காலாகாலமாக ஏமாற்றப்படும் மலையக தோட்டத் தொழிலாளர்கள்

மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்;பந்தமான கூட்டு உடன்படிக்கை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலாளிமார் சம்மேளனத்திற்கும் சம்பள உயர்வு சம்பந்தமான கூட்டு உடன்படிக்கையில் கையொப்பமிடும் தொழிற்;சங்க கூட்டுக்கமிட்டிக்குமிடையில் நடைபெற்று தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இதன்படி சம்பள உயர்வு வழங்கப்படும்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேலாயுதம், ஏனைய தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி சார்பில் இராமநாதன் ஆகியோர் கையொப்பமிட்டு வருகின்றனர்

 

 

 

கடந்த 2011ம் ஆணடு செய்துகொள்ளப்பட்ட கூட்டு உடன்படிக்கையின்படி சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்ளேனத்திற்கும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையில் சில மாதங்கள் நடைபெற்று கூட்டு உடன்படிக்கையில் கையொப்பமிடப்பட்டு தோட்டத்தொழிலாளர்களுக்கான ஒரு நாள் அடிப்படை சம்பளமாக ரூபா 380 வழங்கப்பட்டது. இக்கூட்டு உடன்படிக்கை 2013 மார்ச் மாதம் 31ம் திகதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 2013 ஏப்;ரல் மாதம் முதல் தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தை தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும தோட்ட தொழிற்சங்க கூட்டுக்கமிட்டிக்கும்; இடையில் நடைபெற்று, தோட்டத்தொழிலாளர்களுக்கான அன்றாட தேவைகளை சமாளித்து வாழ்க்கையை நடத்திச் செல்வதற்கான சம்பள உயர்வை தாம் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்கள்; பெற்றுக்கொடுக்கும் என தோட்டத்தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர்.

 

2013 மார்ச் மாதம் 31ம் திகதியுடன் கூட்டு உடன்படிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்றைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆறுமுகம் தொண்டமான், ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையின் கீழ் இயங்கும் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வேலாயுதம் கூட்டு தொழிற்சங்களின் சார்பாக இராமநாதன் ஆகியோர் தோட்டதொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்காமல் 2013 ஏப்ரல் முதல் வாரத்தில் தோட்டத்தொழிலாளர்களுடய சம்பள உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டு முதலாளிமார் சம்மேளத்தினால் கொடுக்கப்பட்ட அடிப்படை நாட்சம்பளமான ரூபா 380 உடன் ரூபா 70 சேர்த்து ரூபா 450 சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுத்துவிட்டோம் என கூறி வருகின்றனர்.

 

இந்த சம்பள உயர்வு தோட்டத்தொழிலாளர்களுக்கு போதுமான சம்பள உயர்வு அல்ல. அவர்களுக்கான நாட்சம்பளமாக ரூபா 600 பெற்றுக்கொடுக்கின்றோம் எம்முடன் இணைந்து நாம் எடுக்கும் போராட்டங்களில் கலந்து கொள்ளுங்கள் என சில தொழிற்சங்கங்கள் கூறி வருகின்றன. இவர்களுடைய தொழிற்சங்கப் போராட்டம்; தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்காகவோ, அல்லது தோட்டத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவை சமாளித்துக் கொள்வதற்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்காகவோ அல்ல. எதிர்வரும் காலங்களில் தமது தொழிற்சங்கங்களுக்கு ஆள் சேர்ப்பதற்காவே தவிர,  தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைப் பிரச்சினைகளான தாம் வாழும்; வீட்டுப் பிரச்சினை, தோட்டத்தொழிலாளர்களுடைய சுகாதாரப் பிரச்சினை, அவர்களுடைய போக்குவரத்துப் பிரச்சினை  சம்பந்தமாகவும், அவர்களுடைய வாழ்க்கைச் செலவை சமாளித்துக்கொள்வதற்கான சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்கவும் எந்த ஒரு தொழிற்சங்கமோ, அல்லது  தொழிற்சங்கக் கூட்டமைப்போ இதுவரை காலமும் கதைக்கவும் இல்லை, சிந்திக்கவும் இல்லை. அது சம்மந்தமாக தெரிந்துகொள்ளவும் இல்லை.

 

என்றும் தீர்க்கப்படாத தோட்டத்தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை எமது நாட்டின் வளங்களைச் சுருட்டிக்கொண்டு செல்வதற்காக எமது நாட்டைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் எமது நாட்டில்; காடுகளை அழித்து, அவற்றில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டனர். அதன் மூலம் இந்நாட்டு வளங்களை தமது நாட்டுக்கு கொள்ளையிட்டுச்  செல்வதற்காக, பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் எமது நாட்டு மக்களை அவர்களுடைய அடிமைகளாக்கி வேலைவாங்க முயற்சி எடுத்;தனர். ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டு வேலை செய்ய விரும்பாத எமது நாட்டு மக்கள் தாழ்நில பிரதேசங்களை நோக்கிச் சென்றனர்

 

இதனால் தோட்டப் பயிர்ச்செய்கைகளில் அடிமைகளாக வேலை செய்வதற்கு வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இது சம்பந்தமாக சிந்தித்த ஆங்கிலேயர்; இலங்கைக்கு அண்மையிலுள்ள தென்னிந்திய மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கும் கீழிருந்த மக்களை பசப்பு வார்த்தைகள் கூறி இலங்கைக்கு அழைத்து வந்தனர். தென்னிந்தியாவில் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் ஆங்கிலேயர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சத்தில் சிக்கி பட்டினியால் செத்துக்கொண்டிருந்த மக்கள் தரகர்கள் மூலமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தோட்டப்பகுதிகளில் அடிமைகள் போல் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். இங்கு வந்த தொழிவாளர்கள் வாழ்வதற்கான சரியான சுகாதார வசதிகளுடன் கூடிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு பதிலாக லயன் காம்பிராக்களை அமைத்துக்கொடுத்தனர். குடும்பம் குடும்பமாக இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மக்கள் இன்று வரை 10ஒ8 அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறு லயன்காம்பிராக்களை அமைத்து கொடுத்ததற்கான காரணம் அவர்களை பொழுதுவிடிவதற்கு முன் வேலைக்கு அனுப்புவதற்காகவே. அவர்கள் அமைத்துக்கொடுத்த லயன்காம்பிராக்களிலே இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் கணவன,; மனைவி, குழந்தைகள், தாய் தந்தையர் என அனைவரும ஒரே அறையில்  இன்றுவரை  வாழ்ந்துவரும் இந்த அவலநிலை எப்போது மாறும் என அவர்கள் எதிர்ப்பார்த்துக்;கொண்டிருக்கின்றனர்.  .

 

ஆனால் எமது நாடு சுதந்திரமடைந்து இன்று பல வருடங்கள் கடந்தும் இன்றுவரை தோட்டத்தொழிலாளர்களின் வீடில்லாப் பிரச்சினை தீர்ந்ததில்லை. இன்றுவரை அவர்கள் பல வருடங்களுக்கு முன ஆங்கிலேயரால் கட்டிக்கொடுக்கப்பட்ட லயன்காம்பிராக்களிலே குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தேர்தல் காலங்களில் அவர்கள் வாழ்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதாக போலிவாக்குறுதிகளை வழங்கி; அவர்களுடைய வாக்குகளைப் பெற்று மந்திரி பதவிகளையும் அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொணடு சுகபோக வாழ்க்கையை வாழ்வதற்காக பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் அவர்களுடைய கைக்கூலிகளும் அவர்களிடம் சென்று தாங்கள் வாழும் லயன்காம்;பிராக்களுக்கு பதிலாக தாங்கள் வாழ்வதற்கு தேவையான சகல வசதிகளும் கொண்ட வீடுகளை அமைத்து தருகின்றோம் என ஏமாற்று வார்த்தைகளை கூறிச் சென்ற அரசியல்வாதிகள் இன்றுவரை தோட்டத்தொழிலாளர்கள் வாழும் லயன் காம்பிராக்களை திருத்தியமைத்து கொடுக்கவும் இல்லை அவர்கள் வாழ்வதற்கு வசதியான வீடுகளை கட்டிக்கொடுத்து அவர்களுடைய வீடில்லாப் பிரச்சினையை தீர்க்கவும் இல்லை. அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் இல்லை.