தமிழக அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய இயக்கங்களே!, இக்கருத்துகளை முன்னிறுத்தும் தனிநபர்களே!!

நீங்கள் புலிகளையும், இனவாத வெள்ளாளிய தமிழ் தேசியத்தையும் ஆதரிக்கின்ற, கொண்டாடுகின்ற அரசியலின் சாரம் என்ன?

இதன் மூலம் யாருக்கான அரசியலை முன்வைக்கின்றீர்கள்? இலங்கை தொடர்பான உங்கள் அரசியல் கண்ணோட்டம், இந்திய அரசியல் உள்ளடக்கம் சார்ந்ததா? அதாவது நீங்கள் ஆதரித்து கொண்டாடுவது இலங்கையில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழனுக்கானதா! அல்லது தமிழனைத் தமிழன் ஒடுக்கும் தமிழனுக்கானதா? பதில் சொல்லுங்கள்!

தியாகம் இருந்தால், அரசியலுக்கு வெளியில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பீர்களா! சொல்லுங்கள்? வீரம் இருந்தால் அது எத்தகைய அரசியலாக இருந்தாலும் கொண்டாடுவீர்களா!? இனவாதத்தை ஆதரிப்பதா பெரியாரியம்! அம்பேத்கரியம்!! மார்க்சியம்!!! சொல்லுங்கள்! வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பைக் கொண்டாடுவதா, ஒடுக்கப்பட்டவனின் அரசியல் நிலைப்பாடு!? தமிழகத்தில் ஒரு அரசியல் நிலைப்பாடும், இலங்கையில் வேறுபட்ட அரசியல் நிலைப்பாடு இருக்க முடியுமா? சொல்லுங்கள்!

சீமானிசமானது அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சியத்தை தடைசெய்து - அவர்களைக் கொன்றால் அதை ஏற்றுக் கொள்வீர்களா? ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டினால் அதைக் கொண்டாடுவீர்களா? இல்லையென்றால் அதைச் செய்த பிரபாகரனிசத்தை ஏற்றுக்கொண்டு – ஒடுக்கப்பட்ட தமிழனின் வாழ்வை அழிக்கும் ஒடுக்கும் வெள்ளாளியத்தை ஆதரிப்பதும் - கொண்டாடுவதும் ஏன்?

புலிகளோ, தமிழ் தேசியமோ ஒருநாளும் ஒடுக்கப்பட்ட அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய இயக்கத்தை ஏற்றுக்கொண்டு, அவர்களைச் சார்ந்து செயற்பட்டது கிடையாது. இந்திய, ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்களைச் சார்ந்து இயங்கிய வலதுசாரிய இயக்கம். தனது அதிகாரத்துக்காக முரண்பட்டதும் - கூடிக் கொண்டாடியதுமே அதன் வரலாறு. இப்படி அதன் அரசியல் வரலாறு இருக்க, நீங்கள் ஏன் வலிந்து கொண்டாடுகின்றீர்கள்? உங்கள் அரசியல் வறுமையினாலா? இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட முடியாத வண்ணம், அதை தடுக்கும் வண்ணம், தமிழனைத் தமிழன் ஒடுக்கும் தமிழனை ஆதரிக்கின்றீர்களே ஏன்?

தமிழகத்தில் தமிழன் என்பதால் எல்லாவற்றையும் ஆதரிக்கின்றீர்களா? இலங்கையில் வர்க்கம், சாதியம், ஆணாதிக்கம், பிராந்திய மேலாதிக்கம், தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் மேலான ஒடுக்குமுறைகளை ஏவும் தமிழ் தேசியத்தை ஏன் ஆதரிக்கின்றீர்கள்? அதாவது இனவாதத்தையும், ஜனநாயக விரோதத்தையும், பாசிசமயமாக்கத்தையும், ஏகாதிபத்தியத் தன்மையையும், வெள்ளாளிய சாதிய சமூக அமைப்பையும் ஏன் ஆதரிக்கின்றீர்கள்!? புலிகள் இதைத்தான் பிரதிபலித்தனர். இன்று சீமான் முன்னெடுக்கும் அரசியல் புலியிசத்தின் எல்லா பிற்போக்கான கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றது. புலி தொடர்பான உங்கள் பகுத்தறிவற்ற, அரசியல் கண்ணோட்டமற்ற நிலைப்பாடு தான், சீமானிசத்தை தமிழகத்தில் வளர்த்தெடுக்கின்றது. அதாவது சீமானிசத்துக்கும் நீங்கள் ஆதரிக்கும் புலியிசத்துக்கும், அரசியல் ரீதியாக எந்த வேறுபாடும் இல்லை. இதுவே உண்மை.

நீங்கள் தமிழன் என்ற பொது வரையறையைக் கொண்டு ஆதரிக்கின்ற கண்ணோட்டம் என்பது, தமிழனைத் தமிழன் ஒடுக்கும் தமிழனுக்கானதே. தமிழனைத் தமிழன் ஒடுக்கிய இயக்கம் புலியிசம்; தான். தமிழகத்தில் தமிழனை தமிழன் ஒடுக்கும் அல்லது இந்தியாவில் இந்தியனை இந்தியன் ஒடுக்கும் சமூக அமைப்பில் - உங்கள் அரசியல் கண்ணோட்டம் ஒடுக்கப்பட்ட தமிழனுக்கு அல்லது ஒடுக்கப்பட்ட இந்தியனுக்கானதாக இருக்கின்ற போது, இலங்கையில் இது எப்படி வேறுபடும்? சொல்லுங்கள். வலதுசாரிய - இடதுசாரிய உள்ளடக்கம், தமிழ் தேசியத்துக்கு பொருந்தாதா?

இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழனை நீங்கள் ஆதரிப்பதாக இருந்தால், முதலில் தமிழனைத் தமிழனாய் நின்று ஒடுக்குவது யார் என்ற கேள்விக்கு, அரசியல் ரீதியாக பதிலளித்தாக வேண்டும். பேரினவாதம் தமிழனை ஒடுக்குவதால் தமிழனைத் தமிழன் ஒடுக்குவதை ஆதரிப்பது எந்தவகையிலும் அரசியல் ரீதியானதல்ல.

தமிழகத்தில் தமிழ் இனவாத பார்ப்பனியத்தை முன்வைக்கும் சீமானிசமானது, இலங்கையின் இனவாதத்தை முன்வைத்த வெள்ளாளிய பிரபாகரனிசமே. தமிழகத்தில் பார்ப்பனியமாக உருவெடுக்கும் சீமானிசத்தை ஆதரிக்க மறுக்கும் நீங்கள், எங்கள் நாட்டில் வெள்ளாளிய பிரபாகரனிசத்தை ஆதரிப்பதன் பொருள் என்ன? இலங்கைத் தமிழர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்ற உங்கள், குறுகிய சந்தர்ப்பவாத அரசியலையை முன்வைக்கின்றீர்களா? சொல்லுங்கள். அரசியலற்ற எல்லா அரசியல் நிலைப்பாடும் சந்தர்ப்பவாதத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்தியாவின் சாதிய சமூக அமைப்பு முறையை பார்ப்பனியமாக பார்க்கும் நீங்;கள், இலங்கையில் அது என்னவாக இருக்கின்றது என்பது குறித்த, உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன? இலங்கையில் தமிழர்கள் மத்தியில் அது வெள்ளாளியமாக இருப்பதை மறுப்பதும், கண்டுகொள்ளாது இருப்பதும் - அதேநேரம் வெள்ளாளிய இனவாத தேசியத்தை கொண்டாடுவதும் ஏன்? இலங்கையின் இனவாத வெள்ளாளிய அரசியலை, அரசியல் ரீதியாக வரையறுக்க மறுப்பதன் மூலம், தமிழகத்தில் இனவாத பார்ப்பனிய சீமானிசம் வளர்வதற்கான அரசியல் அடிப்படையாக மாறி இருக்கின்றது.

புலியையும், தமிழ் தேசியத்தையும் இலங்கை ஒடுக்கப்பட்ட மக்கள் கண்ணோட்டத்தில் இருந்து விமர்சனம் செய்யாத எல்லா வகையான கண்ணோட்டமும், ஒடுக்கும் தமிழனின் வெள்ளாளிய அரசியலை தான் முன்னிறுத்துகின்றீர்கள் என்பதே பொருள். பார்ப்பனியத்துக்கு நிகரான வெள்ளாளியத்தை பாதுகாப்பதன் பொருள் என்ன? அப்படியாயின் நீங்கள் யார்?

பார்ப்பனியம் என்பது பார்ப்பனியச் சாதியைக் குறிப்பதல்ல, ஒட்டுமொத்த இந்திய சாதிய சமூக அமைப்பை குறிப்பதே. இதே போன்று இலங்கையில் சாதி சமூக அமைப்பை எது குறிக்கின்றது. பதில் சொல்லுங்கள்! இதுபற்றி உங்களுக்கு கவலையில்லை என்றால், உங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் நிலைப்பாடு குறித்த கேள்வி எழுகின்றது. அது கண்ணை மூடிக் கொண்டு புலியையும் - இனவாத வலதுசாரிய தேசியத்தையும் ஆதரிக்க வைக்கின்றது.

நீங்கள் தியாகங்களையும் ஆயுதங்களையும் அடிப்படையாக கொண்டு, கொண்டாடுவதாக இருந்தால் அது எந்தவகையான அரசியல்? இலங்கையில் ஆயுதமேந்தி தியாகங்களை செய்த, இரு (1971, 1989-1990) இடதுசாரிய போராட்டங்களை ஏன் கண்டுகொள்வதில்லை? உங்களிடம் இருக்கும் இனவாதமா? புலிகளின் வலதுசாரிய இனவாதத்தை ஆதரிக்கும் நீங்கள், இடதுசாரிய ஆயுதப்போராட்டத்தை கண்டுகொள்ள மறுப்பதன் பொருள் - உங்கள் அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களை அடிப்படையாக கொள்ளவில்லை என்பது தான். தமிழனைத் தமிழன் ஒடுக்கிய வரலாறு தான், தமிழ் தேசிய அரசியல்.

இதை கொண்டாடுவது என்பது இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழனுக்கு எதிரான - ஒடுக்கும் தமிழனின் அரசியல் என்பதே உண்மை. இது இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரானதும், தமிழகத்தில் இனவாத பார்ப்பனியமான சீமானிசத்துக்கு ஆதாவானதுமாகும்.