எத்தகைய தேர்தல் முடிவுகள் வந்தாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்கப் போவதில்லை. இதுதான் தேர்தல் ஜனநாயகத்தின் விதி. சாதிய ஒடுக்குமுறை, இனவொடுக்குமுறை, மதவொடுக்குமுறை முதல் ஆணாதிக்கம், சுரண்டல் என எல்லாம் அப்படியே நீடிக்கும். எல்லாம் மாறிக்கொண்டு இருக்கும் இயங்கியல் விதிக்கமைய, ஒடுக்குமுறையும் நேர்கோட்டில் ஒரேவிதமாக பயணிப்பதில்லை. மாறாக நெளிவு சுழிவுடன் - நாணயத்தின் எந்த பக்கம் ஆள்வது என்பதையே தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கின்றது.

இந்த தேதுதல் அரசியல் விதிக்கமைய திடீரென தோன்றிய புதிய கட்சிகள் வெற்றி பெற்று இருக்கின்றது. கடந்த காலத்தில் மாறி மாறி ஆட்சியமைத்த பாரம்பரிய கட்சிகளோ, தேர்தல் அரசியலில் காணாமல் போய் இருக்கின்றனர். "புதிய மொந்தையில் பழைய கள்ளு போல்" புதிய கட்சிகள் ஆனால் பழைய முகங்கள்.

பழையபடி இனவாத, பிரதேசவாத, மதவாத, சாதியவாத.. கொள்கைகளைக் கொண்ட நவதாராளவாத ஆட்சியாளர்களையும் - அதற்கு ஏற்ப எதிர்கட்சிகளையும் கொண்ட, அதிகார குட்டை.

தமிழினவாதத்தையும், வெள்ளாளிய (இந்து, கத்தோலிக்க) மதவாதத்தையும் முன்வைத்து மக்களை ஒடுக்க முரண்பட்ட தமிழ் தரப்புகள். ஒரே குட்டையில் இருந்து தோன்றியவையே. இன்று ஆளுக்கொரு பக்கமாக, "துரோகி - தியாகி" என்ற புது வேசங்களுடன் - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்ற பாராளுமன்ற சாக்கடையில் களமிறங்கி இருக்கின்றனர். வென்றவர்களுக்கான விருப்பு வாக்குகளோ, தீவிர இன - மதவாத கோசங்களால் பிரிந்து நின்று - ஆளுக்காள் புடுங்குகின்றனர்.

தீவிர பிரதேசவாதத்தை முன்வைத்து கிழக்கின் "உதயத்தையும்" தமிழனுக்கு தீர்வு என்று வடக்கில் "வசந்தத்தையும்" முன்வைத்து, இரு வேறுபட்ட ஆளும் தரப்பு பிரதிநிதிகள் - தமிழ் மண்ணில் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

பணத்தைக் கொண்டு ஒரே கல்லில், ஒடுக்கும் - ஒடுக்கப்பட்ட சாதி வேசங்களையெல்லாம் போட்டுக் கொண்ட, ஆட்சி அதிகாரத்தில் இருந்த இனவாத தேசியக் கட்சி - யாழ் மண்ணில் மட்டும் தனித்து வெற்றி பெற்று இருக்கின்றது.

சென்றமுறை இனவாத தமிழ் தேசியம் பேசி வென்ற பின், திடீரென தோன்றிய புதிய ஆட்சியாளர்களுடன் ஓடிப்போனவர், அதே ஆட்சியாளர்களின் அதிகாரம் , பணப்பலத்தின் துணையுடன் மீள வெற்றி பெற்றுள்ளார்.

இப்படி வடகிழக்கு தமிழர்கள் ஒருபுறம் ஆளுக்கொரு வேசம் போட- மறுபுறம் முஸ்லிம் மலையக கட்சிகள் இன, மத, வாத ஆட்சியாளர்களின் பின்னணியில் குதிரையோடி வென்றுள்ளனர்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேட்ட கட்சி, அதை குறுக்கு வழியில் அடைந்து விடக் கூடிய பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கின்றது. 2009 யுத்தத்துக்கு தலைமை தாங்கி வென்றவர்கள். யுத்தத்தின் முன்னும் - பின்னும் பல்வேறு மனிதவுரிமை மீறல்களை செய்தவர்களே, மீண்டும் ஆட்சியை வந்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் வெளிப்படையான இனவாதம் - மதவாதத்தை முன்தள்ளியதன் மூலம் மக்களை பிளந்து வென்றவர்கள், மீள கிடைத்திருக்கும் அதிகாரமானது ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்தை அச்சுறுத்தி நிற்கின்றது.

கொரோனோவை அடுத்து விரையில் கூர்மையாகவுள்ள உலக பொருளாதார நெருக்கடிகளும், ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் ஏற்பட்டு வரும் யுத்த பதற்றங்களும், அரசுகள் பாசிசமயமாகும் போக்குகளுக்குள்.. இந்த வெற்றி அச்சமூட்டுகின்றது. மக்களின் ஜனநாயக உரிமைகளையும் - வாழ்க்கையும் பறிக்கும் ஆட்சியையே மீள தருவார்கள் என்ற அச்சத்தையே, இவர்களின் கடந்தகால ஆட்சி ஏற்படுத்துகின்றது.

ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்காலம்

தேர்தல் அரசியலுக்கு வெளியில் மக்கள் உரிமையை வென்றெடுக்க போராடுகின்றவர்கள், சொல்லிக் கொள்ளும் வகையில் வாக்கு பெறவில்லை. முன்னிலை சோசலிசக் கட்சி மொத்தமாக 14500 வாக்குகளையே பெற்றிருக்கின்றது.

மக்கள் வாக்களிக்கும் விடையங்கள் மீது அரசியல் ரீதியாக தலையிடாமையும் - பொருளாதார வாதங்களுக்குள் அரசியலை குறுக்கிவிடுவதும் பொதுவான காரணமாகும். அதாவது தேர்தல் கட்சி பேசும் இனவாதம் - மதவாதத்திற்கு எதிராக, மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டாமையே அடிப்படைக் காரணம்.

அதேநேரம் யாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்ட உணர்வுடன் கூடிய வாக்களிப்பு வெற்றி பெற்று இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தி முதன் முதலாக தேர்தலில் நின்ற சுயேட்சைக் குழுவின் வெற்றி, குறிப்பிடத்தக்க ஒன்று. இனவாதத்தை, மதவாதத்தை முன்வைக்கும் வெள்ளாளிய சாதி சமூக அமைப்பை எதிர்த்து, 5492 வாக்குகள் (1.53 சதவீதம்) பெற்றதன் மூலம், புதிய வரலாற்றை தொடங்கி இருக்கின்றனர். அதேநேரம் முன்னிலை சோசலிசக் கட்சி (175), வேறு கட்சிகள் உள்ளடங்க 100க்கு இருவர் ஏதோ ஒரு வகையில் - தங்களை ஒடுக்கப்பட்டவராக உணர்ந்து கொண்டு வாக்களித்து இருக்கின்றனர்.

இந்த ஒடுக்கப்பட்டவர் உணர்வு வெறும் உணர்வாக அன்றி, அரசியல் ரீதியாக அணிதிரள்வதே - எதிர்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்கான அரசியல் பாதை. ஒடுக்கப்பட்டவர்கள் சாதி ரீதியாக தாங்கள் ஒடுக்கப்பட்டவராக உணர்வதல்ல, மாறாக எல்லா ஒடுக்குமுறையை உணர்வதும், அதற்காக போராடுவதன் மூலம், ஒடுக்கப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய செயற்திட்டம் - அதற்கான பிரச்சாரம் தான் எதிர்கால செயற்பாடாக இருக்கவேண்டும்.

யாழ் சமூக அமைப்பு முறை என்பது, வெள்ளாளிய சிந்தனையிலான சாதி சமூக அமைப்பு முறை. மேல் இருந்து ஒடுக்கும் சாதி தொடங்கி அடிநிலையில் ஒடுக்கி வாழும் வெள்ளாளிய சாதிய சிந்தனை முறையை எதிர்த்து பயணங்களை தொடங்க வேண்டும்.

வெள்ளாளிய சடங்குகள், சம்பிரதாயங்கள் தொடங்கி அடங்கியொடுங்கிப் போகும் வாழ்க்கைமுறை வரை, இந்த வெள்ளாளிய சாதிய வாழ்க்கை முறையில்தான் இயங்குகின்றது.

உதாரணமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டு வழிபடும் கோயில்கள் சாதி அடிப்படையில் வெள்ளாளிய பிராமணியத்தை கொண்டு வழிபடும் முறையையும், சமஸ்கிருதத்தை கொண்டு பூசை செய்யும் முறையை மறுதளிப்பதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை தாம் அரசியல் மயப்படுத்த வேண்டும்.

இப்படி பல படிநிலை பண்பாட்டு கலாச்சாரக் கூறுகள் மீதான போராட்டங்கள் மூலம், அதாவது வெள்ளாளிய சிந்தனையிலான வாழ்க்கை முறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை தாங்கள் அணிதிரட்டிக் கொள்வதையே, இந்த தேர்தலில் கிடைத்த வாக்கும் - உணர்வுபூர்வமான வெற்றியும் கோருகின்றது.