தனிமனித நம்பிக்கையைப் பாதுகாக்கும் பிரதிநிதிகளாக காவி பாசிட்டுக்களை உருவாக்குவீர்களேயானால் அல்லது அதை அனுமதிப்பீர்களேயானால், உங்கள் கருத்து எவ்வளவு முற்போக்காக இருந்தாலும் பாசிட்டுகளுக்கு உதவுகிறீர்கள் என்பதே பொருள். தனிமனித நம்பிக்கை என்பது தனிமனித சுதந்திரம், ஜனநாயகத்துடன் தொடர்புபட்டு இருப்பதால், அது எவ்வளவு பிற்போக்கான கருத்தாக இருந்தாலும், அதற்கான ஜனநாயக உரிமையை மறுப்பவராக இருக்க முடியாது. மாறாக தனிமனித நம்பிக்கையின் பெயரில் காவி பாசிட்டுகளின் மனிதவிரோத ஜனநாயக விரோத நடத்தையை எதிர்த்துப் போராடுவதன் மூலம், தனிநபர் நம்பிக்கையைத் தகர்ப்பதற்கு பதில் - அந்த உரிமையை பாசிட்டுகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும்.

இல்லாத வரட்டுப் பகுத்தறிவுவாதம், நாத்திகவாதம் கழுத்தை நெரிக்கவும் - மக்களை ஒடுக்கவுமே, பாசிட்டுகளுக்கு உதவும் கருவிகளாக மாறுகின்றது. காவிப் பார்ப்பனிய பாசிட்டுகளை எதிர்கொள்வதற்கு, வரட்டுத்தனங்கள் உதவாது. மாறாக வரட்டுத்தனமான அணுகுமுறை ஒடுக்கவே உதவும். பெரியார் மண் என்று கூறிக் கொண்டு, பெரும்பான்மையானவர்கள் பெரியாரை எப்படி அணுகுகின்றனர்?

பெரியாரை திராவிடத் தமிழனாக குறுக்குவது, பகுத்தறிவுவாதியாக முடக்குவது, நாத்திகராக கட்டுவதென்பது அடிப்படையில் திரிபே. வெறும் பார்ப்பான் எதிர்ப்பு, மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு.. என்பது, பெரியாரியமல்ல. பெரியாரை திரிப்பதன் மூலம் தங்களைத் தாங்களே குறுக்கிக் கொண்ட "முற்போக்கு" சிந்தனை முறை, பார்ப்பனியத்துக்கான நெம்புகோலாக மாறி விடுகின்றது. இன்று இதுவே "மார்க்சியம், அம்பேத்கரியத்தின்" பெயரிலும் நடக்கின்றது.

பார்ப்பன எதிர்ப்பு, மத எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மொழி வாதம் .. என்று, ஒற்றைத் தன்மை கொண்ட வரட்டுத்தனமான பதிலடியான அணுகுமுறையென்பது, மக்களைப் பகுத்தறிவு அற்றவராக்குகின்றது. ஒட்டுமொத்த மனித வாழ்க்கை குறித்த பகுத்தறிவுவாதமற்ற ஒற்றைப் பதிலடியிலான குறுகிய சிந்தனை முறை, அவதூறுகளாக மாறுவதுடன், மக்களிலிருந்து அன்னியமான வெறும் குழுவாதச் சிந்தனையாக மாறுகின்றது.

தனியுடமைவாதச் சிந்தனைமுறைக்கேற்ற ஒற்றைப் பரிமாணம் கொண்ட சமூக வலைத்தளத்தின் வருகையும் - அதன் வளர்ச்சிப் போக்கும் என்ற விளைவிக்கின்றது எனில் சமூக இயக்கமாக மக்கள் மத்தியில் செயற்படுகின்ற இயங்கியல் போக்கை இல்லாதாக்குகின்றது. இயங்கியலற்ற வரட்டுத்தனத்தை சமூக வலைத்தளத்தில் கொட்டுவதன் மூலம், எதிரியானவன் அமைப்பாகவும் - அதேநேரம் அரசியல் அதிகாரம் கொண்டும் இருப்பதை மறந்துவிடுகின்றது. இது கற்பனைப் புரட்சியாளரையும், அடையாளத்தை நேசிக்கும் தனிமனிதர்களையும் உருவாக்குகின்றது. மக்களின் பிரச்சனைகளை பகுத்தறிவுபூர்வமாக அணுகுவதில் இருந்து விலகி, ஏதோவொன்றில் தொங்கிக் கொண்டு ஒற்றைப் பரிமாணத்தில் இயங்குகின்ற தனிமனித வாதமானது, குழுவாதமாக மாறி, அவதூறு அரசியலாக மாறுகின்றது. முதலாளித்துவ தனிமனிதவாத கண்ணோட்டம் கொண்ட இந்த சிந்தனைமுறையானது, ஒட்டுமொத்த சமூகச் சிந்தனைமுறையாகப் புளுக்கின்றது.

வெடிகுண்டு மூலம் பகுத்தறிவு கொண்ட சமூகத்தை உருவாக்கிவிட முடியுமா?

இப்படி சிந்திக்கின்ற சிந்தனைமுறையே, கடவுள், மதம், சாதி குறித்து ஒற்றைப் பரிணாமம் கொண்டு அணுகுகின்றது. மதம் பகுத்தறிவற்றது என்பதால், கோயில்களை வெடிகுண்டு வைத்து தகர்த்துவிட்டால், மக்கள் பகுத்தறிவு பெற்று விடுவார்களா? மதப் புராணங்கள், இதிகாசங்கள் முன்வைக்கும் மதக் கருத்துகளையும், ஆபாசங்களையும் வெறும் பகுத்தறிவு, நாத்திகம் மூலம் தகர்த்துவிட முடியுமா? இல்லை. ஆனால் இதைத் தான் 99 சதவீதமானவர்கள் செய்கின்றனர்.

மக்கள் புரட்சிக்கு பதில் தனிநபர் பயங்கரவாதம் எப்படி மக்களுக்கு எதிரானதோ, அப்படி தான் மதநம்பிக்கை மீதான வன்முறையும். மக்களை அணிதிரட்டாத தனிநபர் அராஜகம் முதல் குழு அராஜகம் வரை, பகுத்தறிவில் இருந்து மக்களை விடுவிப்பதற்குப் பதில் பகுத்தறிவற்ற சமூகத்தை தக்கவைக்கின்றது. மக்களின் நம்பிக்கை மீதான வன்முறையாக அதனைத் திருப்பிக்காட்டி, ஒடுக்குகின்ற தரப்பு ஒடுக்குமுறை வடிவத்தை பாசிசமயமாக்குகின்றது.

மக்களின் நம்பிக்கையின் பெயரில் கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் காவிப் பார்ப்பனிய பாசிட்டுகள், தங்கள் ஆட்சிமுறைக்கு எதிரான கருத்துகளை ஒடுக்குகின்றது. மதம் குறித்த பகுத்தறிவை ஒடுக்குவதன் மூலம், காவிப் பாசிச வடிவத்தையே மத வழிபாடாக - மத நம்பிக்கையாக மாற்றுகின்றது. ஒடுக்கும் சாதியப் படிநிலையில் மேலே இருக்கும் பார்ப்பனனின்; நலன்களை பாதுகாக்கவும், பார்ப்பனிய சாதிய சமூக அமைப்பு முறையை வாழ்வியலாக ஏற்றுக் கொண்டு வாழ்கின்ற வாழ்க்கையை, மத நம்பிக்கையாக உயர்த்திப் பிடிக்கின்றது. இதையெல்லாம் கேள்விக்குள்ளாக்குவதை குற்றமாக்குகின்றது. இதன் மூலம் நவதாராளவாத முதலாளித்துவச் சுரண்டலை இலகுபடுத்தி பலப்படுத்துகின்றது.

இதற்கேற்றாற் போல் செயற்படுவதா பகுத்தறிவு? மனிதனின் மத நம்பிக்கைக்கு பார்ப்பனியப் பாசிட்டுகளையே பாதுகாவலராக மாற்றுகின்ற செயல் என்பது, பார்ப்பனியத்தை பலப்படுத்துவதே. மத நம்பிக்கை என்பது வெறும் பகுத்தறிவுவாதம் குறித்த பிரச்சனையல்ல. சமூகப் பொருளாதார பிரச்சனையாக புரிந்து கொள்வதன் மூலம், மாற்று நம்பிக்கையை உருவாக்காத பகுத்தறிவுவாதம் - அடிப்படையில் பார்ப்பனியப் பாசிட்டுகளுக்கு உதவுவதே.

பகுத்தறிவுப் போராட்டம் என்பது, வெறுமனே மதத்தை குறிதத்தாக இருக்க முடியாது. மதத்தை பகுத்தறிவு மூலம் விளக்குவது மறுப்பதென்பது, சமூகப் பொருளாதார அடிப்படையிலான பகுத்தறிவை மறுப்பதாகும். மக்களை சமூகப் பொருளாதார அடிப்படையில் அணிதிரட்டாத பகுத்தறிவுவாதம் என்பது, மக்களைப் பகுத்தறிவுக்கு எதிராக அணிதிரட்டுவதுதான்.

கடவுள் நம்பிக்கை, மதம் என்பன சமூக பொருளாதார அமைப்பின் பிரதிபலிப்பே

சமூகப் பொருளாதாரத்துக்கு வெளியில் இயங்கும் கற்பனையல்ல மதம். மதம் கருத்துமுதல்வாத கற்பனைகளைக் கொண்டிருந்த போது, மத நம்பிக்கை என்பது கற்பனையல்ல. மாறாக மனித வாழ்க்கையைச் சுற்றிய நம்பிக்கைக்கான பிறப்பிடம்.

மக்களின் இந்த நம்பிக்கையை தகர்ப்பதற்கு தேவைப்படுவது, சமூக பொருளாதாரத்தின் வெற்றி பெறக் கூடிய மாற்று நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையைத் தராத பகுத்தறிவுவாதம் என்பது வரட்டுத்தனமானது.

இது குறித்து லெனின் "சீரழிந்து போன மூடநம்பிக்கைகளுக்குப் பதிலாகப் புதிய மேலான அதிக அருவருப்பான இழிவான மூடநம்பிக்கைகளை முன் வைப்பதாக" இருக்கக் கூடாது என்கின்றார். முற்போக்கான மாற்றுச் சமூகப் பொருளாதார நம்பிக்கையை மக்களுக்கு ஊட்டுவதன் மூலமே, பிற்போக்கான மத நம்பிக்கையை தகர்க்க முடியும்;.

இதனால் லெனின் மதம் குறித்து கூறும் போது.. "எந்தவொரு சூழ்நிலையிலும், மதம் பற்றிய கேள்வியை சுருக்கமாகவும், கருத்தியலாகவும், "பகுத்தறிவை" வர்க்கப் போராட்டத்திற்கு வெளியே, துவக்கப் புள்ளியாக எடுத்துக் கொள்ளும் பிழையை எந்தச் சூழ்நிலையிலும் செய்யக் கூடாது. பூர்ஷ்வா தீவிர ஜனநாயகவாதிகள் அடிக்கடி இதைத் தான் செய்கிறார்கள். உழைக்கும் மக்கள் மீது முடிவில்லாத அடக்குமுறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில் வெறும் பிரச்சார முறைகளின் மூலம் மதவாத தப்பெண்ணங்களை அகற்றிவிடலாம் என்று நினைப்பது அபத்தமானது. மனிதகுலத்தை அழுத்தி இருக்கும் மதத்தின் நுகத்தடி ஆனது, சமூகத்திற்குள் இருக்கும் பொருளாதார நுகத்தடியின் ஒரு விளைபொருளும் பிரதிபலிப்பும் மட்டுமே என்பதை மறந்துவிடுவது முதலாளித்துவ குறுகிய மனப்பான்மையாக இருக்கும்." என்கின்றார். எதை செய்யக் கூடாது என்று லெனின் கூறினாரோ, அதுவே பார்ப்பனியப் பாசிட்டுகளுக்கு எதிராக தமிழகத்தில் நடந்தேறுகின்றது. மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியத்தின் பெரும்பாலான இன்றைய சிந்தனை முறைகள், மதம் குறித்த லெனின் பார்வைக்கு முரணானது.

மதத்தை வெறும் பகுத்தறிவுவாத பிரச்சனையாக அணுகுவது என்பது, முதலாளித்துவ சிந்தனைமுறை. இந்தப் போக்கானது இன்றைய நவதாராளவாதத்துக்கே சரணடைய வைக்கின்றது. மதம் குறித்த இந்த முதலாளித்துவ மனப்பாங்கு, இந்திய சமூக அமைப்பில் மதத்தை பார்ப்பான் என்ற சாதிக்குள் மட்டும் குறுக்கி விடுகின்ற கண்ணோட்டத்தில் இருந்து பிரதிபலிக்கின்றது.

இந்திய சாதிய மற்றும் இந்துத்துவ சமூக அமைப்பில், மதத்தை பார்ப்பனர் என்ற சாதிக்குள் குறுக்கி அணுகுகின்ற நாத்திகமானது, அடிப்படையில் பார்ப்பனியத்தின் மறுபிரதி தான். இதன் பொருள் மதத்தைப் பாதுகாப்பதற்கானதாகவே மாறுகின்றது.

பார்ப்பான் வேறு பார்ப்பனியம் வேறு என்பதை பிரிக்க முடியாத நாத்திகமானது, பார்ப்பான் மற்றும் பார்ப்பனியத்தை ஒன்றாகக் குழப்பி - ஒன்றாக பார்க்கின்றது. இந்து மதத்தை பார்ப்பானாக பார்க்கின்ற குருட்டுப் பார்வையாகும்.

லெனின் மதத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து “மதத்தை எதிர்த்தல் என்பது சூக்குமமான - சித்தாந்த போதனை என்ற அளவில் நின்றுவிடக் கூடாது, அத்தகைய போதனையாக அதைச் சுருக்கி விடவும் கூடாது. மதத்தின் சமூக வேர்களை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான நடைமுறையோடு போராட்டம் இணைக்கப்பட வேண்டும்." என உரைக்கின்றார்.

இதை ஏன் என்று விளக்கும் லெனின் ".. மதம் தன் பிடிப்பை வைத்திருப்பது ஏன்? அதற்கு காரணம் மக்களின் அறியாமை என்று பதிலளிக்கின்றனர் முதலாளி வர்க்க முற்போக்காளர்கள், தீவிரவாதிகள் அல்லது முதலாளி வர்க்கப் பொருள்முதல்வாதிகள். ஆகவே, மதம் ஒழிக, நாத்திகம் நீடூழி வாழ்க, நாத்திகக் கருத்துக்களைப் பரப்புவதே நமது தலையாய கடமை. இது உண்மை அல்ல, இக்கருத்து மேலெழுந்தவாரியான, குறுகிய முதலாளித்துவ உயர்த்துவோருடைய கருத்து என்று மார்க்சியவாதிகள் கூறுகின்றனர். இக்கருத்து மதத்தின் வேர்களைப் போதிய அளவுக்கு ஆழமாக விளக்கவில்லை. அவற்றைப் பொருள்முதல்வாத முறையில் அல்ல, கருத்துமுதல்வாத முறையில் விளக்குகிறது. நவீன முதலாளித்துவ நாடுகளில் இந்த வேர்கள் முக்கியமாக சமூகத் தன்மையானவை.” என்கின்றார். இந்த வகையில் பொருளை விட்டுவிட்டு மதம், கடவுள் குறித்து பகுத்தறிவுவாதம், கருத்துமுதல்வாதமாக இருக்கின்றது. தமிழகத்தில் மதம், கடவுள் குறித்த இன்றைய அணுகுமுறை என்பது, லெனினுக்கு முரணானது மட்டுமல்ல, பெரியாருக்கே எதிரானது. பெரியார் ஒரு நாளும் வரட்டு நாத்திகத்தைப் பேசவில்லை.

அவர் ஜனநாயக வாதியாக, மக்களின் ஜனநாயகம் குறித்துப் பேசியவர். சாதி ஒடுக்குமுறை, பெண் விடுதலைக்காக.. நடைமுறையில் போராடியபடி, அதற்கு தடையான மதக் கூறுகளை எதிர்த்தவர். வெறும் பகுத்தறிவுவாதியாகவோ, நாத்திகவாதியாகவோ, கடவுள் மறுப்பாளராகவோ இருக்கவில்லை.

கம்யூனிசக் கட்சியில் சேர்பவர்களுக்கு நாத்திகம் கொள்கையாக முன்வைப்பதில்லை. இதை லெனின் “நாம் நாத்திகர்கள் என்று நமது வேலைத்திட்டத்தில் நாம் ஏன் அறிவிக்கவில்லை? கிறிஸ்தவர்களும் தெய்வ நம்பிக்கையுடைய ஏனையோரும் நமது கட்சியில் சேரக்கூடாதென்று நாம் ஏன் தடை போடவில்லை?” என்று கேட்டு, இதற்கு காரணம் "தொழிலாளி வெகுஜனங்கள் முடிவின்றித் தொடர்ந்து ஒடுக்கப்படுவதையும் நயம் கெடுக்கப்படுவதையும் அடிப்படையாய்க் கொண்ட ஒரு சமுதாயத்தில், மத மூடநம்பிக்கைகளை வெறும் நுகத்தடியின் கீழ் வதைபடுவது, சமுதாயத்திலுள்ள பொருளாதார நுகத்தடியின் விளைவும் பிரதிபலிப்புமே ஆகுமென்பதை மறப்பது முதலாளித்துவக் குறுகிய பார்வையையே குறிக்கும். முதலாளித்துவத்தின் இருண்ட சக்திகளை எதிர்த்துப் பாட்டாளி வர்க்கம் தானே போராடுவதன் மூலம் அது அறிவொளி பெறாத வரை, எத்தனைப் பிரசுரங்களை வெளியிட்டாலும், எவ்வளவுதான் உபதேசம் செய்தாலும் அதை அறிவொளி பெறச் செய்துவிட முடியாது. மண்ணுலகில் ஒரு சுவர்க்கத்தைப் படைக்கும் பொருட்டு நடைபெறும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினுடைய மெய்யான இந்தப் புரட்சிப் போராட்டத்தில் ஒற்றுமை ஓங்குவது, விண்ணுலகச் சுவர்க்கம் குறித்துப் பாட்டாளி வர்க்கத்தோரிடையிலான கருத்து ஒற்றுமையைக் காட்டிலும் நமக்கு மிகவும் முக்கியமானது." என்கின்றார்.

மேலும் அவர் இதனால் "நாத்திகத்தை நமது வேலைத்திட்டத்தில் நாம் அறிவிக்கவில்லை, அறிவிக்கவும் கூடாது, எனவேதான் தமது பழைய தப்பெண்ணங்களில் இன்னமும் மீதமிச்சங்கள் சிலவற்றை விட்டொழிக்காது வைத்திருக்கும் பாட்டாளிகள் நமது கட்சியுடன் வந்து இணைவதற்கு நாம் தடைபோடவில்லை, போடவும் கூடாது. எப்பொழுதும் நாம் விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தையே பிரச்சாரம் செய்வோம். பல்வேறு "கிறிஸ்தவப் பிரிவினரது" முரணான கருத்துக்களை நாம் எதிர்த்துப் போராடுவது அவசியமே. ஆனால் மதப் பிரச்சினையை அதற்குச் சிறிதும் உரித்தாய் இராத முதல் நிலைக்கு முன்கொண்டுவர வேண்டுமென்று ஒருபோதும் இதற்கு அர்த்தமல்ல. மூன்றாம் தர அபிப்பிராயங்கள் அல்லது மூடக் கருத்துக்களை முன்னிட்டு, வேகமாய் அரசியல் முக்கியத்துவத்தை அறவே இழந்து, பொருளாதார வளர்ச்சியின் போக்கினாலேயே வேகமாய்க் குப்பை குழியிலே ஒதுக்கித் தள்ளப்பட்டு வரும் இவற்றை முன்னிட்டு, மெய்யாகவே புரட்சிகரமான பொருளாதார, அரசியல் போராட்டத்தின் சக்திகள் பிளவுபடுவதற்கு நாம் அனுமதிக்க வேண்டுமென்றும் இதற்கு அர்த்தமல்ல. பிற்போக்குவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் மதப் பூசலைத் தூண்டிவிடுவதில் எங்குமே கருத்துச் செலுத்தி வந்துள்ளனர் .." என்று கூறுகின்றார். மக்கள் ஒருங்கிணைவதை சிதைத்துவிடுகின்ற நாத்திகவாதம் என்பது, வெறும் மத எதிர்ப்பு கருத்துக்களை கொண்ட செயலற்ற அராஜகவாதமே. அடிப்படையில் முதலாளித்துவ வாதம்.

வரட்டு "மார்க்சியம்" போன்று வரட்டு "நாத்திகமும்" மக்களுக்கு எதிரானது. உலகமயமாதலில் பாலியல் ஆபாசங்களை அன்றாடம் ரசிக்கின்ற அளவுக்கு, சந்தைப் பொருளாதாரத்தின் ஆன்மாவாகி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் மதம் சார்ந்து இருக்கின்ற பாலியல் வக்கிரங்களை, மத நம்பிக்கை உள்ளவன் நுகர்வதில்லை. இதன் பொருள் மத நம்பிக்கை இதற்கு வெளியில் இயங்குகின்றது. இந்துப் புராணங்கள், இதிகாசங்கள், கடவுள்கள், சிற்பங்கள்.. எங்கும் பாலியல் ஆபாசம் நிறைந்ததாக இருந்த போதும், உலகமயமாதல் சமூகத்தின் பாலியலை ரசிப்பது போன்று, மதத்தின் பின்னாலான பாலியல் வக்கிரத்தை மத நம்பிக்கை உள்ளவன் அணுகுவதில்லை.

இப்படி உண்மை இருக்க நாத்திகமானது மதத்தின் பின்னுள்ள பாலியல் வக்கிரத்தை குறிவைப்பதன் மூலம், மத நம்பிக்கை பாதுகாக்கப்படுகின்றது. மதம் குறித்துப் பேசுவதே நாத்திகம் என்பது தவறு. மனித வாழ்க்கையைப் பேசுவதே நாத்திகம்.

அறிவு மூலம் மக்களின் மத நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கினால், பகுத்தறிவு உருவாகிவிடுவதில்லை. விஞ்ஞான அடிப்படையில் கற்கின்ற – அதன் அடிப்படையில் பொருளாதார வாழ்க்கை ஆதாரத்தை பெறுகின்ற மனிதர்கள் கூட, மத நம்பிக்கையை கொண்டு இருக்கின்றனர்.

மதத்தை அதன் கருத்துமுதல்வாத கூறுகளை விமர்சிப்பதன் மூலம் அல்லது இழிவுபடுத்துவதன் மூலம் பார்ப்பானை கேவலப்படுத்துவதாக - அம்பலப்படுத்துவதாக நினைத்து செய்கின்ற செயல், பார்ப்பானை பலப்படுத்துகின்றது. பார்ப்பனியத்தை வலுப்படுத்துகின்றது.

மக்களின் வாழ்க்கை சார்ந்து, அவர்களின் நம்பிக்கை சார்ந்து ஓடுகின்ற ஆயிரம் விடையங்கள் இருக்கின்றது. அதை விழிப்பூட்டி அறிவூட்டுவதை விடுத்து – வெறும் நாத்திகமானது மக்களை மேலும் மதத்துக்கு அடிமையாக்குவது தான்.

மதம் நம்பிக்கை என்பது வாழக்;கை மீதான அச்சத்தில் இருந்து உருவாகின்றது. தன்னைச் சுற்றி நிகழ்கின்ற நிகழ்வுகளுக்கு தீர்வாக மதத்தை நம்புவது நிகழ்கின்றது. மனித நம்பிக்கைகளை பயன்படுத்தி அவர்களையே அப்படியே வைத்திருக்க மதம் உருவாக்குகின்றது. தங்கள் மதத்தை நிலைநாட்ட, நம்பிக்கைக்கு கற்பனை புகுத்தி விடுகின்றனர்.

இதனை லெனின் “வாழ்நாள் முழுதும் உழைத்து, இல்லாமையால் துன்புறுவோர் மண்ணுலகில் அடிபணிந்து பொறுமையாய் இருக்கவும், விண்ணுலகில் நற்பேறு கிட்டுமென்ற நம்பிக்கையால் மன ஆறுதல் பெறவும் மதம் அவர்களுக்குப் போதிக்கிறது. ஆனால் ஏனையோரது உழைப்பை உண்டு வாழ்வோர் மண்ணுலகில் தர்மவான்களாய் வாழ்வதற்கு மதம் அவர்களுக்குப் போதிக்கிறது, சுரண்டலாளர்களாய் அவர்கள் நடத்தும் வாழ்க்கை அனைத்துக்கும் நியாயம் கற்பித்துக் கொள்ள இவ்விதம் அது மிக எளிமையான ஒரு வழியை அளிப்பதோடு, விண்ணுலக இன்ப வாழ்வுக்கும் மிதமான விலையில் அவர்களுக்கு டிக்கெட்டுகள் விற்கிறது. மக்களது அபினியே மதம். ஒருவகை ஆன்மீகக் குடிபோதையே மதம் - மூலதனத்தின் அடிமைகள் தமது மானுட உருவை, ஓரளவேனும் மனிதனுக்கு உகந்த வாழ்வு பெற வேண்டுமென்ற தமது கோரிக்கையை இதில் மூழ்கடித்து மாய்த்துக் கொள்கின்றனர்.”

இது தான் மதத்தின் சாரம்;. இதை மாற்றாமல் எப்படி அறிவூட்டமுடியும்? "மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது."

"சமுதாயத்தின் ஏனைய எல்லாப் பகுதிகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளாமல் தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பகுதி, அதன் மூலம் ஏனைய எல்லாச் சமுதாயப் பகுதிகளையும் விடுவிக்காத ஒரு பகுதி ஒரே வார்த்தையில் சொன்னால் மனிதனின் பூரண இழப்பாக உள்ள ஒரு பகுதி அது, எனவே அந்தப் பகுதி மனிதனை மீண்டும் பூரணமாக வென்று மீள்வதன் மூலம்தான் தன்னைத்தானே வெற்றிகொள்ள முடியும்."