இப்ப கொஞ்சக் காலமாக என்ரை காதிலே அடிபடுகின்ற கதைகளிலே மிக முக்கியமாக அடிபடுவது இந்தப் புலம்பெயர் நாடுகளிலே வாழும் எம் இளம் சமூகத்தினர் மத்தியியில் நடைபெறுகின்ற விவாகரத்துக்கள் பற்றியே.
தமிழர்கள் செய்யும் இன்பமான விழாக்களாய் இருந்தாலென்ன, துன்பியல் நிகழ்வுகளாய் இருந்தாலென்ன, அங்கே கூடிக்கதைக்கும் கதைகளில் இந்த விடையம் மிக முக்கியத்தவம் பெற்றிருப்பதை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதிலும் இந்த இளவயதினர் செய்கின்ற விவாகரத்துக்களின் விகிதாசாரம் மிகக்கூடியதாகவும் அதிவேகமாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
போட்டோ எடுப்பது எனக்கு ஒரு தொழிலாய் இருப்பதால் நான் போய் படமெடுத்த பல திருமணங்களில், ஒரு சில திருமணங்கள் குறுகிய காலத்துக்குள் முறிவுகள் ஏற்பட்டு பிரிந்து வாழுகின்றனர் என்பதைக் கேள்விப்படும் போது வேதனையாகத் தான் இருக்கின்றது.
ஒரு மூன்று வருடத்துக்கு முன்னர் நான் படமெடுத்த ஒரு திருமணம் இடையில் முறிந்து விட்டது. அடுத்த வருடம் அந்தப் பெண் பிள்ளைக்கு திரும்பவும் திருமணம் நடைபெற்றது. அதற்கு நான் தான் போய் படமெடுத்தேன். பின்னர் அதற்கடுத்த வருடத்தில் அந்தப் பொடியனுக்கு திருமணம் நடைபெற்றது அதற்கும் நான் தான் போய் படமெடுத்தேன்
இதே போல் இன்னொரு நிகழ்வொன்றில் படமெடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிள்ளை பின்னால் வந்து முதுகில் தட்டினார். எனக்கு ஆளை அடையாளம் தெரியவில்லை. என்ன அங்கிள் என்னை மறந்து போனீர்களா நான் தான்.... என்று தன் பெயர் சொல்லியும் எப்பொழுது திருமணம் நடைபெற்றது என்றும் சில ஞாபங்களை நினைவுபடுத்தி விட்டு, சந்தோசமாக கதைத்து விட்டு மறைந்து விட்டாள்.
சில மணி நேரத்தின் பின்னர் குறூப்படங்கள் எடுக்கும் போது அவள் இன்னொரு பொடியனுடன் வந்து நின்றாள். நான் பார்த்த பார்வையைப் புரிந்தவள் போல் திரும்பி வந்து, நான் அவரைப் பிரிந்து இப்ப இவருடன் சேர்ந்து வாழ்கிறேன்... இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் மிகச் சாதாரணமாகச் சொல்லி விட்டு மறைந்து விட்டாள்.
இன்னுமொரு இடத்தில் சனிக்கிழமை திருமணம் நடைபெற்று அடுத்த புதன்கிழமை இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் திருமணத்துக்கு முன்னர் இரு குடும்பத்தினரின் அனுமதியுடன் சேர்ந்து திரிந்தவர்கள், பழகியவர்கள். இவர்களைப் போல் இரு குடும்பத்தினரின் அனுமதியுடன் சேர்ந்து பழகி நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சில இளம் சோடிகளும் திருமணம் நடைபெறாமலே பின்னர் பிரிந்திருக்கின்றனர்.
இந்தப்பிரிவினைகளால் பெற்றோரும் மற்ற உறவினர்களும் கவலைப்படுவது போல் இந்தப் பிள்ளைகள் கவலைப்படுவதாக எனக்குத் தெரியவில்லை. இந்த இளசுகள் வெள்ளைக்காரர்கள் போல் மிகச் சாதரணமாக ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இருப்பது ஒரு ஆரோக்கியம் போல் தோன்றினாலும் இதன் வெளிப்படையான உண்மை எனக்குத் தெரியாது.
இந்த விடையங்களை சில நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போது உனக்கென்ன திரும்பத்திரும்ப படமெடுக்க காசு தானே என்று பகிடியாக்கின்றார்கள். உண்மை அதுவல்ல, சாதாரணமாக ஒரு திருமண நாளில் அந்தக் குடும்ப உறவினர்கள் முகத்திலும், அங்கு வந்து போகும் நண்பர்கள் உறவினர்கள் விருந்தினர் முகத்தில் இருக்கும் சந்தோசத்தை இரண்டாம் முறை நடைபெறும் நிகழ்வுகளில் காணமுடியாது. இது தான் உண்மை.
நான் இங்கே குறிப்பிடுவது எனக்குத் தெரிந்தவர்கள் மத்தியில் நடைபெற்றவை, மாத்திரமே... ஆனால் எனக்குத் தெரியாதவை இன்னும் எத்தனை எத்தனையோ....
இந்த வேகத்துக்கும் விரைவுக்கும் என்ன காரணம்....? ஏன் இப்படிச் செய்கின்றார்கள் என்று ஆராய எனக்கு நேரம் காணாது. இருந்தாலும் எனக்குத் தெரிந்த சில திருமணம் செய்து குடும்பமாய் இருக்கும் இருபால் நண்பர்களிடமும் சில திருமணம் செய்யாதவர்களிடமும் பொதுவாக இந்த விவாகரத்துக்களுக்கு என்ன காரணங்கள் இருக்கலாம் என்றும், நீங்கள் விவாகரத்துச் செய்வதாக இருந்தால் என்ன காரணத்துக்காக உனது துணையை விவாகரத்துச் செய்வீர்கள் என்று ஒரு நகைச்சுவைக்குமாக கேட்ட போது சில பேர் மிகுந்த பாரதூரமாகவும் மிகுந்த கவலையுடனும் என்னுடன் கதைத்துக் கொண்டதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. சில பேர் தங்களுக்கான காரணங்களைச் சொல்லாமல் பொதுவாக இப்படியான காரணங்களும் இருக்கலாம் என்று சொன்னவைகளை இங்கே அப்படியே தருகின்றேன்.
ஒரே மாதிரியான கருத்தை ஆண் ஒரு பார்வையிலும் பெண் இன்னொரு மாதிரியாகவும் அணுகியிருப்பதை என்னால் கண்டு கொள்ளக் கூடியதாக இருந்தது.
பொதுவாக இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு நமது பெரியோர்கள் எப்படி எப்படியெல்லாம் வாழ்ந்தார்கள் என்பது இங்கு யாருக்கும் தெரியாது. இந்த வெளிநாட்டு வாழ்க்கைக்குள் தங்களைத் திணித்துக் கொண்டு இவர்களைப் போலவே முழுமையாக பல பேர் வாழப்பழகிவிட்டார்கள் என்பது பொதுவாக ஒரு காரணியாக எல்லோரும் முன்வைத்தனர். இது இங்கு மட்டுமல்ல எமது நாட்டிலும் இதன் வேகம் அதிகரித்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
அதிவேகமாய் மாறிவரும் இந்த உலகத்தில் இந்தக் குடும்பங்களிலும் மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை தானே, அதன் விளைவுகளின் பின்னணி தான் என்றும் சில பேர் அவிப்பிராயம் தெரிவித்தனர்.
சில நடைமுறைச் சிக்கல்களை மனதிற் கொண்டு பெயர், வயது பற்றிய விபரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கே சொல்லப்படாத வேறு பல காரணங்களும் இருக்கும் என்று நினைக்கின்றேன். விரும்பினால் அதை யாரும் குறிப்பிடுவது விரும்பத்தக்கது.
மாலதி வயது 44. தமிழ்
என்ரை மனுசன் எதுக்கெடுத்தாலும் கோபமும், குறையும். அவர் தனக்கு விளங்காத விடையங்கள் எனக்கும் விளங்கியிருக்காது என்று நினைக்கின்றார். இவருக்கு எக்கோ தன்மையிருக்கு, தன்னைவிட நான் உயர்ந்து விடுவேனோ என்று நினைக்கிறார். இதனாலே அடிக்கடி எங்களுக்குள் பிரச்சினை. சில வேளையில் அவர் நடந்து கொள்ளும் விதத்தால் ஒரு பைத்தியக்காரருடன் குடும்பம் நடத்துகிறேனோ என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இதுகளை வைத்து பிரிய வேண்டுமா....? சேர்ந்து தானே வாழ வேண்டும் என்று சிரித்துக் கொண்டார்.
ஏப்பிரகாம்.
வயது 56 அரபு.
என்ன இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுப்போட்டாய்.... என்ரை மனுசி முந்தி நல்லா வடிவா இருந்தவள். இப்ப இங்கே வந்த பின்னர் வண்டியும் வைச்சு குண்டியும் வைச்சு நடக்க முடியாமல் திரியிறாள். இதை நான் பகிடியாச் சொன்னாலும், இந்தப் புறவழகு ஒரு காரணம் தான். எனக்குத் தெரிந்த கன நண்பர்களுக்கு அழகு என்பது ஒரு பிரச்சினையாய் இருக்கின்றது என்பது உண்மை. அழகு என்பது வெளிப்புறத்தில் இல்லை. மனத்தில் தான் இருக்கு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். வேறு அழகிலே மயக்கம் கொள்ளும் போது, இருப்பவர்கள் பிரச்சினையாக உருவெடுக்க இந்த விவாகரத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது.
நிலிபா.... வயது 31, துருக்கி.
கணவன், மனைவி பற்றிய கடந்த காலங்களையும், மனைவி கணவன் பற்றிய கடந்த காலங்களையும் ஆராய முற்படுகின்ற போது பிரச்சினைகள் எழுத் தொடங்குகின்றது. யாருடன் ரெலிபோனில் கதைப்பது யாருடன் முகநூலில் நண்பராய் இருப்பது போன்ற விடையங்களில் தலையிடுவது, ஒருவருக்கு வரும் கடிதத்தை மற்றவர் பார்க்க முனைவது போன்ற விடையங்கள் இந்த நிகழ்வுகளுக்கு வித்திட்டு விவகாரங்களைப் பெரிதாக்கின்றது என்று நினைக்கின்றேன். அதுவே விவாகரத்துக்கு வழி சமைக்கின்றது.
சயினப் வயது 19. சோமாலி
பெரும்பாலான கணவன்மார் தங்களுக்கேற்ற மாதிரி தங்கள் மனைவிமாரும் இருக்க வேண்டும். அல்லது தங்களுக்கேற்றமாதிரி முழுமையாக மாற வேண்டும் என்று நினைக்கின்றார்கள். பொதுவாக எல்லா ஆண்களும் இதைத்தான் நினைப்பார்கள் என்று நினைக்கின்றேன். இது கட்டுப்பாடும் அடக்கு முறைகளும் கொண்ட ஒரு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படலாம். ஆனால் இந்த ஜரோப்பிய சமூகத்தில் இவையெல்லாம் சரிவராத பட்சத்தில் விவாகரத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கு.
பரிமளா... வயது 36 தமிழ்
என்ரை மனநிலையைச் சொல்லுறன்... சில வேளையில் தனிமையாய் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படும் போது என்னால் முடியாமல் இருக்கின்றது. அது எனக்கு ஏன் என்று தெரியாது. பிறகு கணவனும் குழந்தைகளும் வீடு வரும் போது என்னையறியாமல் ஏதோ கஸ்ரம் போல் மனது சங்கடப்படுகின்றது. ஏதோ விரும்பாத உலகத்துக்குள்ளும் வேண்டாத வாழ்க்கைக்குள்ளும் தள்ளப்பட்டிருக்கின்றே உணருகின்றேன். சில வேளை எனக்கு மனவியாதி இருக்கோ என்றும் சந்தேகப்பட்டேன். என் தனிமைக்காகத் தான் விவாகரத்துச் செய்ய வேண்டும். முடியுமா....? இந்த நிலை என்னைக் கொஞ்சம் சங்கடப்படுத்தி விட்டது.
ரவீந்திரன் 43. தமிழ்
சிரித்தபடியே சொன்னார். நான் சொல்ல விரும்புவது செக்ஸ். இது எங்களுடைய சமூகத்திலே திறந்த வெளியாக கதைக்கப்படும் விடையமாக இதுவரை வளர்ந்துள்ளதாக நான் கருதவில்லை. செக்ஸ் என்ற இந்த விடையம் வெறும் பிள்ளைப் பெறுவதற்காகத் தான் என்று பெரும்பாலான தமிழ்பெண்கள் நினைப்பதாக நான் அறிகின்றேன். அதிலும் பிள்ளைகள் கொஞ்சம் வளரத் தொடங்கினால் எப்போதாவது கிடைக்கும் அந்த சுகம் கூட நிறையப்பேருக்கு கிடைப்பது கொஞ்சம் கஸ்ரமான ஒன்று என்று நான் நினைக்கின்றேன்.
இதே போல் பல ஆண்களும் நினைக்கின்றார்கள். வேலை என்றும் காசு காசு எந்த நேரமும் கட்டியழும் இந்த ஆண்கள் பல பேர் இந்த செக்ஸ் விடையத்தை ஒரு பெரிய பொருட்டாக கருதுவதில்லை. பெண்களுக்கும் இந்த செக்ஸ் என்பது மிகவும் முக்கியமானதொன்று என்றும் அது அவசியமானது என்பதை பல ஆண்கள் மறந்து போய்விடுகின்றனர். இது போன்றவை இந்தக் கள்ளத் தொடர்புகளுக்கு காரணமாயிருக்கின்றது.
எல்லா இனமக்கள் மத்தியிலும் இந்த விவாகரததுக்கு இந்த செக்ஸ் ஒரு முக்கிய பிரச்சினையாய் இருகின்றது எனது கணிப்பீடாகும்.
சோபானா வயது 37 தமிழ்
நான் இந்த வெளிநாடு என்று வந்தவுடன் தான் சில விடையங்கள் பிரச்சினை போல் பார்க்கப்படுகின்றது என்பதை உணர்ந்து கொண்டேன். நாங்கள் எங்களுடைய நாட்டில் இருக்கும் காலங்களில் இது இப்படித் தான் அது அப்படித்தான் என்று காலம் காலமான பின்பற்றி வந்த பல விடையங்கள் இங்கே பிழையென்று உணரக் கூடியதாக இருக்கின்றது. அங்கே நாங்கள் ஒன்றும் எதிர்த்தோ மறுத்தோ கதைக்க முடியாது. ஆனால் இங்கே எல்லாம் வெளிப்படையாக கதைக்கின்றார்கள். விவாதிக்கின்றார்கள், அதை நாங்களும் பின்பற்ற முனைகின்ற போது பிரச்சினைகள் வெடிக்க ஆரம்பிக்கின்றது. அதுவே வளர்ந்து விவாகரத்துவரையிலும் வந்து முடிவடைகின்றது.
சுனந்தா 44 தமிழ்
நீங்கள் கேட்டதற்காக அல்ல. இன்றைக்கு விவாகரத்து செய்யும் விழிம்பு நிலைக்கு நாங்கள் இருவரும் வந்து விட்டோம். ஏன் என்றால் இந்தியாவில் இருக்கும் எனது குடும்பத்தினரை பார்க்க வேண்டிய பொறுப்பு என்னுடையது. எனது குடும்பத்துக்கு காசு அனுப்பிறன் என்று எண்டு ஒவ்வொரு நாளும் சண்டை. அந்தச் சண்டையின் பாதிப்பு, பிள்ளையளுக்கும் வந்ததாலே அங்கே பள்ளிக்கூடத்தில் விசாரித்த போது பிள்ளைகள் உண்மையைச் சொல்லிப் போட்டார்கள் அப்பா அம்மா அடிக்கடி சண்டை என்று. அது இன்று நகரசபையளவில் போய் பிள்ளைகளை எம்மிடமிருந்து பிரித்தெடுக்கும் அளவிற்கு வந்து விட்டது. இப்படியான கணவனுடன் ஏன் இருக்கின்றாய் என்று எனது சோசல் அதிகாரி கேட்கிறாள்......,?
இதற்கு நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள் என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.........
வயது 46 கன்டீல் மொறக்கோ.
ஒரு பழமொழி சொல்வார்கள்.... திருமணம் என்பது ஒரு முற்றுகையிடப்பட்ட கோட்டை என்பார்கள். உள்ளேயிருப்பவர்கள் வெளியே வரத் துடிப்பார்கள். வெளியே இருப்பவர்கள் உள்ளே வர துடிப்பார்கள். வெளியே வருவது என்றால் என்ன...,? விவாகரத்துத் தான் செய்ய வேண்டும். அதுக்கு பல காரணங்கள் இருக்கின்றது. இதிலே நான் முக்கிய காரணமாக நினைப்பது, இந்த நாட்டு வாழ்க்கை முறைகள் தான். இது ஒரு செய்திகளையும் தகவல்களையும் நேரத்துக்கு நேரம் வழங்கிக் கொண்டிருக்கும் சமூகம். ஆகவே பிரச்சினைகள் தோன்றும் போது இலகுவாக பிரிகின்றார்கள்.
பிற்றீனா. வயது 51 டெனிஷ்
நான் ஒரு உளவியலாளியாக கடமையாற்றுகின்றேன். இதனால் இந்த விவாகரத்துக்கள் சம்பந்தமான அனுபவங்கள் நிறைய இருக்கு என்றும் நினைக்கின்றேன். நான் சந்தித்துக் கொண்ட வழக்குகளில் பலபேக்குத் தெரியாத மிகவும் சுவையான ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். இது கட்டாயமாக ஆண்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதும் எனது ஒரு பெருவிருப்பு... எனக்கூறிவிடடுச் சிரிக்கத் தொடங்கினாள்.
அதாவது பெண்களுக்கு ஒரு 45 அல்லது அதற்குப்பிறகு மாதவிடாய் நிற்கும் காலம் என்று ஒன்று இருக்கு. இந்தக் காலகட்டத்தில் பல மாறுதல்கள் ஏற்படுவது இயற்கை. அந்த காலகட்டங்களில் பெண்ணானவள் எந்த நேரமும் கோபப்படுவளாகளும் எரிச்சல்படுபவளாகவும் சொல்ல முடியாத உளவியல் உபாதைக்குள்ளும் ஆளாவாள். இது பெண்ணுக்குப் பெண் வித்தியாசப்படும். இந்த நேரங்களிலே வந்த பல பிரச்சினைகள் சண்டைகள் காரணமாக இன்று பல பேர் மத்தியில் விவாகரத்துச் செய்யும் அளவிற்கு வந்திருக்கின்றார்கள். பலபேரை இதிலிருந்து காப்பாற்றியும் இருக்கின்றேன். இதையுணர்ந்து அவர்களை அணைத்து அன்பாக அணுகினால்..... சந்தோசம் தானே.
பரணி வயது 53. தமிழ்
ஏன் நான் இப்பவும் உயிருடன் இருக்கின்றேன் என்று பல முறை யோசித்ததுண்டு. மனுசியோ பிள்ளைகளோ ஒருத்தரும் என்னை மதிப்பதில்லை, ஒன்றுமே கேட்பதில்லை. ஏதோ கணவன் என்ற பெருக்கம் தகப்பன் என்ற பெருக்கும் சும்மா இருப்பது போலலே எனக்குத் தொன்றுகிறது. எங்களிடம் சொல்லிக் கொள்வதற்கு என்று ஒருவிதமான உறவுகளும் இல்லை, நான் ஒரு பக்கத்தாலே வேலைக்குப் போகிறேன் இன்னொரு பக்கத்தாலே மனுசி வேலைக்குப் போகிறாள். பின்னேரம் திரும்பி வருகிறோம் சமைக்கிறதைச் சாப்பிடுறம், பிறகு போறம் வாறம். எங்களக்குள் கதைப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை விட அந்த நெருக்கம் இல்லாமல் போய்விட்டது என்பது தான் உண்மை. ஏதோ சமூகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இதையெல்லாம் எழுதி முடித்து விட்டு இன்று இரவு எனது மகளின் பாடசாலைக்கு பெற்றார் ஆசிரியர் சம்பந்தமான கூட்டத்துக்கு போயிருந்தேன். அந்தக்கூட்டத்தில் பிள்ளைகளைப் பார்த்த ஆசிரியர் பிள்ளைகள் நீங்கள் உங்கள் பெற்ரோரை அறிமுகம் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்ட போது இது என்னுடைய அம்மா என்றும் மற்றவரின் பெயரைச் சொல்லி. இது அம்மாவின் காதலன் என்றும். சிலபேர் இது என்னுடைய அப்பா. இது அப்பாவின் துணை என்றும் சில பேர் அது அப்பா அம்மாவின் புதிய சோடி என்றும் அறிமுகம் செய்தனர்.
கூட்டம் முடிந்து வெளியே வந்த பின்னர் எனது மகளைப் பார்த்து என்ன உன்னோடு படிப்பவர்களின் பெற்றோர்கள் எல்லோரும் விவாகரத்துச் செய்தவர்களாய் இருக்கே....எனக் கேட்ட போது தன்னுடைய சினேகிதியின் பெயரைச் சொல்லி அவளும் தன்னுடைய தகப்பனின் பரிவையெண்ணி ஒவ்வொரு நாளும் கவலைப்படுவதாகவும் குறிப்பிட்டாள்.
இங்கே ஏன் இந்த விவாகரத்துக்கள் அதிகமாயிருக்கு என்று கேட்ட போது இரண்டு தோள்களையும் உயர்த்தி தெரியாது என்று தலையாடடினாள்.
இது தான் இந்த ஜரோப்பிய முதலாளித்துவச் சமூகம். குடும்பம் என்று வாழ்வதை விட நான் என்றும் என்ரை என்றும் தான் என்றும் தனக்கென்றும் வாழும் இந்த வாழ்க்கையை உருவாக்குவதோடு, இந்தக் கூட்டுக் குடும்ம வாழ்க்கை முறைகளையும் இல்லாது செய்து விட்டு இப்ப தனித்து வாழும் தனிக்குடும்பங்களையும் உடைத்தெறியும் வழிமுறைகளையும் செய்து கொண்டிருக்கின்றது.