09302022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

அமெரிக்க சிந்துபாத்களும் பில்லேடன் வேட்டையும்!

PK_2008_3 copie.jpgகாலகாலமாய் கன்னித்தீவைத் தேடும் சிந்துபாத் கதை, நாம் அறிந்தது. ஏறத்தாழ ஆறாண்டுகளுக்கு முன்பு, செப் 11, 2001–க்கு பிறகு தொடங்கிய ஒசாமா வேட்டை, சிந்துபாத் கதைக்கு சற்றும் குறைந்ததல்ல. ""அதெப்படி, எந்நேரமும் ரோந்து செல்லும் எண்ணிலடங்கா ஆளில்லா விமானங்கள், அலசி ஆராயும் உளவு செயற்கைக்கோள்கள், அதி நவீனப் பயிற்சி பெற்ற கமாண்டோப் படைகள், மில்லியன் கணக்கிலான பரிசுத் தொகை... இத்தனை இருந்தும், மத்திய காலத்து மனப்போக்கு கொண்ட, உடல் நலிந்துள்ளதாகக் கூறப்படும்

 ஒரு நடுத்தர வயது மதவெறியனை, உலகின் மாபெரும் சூப்பர் வல்லரசால் ஏன் பிடிக்க முடியவில்லை?'' என அமெரிக்க நியூஸ்வீக் இதழ் கடந்த ஆண்டு செப்டம்பரில் பொருமிப் போய் எழுதியது.

 

உண்மைதான், பரந்து விரிந்த ஆப்கானிஸ்தானின் எல்லையோர மலைப் பகுதிகளில் ஒசாமா பதுங்கியிருப்பதாக துவக்கத்தில் கலர் கலராகப் படம் ஓட்டிய அமெரிக்க அரசும், "உயிருடனோ, பிணமாகவோ ஒசாமாவைப் பிடித்தே தீருவோம்' எனக் கொக்கரித்த ஜார்ஜ் புஷ்ஷம், இன்றைக்கு ஒசாமா குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். 2004–ல் தமது ஒன்றிய உரையில் 15 முறை ஒசாமாவைப் பற்றிக் குறிப்பிட்ட ஜார்ஜ் புஷ், அடுத்த ஆண்டு முதல் ஒசாமா குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை.

 

2001 செப்டம்பரில், அப்போதைய சி.ஐ.ஏ பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர் காஃபர் பிளாக், புஷ்ஷிடம் ""பின்லேடன் தலையைக் கொய்து வந்து உமது காலடியில் சேர்ப்போம் மன்னா'' என வீர சபதம் ஏற்றாராம். உடனடியாக, பின்லேடன் தலையைக் கொண்டு செல்ல, ஆப்கன் அதிகாரிகள் ஐஸ்பெட்டி ஆர்டர் செய்தார்களாம். ஆறாண்டுகளாக, சீந்துவாரற்றுக் கிடக்கும் ஐஸ்பெட்டி மட்டும்தான் மிச்சம். ஒசாமா கிட்டிய பாடில்லை. 2001–லிருந்து பயங்கரவாத ஒழிப்புப் போரின் "நம்பகமான' கூட்டாளியான பாகிஸ்தானுக்கு ஒசாமா வேட்டைக்காக, இதுவரை 10 மில்லியன் டாலரை வாரி வழங்கியிருக்கிறது அமெரிக்கா. ஆனால், ஜனவரி 2008இல், பிரான்சில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய பாக். அதிபர் முஷாரப், ""பின்லேடனைப் பிடிப்பது அத்துணை முக்கியமானதல்ல'' என்றார். ஏன் திடீரென பழம் புளிப்பதாய் நரிகள் அலுத்துக் கொள்கின்றன?

 

"பயங்கரவாதத்தின் கோரப் பிடியிலிருந்து உலகைக் காப்பாற்ற வேண்டிய உடனடிப் புனிதப் பணியை சிரமற்கொண்டு ஆற்றி வரும்' அமெரிக்க அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, சி.ஐ.ஏ.வின் தெற்காசிய நிபுணராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற புரூஸ் ரெய்டல் கூறுகிறார், ""டிசம்பர் 2001இல் தோரா போரா மலைச் சண்டையில் ஒசாமா தப்பிச் சென்ற பிறகு, அந்த வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. உண்மையில் இப்பொழுது நாம் இலக்கற்று இருளில் சுட்டுக் கொண்டிருக்கிறோம். எந்தத் தோட்டாவும் இலக்கைத் தாக்குமா என்பதற்கான சாத்தியப்பாடுகள் பூஜ்யமே''. என்ன வேடிக்கை, வேற்று கிரகவாசிகளைக் கூட அமெரிக்க ஹீரோக்கள் அடித்துத் துவம்சம் செய்கிறார்கள். ஆனால், ஒரு வறண்ட மலைப் பகுதியில், சில நூறு வீரர்களோடு ஒளிந்திருப்பதாகச் சொல்லப்படும் பின்லேடனைப் பிடிக்க அமெரிக்க ராம்போக்களால் முடியவில்லை. ஆக, உலகின் அதி பயங்கரவாதி ஒசாமா உண்மையில் எங்குதான் இருக்கிறார்? ஏன் அவரைப் பிடிக்க முடியவில்லை?

 

பின்லேடன் பதுங்கி இருப்பதாகச் சொல்லப்படும் ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லைப்பகுதி 1500 மைல்கள் நீளம் கொண்டது. வஜிரிஸ்தான், குர்ரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய, சாலை வசதிகளற்ற, கரடு முரடான இம்மலைப் பகுதிகள், பல நூற்றாண்டுகளாக குறிப்பிட்ட எந்த அரசின் ஆளுகைக்கும் உட்பட்ட பகுதியாக இருந்ததில்லை. போர்க்குணமிக்க பத்தான் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினரின் தன்னாட்சிப் பகுதியாக இது விளங்கி வருகிறது. அக்டோபர் 2001வரை பாகிஸ்தான் இராணுவம், தான் உருவாக்கப்பட்ட ஐம்பது ஆண்டு காலத்தில் ஒரு முறை கூட இப்பகுதிக்குள் நுழைந்ததில்லை. இன்று சுமார் 70,000 படையினரை தனது எல்லையில் நிறுத்தி வைத்திருக்கிறது பாகிஸ்தான்.

 

ஒசாமாவை ஏன் பிடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு, அமெரிக்க அதிகாரிகள் பல காரணங்களைச் சொல்லி அலுத்துக் கொள்கிறார்கள். முதலாவது காரணமாக அவர்கள் முன்வைப்பது, இராக் யுத்தத்தைத்தான். இராக் யுத்தம் தொடங்கிய பிறகு ஆப்கானிஸ்தானில் இயங்கிக் கொண்டிருந்த பெரும்பான்மைப் படையினர், இராக்கிற்கு அனுப்பப்பட்டு விட்டனர் என்கின்றனர். ஆனால், அமெரிக்க இராணுவமோ அதிகாரப்பூர்வமாக தெளிவான கருத்து சொல்ல மறுக்கிறது. வழக்கமான சுழற்சிகள் மட்டுமே நடைபெறுவதாகவும், ஒசாமா வேட்டையைத் தேக்கப்படுத்தும் நோக்கம் இல்லையெனவும் கூறுகிறது. ஆனால், இராக்கில் மீள முடியாத புதைகுழியில் அமெரிக்க இராணுவம் சிக்கிக் கொண்டிருப்பது உலகறிந்தது.

 

மேலும், பாகிஸ்தான் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் அரை மனதோடு தான் இருக்கிறது என சி.ஐ.ஏ. அதிகாரிகள் குறை கூறுகிறார்கள். பாகிஸ்தான் அதிகாரிகளோ இதனை ஏற்க மறுக்கிறார்கள். தாலிபான்கள் மீண்டும் வலுப்பெற்று வருவதால், அமெரிக்காவை விட தங்களுக்கே அபாயம் அதிகம் இருப்பதாகவும், அதனால் தாங்கள் முழுமுனைப்போடு தேடுதலில் ஈடுபடுவதாகவும் பாக். இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

 

இன்னொருபுறம், 2005–இல் அமெரிக்க ஏ.பி.சி. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த முஷாரப், பின்லேடனின் புகழ் காரணமாக, பின்லேடன் பாகிஸ்தானில் பிடிபடுவதை விட, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களால் கைது செய்யப்படுவதையே தான் விரும்புவதாகத் தெரிவித்தார். பாகிஸ்தானின் உம்மத் எனும் நாளிதழ் தனது பத்திரிக்கை முகப்பில், இன்றளவும் அன்றாடம் பின்லேடன் புகைப்படம் தாங்கியும், அவரது பொன்மொழிகளோடும்தான் வெளிவருகிறது. பின்லேடன் புகைப்படம் கொண்ட டி–சர்ட்டுகள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இந்நிலையில் பின்லேடன் ஒருவேளை பாகிஸ்தானில் பிடிபட்டால், அது ஒரு தீராத கொந்தளிப்பை உருவாக்கும் என பாக். அரசு அஞ்சுகிறது.

 

இவற்றையெல்லாம் விட, சி.ஐ.ஏ அதிகாரிகளை அயர்ச்சிக்குள்ளாக்கும் விசயம், பின்லேடன் தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை நிர்ணயித்தும், ஒரு விசுவாசி (கைக்கூலி) கூட முன்வரவில்லை என்பது தான். பின்லேடனைப் பிடிப்பதற்கான முதலாவதும், கடைசியுமான கள நடவடிக்கையில் ஈடுபட்ட கேரி பெர்ன்ஸ்டன் என்ற அதிகாரி 2006–இல் ஒரு பேட்டியில் சொல்கிறார், ""இவை அனைத்தும் நாளைக்கே கூட முடியலாம், தேவைப்படுவதெல்லாம் ஒரு திடீர் சோதனை, பரிசுத் தொகைக்காக ஆசைப்படும் ஒரு பழங்குடி மனிதன், அமெரிக்காவில் தனது குழந்தைகளைப் படிக்க வைக்க விரும்பும் ஒரு ஆள்காட்டி போதும். இவை அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்.'' ஆனால் ஆறாண்டுகளாக பெர்ன்ஸ்டன் ஆசைப்படும் அப்படி ஒரு "நாள்' வரவேயில்லை.

 

அதற்கு இரு காரணங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். ஒன்று, பத்தான் இனத்தவரின் பாஸ்தூன்வாலி எனப்படும் பாரம்பரிய விதி. அதன்படி, விருந்தினராக ஏற்றுக் கொண்டவரை உயிரே போனாலும் பாதுகாப்பது. எனவே, உளவாளிகளை உருவாக்குவதோ, கருங்காலிகளை உருவாக்கி அல்காய்தாவிற்குள் ஊடுருவுவதோ சாத்தியமற்றதாக உள்ளது என நொந்து கொள்கிறார்கள். இரண்டு, மே 2005–க்கு பிறகு மட்டும், அதாவது தாலிபான்களும், அல்காய்தாவும் முடங்கி விட்டதாகச் சொல்லப்படும் சூழலில், இதுவரை 23 மூத்த தாலிபான் எதிர்ப்புஅரசு ஆதரவு பழங்குடித் தலைவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, அல்காய்தாவின் நிழல் எங்கும் படர்ந்திருப்பதாகவும், பயபீதி காரணமாக மக்கள் முன்வரத் தயங்குவதாகவும் கூறி, தமக்குத் தாமே சமாதானம் செய்து கொள்கின்றனர்.

 

ஆனால், உண்மைக் காரணத்தை யூசுப்சாய் எனும் பாக். பத்திரிக்கையாளர் அம்பலப்படுத்துகிறார். ""கணக்கற்ற கிராமங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள். அதன் விளைவாக, ஒவ்வொரு கிராமமும் அமெரிக்க–பாக் எதிர்ப்புக்குத் திரும்பியிருக்கிறது. இப்பொழுது படைகள் நடமாடவே முடிவதில்லை. எங்கு பார்த்தாலும் தாக்கப்படுகிறார்கள்.'' ஒருபுறம், தங்களது கைகள் கட்டப்பட்டிருப்பதாகப் பம்மாத்து பண்ணும் சி.ஐ.ஏ அதிகாரிகள்; மற்றொரு புறம், கேள்வி கேட்பாரின்றி ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுப்பதும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு, அதன் விளைவாக கொதித்தெழும் மக்கள் அணிதிரண்டு போராடுவதும் ஆப்கானில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளன. ஒரு கட்டத்தில், 2006–ல், வேறு வழியின்றி பாக். அரசு பழங்குடித் தலைவர்களுடன் சமாதான ஒப்பந்தத்திற்கும் சென்றது. அமெரிக்காவினால் வழிநடத்தப்படும் பாக். படையினரின் மனித உரிமை இலட்சணம் எப்படியிருக்கும் என்பதற்கு ஆதாரங்கள் வேண்டுமா என்ன?

 

கிளைக் கதையாக, 2004–ல் ஜாக் இடெமா என்ற முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரி, தாமாக ஆப்கானிஸ்தானில் சிலரை இரகசியமாக அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளான். தலைகீழாகப் பல நாட்களுக்கு கட்டித் தொங்கவிட்டு, அல்காய்தாவிடம் தமக்குத் தொடர்பிருப்பதாக ஒத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தியுள்ளான். எந்த அமெரிக்கச் சொறி நாய் வேண்டுமானாலும், சி.ஐ.ஏ அதிகாரி என்ற போர்வையில் ஆப்கானில் விசாரணை நடத்த முடியும் என்றால், ஆப்கானில் வழங்கப்பட்ட "சுதந்திரத்தின்' இலட்சணத்தைப் புரிந்து கொள்ளலாம். பின்னர், பலர் மர்மமான முறையில் காணாமல் போக, ஆப்கான் இராணுவம் சோதனை செய்ததில் இடெமா பிடிபட்டான்.

 

விசாரணையில் அமெரிக்க இராணுவத்தின் ஒப்புதலுடன்தான் இவ்வாறு தான் செய்ததாகக் குறிப்பிட்டான். ஆனால், அமெரிக்க இராணுவம் இதனை மறுத்தது. இடெமாவின் மனநிலையைப் பரிசோதிக்குமாறு அறிவுறுத்திய ஆப்கான் நீதிமன்றம், 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஆனால் மூன்றாண்டுகளில் அவன் விடுதலை செய்யப்பட்டு, அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். என்ன இருந்தாலும் அமெரிக்கப் பைத்தியங்களுக்கு சலுகை காட்டாமல் இருக்க முடியுமா?

 

""பின்லேடன் பயந்து பின்வாங்கி விட்டான், அதனால்தான் அவனை பிடிக்க முடியவில்லை'' எனச் சில "நிபுணர்கள்' கருத்து தெரிவிக்கிறார்கள். பின்லேடனைச் சுற்றி, பல மைல் தூர இடைவெளியில், பழங்குடிப் படைகளின் மூன்று பாதுகாப்பு வளையங்கள் இருப்பதாகவும், அதனால் பின்லேடனை நெருங்குவதற்குள் தகவல் பரிமாறப்படுவதாகவும், ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை சொல்கிறார்கள். 2001–க்குப் பிறகு பின்லேடனின் ஒளி நாடாக்கள் வெளியிடப் படுவதில்லை, மேலும் ஒலி நாடாக்கள் வருவதும் நின்று விட்டன என்றும், அதனால் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சொல்கின்றனர். பின்லேடனுக்கு சிறுநீரகக் கோளாறு இருக்கலாம் என மருத்துவர்கள் ஊகிப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

 

ஏன், பின்லேடன் மரித்து விட்டிருக்கலாம் எனக் கூட சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். சில அதிகாரிகள் ""பின்லேடன் இந்துகுஷ் மலையில் இல்லை, ஏதோ ஒரு பாகிஸ்தான் கிராமத்தில் தான் அமைதியாக இருக்க வேண்டும்'' என மர்ம நாவல்களை உருவாக்குகிறார்கள். இவ்வாறு குருடர்கள் யானையைத் தடவி விவரித்த கதையாக, அமெரிக்கப் பத்திரிக்கையாளர்களின் ஆர்வக் கோளாறுக்கு, ஆளாளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள்.

 

மொத்தத்தில், ஆறாண்டுகளுக்கும் மேலாக 24 மணி நேரமும் ஆப்கானில் ஊர்திகள் நடமாட்டத்தை செயற்கைக் கோள்களால் கவனித்து வரும், உலகிலேயே அதி நவீனமான அமெரிக்க உளவு வலைப்பின்னலில், பின்லேடனின் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி அழைப்போ, ஒரு சிறு மின்னணுத் தகவலோ கூட சிக்கவில்லை. நூற்றுக்கணக்கான அல்காய்தா உறுப்பினர்களை ஆறாண்டுகளில் பிடித்திருப்பதாகச் சொன்னாலும், அல்காய்தாவின் உள்வட்டத்திற்குள் சி.ஐ.ஏ நுழைய முடியவில்லை. மிக நவீன எதிரியை, பின்லேடன், மிகப் பழைமையான முறையில் வெற்றி கொண்டார்.

 

இது வரை பின்லேடன், அல் ஜவாஹிரியால் வெளியிடப்பட்ட 23 ஒலி–ஒளி நாடாக்களும் நேரடியாக, நாடாக்களின் உள்ளிருக்கும் தகவல் என்னவென்று அறியாத நபர்களால் அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு கொண்டு சேர்க்கப்பட்டன அல்லது தபால் செய்யப்பட்டன. அல்காய்தாவின் தகவல்கள் அனைத்தும் வாய்மொழியாகவும், காகிதக் குறிப்புகளாகவுமே பரிமாறப்படுப்பவதாக அல்காய்தா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவேதான், ""பின்லேடன் ஆட்கள் யாராவது தாமாகவே அமெரிக்கத் தூதரகத்திற்கு வந்தாலொழிய, நாமாக யாரையாவது கண்டுபிடிப்பது என்பது குதிரைக் கொம்புதான்.'' என கெரெக்ட் என்ற முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி, தேடுதல் வேட்டையின் உண்மை நிலையைப் போட்டு உடைக்கிறார்.

 

பின்லேடனை "ஏன் பிடிக்க முடியவில்லை' என்ற கேள்விக்கான விடையை ஆறாண்டுகளாக ஆராயும் அமெரிக்க ஊடகங்கள், மறந்தும், "ஏன் பிடிக்க வேண்டும்' என்ற கேள்வியை ஆராய முற்படுவதில்லை. ஒசாமா பின் லேடன் உலகின் கொடிய பயங்கரவாதி எனும் கேள்விக்கிடமற்ற அமெரிக்க வாதம், சதாம் உசேன் வைத்திருந்த "பேரழிவு ஆயுதங்கள்' என்ற முழுப்பொய்யின் யோக்கியதைக்கு நிகரானது.

 

ஆனால், அமெரிக்க அரசியல், இராணுவ நிபுணர்கள் நைச்சியமாக "ஏன் பிடிக்க வேண்டும்' என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். பின்லேடனும், ஜவாஹிரியும் செயலற்றுப் போய் விட்டதாகவும், சர்வதேச தீவிரவாதம் அல்காய்தாவைத் தாண்டி, முன் பின் தெரியாத வடிவங்களில், சந்தேகிக்க இயலாத தனிநபர்களிடமிருந்து பிறப்பதாகவும், எனவே, பின்லேடனைக் கைது செய்வது, ஒரு குறியீடாக மட்டுமே இருக்கும் எனவும் வியாக்கியானம் செய்கிறார்கள். என்ன ஒரு விளக்கம்? பின்னர் எதற்காகவாம் இத்தனை காலத் தாக்குதல்களும், அடக்குமுறைகளும், அட்டூழியங்களும்?

 

ஆனால், இந்த வியாக்கியானத்தில் ஒரு அரை உண்மை பொதிந்திருக்கிறது. ஆம், இந்த "பயங்கரவாத எதிர்ப்புப் போர்' தான் உண்மையில் "பயங்கரவாதிகளை'ப் பெருக்குகிறது. ஆப்கானிஸ்தானிலும், பாலஸ்தீனத்திலும், செசன்யாவிலும், இராக்கிலும் அமெரிக்கப் படைகள் நடத்தும் அட்டூழியங்கள்தான் பின்லேடன்களையும், ஜவாஹிரிக்களையும் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

 

உண்மையில், பின்லேடன் பிடிபட்டாலும் சரி, பிடிபடாவிட்டாலும் சரி, இரண்டு நிலைகளுமே அமெரிக்காவின் உலக சாம்ராஜ்யக் கனவிற்கு வலுச்சேர்க்கவே செய்யும். ஏனெனில், எண்ணெய் யுத்தத்திற்கும், ஆசியக் கண்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், தனது துருப்புச் சீட்டாக இசுலாமியப் பயங்கரவாதத்தைத்தான் அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. தற்போதைய சூழலில், ஒசாமாவைப் பிடிப்பதைக் காட்டிலும், பிடிக்காமல் விடுவதே தனது ஏகாதிபத்தியக் கொள்ளை நலன்களுக்கு உகந்ததாக அமெரிக்கா கருதுகிறது.

 

இராக்கில் ஒரு தீராத இராணுவ நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாலும், இசுலாமிய நாடுகளில் ஒசாமா ஒரு நாயகனாக வழிபடப்படுவதாலும், ஒசாமாவை உயிருடனோ, பிணமாகவோ பிடித்தால், அது மேலும் உக்கிரமான எதிர்த் தாக்குதல்களுக்கும், கடுமையான பொருளாதார, இராணுவ நெருக்கடிகளுக்கும் இட்டுச் செல்லும் என அமெரிக்கா அஞ்சுகிறது.

 

மேலும், ஒசாமா மற்றும் அல்காய்தா அபாயம் நீடிக்கும் வரைதான், போர்களையும், கொள்ளைகளையும் நீட்டிப்பதற்கான, அமெரிக்க வாக்காளர்களை ஏய்ப்பதற்கான குறைந்தபட்ச அரசியல் நியாயத்தையேனும் அமெரிக்கா தக்க வைத்துக் கொள்ள முடியும். எனவே, பயங்கரவாதப் போரை உண்மையில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால், உலகின் முதல் நிலை பயங்கரவாதியைத் தண்டித்தால்தான் அதனைச் சாதிக்க முடியும். அம்முதல் நிலை பயங்கரவாதி இந்துகுஷ் மலையில் அல்ல, புஷ் என்ற பெயரில் வெள்ளை மாளிகையில் வெளிப்படையாக உலவிக் கொண்டிருக்கிறான்.


· வாணன்