Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2ஆண்டுகளுக்கு முன் இன்று.. (தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்யவந்த முன்னாள் உளவுத் துறை அதிகாரியைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் ஈரானில் கடந்த சனிக்கிழமை தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி (26), சிறையிலிருந்தபடியே தனது தாய் ஷோலேவுக்கு அனுப்பிய கடைசி வேண்டுகோள், ஒலிவடிவத்திலேயே கிடைத்திருக்கிறது. உள்ளத்தை உருக்கும் அந்தக் கடைசி வேண்டுகோள் இது.)

மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.

அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?


இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள். என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே? அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும்.

சாவும் கடைசி அல்ல

ஆனால், சபிக்கப்பட்ட அந்த அடி கதையையே மாற்றிவிட்டது. என்னுடைய உடல் வீதியில் தூக்கி வீசப்படவில்லை; எவின் சிறைச்சாலையின் தனிமைக் கொட்டடியில் அடைக்கப்பட்டது, இப்போது கல்லறை போன்ற ஷார்-இ-ராய் சிறையின் அறையில் புதைக்கப் பட்டிருக்கிறது. இதுதான் தலைவிதி என்பதால், நான் அதை ஆட்சேபிக்கவில்லை. சாவு ஒன்றே வாழ்க்கை யின் கடைசி அல்ல என்பதை நீயும் அறிவாய்.


நாம் எல்லோருமே ஒரு அனுபவத்தைப் பெறவும், பாடங்களைப் படிக்கவும் இந்த உலகத்தில் பிறக்கிறோம் என்று ஒருமுறை சொன்னாய்; ஒவ்வொரு பிறவியிலும் நம்மீது புதிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. சில வேளைகளில் தீமைகளை எதிர்த்துப் போராடியே தீர வேண்டும் என்று நான் கற்றிருக்கிறேன். என்னைச் சவுக்கால் அடித்தவன் தன்னுடைய தலையிலும் முகத்திலும்தான் கடைசியாக அறைந்துகொண்டான். நல்லதொரு நெறிக்காக ஒருவர் தன்னுடைய உயிரைக் கொடுத்தாவது பாடுபட வேண்டும் என்று சொல்லி யிருக்கிறாய். அதைத்தானே செய்தேன்.


பள்ளிக்குச் செல்லும்போது அடுத்தவர்களுடைய புகார்களுக்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது என்று அறிவுரை சொன்னாய். ஒரு காமுகன் என்னைப் பலாத்காரப்படுத்த முற்பட்டபோது, இந்த அறிவுரை யெல்லாம் பயன்படவேயில்லை அம்மா. நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் என்னை நிறுத்தி, காலமெல்லாம் கொலை செய்வதற்காகவே சதி செய்தவளைப் போலவும், இரக்கமில்லா கொலைகாரி என்றும் என் மீது குற்றம் சுமத்தினார்கள். நான் கண்ணீர்விடவில்லை, எனக்கு இரக்கம் காட்டுங்கள் என்று கெஞ்சவில்லை. சட்டம் பாரபட்சமில்லாமல் செயல்படும் என்ற நம்பிக் கையில் நான் அழவேயில்லை அம்மா.

வசை கிடைத்தது

கடுமையாகக் குற்றம்சாட்டியும் துளியும் வருத்தம் இல்லாமல் இருக்கிறாள் பார் என்ற வசைதான் எனக்குக் கிடைத்தது. வீட்டில் நான் கொசுவைக்கூட அடித்துக் கொன்றதில்லை. எனக்குத்தான் இந்த சதிகாரி பட்டம், கொலைகாரி என்ற குற்றச்சாட்டு. பிராணிகளை நான் நடத்திய விதத்தைக் கொண்டு என்னை ஆண் சுபாவம் மிக்கவள் என்று முடிவுகட்டினார்கள். நீ என்னை மிகவும் நேசிக்கச் சொன்ன இந்த தேசம்கூட நான் உயிரோடு இருப்பதை விரும்பவில்லை அம்மா; போலீஸ் விசாரணை என்ற பெயரில் சொல்ல முடியாத - காது கூசும்படியான - கேள்விகளைக் கேட்டுக்கொண்டே அடுத்தடுத்து இடிபோல என்னை அடித்துத் துவைத்தபோது, எனக்கு ஆதரவாக அங்கே யாருமே இல்லை அம்மா. ஒரு பெண்ணின் அழகுக்கு அழகு சேர்க்கும் என் கரிய கூந்தலை நானே மழித்துக்கொண்டதற்குப் பரிசாக என்னை 11 நாட்கள் தனிமைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினார்கள்.


போலீஸ் காவலில் முதல் நாள் இருந்தபோது அங்குவந்த வயதான போலீஸ் அதிகாரி ஒருவர், “உனக் கெல்லாம் என்னடி நீள நகம் வேண்டியிருக்கிறது?” என்று கேட்டு சரமாரியாக அடித்தார். இந்தக் கால கட்டத்தில் இங்கு எதுவுமே அழகாக இருந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டேன். தோற்றப் பொலிவு, சிந்தனையில் அழகு, ஆசையில் அழகு, கையெழுத்தில் அழகு, கண்ணில் அழகு, பார்வையில் அழகு, இனிமையான குரல் அழகு என்று எதுவுமே விரும்பப்படுவதில்லை.

இறுதி விருப்பம்

உனக்குத் தெரியாமலோ, நீ இல்லாமலோ என்னைத் தூக்கில் போட்டுவிடுவார்கள். அதனால், நான் சொல்ல விரும்புவதையெல்லாம் ஒலிவடிவில் பதிவுசெய்திருக்கிறேன், இது இன்னொருவர் மூலம் உன் கைக்குக் கிடைக்கும். என் நினைவாக, நான் கைப்பட எழுதிய பல பக்கங்களை வீட்டில் உனக்காக வைத்திருக்கிறேன்.
இறப்பதற்கு முன்னால் உன்னிடம் ஒன்று யாசிக்கிறேன். உன்னுடைய சக்தியையெல்லாம் திரட்டி இதை நீ செய்தே தீர வேண்டும். இந்த உலகத்திடமிருந்தும் இந்த நாட்டிடமிருந்தும் - ஏன் உன்னிடமிருந்தும் நான் எதிர்பார்ப்பது இந்த ஒன்றைத்தான். அம்மா ப்ளீஸ், அழாதே, நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நீதிமன்றத்துக்குச் சென்று என்னுடைய இறுதி விருப்பம் இது என்று அவர்களிடம் தெரிவி. எனக்காக நீ யாரிடமும் சென்று பிச்சை கேட்காதே என்று கூறிய நானே சொல்கிறேன், நீ எனக்காக நீதிமான்களிடம் பிச்சை கேட்டாலும் தவறில்லை.


அம்மா, நான் வெறும் கழிவாக இந்தப் பூமியிலே விழ விரும்பவில்லை. என்னுடைய அழகிய கண்களும் தூய இதயமும் இந்த மண்ணோடு மண்ணாக வீணாகப் போய்விடக் கூடாது. என்னைத் தூக்கில் போட்டதும் என்னுடைய கண்கள், இதயம், சிறு நீரகம், எலும்புகள் இன்னும் என்னவெல்லாம் என் உடலிலிருந்து எடுத்து மற்றவர்களுக்குப் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் தேவைப்படுபவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான்தான் கொடுத்தேன் என்று யாருக்கும் தெரிய வேண்டாம். அம்மா, எனக்காக ஒரு பூச்செண்டை வாங்கு, எனக்காக இறைவனிடம் வேண்டு. என் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல் கிறேன், என்னை அடக்கம் செய்து எனக்காக ஒரு சமாதியை ஏற்படுத்தாதே அம்மா; வாழும்போதுதான் நான் உனக்குத் துயரங்களையே கொடுத்தேன். நான் இறந்த பிறகும் என்னுடைய சமாதிக்கு வந்து நீ அழ வேண்டாம் அம்மா. எனக்காகக் கருப்புத் துணியை நீ போட வேண்டாம். என்னையும் துயரகரமான என்னுடைய நாட்களையும் மறக்க முயற்சி செய்; என்னுடைய எந்த எச்சமும் உன் எதிரிலோ நினைவிலோ இருக்கக் கூடாது.

கடவுளிடம் பதில்

இந்த உலகம் நான் வாழ்வதை விரும்பவில்லை. நான் மரணத்தைத் தழுவுகிறேன். கடவுளின் ராஜ் ஜியத்தில் நான் அந்த இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குத் தொடுப்பேன். இன்ஸ்பெக்டர் ஷாம்லு, அந்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். டாக்டர் ஃபர்வான்டி, காசிம் ஷபானி எல்லோர் மீதும் கடவுளின் நியாய ஸ்தலத்தில் நான் வழக்குத் தொடுப்பேன். குற்றம் இழைத்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், நியாயத்தின்பால் நிற்காமல் வேடிக்கை பார்த்தவர்கள் என்று எல்லோருமே கடவுளிடத்திலே பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.


இளகிய மனம் படைத்த என்னுடைய தாயே, கடவுளின் ராஜ்ஜியத்திலே நீயும் நானும் வாதிகளாக இருப்போம், நம்மீது குற்றம்சாட்டியவர்கள் எல்லாம் பதில் சொல்லக் கடமைப்பட்ட பிரதிவாதிகளாக இருப் பார்கள். கடவுள் எதை விரும்புகிறார் என்று பார்ப்போம். என்னுடைய உடலிலிருந்து உயிர் பிரியும்வரை உன்னைத் தழுவிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு உலகமே நீதான் அம்மா! – உன் பிரிய ரெஹானா.

(கடவுள் என்ற ஒன்று இருந்திருந்தால் உங்களுக்கு ஏன் இந்த நிலை வந்திருக்க போகிறது?)

https://www.facebook.com/isai.inban?hc_ref=ART9Tm9SHAOcqwEhfpHdFh3ZqPprmdSdbvxIRYfnadXUZUZHTVBB06opTPVachT0ddY