10312020
Last updateச, 31 அக் 2020 2pm

இன மற்றும் மத வெறி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள்வோம்!

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்று வந்து போரானது முடிவுற்ற பின்னர் நான்கு ஆண்டுகள் இன்று கடந்து விட்டன.


இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் சமீபத்தில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியின் போது நடந்தேறிய தாக்குதல் நிகழ்வுகள் வெளிப்படுத்துவது எதுவெனில், இலங்கையின் உள்நாட்டுப் போர் விளைவித்த வரலாற்றில் என்றுமே ஏற்பட்டிராத அழிவுகளையும், மனித அவலங்களையும், கொடூரங்களையும் இந்தச் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களிலுள்ள இனவெறிச்சக்திகள் மறந்து இனவாத தீயினைத் தூண்டும் போக்கில் பயணிக்கின்றனர் என்பதேயாகும். இனியும் எந்தவொரு நீண்ட பேரழிவானது எழாமல் தடுக்கும் வகையில், சிஙகள மற்றும் தமிழ் என இருபுறமும் உள்ள இனவெறிச் சக்திகளை நாங்கள் தோற்கடித்தாக வேண்டும்.

அனைத்து வகைப்பட்டதுமான இன மற்றும் மத வெறி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரளுமாறு சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சமவுரிமை இயக்கத்தின் பிரித்தானியக் கிளை வேண்டுகிறது.


இனவெறியாளர்கள் சிங்கள மக்கள் தமிழ் மக்களை போரில் வென்று விட்டார்கள் என்ற பிரச்சாரத்தினை முன்னெடுத்து சமூகங்களுக்கிடையில் அவ்வாறான மனநிலையை தோற்றுவிக்க பிரயத்தனம் செய்கின்றனர். நாட்டில் இன்னுமொரு இரத்த ஆறு ஓடாதிருக்க, இவ்வகைப் பிரச்சாரத்தினை முடுக்கும் இனவெறிச் சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.


இப்பிரச்சார வலைக்குள் ஜரோப்பிய சிங்கள, தமிழ் சமூகப்பிரிவுகள் சில வீழ்ந்து விட்டதன் விளைவே அமைதி மற்றும் சகவாழ்வுக்கு பங்கமிழைக்கும் தீய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட காரணமாயின.


புலிகள் சார்ந்த குழுக்களாலும் மற்றும் அணிகளாலும் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், சிங்கள இனவாதிகளால் தவறாக வழி நடத்தப்பட்டும் இனவாதக் கோணத்தில் அப்பிரச்சாரங்களை பார்க்கக் கற்றுக்கொடுக்கப்பட்டவர்களுமான சில சிங்களவர்களை தூண்டிவிட்டுள்ளது.


மனித மற்றும் ஜனநாயக உரிமைகள் பரஸ்பரம் பேணப்பட வேண்டும் எனவும் நீதியும் சமத்துவமானதுமான சமுதாயத்தை கட்டியெழுப்பும் எமது போராட்டத்தில் அணிவகுக்குமாறும் சமவுரிமை இயக்கமானது சிங்கள, தமிழ் மக்களிடத்தில் கோரிக்கை விடுகின்றது.


மூன்று தசாப்தங்களாக நீடித்த போரின் பிற்பாடு தமிழ் மக்கள் அடையப்பெற்ற சுதந்திரம் என்ன என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
வடக்கு கிழக்கில் இலங்கையரசினால் உருவாக்கப்பட்ட மெகா திட்டங்கள் அம் மக்களுக்கு ஏதாவது அர்த்தமுள்ள வாழ்க்கையை வழங்கியுள்ளதா?


இராணுவ ஆட்சிக் கெடுபிடிக்குள்ளான இந்தப் பிரதேசங்களுக்குள் அவர்கள் அகப்பட்டுள்ளார்கள். அவர்கள் அடிப்படை மனிதவுரிமைகள் மற்றும் அரசியல் சுதந்திரத்தை இழந்து வருகின்றார்கள்.


இலங்கையரசின் அரசியலுக்கு ஒத்தூத வைக்கப்பட்ட கைதிகள் விடுதலையாகிறார்கள். மற்றவர்கள் தொடர்ந்தும் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது மேலும் ஒரு பேரழிவுக்கான அறிகுறியாக அமைந்துவிடலாம்.


போர் முடிவுக்கு வந்ததன் பின்னாரான நான்காண்டுகளுக்குள் பொதுபல சேனா, சிங்கள ராவய போன்ற தீவிர இனவாதத்தினை உயிர் நாடியாகக் கொண்ட அமைப்புக்கள் அரச ஆதரவில் வளர்த்துவிடப்பட்டிருக்கின்றன. இவ்வமைப்புக்கள் இலங்கையின் பெரும்பாலான முக்கிய பிரதான நகரங்களில் இனவெறி, மதவெறி மற்றும் மதக்குரோதங்களை விதைத்து வருகின்றன.


நம் கண்முன் பழைய வரலாறே மீளவும் நடக்கின்றது. இலங்கையின் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட முதலாளித்துவ கட்சிகளினால் கைக்கொள்ளப்பட்ட அரசியலே இனப்பிரச்சனையின் மூல காரணம்.


அன்றிலிருந்து இன்றுவரை இன, மொழி, மத வேறுபாடுகளைக் கிளறியே தேர்தல் வெற்றிகள் தீர்மானிக்கப்பட்டன.
இலங்கை சகிக்க முடியாத அளப்பரிய உயிர் பேரழிவுகளையும், சொத்துப் பேரழிவுகளையும் விலையாகக் கொடுத்துள்ளது.
சமூகப் பின்னடைவுகளோ எண்ணிலடங்காததும் நீண்ட விளைவுடையனவுமாகும்.


நாங்கள் அகப்பட்டிருக்கும் இச் சூழ்நிலையை நாங்கள் விளங்கிக் கொண்டவர்களாய் ராஜபக்ச அரசினால் கட்டி வளர்க்கப்படும் இனவெறி மதவெறிகளுக்கெதிராகவும், சமுதாயத்துக்கு எவ்வகையிலும் முன்னேற்றகரமான நன்மை பயக்காத புலிகள் சார்ந்த தமிழ் குழுக்கள் அணிகளுக்குள் மறைந்திருக்கும் இனவெறிக் கூறுகளுக்கு எதிராகவும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் நாங்கள் இணைந்தாக வேண்டும்.
எமது எதிர்கால தலைமுறையினருக்கு இவ்வாறான இனவெறியாளர்கள் தங்களது பிற்போக்கு எதிர்மறை அம்சங்களையோ போருக்குப் பிந்தைய நிர்க்கதியான சூழலையோ அவர்களது மனங்களில் நிரந்தரமாய் ஊன்றி வளர்க்க அனுமதிக்க இடம் தரக் கூடாது என இலங்கையின் அனைத்து சமுதாய மக்களையும் சமவுரிமை இயக்கம் கோருகின்றது.


சமவுரிமை இயக்கம்- ஜக்கிய இராச்சியம்.