அதிகாரத்தை மறுப்பதா இனவொடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 02)

இனவொடுக்குமுறையை விட்டுவிட்டு, தமிழனின் அதிகாரத்திற்கான போராட்டமாக இனவொடுக்குமுறையை குறுக்குவதும் - கோருவதுமே நடக்கின்றது. 1980 களில் தோன்றிய ஆயுதப் போராட்டமானது இறுதியில் புலியின் அதிகாரத்துக்கான போராட்டமாகவும் -  படிப்படியாக தனிநபர்களின் அதிகார போராட்டமாகவும் சீரழிந்தது தொடங்கி அதிகார பரவலைக் கோரும் முரண்பட்ட தேர்தல் அரசியல் வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான ஒடுக்குமுறையை இனம் கண்டு அதற்கு எதிராக போராடுவதை மறுதளித்ததும் - மறுதளிப்பதுமே தொடர்ந்து நடந்தேறி வருகின்றது.

 

தமிழ்மக்கள் எப்படி எந்த வடிவத்தில் ஒடுக்கப்பட்டனர், ஒடுக்கப்படுகின்றனர் என்பது அரசியல்ரீதியாக முன்வைக்கப்பட்டதில்லை, முன்வைக்கப்படுவதில்லை. இன்று எதையும் முன்வைக்க முடிவதுமில்லை. தமிழனைத் தமிழன் ஆள்வதற்கான உரிமையை அங்கீகரிக்க மறுப்பதே, இனவொடுக்குமுறையாக இறுதியில் மாறிவிடுகின்றது. உண்மையான இனவொடுக்குமுறையை காணமுடியாது போகின்றது. இனவொடுக்குமுறை காணாமலாக்கப்பட்டு வருகின்றது. தமிழ்மக்களின் மேலான இனவொடுக்குமுறையைக் கண்டுகொள்ளாது அதை ஆதரிக்கும் புலியெதிர்ப்பு, அரசு ஆதரவு அணிக்கு, அரசியல்ரீதியாக வலுச் சேர்க்கின்றது.

இன்று எது ஒடுக்குமுறை என்று கூற முடியாதவர்கள், அதிகாரத்தை மட்டும்; கோருவது என்பது – ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கும் உரி;மையை தங்களிடம் தருமாறு கோருவதைத் தவிர வேறு எதுவுமல்ல. இனரீதியான சிங்கள ஒடுக்குமுறையாளருக்குப் பதில் - தமிழனை தமிழன் ஒடுக்கும் தமிழ் ஒடுக்குமுறையாளராக இருக்கும் தங்களுக்கான அதிகாரத்தைக் கோருகின்றனர்.

இதனால் தான் ஒடுக்குமுறையை இனம் காண முடிவதில்லை. பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் சிங்கள மக்களை முன்னிறுத்தி, பிற இனங்களை இன-மத ரீதியாக ஒடுக்குவதன் பின்னுள்ள காரணம் என்ன என்பதை புரிந்து கொண்டால் தான், ஒடுக்குமுறை எந்த வடிவில் எப்படி இருக்கின்றது என்பதை இனம் காணவும் - தெளிவுபடுத்தவும் முடியும்;.

தமிழ் இனவாதப் பிரச்சாரமானது தமிழ்மக்களை ஒடுக்குவதன் மூலம் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவுவதாக கூறுகின்றனர். ஆனால் அது எந்த வகையில் உதவுகின்றது என்று கூறுவதில்லை. அதாவது தமிழ்மக்களுக்கு கொடுக்காத ஒன்றை, சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்கின்றது என்பதே பொய்.

தமிழ் இனவாதிகள் கூறுவது போல், தமிழ் மக்களை ஒடுக்குவதன் மூலம் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதையும் கொடுப்பதில்லை. மாறாக ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களை மேலும் ஒடுக்குவதற்கும், அதை மூடிமறைக்கவுமே, இன-மதவாதங்களையும், ஒடுக்குமுறைகளையும் பயன்;படுத்துகின்றனர்.

ஒடுக்கப்பட்ட சிங்கள – பௌத்த மக்களின் நலன் சார்ந்து, தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையைக் கையாளவில்லை, கையாளப்படுவதில்லை. மாறாக சிங்களவனை சிங்களவன் ஒடுக்கும் தரப்புக்கு, குறிப்பாக வர்க்க ரீதியாக ஒடுக்கும் வர்க்கத்திற்கு சலுகை செய்யவே இனவொடுக்குமுறை கையாளப்படுகின்றது. வர்க்க ரீதியாக ஒடுக்கும் சிங்களத்; தரப்பை மட்டும், முன்னிலைப்படுத்துவதில்லை. மாறாக இனம் கடந்து, தம் வர்க்கம் ரீதியான எல்லா தரப்பையும் பாதுகாக்கின்றது. வாக்கு அரசியலில் இன ரீதியாக பிரிந்து முரண்படுபவர்கள், ஒன்றாக கூடி உண்டு கும்மாளம் அடிக்கும் பின்னணியில் - இந்த வர்க்க அரசியலே இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் முரண்பட்டு நிற்கவும், அவர்களை முரண்பட வைத்தவர்கள் ஒன்றாக ஒரே அணியாக இருப்பதன் பின்னணியில் வர்க்க அரசியலே உள்ளது. இதுதான் இனவாதக் கொள்கை.

இந்த இடத்தில் தமிழ் அதிகாரத்தைக் கோருபவர்கள் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதையும் கொடுப்பதுமில்லை, முன்வைப்பதுமில்லை. மாறாக வர்க்க ரீதியாக சுரண்டும் தமிழ் தரப்பை ஆதரிப்பதில் இருந்து, இலங்கை அரசின் பொது நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதில்லை. மாறாக அதைக் கையாளும் இடத்தில் தன்னை அமர்த்துமாறு கோருகின்றது.

இன்று இன ரீதியான தேர்தலில், இன அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் ஒடுக்கும் அதிகாரத்தையே கோருகின்றனர். அதேநேரம், அதே இனத்தில் இருந்து இனவடிப்படையில் தெரிவாகாதவர்கள் - இன ரீதியாக ஒடுக்கும் அரசுடன் அதிகாரத்தைப் பகிர்ந்;துள்ளனர். இப்படி அரசுடன் இணைந்து பயணிப்பவர்கள் அதிகாரத்தை பெற்று என்ன செய்கின்றனரோ - அதை விட வேறு எந்தவிதத்தில் தனி அதிகாரத்தை தன் இனத்திற்கு கோரும் இனவாதிகள் - மக்களுக்கு எதையும் புதிதாக செய்துவிடப் போவதில்லை.

இனவொடுக்குமுறைக்கான காரண காரியத்தை ஒருங்கிணைத்து இனவொடுக்குமுறையை அடையாளம் கண்டு போராடாது, அதிகாரத்தைக் கோருதல் என்பது ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் நிலையைக் கடந்து எதுவுமில்லை. சொந்த இனத்தின் மீதான எல்லா ஒடுக்குமுறையையும் இனம் கண்டு, அதற்கு எதிரான போராட்டம் தான் - ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரத்துக்கானதாக இருக்க முடியும். இதை முன்வைத்து யாரும் போராடுவதுமில்லை, அதைக் கோருவதுமில்லை.

இனவாத தேர்தல் கட்சிகள் முதல் புலம்பெயர் "தமிழீழ" அமெரிக்க முகவர்கள் வரை, ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வையோ – தமிழீழத்தையோ கோரியதில்லை - கோருவதில்லை.

மாறாக தமிழனை தமிழன் ஒடுக்கும் அதிகார பகிர்வுக்குள் இனவொடுக்குமுறையை குறுக்கிவிட்டனர். இதைக் கடந்து எவரும் இனவொடுக்குமுறையை அடையாளப்படுத்த முடிவதில்லை. அதிகாரத்தைக் கோருவதற்கு ஏற்ப பழைய சம்பவங்களை முன்னிறுத்துவதன் மூலம், சமகால இனவொடுக்குமுறையை மறுதளிக்கின்றனர். அப்படியாயின் 1970களிலும், 1980 களிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் மேலான இனவொடுக்குமுறை சரியாக இனம் காணப்பட்டதா?

தொடரும்

தமிழினவாதமும், தேசியவாதமும் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 01)

1970-1980 களில் உருவான ஆயுதப் போராட்டம் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 03)

இனவாதச் சிந்தனைமுறை! - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 04)

ஒடுக்குமுறையை அடையாளப்படுத்த தடையாக இருப்பது எது? - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 05)