இந்தியாவின் அடுத்த பிரதமராக சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர் நரேந்திரமோடி அவர்கள் அரியணை ஏறுவது கண்டும் அவர் தலைமையின் கீழ் அமையும் இந்திய பெரும் முதற்சபையில், தமிழர்களின் உணர்வு பூமியாம் தமிழ்நாட்டில் இருந்து தனித்தொரு பெண்ணாய் வரலாற்றுப் பக்கங்களில் சாதனைகளுக்குச் சொந்தக்காரியாய் திகழும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் நிகரற்ற பெரு வெற்றிபெற்று தமிழர் குரலாய் செல்ல இருக்கும் பெரு மாண்புக்கும், போர் நடந்த ஈழத்தமிழ் மண்ணில் இருந்து தமிழ் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அன்பும், பட்சமும் நிறைந்த என் அண்ணாச்சி மோடியே, அக்காச்சி ஜெயலலிதாவே என்று உருகி, உருகி வாழ்த்து சொல்லுகிறார் பாசக்காரத்தம்பி கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அடப்பாவிகளா!! உங்களிற்கு எல்லாம் அறிவு, அனுபவம், அரசியல் என்று எதுவுமே கிடையாவிட்டாலும், கண்ணுக்கு முன்னால் நடந்தது கூடத் தெரியாத கபோதிகளா நீங்கள். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லீம்களை துடிக்க, துடிக்க கொலை செய்தவனை, முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து இன்னும் பிறக்காத அந்த பச்சைக்குழந்தையையும் கொலை செய்த கொலைகாரக்கும்பலின் அதிகாரபூர்வ தலைவனை வாழ்த்துகிறீர்களே நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?
“இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி குஜராத் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலை தொடங்கிய நாளான 27.2.2002 அன்று நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் உத்தரவிட்டதை குஜராத்தின் உளவுத்துறை அதிகாரி சஞ்சீவ் பட் உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். சஞ்சீவ் பட் உண்மையைச் சொன்னதற்காக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். மோடியின் குஜராத் சட்டமன்ற அமைச்சரவையில் மந்திரியாக இருந்த ஹரேன் பாண்டியாவும் குஜராத் படுகொலைகள் குறித்த விசாரணைக் குழுவின் முன் மோடியின் உத்தரவை பதிவு செய்தார். இதனால் அடுத்த மாதமே ஹரேன் பாண்டியா மர்மமான முறையிலே படுகொலை செய்யப்பட்டார்.
மகிந்த குடும்பத்தின் அடக்குமுறைகளை, ஊழல்களை எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுவது, காணாமல் போவது, கொலை செய்யப்படுவது போலத் தான் மோடியை எதிர்ப்பவர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொலைகாரனைத் தான் "சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர் நரேந்திரமோடி" வெறுவாய் திறந்து பம்முகிறார் அடுத்த தேசியத்தலைவர் சிறிதரன்.
சின்னஞ்சிறு பாலகன் பாலச்சந்திரனை பயங்கரவாதி என்று சொன்ன பார்ப்பனப்பன்னாடை சுப்பிரமணியசுவாமி மோடியின் கூட்டாளி என்ற ஒன்றே மோடி எப்படிப்பட்டவர் என்பதை காட்டுகிறதே, இதைக் கூட மறந்து போய் "தமிழர்களை போல ஒரு பீனிக்ஸ் பறவை போல சவால்களை கண்டு சளைக்காமல் இலக்கு நோக்கி நகரும் மோடியின் அலாதியான பறப்பை தமிழர்கள் விரும்புகிறார்கள் என்று பசப்புகிறீர்களே. “எனக்கு தரப்பட்ட அதிகாரத்தின் படி நான் நரேந்திர மோடியை ஒரு பார்ப்பனராக நியமிக்கிறேன். அவரிடம் பார்ப்பன குணங்கள் உள்ளன” என்று சொன்ன சுப்பிரமணியசுவாமிக்கும் உங்களிற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.
"மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் அ.இ.அ.திமுகவின் இந்த பெருவெற்றியில் முதலில் அதிகம் மனம் மகிழ்வது தமிழர்களை தர்மத்தை ஏழைகளை நேசித்து பொன்மனச் செம்மலான அமரர் தமிழகத்தின் மாண்பு மிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான். அவரின்பின் அவர் தம்பிகளும் தாய்க்குலமும் மிகுந்த மகிழ்வு கொள்கின்றது. இந்திய பிரதமராகும் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களின் கீழ் அமையப்போகும் பா.ஜ.க அரசாங்கத்தை உலகத்தமிழர்கள் ஜெயலலிதா எனும் தமிழர்களின் இதயக்கனி ஊடாக பேசும் உன்னத காலம் மலர்கிறது". அடடா, ஜெயலலிதாவை தமிழர்களின் இதயக்கனி என்று சொல்லி எங்களின் ஈரக்குலை எல்லாத்தையும் பழுக்க வைச்சிட்டீங்களே. ஊர், உலகத்திலே இருக்கிற நிலம் எல்லாத்தையும் தான் சுருட்டி வைத்திருக்கும் ஜெயலலிதா, முள்ளிவாய்க்கால் முற்றம் அரச நிலத்திலே இருக்கிறது என்று சொல்லி இடித்தது தமிழ்மக்களின் மேல் இருக்கும் பேரன்பினாலேயா அண்ணாச்சி?
"மீண்டும் பா.ஜ.கவின் ஆட்சி இந்தியாவில் மலர்கிறது. ஈழத்தமிழ் மக்களின் மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி இருக்கிறது. இனிவரும் காலத்தில் இந்திய பெரும் தேசத்தின் மனதில் புதிய மாற்றங்கள் நிகழுமென நம்புகின்றோம். அது நெடுந்துயர் சுமக்கும் ஈழத்தமிழர்களை அடிமை இருளில் இருந்து விடுவிப்பதாக அமையட்டும். உலகத்தமிழர்கள் என்றுமில்லாதவாறு மோடி என்ற நாமத்தையும் ஜெயலலிதா என்ற நாமத்தையும் தங்கள் பூஜை அறையில் உச்சரிக்கின்றார்கள்".
அடப்போங்கோ அண்ணாச்சி மோடிக்கு உங்க கடிதம் கிடைக்கவில்லை போலே. அந்த ஆள் மகிந்தாவை பதவியேற்பு விழாவிற்கு கூப்பிட்டு விட்டிட்டாரு. மோடியின் நாமம், மோடியின் கூட்டு என்பதற்காக ஜெயலலிதாவின் நாமத்தை உச்சரிக்கிற நீங்கள் இனி மகிந்தாவும் மோடியின் கூட்டு என்பதற்காக மகிந்தாவின் நாமத்தையும் உச்சரித்து, ஈழத்தமிழ் மக்கள் அடிமை இருளில் இருந்து விடுபட வழிகண்டு பிடித்து ஒரு கடிதம் எழுதுங்கள். கிளிநொச்சி தபால் அலுவலகம் தங்களின் கடிதத்திற்காக காத்திருக்கிறது.