நான் ஒரு "வெள்ளாடிச்சி" என்பதை தலித்தியமாக நிறுவ, "வெள்ளாளனின்" முயற்சி தான், "வெற்றிகொள்ள முடியாதா என்ன!" என்று கேட்க வைக்கின்றது. டானியலின் இலக்கிய மொழியில் இத்தகைய வெள்ளாளர்களை குறித்து எழுதிய போது, வெள்ளாளிய "மார்க்சியவாதிகள்" கொதித்துப் பொங்கிய அரசியல் விமர்சனங்களே - இன்று நுண் அரசியலில் வேசம் போடுகின்றது.

இந்த நுண் அரசியலின் உத்தி என்ன? தன்னை எல்லாமாக நிறுவிக் காட்டுவது. இது போன்று தான் தலித்தியத்தின் பெயரில், அரசியல் முதல் இலக்கியம் வரை அரங்கேறுகின்றது. ஒரே விதமான உத்தி. மொழிகளில் எல்லா ஒடுக்குமுறைகளை பேசுவதன் மூலம், தன்னை ஒடுக்கப்பட்டவனின் அணியாக காட்டிக் கொண்டு - ஒடுக்குபவனுடன் நடைமுறையற்றுக் கூடிக் குலாவுவது.

ஆனந்தசங்கரியின் மொழியில் சொன்னால், நான் ஒடுக்கப்பட்டவனின் வீட்டில் சாப்பிட்டவன் என்று கூறுகின்ற, அதே வெள்ளாளிய நரித்தனம்;. சாப்பிட்டால் என்ன, திருமணம் செய்தால் என்ன, நீ ஒடுக்கப்பட்டவனுடன் நடைமுறையில் இருக்கின்றாயா இல்லையா என்பது மட்டும் தான் ஒடுக்கப்பட்டவனின் அளவுகோல். இதைவிடுத்து ஒடுக்கப்பட்டவனுடன் நிற்பதாக எழுதுவது, பேசுவது, அறிக்கை விடுவது, நடிப்பது எல்லாம் சாதி சமூக அமைப்பில் வெள்ளாளியம். மொழிக் கோர்வைகள் - மொழிப் பூச்சாண்டிகளோ, ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையுடன் பயணிப்பவனுக்கு தேவையற்றது. நடைமுறையில் வாழாதவன் கையாளும் உத்திதான், நடிப்பு முதல் ஒடுக்குமுறை பற்றி நடைமுறைக்கு வெளியில் எழுதுவது.

ஒடுக்குகின்றவன் தான் ஒடுக்குவதில்லை என்று நிறுவ முனைவதே, இன்றைய வெள்ளாளிய "நுண்" அரசியல். "வெற்றிகொள்ள முடியாதா என்ன!" என்று கேட்டு வெள்ளாளிய சிந்தனையை மீள தகவமைப்பதும், “பிழைக்க வழியில்லாதவன் சாதியை வைத்து பிழைக்க வழி தேடுகிறான்.”… என்று, சாதியை ஒழித்துவிட்டதாக பினாற்றுகின்ற வெள்ளாளியக் கட்சிகள் வரை, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் தான்.

1990 களில் வர்க்க அரசியலை மறுக்க புலத்தில் "பின்நவீனத்துவ" நுண் அரசியல் பேசியவர்களில் பெரும்பாலானவர்கள்;, 2000 இல் புலியின் பினாமிக் கட்சியான "தமிழீழ கட்சியின்;" இரகசிய - பகிரங்க உறுப்பினர்களானார்கள். அதை வந்தடைய பேசிய நுண் அரசியல் சாரம், வர்க்க அரசியலை மறுப்பது தான். எங்கே தொழிலாளிகள் இருக்கின்றனர் என்று கேட்பது தொடங்கி எத்தனை கதையாடல்கள். இதன் மற்றொரு பகுதி தான் புலியெதிர்ப்பு பேசிய "தலித்திய" வெள்ளாளியம்;. இது புலிக்கு மாறாக உருவான வெள்ளாளிய வரலாறு. ஒடுக்கப்பட்ட மக்களை கைவிட்ட வரலாறு. இன்று தங்கள் வெள்ளாளியம் கேள்விக்குள்ளாவது கண்டு, கும்பகர்ண நித்திரையில் இருந்து துடித்துப் பதைத்து பலர் எழுகின்றனர். ஐயோ எதை வரலாற்றில் இருந்து கற்றீர்கள் என்று குமுறி எழுகின்றனர். வரலாற்றில் இருந்து கற்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எதை இன்று கிழிக்கின்றீர்கள் என்பதை நடைமுறையில் நிறுவதில்லை.

ஆம் இன்று அதே கூட்டம், சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை முன்வைத்து போராடுவதை மறுப்பதற்கு களமிறங்கி இருக்கின்றது. தாங்கள் எல்லாவற்றையும் பேசுவதாக நடிக்கும் சூக்குமான மொழியில் புலம்புவதன் மூலம், வெள்ளாளியம் என்ற ஒடுக்குமுறை இல்லையென்று நிறுவுவது நடக்கின்றது. இது இல்லாத சாதியை முன்வைத்து “பிழைக்க வழியில்லாதவன் சாதியை வைத்து பிழைக்க வழி தேடுகிறான்.” என்று மேடை போட்டு கூறுகின்றவனின், வெள்ளாளிய வக்கிரத்துக்கு நிகரானது.

இன்று தேர்தல் களத்தில் "மக்கள் ஜக்கிய மேம்பாட்டு முன்னணி" (சுயேட்சை) குழுவை சாதி முத்திரை குத்தி தனிமைப்படுத்த முனையும் வெள்ளாளியம் ஒருபுறம் கூச்சலிட, மறுபக்கத்தில் இல்லாத சாதியை முன்னிறுத்தி மக்களைப் பிளக்க முனைகின்ற இடதுசாரியம் என்று, வெள்ளாளிய ஒடுக்குமுறையாளர்கள் பிதற்றுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட சாதிகள் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்ற எதார்த்தம், "மக்கள் ஜக்கிய மேம்பாட்டு முன்னணி" பின்னால் மக்களை அணிதிரட்டுகின்றது. இன்னுமொருபுறம் அரசு ஆதரவான ஈ.பி.டி.பியின் வாக்குவங்கி, சாதிரீதியான ஒடுக்குமுறையை அரசியலாகக் கொண்ட தேசியத்திற்கு எதிரான வாக்குகளை அணிதிரட்டி இருக்கின்ற உண்மையை, வெள்ளாளியம் கண்ணை மூடிக்கொண்டு அதை மறுக்கக் கோருகின்றது. தாங்கள் சமபந்தி நடத்தி, ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றிய தங்கள் வெள்ளாளியப் பெருமையை மேடை போட்டு பீற்றுகின்றனர்.

"இப்போ தலித் என்ற மொத்தத்துவத்துள் சாதியப் படிநிலைகளை, அவற்றுக்கிடையிலான உறவுமுறைகளை, கலவாமை போன்ற உப தீண்டாமைக் கூறுகளை மறைத்து அல்லது பேசாப்பொருளாக்கி நகர்தலும் சரியானதுதானா என சிந்திக்க வேண்டியிருக்கிறது. இவைகளை இப்போதைக்கு பின்போட வேண்டும். அதைப் பேசுவது சாதியெதிர்ப்புப் போராட்டத்தை பலவீனமாக்கும் என நினைத்தால் நாம் எமது இயக்க வரலாறுகளிலிருந்து பாடம் படிக்கத் தவறியவர்களாவோம் என்பதை இங்கு பதிவுசெய்துவிடலாம். இந்தக் கருத்தை சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொதுமையை அதன் ஆதாரத்தன்மையை நிராகரிப்பதாக மொழிபெயர்க்காமல் இருந்தால் சரிதான்." இது தான் வெள்ளாளிய நுண் சிந்தனை. அந்த சிந்தனை உருவாக்கும் வெள்ளாளிய புத்தி.

ஒடுக்குமுறையை "பேசாப்பொருளாக்கி நகர்தலும் சரியானதுதானா என சிந்திக்க வேண்டியிருக்கிறது" என்று ஒடுக்குகின்ற வெள்ளாளியத்தால் மட்டுமே கூறுமுடியும்;. ஒடுக்குமுறையை அனுபவிப்பவன் ஒருநாளும் கூற முடியாது. சாதி என்பது தமிழர்கள் மத்தியில் வெள்ளாளியமாக இருப்பதையும் - அதை மறுப்பதில் இருந்து தலித்துக்குள்ளான சாதியம் குறித்து பேசுகின்றது. சாதி என்பது சாதிய சமூகத்தில் எங்கும் இருக்கின்றது என்ற பொருளிலேயே, வெள்ளாளியம் குறிக்கின்றது. இதை பேசாத அரசியல் வெள்ளாளியம் தான்.

"இப்போதைக்கு பின்போட" வேண்டும் என்று தலித்தியத்தை குற்றம் சாட்டும் வெள்ளாளியம், இதன் மூலம் தங்கள் வெள்ளாளியக் கொழுப்பு கரையும் வரையும் போராடுவதை பின்போடக் கோருகின்றது. "வெள்ளாடிச்சி" என்று கூறுவதை சமன் செய்ய, தலித் தங்கள் சாதிக்குள் சாதியை பேசாததை பற்றி வகுப்பெடுக்கின்றது. இது தான் வெள்ளாளனின் நுண் அரசியல்.

இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதிக்குள் சாதி ஒடுக்குமுறைகள் பேசுவதை தவிர்ப்பது போன்று, தன்னை தலித்தியமாக தகவமைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த வெள்ளாளியத்துக்கும் அதை பொதுமைப்படுத்துகின்றது. "வெள்ளாடிச்சி" என்பது இப்படிதான் என்கின்றது.

"..பேசுவது சாதியெதிர்ப்புப் போராட்டத்தை பலவீனமாக்கும் என நினைத்தால் நாம் எமது இயக்க வரலாறுகளிலிருந்து பாடம் படிக்கத் தவறியவர்களாவோம்" என்று கூறுகின்றவர்கள், இயக்க வரலாற்றில் இருந்து எதை கற்றுக்கொண்டார்கள்? ஒடுக்கப்பட்ட தேசியம் தோற்றுப்போனதுக்கு எந்த வெள்ளாளியம் காரணமாக இருந்ததோ, அதை மறுக்கவும் – மூடிமறைக்கவும் கற்றுக்கொண்டதையா, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவன் கற்றுக்கொள்ள வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுடன் நடைமுறையில் நிற்காத எவரும், கற்றுக் கொண்டது எதுவுமில்லை. இது தொடரும் ஒடுக்குமுறைக்கு ஆதரவானது.

ஒடுக்கபட்ட தேசிய இனம் தன் அக ஒடுக்குமுறையை "பேசாப்பொருளாக்கி நகர்தலும் சரியானதுதானா என சிந்திக்க வேண்டியிருக்கிறது" என்ற கூறும் நீங்கள் "தமிழீழ கட்சியில்" இரகசியமாக களமிறங்கினீர்கள். அன்று எதைச் செய்தீர்களோ, அதை சாதியத்திலும் கையாள கிளம்பி இருக்கின்றீர்கள். நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நடைமுறையில் இணைந்து இருக்காதவரை, துடித்துப் பதைத்து களமிறங்குவது ஒடுக்குபவனுக்கு சாதகமாகவே.

“பிழைக்க வழியில்லாதவன் சாதியை வைத்து பிழைக்க வழி தேடுகிறான்.”… என்று கூச்சல் போடும் வெள்ளாளியத்திற்கு நிகரானது, "வெற்றிகொள்ள முடியாதா என்ன!" என்று ஒடுக்குபவனுடன் நிற்காது உளறுவது.