இன்று தேர்தல்.
பல நூற்றுக்கணக்கான முகங்கள் களத்தில். அதில் சில பல வருடங்களாக பழகிப் போன அதே முகங்கள்.., இன்னும் சில பழகிப் போன அந்த முகங்களின் தன்மையினை அப்படியே கொண்டு அதே சேற்றில் முளை கொண்டு வளர்ந்து வந்த முகங்கள்.., இதை விடவும் ஆங்காங்கே முளை எடுத்து நிற்கும் புதிய முகங்கள் என பல நூறு முகங்கள் இன்றைய தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆனால் இவர்கள் தேர்தலை வெல்ல வகுத்துள்ள வியூகம் ஒன்று தான். அப்பாவி மக்களை உசுப்பிவிடும் உணர்சி மிக்க பேச்சாலும் கருத்தாலும் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஐந்து வருடங்களை சுகபோகத்தோடு அனுபவிப்பதே இவர்கள் மேற்கொண்டுள்ள வெற்றிக்கான ஒரே வியூகமாகும். இதில் மக்கள் பல வருடங்களாக பழக்கப்பட்டுப் போனாலும், மாற்று வழியினை சிந்திக்க முடியாத நிலையில் இந்த முகங்களையே நம்பி மீண்டும் மீண்டும் தம் உரிமைகளை தொலைத்து விட்டு ஏமாந்து நிற்கின்றார்கள். மக்களின் அறியாமை, இயலாமை, நம்பிக்கையின்மை, மனச்சோர்வு.., இவையெல்லாம் இந்த முகங்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. இது அப்பாவி மக்களின் துரதிஸ்டமே. இந்த மக்களுக்கு நம்பிக்கையினை மக்களின் எதிர்பார்ப்பினை நேர்மையோடு அணுகி அந்த மக்களுடைய நலனக்காக அர்ப்பணிப்போடு செயற்படும் எந்த முகமும் இன்றைய தேர்தல் களத்தில் இல்லை.
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சிகள் தங்கள் கொள்கையினை, வேலைத்திட்டத்தினை திறந்த மனதோடு வெளிப்படையாக முன்வைக்க பின்னிற்கின்றன. பெரும்பான்மையின மக்களின் ஆதரவு தங்களுக்கு இல்லாது போய்விடும் என்ற இவர்களுடைய எண்ணத்தால் சிறுபான்மையின மக்களுடைய ஆதரவினை, நம்பிக்கையினை பெறமுடியாது நிற்கின்றார்கள். இது கடந்தகால அரசியலின் கசப்பான நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகும்.
மொத்தத்தில் தமிழ்மக்களின் வாழ்க்கையும் உரிமைகளும் கேள்விக் குறியோடே தொடர்ந்தும் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்...
இந்த முகங்களின் மாற்றம் எந்த மாற்றத்தையும் தரப் போவதில்லை என்பதே நிஜம்...!
தேர்தலும் முகங்களும்..
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode