11272021
Last updateச, 09 அக் 2021 9am

தரகு முதலாளிகளின் பிடியில் தமிழ் சினிமா!

PK_2008_3 copie.jpg

தமிழ் மக்களுக்கு சினிமா இழைத்திருக்கும் அநீதிகள் பல. அரசியல் துவங்கி ஆனந்த விகடன் வரையிலும், அதன் அநீதியான செல்வாக்கு அதிகம். தேர்தல் காலங்களில் கூட்டம் சேர்ப்பதற்கும், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பிழைப்புவாத ஹீரோக்கள் கட்சி ஆரம்பிப்பதற்கும், புரட்சித் தலைவி தலைவர் போன்ற பாசிஸ்ட்டுகள் உருவானதற்கும், குடியரசு நாளில் கூட குத்தாட்ட நடிகை ஜனநாயகம் பற்றி போதிப்பதற்கும், மக்களின் எல்லா நேரத்தையும் கைப்பற்றியதற்கும், மொத்தத்தில் தமிழ் வாழ்க்கையின் தரத்தை வெகுவாக தாழ்த்தியிருக்கும் சினிமா, ஒரு கரையான் புற்று.

 இதற்கு பாலூற்றி வழிபடும் தமிழ் மனத்தை திருத்துவதற்கு, நாம் சிரமப்பட வேண்டியிருக்கிறது. தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்கப் போகும் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, அந்தச் சிரமங்களை அதிகப்படுத்தியிருக்கிறது.

 

1990களின் இறுதியில் தொலைக்காட்சிகள் சூடு பிடித்த நேரத்தில், நாளுக்கொரு சினிமா வெளியிட்டுக் கொண்டிருந்த தமிழ் திரையுலகம் தள்ளாட ஆரம்பித்தது. எந்தப் படம் வெற்றிபெறும் என்று கணிக்க முடியவில்லை. தோல்விகளின் அணிவகுப்பு, பன்றி போடும் குட்டிகளைக் குறைத்தது. அதனால் சிங்கக் குட்டியொன்றும் பிறந்து விடவில்லை. "தயாரிப்புச் செலவைக் குறைக்க வேண்டும், நட்சத்திரங்களின் ஊதியம் குறைக்கப்பட வேண்டும்' என்று பத்திரிகைகள் துவங்கி படைப்பாளிகள் வரை பல சீர்திருத்தங்களைப் பேசினர். உண்மையில் இவற்றின் எதிர்மறைகள்தான் வளர்ந்தன.

 

படத்தயாரிப்புச் செலவு அதிகரித்ததோடு, நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் வளர்ந்தன. ஏனெனில், தமிழ் திரையுலகை யாரும் சீர்திருத்தம் செய்ய முடியாது. அது பங்குச்சந்தை யின் சூதாட்ட விதிகளைக் கொண்டு தான் வளர்ந்திருக்கிறது. ஒரு படம் வெற்றியடைந்த பின், அதன் நாயகனது சம்பளத்தை எக்குத் தப்பாக உயர்த்தி நட்சத்திர நடிகராக்குவது தயாரிப்பாளர்கள்தான். அற்பத்தனத்தை பிரம்மாண்டமாக காட்ட வேண்டும் என்று, கோடிகளில் செலவு செய்யும் தயாரிப்பாளரது படத்தை அதிக விலை கொடுத்து வாங்குவது விநியோகஸ்தர்கள்தான். அதை அதிக கட்டணத்தில் வாங்கி பணத்தைக் குவிக்க முடியும் என்று நினைப்பவர்கள்தான் திரையரங்க முதலாளிகள். இப்படி ஒவ்வொரு பேராசையும் தனக்குத்தானே குழி பறித்துக் கொள்கிறது.

 

வேறெந்தத் தொழிலையும் விட இங்கு பல மடங்கு இலாபம் ஈட்டமுடியும். ஆனால் அந்த இலாபம் ஒரு பிரிவினருக்கு மட்டும்தான் போகவேண்டும் என்பதல்ல. தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க முதலாளிகள் அனைவரும் இந்த இலாபத்தை சரிசமமாகப் பங்கிட்டுக் கொள்வதில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு பிரிவினர்தான் இந்த வருமானத்தை அள்ளினார்கள். அள்ள முடியாதவர்கள் புலம்பினார்கள். என்றாலும் இந்தச் சூதாட்டம் அழிந்து விடவில்லை. உலகமயமாக்கமும், தொழில் நுட்ப வளர்ச்சியும் புதிய வாய்ப்புகளை வழங்கின. சர்வதேச உரிமையும், தொலைக்காட்சி உரிமையும், தமிழ்ப் படத்தை தென்னிந்திய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிடும் உரிமையும், இலாபத்தின் புதிய வாசல்களைத் திறந்தன.

 

இதனால் முன்னைவிட தயாரிப்புச் செலவுகள் பல மடங்கானது. நட்சத்திரங்களை மையமாக வைத்தே தொலைக்காட்சிகளின் எல்லா நிகழ்ச்சிகளும் மக்களிடையே கொண்டு செல்லப்படுவதால், நட்சத்திரங்களின் தேவை அதிகரித்தன. முன்னைவிட சூதாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இருப்பினும் இதுநாள் வரை இந்தச் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்தியவர்கள், மிகப்பெரும் நட்சத்திரங்களும், சில குடும்பங்களின் தயாரிப்பு நிறுவனங்களும்தான்.

 

இச்சூழலில்தான் தமிழ்த் திரையுலகை கடைத்தேற்ற பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் களத்தில் குதித்திருக்கின்றனர். மும்பை பங்குச் சந்தையை அன்னிய நிதி நிறுவனங்கள் ஆட்டுவிப்பது போல, இவர்கள் தமிழ் திரையுலகை ஆட்டுவிக்கலாம். "சில கோடிகளை செலவழித்து விட்டு' பல கோடிகளை இலாபமாக பார்க்கலாம், என்பது இந்நிறுவனங்களை ஈர்த்திருக்கலாம். மேலும் நுகர்வுச் சந்தையின் பிரச்சாரகனாக திரையுலகை பயன்படுத்தலாம் என்பது கூட காரணமாக இருக்கலாம். சினிமாவில் கொட்டப்படும் காசு பலவிதங்களில் பயன்படும் என்பதால்தான் இந்தப் படையெடுப்பு.

 

குறுந்தகடுகள் தயாரிப்புக்குப் பெயர்பெற்ற "மோசர் பேயர் நிறுவனம்' பத்து மொழிகளில் பத்தாயிரம் இந்திய சினிமாக்களின் வீடியோ உரிமையைப் பெற்றுள்ளது. தற்போது சினிமா தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. தமிழ் திரையுலகில் மட்டும் 25 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறது. சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் தற்போது 13 தமிழ் படங்களைத் தயாரித்து வருகிறது. மாதம் இரு படங்களை விநியோகிப்பது, மாதம் ஒரு படம் தயாரிப்பது, என்ற இலக்குடன் இறங்கியிருக்கும் இந்த நிறுவனம், தமிழகத்தில் மட்டுமே 270 திரையரங்குகளை வாங்கியிருக்கிறது. அவற்றில் வாரம் ஒரு புதுப்படம் வெளியிடுவது அவர்களது திட்டம்.

 

இது போக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ், அம்பானியின் "அட்லேப்ஸ்', ஐங்கரன் இன்டர்நேஷனல், அஷ்ட விநாயகா முதலான நிறுவனங்களும், கோடம்பாக்கத்தைக் கைப்பற்றக் களமிறங்கியிருக்கின்றன. இங்கு மட்டும் இவை போட்டிருக்கும் முதலீடு 1000 கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.

 

இந்தப் புள்ளிவிவரங்களைப் பட்டியலிடும் இந்தியா டுடே இதழ், இனி கோடம்பாக்கத்தில் தமிழ்த் திரைப்படங்கள் பன்னாட்டுத் தரத்தில், தொழில் முறையில் தயாரிக்கப்படும் என்பதாக மகிழ்கிறது. கல்வியோ, காப்பீடோ, மருத்துவமோ தனியார்மயமானால், அதை முதலில் கொண்டாடுவது இந்தியா டுடேதான். மதவெறி போல இது ஒரு முதலாளித்துவ வெறி!

 

இது ஒருபுறமிருக்க இயக்குநர்களும், நடிகர்களும் கூட இந்நிறுவனங்களின் வருகையை வரவேற்கிறார்கள். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும், பணத்துக்காக தயாரிப்பாளர் பின்னால் அலையவேண்டியதில்லை, என்று அவர்களது மகிழ்ச்சி வழிகிறது. உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்கள் இப்பெரிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்துக் கொண்டுள்ளன. அப்படி வைத்துக் கொள்ள முடியாத பழைய பெருச்சாளிகள், "தங்களது அனுபவங்கள் இந்த நிறுவனங்களுக்கு இல்லை என்பதால் தாக்குப் பிடிக்க முடியாது' என்கிறார்கள். இத்தகைய நல்லது கெட்டது விவாதங்களுக்கு அப்பால்தான், உண்மை ஒளிந்திருக்கிறது.

 

முதலாவதாக, சினிமாவை முற்றிலுமாக கட்டுப்படுத்தப் போகும் ஏகபோகமாக இந்நிறுவனங்கள் மாறப்போகின்றன. அதாவது வெறும் திரைப்படத் தயாரிப்பு என்பதோடு அவை நிற்கப் போவதில்லை. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பு, வினியோகம், திரையிடல் அத்தனையும் இவர்களது கட்டுப்பாட்டில்தான் வரும். திரையரங்குகளைக் கூட இவர்கள் விட்டு வைக்கப்போவதில்லை. சாய்மீரா நிறுவனம் மட்டுமே 270 தியேட்டர்களை வாங்கிக் குவித்துள்ளதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

நகரங்களில் உள்ள திரையரங்குகளை எல்லாம் மல்டி பிளக்ஸ் வகையறாக்களாக மாற்றப் போகிறார்கள். இதன்படி சினிமா, உணவகம், கடைகள், கேளிக்கை மையங்கள் அனைத்தும், ஒரே கூரையின் கீழ் இருக்கும். ஆக பொழுது போக்கென்றாலே இம்மையங்களுக்கு செல்லதான் வேண்டும் என்று மாற்றுவார்கள். இப்படி சினிமாவின் ஒட்டுமொத்தமான வலைப் பின்னலை கைப்பற்றுவதுதான் இவர்களின் நோக்கம். இதனால் எந்த ஒரு தனிநபரும், திரைப்படம் தயாரித்து வெளியிட முடியாது என்ற நிலை உருவாகும்.

 

இரண்டாவதாக, திரையுலகின் படைப்பாளிகள் இவர்களது கட்டுப்பாட்டின்கீழ் வருவதால் நிறுவனங்களின் அரசியல் பொருளாதார பண்பாட்டுக் கொள்கையையே வழிநடத்தும் கோட்பாடாக அனைவரும் ஏற்க வேண்டும். அதாவது பெயரளவிலான முற்போக்கு, தமிழார்வம், இடதுசாரி ஆதரவு போன்ற கொள்கைகளை, இனி எந்தப் படைப்பாளியும் திரைக்கு உள்ளே மட்டுமல்ல, திரைக்கு வெளியேயும் பேசமுடியாது. ஏற்கனவே அப்படி ஒன்றும் பெரிதாக இருந்து விடவில்லை என்றாலும், அப்படி ஒன்று இனி தோன்றவே முடியாது என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

 

மூன்றாவது, சினிமாவின் உள்ளடக்கமும், வடிவமும் அமெரிக்க வார்ப்பில் மாற்றப்படும். இசுலாமிய வெறுப்பு, கம்யூனிச விரோதம், தனிநபர் வாதம், நுகர்வு வெறி, பாலியல் வெறி, ஆடம்பர வாழ்வு, ஆங்கில மோகம், அமெரிக்கப் பாசம், போன்றவை படைப்பினுடைய அடிநாதமாக மாற்றப்படும். நிலவுடைமைத் தமிழ் அற்ப உணர்ச்சியோடு, நவீன முதலாளித்துவ அற்ப உணர்ச்சிகள் சேர்ந்து கொள்ளும். இந்த மண்ணையும், மக்களையும், வாழ்க்கையையும் மறந்து, "நடுத்தர மேட்டுக்குடி,வாழ்வே வாழ்க்கையின் இலட்சியம்' என்று போற்றப்படும். இந்தப் போதையோடு ஒப்பிட்டால், டாஸ்மார்க்கில் சரக்கடிப்பது பெரிய பிரச்சினையல்ல.

 

தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக மாறிவிட்ட சினிமாவை தரகு முதலாளிகள் கைப்பற்றுகிறார்கள் என்றால், அது இதயத்தோடு முடிந்து விடப்போவதில்லை; மூளையைக் கரைத்து நம்மை முண்டமாக்கப் போகும் விசயம் அது.


· சாத்தன்