09242023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபிகள், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைக் குறிப்பதல்ல

தமிழனைத் தமிழனாய் நின்று ஒடுக்கியவனின் - ஒடுக்குகின்றவனின் சுய அடையாளங்களையே, இடிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபிகள் குறிக்கின்றது. அதைப் பாதுகாக்கவே வெள்ளாளிய தமிழ் இனவாதம், பேரினவாதம் குறித்து கூச்சல் இடுகின்றது. பேரினவாதமானது இதை முன்னின்று இடிக்கின்றது என்பதால், நினைவுத் தூபிகள் எதுவும் ஒடுக்கப்பட்ட தமிழனைக் குறிப்பதல்ல. மாறாக தமிழனைத் தமிழன் ஒடுக்கியதையே குறிக்கின்றது.

இதே யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழனைத் தமிழன் ஒடுக்கியதை எதிர்த்துப் போராடி இருக்கின்றனர். தமிழனைத் தமிழன் ஒடுக்கியதையும் ஒடுக்குவதையும் ஆதரித்தபடியிருந்த யாழ் பல்;கலைக்கழக மாணவர்கள் தலைவர்களாக இருந்தவர்களை, 1986 இல் தூக்கியெறியும் போராட்டத்தை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தியிருந்தனர். 1986 இல் இந்த போராட்டத்தை முன்னின்று வழி நடத்தி, புதிய மாணவ தலைமையை உருவாக்கி அதன் உறுப்பினராக இருந்த விஜிதரன், இரண்டு மாதங்களின் பின் காணாமலாக்கப்பட்டான். இப்படி காணாமலாக்கப்பட்ட விஜிதரனை விடுதலை செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை தலைமை தாங்கிப் போராடிய விமலேஸ்வரன் 1988 இல் படுகொலை செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜனி கொல்லப்பட்டார். தமிழனைத் தமிழனாக நின்று ஒடுக்கியவர்களால், பல்கலைக்கழக மாணவர்கள், மாணவ தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். இப்படி பலரை கொன்றும், காணாமலாக்கிய அந்தக் கொலைகார பாசிசச் கும்பலுக்கே, யாழ் பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி என்பது மானிட வரலாற்றின் முரண். அன்று போராடிய பல்கலைக்கழக மாணவ தலைவர்களுக்கு நினைவுத் தூபியில்லை, அவர்களைக் கொன்றவர்களுக்கு நினைவுத் தூபி. இது தான் தமிழ் சமூகத்தின் துயரம், பேரினவாதத்துக்கு எதிராக வெற்றி பெற முடியாத அரசியலும் - சொந்த அடிமைத்தன சிந்தனைமுறையும்.

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படை ஜனநாயகத்தை கோரி, அதற்காக போராடி மரணமான மாணவர்களுக்கு நினைவுத் தூபி கிடையாது. மாறாக அவர்களை ஒடுக்கியவனுக்கு நினைவுத் தூபி.

பேரினவாத ஒடுக்குமுறையாளன் தனது ஒடுக்குமுறையைப் பறைசாற்ற நினைவுத்தூபியைக் கொண்டிருப்பதால், எமக்கு நினைவுத்தூபி இருக்கக் கூடாதா என்று கேட்பது, ஒடுக்கும் வெள்ளாளிய தமிழ் அதிகாரக் குரல்களே. இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழனை முன்னிறுத்தி கோரவில்லை.

ஒடுக்கப்பட்ட தமிழனை முன்னிறுத்தி யாரும் குரல் கொடுப்பதில்லை, குரல் கொடுக்கவில்லை. ஒரு குறித்த இயக்கம் கடந்து அனைவரையும் ஒருங்கிணைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய ஜனநாயகத்துக்கான குரல்களையோ, அதை முன்னிறுத்திய பொது நினைவுகளையோ, நினைவுத் தூபிகளையோ எவரும் கோரவில்லை. அதை நிறுவவுமில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தது ஒடுக்கிய தமிழனை முன்னிறுத்தியும், அந்த அரசியலையும், அதன் அடையாளங்களையும் முன்னிறுத்தி நிற்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராது ஒடுக்கும் தமிழனைச் சார்ந்த போராட்டம், தன்னைத்தான் அழித்துக் கொண்டதே, கடந்த தமிழனின் அரசியல் வரலாறு. இந்த அழிவுக்கான காரணங்களைக் கொண்டாடுவது, அதை நினைவாக முன்னிறுத்துவது, தமிழனை தமிழன் ஒடுக்குவதற்கு சமமானது. எதையும் விமர்சனம், சுயவிமர்சனம் செய்யாது, பழமையையும் - தோற்றுப் போனதையும் கொண்டாடுவது என்பது, ஒடுக்கும் பேரினவாதத்துக்கு துணைபோவது தான்.

இலங்கை அரச இன-மத ரீதியான ஒடுக்குகின்ற இன்றைய அரசியல் சூழலிலிருந்து விடுபடுவதற்கும் - போராடுவதற்கும் இன்று தடையாக இருப்பது, தமிழனைத் தமிழன் ஒடுக்கிய மற்றும் ஒடுககு;கின்றவனை ஆதரிக்கின்ற பழைய துருப்பிடித்த அரசியலே. இந்த நினைவுக் குறியீடுகளும், தோற்றுப் போன அரசியல் வழிகளையும் கொண்டாடுவதன் மூலம், தொடர்ந்து போராடும் வழியை, கண்டடைய முடியாத, தமிழ் சமூகமாக முடமாக்கப்பட்டு இருக்கின்றது.

இதிலிருந்து விடுபடுவது, தமிழனை தமிழன் ஒடுக்கிய வரலாற்றை தமிழனுக்கு எதிரானதாக முன்வைத்து மறுதளிப்பதன் மூலமே, பேரினவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு சரியான அரசியல் வழிமுறையாக இருக்க முடியும்.

09.01.2021


பி.இரயாகரன் - சமர்