யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் உரிமை மதிக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும்!!!

வடக்குக் கிழக்கில் கொடிய யுத்தத்தில் பலியாகிப்போன தமது உறவுகள் அயலவர்கள் நண்பர்களுக்காக ஒரு துளி கண்ணீர் சிந்தி நினைவுகூர முடியாத வண்ணம் மக்களது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. போராளிகளையும் கொடிய யுத்தத்திற்கு பலியாகிப்போன பொதுமக்களையும் நினைவுகூர்ந்து மத வழிபாட்டுத்தலங்களில் தீபாராதனை காட்ட முடியாது. மணிகளின் ஓசை எழுப்ப முடியாது. மக்கள் கூட்டமாக வழிபட முடியாது. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒன்று கூடி தீபங்கள் ஏற்ற முடியாதவாறு வடக்கு கிழக்கில் ஒரு இராணுவ அடக்குமுறை ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது.

 

 

கடந்த வருடம் கூட யாழ். பல்கலைகழக மாணவர்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் திடீரென நுழைந்த பாதுகாப்புப் படையினர் மாணவர்களை மிருகத்தனமாகத் தாக்கி மாணவர் தலைவர்களை கைதுசெய்து இராணுவ விசாரணையின் பின்னர் புனர்வாழ்வு என பலத்த தொல்லைகளுக்கு உள்ளாக்கியது. இந்த வருடம் முன்னெச்சரிக்கையாக 2013 நவம்பர் 11ம் திகதியிலிருந்து டிசம்பர் 02ம் திகதி வரை யாழ். பல்கலைக்கழகம் பாதுகாப்புப்பிரிவுகளின் வற்புறுத்தலின் பேரில் மூடப்பட்டிருக்கின்றது.

மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை காலடியில் போட்டு நசுக்குகின்ற இந்த அரசின் செயற்பாட்டினை நாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அனைத்து இன மக்களினதும் சம உரிமைக்காக போராடுபவர்கள் என்ற வகையில் அரசினது இந்த செயற்பாட்டினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கொடிய யுத்தத்தில் இறந்த தமது மக்களையும், உறவுகளையும் நினைவுகூரும் உரிமைக்கு நாம் அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். அந்த உரிமைக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். அரசாங்கமோ வேறுதிசையில் பயணித்து இந்த உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கின்றது. அரசின் நோக்கம் இனவாதத்தினை மேலும் வளர்த்து மோதல்கள் வன்முறைகள் மூலமாக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களை பிரித்து வைத்து தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைப்பதும் நாட்டின் வளங்களை அந்நியர்களுடன் இணைந்து கொள்ளையிடுவதும்தான். சிங்கள மக்களின் நலன்களை கருத்தில் கொண்டுதான் அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது என யாராவது கருதினால் அது முட்டாள்தனமானதாகும். சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதங்களின்றி விலங்குகளைப் போன்று மனிதர்களை கொன்று போடும், மனித உயிர்களின் மதிப்புத் தெரியாத கொலைகாரர்கள் தான் இந்த ஆட்சியாளர்கள்.

விடுதலைப்புலிகளின் அரசியல் கொள்கை மற்றும் நடைமுறைகளில் எமக்கு எத்தகைய உடன்பாடும் கிடையாது. ஆட்சியாளர்களின் தொடந்த இன ஒடுக்குமுறைக்கு எதிராக- அடங்கி ஒடுங்கி வாழாது அதனை எதிர்த்தவர்கள் தான் புலிகளுடனும்  மற்றைய இயக்கங்களுடனும் இணைந்து போராடிப்  பலியாகிப்போனவர்கள். இந்த வகையில் போராடி மரணித்த வீரர்களின் தியாகங்களை நாம் மதிக்கின்றோம். மரணித்த படை வீரர்களை நினைவு கூர்வதற்கு சிங்கள மக்களுக்கு உள்ள உரிமையைப் போன்றே தம்மீதான அடக்குமுறைக்கு எதிராக போராடிய போராளிகளை நினைவுகூரும் உரிமை தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது. இதனை மறுப்பது ஜனநாயகமாகாது, மனிதநேயத்திற்கு எதிரானது. எனவே, போராளிகளையும் படுகொலைகளிற்கு உள்ளான பொதுமக்களையும், அதேவேளை தமிழ் இயக்கங்களால் கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூர்வதற்கு,   தமிழ் மக்களுக்கு உள்ள உரிமையை ஏற்றுக் கொள்வது ஒன்றும்,  அரசு கூறுவது போன்று தேசக்குற்றமாகாது.

தமிழ் மக்களுக்கு அவர்களது சிவில் உரிமைகளை பெற்றுக் கொடுத்தல், ஜனநாயகத்தை மீள நிலைநாட்டல், ஏனைய சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாணல் மற்றும் வடக்கு கிழக்கில் அரச பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருதல் போன்றவைகளே இன்று மிக முக்கிய உடனடித் தேவைகளாக இருக்கின்றன. மக்களிடையே இனக்குரோதத்தினை வளர்த்து யுத்தத்தினை ஆரம்பித்து அதில் இலாபம் அடைந்தவர்கள் சிங்கள தமிழ் முஸ்லீம் மூவினங்களையும் சேர்ந்த ஆளும் வர்க்கத்தினரே. அரசின் மேற்குறித்த மனிதநேயமற்ற செயற்பாடு சமாதானத்தை கொண்டு வருவதற்கு பதிலாக இனக்குரோதத்தையே தமிழ் மக்கள் மத்தியில் வளர்க்கும். தமிழ் மக்கள் மீண்டும் வன்முறைப் பாதையினை தேர்ந்தெடுக்கத் தூண்டும். இதனையே இன்றைய ஆட்சியாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஓரணியில் சேர்ந்து நின்று தமது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய உழைக்கும் மக்களை இனரீதியாக பிரித்து வைப்பதன் மூலம் தம்மை பாதுகாத்து ஆட்சியில் நீடித்து வைத்திருக்;க ஆளும் வர்க்கம் திட்டம் போட்டு செயற்படுகின்றது. இதனைப் புரிந்து கொண்டு ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் இனவாதத்தினை முறியடித்து செயற்பட வேண்டியது உடனடி தேவையாகும்.

தமிழ் மக்கள் அவர்களின் உறவுகள் நண்பர்கள் அயலவரை நினைவுகூரும் நவம்பர் 27ம் நாள் செயற்பாடு அவர்களின் ஜனநாயக உரிமையாகும். இதனை நிறுத்துவதோ குழப்புவதோ அடிப்படை மனித உரிமை மீறலாகும். சம உரிமை இயக்கமானது இந்த உரிமையினை உறுதி செய்யும் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட சகல மக்களையும் இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கின்றது.சம உரிமை இயக்கம்

26/11/2013