Language Selection

பி.இரயாகரன் -2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெகுஜன இயக்கங்களின் அடிப்படை என்பது, ஒடுக்கப்பட்ட பவ்வேறு வர்க்கங்களின் முரணற்ற பொதுக் கோரிக்கையை இணைக்கும் பொதுத் தளம். இது பரந்துபட்ட வெகுஜனங்கள் பங்கு கொள்ளக் கூடிய, சமூக இயக்கத்துக்கு வழிகாட்டுகின்றது. இதில் பல்வேறு கட்சிகள், சமூக இயக்கங்கங்கள் கூட முரணற்ற (இந்த) ஜனநாயகக் கோரிக்கைளுடன், தங்களை இணைத்துக் கொண்டு போராடுவதற்கான வெளியும் கூட.

அதேநேரம் அவ் வெகுஜன இயக்கத்தில் பங்கு கொள்ளும் ஒரு கட்சி கொண்டிருக்கக் கூடிய அரசியல் நிலைப்பாடுகளை உள் நுழைப்பது அல்;லது அதன் அடிப்படையில் வெகுஜன அமைப்புடன் முரண்படுவது, வெகுஜன இயக்க செயற்பாட்டையும் அதன் நோக்கத்தை அழிக்கின்ற அரசியல் முன்முயற்சியாகவே இருக்கும். ஒரு கட்சி கொண்டு இருக்கக் கூடிய உயர்ந்தபட்சத் திட்டங்களை, வெகுஜன இயக்கத்தில் தேடுவதும், அதன் அடிப்படையில் இந்த வெகுஜன இயக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குவதும் வெகுஜன இயக்கத்தின் அவசியத்தை மறுப்பதும், அந்த அரசியல் செயற்பாட்டை இல்லாதாக்குகின்ற அரசியல் முயற்சியுமாகும்.

எல்லாக் கேள்விகளையும் எல்லா இடங்களிலும் எழுப்புகின்ற செயற்பாடற்ற விவாதத்தை அரசியலாகக் கொண்டவர்களும், ஸ்தாபனங்கள் பற்றிய அரசியல் அறியாமை கொண்டவர்களும், திட்டமிட்ட வகையில் வெகுஜன இயக்கத்தை சிதைக்கின்ற அரசியல் தளத்தில், அக்கம்பக்கமாகவே கட்சி விடையங்களை முன்னிறுத்தி வெகுஜன இயக்கத்தில் அதை உள் நுழைக்க முற்படுகின்றனர். இந்த வகையில் சமவுரிமை இயக்கத்தை முடக்குவதற்கான முயச்சியுடன் கூடிய அரசியல் நகர்வுகளை சமகாலத்தில் காணமுடிகின்றது.

சமவுரிமை இயக்கம் என்பது வெகுஜன இயக்கம். ஒடுக்கப்படும் இனங்களுக்கான சமவுரிமையை வலியுறுத்தி-இனவாதத்துக்கு எதிராக போராடுகின்ற அமைப்பாகும். இதைக் கடந்து அதற்குள் கட்சிகளின் கொள்கைகளையும், தீர்வுகளையும் தேடுபவர்கள், அதை நுழைப்பவர்கள், சாராம்சத்தில் சமவுரிமையை மறுப்பவர்களாகவே செயற்படுகின்றனர்.

சமவுரிமை இயக்கம் இலங்கையில் மக்கள் போராட்ட இயக்கத்தால் முன்னெடுக்கப்படுகின்றது. அதே அடிப்படையிலேயே ஐரோப்பாவிலும் முன்னெடுக்கப்படுகின்றது. ஜரோப்பிய மக்கள் போராட்ட இயக்கத்தில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி, மற்றும் உதிரியான நபர்கள் கொண்டதும், பல்வேறு கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒருங்கிணைக்கும் அமைப்பாக இருக்கின்றது. எதிர்காலத்தில் பல்வேறு கட்சிகள் கூட நேரடியாக மக்கள் போராட்ட இயக்கத்தில் இணைவதற்கான இணைவதற்கான சூழல்கள் காணப்படுகின்றது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் வெகுஜன இயக்கமாகவே சமவுரிமை இயக்கம் இருக்கின்றது. இது போன்று பல்வேறு வெகுஜன இயக்கத்தை அது கொண்டு இருக்கும். மக்கள் போராட்டக் குழுவை எந்தக் கட்சியும் கட்டுப்படுத்துவதில்லை. பல கட்சிகளின் கூட்டை அடிப்படையாகக் கொண்டது. சமகாலத்தில் யார் இதில் இயங்குகின்றனரோ, அவர்கள் அதை வழி நடத்துகின்றனர். இதைத் தாண்டி ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் இயக்கமல்ல, மக்கள் போராட்ட இயக்கம்.

இந்த வகையில் மக்கள் போராட்ட இயக்கத்தால் வழிநடத்தப்படும் வெகுஜன இயக்கமான சமவுரிமை இயக்கத்தில், கட்சிக் கொள்கைகளை தேடுவதும், அதைப் புகுத்துவதும் அபத்தமானது. பல்வேறு கட்சிகளின், வேறுபட்ட கட்சி இலட்சியங்களையும் அரசியல் கொள்கைகளையும் வெகுஜன அமைப்புகள் பிரதிபலிக்க முடியாது.

இந்த வகையில் வெகுஜன இயக்கம் பற்றிய அரசியல் புரிதல் இன்று அவசியமானது. இதைத் தாண்டி கட்சி முடிவுகளை வெகுஜன இயக்கத்தில் கோருவது, சாராம்சத்தில் வெகுஜன இயக்கத்தின் நோக்கத்தை இல்லாதாக்குகின்ற எதிர் நிலையான அரசியல் முயற்சியாகும்.

சமவுரிமை இயக்கமும் சுயநிர்ணயமும்

(சமவுரிமை இயக்கத்துக்கு முரணாக சுயநிர்ணயத்தை முன்னிறுத்துவது,) சமவுரிமை இயக்கத்தை நோக்கி சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைப்பது இன்று அரசியல் ரீதியாக சமவுரிமை இயக்கத்துக்கு எதிரான அரசியலாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த வகையில் குறுந் தேசியம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, இன்றைய ஆளும் வர்க்கத்துக்கு எதிரான மற்றொரு ஆளும் வர்க்கம் சார்ந்ததாக இருந்தாலும் சரி, பிரமுகர்களின் பிழைப்புவாதம் சார்ந்த முரண் அரசியல் கூறாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் சமவுரிமைப் பேராட்டத்துக்கும் இனவாதத்துக்கு எதிரான அரசியல் முன்னெடுப்புகளுக்கும் எதிரான அரசியல் செயற்பாடுகளே.

பாட்டாளி வர்க்கக் கட்சி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காகவே, தேசங்களுக்கு (தேசிய இனங்களுக்கு அல்ல) சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றது. இந்த அடிப்படையில் சுயநிர்ணயத்தை கோராமலும் சுயநிர்ணயத்தை தீர்வாக வைக்கும் எந்தவொரு கட்சிச்செயற்பாட்டுடன் தம்மை இணைத்துக் கொள்ளாமல் இருந்தபபடி, சுயநிர்ணயத்தைப் பற்றி பேசுவதென்பது ஒடுக்கப்படும், வர்க்க விடுதலையை அடிப்படையாகப் கொண்ட சுயநிர்ணயம் பற்றியல்ல. மாறாற வர்க்க விடுதலை சார்ந்h சுயநிர்ணயக் கோட்பாட்டின் பெயரால் மூடிமறைத்த, தமிழ் தேசிய பிரிவினைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயமாக இருக்கின்றது. சுயநிர்ணயத்தைக் கோருபவர்கள் பாட்டாளி வர்க்க அடிப்படையில், அதன் வர்க்க நடைமுறையிலான சுயநிர்ணயத்தை முன்வைப்பதுமில்லை, அதன் அடிப்படையில் கோருவதுமில்லை.

தமிழ்தேசிய இனவாதம் மூடிமறைத்து முன்வைக்கும் பிரிவினைவாதத்தையே, சுயநிர்ணயமாக மீள முன்வைக்கின்றனரே ஒழிய, ஒடுக்குமறைகளை ஒழித்துக் கட்டும் வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அல்ல.

மார்க்சியம் சுயநிர்ணயம் பற்றிப் பேசுவது, வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கத்தை அடிப்படையாக கொள்ளாதவர்கள் சுயநிர்ணயம் பற்றிப் பேசுவது, மார்க்சிய உள்ளடக்கத்துக்கு முரணானதும், மூடிமறைத்த இனவாதமுமாகும்.

அதேவேளை இன ஜக்கியத்திலான சமவுரிமை நோக்கத்துக்கும் கொள்கைக்கும் முரணானதும், வர்க்க அடிப்படையைக் கொள்ளாததுமான இன அடிப்படையிலான பிரிவினைவாத சுயநிர்ணயமாகும். சுயநிர்ணயம் பற்றி இலங்கையில் உள்ள ஒவ்வொரு இனமும் பிரிவினைவாதமாகவே கருதும் அதன் அரசியல் உள்ளடக்கத்தையும், அதன் எண்ணவோட்டத்திலான அதன் வர்க்கச் சாரத்தையும் அம்பலப்படுத்தாது, சுயநிர்ணயத்தை முன்வைக்கும் போது சாராம்சத்தில் அதே இனவாத அரசியல் உள்ளடக்கத்தையே மீள முன்வைப்பதாகும்;.

தமிழ் மக்கள் சுயநிர்ணயத்தை பிரிவினையாக கருதும் அதே அர்த்தத்தில் தான் சிங்கள மக்களும் கருதுகின்றனர். இன்று சமவுரிமை இயக்கத்திடம் சுயநிர்ணயத்தைக் கோருகின்றவர்கள் கூட, இந்த பிரிவினைவாத இனவாத அடிப்படையில் நின்று தான் முன்வைக்கின்றனர். பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம் இதில் இருந்து முற்றாக முரணானது. அதாவது பாட்டாளிவர்க்கம் வர்க்க ஜக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு தான் சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றது.

ஆனால் இதற்கு முரணாக இனவாத அடிப்படையில் தான், சுயநிர்ணயம் சமூகத்தில் விளங்கிக் கொள்வதும், புரிந்து கொள்ளவும் படு;கின்றது.

சுயநிர்ணயத்தை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் கோராமலும், அதற்கான அரசியல் நடைமுறையிலும் பங்கு கொள்ளாமலுமே அதைக் கோருகின்றவர்கள், சாராம்சத்தில் இனவாதிகளாக இருந்தபடியே சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைக்கின்றனர். சுயநிர்ணயத்தைத் தீர்வாக முன்வைத்துள்ள கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு போராடக் கூடியதும், அப்படி ஒரு கட்சியை உருவாக்கக் கூடிய வரலாற்றுச் சூழல் இன்று இருந்தும், அதை அவர்கள் செய்வதில்லை. மாறாக சமவுரிமை இயக்கத்திடம் சுயநிர்ணயத்தைக் கோரி நிற்கும் பாட்டாளி வர்க்கம் சாராத அரசியல் செயற்பாடு என்பது, சமவுரிமை இயக்கத்துக்கும் அதன் அரசியல் நோக்கத்துக்கும் கொள்கைக்கும் எதிரான அரசியலாகும். சாராம்சத்தில் இனவாதமாகும்.

சமவுரிமை இயக்கத்தை முடக்க விரும்புகின்ற பல்வேறு வகை இனவாதம், சமவுரிமை இயக்கத்துக்கு எதிராக சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றது. சமவுரிமை இயக்கத்தில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டவர்கள், சுயநிர்ணயம் முன்வைக்கும் வர்க்க நடைமுறைகளைக் கொண்டவர்கள் சமவுரி;மை இயக்கத்தில் செயற்பட்டு வரும் வேளையில் அதை மூடிமறைக்கும் இனவாதமாகவே சுயநிர்ணயத்தை முன்தள்ளுகின்றனர். சமவுரிமை இயக்கத்தில் இருக்கும் வேறு தரப்புகளின், சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்ட தரப்புடன் தங்களை இணைத்துக் கொண்டு சுயநிர்ணயத்துக்காக போராட மறுக்கும் நிலையில், சுயநிர்ணயத்தை வெகுஜன அமைப்பில் கோருவது என்பது வர்க்க அடிப்படையற்ற இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சுயநிர்ணயத்தையேயாகும்.

மேலே விளக்கியது போல் வேறுவடிவில் கூறுவதானால், சுயநிர்ணயத்தின் வர்க்க அடிப்படை வர்க்க கட்சியில் இருப்பது போல், வெகுஜன இயக்கத்தில் இருக்க முடியாது. அதாவது சுயநிர்ணயத்பின் வர்க்க அடிப்படையை இல்லாதாக்கி அதை வெகுஜன மட்டத்திற்கு கொண்டு வருவதன் மூலம், சுயநிர்ணயத்தின் வர்க்க சாரத்தை அரசியல் நீக்கம் செய்வதாகும்;. வெகுஜன இயக்கம் சுயநிர்ணயத்தை தன் திட்டத்தில் இணைத்துக் கொண்டால், அதன் நடைமுறை கட்சிக்குரிய வர்க்க நடைமுறையாகி குறுகிவிடும். கட்சி கையாள வேண்டிய அரசியல் விடையங்களை வெகுஜன மட்டத்திற்கு தரம் தாழ்த்துவது என்பது, சாராம்சத்தில் அதன் வர்க்க அடிப்படையை ஒழித்துக் கட்டுவது தான். சுயநிர்ணயம் கொண்டுள்ள வர்க்கக் கடமைகளை, வெகுஜன இயக்கங்கள் மூலம் கையாள முடியாது. அதனால் தான் கட்சிகள் இருக்கின்றது. இதனால் தான் பல விடையங்கள் கட்சி கொள்கையாக நடைமுறையாக கொண்டு இருக்கின்றது.

ஆக சுயநிர்ணயத்தை முன்வைப்பவர்களும், கோருபவர்களும், தங்களை ஒடுக்கப்படும் வர்க்க கட்சியில் இணைத்துக் கொள்ளாத வரை, அடிப்படையில் இனவாதம் முன்வைக்கும் சுயநிர்ணயத்தையே மீள முன்மொழிபவராகவே இருக்கின்றனர் என்பதே உண்மை. இதை சமவுரிமை இயக்கத்தில் கோரும் போது, இனவாதத்தை ஒழித்துக் கட்டும் வெகுஜன அரசியல் அடிப்படையையே இல்லாதாக்குகின்ற, மூடிமறைத்த இனவாதமாக இருக்கின்றது.

இந்த வகையில் இலங்கையில் பிரிவினைவாதமாக புரிந்து கொள்ளப்பட்ட சுயநிர்ணயத்தை எதிர்த்துப் போராடாது சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றவர்கள் கூட, அதே இனவாதிகள் தான். அதே போல் சுயநிர்ணயத்துக்கான போராட்டம் இலங்கையில் தமிழ்மக்களுக்கு மட்டும்தான், சிங்கள மக்களுக்கு இல்லையென்றால், அதுவும் அடிப்படையில் தமிழ் இனவாதமாகும். சுயநிர்ணயத்திற்கு அடிப்படையான பொருளாதார கண்ணோட்டத்தில் கோராத சுயநிர்ணயம், ஏகாதிபத்திய சார்பு அரசியலேயாகும். வர்க்கக் கண்ணோட்டத்தில், அதன் நடைமுறையில் நின்று கோராத சுயநிர்ணயம் கூட இனவாதமாகும். இன்று சமவுரிமை இயக்கத்திடம் கோரும் சுயநிர்ணயம் என்பது, இனவாத அடிப்படையைக் கொண்டது. வர்க்க அடிப்படையில் சுயநிர்ணயத்தை முன்னெடுக்கும் கட்சிகள், சமவுரிமை இயக்கத்தில் உள்ளனர் என்பதே இனவாதத்துக்கு எதிரான மற்றொரு அரசியல் உண்மையும் கூட. சுயநிர்ணய அடிப்படையில் முன்வைக்கும் இனவாதத்தையும், பாட்டாளி வர்க்க விரோத அரசியலையும் இனங்கண்டு கொள்வது, இனவாதத்துக்கு எதிரான இன்றைய அரசியல் செயற்பாடாகவும் உள்ளது.

 

பி.இரயாகரன்

07.03.2014