உடைவாக மாறுகின்றது.

என்.எல்.எப்.ரி தேசியவாத வலதுசாரிய அலையில் இழுபடுவதில் இருந்து விடுபட்டு, மக்கள்திரள் அமைப்பை உருவாக்கும் நடைமுறையிலான செயல்திட்டத்தை, 1984 இறுதியில் - 1985 ஆரம்பத்தில் தொடங்கியது. இதன் பிரதானமான மையக் கோசமாக இருந்தது, கிராமங்களை நோக்கிச் செல்லுதலே. ஒடுக்கப்பட்ட மக்களை (குறிப்பாக சாதிரீதியாக) அணிதிரட்டும் அரசியல் நடைமுறை, அவர்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனைகளை அணுகுவதில் இருந்து தொடங்கியது. மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக சில கிராமங்கள் அணிதிரட்டப்பட்டது.

இந்த மக்கள்திரள் அரசியல் வழிமுறையை எதிர்த்தே விசுவானந்ததேவன், 1985 நடுப்பகுதியில், சர்வதேசியத்தை உயர்த்தி தேசியத்தைக் கைவிடுவதாக கூறினார். முன்கூட்டியே பிளவுக்கான நகர்வுகளைக் கையாண்ட போது, அதற்கான வழிமுறைகளை என்.எல்.எப்.ரி தடுத்தது. இதையடுத்து அமைப்பின் ஜனநாயக மத்தியத்துவத்தை பயன்படுத்தி பிளவுபடுத்த, திட்டமிட்ட ஒரு அரசியல் விவாதத்தை தொடங்கினார். இந்த அரசியல் வழிமுறை மூலம் 1985 இறுதியில் என்.எல்.எப்.ரியை உடைத்தார். இந்த உடைவு சர்வதேசியம் - தேசியம் என்ற, இரு நேர் எதிர் முனைகளில் இருந்து தொடங்கி பிளவுபட்டது.

இந்த முரண்பாட்டை மையப்படுத்தி சர்வதேசியத்தை முன்னிலைப்படுத்தியே என்.எல்.எப்.ரி போராடியது. இந்த பிளவு காலத்தில் என்.எல்.எப்.ரியை வழிநடத்திய கட்சியானது, நவம்பர் 1985 இல் "லெனினிஸ்ட்" என்ற கட்சிப் பத்திரிகையை வெளியிட்டது. ஒரேயொரு இதழ் தான் வெளிவந்தது. லெனினிஸ்ட் சர்வதேசிய கண்ணோட்டத்தில், தேசியத்தை அணுகக் கோருகின்றது. லெனினிஸ்ட் இதழ்

1.சனநாயக வாதிகளுக்கு ஒரு கடிதம்

2.பாட்டாளி வர்க்கத் தலைமை பற்றி...

3.இன்றைய அரசியல் நிலையும் பாட்டாளி வர்க்கக் கட்சியும்

4.இன்றைய அரசியல் போராட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி - சௌ எண் லாய்.

5.தேசிய விடுதலைப் போராட்டமும் - புதிய ஜனநாயகப் புரட்சியும்.

5.சன் - யட்சன் பல்கலைக்கழக மாணவர்களுடனான உரையாடல். - ல்டாலின்

7. இன்னும்

இக் கட்டுரைகள் மூலம் என்.எல்.எப்.ரிக்குள்ளான தேசியவாதத்தை மறுதளித்தது. அதேநேரம் சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்து, பிற ஜனநாயக சக்திகளின் அரசியல் வழி சர்வதேசியமாகவே இருக்க வேண்டும் என்று கூறி, வழிகாட்ட முனைகின்றது.

பிற இயக்கங்களில் இருந்து ஒதுங்கியவர்கள் சர்வதேசியவாத கண்ணோட்டத்தில் மக்கள்திரள் அமைப்புகளைக் கட்டுவதை விட, ஆயுதமேந்திய இடதுசாரிய இயக்கத்தையே கோரினர். வலதுசாரி தேசியம் முன்வைத்த தனிநபர் பயங்கரவாதம் மற்றும் ஆயுதமே தீர்க்கமானது என்பதை, இயக்கத்தில் இருந்து விலகியவர்கள் இடதுசாரிய கண்ணோட்டத்தில் கோரினர். இதனால் தான் என்.எல்.எப்.ரி. உடன் இணைந்து இயங்க முடியவில்லை.

புலிப் பாசிசம் நிலவிய அதன் வரலாறு முழுக்க, இந்தத் தேசியவாதமே தொடர்ந்தது. இந்த தேசியவாதத்தின் ஒரு கூறு, ஒடுக்கும் பேரினவாத தேசியவாதத்தை ஆதரிக்கும் புலியெதிர்ப்பு தேசியவாதமாகியது. சர்வதேசியவாத கண்ணோட்டத்தில் தேசியத்தை அணுகுவதை, அரசியல்ரீதியாக காண முடியாது.

இதற்கு முன்பே "புதிய பாதையை" வெளியிட்ட சுந்தரம் தொடங்கி கிட்டுவுக்கு குண்டெறிந்த தீப்பொறி வரை, வலதுசாரியத்துக்கு இடதுசாரிய முகப்பூச்சுக் கொண்ட தேசியத்தை முன்வைத்தனரே ஒழிய, சர்வதேசியத்தை அல்ல. சுற்றிச்சுற்றி தேசியவாதத்தில் இருந்து, இடதுசாரியம் பேசிய வலதுசாரியமாகவே நடைமுறை மூலம் வெளிப்பட்டது.

வரலாற்றுரீதியாக அதன் சர்வதேசியக் கண்ணோட்டம் சார்ந்து என்.எல்.எப்.ரி.யால், இந்த அரசியலுடன் என்றும் உடன்பட முடியவில்லை. அன்றைய நிலையில், ஆயுதமேந்திய இடதுசாரியம் என்பது சாத்தியமற்றது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வலதுசாரிய தேசியவாத அரசியலின் கீழ் இந்திய உதவியுடன் ஆயுதப் பயிற்சி பெற்று இருந்ததுடன், பாரிய ஆயுதங்களுடன் இலங்கை அரசுடன் ஒரு யுத்தம் நடத்திக் கொண்டிருந்த காலம்;. இதற்கு சமாந்தரமாக ஆயுதமேந்திய இடதுசாரியம் சாத்தியமற்றது. அது வலதுசாரியமாகவே மாறும். அடிப்படையில் அரசியல் ரீதியாக தவறானதும் கூட. ஆனால் இந்த இடதுசாரிய தேசியவாத ஆயுதமேந்திய அமைப்பையே, விசுவானந்ததேவன் பி.எல்.எப்.ரி மூலம் முன்வைத்தார். எதார்த்த நடைமுறைகளில் இருந்து அன்னியமாகி இந்தியாவில் வாழ்ந்த விசு, இந்தியாவில் இயக்கங்களில் இருந்து விலகிய பல தரப்பு நபர்களுடனான அரசியல்ரீதியான உறவுகளை வைத்து, ஆயுதமேந்திய தேசியவாத இடதுசாரிய இயக்கத்தை விரைவாகவே உருவாக்கி விடமுடியும் என்ற நம்பிக்கையே - பி.எல்.எப்.ரிக்கான அவரின் அரசியல் அடித்தளம். மண்ணில் வாழ்ந்த மக்கள் அல்ல.

அன்று என்.எல்.எப்.ரி அமைப்பின் பெரும்பான்மை சர்வதேசியக் கண்ணோட்டத்தை வலியுறுத்த, தேசியவாதத்தை முன்வைத்த விசுவானந்ததேவனின் தலைமையிலான சிறுபான்மையானது. அமைப்பின் ஜனநாயக மத்தியத்துவத்தை ஏற்க மறுத்து, வெளியேறினார். இதுவே தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (பி.எல்.எப்.ரி)யாகும்;. இந்த உடைவுக்கு முந்தைய விவாதம் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையிலான எல்லா ஜனநாயக மறுப்புகளையும் கொண்டிருந்ததுடன், பல நூறு பக்க விவாதங்களை கொண்ட உள்சுற்று உள்ளடக்கங்களையும் விவாதித்தது. உடைவைத் தவிர்க்க என்.எல்.எப்.ரியிடம் விசு கோரிய அதீத ஜனநாயகமானது, இரகசிய அமைப்பு முறையை தகர்த்தது. இதுவே பின்னாட்களில் புலிகள் என்.எல்.எப்.ரி யை இலகுவாக இனம் காணவும் - அழிக்கவும் உதவியது.

இந்த உடைவுக்கு முன் பலமுறை ஒன்றாக அமர்ந்து தோழமையுடன் நடத்தியது. இறுதியில் மத்தியகுழு கூட்ட விவாத முடிவில், வெளியேற்றம் பற்றி விசு அறிவித்தார். பிரிவின் பின் தோழமையுடன் நடத்திய ஒரு விவாதம் மூலம், தமக்கான நிதி மற்றும் ஆயுதங்களைக் கோரிய போது, என்.எல்.எப்.ரி அதை தோழமையுடன் கொடுத்தது. இதுவும் கூட சர்வதேசிய அரசியலால் சாத்தியமானது, வலதுசாரிய தேசியத்தில் அல்ல.

விசுவானந்ததேவன் தேசியத்தை முன்னிறுத்திய உடைவே பி.எல்.எப்.ரியாகும்;. பி.எல்.எப்.ரி 1982 இல் "பயணம்" பெயரை அடிப்படையாகக் கொண்டு, புதிய "பயணத்தை" வைகாசி 1986 இல் வெளியிட்டனர். அதில் தமது உடைவுக்கான காரணத்தை முன்வைக்கின்றனர். சர்வதேசியம் - தேசியம் அடிப்படையில் நடந்த பிளவை விளங்கிக் கொள்ளவும், விசுவின் சர்வதேசியமல்லாத தேசியவாதம் குறித்து சுயமாக புரிந்து கொள்ளவும் - அவர் முன்வைத்த கருத்தை சுயமாக விளங்கிக் கொள்ள, விரிவாக இங்கு இணைப்பு தரப்பட்டுள்ளது.

1986 இல் வெளியாகிய பயணம் ஒன்றில்

"பாட்டாளிவர்க்கத் தலைமையை எப்படி உருவாக்குவது என்பது (என்.எல்.எப்.ரியில்) தெளிவாக முன்வைக்கப்படவில்லை, பாட்டாளிவர்க்கத் தலைமையை உத்தரவாதம் செய்ததன் பின்னால் தான் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடமுடியும் என அமைப்பினால் (என்.எல்.எப்.ரியால்) முன்வைக்கப்பட்ட கருத்து தவறானதென நாம் கருதுகிறோம். போராட்டம் முனைப்படைந்து ஏனைய வர்க்கங்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகியிருந்து, பாட்டாளிவர்க்கத்தை அணிதிரட்டுவது என்பது சாத்தியமற்றது. ஏனைய வர்க்கங்களால் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் பல குறைபாடுகளை காணக் கூடியதாக இருக்கின்றது. இப்போராட்டம் தேசிய விடுதலைக்குரிய சகல பரிமாணங்களையும் கொண்டிருக்கவில்லை. இந்நிலையில் இயங்கியல் ரீதியாக பார்க்குமிடத்து முற்போக்குத் தேசியவாதத்தை வளர்த்தெடுக்காமல், தேசியவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்காமல், பாட்டாளிவர்க்கத் தலைமையை உத்தரவாதம் செய்ய முடியாது. தமிழீழ புதிய ஜனநாயகப் புரட்சியையும் நிறைவுசெய்ய முடியாது. எனவே இப்போராட்டத்தை தேசியவிடுதலைப் போராட்டமாக வளர்த்தெடுத்து புதிய ஜனநாயகப் புரட்சியாக முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே எமது இலக்குகளை அடைய முடியும். பாட்டாளி வர்க்கத் தலைமையை கொண்டு வருவதற்கு அடிப்படை மக்களின் பகுதிப் போராட்டங்களை முன்னெடுப்பதும், அதனை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உட்படுத்தியும் முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.

வெறுமனே அதீத பாட்டாளி வர்க்க கோஷங்களை வெளியிடுவதால் அல்ல, நாம் அறிக்கையிலும் எமது அரசியல் திட்டத்திலும் பல விடயங்களை தெளிவாக குறிப்பிட்டாலும் நடைமுறையில் அவற்றை சரியென உணர்த்தக் கூடிய வகையில் எமது நடைமுறைகளில் இருக்கவில்லை. தமிழீழ தேசிய விடுதலை முன்னணி பல்வேறு வர்க்க சக்திகளையும்உள்ளடக்கிய யுத்த தந்திர ரீதியான (புதிய ஜனநாயகப் புரட்சிக்கான) கீழிருந்து கட்டும் ஐக்கிய முன்னணி எனக் குறிப்பிட்டிருந்தாலும் நடைமுறையில் என்.எல்.எப்.ரி. ஒரு வர்க்க ஸ்தாபனமாக பார்த்த பார்வையே இருந்தது. இவ் ஐக்கிய முன்னணியானது ஏனைய விடுதலை ஸ்தாபனங்களுடன் ஐக்கியமும் போராட்டமும் எனும் கோட்பாட்டை பின்பற்றும் என முடிவு செய்திருந்தோம். ஆனால் இவ் அடிப்படையில் ஸ்தாபனத்தின் வேலைமுறை இருக்கவில்லை.

தமிழீழப் போராட்டத்தை தேசியவாத சக்திகள் முன்னெடுக்கும் போது இது தேசியவாதிகளின் போராட்டம் வெற்றியடையாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபடாது இருந்தோம். மாறாக இப்போராட்டத்தில் மனப்பூர்வமாக ஈடுபட்டு எமது பங்களிப்பை நல்குவதன் மூலமே நாம் சரியான வழியில் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்,

அத்துடன் சக இயக்கங்களின் தவறுகளை சினேகபூர்வமாக சுட்டிக் காட்டுவதன் மூலம்அவர்களையும் சரியான பாதையை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும். இதுவே ஐக்கியமும் போராட்டமும் என்ற கோட்பாட்டை பின்பற்றுவதாகும். எமது போராட்டம் ஆயுதமேந்திய போராட்டம் என நாம் கூறிக்கொண்டோம். அதற்கான ஒரு ராணுவ அமைப்பு அவசியம் எனவும் கூறிக்கொண்டோம். ஆனால் அதற்கான நடைமுறை வேலை எதையும் முனைப்பாக கைக்கொள்ளவில்லை. எமது நாட்டுச் சூழலில் படையை எப்படிக் கட்டுவது அதற்குரிய ஸ்தாபன அமைப்பு என்ன என்பது பற்றிய தெளிவுகள் அமைப்புக்கு இருக்கவில்லை. படை கட்டலின் அவசியம் பற்றி வலியுறுத்தியவர்கள் சுத்த ராணுவ வாதிகளாக காட்டப்பட்டனர்.

இன்று போராட்டத்தை முன்னெடுக்க ஒரு மைய ராணுவக் குழுவும் தலைமை ராணுவ அமைப்புகளும் கட்டப்படல் அவசியமானது. இன ஒடுக்குமுறை உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் இந்த நேரத்தில், எதிரியிடமிருந்து எம் தேசத்தை பாதுகாக்க தேசிய தற்காப்பு யுத்தத்தை முன்னெடுப்பது அவசியம் என நாம் கருதுகிறோம். தேசிய தற்காப்பு யுத்தம் என வைக்கப்படுவது தவறானது என (என்.எல்.எப்.ரி) கருதுகின்றது. இத்தேசிய தற்காப்பு யுத்தத்திற்கு பகுதிப் போராட்டம் உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் மறுக்கப்பட்டது, இன்றைய பிரதான முரண்பாட்டை தீர்க்கும் போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மட்டுமே ஏனைய முரண்பாடுகளும் தீர்வுக்கு கொண்டுவர முடியும் என்பது மறுக்கப்பட்டது. இவ்வாறாக கருத்து வைப்பது பூர்ஷ்வா நலன் சார்ந்தது என்றும் கூறப்பட்டது. எமது நாட்டில் நகரங்களிற்கும் கிராமங்களிற்கும் இடையே பாரிய வேறுபாடின்மை, மற்றும் சிறிய பிரதேசம் என்பவை கிராமம், நகரம் இணைத்த போராட்ட முறையையே வேண்டி நிற்கின்றது. நகரப் போராட்டம் கிராமிய போராட்டத்திற்கு உதவும் வகையிலும் கிராமியப் போராட்டம் நகரப்போராட்டத்திற்கு உதவும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். நகர்ப்புற கெரில்லா நடவடிக்கை மக்கள் யுத்தப்பாதையில் ஒரு போராட்ட வடிவமாகும்."

என்.எல்.எப்.ரியில் இருந்து பி.எல்.எப்.ரி.யின் உடைவுக்கு காரணமாக, பி.எல்.எப்.ரி.யின் "பயணம்" இப்படி முன்வைக்கின்றது.

இது விமர்சனத்துக்குரிய வகையில் முன்வைக்கப்பட்டு இருந்தபோதும், தாங்கள் என்.எல்.எப்.ரியில் இருந்து பிரிவதற்கு காரணங்களை முன்வைக்கின்றனர். தற்காப்பு யுத்தம், படைகட்டல், பிற இயக்கங்ளை எதிர்க்காது அனுசரித்துப் போதல், சர்வதேசியத்துக்குப் பதில் தேசியவாத முன்னிறுத்தல் .. போன்ற காரணங்களை முன்வைக்கின்றனர். என்.எல்.எப்.ரி சர்வதேசியத்தை முன்வைத்து இவற்றை மறுப்பதாக கூறுகின்றனர். மிக முக்கியமானது பிற இயக்கங்களின் மக்கள் விரோத செயற்பாட்டுக்கு எதிராக, மக்களை சார்ந்து போராடுவதை மறுதளிக்கின்றது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கும் தமிழர்களின் ஒடுக்குமுறை இயக்கங்கள் வடிவில் நிலவிய காலத்தில், யாரைச் சார்ந்து எங்கே எப்படி செயற்பட வேண்டும் என்பதே, முரண்பாட்டின் அரசியல் அடித்தளம்.

ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்பதற்குப் பதில், தேசியவாதத்தை மையப்படுத்தி நகர்ப்புற இளைஞர்களை குறிவைத்து செயற்பட வேண்டும் என்று பி.எல்.எப்.ரி. கோரியது. இதற்கு முரணாக, ஒடுக்கப்பட்ட கிராமங்களையும் - ஒடுக்கப்பட்ட மக்களையும் மையப்படுத்தி செயல்பட வேண்டும் என்று என்.எல்.எப்.ரி கூறியது. என்.எல்.எப்.ரியின் இந்த சர்வதேசிய அணுகுமுறை ஒடுக்கும் இயக்கங்களுக்கு எதிரான, அரசியல் போராட்டங்களுக்கும் வித்திட்டது. மண்டான் போராட்டம், தெல்லிப்பழை போராட்டம்.. என்பன ரெலோவுக்கு எதிராக நடத்திய அதே அரசியல் கண்ணோட்டத்தில், யாழ் பல்கலைக்கழகப் போராட்டங்களுக்கு என்.எல்.எப்.ரி வழிகாட்டியது.

தேசியவாதம், சர்வதேசியவாத அடிப்படையிலான இந்த இடதுசாரிய அணுகுமுறையில் இருந்த அடிப்படை வேறுபாடே, பி.எல்.எப்.ரி.க்கு வெளியில் இயக்கங்களில் இருந்து வந்த குழுக்கள் தனிநபர்களுடனான அரசியல் வேறுபாடும் கூட. யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டமானது, இந்த அரசியல் வேறுபட்ட தளத்தில் இருந்து தான் தொடங்கியது. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க நான் (இரயாகரன்), பல்கலைக்கழகம் சென்ற முதல் நாளில் இருந்து தொடங்குகின்றது. அப்படி என்னதான் நடந்தது என்பதை, இந்த தொடரில் முழுமையான ஆதாரங்களுடன் புரிந்துகொள்ள இருக்கின்றோம்;. அதற்கு முன் யாழ் பல்கலைக்கழக உருவாக்கம் குறித்து, தமிழ் இனவாத வலதுசாரிகளின் அரசியல் இருட்டடிப்பு வரலாற்றையும், தேர்தல் கட்சிகளின் வெற்றிக்காக எப்படியெல்லாம் அரசியல் திரிபுகளை கட்டமைத்தனர் என்பதை புரிந்தாலே, 1986 போராட்டத்தின் புரட்சிகர தன்மையை அரசியல் ரீதியாக உணரமுடியும்.

தொடரும்

 மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02

1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03

பல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04

ஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05

1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய போராட்டம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 06

சர்வதேசியத்தின் கருவாக இருந்த என்.எல்.எப்.ரி. - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 07