அவன் எந்த நாளும் ஒரே குடிதானே, ஏதோ ஈரலிலே தான் பிழையாம், சீ சீ.... அவனுக்கு இரண்டு கிட்னியும் பெயிலாப் போச்சாம், ஏற்கனவே ஆளுக்கு நல்ல சுகர் வருத்தமுமாம், அதோடை கைப்பிறஸர்... எண்டும் குளஸ்ரோல் எண்டும் சொல்லினம்... இப்படி ஆயிரம் ஆயிரம் கதைகள்.
ஆனா... எது உண்மை, எது பொய்யெண்டு ஒருத்தருக்கும் சரியாகத் தெரியாது. ரவீந்திரனை கொஸ்பிற்லிலே விட்டிருக்காம் என்ற சேதி கேள்விப்பட்ட பிறகு இந்தச் தமிழ்ச் சனங்கள் மத்தியிலே இப்ப இது தான் பெரிய கதை.
தனித்து ஒரு விசேட பிரிவிலே அனுமதிக்கப்பட்டிருந்ததால் பார்வைக்காக ஒருத்தரும் அனுமதிக்கபடவில்லை. என்னுடைய மகனோடு தான் கதைக்க அனுமதிக்க வேண்டும் என்ற ரவியின் விருப்பத்தின் பேரில் மகன் சுரேந் இன்று வந்திருந்தான்.
ஆஸ்பத்திரி அலுவலகத்தில் வந்து விசாரித்த போது தகப்பன் விடப்பட்டிருக்கும் புதிய பிரிவு பற்றி அறிந்த போது அவனுக்கு கிடைத்த தகவல்கள் பெரிய ஆச்சரியத்தையும் அதிற்சியையும் கொடுத்தது.
அப்பாவை ஏன் இங்கு கொண்டு வந்து விடவேண்டும் என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டு வைத்தியப் பிரிவுகளின் வழிகாட்டி அம்புக்புறியைப் பார்த்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான்.
உள்ளே நுழையவும் பொறுப்பான வைத்தியர் இவனுக்காக காத்திருந்தவர் போல் வந்து அவனை அழைத்துக் கொண்டு வா கதைத்துக் கொண்டே போவோம். இங்கே எப்படியான நோயாளிகள் அனுமதிக்கப் படடிருக்கின்றார்கள் என்பது உனக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன்.
உனது அப்பாவுக்கு வந்திருப்பது ஒரு மனநோய். இது காப்பாற்ற முடியாத ஆபத்தான வருத்தமல்ல.... ஆனால் அது மௌனமாய் மௌனமாய் ஆளைச்சிதைத்து விடுவது தான் அதன் இயல்பு. இந்த வருத்தம் இவருக்கு நீண்டகாலமாய் இருந்திருக்கு என்று நினைக்கிறோம். இந்த நோயானது சில வேளை அதிகமாயிருக்கும் சில வேளைகளில் மிகவும் சாதாரணமாகவே குறைந்து தெரியாமிலிருக்கும்.
இப்பொழுது உங்களுடைய அப்பா முன்பிருந்த குழப்பமான நிலையிலிருந்து கொஞ்சம் தேறியிருக்கின்றார் என நினைக்கின்றோம், இப்ப மிகவும் அமைதியாகவும் நல்ல சுகமாகவும் இருக்கின்றார் அதற்குரிய மருந்துக்களைத்தான் கொடுத்திருக்கின்றோம். இது நிரந்தரமானது என்று இப்ப தெளிவாகச் சொல்ல முடியாது.
அவர் உன்னோடு தான் பெரிதாய் கதைக்கவும் விரும்புகிறார். அது அவருக்கு இப்போது தேவையாகவும் மிகுந்த முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது, கதையுங்கள், இவர் பற்றி பின்னர் கதைப்போம் ஏதாவது தேவைப்படுமிடத்து எங்களை அழையுங்கள் எனக் கூறிவிட்டு நகர்ந்து விட்டார்.
ஒரு அமைதியான தனியறை. மகனைக் கண்டவுடன் ஒரு கையால் ஊண்டியபடியே படுக்கையிலிருந்து எழ முயற்சித்த தகப்பனை அப்பா படுங்கோ என்று அவனைப் பிடித்து அமர்த்தினான்.
ஏதோ பெரிய வருத்தமோ.... என்னவோ.... என்று நினைத்து வந்த மகனுக்கு தகப்பன் இருந்த சாதாரண நிலை பெரிய ஆறுதலைக் கொடுத்தது.
அப்பா எப்படி... என அவர் கையைப் பிடிக்க பதிலுக்கு அவரும் பிடித்துக் கொண்டார். தம்பி நான் உன்னோடு நிறையக் கதைக்க வேண்டும் என்ற படி ஒரு கையால் மகனைப் பிடித்தபடி மறுகையை தன் நெற்றியில் வைக்க... ரவியின் வாய் திருங்கி கோணலாகி நாவெல்லாம் தளதளத்தது, அழத்தொடங்கினார்
அப்பா என்று அவனை அணைத்துக் கொண்டபடியே கண்களைத் துடைத்தான் சுரேந். தம்பி.... நான் உன்னுடன் நிறையக் கதைக்க வேணடும்;, உனக்கெனச் சொல்ல வேண்டிய பல ரகசியங்கள், எனக்குள்ளே புதைஞ்சு கிடக்கு. இதை யாருக்கும் சொல்லா விட்டால் என்ரை தலையே வெடிச்சு சிதறிவிடும் போலிருக்கு... தம்பி... நான் செய்த பாவங்களுக்கும் செய்த கொடுமைகளுக்கும் சிலவேளை உங்களையெல்லாம் இடையிலே விட்டிட்டுச் செத்துவிடுவேன் போலே கிடக்கு... என்றபடி ஒரு சின்னக்குழந்தை போலே அழத்தொடங்கினான்.
அப்பா என்ன கதைக்கிறீங்கள்... அது தானே நான் வந்து விட்டேன், என ஆறுதல்படுத்துவதாக கூறினாலும் தகப்பன் என்ன சொல்லப் போறார் என்பதை அறிய வேண்டும் என்ற ஆவலும் நிறையவே இருந்தது.
அப்பா ஒரு தயக்கமும் வேண்டாம். நீங்க நல்லாக் கதையுங்கோ அதுக்குத் தானே வந்தனான்... என்ற படி தகப்பனின் கைகள் இரண்டையும் இறுகப் பற்றிக் கொண்டான்.
சுரேந் உனக்கு இதை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும்.
சுரேந்.. நான் முந்தி இயக்கத்திலே இருந்த, விசயம் உனக்குத் தெரியும் தானே. இங்கே ஒரு இருபததினாலோ இருபததைந்தோ வருசங்களுக்கு முன்னர் வெறும் கையோடு இங்கே வந்த நான் இப்ப குடும்பம் குழந்தைகள் எண்டு உங்களையும் பெற்று, வீடுவளவு கார் எண்டு எவ்வளவோ வசதியாய் வாழுறன்.
ஆனால் நாட்டிலே என்னாலேயும் என்றை இயக்கத்தினராலேயும் பாதிக்கப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் குழந்தைகளெண்டு இப்பவும் அனாதரவாய்..... ஆதரவற்றவர்களாய்.... அங்கே நாளாந்தம் செத்துச் செத்து சீவிச்சுக் கொண்டிருக்குதுகள்.
இத்தனை வருடங்கள் கழிந்தும்... இப்ப அவையெல்லாவற்றையும் நினைக்க, நினைக்க தற்கொலை செய்ய வேண்டும் போலிருக்கிறது சுரேந்.
அப்பா.... அப்பா என்றவன் அடுத்த வார்த்தைகள் வராமல் விழுங்கி வக்கியியவனாய் விம்மலெடுத்தான். என்ன கதையப்பா கதைக்கிறயள்.
தம்பி இதைக் கேள்.... அப்போது ஒரு நாள்.. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி ஒரு கிராமத்துக்குச் சென்று, எல்லாம் விசாரித்த போது ஒரு பத்தோ பதினைந்தோ வயதுப் பையனே அதில் சம்பந்தப்பட்டவனாக இருந்தான். அவன் மூலம் தான் இராணுத்தினர் தகவலைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள் என்றும், அவன் தான் எங்கடை ஆக்களைக் காட்டிக் கொடுக்கின்றான் எண்டும் அறிந்ததால் அவனை ஒரு நாள் பிடித்துக் கொண்டு போய் விசாரிச்சோம்.
ஆரோ ஒராளின்ரை வீட்டைக் காட்டச் சொன்னார்கள் காட்டினேன் என்று அந்தப்பிள்ளை இலகுவாகவும் தன்னுடைய குழந்தைத்தனத்தோடும தான் சொன்னான். ஆனா நாங்களோ வேறு யாரைக் கேட்டார்கள், என்ன கேட்டார்கள் என்று கேட்க திரும்பத் திரும்ப இதையே அவனும் சொன்னான்..
நாங்கள் ஒருவரும் நப்பவும் இல்லை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
பிறகு எங்கடை பொறுப்பாளரின் உத்தரவில் அந்தப் பிள்ளையை....
கைகள் பதற... உடம்பும் நடுங்கியபடி முச்சையிழுத்து இழுத்து சொல்ல முடியாமல் திணறியபடி திண்டாடினான்.
சுரேந்தனுக்குப் பயமாவும் பதட்டமாகவும் இருந்தது.
அப்பா...வேண்டாம் அப்பா ..பிறகு ஒரு நாளைக்குக் கதைப்போம்...
இல்லை சுரேந்..
அந்தப்பிள்ளை கும்பிட கும்பிட நாங்கள் ஒன்றுமே யோசியாது இவன் ஒரு துரோகி.... இவன் இருந்தால் எங்களுக்கும் ஆபத்து என்று நினைத்து அவனை மண்டையிலே போட்டிட்டு தாட்டுவிட்டிட்டு வந்திட்டம்...
ஆனா இப்ப இங்கே காணுற சின்னப்பிள்ளையைப் பார்க்கும் போது அந்தப் பாலகனின் முகம் தான் முன்னுக்கு வந்த நிக்கது... சுரேந்.. முன்னுக்கு வந்து நிக்குது.... என்னாலே மறக்க முடியாமலிருக்கு... என்ற படி தேம்பித் தேம்பி அழுதான்.
ஒன்றுமே பேசாது சுரேந் விறைத்துப் போய் நின்றான்.
அழுது முடித்த ரவி.....
இதே போலே இன்னோரு கிராமத்திலே எங்கடை சொல்லையும் மீறி கசிப்புக் காச்சினான் எண்டு ஒருத்தனைக் கொண்டு வந்து அந்தக் கிராமத்து வாசிகசாலை லைற் கம்பத்திலே கட்டி அந்தக் கிராமத்து மக்கள் முன்னிலையிலே அவனைச் சுடப்போனோம்.
அப்போது அவன்ரை மனுசி வந்து ஜயோ ஜயோ குளறிக் கூத்தடிச்சு அவரைச் சுடக்கு முன்னர் என்ரை இந்த நாலு பிள்ளைகளுக்கும் ஒரு வழி சொல்லிப் போட்டுப் போங்கோ என்று கத்திக் கத்தி குளற பிள்ளையளும். குளறியதுகள் அப்போது நாங்கள் ஒருவருமே அவளையோ அந்தக் குழந்தைகளையோ கணக்கெடுக்கவில்லை.
இது எம் மக்களுக்கு ஒரு பாடமாயிருப்பதோடு ஒரு பயமாயிருக்கட்டும் எண்டு எல்லார் முன்னிலையிலும் அவனைச் சுட்டுப் போட்டு எங்கடை கடமையை முடித்து விட்டு ஒரு விடுதலைப்போரில் வெற்றியீட்டிய களிப்போடே பாசறை திரும்பினோம்.
இதே போலவே வறுமைக்காகவும் பசிக்காகவும் கோழி திருடியவனையும் ஆடு பிடித்தவனையும், பிச்சையெடுக்க வந்தவர்களையும், புதிதாய் வரும் புதுமுகங்களையும் சந்தேகம் கொண்டு வியாபாரம் செய்ய வந்த சனங்களையும் அரசாங்கத்தின் உளவாளிகள் எண்டும், எமது விடுதலைப் போராட்டத்தையும் காட்டிக் கொடுக்க வந்த தேசத்துரோகிகளெண்டு போட்டுத் தள்ளினோம்.
இதுமட்டுமா....
மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை பைத்தியக்காரர் எண்டும் குளப்பவாதிகள் எண்டும், விட்டுவிடவில்லை. எமக்கெதிராய் எழுதியவனையும் எதிர்த்தவர்களையும் எந்த வித யோசனையும் இல்லாமல் போட்டுத் தள்ளினோம்.
எங்களைக் கேட்க யாரிருந்தார்கள் எம்மையெதிர்க்க யாருக்குத் தான் துணிவிருந்தது.
எங்கடை கையிலே ஆயுதமும் அதிகாரங்களும் இருந்ததாலே எல்லாத்தையும் செய்யலாம் என்றும் இதை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்றே நம்பினோம். இதைவிட சிங்கள மக்களுக்கெதிராகப் ஆயுதம் ஏந்துவதே தேசியம் என்று நினைத்து எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்று இனம்காணாமல் எம் கொள்கைகளுக்குப் பிழையெனப்பட்ட எல்லாரையும் எந்தக் கேட்டுக் கேள்வியுமில்லாமல் சமூகத்துரோகிகள் என்ற பேரிலே போட்டுத்தள்ளினோம்.
அப்போது உண்மையான விடுதலை உணர்வோ அல்லது எமது மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைக்க வேண்டுமென்ற நோக்கமோ பெரிதாக இருக்கவில்லை.
இது எல்லாத்தையும் விட ஆயுதங்களை தோளில் தூக்கிக் கொண்டு ஆற்ரேயின் மோட்டச் சயிக்கிளை பறிச்சுக் கொண்டு சுற்றித் திரியும் போது எம்மைக்கண்ட சனங்கள் பயத்தோடு கலந்த மரியாதை செய்வதை எல்லாம் கௌரமாகவே கருதினோம். இயக்கத்திலே இருப்பது பெரிய கீரோயிஸம் என்றும், சினிமாவிலே வரும் கதாநாயகாகள் போலவுமே எம்மை நாம் பல முறை நினைத்துக் கொண்டோம்.
வெளிநாட்டுத் தமிழற்றை பணத்தினாலும, வெறும் இராணுவத் தளபாடங்களினாலும் விடுதலையைப் பெற்றுக் கொள்ளலாம் எண்டு முளுமையாக நம்பிய நாங்கள் மக்களைப் பற்றி எள்ளவும் நினைக்கவேயில்லை.
எங்கடை மக்களுக்கெதிராக இருந்த அடக்கு முறைகளுக்கும், அநியாங்களுக்கும் எதிராக போராட வேண்டும் என்று நினைத்துப் புறப்பட்டோமோ, பின்னர் அதே அடக்கு முறைகளையும், அதை விடக் கொடுமையான அநியாயங்களையும் எமது மக்களுக்கு எதிராக நாங்களே செய்யத் தொடங்கினோம். நாங்க மட்டுமல்ல தமிழ்விடுதலை எனப்புறப்பட்ட அனைத்து இயக்கங்களுமே இதைத் தான் செய்தன.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எங்கடை சாயம் சாடையாக வெளிக்கத் தொடங்க என்றை சுயநலத்துக்காகவும் என்ரை பாதுகாப்புக் கருதியும் எல்லாத்தையும் இடையிலே விட்டிட்டு இங்கே வந்து குடியேறி ஒரு சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.
இப்ப எத்தனையோ வருடங்கள் கழிந்து விட்டது, ஆனால் நினைவுகள் எல்லாம் புதிது புதிதாய் முளைக்கத் தொடங்கி என்னை ஒவ்வொரு கணமும் சாகடித்துக் கொண்டிருக்கிறது.
இப்ப எத்தனையோ வருடங்கள் கழிந்தும், அந்தச் சின்னப் பொடியனின் முகமும் அந்தப் பெண்ணின் அழுகுரலுமே எனக்கு தினம் தினம் வந்து துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.
இப்ப இங்கே எல்லாரும் போர்க்குற்றம்... போர்க்குற்றம் எண்டு கதைக்கும் போது நான் செய்த கொலைகளும் கொடுமைகளுமே என்னை வந்து துரத்துகின்றது, இலையெல்லாவற்றையும் கொண்டு போய் எந்தக் குற்றத்தில் சேர்க்கப் போறேனோ... நான் செய்த இந்தப் பாவங்களுக்கெல்லாம் எப்படி பிராயச்சித்தம் தேடப் போகிறேனோ... என்று தலையைக் குத்தியபடி படுக்கையில் விழுந்து செத்தவீடுகளில் அழுவது போல் விக்கி விக்கி ஆதம்பித் தேம்பி அழுதான்.
ஏன் அப்பாவை இந்த பிரிவிலே விட்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாக விளங்கியது. குனிந்து அழுதுகொண்டிருந்த தகப்பனை பாத்தபடி விறைத்துச் சிலையாய் நிண்டான் சுரேந்.
கொஞ்ச சொற்ப நேரத்துக்குள்ளே திரும்பி எழும்பியபடி பக்கத்திலிருந்த பேப்பரை எடுத்து கண்களைத் துடைத்தபடி சுரேந்... எனக்கு எவ்வளவோ நண்பர்கள் இருந்த போதும் இதை ஏன் உனக்குச் சொல்ல வேண்டுமென்று நினைத்தனான்.....?
நான் உங்கள் மகன்... அதுவும் மூத்தவன். அதிலென்ன சந்தேகம்...
அது தான் இல்லவே இல்லை நீயொரு ஒரு இளைஞன். எமது அடுத்த பொறுப்பு உங்கள் கையிலே தான் இருக்கு என்று கன பேர் நம்புகினம் எமது கடந்தகால கசப்பான வரலாறுகள் பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய கடமையும் கடப்பாடும் உண்டு.
அங்கே தான் மக்கள் மக்களெண்டும், தமிழ் தமிழெண்டும் முப்பது வருசத்துக்கு மேலே வைச்சுப் பேக்காட்டி இருந்த சொத்துக்களையும் உடமைகளையும் அழித்து கடைசியிலே முள்ளிவாய்க்காலிலே கொண்டு வந்து முடக்கிவிட்டோம்.
உதுவெல்லாம் நடந்த பிறகும் நடந்த தவறுகளையும பிழைகளையும் பற்றிச் சிந்திக்காமல் இப்பவும் இந்த புலம்பெயர் மண்ணிலே எல்லாம் வெட்டியாடுவம் புடுங்கியடுக்குவோம் எண்டு கொடியளையும் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு தமிழ்த்தேசியம் என்ற இந்தப் புளுத்துப் போன அரசியல் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு, தேசியம் எண்டைச் சாட்டி, தங்கடை சொந்த வயிறை வளர்த்துக் கொள்ளும் இந்த போலி அரசியலை நம்பி ஏமாந்து போகாதையுங்கோ...
மீண்டுமொரு முள்ளிவாய்க்காலைச் சந்திக்க எமது மக்கள் தயாரில்லை.
இங்கேயிருக்கின்ற இந்த இளைஞர் சமுதாயத்தையும் என்னைப் போன்ற ஒரு மனநோயாளிகளாகி விடக் கூடாது என்பதற்காகவே இதைச் சொல்லுகிறன்.
ஏதோ பெரிய ஒரு விபத்திலிருந்து தானும் தப்பிக் கொண்டதாக சுரேந் விழித்துக் கொண்டான்.
முற்றும்