09242023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

மின் கட்டண உயர்வு, யாருடைய நலனுக்கானது!

இலங்கையில் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணங்களும், அதன் சமூக விளைவுகளும் பாரியது. மின் பாவனையாளர்களின் அன்றாட பயன்பாட்டை மட்டுமல்ல, இலங்கையில் தேசிய உற்பத்தியை இது தகர்த்து விடுகின்றது. உள்ளுர் உற்பத்தி சார்ந்த தேசிய பொருளாதாரத்தின் மீது பொது நெருக்கட்டியை உருவாக்கி அதை அழிக்கவும், உலக பொருளாதாரம் தன் பொது நெருக்கடியில் இருந்து மீளவும் திணிக்கப்பட்டது தான் இந்த மின்கட்டண அதிகரிப்பு. உலகம் முழுக்க கடன் கொடுக்கும் வங்கிகளும், நாடுகளும், இதைத்தான் தங்கள் கொள்கையாகக் கொண்டு உலகெங்கும் செயற்படுகின்றன.

அன்றாட மின்சாரத்தின் பாவனையில் கட்டண அதிகரிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு நேரடியானது. மறைமுக பாதிப்பு தான் மிக மிக அதிகமானது. அன்றாட உள்ளுர் உற்பத்தி சார்ந்த பொருள் பயன்பாடுகள் அனைத்தும், பெரும்பாலும் மின்சாரத்துடன் தொடர்புடையது. பொருள் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் கூட மின்சாரத்துடன் தொடர்புடையது. இதனால் மின்கட்டண அதிகாரிப்பு, உள்ளுர் உற்பத்திக்கான செலவை அபரிதமாக அதிகரிக்க வைத்துள்ளது.

இலங்கையில் உள்ளுர் உற்பத்திக்கான பொருட்களின் விலை அதிகரிக்க வைப்பது தான், கடன் கொடுக்கும் வங்கிகளினதும், நாடுகளினதும் பொதுக் கொள்கை. இந்த வழிகாட்டல்களுடன் நடந்தேறியது தான், இந்த மின்கட்டண அதிகரிப்பாகும். உலக பொருளாதார நெருக்கடியில் மீள, உலக சந்தைக்கு ஏற்ற கொள்கையை அடிப்படையாக கொண்டதே, இந்த மின்கட்டண அதிகரிப்பு. உள்ளுர் உற்பத்தியிலான பொருளின் விலையை அதிகரிக்க வைப்பதுதான் இதன் பின்னுள்ள சதி. தேசநலனுக்கு எதிரானது இந்த சதியாகும்.

இன்று இலங்கைச் சந்தையில் இறக்குமதியாகும் பொருட்களுடன் ஓப்பிடும் போது உள்ளுர் உற்பத்தியிலான பொருட்களின் விலை மிகக் குறைவானது. ஊலகச் சந்தை இதனால் நெருக்கடிக்குள்ளாகின்றது. உள்ளுர் உற்பத்திக்கான பொருட்களின் செலவை அதிகரித்து விலையை அதிகரிக்க வைக்கவே, மின்கட்டண உயர்வு.

தேசத்தையும் தேசிய உற்பத்தியையும் அழிக்கும் மின்கட்டண உயர்வு. மறுபக்கத்தில் பேரினவாதத்தையும், பௌத்த மதவாதத்தையும் இலங்கையின் தேசியமாகக் காட்டி, தேச மக்களின் உற்பத்திகளையே அழித்தொழிப்பதையே இங்கு அரங்கேற்றுகின்றனர்.

அன்னிய பொருளுக்கான சந்தையை உள்ளுரில் மேலும் விரிவாக்கவே, உள்ளூர் பொருட்களின் உற்பத்தச் செலவை அதிகரிக்க வைக்கவும், மின்சார சபையை நட்டத்தில் இயங்குமாறு இந்த அரசு வழிநடத்தியது.

மக்களின் மின் பாவனையால் மின்சார சபைக்கு இந்த இழப்புகள் ஏற்படவில்லை. மக்கள் மின்கட்டணங்களை எப்போதும் செலுத்தி வந்திருக்கின்றனர். மாறாக ஆளும் வர்க்கமும், ஆள்வோரும் தான், மின்கட்டணங்களை செலுத்துவதில்லை.

இன்று மக்களை அடக்கி ஒடுக்க நாடெங்கும் பெருக்கெடுக்கும் இராணுவ மயமாக்கல்களும் அதன் அதிதமான மின்சாரப் பயன்பாடும், நாட்டின் மின்சாரத்தை அதிதமாகவே உறிஞ்சி விடுகின்றது. இதை விட ஆள்வோரின் ஆடம்பரங்களுக்குள்ளாகும் மினசாரப்; பயன்பாடு முதல், இலவசமாக மின்சாரத்தை நுகர்வது வரை, வகைதொகையின்றி எங்கும் சூறையாடப்படுகின்றது. இதைவிட அன்னிய மூலதனத்துக்கான மின்மானியங்கள், கட்டணத்தை செலுத்தாமை, காலத்துக்காலம் தள்ளுபடி, மின்சாரசபையின் அதிகாரிகளின் ஊதாரித்தனத்தின் மீதான உயர் சம்பளங்கள், அதிகார வர்க்கம் சுருட்டும் மின் ஊழல்கள், இவையே தான் மின்சாரசபையையே நட்டமடைய வைத்தது. நட்டமடைய வைப்பது தான் அரசின் கொள்கையும் கூட. இதன் மூலம்

 

1.மின்கட்டண அதிகரிப்பை உருவாக்கி, தேசிய உற்பத்தியை திவாலாக்குவது அரசின் பொதுக் கொள்கை

2.மின்சாரத்தை தனியார் மயமாக்கவும், மின்சாரத்தை தனியார் உற்பத்தி செய்யவும், மின்கட்டண அதிகரிப்பை மூலம் திட்டமிட்டு உருவாக்குகின்றனர்.

தேசிய கூறுகளை அழித்து விடுவதன் மூலம், நவகாலனிய நோக்கங்களை ஈடு செய்ய முனைகின்றனர்.

இதனால் பாதிக்கப்படுவோர் யார்?

நேரடியான கட்டண உயர்வு மூலம், மின் பயன்பாடு சார்ந்து சமூகத்தின் அடிநிலையில் உள்ள மக்கள் தங்கள் குறைந்த வருமானத்தில் பெரும் பகுதியை இழந்து விடுகின்றனர். இதனால் நேரடியாக அதிகம் பாதிப்படைகின்றனர். மறுபக்கத்தில் உள்ளுர் உற்பத்தியில் அதிகம் சார்ந்து வாழும் பெரும்பான்மையான மக்கள், இந்த விலை அதிகரிப்பால் தங்கள் நுகர்வுகளை நுகர முடியாத நிலை உருவாகியுள்ளது.

உள்ளுர் உற்பத்தியை நுகராத அன்னியப் பொருளை நுகரும் மேட்டுக்குடியினர் இந்த விலை அதிகரிப்பால் பாதிக்கப்படுவதில்லை. உள்ளுர் உற்பத்தியை நுகர்ந்த மக்கள், அதை நுகர முடியாதபடி விலை அதிகரிப்பும், நுகர்வுக்கான பணத்தில் ஒரு பகுதியை மின்கட்டணமாக செலுத்துவதாலும், உள்ளுர் உற்பத்தி சந்தையில் முடங்கும். இதனால் பொதுவாக உள்ளுர் உற்பத்தி சந்தையில் தேங்கவும், மேட்டுக்குடியினர் அதை நுகராமல் இருப்பதாலும், உள்ளுர் உற்பத்தி சார்ந்த சுய பொருளாதாரம் தானாக அழிவுறும். அதே நேரம் உள்ளுர் ஏற்றுமதிக்கான பொருள் விலை அதிகரிப்பால், சர்வதேச சந்தையில் தன் பொருளை விற்க முடியாது அழிவுறும். மின்கட்டண அதிகரிப்பால் தேசியப் பொருளாதாரம் தானாக அழிவுறும்.

பேரினவாதத்தையே தேசியமாக, பவுத்தத்தை தேசியமாக முன்னிறுத்திக் கொண்டு இயங்கும் அரசு, இதன் மூலம் அன்னிய மூலதனத்துக்கே அமைவாக தேசியப் பொருளாதாரத்தை அழிக்கின்றனர். மத வழிபாட்டு இடங்களுக்கு மானியமும் சலுகையும் வழங்கும் அரசு, தேசிய உற்பத்திக்கு அதை கொடுப்பதில்லை. அரசின் இன மத தேசியம் உள்ளுர் மூலதனத்தை அழித்து, அன்னிய மூலதனத்துக்கு சேவை செய்வதே. மின்கட்டண உயர்வு மூலம் இதைத்தான் அரசு மக்களுக்கு மிகத் தெளிவாக சொல்லுகின்றது. இந்த மின்கட்டண அதிகரிப்பின் நோக்கமும், அதன் பொது விளைவும் தேசத்தினதும் தேச மக்களினதும் அழிவுக்குள், சர்வதேச மூலதனத்தின் நலனை உயர்த்துவது தான்.

 

பி.இரயாகரன்

28.05.2013


பி.இரயாகரன் - சமர்