அரச பாசிசப் பயங்கரவாதம் வெலிவேரியவில் நடத்திய துப்பாக்கிச் சூடும் படுகொலையும், அரசு பற்றிய மாயையை அம்பலமாக்கி இருக்கின்றது. இந்த வகையில்
1.இன்று இலங்கையில் இருப்பது பௌத்த சிங்கள அரசும் இராணுவமும் என்ற புனித விம்பங்களையும், அதன் அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலையும் முழுமையாக அம்பலமாக்கி இருக்கின்றது.
2.மூலதனத்தின் சுரண்டல் செயற்பாட்டை நாட்டின் அபிவிருத்தியாகவும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மக்களுக்கான அரசின் அர்ப்பணிப்பு என்ற போலியான மாயையும் கலைத்திருக்கின்றது.
3.சுற்றுச்சூழலில் நச்சுக் கழிவை கலப்பது தேசபக்த செயலா அல்லது இதற்கு எதிரான மக்களின் செயற்பாடு தேசபக்த செயற்பாடா என்ற கேள்வியை எழுப்பி, அரசை அம்பலமாக்கி இருக்கின்றது. அரசின் நிலை இதில் என்ன என்பதையும், அது யாருடன் நிற்கின்றது என்ற உண்மையையும் போட்டுடைத்து இருக்கின்றது.
4.மக்களை மதத்தின் பெயரால், இனத்தில் பெயரால் ... எதிரியாகவும், நண்பனாகவும் சித்தரிக்கின்ற இலங்கையின் அனைத்து அரசியல் பித்தலாட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும், அனைத்தையும் மீள ஆய்வு செய்யுமாறு, மக்களுடன் இணையுமாறு கோருகின்றது.
இலங்கை இராணுவம் தமிழரை மட்டும் கொல்லாது சிங்களவரையும் கொல்லும். சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், சுத்தமான தண்ணீரையும் கேட்டுப் போராடிய மக்கள் மேல், இலங்கை இராணுவம் நடத்திய தாக்குதல், சிங்களவரையும் கொல்லும் இராணுவம் தான் என்பதை மறுபடியும் உறுதி செய்திருக்கின்றது. புலிப் பயங்கரவாதத்துக்கு எதிரான சிங்கள தேசபக்த இராணுவம் என்ற பேரினவாதிகளின் போலியான புரட்டுகள், சிங்கள மக்கள் போராடும் போது அம்பலமாகிவிடுகின்றது. 1971களிலும், 1989-1990 களிலும் சிங்கள மக்களைக் கொன்று குவித்த அதே இராணுவம் தான், 1980கள் முதல் 2009 வரை தமிழ் மக்களையும் கொன்று குவித்தது. இந்த இராணுவம் பௌத்த சிங்கள இராணுவமல்ல. மாறாக மக்களுக்கு எதிராக சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் கூலிப்படை.
தமிழ் இனவாதிகள் காலங்காலமாக கூறியது போல், சிங்கள பௌத்த இராணுவமல்ல. அரசு, இராணுவத்தை சிங்கள பௌத்த தேசபக்த இராணுவமாக கட்டமைக்கின்றது என்ற அதே கூற்றைத்தான், தமிழ் இனவாதிகளும் மீளக் கூறி சிங்கள மக்களை தமிழ்மக்களின் எதிரியாகக் காட்டினர். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது. அரசும் இராணுவமும் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் எதிரானது. சுரண்டும் வர்க்கத்துக்கு சார்பானது.
மக்கள் குடிக்கும் தண்ணீரில் தொழிற்சாலைக் கழிவை கலந்துவிட்ட மூலதனத்தின் மனித விரோத செய்கையை பாதுகாப்பதற்காக, துப்பாக்கிச் சூட்டை நடத்தி இருவரைக் கொன்றும் 10 க்கும் மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியும் இருக்கின்றது. இலங்கைப் பங்குச்சந்தையில் பெரும் மூலதனத்தைக் கொண்டு சூறையாடும் ஹேலிஸ் குரூப் கம்பனி தான், நஞ்சு கழிவையும் சுற்றுச்சூழலில் கலந்து விட்டது. ஹேலிஸ் குரூப் கம்பனி இந்திய முதலீட்டாளர்களான பாலாஜி ஷிப்பிங் இன் முக்கிய பங்குதார நிறுவனமும் கூட. இவர்களின் தேசபக்தி என்பது சுரண்டல்தான். அரசு இதற்கு சேவை செய்வதுடன் மக்களைக் கொன்று போடுகின்றது.
மக்கள் குடிக்கும் தண்ணீரில் நச்சுக் கழிவுகளை கலக்கும் மூலதனத்தின் செயல், பேரினவாத பௌத்த அரசுக்கு தேசபக்த செயற்பாடாக இருப்பதால், மக்கள் மேல் இராணுவத்தை ஏவுகின்றது. மக்களின் எதிர்ப்பு தேசபக்த தன்மை கொண்டதல்ல, என்பதே அரசின் பாசிசக் கொள்கையாகின்றது. அரச பயங்கரவாதமும், அதன் படுகொலையும், அரசும் அதன் இராணுவமும் என்ன என்பதையும், இது யாருக்காக சேவை செய்கின்றது என்பதையும் அம்பலமாக்குகின்றது.
சுரண்டும் மூலதனங்கள் சுற்றுச்சூழலையிட்டு அக்கறைப்படுதில்லை. அது மக்களை இட்டு கவலைப்படுவது கிடையாது. தனது மூலதனத்தைப் பெருக்கிக் கொள்ளும் சுரண்டலை இட்டுத் தான் அக்கறை கொண்டது. இதைப் பாதுகாப்பதுதான் தான் அரசின் கொள்கையாக இருக்கின்றது.
அபிவிருத்தி முதல் தொழிற்சாலைகள் வரையான அனைத்தும், மக்களைக் கொள்ளை இடுவதற்கே ஓழிய, மக்களை வாழ வைப்பதற்கல்ல. எப்படி இலங்கை இரரணுவத்தை பௌத்த சிங்கள தேச பக்த இராணுவமாக காட்ட அரசு முனைகின்றதோ, அப்படி மூலதனச் செயற்பாட்டை மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்குகின்ற ஒன்று எனவும், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஒன்றும் என்று சோடித்துக் காட்ட எப்போதும் முனைந்து வந்திருக்கின்றது. சுரண்டும் வர்க்க எடுபிடிகள் எப்படித்தான் காட்டுக்கத்து கத்தினாலும், மனித வாழ்வியல் முன்னால் எந்த உண்மைகளையும் புதைக்க முடியாது. இந்த வர்க்க அமைப்பில் மக்கள் ஒடுக்கப்படுவதும், போராடுவதும் என்பது, வாழ்விற்கான மனித உரிமையாகவும் உண்மையாகவும் இருக்கின்றது.
பி.இரயாகரன்
02.08.2013