Thu07022020

Last update01:00:51 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மரபை அழித்தல்

  • PDF

வருடம் ஒருமுறை ஆகமம் சாராத அமைப்பினைக் கொண்ட கோயில்களில் நிகழ்த்தப்படும் வழிபாட்டு 'நிகழ்த்து'தலே மட்டக்களப்பில் சடங்கு எனச் சொல்லப்படுகின்றது. முழுக்க முழுக்க மக்கள் வழிபாடாக, மக்கள் பங்களிப்புடன் இடம்பெறும் இச்சடங்குகள் அதன் நிகழ்த்துதலின் தனித்துவத்தினால் ஏனைய இடங்களில் இருந்து மட்டக்களப்பைத் தனித்துவமாக்குகின்றது. 'கதவு திறத்தல்' உடன் ஆரம்பமாகி 'கும்பம் சொரிதல்' உடன் நிறைவுறும் இச்சடங்குகள் 'பத்ததி' / 'பத்தாசி' எனப்படும் நாட்டார் அல்லது மரபான பூசை விதிமுறைப்படி நிகழ்த்தப்படுகின்றன. கதவு திறத்தல் நிகழ்வு ஒரு சம்பிரதாய, ஆரம்ப சடங்கு நிகழ்வாக இருந்தாலும்கூட, அதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்பே அந்தப் பிரதேச மக்களின் மனங்களில் சடங்கு தொடர்பான 'அசைவு' ஆரம்பிக்கும். ஏனெனில் இது எங்களின் வாழ்க்கை; நீங்கள் சொல்வது போல வரைமுறைகளைக் கடைப்பிடித்து, நேரமும் காலமும் ஒதுக்கி 'அசைவை' உருவாக்குவதல்ல.

சடங்கில் நடத்தப்படுகின்ற நிகழ்வுகள், பூசகர், தெய்வம் ஆடுபவர், கும்பமெடுப்பவர் என்று தொடங்கி இதில் பங்குபற்றுவர்களின் செயற்பாடுகள் பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் ஆறு பேர்தான் பங்குபற்றவேண்டும்; தனிநபர் பாதுகாப்பு வரைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அட்டவணைப்படுத்திக் கூறுவதிலிருந்து உங்களிடம் சடங்கு பற்றிய அறிவும் தெளிவும் இல்லாதது மிகத்தெளிவாகத் தெரிகின்றது. இதில் கவலைக்கிடமான விடயம் உங்கள் குழுவில் ஒரு பூசகரும் இருப்பதுதான். ஆகமவிதிப்படி உபயகாரர் காசு குடுக்க, குருக்கள் நெய்வேத்தியத்தைச் செய்து தீபம் காட்டி வீட்டுக்குப் பூசைச் சாமனையும் விபூதியையும் பார்சலில் அனுப்பி வைப்பதல்ல சடங்கு. ஊரை விட்டு வெளியேறியவர்களும், உற்றமும் சுற்றமும் கூடி எதிரியும் நண்பர்களாக மாறும் சாத்தியத்தினை உருவாக்கி மக்களின் ஒற்றுமைக்கு ஆதாரமாக இருப்பது சடங்கு. சடங்கில் ஊர் கூடித் தேர் இழுத்தல் என்ற கருத்துப்போய் அனுமதிக்கப்பட்டவர் மட்டும்தான் ஆலயத்துக்குள் வரலாம் என்ற பாகுபாட்டை முன்னிறுத்துவதாக அமைகிறது உங்கள் ஏற்பாடு. பொதுமக்களை, தெய்வம் ஆடுபவர்களை, தொண்டு செய்பவர்களை எந்த அடிப்படையில் வகைப்படுத்துவது? இங்கு ஒற்றுமை அழிக்கப்பட்டுச் சடங்கின் அடித்தளமே ஆட்டம் காணுகிறது.

மட்டக்களப்புச் சடங்குகள் கட்டுப்பாடற்றவை. நிகழ்த்துதலுக்கான ஒரு அடிப்படை உண்டே தவிர நிகழ்த்துதலை அக்களமே தீர்மானிக்கும். அதனால் சடங்கானது ஒவ்வொருமுறையும் புதிது புதிதாகின்றது. அதனாலேயே இன்றுவரை அது நின்று நிலைத்திருக்கின்றது. நீங்கள் குறிப்பிடும் மாற்றங்களை உள்வாங்கி மட்டக்களப்புச் சடங்குளைச் செய்கையில் வெறுமனே அது சம்பிரதாயமே தவிர சடங்கல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்தவிதமான மாற்றமுமே மக்களிடம் ஏற்படப் போவதில்லை. இந்த அடிப்படையான புரிதல்கூட இல்லாது சடங்கினை வரையறைக்கு உட்படுத்தும் உங்கள் புலமைத்துவம் (பல்கலைக்கழகம் சார்ந்த பேராசிரியர் பதவி என்பதன் அடிப்படையில் அமையும்) உங்களின் அதிகாரத்தின் தொனியாகவே உள்ளது. சடங்குகள் பற்றிய சடங்குகள் பற்றிய மேலோட்டமான உங்கள் பார்வையை அப்பட்டமாக்குக்கின்றது.

சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் மூடநம்பிக்கைகள், மூடர்களின் செயல் என்று அறிவுள்ள மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட காலம் போய் இவற்றிலும் ஒரு வாழ்வியல் விஞ்ஞானம் இருக்கின்றது என்று ஏற்றுக் கொண்டு அதைக் காப்பாற்றப் போகிறோம் என்று அது பற்றிச் சிந்திக்க முற்படும் உங்களைப் பாராட்டவேண்டும். ஆனால் இதைப்பற்றி விமர்சிக்கவும் ஆய்வுக்குட்படுத்தவும் மட்டுமே உங்களால் முடியும். சடங்கு உங்களுக்கு கேளிக்கைகள் நிறைந்த ஒரு நிகழ்வு, நீங்கள் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிக்கூடம். ஆனால் எங்களுக்கு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் எங்களின் ஒரு புனிதமான வாழ்வியல் விஞ்ஞானம்.

ஒவ்வொரு சடங்கும் தனித்தன்மை வாய்ந்தது. பொதுவான பார்வையில் பொதுத்தன்மைகளைக் கொண்டதாகத் தோற்றமளிக்கும் மட்டக்களப்புச் சடங்குகள் ஊரின் நடைமுறை, தெய்வம் என்பவற்றுக்கேற்ப தனக்கான தனித்துவத்தை அது கொண்டு நிற்கிறது. அத்தனித்துவமே இச் சடங்குகளின் சிறப்பு. அத்தனித்துவத்தினைக் கவனத்தில் கொள்ளாது அத்தனித்துவத்தைச் சிதைத்து சடங்குகளுக்கான பொதுவான நடைமுறைகளை வகுத்து மட்டக்களப்புச் சடங்குகளை ஒரே நடைமுறைக்குள் கொண்டுவர முயன்றுள்ள செயற்பாடாகவே உங்கள் செயற்பாடு உள்ளது. இடரான சூழலில் மக்களிடம் மேலோங்கியுள்ள உணர்வினைச் சாதகமாக்கி, சடங்கின் நிகழ்த்துதல்களுக்குச் சம்மந்தமே இல்லாத கல்வியாளர்களாகிய நீங்கள் சடங்குகளை உங்கள் ஆதிக்கத்தின் கீழ், கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயலுகின்றீர்கள். இது ஒரு வகையான காலனித்துவ மனநிலையே. கல்வியாளர்களாகிய நாங்கள் யாவும் அறிந்தவர்கள், பாமர மக்களாகிய உங்களுக்கான வழிகாட்டிகள் நாங்களே, எங்களைப் பின்பற்றுங்கள், உங்களை நாங்கள் வழிநடத்திச் செல்லுகின்றோம் எனச் சொல்லாமல் சொல்லுகின்றீர்கள். உங்கள் அதிகாரப் புலமைக்குள் இச் சடங்குகளைக் கட்டிப்போட முனைகின்றீர்கள். கற்றலும் கற்பித்தலுமே உங்கள் பணி. அதனைச் செய்யுங்கள். மக்களாகிய எங்களின் நடைமுறைகளுக்குள் உங்கள் புத்திசாலித்தனங்களை நுழைத்து அதனை நீங்கள் கையகப்படுத்த நினைக்காதீர்கள். இதுவரை காலமும் சடங்கானது காலத்தின் தேவைக்கேற்ப எப்படித் தன்னைத் தகவமைத்துக் கொண்டதோ அப்படியே அது தொடரும். இன்று நாம் இதை மறுக்காவிட்டால் உங்கள் புலமைத்துவத்துவத்தின் சாணக்கியம் நாளை மட்டக்களப்பு மண்ணின் மரபுகளை உங்கள் மடியில் கட்டிக்கொண்டதாகிவிடும்.

இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்தி சடங்குகளை மாற்றியமைத்து பொதுவான நிபந்தனைகளை உருவாக்குவீர்கள். பின்னர் இதைக் கண்காணிக்க ஒரு குழுவை உருவாக்குவீர்கள். பின் குழுவின் அனுமதியுடன்தான் சடங்கு நடத்தப்பட வேண்டும் என்பீர்கள்; இன்றைய காலத்திற்கேற்ப சடங்கில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பீர்கள்; அதை ஏற்றுக் கொள்ள உங்கள் நியாயங்கள் மூலம் கட்டாயப்படுத்துவீர்கள்; இவ்வாறு சாதாரணமாகத் தொடங்கி இதுவே காலப்போக்கில் எழுதப்படாத சட்டமாகக் கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பில் சடங்கு என்றால் இப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான கட்டுப்பாட்டை மறைமுகமாக வகுக்க முற்படுகின்றீர்கள். தங்களின் அதிகார அரசியலை மக்களால் சுயாதீனமாக நடத்தப்படும் சடங்குகளின் மீதும் திணிக்க முற்படுகின்றீர்கள்.

தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கல்வியாளர்களாகிய நீங்கள் உங்களுக்கு இசைவான சில நபர்களைச் சேர்த்துக் கொண்டு நகர்த்தும் அறிவியல் நகர்வே உங்களின் சடங்கு பற்றி நீங்கள் கொண்டுள்ள ஆர்வமே தவிர உங்கள் முயற்சி மக்கள் நலன் சார்ந்த முயற்சியல்ல. நீங்கள் வெளியிட்ட கட்டுரையில் முதல் இரு பந்திகளிலும் சடங்கின் முக்கியத்துவத்தைக் கூறுவது போல் கூறிவிட்டு அடுத்து சடங்கின் மூலாதாரத்தையும் அதன் ஒட்டுமொத்த அர்த்தத்தையும் மாற்றி யமைக்கும் வண்ணம் விதிமுறைகளை வகுத்துள்ளீர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் யுத்த காலத்தில் இருந்த அவசரகாலச் சட்டத்திற்கும் தற்போதைய சுகாதாரப் பேரிடரிற்கும் இடையிலான வேறுபாட்டையும் முக்கியத்துவத்தையும் உங்களைப் போன்ற அறிவாளர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதுதான். “படித்தவன் பாட்டைக் கெடுத்தான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்” என்பது போல மக்களின் இன்றைய நெருக்கடியையும் தேவையையும், பயன்படுத்தி ‘படிச்சவன் சொன்னா சரியாகத்தான் இருக்கும்’ என்ற பாமர மக்களின் மனநிலையைச் சரியாகப் புரிந்து கொண்ட அறிவாளிகளாகிய நீங்கள் காத்திருந்து மிகத் தெளிவாக திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறீர்கள். சடங்குகள் பற்றி ஆய்வு செய்ய வந்தவர்கள் சடங்கை எப்படிச் செய்யவேண்டும் என்ற வரையறையை வகுப்பது வாசனைத் திரவியத்தைத் தேடிவந்த வெள்ளைக்காரர்கள் நாட்டைப்பிடித்த கதையாக இருக்கிறது. மட்டக்களப்பிற்கே தனித்துவமான கூத்துக் கலையும் இவ்வாறுதான் கல்வியாளர்களாள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது என்பதும் பல பேர் அறியாததே.

கடந்தகாலங்களில் தொடங்கி இன்றும் பண்பாட்டுரீதியில் நடந்தேறுகின்ற மேல்நிலையாக்கம் என்ற கருத்துநிலையாக்கத்தின் தாக்கம், முப்பதாண்டுகளுக்கு மேல் நடைபெற்ற போரும் அது எம் சமூகத்தின் நிரந்தரமாக ஏற்படுத்திய சிதைவுகள் போன்றவற்றையெல்லாம் இதுவரைகாலமும் தானே எதிர்கொண்டு, காலத்திற்கேற்ப தன்னைத்தானே தகவமைத்துக் கொண்டு இன்றும் மட்டக்களப்பு மண்ணின் மரபாகக் காணப்படும் சடங்குகளை வாழும் மரபுகளாக நிகழ்த்தி வருவதில் எம் சமூகம் வெற்றி கண்டுள்ளது.

இன்று எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள நிலைமையினைச் சாக்காகக் கொண்டு அதனை எவ்வாறு செய்யலாம் என யாரும் கேட்காமலே ஆலோசனை செய்து கருத்து வெளியிட்டுள்ள உங்களின் உள்நோக்கம் குறித்துச் சந்தேகம் எழுகிறது. உங்களின் அடிப்படை நோக்கம் என்ன? சடங்கு என்பது அடிப்படையில் எல்லோரும் சேர்ந்து நிகழ்த்துவது; பங்குபற்றுவது. எல்லோரும் தனித்தனியாக வந்து சடங்கை நிகழ்த்த முடியுமா? ஒரு ஆய்வாளராக உங்களின் புரிதல் இவ்வளவு தானா? நாங்கள் தனியே சென்று தெய்வத்தை வணங்கலாம். அதில் சமூக இடைவெளியைப் பின்பற்றலாம். ஆனால் தீ மிதித்தல், தெய்வமாடல் உள்ளிட்ட சடங்கு நிகழ்வுகளை இரண்டு மூன்று நபர்கள் மாத்திரமே நிகழ்த்த முடியுமா? உங்களின் சடங்கு பற்றிய புரிதல் இந்த இடத்தில் முற்றிலும் சுழியமாக, சூனியமாக இருப்பது நன்றாக விளங்குகிறது.

நாடகத்தில் உள்ள ஓரங்க, ஈரங்க வகைகளை சடங்கில் திணிக்க நினைக்கும் முட்டாள்தனத்தை நீங்கள் கல்வியாளர்கள் என்ற அதிகாரத்தின மூலம் அரசுயந்திர உதவிகளுடன் செயற்படுத்த நினைக்கின்றீர்கள். பேரிடர் காலத்தில் மட்டக்களப்பின் மரபுகளைப் பேணுகின்ற கட்டிக்காக்கின்ற மகாத்மாக்கள் நாங்கள்தான் என மார்தட்டிக்கொள்ள விரும்புகின்ற உங்கள் அறியாமையின் வெளிப்பாடாக இது இருக்கின்றது. உண்மையில், பேரிடர் காலத்தில் சமூகம் எதிர்கொள்கின்ற அன்றாட வாழ்க்கைச் சிக்கல்கள், பொருளாதாரப் பிரச்சனைகள் இப்படி எத்தனையோ இருக்க, (பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் இணைய வழியில் வகுப்பெடுப்பது தொடர்பான பிரச்சனைகள்), தேவையின்றி மரபுச் சமூகங்களின் செயற்பாட்டு நடைமுறைகளில் தலையீடு செய்வது எந்த வகையில் நியாயம்? இதற்கான அதிகாரத்தை உங்களுக்கு வழங்கியது யார்? இத்தனை காலமும் எமது மரபினைக் காலத்திற்கேற்ப தகவமைத்துக் கொண்ட எங்களுக்கு தற்போதுள்ள சூழ்நிலையில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைத் தீர்மானிக்கத் தெரியாதா? உண்மையில் உங்களின் நியாயமான தேடுதல் மரபுச் சமூகங்கள் எவ்வாறு இத்தகைய சுகாதாரப் பேரிடர் காலங்களின் தங்களின் அன்றாட வாழ்க்கை முறைகளை, வழிபாட்டு முறைகளைச் சூழலுக்கேற்பத் தகவமைப்பு செய்கின்றன என்பது பற்றியதாக இருந்திருக்க வேண்டும். அதை விடுத்து, நீங்களே அதிகாரத்தினூடும் அறியாமையினூடும் மக்களின் வாழ்வினூடும் உயிரோடும் விளையாட முன்வந்திருப்பது என்ன மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றது என்பதை நினைக்கையில் ஆபத்தாக உணர்கிறோம். உங்களுக்கு என்ன கவலை? பாதிக்கப்படப் போவது எம் மக்கள் தான்.

நாம் எண்ணியதை, விரும்பியதை செய்து முடிக்கவோ அல்லது குறைந்தளவு செய்யவோ கூட இயலாமல் தடைகள் ஏற்பட்டால் அங்கெல்லாம் நாம் சுதந்திரமாக செயல்படவில்லை என எண்ணுகின்றோம். மக்களின் அபிப்பிராயத்துக்கு இடங்கொடுக்காமல், அவர்கள் விருப்பம் என்னவென அவர்களைக் கேட்காமல் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள்தான் எனச் சொல்லிக்கொண்டு தமது கருத்தை மக்கள் கருத்தாக முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவு மரணங்களும் மலினப்படுத்தப்பட்ட உணர்வுகளுமே. இன்று யாருமற்ற இடைவெளியில் எங்களுக்கு என்ன தேவை என்பதை நாங்களே சிந்திக்கத் தொடங்கிவிட்டோம். அதன் விளைவுகளே ஆங்காங்கே எழும் எதிர்க்குரல்கள். இக் குரல்களுக்கு மதிப்பளிக்கக் கற்றுக்கொள்வோம். ஏனெனில் இதுதான் உண்மையான மக்கள் குரல். தயவுசெய்து கடந்தகால வரலாறுகள் கற்றுத் தந்தவற்றில் இருந்து நகர்வோம். எங்களுக்கு என்னதேவை என்பதை மக்களாகிய நாங்களே எங்களுக்குள் முட்டி மோதி எங்களுக்கேற்ற வடிவில் தீர்மானிக்கின்றோம். எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு யாரும் கூட்டம்போடவோ, கொடி பிடிக்கவேண்டிய அவசியமோ இல்லை என நினைக்கின்றோம். நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் நகரமாட்டோம் என்றோ அல்லது நீங்கள் கைகொடுத்தால்தான் எங்களால் எழும்ப முடியும் என்றோ நினைக்காதீர்கள். எங்கள் விருப்பங்கள் எங்களை அசைக்கும். அது எங்களை நகர்த்தும். எங்களுக்கு என்ன தேவை என்பதை நாங்களே கண்டு பிடிப்போம். சடங்கு என்பது உங்களுக்கு ஒரு நிகழ்வு. எங்களுக்கு அது வாழ்க்கை. ஊர் கூடி வடம் பிடிக்கும் எங்கட வாழ்க்கையை நாங்களே தீர்மானிப்போம். நீங்கள் சற்று விலகியிருங்கள்.

நீங்கள் அவசியம் செய்ய வேண்டிய பணி ஒன்று உள்ளது: அதாவது, உங்கள் பணியை நீங்கள் செவ்வனேயும், நேர்மையாகவும் செய்வீர்களாயின் அதுவே நிறைய மாற்றங்களைக் கொண்டுவரும். முதலில் அதைச் செய்யுங்கள். அதைவிடுத்து உங்கள் கடமைகளில், பொறுப்புக்களில் (ஆசிரியப் பணி, ஆய்வுப்பணி) இருந்து தப்பிக்க எங்கள் நடைமுறைகளுக்குள் நீங்கள் ஒழிந்துகொள்ள வேண்டாம்.

எங்கள் பூசாரிமார்கள் / கட்டாடிமார்கள் தான் சடங்கின் வல்லுனர்கள். அவர்களே அதை நன்கறிந்த அறிஞர்கள். சடங்கின் நிகழ்த்துதல்கள் பற்றிக் கற்பிக்கவோ அதனை விளங்கப்படுத்தவோ அவர்களால் மட்டுமே முடியும். அத்தகைய சடங்குகளை ஆராய்வதும் விமர்சிப்பதும் வியாக்கியானப் படுத்துவதும் உங்கள் பணி. அது உங்களால் மட்டுமே முடியும். அதைத் திறம்படச் செய்தாலே போதும். இதேபோன்றுதான் கூத்தின் நிகழ்த்துகையை அண்ணாவியார் ஒருவராலேயே முழுமையாகக் கற்றுக்கொடுக்க முடியும். இன்று சடங்கு, கூத்து பற்றிய Theory, Practical பற்றியெல்லாம் கற்றுக் கொடுப்பவர்களாக நீங்களே உள்ளீர்கள். அதில் யாரும் தலையிடுவதில்லை. நீங்கள் சொல்லலாம் கூத்தினை நாங்கள் அண்ணாவியரைக் கொண்டுதான் பழக்குகின்றோம் என. அண்ணாவியாரை அவரது வித்துவத்தன்மை அல்லது நிகழ்த்துதல் திறமையைக் கொண்டு உங்களைப்போல் ஒரு விரிவுரையாளராக நியமிக்க முடியுமா? இல்லைதானே. ஏனெனில் கல்வியாளர்களுக்கான சட்ட திட்டங்கள் அதற்கு இடங்கொடுக்காது. உங்கள் தேவைக்காக அவர்களை அவ்வப்போது அழைத்து அவர்களின் திறனைச் சுரண்டுகின்றீகள். அவ்வளவுதானே. இதேபோல் சடங்கின் நிகழ்த்துனர்களை அவர்களின் திறனின் அடிப்படையில் சடங்கு பற்றிக் கற்பிப்பதற்கான (நிகழ்த்துதல்) விரிவுரையாளர்களாக நியமிக்க முடியுமா? முடியாது தானே? இது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் இதனைச் சொல்லுகின்ற எம்மை முட்டாள்தனமாகப் பேசுகின்றோம் எனவும் நீங்கள் வாதிடலாம். கற்பிப்பதற்கு நிகழ்த்துதல் மட்டும் தெரிந்தால் போதுமா? கோட்பாடுகள் தெரிய வேண்டாமா? எனக் கேட்கலாம். உங்களுக்கு சடங்கு பற்றிய கோட்பாடுகள்தானே தெரியும். நிகழ்த்துதல்பற்றி எங்களுக்குத்தான் தெரியும். எனவே நீங்கள் உங்கள் கோட்பாட்டு வேலைகளைப் பாருங்கள்: சடங்கு எங்களுக்கானது அதன் நடைமுறைகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுகின்றோம்.

அதாவது, கற்பிப்பது என்பது உங்கள் தொழில் மட்டுமல்ல கடமையும் பொறுப்புணர்வு மிக்க பணியுமாகும். அது உங்களுக்கானது என்றுதானே வரையறுக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள் என்பது தானே உங்களுக்கான பதவி. அதனால்தானே நீங்கள் கற்பிப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள் . அதேபோல் சடங்கு எங்களின் வாழ்க்கை, அது எங்களுக்கான நடைமுறை. அதனை எப்போது செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மக்களாகிய நாங்களே தீர்மானிப்போம். நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கு நேர்மையாக வேலை செய்தால் அது இச்சமூகத்திற்கு ஆற்றுகின்ற அளப்பரிய பணியாக இருக்கும்: ஒரு நல்ல ஆய்வாளராக, ஆசிரியராக.

மாறாக, பூசகர்கள், ஆலய நிர்வாகம் போன்றவற்றிற்கு ஒவ்வொரு ஊரிலும் தனித்தனி ஆட்கள், குழுக்கள் இருக்கிறார்கள். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்! அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும்! கூத்தில் காட்டிய உங்கள் திருவிளையாடல்களைச் சடங்கிலும் காண்பிக்க வேண்டாம். இல்லையனில், பல்கலைக்கழகப் பணியை விட்டு விட்டு, ஒரு பூசகராக, ஆலய நிர்வாகியாக ஏதேனும் ஒரு கோவிலில் பொறுப்பேற்றுக் கொண்டு இந்த உள்வேலை பணியைச் செய்தால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. வேறு யாராவது நல்ல ஆய்வாளர்கள் பல்கலைக்கழக ஆய்வுகளை மேற்கொள்ள வழிவிடுங்கள்!

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!

- சக்தி

"பத்ததி சடங்குகளை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஆலோசனைகளும், அபிப்பிராயங்களும்" என்னும் தலைப்பில் ஆரையம்பதி இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரைக்கான எதிர்வினை:

பத்ததி சடங்குகளை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் பற்றிய ஆலோசனைகளும், அபிப்பிராயங்களும் )

 

 

 

 

 

 

 

 

 

 

Last Updated on Sunday, 07 June 2020 06:38