09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

முடிந்தால் கதையுங்கள்........?

ஏதோ தெரியவில்லை நல்ல நிகழ்வுகளுக்காகவும், கெட்ட நிகழ்வுகளுக்காகவும் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு இப்ப அடிக்கடி கிடைத்து வருகின்றது. திடீரென எடுத்த முடிவின் பிரகாரம் அம்மாவின் திவசத்துக்காக போன கிழமை ஊருக்குப் போய் வரும் ஒரு பாக்கியம் கிட்டியது. ஒரு குறுகிய சில நாட்கள் தான் நின்றாலும் அங்கே என்னைத் தாக்கிய, என்னை உறுத்தி வருத்திய ஒரு விடையம் சம்பந்தமாக இதைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டே இதை எழுதுகிறேன்.

எங்கடை மக்களை ஒரு வகையிலும் நிமிரவிடாமல், ஏதோ சொல்ல முடியாத சுமைகளையும் துன்பங்களையும் கொடுத்து அவர்களை இன்னும் அடிமைகள் போல் அரசாங்கமும் சில தனியார் நிறுவனங்களும் செய்கின்ற வேலைகளையும், விசமங்களையும் கேள்விப்பட்ட போது எங்களுடைய மக்களின் அறியாத்தனங்களையும் எண்ணி கவலைப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை.

என்னைத் தேடி வந்தவர்களின் முகங்களிலும் சரி, நான் சந்தித்த முகங்களிலும் சரி குறிப்பாக பெண்களின் முகத்தில் சந்தோசம் எங்கேயோ ஒழிந்து போயிருந்ததையும், அல்லது யாரோ பறித்திருப்பது போன்றதை என்னால் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது.

என்னோடு மிகவும் நெருங்கியவர்களிடம் போய்க் கதைத்த போதும், கூட்டம் கூடட்மாய் கூடியிருந்து கதைக்கும் பெண்கள் மத்தியிலும் இந்த விடையம் மிக முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறியக் கூடியதாய் இருந்தது.

1. வங்கிக்கடன்கள்

2. மீற்றர் வட்டி.

வங்கிக்கடன் அரசாங்க வங்கிகளினாலும், தனியார் நிறுவனங்களினாலும் வழங்கப்படுகின்றது. மகிந்த சிந்தனையின் அடிப்படையில் குறிப்பாக பெண்களுக்கென சிறு கைத்தொழில்கள் செய்வதற்கென்று அரசாங்கக்கத்தினால் கடன் தொகை வழங்கப்படுகின்றது.

இதையெடுத்த மக்கள் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என்பதற்கு பாவித்து ஒருளவு நன்மையடைகின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. சில பேர் இந்தத் தொகையை எடுத்து வேறு வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தினாலும் மாத முடிவிலோ அல்லது மாதத் தொடக்கத்திலோ குறிப்பிட்ட தொகையைக் கட்டினால் பிரச்சினையில்லை.

இதே போல் தனியார் நிறுவனங்களினால் "கிழமைக்கடன்" என்ற ஒரு புதிய கடன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். கிராமங்களில் இருக்கின்ற கோவில்களின் முன்னிலையிலோ அல்லது வாசிகசாலைகள், அபிவிருத்திச்சங்கங்கள் முன்னிலையிலோ வந்து மக்களை அழைத்து கூட்டங்கள் வைத்து, இந்தக்கடன் முறைகளை அறிமுகம் செய்கின்றார்கள். இந்தக் கடன் தொகைகளும் குறிப்பாக பெண்களுக்கென்றே முதன்மை கொடுத்து வழங்கப்படுகின்றது.

அதிலே மிகவும் முக்கியமான கடனாகவும், மிகவும் ஆபத்தான கடனாக கிழமைக்கடன் என்ற கடன் வழங்கப்படுகின்றது. ஆறுமாதம், ஒருவருடம் அல்லது மேலோ என்ற அடிப்படையில் இந்தக்கடன்கள் வழங்கப்படுகின்றது.

அதாவது மூன்று பெண்கள் சேரும் பட்சத்தில் அவர்களுக்கு இந்தக்கடன் வழங்கப்படும். ஒரு திங்கட்கிழமை கடனை எடுத்தால், ஒரு குறிப்பிட்ட தொகையை அடுத்த திங்களில் இருந்து ஒவ்வொரு திங்களும் கட்டியே ஆக வேண்டும். இந்த மூவரில் யாராவது ஒருவராவது கட்டத் தவறும் பட்சத்தில் மற்றைய இரண்டு போரும் அதற்கான பொறுப்புக்குரியவர்களாகின்றார்கள்.

திங்கட்கிழமை ஒரு நிறுவனம் வந்து இப்படி கடனை வழங்கினால், செவ்வாய் இன்னொரு நிறுவனம் என்றும் புதன் இன்னொரு நிறுவனம் என்றும் மாறி மாறி கடன்களை அள்ளி வழங்குகின்றார்கள்.

அப்படி ஒருவர் கட்டாமல் விடும் அந்த நாளே, அந்த வங்கி ஊழியர்கள் அந்தப் பெண்மணியின் வீட்டு வாசலில் வந்து நின்று, இரவிரவாக கெட்ட வார்த்தைகளால் திட்டி கேளாத கேள்விகளெல்லாம் கேட்கிறார்களாம். இவர்கள் வந்து இரவில் வாசலில் வந்து நிற்பதால் இந்தக் குடும்பப் பெண்களைப் பற்றி அவதூறான பேச்சுக்களும் இடம்பெறுகின்றன.

இதன் பிரகாரம் சில பெண்கள் தற்கொலை முயற்சிகளில் கூட ஈடுபட்டுள்ளார்கள். பல பெண்கள் சொல்ல முடியாத உளவில் தாக்கங்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், இன்னும் பல பேர் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதையுணர்ந்த சில இளைஞர்கள் கோபடைந்து வங்கி ஊழியர்களுடன் வாக்கு வாதங்களிலும் ஈடுபட்ட போது அது பிறகு பொலிஸ் விவாகரங்களாக மாறுகின்றது. அதனால் ஏன் தானோ என்று பல இளைஞர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள். சில இடங்களில் கடன்பட்டவர்கள் இதை விரும்பவுமில்லை. மாறாக இது பற்றிக் கதைக்கப் போனால் உங்களால் இப்படி உதவ முடியுமா என்றும் கேட்கிறார்கள்.

இப்படிக் கடன் வழங்குவதில் சிலிங்கோ, கொமசியல் கிறடிற், நேசன் லங்கா போன்ற தனியார் நிறுவனங்கள் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன.

பெண்களைவிட ஆண்களுக்கென்றும் கடன்கள் வழங்கப்படுகின்றது. அந்தக்கடன், இந்தக் கடன் என்று விதம்விதமான கடன்கள் வழங்கப்பட்டு மக்கள் எல்லோரும் இறக்க முடியாத சுமைகளுடனும் சொல்ல முடியாவலிகளுடனும் காணப்படுவதனை என்னால் இலுகுவாக இனம் காண முடிந்தது.

இந்தக்கடனை எடுத்தவர்களுடன் கதைத்த போது தங்களுக்கு ஏற்கனவேயிருந்த ஒரு பெரிய கடனை அடைக்க இது உதவியது என்று ஒருவரும், அடைவில் இருந்து விலைப்படப் போன நகைகளை மீட்க உதவியது என்றும் சில பேரும், வீடு வாசல் திருத்த உதவியது என்று சில பேரும் கூறினார்கள்.

சில பேரோ மற்றவர்களைப் போல நாங்களும் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு ஆடம்பரச் செலவுகளுக்குப் பயன்படுத்தினோம் என்று வருத்தப்பட்டதோடு, இன்னொருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரின் மகன் நெடுக ஆசைப்படுகிறான் என்பதால் மோட்டச்சயிக்கிள் எடுத்துக் கொடுத்தார் என்று குறையாகவும் குறிப்பிட்டார்.

அடுத்த இடத்தில் இருப்பது மீற்றர் வட்டி. கேட்கவும் கதைத்கவும் மிகவும் சுவாஸியகரமாக இருந்தது.

ஒரு லச்சம் ருபாவுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா வட்டி. ஒருமாதத்திற்கு முப்பதாயிரம் ரூபா. இப்படி வட்டிக்கு வாங்குபவனின் அடையாள அட்டை போட்டோக் கொப்பி பிரதி, அல்லது பாஸ்போட் கொப்பி பிரதியுடன் இன்னாரிடமிருந்து இவ்வளவு தொகையை கடனாக பெற்றுள்ளேன் என்ற கையெழுத்திட்ட சாட்சியங்களுடன் தான் இந்த வட்டி கொடுக்கப்படுகின்றது.

இப்படி அதிக வட்டி கிடைக்கப்படுவதால் சில பேர் தங்களிடமிருந்த நகைகளை விற்றோ அல்லது அடைவு வைத்தோ இப்படி வட்டி கொடுப்பவர்களிடம் கொடுத்து வட்டிக்கு விடுகின்றார்கள்.

இவையெல்லாம் கனநாட்களுக்கு நிலைக்கவில்லை. வட்டிக்கென்று எடுத்தவன் கட்டமுடியாமல் போவதால், அவன் இவனிடம் ஏமாந்து இவன் அவனிடம் ஏமாந்து கடைசியிலே கனபேர் தற்கொலையே செய்துள்ளனராம். சென்ற வருடம் ஒரு முப்பத்தி மூன்று வயது இளைஞன் இரண்டு குழந்தைகளின் தந்தை, யாருக்கோ பொறுப்புக்கு நின்றவனாம், இவர்களால் ஏமாற்றப்பட்டதால் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளான். இந்த மீற்றர் வட்டி எடுத்தவர்கள், கொடுத்தவர்கள் பல பேர் இன்று சிறையில் வாடுகின்றார்கள்.

இங்கு குறிப்பிட்ட இந்த விடையங்கள் இரண்டும் எமது மக்களின் வாழ்நிலையை கிண்டல் செய்வதற்காகவோ அல்லது நாங்களெல்லாம் சிறப்பாகவும் பத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்கின்றோம் என்று இதை உங்களுக்கு சொல்ல வரவில்லை.

மாறாக எமது மக்கள் போர் தந்த கொடுமைகளின் வலிகளினாலும், தீர்க்க முடியாத வறுமையினாலும், வெளிநாட்டு உறவினர்களின் உதவியினாலும் மற்றும் ஏதோ ஒரு வகையில் கடன்பட்டு வாழ்ந்து பழகிப் போன இந்தச் சமூகம், இந்தக் கடன்களின் உண்மைத் தோற்றம் பற்றி இப்பவும் அறியாத புரியாத மாயைக்குள் சிக்கித் தவித்து ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள்.

முடிந்தளவு இது பற்றிய சிறு விழிப்புணர்வுகளையாவது எமது சமூகத்துக்கும், உறவினர்களுக்கு ஏற்படுத்துவோமேயானால், அதுவே எமது மக்களுக்கு நாம் செய்யும் ஒரு சிறு உதவியாய் இருக்கும்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்