PK_2008_01 .jpg

அமெரிக்காவில் பணிபுரியும் இரு இந்தியப் பெண்கள், புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, பல்லாயிரம் ரூபாய்களைச் செலவழித்து மும்பைக்கு வந்து ஓட்டலில் தங்குகிறார்கள். அருகிலிருக்கும் ஜூகு கடற்கறைக்கு தங்கள் கணவர்களுடன் இரவு சென்றபோது, அங்கு ஏற்கனவே மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடிகை பிபாஷா பாசுவின் ஆபாச நடனத்துடனும், போதையுடனும் புத்தாண்டைச் சந்தித்துக் கொண்டிருந்த 80 பேர் கொண்ட இளைஞர் கும்பல் இந்தப் பெண்கள் மீது பாய்ந்து, உள்ளாடைகளைக் கிழித்து, சொல்லக் கூசும் பாலியல் வன்முறைகளையும் அரங்கேற்றியது.

 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த "இந்துஸ்தான் டைம்ஸ்' பத்திரிக்கை நிருபர், புகைப்படம் எடுத்ததோடு, உடனே போலீசுக்கும் தகவல் கொடுத்தார். காட்டு விலங்குகளிடம் சிக்கி காயம்பட்ட மான்கள் உயிருடன் மீட்கப்பட்டன. இத்தகைய புத்தாண்டு செய்திகளுக்கு பஞ்சமே இல்லை. போதையில் பெண்களைக் கேலி செய்ததற்காக மத்திய அமைச்சர் லாலுவின் மகன்கள் செய்திகளில் அடிபட்டனர். கேரளாவில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், அவளுடைய பெற்றோர் முன்னிலையிலேயே வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.

 

அதிர்ச்சியளிக்க வேண்டிய இந்தச் சம்பவங்கள், புத்தாண்டின் கிளுகிளுப்பைக் கூட்டும் நோக்கத்திலேயே பத்திரிக்கைகளில் வெளியாகின. புகைப்படங்களை ருசிகரமான முறையில் வெளியிட்டு, புத்தாண்டை இப்படியும் வக்கிரமாக கொண்டாடலாம், என்று பாடம் நடத்தின. சென்ற ஆண்டு, சென்னையில் இப்படித்தான் ஸ்டெப்பானி என்ற பெண் கொல்லப்பட்டார். இந்த ஆண்டும், ஒரு நட்சத்திர ஓட்டலில் நடனமேடை சரிந்ததால், நீச்சல்குளத்தில் விழுந்து 3 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர். வெளிச்சத்திற்கு வராத சம்பவங்கள் இன்னும் பல.

 

இன்றைய தாராளமய யுகத்தில் திருவிழாக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காதலர் தினம், புத்தாண்டு தினம் முதலான நவீனக் கொண்டாட்டங்கள் முதல் விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, நவராத்திரி வரையிலான மரபு ரீதியான பார்ப்பனப் பண்டிகைகள் வரை, புதிய மோஸ்தரில் கொண்டாடப்படுகின்றன. இவற்றின் வடிவமைப்பை முதலாளித்துவம் தீர்மானிக்கிறது. நட்சத்திர விடுதிக் கேளிக்கைகள், தொலைக்காட்சி அலைவரிசைகளின் சிறப்புதின நிகழ்ச்சிகள் அனைத்தும் முதலாளிகளால் "ஸ்பான்சர்' செய்யப்படுகின்றன. ஊடகங்கள் அதை உப்ப வைப்பதோடு, இக்கேளிக்கைகளில் பங்கு பெறாதவர்கள் பத்தாம் பசலிகள், என்ற கருத்தையும் உருவாக்குகின்றன.

 

தேசம், மதம், மொழி, சாதி முதலான எல்லைகளைக் கடந்து, மனித குலம் முழுவதும் கொண்டாடும் திருவிழாவாக புத்தாண்டு சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இந்த எல்லைகளைக் கடப்பதன் உண்மையான பயன், முதலாளிகளின் இலாபத்தில் ஒளிந்திருக்கிறது. புத்தாண்டுக்கான "தள்ளுபடி விற்பனை' அமோகமாக நடக்கிறது. அதை நிலைநிறுத்த ஏனைய கொண்டாட்டங்கள் பயன்படுகின்றன. ஆக நுகர்வுக் கலாச்சார வெறியும், களி வெறியும், அதற்குத் தேவையான பணவெறியும் ஒருங்கே மனித சித்தத்தில் கலக்கப்படுகின்றன. இவற்றை எட்டுவதற்காக ஊழல்படுத்தப்படும் மனம், கொண்டாட்டத்தில் மட்டும் எப்படி "ஒழுக்கமாக' நடந்து கொள்ள முடியும்?

 

எத்தகைய அபாயங்கள் இருந்தாலும், அவையெல்லாம் விதிவிலக்குகள் என்பதாக ஊடகங்கள் ஆறுதல் தருகின்றன. "பாலியல் வன்முறைக்கு, செக்ஸ் கல்விதான் தீர்வு' என்று அறிவு ஜீவிகள் பாடம் நடத்துகிறார்கள்.

 

ஆனால், இவை எதுவும் தீயை அணைக்கப் போவதில்லை. சமூக உணர்வை புதுப்பிக்கவேண்டிய திருவிழாக்கள், விலங்குணர்ச்சியின் வக்கிர வடிகாலாக மாற்றப்பட்டுவிட்டன. கிரிமினல்கள் எப்போதாவது குற்றங்கள் செய்வார்கள். புத்தாண்டு அன்று, குற்றவுணர்வின்றியே கூட குற்றமிழைக்கும் மனநிலைக்கு, சமூகமே ஆட்படுத்தப்படுகிறது. இதை பாடம் நடத்தியோ, போதனை செய்தோ திருத்த முடியாது. நட்சத்திர விடுதிகளுக்கும், ஏனைய கேளிக்கை மையங்களுக்கும், உருட்டுக் கட்டைகளைத்தான் அனுப்ப வேண்டும். விலங்குகளை அடித்துத்தான் திருத்த முடியும்.