பிரான்சில்; வெளியான முகமது நபி குறித்த கேலிச் சித்திரத்துக்கு எதிராக, இஸ்லாமிய அடிப்படைவாதமானது தொடர் பயங்கரவாதத்தை ஏவிவருகின்றது. இந்த பின்னணியில் துருக்கி உள்ளிட்ட நாடுகள், சுதந்திரமான கருத்துரிமைக்கு சவால் விடுத்திருக்கின்றன.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் "மேற்குலக நாடுகளுக்கு இஸ்லாம், முஸ்லிம்கள் மற்றும் முகமது நபிகள் குறித்த புரிதலில்லை" என்று கூறியதன் மூலம் மதம் குறித்த புரிததில்லை என்பதன் மூலம், மதம் கடந்த மனித அறிவை மறுக்கின்றார். இந்த மத அடிப்படைவாத கண்ணோட்டத்தில் "கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு எல்லை உண்டு" என்கின்றார். இதன் மூலம் மதக் கண்ணோட்டத்தில் கருத்துரிமையை முன்வைக்கும் அதேநேரம், மத ரீதியான அரசு அதிகார ஒடுக்குமுறையை முன்வைக்கின்றார். அவர் முன்வைக்கும் வாதம் "மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது" என்கின்றார். தாம் அல்லாத அனைத்தையும் மறுக்கும, தனியுடமைவாத சிந்தனையிலான குறுகிய மதக் கண்ணோட்டமே, ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கை முறையாக இருக்க வேண்டும் என்கின்றனர். அதாவது மனித சிந்தனை மதம் சார்ந்து குறுகியதாக இருக்கவேண்டும். "மனதை புண்படுத்தும்" மத அடிப்படைவாதமே இந்தியாவில் இந்து அடிப்படைவாதமாகவும், இலங்கையில் பௌத்த அடிப்படைவாதமாகவும் அரசு சார்ந்து மனிதனை ஒடுக்கும் அதிகாரமாக இருக்கின்றது. எல்லா மதமும், மதம் கடந்த பகுத்தறிவுவாதத்தையும் - ஜனநாயகத்தையும் மறுப்பது என்பதை, எந்த மதமும் விதிவிலக்கின்றிச் செய்கின்றன.

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது "வெவ்வேறு கலாச்சாரத்தையும் மதிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று" கூறியவர் "தன்னுடைய மேற்கத்திய நடைமுறை, மதிப்புகள், வழக்கத்தை திணிக்க முற்படக்கூடாது" என்கின்றார். ஜனநாயகம் என்பது மதக் கண்ணோட்டத்தில் மேற்கத்தைய கலாச்சாரமாகி விடுகின்றது. எல்லா மத அடிப்படைவாதமும் முன்வைக்கும் கலாச்சாரம் என்பது, ஜனநாயக மறுப்பு கொண்ட ஒடுக்குமுறை தான். குறிப்பாக பெண்களை எடுத்தால், ஆணின் அடிமையாக - ஆணுக்கு அடங்கி நடப்பதைத் தான் மதம் முன்வைக்கின்றது. இதைத்தான் கலாச்சாரம் என்கின்றது.

20ம் நூற்றாண்டில் நடந்த புரட்சிகள், காலனிகளில் விடுதலை பெற நடந்த தேசிய போராட்டங்கள், எல்லா நாடுகளிலும் ஜனநாயக விழிப்புணர்ச்சி பெற்ற சமூகங்களை உருவாக்கியது. மதம் குறித்த விமர்சனங்களும், மதப் பழக்க வழக்கங்கள் தொடங்கி மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சமூக ஒடுக்குமுறைகளை தகர்த்து, மனித சமூகம் முன்;னேறியது. இது ஏகாதிபத்திய உலக அதிகாரத்துக்கு – அதன் ஒடுக்குமுறைக்கு சவாலாக மாறியது.

இதை தடுத்து நிறுத்த மேற்கு ஏகாதிபத்தியங்கள் 1970 களில் மத அடிப்படைவாதத்தை மீள திணிக்கும் வண்ணம் பணத்தையும், ஆயுதத்தையும் வழங்கியது. இப்படி உருவான இன்றைய மத அடிப்படைவாதங்கள் மேற்கின் சந்தைப் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் - விரிவாக்கவும் கொண்டு வரப்பட்டதே. இப்படி உருவாக்கப்பட்ட மத அடிப்படைவாதம் தன் சமூகத்தை ஒடுக்கும் அதிகாரமாக வளர்ந்துள்ளதுடன், தனது மத அதிகார ஒழுங்கை உலக ஒழுங்காக்கக் கோருகின்றது. சிந்திக்கும் மனிதனின், அடிப்படை கருத்துரிமையையே மறுக்கின்றது.

முகமது நபி குறித்த கேலிச் சித்திரத்தை வரையக் கூடாது என்று மிரட்டுவதும், வன்முறையை கையாள்வது என்பதும், மனிதனின் சிந்தனை சுதந்திரத்தை மறுதளிப்பதே. சித்திரத்தை வரைகின்றதன் பின்னுள்ள நோக்கம் குறித்து விமர்சனம் இருக்கலாம். அதை விடுத்து வரையும் உரிமையை தடை செய்யக் கோருவது, வரைந்தவரைக் கொல்லுவது என்பது, மனித குலத்திற்கு எதிரான மத சர்வாதிகாரமும் - மதப் பயங்கரவாதமுமே.

"மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகின்றது" எனறு எல்லா மத அடிப்படைவாதமும் முன்வைப்பதன் பின்னுள்ள விரிந்த பொருள் பாசிசமே. இந்த மதப் பாசிசமானது

பிறர் உண்பது "மனதைப் புண்படுத்தும்"
பிறர் அணியும் உடை "மனதைப் புண்படுத்தும்"
பெண்ணின் சுதந்திரம் "மனதைப் புண்படுத்தும்"
மதம் கடந்த திருமணம் "மனதைப் புண்படுத்தும்"
வழிபடாமல் இருத்தல் "மனதைப் புண்படுத்தும்"
மத அடையாளங்களை தரிக்காது வாழ்வது "மனதைப் புண்படுத்தும்"
பிற மத போதனைகள் கேட்பது "மனதைப் புண்படுத்தும்"
பிற மதக் கொண்டாட்டங்களை அனுமதிப்பது "மனதைப் புண்படுத்தும்"
ஒரு பாலின திருமணம் "மனதைப் புண்படுத்தும்"
பெண்கள் கல்வி கற்பது "மனதைப் புண்படுத்தும்"
ஆண்-பெண் சமமாக வாழ்வது "மனதைப் புண்படுத்தும்"
மதம் குறித்து கேள்வி எழுப்புவது "மனதைப் புண்படுத்தும்"

இப்படி ஆயிரம் விடையங்கள் "மனதைப் புண்படுத்தும்" என்று கூறுமளவுக்கு, மத அடிப்படைவாதம் - உலகை மிரட்டுகின்றது. இந்த பின்னணியில் தான் மத அடிப்படைவாதமும் - அரசுகளும் கூட்டாகப் பயணிக்கின்றது. "மனதைப் புண்படுத்தும்" என்பது மனிதன் மதத்தைக் கடந்து சிந்திக்கக் கூடாது. பிற மதத்திற்கு எதிராக சிந்திப்பதை மட்டும் சிந்திக்கக் கோருகினறது. மதம் என்ன சொல்லுகின்றதோ அதன்படி ஆணும் - பெண்ணும் வாழ வேண்டும்.

மத அதிகாரம் அரசு வடிவம் பெற்று வருகின்றது. இந்த வகையில் இலங்கையிலும், பர்மாவிலும் புத்த மதம் அரசுடன் ஒன்றிணைந்து, ஒடுக்கும் மதமாக இருக்கின்றது. இந்தியாவில் இந்துத்துவம் அரசுடன் ஒன்றிணைந்து ஒடுக்கும் மதமாக இருக்கின்றது. இதே போன்று பாகிஸ்தானில் முஸ்லிம் மதமும், இஸ்;ரேலில் யூத மதமும் அரசுடன் ஒன்றிணைந்து ஒடுக்கும் மதங்களாக இருக்கின்றது. அமெரிக்காவில் கிறிஸ்த்துவ மதம் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் அளவுக்கு - ஒடுக்கும் அதிகார வர்க்கத்துடன் இணைந்து இயங்குகின்றது. இப்படி உலகில் பல நாடுகள், மதத்தைக் கொண்டு ஆள்வதுடன், மக்களை மதம் மூலம் பிரித்து ஒடுக்குவது, பிற நாடுகளை மிரட்டுவது வரை நடந்தேறுகின்றது. மதம் என்று கூறிக்கொள்ளும் எந்த மதமும், இதற்கு விதிவிலக்கல்ல.

நாடுகளுக்கு நாடு ஒடுக்கும் வடிவமும் - பண்பும் மாறுபடுகின்;றதே ஒழிய, ஜனநாயகத்துக்கு எதிரானதாகவே மதம் இருக்கின்றது. மதம் தன்னை விமர்சிப்பதை அங்கீகரிப்பதில்லை. தன் பலத்திற்கு ஏற்ப, தனக்கு எதிரான விமர்சனத்தை ஒடுக்குகின்றது. தங்கள் "மனதை புண்படுத்துகின்றது" என்று கூறுவதன் மூலம், தங்கள் மத அதிகாரம் மூலம் பிறர் மனதை புண்படுத்துவதையும், ஒடுக்குவதையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கக் கோருகின்றது.

தனிமனித கடவுள் நம்பிக்கை இப்படி திரிபுபடுத்தப்பட்ட வடிவில் ஒடுக்கும் அதிகாரமாக மாறி, ஆளும் வர்க்கங்களுடன் கூட்டு அமைத்துக் கொண்டு - ஒடுக்கும் கருவியாக உலகெங்கும் இருக்கின்றது.

தனிமனிதன் தான் நம்பும் கடவுளிடம் வேண்டுவது - கோருவது எதையும், மதம் மனிதனுக்கு பெற்றுக் கொடுப்பதில்லை. மாறாக மதம் நம்பிக்கையின் பெயரில் - அதிகாரத்தின் கருவியாக இருக்கின்றது. மனிதனுக்கு எதிரான அதிகார வர்க்க சக்திகளுடன் கூட்டு; அமைத்துக் கொண்டு ஒடுக்குகின்றது. இந்த உண்மையை மூடிமறைக்கவே மதவெறியையும் - மத வன்முறையையும் முன்வைக்கின்றது. கடவுள் உன்னிடம் வேண்டுவது மதவெறியையும் - மத வன்முறையையும் என்று மதங்கள் போதிக்கின்றன. மதவெறியும் - மத வன்முறையும் வழிபாட்டுப் பொருளாக்கப்பட்டு மனிதனை மனிதனுக்கு எதிரியாக நிறுத்துவதுடன் – கொல்லுமாறு கூறுகின்றது.

பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்ட மேற்குநாடுகளோ, தாங்கள் உருவாக்கிய மதவெறியையும் - மத வன்முறையையும் தம் சொந்த மக்களுக்கு காட்டி, இன-மத-நிற வாதங்களை முன்வைக்குமளவுக்கு - மதவாதத்தை எதிர்மறையில் பயன்படுத்துகின்றனர்

இப்படி பன்முகத்தன்மை கொண்டு, மதத்தை முன்னிறுத்தி ஒடுக்குமுறையைக் கையாளும் உலகில், கருத்துச் சுதந்திரம் கேள்விக்குள்ளாகி வருகின்றது, கருத்துச் சுதந்திரம் திரிக்கப்படுகின்றது – ஒடுக்கப்படுகின்றது.

பிறரை ஒடுக்க கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்துவது போல், கருத்துச் சுதந்திரத்தை மறுப்பதும் நடக்கின்றது. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதை ஆளும் வர்க்கங்களும், ஆளும் வர்க்கத்தின் ஒரு உறுப்பாக இருக்கும் மதங்களும் முன்வைக்கின்றன.

கடவுள் குறித்த தனிமனித நம்பிக்கை மதவெறியாகும் போது, தாம் அல்லாதவரை மனிதனாக அங்கீகரிப்பதில்லை. கடவுளுக்கு பதில் மதம் கடவுளாகி விடுகின்றது. இதனால் மதம் குறித்த விமர்சனத்தை தடுக்க முனைகின்றது. இந்த வகையில் எல்லா மதங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

மதம் கடவுளை தனது தனியுடமையாக்கி விட்டது. கடவுளை கற்பித்த மனிதன், கடவுளை தன் தனியுடமையாக கருதியது கிடையாது. ஆனால் மதம் கடவுளை தன் தனியுடமையாக்கி, வன்முறை வடிவம் பெற்று – பிறரை ஒடுக்குவதேயே கடவுள் நம்பிக்கையாக்கி இருக்கின்றது.

மனிதன் நம்பும்; கடவுளை முதன்மைப்படுத்தி உருவான மதம், இன்று மதத்தை முதன்மைப்படுத்தி – மதத்தை வழிபட வைத்திருக்கின்றது. இங்கு மனிதன் நம்பிய கடவுள் காணாமல் போய் விட்டார். கடவுள் தன் வாழ்வியல் பிரச்சனைக்கு தீhவு என்ற நம்பிய மனித நம்பிக்கைக்குப் பதில், தாம் அல்லாத பிறர் மீதான வன்முறையே தீர்வைத் தரும் என்று நம்பும் மனநிலைக்கு மனிதனை மதம் மாற்றியிருக்கின்றது. ஆளும் வர்க்கமும், ஆட்சியாளர்களும் மதத்தின் வன்முறையின் - கருவியாக தம்மை முன்னி;றுத்துகின்றனர்.

.