2009 யுத்தத்தின் பின் தமிழரின் புட்டுக்கு பதில் "பீட்சாவை" உணவாக அறிமுகமாக்கி இருக்கின்றோம் என்று, "மாவீரர் தினம்" குறித்த பேரினவாதக் கண்ணோட்டத்தை நீதிமன்றத்தில் முன்வைத்தபோது பொலிசார் கூறினர்.

இதற்கு தமிழ் இனவாதிகள், தங்கள் இனவாத கண்ணோட்டத்தில் பொழிப்புரை வழங்குகின்றனர். "புட்டுக்கு மண் சுமந்த" கதையை கூறுமளவுக்கு, இனவாத வெள்ளாளியம் பொங்கி எழுகின்றது. புட்டுக்கு பின்னுள்ள உண்மையான அரசியலை திரித்து விடுகின்றது.

புட்டு குறித்த பொலிசாரின் கூற்றின் பின் இருப்பது சிங்கள இனவாதமல்ல. அவர்கள் தங்கள் பாரம்பரிய உணவுக்குப் பதில் பீட்சாவை உண்பதை பெருமையாக கருதக்கூடிய மனநி;லையில் இருந்து முன்வைக்கப்பட்டது. இதற்கு பின் அரசியல் இருக்கின்றது. தாங்கள் பெருமையாக கருதும் பீட்சாவை, தமிழர்களுக்கும் உணவாக்கி இருக்கும் பெருமையை கூறி இருக்கின்றனர். இந்த அரசியல் என்பது சிங்கள மக்களின் பாரம்பரிய உணவை விட, பீட்சாவை உயர்வாக கருதுகின்றது. அதை தமிழர்களுக்கும் தாங்கள் உருவாக்கி கொடுத்திருக்கும் பெருமையைப் பீற்றி இருக்கின்றது. இதை பேச மறுத்து, தமிழ் இனவாதத்தை பேசுவது ஏன்?

இங்கு புட்டை இழிவாக கருதும் கண்ணோட்டம் இருக்கின்றது என்றால், அது நவதாராளவாதமே. பீட்சா என்பது நவதாராளவாத சந்தையுடன் இலங்கைக்கு அறிமுகமாகி, அது உயர் வர்க்கத்தின் உணவாக இன்று மாறி இருக்கின்றது. பீட்சாவை பெருமை உணவாக உண்பதில் தமிழர் - சிங்களவர் என்ற எந்த இன வேறுபாடும் கிடையாது.

மறுபக்கத்தில் புட்டு தமிழ் மக்கள் மட்டும் உண்ணும் உணவல்ல, சாதாரண சிங்கள மக்களின் உணவாகவும் இருக்கின்றது. இங்கு இனவாதம் எங்கு இருக்கின்றது?

பார்வையில் இனவாதம் இருக்கின்றது. இப்படி இருக்க பீட்சா உண்பது குறித்த பெருமை வர்க்க ரீதியானதே ஒழிய, இனரீதியானதல்ல. தமிழ் உயர் வர்க்கமும் அப்படித்தான் கருதுகின்றது. புட்டு பற்றிய இக் கூற்றை, சிங்கள இனவாதக் கண்ணோட்டமாக கருதுவது, அடிப்படையில் தமிழ் இனவாதக் கண்ணோட்டமே.

நீதிமன்றத்தில் புட்டு பற்றி கருத்து முன்வைத்தவர்கள், சிங்கள பாரம்பரிய உணவை மாற்றாக முன்வைக்கவில்லை. மாறாக மேற்கத்தைய உணவான பீட்சாவை முன்வைத்ததன் பின்னால் இருப்பது – நவதாராளவாத பொருளாதார "வளர்ச்சி – அபிவிருத்தி" குறித்து, இன்று இருக்கக் கூடிய பொதுக் கண்ணோட்டமே. இது தான் தமிழ் இனவாதிகளின் கண்ணோட்டம் கூட.

புட்டை இழிவானது என்ற கண்ணோட்டத்தில் அணுகும் உயர் வர்க்க தமிழ் இனவாதக் கண்ணோட்டமே, உயர் வர்க்கக் கண்ணோட்டத்தில் இருந்து, இதை எதிர் இனவாதமாகக் காட்டி எதிர் வினையாற்றுகின்றது.

"புட்டுக்கு மண் சுமந்த" கதையைக் கூறுவதே வெள்ளாளிய இனவாதக் கண்ணோட்டமே. மதம் மற்றும் இலக்கிய வரலாற்றில் இருந்து புட்டைக் கண்டுபிடிக்கும் வெள்ளாளியம், புட்டு தங்கள் வழிபடும் கடவுளுக்கு படைக்கப்படுவதில்லையே ஏன் என்று கேட்பதில்லை. புட்டை கடவுளுக்கு படைக்க முடிவதில்லை. எல்லாம் பார்ப்பனியமயமாகி வெள்ளாளியமாக கொழுப்பெடுத்த வழிபாட்டு முறைக்குள், புட்டு தீட்டுக்குரியதாக இருக்கின்றது. இது தான் உண்மை. வெள்ளாளிய கடவுளின் முன்பு புட்டு தீட்டு. தமிழரின் உணவு என்று பெருமைப்பட இனவாதம் பேசும், தமிழ் வெள்ளாளியத்திடம் எந்த அறமும் கிடையாது.

தமது சொந்த இனத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்களையே இழிவாக பேசும் தமிழ் இனவாதிகள் புட்டு பிரச்சனையை இனவாதமாக்குகின்றனர்.

காலகாலமாக இறைச்சியை உணவாகக் கொண்ட தமிழரின் கோப்பைக்குள் எட்டிப் பார்த்து வெள்ளாளியத்தை முன்வைக்கும் தமிழ் இனவாதிகள் தான், மாட்டை புனிதமானது என்கின்றனர். மாட்டு இறைச்சியை உண்பதனை இழிவானது - தீட்டுக்குரியது என்கின்றனர். இவர்களே தான் புட்டு பற்றிய தங்கள் இனவாதத்தை முன்வைக்கின்றனரே ஒழிய, அதன் பின் இருக்கும் நவதாராளவாத பீட்சா பற்றி பேச மறுக்கின்றனர்.

பீட்சாவை யுத்தத்;தின் பின் உணவாக உண்பவர்கள் வர்க்க ரீதியாக உயர் நிலையில் இருப்பவர்கள். இடையில் இருப்பவர்களின் உணவு புட்டாகவும், வர்க்க ரீதியில் அடிநிலையில் இருப்பவர்கள் புட்டைக் கூட உணவாக உண்ண முடியாத நிலையில் இருப்பவர்களே. ஏழை எளிய மக்களின் மலிவான சத்தான உணவாக இருக்க கூடிய அசைவ(மாமிச) உணவுகளை, புனிதம் - கடவுளின் பெயரால் பறிப்பவர்களே இனவாதம் பேசும் வெள்ளாளியத்தை முன்வைக்கின்றனர்.

வர்க்க ரீதியான கண்ணோட்டமே இனவாதம். இனவாதம் என்பது தேசியவாதமல்ல, மாறாக நவதாராளவாதமே. நவதாராளவாதம் எப்படி இனவாதமாக இருக்கின்றது என்பதையும், இதனால் இனவாதம் எதற்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் – தமிழ் இனவாதம் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை.

புட்டு இழிவானது பீட்சா உயர்வானது என்பது சிங்கள இனக் கருத்தியலல்ல மாறாக வர்க்க ரீதியான, நவதாராளவாதக் கருத்தியல். நவதாராளவாதமானது பாரம்பரிய உணவுகளை அழித்து, சந்தைக்குரிய தங்கள் உணவை உயர்ந்தது என்று கூறுவதையே – எல்லா இனவாத வழியில் மீள பிரதிபலித்திருக்கின்றனர்.