யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுத் தூபி, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை குறிக்கின்றதா எனின் இல்லை. அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் முரணற்ற ஜனநாயக அரசியலையோ, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலையோ, முரணற்ற சுயநிர்ணயத்தை முன்னிறுத்தும் முரணற்ற ஜனநாயக அரசியலையோ.. எந்த நினைவுத் தூபியும் குறிக்கவில்லை. மாறாக நிறுவப்பட்ட நினைவுத் தூபி, ஒடுக்கும் வலதுசாரிய இனவாத அரசியலின் உள்ளடக்கத்தைக் கொண்டது. அது மக்களையே பிளக்கின்றது.

யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபியை இடித்ததன் மூலம், பெரும்பான்மை சிங்கள – பவுத்த மக்களை தம்பக்கம் இனரீதியாக அணிதிரட்ட அரசு முனைகின்றது. நினைவுத் தூபி இடித்ததைக் காட்டி, தமிழ் இனவாதத்தை முன்வைக்கும் தேர்தல் இனவாத தமிழ் கட்சிகள் தமிழ் மக்களை தொடர்ந்து தங்கள் பின்னால் அணிதிரட்ட முனைகின்றது. இதுதான், இதன் பின்னுள்ள இனவாத சுரண்டல் அரசியல். இதைக் கடந்து நினைவுத் தூபி இடிப்பை இரண்டு இனவாத தரப்புக்கும் எதிராக, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்தும் அரசியலை யார் தான் முன்வைக்கின்றனர்!? யார் தான் அப்படி சிந்திக்கின்றனர்!? முடிந்தால் சொல்லுங்கள்!

இனவாதச் சிந்தனைமுறை கடந்து ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தாத சமூகம், தனக்கு தானே புதைகுழியையே தோண்டுகின்றது. மக்களைக் குறித்துச் சிந்திக்கும் யாரும், இந்த புதைகுழிக்குள் இறங்கி நின்றுகொண்டு, குழியைத் தோண்ட முடியாது.

சிங்கள - தமிழ் மக்களை இனரீதியாக பிரித்து, அந்தந்த இன ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கவே, இந்த இனவாத நடத்தைகளும் - இதற்கு எதிரான இனவாத அரசியலும் உதவுகின்றது.

யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுத் தூபி, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை குறிக்கின்றதா எனின் இல்லை. அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் முரணற்ற ஜனநாயக அரசியலையோ, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலையோ, முரணற்ற சுயநிர்ணயத்தை முன்னிறுத்தும் முரணற்ற ஜனநாயக அரசியலையோ.. எந்த நினைவுத் தூபியும் குறிக்கவில்லை. மாறாக நிறுவப்பட்ட நினைவுத் தூபி, ஒடுக்கும் வலதுசாரிய இனவாத அரசியலின் உள்ளடக்கத்தைக் கொண்டது. அது மக்களையே பிளக்கின்றது.

நிறுவப்பட்ட "முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, மாவீரர் நினைவுத் தூபி, பொங்குதமிழ் நினைவுத் தூபி".. என அனைத்தும், அரசியல்ரீதியாக எதைக் குறிக்கின்றது? வெளிப்படையாக, அந்த உண்மையைப் பேசுங்கள். ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கின்றது என்று பொய் பேசாதீர்கள். நிச்சயமாக வலதுசாரிய பாசிசப் புலியையும் - இனவாத தமிழ் தேர்தல் கட்சிகளையும் முன்னிறுத்தியே நினைவுத் தூபிகள் நிறுவப்பட்டதே ஒழிய, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை முன்னிறுத்தியல்ல. இது தான் உண்மை.

இந்த நினைவுத் தூபிகள் மக்கள் கோரி, மக்கள் முன் வைக்கப்பட்டு நிறுவப்பட்டதல்ல. இன்று அனைத்து மக்களின் அடையாளமாக காட்டுவது, கூறுவது அனைத்தும் மோசடி. சிறிய கும்பல் தன் விருப்பத்துக்கு ஏற்ப, மக்களின் ஜனநாயக தேர்வுக்கு வெளியில், பாசிச எண்ணத்திற்கு ஏற்ப நிறுவப்பட்டதே நினைவுத் தூபி. பெரும்பான்மை மக்களுக்கு இது இருப்பதே தெரியாது. யுத்தத்தில் பாரியளவில் பாதிக்கப்பட்ட மக்கள், இதை முன்னிறுத்தியதுமில்லை.

தமிழ் இனவாத தேர்தல் கட்சிகளின் அரசியல் எடுபிடிகளாக மாறிய யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினால், வலிந்து உருவாக்கப்பட்டதே இந்த நினைவுத் தூபிகள். மக்களில் இருந்து அன்னியப்பட்ட லும்பன் கூட்டத்தின், உணர்ச்சிக் கூத்து. அரசின் எடுபிடிகளாக எப்படி பல்கலைக்கழக நிர்வாகமும் அதன் முடிவுகளும் எடுக்கப்படுகின்றனவோ, அது போன்று யாழ் மாணவர் சங்கம் இனவாத தேர்தல் கட்சிகளின் எடுபிடிகளாகவே இயங்குகின்றனர். இப்படி எடுத்த முடிவு தான் நினைவுத் தூபி.

இலங்கையின் பிற பல்கலைக்கழகங்களில் தமிழ் மக்களை ஒடுக்கியவர்களுக்காக நினைவுத் தூபி அமைத்தால் எப்படி எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படித் தான் தமிழ் மக்களையே துப்பாக்கி முனையில் ஒடுக்கிய பாசிச வலதுசாரி அரசியலுக்கும், அதை முன்னின்று செய்தவர்களுக்கும் நினைவுத் தூபி அமைத்தது என்பது, எந்த வகையிலும் யாராலும் நியாயப்படுத்த முடியாது. நியாயப்படுத்துவன் நிச்சயமாக தமிழ் இனவாதியாகச் சிந்திக்கின்றவனால் மட்டுமே முடியும். மனிதனாக சிந்திக்கின்ற எவனாலும், சிந்திக்க முடியாது.

இன்று நில ஆக்கிரமிப்பைச் செய்ய வடகிழக்கில் நிறுவப்படும் பவுத்த சிலைகளும், யுத்த வெற்றிச் சின்னங்களும், புரதான பிரதேசங்கள் என்ற பெயரில் தொடர்ச்சியாக உருவாக்கப்படும் "புனித" பிரதேசங்கள் எப்படி நிறுவப்படுகின்றதோ, அப்படி யாழ் பல்கலைக்கழகத்திலும் ஒடுக்கும் தமிழர்களின் ஆதிக்கத்தையும், இதன் வக்கிரத்தையும் பறைசாற்றவே நினைவுத் தூபிகள் நிறுவப்பட்டிருந்தது.

இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குகின்ற இன-மதவாத சக்திகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு அப்பால், இவை அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிப்பதில்லை.

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி

முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலையென்பது அரசால் மட்டும் தனித்து நடத்தி முடிக்கப்பட்டதல்ல. இந்த மனித இழப்பை தவிர்க்கின்ற ஆயிரம் வழிகள் இருந்தது. அதை மறுதளித்த புலிகள், தங்கள் உயிர் வாழ்வுக்காக மக்களை கேடயமாக முன்னிறுத்தி யுத்தம் செய்தனர். இது தான் மக்கள் குறித்த புலியின் அரசியல் கண்ணோட்டம். புலிகள் மக்களை திட்டமிட்டு பலியிட்ட யுத்தம் மூலம். பிணங்களைக் காட்டி தாங்கள் உயிர் வாழ முனைந்தனர். இதுதான் இறுதி யுத்தத்தின் வரலாறு. முள்ளிவாய்க்காலின் உண்மைக் கதை. புலிகள் மக்களைப் பலி கொடுக்க, அரசு பலியெடுத்தது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் இப்படி புலிகளின் அனுசரணையில் நடந்தேறின. புலிகள் பலி கொடுக்க நடந்த யுத்தத்தை "இனவழிப்பு" யுத்தம் என்று கூறுபவர்கள், உண்மையில் தங்கள் குற்றத்தை மூடிமறைக்கும் கூட்டுச் சதியை மறைக்கின்றனர். நடந்தது "இனவழிப்பு" என்றால், புலியும் - அரசும் சேர்ந்து அதைச் செய்தனர். இந்த இறுதி யுத்தத்தில் பலியான பலர், பலாத்காரமாக புலிகளால் யுத்தமுனைக்கு அனுப்பப்பட்டவர்கள். யுத்தமுனையில் இருந்து தப்பிச் செல்ல முனைந்த தமிழ் மக்களை, சுற்றி வளைத்துப் புலிகள் கொன்றனர். தப்பியோடியவர்களைப் பிடித்து, பொது இடத்தில் அரைகுறை உயிருடன் கும்பலாக போட்டுக் கொழுத்தினர். தப்பியோடுபவர்களுக்கு இது தான் கதியென்றனர். தப்பிச் செல்லாமல் யுத்தமுனையில், தமக்காக பலியாகக் கோரினர். யாழ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, புலிகளால் பலியிடப்பட்ட, புலிகளால் கொல்லப்பட்டவர்களை குறிப்பதில்லை. மாறாக புலிகள் பலிகொடுத்ததை ஆதரித்து, அதையே கொண்டாடவும் - போற்றவும்; கோருகின்றது.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி புலிகளால் பலியான ஆயிரக்கணக்கான மக்களை குறிப்பதில்லை, முன்னிறுத்துவதுமில்லை. இன்னும் சொல்லப்போனால் மரணித்த புலிகளையே குறிக்கின்றது, அங்கு பலியான மக்களையல்ல. யாரும் இதற்கு இப்படியும் அப்படியும் விளக்கம் கொடுக்கலாம், உண்மையில் நிலவும் அரசியல் மிகத் தெளிவாக புலிகளைக் குறிக்கின்றது.

மாவீரர் நினைவுத் தூபி

யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நினைவுத் தூபி மிகத் தெளிவாக, புலிகள் தங்களை தாங்கள் முன்னிறுத்திய பாசிச அரசியலின் குறியீடு. மக்களை முன்னிறுத்தியதல்லாத, தங்களை முன்னிறுத்திய பாசிச வக்கிரத்தின் அடையாளம். ஆம் யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபி புலிகளை மட்டும் முன்னிறுத்தி நிற்கின்றது. பேரினவாதத்தால் கொல்லப்பட்ட புலியல்லாதவர்களையோ, புலிகளால் கொல்லப்பட்டவர்களையோ, அனைத்து (இயக்கங்கள், இலங்கை, இந்திய அரசபடைகள்) தரப்பாலும் கொல்லப்பட்ட பொது மக்களையோ, மக்களின் அக முரண்பாடுகளை முன்னிறுத்தி போராடியதால் மரணித்தவர்களையே குறிப்பதல்ல. மாறாக புலிகளையும், அதன் வலதுசாரி இனவாத பாசிசத்தை மட்டும் குறிக்கும், பாசிசப் போக்கை முன்னிறுத்தும் அரசியல் அடையாளமே. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் குறியீடு.

பொங்குதமிழ் நினைவுத் தூபி

இந்த நினைவுத் தூபி முன்வைக்கும் கோசமானது "சுயநிர்ணய உரிமை", "மரபுவழித் தாயகம்", "தமிழ் தேசியம்" என்கின்றது. இது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை குறிப்பதல்ல. ஒடுக்கும் தமிழனின் அடையாளம்.

இது முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் "சுயநிர்ணய உரிமை" யை முன்னிறுத்தவில்லை. வலதுசாரிய இனவாத அடிப்படையில் முன்வைக்கப்படும் "சுயநிர்ணயம்", அடிப்படை ஜனநாயகத்தைக் ஏற்றுக்கொள்வதில்லை. புலிகள் காலத்தில் பொங்குதமிழின் பெயரில் முன்னிறுத்திய இந்த "சுயநிர்ணய" கோசமோ, புலிகளின் நடத்தைகள் மூலம் நிறுவப்பட்ட அப்பட்டமான பாசிசமே.

இந்தப் பாசிசத்தை விளக்க மேலதிகமாக முன்வைத்த "மரபுவழித் தாயகம்", "தமிழ் தேசியம்"
என்பது, ஒடுக்கும் தமிழனின் அதிகாரத்தை முன்வைக்கின்றது, கோருகின்றது. ஒடுக்கும் இந்த அதிகாரம் என்பது வெள்ளாளிய சிந்தனையிலான சாதிய சமூக அமைப்பையும், இதன் சமூக ஆதிக்கத்தையும் முன்வைத்து, அதைக் கோருகின்றது.

முடிவாக

இனவாதமாக சிந்திக்கின்ற வலதுசாரிய சமூகத்தில், தன் மீதான ஒடுக்குமுறையை மட்டும் முன்னிறுத்தி, தான் ஒடுக்குமுறையாளனாக இருப்பதை மூடிமறைக்கின்றது, மூடிமறைக்க முனைகின்றது. நினைவுத் தூபி இடித்ததை எதிர்த்துப் பொங்கி எழுந்தவர்கள் யார், தமிழ் மக்களை ஒடுக்கும் தமிழனை எதிர்த்து நிற்கின்றனர்? அப்படி கடந்த காலத்தில் தமிழனால் தமிழன் ஒடுக்கப்பட்டதை யார் முன்வைத்து, மக்களுடன் உண்மையாக நேர்மையாக செயற்படுகின்றனர். சொல்லுங்கள்.

இந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் எந்த அடையாளத்தையும், யாழ் பல்கலைக்கழகத்தில் காணமுடியாது. சிந்தனை, செயல், நடத்தை.. அனைத்தும் ஒடுக்கும் தரப்பாக இருந்த புலிகளையும், இனவாத தமிழ் தேர்தல் கட்சியைக் கடந்து, சுயாதீனமான பல்கலைக்கழகமாக (விதிவிலக்கு 1986 தவிர) தன்னையும் - மக்களையும் முன்னிறுத்தியதில்லை.

ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் வண்ணம் சுயாதீனமான ஜனநாயக நடத்தைகள் மூலம், தன்னை முன்னிறுத்தியது கிடையாது. குறுகிய இனவாத வட்டத்துக்குள், ஜனநாயக மறுப்பை முன்னிறுத்தும் வண்ணம் குறுகிய அடையாளங்களை நிறுவி, அதை முன்னிறுத்திக் கொண்டு ஒடுக்கப்பட்ட தமிழனின் விடுதலை பற்றி பெருமிதம் பேசும் அரசியல் - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு உதவாது. ஒடுக்கும் தமிழனின் சுய தற்பெருமை பேசவே இவை உதவுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதற்கு உதவுவதில்லை, மாறாக குழிபறிக்கின்றது.

தமிழ் தேசமும், இலங்கையின் தேசிய இனங்களும், மதங்களும் இலங்கையில் ஒடுக்கப்படுகின்றது என்ற உண்மையின் ஒரு அங்கமாகவே, யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபி இடிக்கப்பட்டது என்பது எந்தளவுக்கு உண்மையோ, அதற்கு நிகராகவே இனவாதம் பேசவே இந்த நினைவுத் தூபிகளை நிறுவினார்களே ஒழிய, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை குறிப்பதற்காக, போராடுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல.

10.01.2021