Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சாதி வெறியார்களின் பயங்கரவாதம் இளவரசனைக் கொன்று இருக்கிறது. திவியா நடைப்பிணமாகப்பட்டு இருக்கின்றாள.; தன் தந்தை போல், தன் காதலன் போல், நாளை அவளும் கூடக் கொல்லப்படலாம். அவர்கள் தங்கள் விரும்பிய வாழ்க்கையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை சாதியம் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மாணிக்க முடியாதவாறும், மரணித்து போகுமாறு சாதிய வக்கிரமும், சாதியப் பயங்கரவாதமும் கோரியிருக்கின்றது.

அவர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்திருப்பது மட்டுமின்றி, சாதியம் இவர்களை பலியெடுத்தும் இருக்கின்றது. இளவரசனின் இறப்பானது தற்கொலையா அல்லது கொலையா என்பது, சாதியப் பயங்கரவாதத்;தின் தன்மையை வேறுபடுத்துமே ஒழிய, இந்த கொலைகார சாதி பயங்கரவாதத்தையும் அதன் அடிப்படையிலான அரசியலையும் மாற்றிவிடாது.

ஒடுக்கப்பட்ட சாதியின் பெயரில் உருவான சாதி அரசியல், ஒடுக்கும் சாதி அரசியலாக மாறிவிட்ட நிலையில், இதன் பின்னான பிழைப்புவாதம் சாதியை தூண்டி குளிர் காய்கின்றது. சாதியின் பெயரால் பேரம் பேசும் சாதி அரசியல், தன் குடும்பங்களை மைய்யப்படுத்தி சொத்து குவிக்கின்ற வக்கிரத்தையே தனது அடிப்படையாகக் கொண்டது. இதற்கு சாதியின் பெயரில் பலி கேட்கின்றது.

சாதியின் பெயரில் கௌவுரவ கொலைகள், தற்கொலைகள் தொடங்கி தாலியறுக்கின்றது வரை, சாதியம் மனித இனத்தையே சாதியின் பெயரில் தூண்டி  துண்டாடுகின்றது.

மனித உணர்வுகளை நலமடித்து காதலை சாதிக்குள் மட்டும் கோருகின்ற வக்கிரத்தை மனித பண்பாக்கி அதையே காதல் உணர்வாக்கின்றது. சாதி கடந்த திருமணங்கள் சமூதாய குற்றமாக்கப்படுகின்றன. இதற்கு சட்டமும், நீதியும் கட்டைப் பஞ்சாயத்து செய்கின்றன. திவியா- இளவரசன் வழக்கில் நீதிமன்றம் கூட இந்த கொலைக்கு உடந்தையாக இருந்து செய்து முடித்து இருக்கின்றது. சாதியின் பெயரில் சட்டத்தின் பின் திரண்ட கும்பலின் துணையுடன், தீர்ப்புச் சொல்லி இருக்கின்றது.

சாதியின் பெயரில் கட்சிகள், சாதியின் பெயரில் பட்டங்கள் ... அனைத்தின் பின்னும் மனித குற்றங்களே அதன் மூலமாக இருக்கின்றது. மனித விரோதமே அதன் ஆன்மாவாக இருக்கின்றது. இதற்குள் காதல், காதலர் தினம் வேறு. இதற்கு எதிரான காதலர்கள் திரண்டு எழும் காதல் உணர்வு தான் இருக்கா!?

வக்கிரமான உலகறிய நடந்த சாதியக் கொலை. காதலர்களை பிரிந்த சாதிய வன்முறையும், சாதிய சமூக வக்கிரமும் இந்த சமூக அமைப்பில் விசாரணைக்கு உள்ளாகப்போவதில்லை. "நீயா நானா" வில் அவர்கள் அளவில் கூட இதை விவாதிக்க போவதும் கிடையாது.

சட்டம் நீதி தொடங்கி கருத்துச் சுதந்திரம் என அனைத்தும் சாதிய வக்கிரத்துக்கும், மூலதனத்துக்கும் கீழ்பட்டனவே. காதலில் கூட இதைத்தான் கோருகின்றது. மனித உணர்வுக்கு இது தெரிவதில்லை. அது இயற்கையானது. அது தன்னைத்தான் மலடாக்குவது இல்லை. காதல் இந்த அமைப்பின் மனித விரோத வரைமுறைக்குள் நிற்குமானல், அது காதல் உணர்வல்ல அது விபச்சாரம்.

காதலர் தினம் முதல் காதலைச் சுற்றியே உலகத்தை படைக்கும் இன்றைய வக்கிரமான சந்தையை மையமாகக் கொண்ட உலகில், ஒரு காதல் அதன் போலித்தனத்தை தோலுரித்து இருக்கின்றது. இளவரசனின் மரணம், திவியாவின் தந்தையின் மரணம், திவியாவின் மேலான சாதிய அழுத்தங்கள், காதலை மட்டும் போட்டு உடைக்கவில்லை. சுதந்திரத்தின் பெயரில், ஜனநாயகத்தின் பெயரில் நிலவுவது சாதிய ஆதிக்கம் கொண்ட சொத்துடமை சமூகம் தான்  என்பதை மீண்டும் எடுத்துக்காட்டி இருக்கின்றது.

சாதிக்குள் காதல், இதுதான் காதலின் இலட்சணம். காதல் காதல் என்று வீரம் பேசி, பட்டிமன்றம் நடத்தும் இன்றைய உலகில், இளவரசன் திவியா காதலுக்கு முன் எதுவும் கிடையாது. சாதியம் அவர்களைக் கொன்று போட்டு இருக்கின்றது. மனிதனின் இயல்பான காதல் உணர்வுகள், அவர்களையே மறைமுகமாக கொன்று இருகின்றது. இந்த சமூக அமைப்பு அதை வேடிக்கை மட்டும் பார்க்கவில்லை, அவர்களைக் கொன்று போட உதவி இருக்கின்றது. இது தான் இன்றைய சாதிய சமூக அமைப்பு.

ஒடுக்கப்பட்ட சாதியின் பெயரிலான கட்சி, எப்படி ஒடுக்கும் சாதியமாக மாறும் என்பதற்கு இளவரசனின் மரணம் ஒரு எடுத்துக்காட்டு. மனிதர்களை சாதியின் பெயரில் பிளந்து பிழைக்கும் பிழைப்புவாதம் இது தான் என்பதை, இந்த விடையம் மீண்டும் ஒருமுறை உலகறிய கூறியிருக்கின்றது. சாதியம் கடந்த காதல் உணர்வுக்காக போராடாத வரை, காதல் உணர்வு மடடு;மல்ல மனித உணர்வுகளும் கூட போலியானதும் வக்கிரமானதுமாகும். இதைத்தான் இந்த நிகழ்வு எம்முகத்தில் அறைந்து கூறுகின்றது.

 

பி.இரயாகரன்

05.07.2013