யாழ் பல்கலைக்கழகமானது இலங்கையின் பிற பல்கலைக்கழகங்கள் போல், இனவாத அரசுக்கு எதிரான, இடதுசாரிய போராட்ட மரபைக் கொண்டதல்ல. பிற பல்கலைக்கழகத்தில் இருந்து தன்னைத்தான் தனிமைப்படுத்திக் கொண்டு, வலதுசாரிய வெள்ளாளிய சிந்தனையிலான தமிழ் இனவாத கிணற்றுக்குள் வீழ்ந்தே கிடந்தது, கிடக்கின்றது.


யாழ் பல்கலைக்கழகமானது தன்னை இனரீதியாக குறுக்கிக் கொண்டதுடன், பிற பல்கலைக்கழகத்தை தனது இனவாதக் கண்ணோட்டம் கொண்டே பார்த்தது. இப்படி குறுகிய இனச் சிந்தனைக்கு நேர்மாறாகவே, பிற பல்கலைக்கழகங்கள் இருந்தன, இருக்கின்றன. தமிழ் மக்களை இன-மத ரீதியாக ஒடுக்கும் பேரினவாதத்தின் வர்க்க அரசியல் நிகழ்ச்சிநிரலுக்கு முரணாகவே, யாழ் அல்லாத பல்கலைக்கழகங்கள் போராடி வந்ததும், வருவதுமே வரலாறாகி இருக்கின்றது. யாழ் பல்கலைக்கழகமோ இதற்கு மாறாக ஒடுக்கும் வர்க்க மற்றும் வெள்ளாளிய தமிழ் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குள் குறுகிப்போனதே வரலாறு. இனவொடுக்குமுறைக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய இடத்தில் இருந்தும், அதை செய்யக்கூடிய அரசியல் அதனிடம் இருக்கவில்லை. அப்படி உருவாகிய கருக்கள் திட்டமிட்டே அழிக்கப்பட்டது.

1983 இல் நடந்த "இனக் கலவரத்தினால்" இடம்பெயர்ந்த பிற பல்கலைக்கழக மாணவர்கள், 1983-1984 இல், யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து, யாழ் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தை நடத்தினர். அப்போராட்டம் படிப்படியாக சுயாதீனமான புதிய இயங்குசக்தியாக மாறத் தொடங்கியது. இதை விரும்பாத தமிழ் இனவாதிகள் அந்தப் போராட்டத்தை முறியடிக்க, மாணவர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் உண்ணாவிரதிகளை துப்பாக்கி முனையில் கடத்தினர். இப்படி புலிகளால் பலவந்தமாக துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மாணவியான மதிவதனியையே, பிரபாகரன் தனது மனைவியாக்கிக் கொண்டார். இந்தப் போராட்டத்தின் சுயாதீனமான வளர்ச்சியை புலிகள் அழித்தனர். இதன் பின் 1985-1987 இடதுசாரிய கருவாக, அதுவே போராட்டமாக மாறிய போது, அது ஒடுக்கப்பட்டு அதன் முன்னணி தலைவர்களை புலிகள் வேட்டையாடத் தொடங்கினர்.

இதை விரிவாக ஆழமாகவும் போராட்ட வரலாற்றை ஆராய்வதற்கு, இதை சுற்றி இயங்கிய பிற சூழல்களை விளங்கிக் கொள்வது அவசியமானது. யாழ் பல்கலைக்கழகத்தின் சிந்தனை செயல் அனைத்துமே, யாழ் வெள்ளாளிய இன மேலாதிக்கத்தையே பிரதிபலித்தது.

1974 களில் பல்கலைக்கழக வளாகமாக உருவாகி படிப்படியாக யாழ் பல்கலைக்கழகமாக மாறிய காலத்தில், தமிழ் இனவாதத் தேர்தல் அரசியலுடன் பின்னிப்பிணைந்தாகவே தன்னை அடையாளப்டுத்தியது. இந்தத் தேர்தல் அரசியல் நலன் சார்ந்து உருவாக்கிய தனிநபர் பயங்கரவாதத்துடன் இணைந்ததாகவே - தன்னையும் முன்னிறுத்திக் கொண்டது. இலங்கையின் பிற பல்கலைக்கழகங்கள் இனவாத அரசுக்கு எதிரான இடதுசாரிய வர்க்கப் போராட்டங்களை நடத்திக் கொண்டு இருந்தபோது, யாழ் பல்கலைக்கழகம் தமிழ் இனவாத அரசியலுக்கு பலியாகி இருந்தது.

இனவாத தமிழ் தேர்தல் அரசியலானது 1970 வரை தனது எதிரியாகவும், இனத் துரோகியாகவும் முன்னிறுத்திக் காட்டியதும் தமிழ் காங்கிரஸ்சையே. இந்த அரசியல் சூழலானது 1970 களில் மாறியதுடன், சவால் மிக்க புதிய எதிரிகளை எதிர்கொண்டது. 1970 களில் ஆட்சிக்கு வந்த போலி இடதுசாரியமும், 1960 களில் வெள்ளாளியத் தீண்டாமை முறைமைக்கு எதிரான போராட்டம் உருவாக்கிய அரசியல், தமிழ் இனவாதச் சிந்தனை முறைமைக்கு சவாலாக மாறியது. அத்துடன் 1965 களில் யூ.என்.பி அரசில் தமிழ் அரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ்சும் மந்திரிப் பதவிகளை பெற்றதன் மூலம் தனிமைப்பட்டு, 1970 களில் முக்கிய தமிழ் இனவாதத் தலைவர்கள் தேர்தலில் தோற்றுப் போனார்கள்.

1970 களில் ஆட்சிக்கு வந்த போலி இடதுசாரியமானது, தமிழ் இனவாதத்தை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி வந்தது. வெள்ளாளிய தமிழ் இனவாதத்தை தனிமைப்படுத்தும் வண்ணம், யாழ் சமூகத்தில் புரையோடிக் கிடந்த சாதியத்தை - அரசு தனது போலி சாதி ஒழிப்பு முறைமைக்கு ஏற்ப கையாளத் தொடங்கியது. இதற்காக யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒருவரை, நியமன உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தது. அவர் மூலம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போலிச் சட்டங்களை கொண்டு வந்தது. போலி தமிழ் தேசியத்தை தனிமைப்படுத்தும் இந்த போலி சாதி ஒழிப்புச் சட்டங்கள், வெள்ளாளிய தமிழ் இனவாத தேசியத்தின் கழுத்தைப் பிடித்து நசித்தது. அரசு ஆதரவு பெற்ற போலி இடதுசாரியம், ஒடுக்கப்பட்ட மக்களின் பெயரில் வடக்கில் பெரும் செல்வாக்கைப் பெற்றது.

அரசு தனது போலி சோசலிசத்தை நடைமுறைப்படுத்த சுய உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு, இறக்குமதி தடைகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட பொருளாதாரத் தடை, வடகிழக்கு விவசாயிகளுக்கு பணப் பொருளாதார அடித்தளத்தை உருவாக்கியது. அரசின் விவசாய பொருளாதாரத்துக்கு ஆதரவாக, வடகிழக்கு விவசாயிகள் மாறினர். இக்காலத்தில் பனம் பொருள் பயன்பாடுகள் சார்ந்து வடக்கில் உருவாக்கிய கைத்தொழில் மையங்கள், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்புக்கான சமூக அங்கீகாரத்தை வழங்கியது. அரசு இதன் மூலம் வடக்கில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

தமிழ் இனவாதத் தேசியம் இதிலிருந்து தப்பிப்பிழைக்க, 1971 இல் நான்கு கட்சிகள் கொண்ட வல்வை மாநாட்டை வல்வெட்டித்துறையில் நடத்தியது. உருவாக இருந்த புதிய அரசியல் சட்ட அமைப்பை அடிப்படையாகக் கொண்டு, அதில் எதை முன்வைப்பது என்பதை வரையறுத்தது.

வெள்ளாளிய தமிழ் இனவாத தேசியம் சந்தித்த சாதி ஒடுக்குமுறை சார்ந்த நெருக்கடி முதல் தனது முதலாளித்துவக் கொள்கைகள் குறித்து கவனமெடுத்ததுடன், அதைக் கையாளும் போலித் தீர்மானங்களை முன்வைத்தது.

இந்த தீர்மானங்களின் அடிப்படையில் தமிழ் இனவாதமானது போலி இடதுசாரியத்தின் இன-மதவாதக் கொள்கையை "சோசலிசமா" என்று கேட்டு அம்பலப்படுத்தத் தொடங்கியது.; லெனினின் சுயநிர்ணயம் கோட்பாட்டை கொண்டு தங்களை தமிழ் "சோசலிஸ்டுகளாக" முன்னிறுத்திக் கொண்டனர். அதேநேரம் தீண்டாமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் பல உரைகளை நடத்தியதுடன், இந்திய சாதி ஒழிப்புச் சட்டத்தை இலங்கை சட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்று கூறியதுடன் - தாங்களே சாதி ஒழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதான போலி பிம்பத்தைக் காட்டி - அரசியல் பித்தலாட்டத்தை தொடங்கியது. 1970 க்குப் பின்பாக உருவான தமிழர் விடுதலை கூட்டணியின் பினாமிப் பத்திரிகையான சுதந்திரனில், இவற்றை பாரியளவில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியது.

அதேநேரம் தம் அரசியல் போட்டியாளர்களை துரோகியாக அறிவித்தது. சிலரை சுட்டுக் கொன்றனர். சிலர் மயிரிழையில் உயிர் தப்பினர். சுயாதீனமான நடமாட்டம் முதல் தேர்தல் அரசியலில் இருந்த ஜனநாயக செயற்பாடுகளை வன்முறைகள் மூலம் முடக்கினர். அதேநேரம் அரசியல்ரீதியாக போலி இடதுசாரியத்தை அம்பலப்படுத்தி உருவான போலித் தமிழ் இடதுசாரியமானது, போலியான சாதி ஒழிப்பையும் - போலி சோசலிசத்தையும் முன்வைத்தது.

இதன் மூலம் தமிழ் மக்களை தன் இனவாதத்தின் பின்னால் அணிதிரட்டி, 1977 தேர்தலில்; பாரியளவில் வெற்றி பெறமுடிந்தது. அதேநேரம் தன் தேர்தல் எதிரியை ஒழிக்கும் தனிநபர் பயங்கரவாத வன்முறை அரசியலானது, சமகாலத்தில் பிற சிந்தனைமுறைமைக்கு எதிரான பயங்கரவாதமாக பரிணமித்ததுடன், படிப்படியாக 1980களில் அது புதிய சுயாதீனமான பயங்கரவாத வன்முறைக் குழுக்களாக மாறியது. இப்படி உருவான பயங்கரவாத குழுக்களில் ஏற்பட்ட அக முரண்பாடுகளே, 1985 - 1987 மாணவ மாணவிகளின் போராட்டத்திற்கான நெம்புகோல்.

தமிழ் இனவாதம் முன்வைத்த போலி இடதுசாரியம், போலி சாதி ஒழிப்பு, போலி சோசலிசத்துக்கு எதிரான அகமுரண்பாடுகள், இயக்க உடைவுகளாக மாறியதுடன், அது தொடர்கதையாக மாறியது. இதன் விளைவு உதிரியான தமிழ் இடதுசாரிய சிந்தனைமுறையை - சமூகத்தில் விதைத்தது. அது எப்படி உருவானது என்பதை அடுத்த தொடரில் பார்ப்போம்.

மாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01

தமிழ் "மார்க்சிய" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02