தமிழ் தேசியத்தை முன்வைக்கும் முதலாளித்துவ நவதாராளவாதிகளிடையே சுமந்திரன் மட்டுமே - எதார்த்தம் சார்ந்து உண்மையைப் பேசுகின்றவராகவும், நேர்மையாகவும் இருக்க முனைகின்றார். இடதுசாரிகள் தவிர எவரும் அவர் முன்மொழியும் வழியையும் - தீர்வையும் மறுத்து, இதுதான் சரியான மாற்று வழி என்ற ஒன்றை முன்வைக்க முடிவதில்லை. அவதூறுகளும், சம்மந்தமில்லாமல் பேசுவதுமே எதிர்வினையாக இருக்கின்றது. இதுதான் சுமந்திரனுக்கு ஜனநாயகத்தை மறுக்கின்ற பொதுப் பின்னணியாகவும் - இதுவே புலி அரசியல் சாரமாகவும் உள்ளது.

சுமந்திரன் இலங்கையில் இரண்டு தேசங்கள் உண்டு என்றும், அதை அவர் சிங்கள – தமிழ் தேசம் என்றும் கூறுகின்றார். மிகச் சரியான கருத்து. இந்த தேசத்துக்கு சுயநிர்ணயம் உண்டு என்று கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும், இலங்கையின் எதார்த்தம் சார்ந்து சமஸ்டியை முன்வைப்பதாகக் கூறுகின்றார். இங்கு இனவொடுக்குமுறையை சந்திக்கும் மலையக, முஸ்லிம் மக்களையும், அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கூறுகின்றார். சிங்கள மக்களைச் சார்ந்து நிற்க வேண்டும் என்கின்றார். இங்கு அவர் மக்களாகக் கருதுவது ஒடுக்கப்பட்ட மக்களையல்ல, அந்த மக்களின் வாக்கு மூலம் வென்ற ஒடுக்கும் பாராளுமன்றவாதிகளையே.

அவரின் இந்தக் கோட்பாடுகள் - நடைமுறைகள் அனைத்து நவதாராளவாத தேர்தல் கட்சிகளைச் சார்ந்து, பேரம் பேசுவதன் மூலம் இனவொற்றுமையையும் – தீர்வு குறித்தும் பேசுகின்றார். அதிகாரத்தில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் பேச வேண்டும். தேர்தல் கட்சி வழிமுறைகளில் இருக்கக்கூடிய சாத்தியமான வழிமுறைகளை குறித்து பேசுகின்றார். இதை கடந்து தேர்தல் அரசியல் வழிமுறையில் வேறு மாற்று எதுவுமில்லை. இருக்கிறது என்பவர்கள் எதையும் முன்வைக்க முடியாது.

இதற்கு மாறாக முன்வைப்பவர்கள் புலியைக் கொண்டாடக் (வழிபடக்) கோருவதும், புலிகளின் ஜனநாயக விரோதக் கூறுகளை அங்கீகரித்து - அதை உயர்த்தி எதிர்ப்பு அரசியல் நடத்தவும் கோருகின்றனர். அரசுடன் பேசுவது, தீர்வு காண்பது என்பது தமிழ்தேசியத்தைச் சொல்லிப் பிழைக்கும் தங்கள் சுய இருப்புக்கு விரோதமானதாக காண்கின்றனர்.

சுமந்திரன் இவர்களைப் போல் உணர்ச்சி அரசியலை முன்வைப்பதில்லை. புலிகளைச் சொல்லியும், தியாகங்களை முன்வைத்தும் வாக்கு அரசியல் நடத்துவதில்லை. ஆனால் அவரின் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்துகின்றனர். சுமந்திரன் கடந்தகாலத்தில் தங்கள் வர்க்கம் சார்ந்து இயங்கிய புலிகளின், சரி பிழைகளை தங்கள் வர்க்க நோக்கில் பேசுகின்றார். இந்த வகையில் முஸ்லிம் மக்கள் மீதான கடந்தகால ஒடுக்குமுறைகள் தவறானது என்கின்றார். ஆயுதப் போராட்டத்தில் தனிப்பட்ட ரீதியில் தனக்கு உடன்பாடு இருக்கவில்லை என்கின்றார். புலிகளின் வழிமுறைகளுடன் அவர் உடன்படவில்லை. ஆயுதமேந்தியது என்பது, அக்கால கட்டத்தில் தேவையாக இருந்திருக்கலாம். இதுதான் அவர் வைத்திருக்கக் கூடிய கருத்து. 
இதை அடுத்து சருகுப் புலிகள் சுமந்திரனுக்கு எதிராக ஒப்பாரி வைக்கின்றனர். எந்த தியாகத்தையும் மக்களுக்காக செய்ய முடியாத தேர்தல் கட்சிகள் முதல் புலத்து சருகுப் புலிகள் வரை, ஐயோ தமிழனுக்கும் தமிழ் தேசியத்துக்கும் சுமந்திரனால் ஆபத்து என்கின்றனர்.

இப்படி புலம்பும் இந்தக் கூட்டம் தான், 2009 இல் புலிகளை காப்பாற்றப் போவதாக கூறி புலியையே பலியிட்டவர்கள். 2009 இல் புலிகள் தங்கள் அரசியல் வழியில் மக்களை பலிகொடுக்க - பலியெடுக்கும் இறுதி யுத்தத்தை நடத்தினர். இதன் மூலம் அன்னிய தலையீடு நடக்கும், தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை ஊட்டியதன் மூலம், தங்களுக்கான சொந்தப் புதைகுழியை தோண்டினர். இப்படி புலிகள் மரணித்ததன் மூலம், புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

புலித் தலைவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கியபடி நடத்திய போராட்டத்தில் - இதுதான் விடுதலைப் போராட்டம் என்று நம்பி ஆயிரகணக்கானவர்கள் தங்கள் உயிரை மக்களுக்காக அர்ப்பணித்தனர். இதில் எந்த சுயநலமுமிருக்கவில்லை. ஆனால் புலித் தலைவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கும் தமிழ் தலைமையாக தங்களை முன்னிறுத்திக் கொண்டனர். வர்க்கம், சாதி, மதம், இனம், பிரதேசம்.. சார்ந்த சமூக ஒடுக்குமுறைகளுக்கு புலிகள் தலைமை தாங்கியதால், அடிப்படை ஜனநாயகத்தையே மறுத்தனர். இதன் போது தமிழனுக்குள்ளான சமூக ஒடுக்குமுறைகளை உறைநிலையில் ஏற்றுக் கொண்டு – எதிர்ப்பின்றி வாழக் கோரினர்.

இப்படி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராது ஒடுக்கும் தமிழனைச் சார்ந்து நின்ற  புலித்தலைவர்கள், சுயநலத்துடன் சீரழிந்தனர். மக்களை ஒடுக்கி கிடைத்த தங்கள் அதிகாரத்தைக் கொண்டு, அமைதி காலத்தில் சொகுசு வாழ்க்கைக்கு உள்ளாகினர். புலித் தலைமைகளை இந்தச் சூழலுக்குள் சீரழித்ததில் முக்கிய பங்கு புலம்பெயர் புலிகளும், புலிகளை அண்டிப் பிழைத்த கூட்டமும் தான். இவர்கள் புலிகள் போராட்டத்தை முட்டுச் சந்தியில் கொண்டு வந்து பலிகொடுத்தவர்கள்.

இப்படி ஆயுதம் போராட்டத்தை நடத்தியவர்கள் பலி கொடுத்தவர்கள், 2009 பின் சருகு புலிகளாக மாறினர். இந்த வகையில் புலிகளைச் சொல்லிப் பிழைக்கும் வியாபாரமும், புலிகளின் வெளிநாட்டுச் சொத்தை அபகரித்து தங்கள் தனிச்சொத்தாகிய கூட்டமும், வாக்குக் கேட்டு பிழைக்கும் தேர்தல் கட்சிகள்.. உள்ளடங்கிய பிழைப்புவாதக் கூட்டம் - கடந்த போராட்டம்  மற்றும் தியாகங்களை தங்கள் தனிப்பட்ட நலனுக்கு ஏற்ப உணர்ச்சி வசப்படுத்தி அறுவடை செய்ய முனைகின்றனர். இவர்கள் தான் சுமந்திரன் குறித்து புலம்புகின்றனர். சுமந்திரன் என்ன சொன்னார் என்பதை விளங்கிக் கொண்டு, பதில் அளிப்பதில்லை. சொல்லாததைச் சொல்லி புலம்புவதும், துரோகி - தியாகி என்ற புலிப் பாசிசக் கோட்பாட்டை அளவிடக் கொண்டு அள்ளிவிடுவதுமே அரங்கேறுகின்றது.

முன்பு போராடி இன்று உயிருடன் வாழ்பவர்கள், "மாவீரர்" குடும்பங்கள், கொல்லப்பட்ட தமிழ் மக்கள், யுத்தத்தினால் தங்கள் பொருளாதார வாழ்க்கை இழந்தவர்கள், துணையை இழந்த பாலியல்ரீதியான ஆணாதிக்க உளவியலுக்குள் கொடுமைக்குள்ளாகும் பெண்கள், உறவை இழந்த குழந்தைகள், காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்கள் நிலத்தை இழந்தவர்கள் … பல ஆயிரம் வழிகளில் யுத்தம் ஏற்படுத்தி துன்பங்களை இன்று அனுபவிக்கின்றனர். இவர்களையிட்டு சருகு புலிகள் அக்கறை கொள்வதில்லை. மாறாக தங்களை முன்னிறுத்தும் விளம்பரத்துக்காக படமெடுக்கும் நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.

ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை ஒடுக்கும் தமிழ் தரப்பாக இவர்கள் இருந்தபடி, இனரீதியான ஒடுக்குமுறை பற்றி பேசுகின்ற போலித் (ஒடுக்கும்) தேசியத்தை இவர்கள் பேசுகின்றனர்.

இதைத்தான் சுமந்திரனின் தேர்தல் அரசியல் கொண்டிருந்த போதும், இவர்கள் போல் போலியாக நடிக்கவில்லை. அதற்கு உண்மையாக இருந்து - எதார்த்தத்தில் அணுகுகின்ற போக்கு மூலம் தீர்வைக் காணமுனையும் எதார்த்தத்தை எதிர்கொள்ள திராணியற்ற போக்கு எதிர்வினையாகின்றது. இது அறிவுபூர்வமாக சுமந்திரனின் கருத்தை எதிர்க்க திராணியற்று, அவதூறாக மாறுகின்றது.

தமிழனைத் தமிழன் ஒடுக்கும் தேசியம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை தராது. ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையில் மக்கள் மாற்று வடிவத்தை வந்தடைந்து விடக் கூடாது என்பது தான், ஆளும் வர்க்கங்களின் தெரிவாக இருக்கின்றது. இந்தப் பின்னணியில் அமெரிக்கன் மிசனை பின்னணியாக கொண்டு, தமிழ் மக்கள் மத்தியில் இடதுசாரிய மற்றும் வலதுசாரிய அறிவுஐPவிகள் அரசியலுக்கு வருகின்றனர்.

இந்தப் பின்னணியுடன் தொடர்பு கொண்டதா சுமந்திரனின் திடீர் அரசியல் வருகை என்பதை உற்று நோக்க வேண்டி இருக்கின்றது 2009 பின் தேசியப் பட்டியல் மூலம் அரசியலுக்கு கொண்டு வந்த பின்னணி - இதன் பின்னான சர்வதேச அரசியல்- பொருளாதார நலன்கள் குறித்து கேள்விகள் பல இருந்த போதும், இதை யாரும் கேள்விக்குள்ளாக்குவதில்லை.

தமிழ் தேசிய வரலாற்றில் ஒவ்வொரு புதிய போக்கின் போதும், அமெரிக்க மிசனின் பின்னணியில் இருந்து, முக்கியமானவர்கள் அரசியலில் நுழைகின்றனர். இதுதான் கடந்த வரலாறு. அவர்கள் மக்கள் திரள் அமைப்புகள் - மக்கள் போராட்டம் - மக்கள் அதிகாரம்   உருவாகாத வண்ணம், சமூகத்தை முடக்கி - இந்த அமைப்புக்குள் தீர்வு காணுமாறு வழி நடத்திய – வழிநடத்துகின்ற பின்னணியில் அவை குறித்து கேள்விகள் எழுகின்றது.

இன்று சுமந்திரன் தேர்தல் வழிமுறை மூலமான தீர்வு காணுவதில் வெற்றிபெற்றால், இலங்கை ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களைத் தாங்கள் ஒருங்கிணைத்துக் கொள்ளும் புதிய வாய்ப்பை உருவாக்கும்;. ஆளும் வாக்கம் இதை அனுமதிக்காது என்பதால், இனங்களுக்கு இடையில்  தீர்வு கொடுக்கும் போது மத முரண்பாடடை தோற்றுவிக்கும். ஆளும் வர்க்கம் மூலம் தீர்வு காணுதல் என்பது, வர்க்க ஒற்றுமைக்கு வழியேற்படுத்தும் என்பதால் அது சாத்தியமற்றாகவே அமைகின்றது. சுமந்திரனின் எதார்த்தம் பொய்த்துப் போகும் அளவுக்கு, வர்க்க முரண்பாடுகளால் ஆனது என்பதே உண்மை.