தேர்தல் என்றால் என்ன..? மக்களின் வாக்குக்களை வாங்கி பதவிக்கு வந்து அரசாங்கத்தினை அமைத்து அதிகாரம் செலுத்துவது. அரசியலில் ஒரு தீர்வு.., வாழ்க்கைக்கு ஒரு தீர்வு.., வேலைக்கு ஒரு தீர்வு.., பசி பட்டினி, வதிவிடத்திற்கு ஒரு தீர்வு.., என்ற பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு மக்கள் அரசியலில் வாக்களிக்கின்றார்கள். ஆனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் எதையுமே இந்த அரசியல்வாதிகள் நிறைவேற்றி வைப்பதில்லை.
மாறாக தங்கள் வாழ்கையினை மேம்படுத்தவும், அமெரிக்கா – லண்டன் பல்கலைகழகங்களில் தங்கள் பிள்ளைகளை கல்விகற்க வைக்கவும், மக்களின் உழைப்பினை நாட்டின் வளங்களைச் சுரண்டி பணத்தினை பதுக்கவுமே மக்கள் தங்களுக்கு அழித்த வாக்குப் பிச்சைகளை பயன்படுத்துகின்றார்கள் இந்த அரசியல்வாதிகள். வாக்குக்காக மக்களின் கால்களில் விழும் அரசியல்வாதிகள் பதவிக்கு வந்ததும் அதே கால்களால் ஏறிமிதிக்கின்றார்கள். இது இன்று நேற்று அல்ல உலக முதலாளித்துவ அமைப்புக்களில் காலம்காலமாக நடந்து வரும் ஒன்றாகும்.
ஆரம்பத்தில் முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முன் வைத்த இந்த தேர்தல் முறை சர்வாதிகார பிடிக்குள் இருந்த மக்கள், ஜனநாயக ஆட்சிக்குள் தங்கள் ஆட்சியாளர்களை தெரிவு செய்து அரசை நிர்வகிக்கும் உரிமை மக்களுக்கு தேர்தல் மூலம் வழங்கப்பட்டிருந்தது. மக்களும் தேர்தல் காலத்தினை மிகக் குதூகலத்தோடு கொண்டாடி தங்கள் விருப்படி வாக்களித்து ஜனநாயக உரிமையினை வெளிப்படுத்தி வந்தார்கள். காலப் போக்கில் முதலாளித்துவம் சந்தித்து வந்த அரசியல், பொருளாதார நெருக்கடிகளால் மக்களைப் பல வழிகளில் அடக்கியொடுக்கத் தொடங்கியது. அதே முதலாளித்துவம் இன்று மக்களை திசை திருப்ப இனவாதம், நிறவாதம், மதவாதம், மற்றைய நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு.., என்ற கொள்கைக்குள் ஆட்சியினை வழிநடாத்தி அதிகாரத்தினை தக்க வைத்து வருகிறது.
வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த மட்டில் வேலையில்லாதவருக்கு சோசல் காசு, வீட்டு வசதி போன்ற ஒரு சில அடிப்படைத் தேவை செய்து கொடுத்து தங்கள் பிடியில் இருந்து விலக முடியாமல் மாற்று சட்ட திட்டங்களை தயாரித்து நாட்டினை வழி நடாத்தி வருகின்றார்கள். வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு, ஓய்வூதியம் என்ற மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து சட்டங்களை மாற்றியமைப்பதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கையினை பல வழிகளில் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.
இதையெல்லாம் சிந்தித்து மக்கள் தங்களுக்கு எதிராக குரல் கொடுத்துவிடாதிருக்க சிறுவர் முதல் பெரியோர் வரை பல வேறுபட்ட உக்திகளை மேற்கொண்டு மக்களின் கவனத்தினை திசை திருப்பி வருவதில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகள் மிகத் திறம்பட செயற்பட்டு வருகின்றது. மக்களும் தமது அன்றாட வாழ்வில் ஏற்படும் சிரமங்களை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளை மாற்றி மாற்றி தெரிவு செய்து பார்க்கின்றார்கள், ஆனால் மக்கள் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதாக இல்லை. மக்களின் எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் இந்த முதலாளித்துவ தேர்தல் தோற்கடித்து விடுகின்றது.
இன்று இலங்கையில் நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றியும் இதே நிலைப்பாட்டினைக் கொண்டது தான். மக்களின் எதிர்பார்ப்பு வேறு, கூட்டமைப்பின் நிலைப்பாடோ வேறு. கூட்டமைப்பு தனது வெற்றியினை இனவாதத்திற்குள் முடக்கி அதுவே மக்களின் தீர்ப்பாக தனது அரசியலையும் பதவியையும் தக்க வைப்பதே கூட்டமைப்பின் அரசியலாகும்.
இன்று மக்களின் பிரச்சனை என்ன..?
பசி பட்டினி, பொருட்களின் விலையேற்றம், அவர்களின் கைத்தொழில் விவசாயம், நியாமான வருமானம் (சந்தைப்படுத்தல்), போராளிகளின் முக்கியமாக பெண் போராளிகளின் வாழ்க்கை, போர்க்காலத்தில் காணாமற் போன பிள்ளைகள் கணவன்மார்களை இழந்த பெற்றோர் - மனைவிமார்களின் தவிப்பு, தமிழ் மண்ணில் இராணுவ ஆக்கிரமிப்பு.., இதுவே இன்றைய மக்களின் தேவையாகும். ஆனால் இதில் எதையுமே கூட்டமைப்பு தீர்த்து வைக்கப் போவதில்லை என்பது உறுதி. தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரிந்ததெல்லாம் தமிழ்த் தேசியம் ஒன்று தான். சிங்கள அரசோடு திரை மறைவில் உறவாடிக் கொண்டு இந்திய, அமெரிக்க அரசுகளோடு பேசி தமிழ் மக்களின் உரிமையினை பெற்றத் தருவதாக சொல்லியே மக்களை ஏமாற்றி தன் அரசியலிலை ஓடப் போகின்றார்கள்.
கூட்டமைப்பின் இந்த வெற்றியானது, இலங்கை-இந்திய அரசுக்களின் வெற்றியே...!
தனது ஆட்சியில் ஜனநாயகம் மேலோங்கியுள்ளதாக மகிந்தா ஜநாவில், உலக நாடுகளுக்கு தன்னை பிரச்சாரம் செய்ய நல்ல வாய்ப்பாக அமைந்துள்ள வெற்றி...!
இந்தியா விரும்பிய வேட்பாளர்களின் வெற்றியானது, தமிழ் பிரதேசங்களில் இந்திய பொருளாதார நலன்களுக்கான சந்தையினை தங்குதடையின்றி திறந்து விட்டுள்ளதுடன், தமிழ் பிரதேசங்களில் இலங்கை அரசின் உதவியுடன் நிகழுகின்ற விவசாய நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிரான குரல்கள் இனி எழ மாட்டாது.
அத்துடன் அபிவிருத்தி, உதவி என்ற பெயரில் இந்திய முதலாளிகளின் பணங்களை முதலீடு செய்து தமிழ் மக்களின் உழைப்பு சொத்துக்களை கொள்ளையிட எந்த தங்கு தடையும் இனிமேல் வரப்போவதில்லை. இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாக்க விக்கினேஸ்வரனை முக்கிய முதலமைச்சர் பதவியில் இருத்தியுள்ளதே இந்திய ஆளும் வர்க்கத்தின் முக்கிய வெற்றியாகும்!
இந்த கூட்டுச் சதி அரசியல்வாதிகளின் சூழ்ச்சியினால் அரசியலில் இன்று தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டு, தோற்றடிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலின் வெற்றி மக்களின் எதிர்பார்ப்புகளின் தோல்வியே.