Language Selection

விருந்தினர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் இம்மயானத்தில் எரியூட்ட எம் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அந்நிலை மாறுபட்டால் மேலும் போராட்ட களமாக மாறும் நிலையே உருவாகும். இதில் எமது மக்களும் சனசமூக நிலையமும் உறுதியாக உள்ளார்கள்” என கலைமதி கிராமத் தலைவரும் புதிய ஜனநாயக மார்க்ஸிஸ லெனினிஸக் கட்சியின் வட பிரதேச அமைப்பாளருமான செல்வம் என அறியப்பட்ட கார்திகேசு கதிர்காமநாதன் தேசம்நெற் இன் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் செப்ரம்பர் 19 2017 இல் தெரிவித்தார். தேசம்நெற் இன் கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்கள் கீழே பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கிந்துசிட்டி மயானத்திற்கு அருகில் குடியேறியவர்கள் கார்திதிகேசு கதிர்காமநாதனால் (செல்வம்) திட்டமிட்டு மோசடி செய்து விற்கப்பட்ட காணிகளில் குடியேறியதாக உறுதியான ஆதாரங்கள் இன்றி குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மேலும் இப்போராட்டமானது ஒரே சமூகத்திற்குள்ளேயான போராட்டம் என்றும் இதுவொரு சாதிய முரண்பாடு அல்ல என்றும் சிறுப்பிட்டி சமூக அமைப்புகளின் ஒன்றியம் ஓகஸ்ட் 20, 2017இல் ஓரறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதற்கு முன் யோ கர்ணன் தமிழ் பேஜ் என்ற முகநூலில் இக்குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்த மயான எதிர்ப்புப் போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்றும் சிங்கள பேரினவாத அமைப்பான பொதுபலசேன இதற்கு நிதியளிக்கின்றது என்றும் யோ கர்ணனும் அவரது முகநூல் ‘உண்மைகாண்’ குழுவினரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். இதன் மூலம் மயான எதிர்ப்புப் போராட்டத்தை மழுங்கடிக்கவும் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் எக்காலத்திலும் அதற்கெதிராகப் போராட முடியாத நிலையை ஏற்படுத்துவதற்கு, அவர்களுக்கு பாடம் புகட்டும் ஆதிக்க குணாம்சத்தோடு பல்நிலைப்பட்ட சாதிமான்களும் களத்தில் குதித்தனர்.

சர்ச்சைக்குரிய மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள கிந்துசிட்டி மயானத்தை அகற்றுவதற்கான போராட்டம் 69 வது நாளுடன் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் வேண்டுகோளுக்கு அமைய செம்பரம்பர் 18 முதல் தற்காலிகமாகக் கைவிடப்பட்டு உள்ளது. அதற்கு முன்னைய தினம் செப்ரம்பர் 17 அன்று முதலமைச்சர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சென்று சந்தித்து உரையாடி இருந்தார்.

கிந்துசிட்டி மயானப் புனரமைப்புத் தொடர்பில் மல்லாகம் மாவட்ட நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக புத்தூர் கலைமதி கிராம மக்கள் சார்பாக கலைமதி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், இறந்தவர்களின் சடலங்களை குறித்த மயானத்தில் எரிப்பதற்கும் யாழ்.மேல் நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தீர்பினைத் தொடர்ந்து தனது கருத்தை வெளியிட்ட நீதிபதி இளஞ்செழியன், சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களுடன் தொடர்பு கொண்டு மயானத்தை வேறு இடங்களுக்கு மாற்றுவது தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.

கிந்துசிட்டி மயானத்தின் மிக அருகில் வாழும் கலைமதி கிராம மக்கள் ஒடுக்கப்பட்ட சமூகமாகவும்; மயான அபிவிருத்திக்குழுவில் உள்ளவர்கள் உயர் சாதியினராகவும் உள்ளனர். கிந்துசிட்டி மயானத்தின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள்: தலைவர்: வீ.கே.கணபதிப்பிள்ளை, உப. தலைவர்: க.துரைராஜா, செயலாளர்: அ.அருந்தவநேசன் (ஒய்பெற்ற பாடசாலை முதல்வர்), உப. செயலாளர்: ம.கஜேந்திரன், பொருலாளர்: செ.ஜெயபாலன். மயான அபிவிருத்திக் குழுவில் உள்ள அனைவருமே உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

மயான அபிவிருத்திக் குழுவின் துணைக்குழுவில் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவர் உள்ளனர். துனைக்குழுவில் உள்ளவர்கள்  க.சிவலிங்கம், ஆ.மகேந்திரம், பூ.தயாபரன், க.செல்வரத்தினம், நா.சின்னையா, க.ரவிச்சந்திரன், க.தம்பிராசா, க.கனகரத்தினம், வை.மாணிக்கம், த.தம்பித்துரை. இந்த துணைக்குழுவில் கிந்துசிட்டி மயானத்திற்கு தொலைவில் உள்ள ஜனசக்தி கிராமத்தவர்கள் வை.மாணிக்கம் த.தம்பித்துரை. இவர்கள் இருவர் மட்டுமே மயான அபிவிருத்திக்குழுவின் துணைக் குழுவில் உள்ள ஒடுக்கப்ட்ட சமூகத்தவர்கள்.

இக்கிராமத்து தலைவர் வை மாணிக்கத்திற்கும் கலைமதி கிராமத்து தலைவர் கார்திகேசு கதிர்காமநாதனுக்கும் (செல்வம்) இடையே குடும்பப் பகையும் உள்ளது. அதன் பின்னனியில் மயானத்தை அகற்றுவதற்கு எதிராக வருகின்ற எதிர்ப்புகள் ஒரே சமூகத்துக்கு இடையேயான பிரச்சினையாக காட்ட முயற்சிக்கப்படுகிறது.

Selvam_02_Kathirkamanathan_Karthikesu_at_Protestஇந்தப் பின்னணியில் மயான எதிர்ப்புப் போராட்டத்தின் மையமாகவும் போராட்டத்திற்கு எதிரானவர்களின் தாக்குதல் இலக்காகவும் உள்ள செல்வம் என அறியப்பட்ட கார்திகேசு கதிர்காமநாதன், தேசம்நெற் இன் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றார். செல்வம் புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிஸக் கட்சியின் வட பிரதேச அமைப்பாளராகவும் கலைமதிக் கிராமத்தின் தலைவராகவும் உள்ளார்.

தேசம்நெற்: நீங்களோ உங்கள் கட்சியோ கிந்துசிட்டி மயானத்திற்கு அருகில் உள்ள காணிகளின் விற்பனையில் நீங்கள் நேரடியாகடிவா அல்லது மறைமுகமாகவோ பொருளாதார இலாபம் ஈட்டினீர்களா?

செல்வம்: மயான எல்லைப் பகுதிகளையோ அல்லது கிராமத்தின் ஏனைய காணிகளையோ மக்களுக்கு வாங்கிக் கொடுக்கும் பணியில் கட்சி ஒரு போதும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பது உண்மையானது உறுதியானது. இது கலைமதி சனசமூக நிலைய நிர்வாகமும் மக்களும் சம்பந்தப்பட்ட விடயமாகும். இதில் நிலமற்ற எமது மக்களுக்கு நிலத்தைப் பெற்றுக் கொடுப்பதை தவிர வேறு எந்த இலாப நோக்கமும் எமக்கு இல்லை. இதற்கு சாட்சியமாக எமது கிராம மக்கள் உள்ளார்கள்.

தேசம்நெற்: கிந்துசிட்டி மயானத்திற்கு அருகில் உள்ள காணிகள் விற்கப்பட்டதில் உங்களுடைய பாத்திரம் என்ன?

செல்வம்: கலைமதி சனசமூக நிலையத்தின் தலைவர் என்ற வகையில் அதன் நிர்வாகம் மக்களுக்கு வேண்டிய தேவைகளைச் செய்து வந்தது. அதுபோலவே இந்தக்காணி விடயத்திலும் சரி கிராமத்தின் ஏனைய காணி விடயங்களிலும் சரி சனசமூக நிலையமும் மக்களும் சேர்ந்து பொதுச்சபை தீர்மானத்தின் படியே வாங்கினார்கள். இம்மயானக் காணியும் அவ்வாறே வாங்கப்பட்டது. இதில் எனக்கு எந்த லாப நோக்கமும் இல்லை. அப்படி எனக்கு லாப நோக்கம் இருந்தது என்பதை ஆதாரப்படுத்த விரும்புபவர்கள், சரியான ஆதாரங்களை தாராளமாக வெளிப்படுத்தலாம். அப்படி ஆதாரம் உள்ளவர்கள் ஏன் அதனை வெளியிடாமல் பூச்சாண்டி காட்டுகின்றனர்?

தேசம்நெற்: காணியற்ற மக்கள் காணிகளை வாங்குவதற்கு நீங்கள் ஊக்குவித்ததாக புதிய ஜனநாயக மார்ஸிஸ லெனினிசக் கட்சியின் தலைவர் சி கா செந்திவேல் தெரிவித்திருந்தார். அப்படியானால் அந்த இடத்தில் ஏற்கனவே மயானம் ஒன்று இருப்பது பற்றி நீங்களோ உங்கள் கட்சியோ கவனத்தில் எடுக்கவில்லையா?

செல்வம்: மயானம் அகற்ற வேண்டும் என்ற முடிவின் படி எங்கள் கிராம மக்களும் புத்தூர் மேற்கு உயர் சமூக மக்களும் 2000ம் ஆண்டிற்கு முன்பே வேறு மயானத்திற்கு மாற்றிவட்டார்கள். சிறுப்பிட்டி மேற்கு பகுதியிலும் ஒரு பகுதி மக்கள் வேறு மயானங்களில் உடலங்களை எரிப்பதை மாற்றி விட்டார்கள். அவ்வப்போது ஓரிரு பிரதேங்களே கொண்டு வரப்பட்டு இயங்காமல் இருந்த ஒரு மயானம் இதுவாகும்.

தேசம்நெற்: உங்களுக்கு எதிராக பல காணி வழக்குகள் உள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. அவ்வாறான வழக்குகள் உங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா? அதனைத் தாக்கல் செய்தவர்கள் யார்?

செல்வம்: சிறுப்பிட்டி தெற்கு காளையன் புலம் தோட்டக் காணியில் எனது குடும்பம் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றோம். இக்காணி எனது மனைவியின் ஊரில் உள்ளது. அக்காணி நான்கு உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடையது. அதன் இரு பங்காளர் குத்தகையாளரான எங்கள் பக்கமும் ஏனைய இருபங்காளர் எதிர்த்தரப்பிலுமாக வழக்கு உள்ளது. நானும் எதிர்த் தரப்பில் இருபங்காளரின் ஆதரவுடனே உள்ளேன். 22 பரப்பு பிறிவிடுதல் வழக்கு மல்லாகம் நீதிமன்றில் இடம்பெறுகின்றன. நான் ஒரு குத்தகையாளராகவே வழக்கில் இருந்து வருகின்றேன்.

தேசம்நெற்: மயானத்திற்கு அருகில் காணியை வாங்குகின்ற போது காணியை வாங்கியவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு தானே வாங்கி உள்ளார்கள்?

செல்வம்: குடியிருக்கும் மக்கள் தாங்களாக காணியைப் பார்த்து காணி உரிமையாளருடன் இது சம்பந்தமாக கதைத்து தான் அக்காணிகளை வாங்கினார்கள். சனசமூக நிலையத்தின் நிர்வாகம் அதற்கு உதவியும் ஆலோசனையும் வழங்கி வந்தது.

தேசம்நெற்: ஒரே சமூகத்தைச் சேர்ந்த கலைமதிக் கிராமத் தலைவரான உங்களுக்கும் அதே சமூகத்தைச் சேர்ந்த ஜனசக்தி கிராமத் தலைவரான மாணிக்கத்துக்கும் இடையேயான பிரச்சினை என்ன? அதனாலேயே இது ஒரே சமூகத்துக்கு இடையேயான பிரச்சினையாக நோக்கப்படுகிறது. அதில் ஓரளவு உணமையும் உள்ளதல்லவா? மாணிக்கத்தின் சகோதரியின் உடல் தகனம் செய்யப்படும் போது தடுத்ததால் தான் இப்பிரச்சினை பூதாகாரமாகியது அல்லவா?

செல்வம்: கலைமதி மக்களும் ஜனசக்தி மக்களும் ஒரே சமூகத்தினர் சம்பந்த வழி உறவுகளும் உண்டு. மாணிக்கத்தின் அண்ணா வல்லிபுரத்தின் மகளே எனது மனைவி ஆவார். இறந்து போன முருகன், மாணிக்கம், வல்லிபுரம் ஆகியோர் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்களுடைய சகோதரியே மார்ச் 08 2017இல் காலமானார். மாமாவின் சகோதர, சகோதரிக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் இடையில் அதவது அவர் சகோதரி இறக்கும் வரை (08.03.2017) திகதி வரை உறவு நெருக்கமாக இருந்தது உண்மை. எனது மாமாவின் சகோதரர்களுக்கு இடையில் நீண்டகால பகமை எதுவும் இல்லை. மாமாவிற்கும் அவர் மகனுக்கும் இடையில் தான் நீண்ட கால உறவு இல்லை. நாங்களும் அவருடன் கதைப்பதும் இல்லை. இறந்த மாணிக்கத்தின் சகோதரி எனது மாமாவின் சகோதரியும் கூட.

இதில் மயானத்தில் எரிக்கவிடாததற்கும் இரு குடும்பத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனையாக கொள்ள முடியாது. ஏனெனில் இதற்கு முன்பாகவே அதாவது மாணிக்கத்தின் சகோதரியின் உடல் தகனம் செய்யவிடாமல் மறிக்கப்படுவதற்கு முன்பே 20.02.2017 அன்று சிங்கராசா – சின்னத்தம்பி என்ற உயர் சமூகத்தவரின் உடல் மறிக்கப்பட்டது. பொலீஸ் வரவழக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையில் சுமூகநிலை காணப்பட்டு அருகில் உள்ள மயானத்தின் சிங்கராசா – சின்னத்தம்பியின் உடல் தகனம் செய்யப்பட்டது. எமது மக்களும் அந்த உடல் தகனத்திற்கு உதவி புரிந்தனர். இது மாணிக்கம் அவர்களுக்கம் ஏனையோருக்கம் நன்கு தெரியும்.

இந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் வகையிலோ என்னவோ சாதிய ஆதிக்கவாதிகளின் பின்புல ஆலோசனையால் மாணிக்கம் தன் சகோதரியின் உடலை கிந்துசிட்டி மயானத்திற்கு கொண்டுவந்தார்.

தேசம்நெற்: இப்போது இந்த மயானத்தை அகற்றுமாறு கோரிப் போராடுகின்றீர்கள். ஆனால் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இந்த மயானத்தை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை நீங்களே பெற்றிருந்தீர்கள். இதுவொரு முரண் நகையல்லவா?

செல்வம்: நான் ஒப்பந்தம் ஒன்றும் செய்யவில்லை. மயானத்தின் கண்காணிப்பில் முட்கம்பி வேலி எமது கிராமத்தில் மயானத்தை சுற்றி உள்ளவர்களால் போடப்பட்டது. இது எரிக்காவிட்டாலும் வேறு தேவைக்கு இக்காணி பயன்படலாம் என பிரதேச சபையால் அன்றைக்கு கூறப்பட்டது. 2009ம் ஆண்டு அளவில் வரும் என நினைக்கின்றேன்.

தேசம்நெற்: மயான அகற்றல் போராட்டத்தில் மயானத்தின் மதில் உடைக்கப்பட்டு உள்ளது. ஒரு வருடைய வாழைத்தோட்டம் அழிக்கப்பட்டு உள்ளது. ஒரு தொழிலாளி இரத்தம் சொட்டும் அளவிற்கு தாக்கப்பட்டு உள்ளார். இந்த வன்முறைகளை நீங்கள் எவ்வாறு அனுமதித்தீர்கள்?

செல்வம்: மயானத்தின் மதில் உடைக்க நானோ, எமது நிர்வாகமோ, கட்சியோ முன்நிற்கவில்லை. 800 கண்டு வாழைத்தோட்டம் எம் கிராமத்திலேயே உள்ளது. ஆனால் அவற்றை அழிக்க நாம் தூண்டவில்லை. இது அத்தோட்டக்காரனுக்கும் தெரியும். யார் வாழையை வெட்டியது என்ற அடையாள அணிவகுப்பிலும் பின்னர் நடந்த ஏனைய விசாரணைகளிலும் அவர்கள் மாறுபட்ட கருத்தையே முன்வைத்தனர். நாம் இதில் சம்பந்தப்படவில்லை.

தேசம்நெற்: இந்த மயானத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு எந்த சமூகத்தினர் எவ்வாறு அழுத்தங்களை பிரயோகிக்கின்றனர்?

செல்வம்: உயர் சமூகத்தில் குறிப்பிட்ட பேரும், ஜனசக்தி பகுதியில் குறிப்பிட்ட சிலரும் மயானம், பரம்பரை, வழமை என்று கூறி நிற்கின்றனர். மயான அபிவிருத்திக் குழுவில் உள்ள அத்தனை பேருமே உயர்சாதியினர். துணைக் குழுவில் மாணிக்கமும் தம்பித்துரையும் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள். இதில் மாணிக்கத்தைப் பயன்படுத்தி உயர் சமூகத்தினர் இந்தப் போராட்டத்தை மழுங்கடித்து எங்களைத் தொடர்ந்தும் தங்கள் ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கலாம் என நினைக்கின்றனர்.

சிறுப்பிட்டி வடக்கு மேற்கில் உள்ள மக்களில் 2015ம் ஆண்டில் இருந்து 2017ம் ஆண்டில் வரை 12 மேற்பட்ட இறந்தவர்களின் உடலங்களை வேறு மயானத்தில் தகனம் செய்துள்ளார்கள். இதன் மூலம் எங்கள் கோரிக்கைக்கு ஆதரவாக அந்தப்பகுதி மக்கள் கணிசமாக உள்ளார்கள். மாணிக்கம் அவர்களின் பேரப்பிள்ளை, பிள்ளையான் பாறி, வெ.சங்கரப்பிள்ளை, கனகன் – மாதி, சிதம்பரி – கோவிந்தன், இளையவன் – மாதன், கிட்டினன் – சின்னம்மா, மாணிக்கன் – கனகலிங்கம், சிங்கராசா – சின்னத்தம்பி, இரத்தினம் – பாலசிங்கம், கார்த்தி – கிட்டினன், பாலசிங்கம் – கமலாதேவி போன்றோர்.

தேசம்நெற்: சாதிய ஒடுக்குமுறையை நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? உங்கள் குடும்பப் பெண்கள் எவ்வாறு உணருகிறார்கள்?

செல்வம்: இன்றும் சிறுப்பிட்டி வடக்கில் உள்ள ஆலயங்களில் சாதி பார்க்கப்படுகிறது. உயர் சமூகத்தவர்கள் வீட்டிற்குச் சென்றால் முற்றத்தில் வைத்து கதைத்து அனுப்புதல்இ கூலி வேலை செய்பவர்களுக்கு தனியான பாத்திரத்தில் உணவு தேனீர் வழங்கப்படுகிறது. இது போன்ற பல காரணங்களை கூறலாம். இப்படி ஆதிக்கம் செய்பவர்கள் தான் இம்மயானப் பிரச்சினையிலும் பின்னால் உள்ளனர்.

தேசம்நெற்: உங்களது பகுதியைச் சேர்ந்த வட மாகாண சபை உறுப்பினரான அ பரஞ்சோதி உங்களுடைய போராட்டத்துக்கு மாறாகவே செயற்படுகின்றார். ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து வந்த அவருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

செல்வம்: அ.பரஞ்சோதி என்பவர் தனது தமிழரசுக் கட்சியில் அரசியல் பதவியை தக்க வைப்பதற்கு உயர் சாதியினருக்கு விசுவாசம் காட்டி நிற்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இம்மயானப் பிரச்சினையிலும் உயர் சமூகத்தவர் மத்தியில் கூட்டங்கள் வைத்து நீதிமன்ற பதிவாளருக்கம் மாகாணசபை உறுப்பினர் பரஞ்சோதி கடிதம் அனுப்பியுள்ளார். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களிடம் வாக்கு வாங்க இவரைப் பயன்படுத்தலாமே தவிர இவரால் எமக்கு எந்த நன்மையும் இல்லை.

தேசம்நெற்: மகாநாயக்கர்களைச் சந்தித்த முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் தங்களுக்கு அவர்கள் பதிவான கதிரைகளையே அமரத் தந்ததாக வருத்துப்பட்டு இருந்தார். அவருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

செல்வம்: அப்படி இடம்பெற்றிருந்தால் அது இனவேறுபாட்டின் மேலாதிக்க சிந்தனையையே வெளிப்படுத்துகிறது. இதே விதமான சாதி வேறுபாட்டையே இங்கு சாதி ஆதிக்கவாதிகள் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்வதற்கு இது முதலமைச்சருக்கு ஒரு சந்தர்ப்பம் என்றே கூறவேண்டும். நாங்கள் காலம் காலமாக இதனிலும் மோசமாக உயர் சமூகத் தமிழர்களால் நடத்தப்படுகின்றோம்.

தேசம்நெற்: இந்தப் போராட்டம் கிந்துசிட்டி மயானத்தை மட்டும் அகற்றுவதற்கான போராட்டமா? அல்லது அதனையும் தாண்டிய ஒரு பரிமாணம் அதற்கு உள்ளதா?

செல்வம்: எங்கள் கிராமத்தில் மக்கள் குடியிருப்பில் மயானம் இருப்பது போல குடாநாட்டில் 15ற்கு மேற்பட்ட கிராமங்களிலும் உள்ளன. மக்கள் குடியிருப்பில் உள்ள மயானங்களை அகற்றி மக்கள் குடியிருப்பு அற்ற இடத்தில் மயானம் அமைக்கலாம். அதற்கான இடங்கள் வசதிகள் உள்ளன. இதில் மயானத்தின் அருகில் குடியிருப்பவர்கள் கூலி விவசாயிகளும் ஒடுக்கப்பட்ட மக்களும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது ஆதிக்க குணாம்சத்திற்கு எதிரான ஒரு போராட்டமும் கூட.

தேசம்நெற்: இப்போராட்டங்களின் போது உங்களுடைய சமூகத்தவர்கள் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக உள்ளது. ஏன் உங்களுடைய போராட்டத்துக்கு ஏனைய அமைப்புகள் எவையும் தங்கள் தார்மீக அதரவை வழங்கவில்லை? நீங்கள் அவர்களை அணுகவில்லையா?

செல்வம்: எமது இச்சத்தியாக்கிரக போராட்டத்தில் உயர் சமூகத்தைச் சேர்ந்த நல்லெண்ணம் கொண்டவர்கள் பொது அமைப்புக்கள்இ அயல் கிராமத்தில் உள்ள சமூக அக்கறை உள்ளவர்கள்இ தொழிற்சங்கங்கள்இ வெகுஜன அமைப்புக்கள்இ தென்னிலங்கை இடது சாரி அமைப்புக்கள் பல எமக்கு ஆதரவாக உள்ளார்கள். வெளிநாட்டில் இருந்து வந்த அமைப்பு சார்பாகவும் தனிப்பட்ட சமூக நலன் விரும்பிகளும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டார்கள். இப்போராட்டத்தில் கலந்து கொண்டதுடன் தம்மாலான நிதி உதவியையும் செய்து கொண்டனர்.

தேசம்நெற்: வட மாகாண முதலமைச்சர் உங்கள் போராட்டத்துக்கு உடனடியாக செவிசாய்க்காவிட்டால் இந்த மயானத்தில் தகனம் செய்வதை அனுமதிப்பீர்களா?

செல்வம்: இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் இம்மயானத்தில் எரியூட்ட எம் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அந்நிலை மாறுபட்டால் மேலும் போராட்ட களமாக மாறும் நிலையே உருவாகும். இதில் எமது மக்களும் சனசமூக நிலையமும் உறுதியாக உள்ளார்கள். அதற்கு சமூகதிக்கான வெகுஜன அமைப்பும் உழைக்கும் வர்க்க கட்சியான புதிய ஜனநாயக மார்க்ஷிச லெனினிச கட்சியும் உறுதியாகவும் பக்கபலமாகவும் எப்போதும் இருந்து வரும்.

தேசம்நெற்: நேரடியான உங்கள் பதில்களுக்கு நன்றி செல்வம்.

செல்வம்: மக்கள் மத்தியில் திட்டமிட்டு பரப்பப்பட்ட சந்தேகங்களுக்கான பதில்களை அளிப்பதற்கு சந்தர்ப்பம் அளித்த உங்களுக்கு நன்றி.

http://thesamnet.co.uk/?p=88172