Language Selection

பி.இரயாகரன் -2013
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டுவிடக் கூடாது என்பது தான் அரசின் பொதுக் கொள்கை. அரசு மக்களை வர்க்கரீதியாக மட்டும் பிரிக்கவில்லை. எண்ணிக்கையில் பெரும்பான்மையான இனம் மதம் சார்ந்து நின்று மக்களை ஒடுக்குவதன் மூலமும் பிரிக்கின்றது. இதேபோல் எண்ணிக்கையில் சிறுபான்மையான மதத்திலும் இனத்திலும் உள்ள, உள்முரண்பாடுகளைத் தூண்டி மக்களைப் பிரிக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்குள் அணிதிரண்டு விடாத வண்ணம் இனம், மதம், சாதி, பிரதேசம், பால், பண்பாடு ரீதியான வேறுபாடுகளை தூண்டி மக்களை  மோதவைக்கின்றனர். இப்படி இலங்கை மக்களைக் கூறுபோட்டு மோதவைக்கின்றது. இதுதான் அரசின் இன்றைய பொதுக்கொள்கை.

ஒடுக்கப்பட்ட மக்கள் மேலான அரசின் இந்தச் செயலை எதிர்த்துப் போராடுவது தான், மக்கள் அரசியலாக இருக்க முடியும். இது மட்டும் தான் உண்மையானதும், நேர்மையானதுமாகும். மாறாக அரசின் இந்த மக்கள்விரோதப் போக்கை அனுசரித்து செய்கின்ற அரசியல் படுபிற்போக்கானது. எந்த முரண்பாட்டை முதன்மையாகக் கொண்டாலும், அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டும். அரசுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுதல் என்பதை, பொதுவான அரசியல் வரையறையாக கொள்ளவேண்டும். இதுவல்லாத அனைத்தையும், அங்கீகரிக்கவும் எற்றுக் கொள்ளவும் முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்தல் என்பது, அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து, சமவுரிமையுள்ள சக மனிதனாக அங்கீகரித்துக் கொண்டு போராடுவதுதான்.

இதன் அர்த்தம் தன்னைத்தான் தனிமைப்படுத்தும் எல்லாத் தேசியவாதங்களையும், எல்லா மதவாதங்களையும், எல்லாச் சாதிய வாதங்களையும், எல்லாப் பிரதேசவாதங்களையும், எல்லா பால் ஒடுக்குமுறை வாதங்களையும் ... எதிர்த்து போராடுதல். மனிதர்களாக ஒருங்கிணைந்து, ஒடுக்கப்பட்ட மக்களாக தம்மைத் தாம் அணிதிரட்டிக் கொள்வதுதான் உண்மையானதும் நேர்மையானதுமான அரசியலாகும்.

எம்மைப் பொறுத்தளவில் அரசியலில் ஈடுபடும் எவரும் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று செயற்பட வேண்டும். இதன் அர்த்தம் ஒடுக்குவோரை எதிர்த்துச் செயற்பட வேண்டும்;. ஒரு ஒடுக்குமுறையை முதன்மைப்படுத்தி எதிர்க்கின்றபோது, மற்றைய எந்த ஒடுக்குமுறையையும் ஆதரிப்பதோ நியாயப்படுத்துவதோ நேர்மையான மக்கள் சார் அரசியல் நிலைப்பாடு அல்ல. மாறாக எல்லாவித அடக்குமுறைகளுக்கெதிராகவும் போராட வேண்டும். அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்க்கின்றவர்களாக இருக்காத வரை, அரசியல் என்பது ஒடுக்குமுறையைச் சார்ந்ததாகவே இருக்கும்.

இலங்கை அரசியலும் அரசும்

அரசு என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதல்ல. இது ஒரு வர்க்கத்தின் கருவி. அதாவது  ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் கருவி. யாருக்காக ஒடுக்குகின்றது என்றால், சுரண்டுகின்றவர்களின் நலன்கள் சார்ந்து நின்று ஒடுக்கின்றது. இன்று உலகில் உள்ள எந்த அரசும், சுரண்டுவொரைப் பாதுகாக்கும் அரசுகளாகத்தான் உள்ளது. அரசின் சட்டங்கள், நீதி நெறிகள் அனைத்தும், இவற்றை அடிப்படையாகக் கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களும், அதைக் கட்டுப்படுத்தும் வடிவங்களும் தான், சட்டமாகவும் நீதியாகவும் உள்ளது. மக்களை ஒடுக்கும் வடிவம் மாறும் போது  ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் வடிவங்கள் மாறுகின்றது. அத்துடன் ஒடுக்குமுறை வடிவங்கள் கூட பண்பு ரீதியான வேறுபாட்டை உருவாக்குகின்றது. சாதாரண சிவில் சட்ட வடிவங்கள் கொண்டு ஒடுக்குவதற்கு பதில், அவை பாசிசம் வடிவம் பெறுகின்றது.

தேர்தல் ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து சிவில் சட்ட வரையறை முதல் பாசிசம் வரையான அனைத்தும், ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் கருவி தான். ஆனால் வேறுபட்ட அரசியல் பண்பைக் கொண்டதாகும். இந்தப் பாசிசம் இரண்டு வடிவங்கள் கொண்டு வெளிப்படுகின்றது.

1.அனைவருக்குமான பொதுவான சமவுரிமையை அடிப்படையாகக் கொண்ட சிவில் சட்ட ஜனநாயகத்தை ஒரு பகுதி மக்களுக்கு இல்லாதாக்குகின்றது. மக்களைப் பிரித்து, சமவுரிமையை மறுத்து, கையாளுகின்ற பாசிசத்தை தேர்தல் "ஜனநாயக"மாகக் கொண்டு பாசிசத்தை கட்டமைக்கின்றது.

2.பொது சிவில் சட்ட வடிவத்தை நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இல்லாதாக்குகின்றதன் மூலம் பாசிசத்தை கட்டமைக்கின்றது.

இந்த இரண்டு கூறுகளையும் கொண்டு தான் இலங்கை அரசு செயற்படுகின்றது. மக்களை ஒடுக்கி ஆள்வதற்கான பண்புரீதியான அடிப்படையான வேறுபாட்டைக் கொண்டு, பாசிச வடிவங்களாக வெளிப்படுகின்றது.  இந்த வகையில்

1.மக்களை ஒடுக்க சிவில் சட்ட வடிவிலான பொது ஜனநாயக வடிவத்திற்கு பதில், பாசிச வடிவத்தைக் கையாளுகின்றது.

2.அனைவருக்குமான சமவுரிமையை அடிப்படையாகக் கொண்ட பொது சட்டவாக்கத்துக்கு பதில், வேறுபட்ட சட்டவாக்கங்களைக் கொண்டு மக்களை பிரித்து ஒடுக்குவதுடன், சட்டவிரோதமான பாசிச வடிவத்தை ஆணையில் வைக்கின்றது.

இன்று இலங்கையில் சிவில் சட்டவாக்கம், பாராளுமன்ற ஜனநாயகம் எல்லாம் செயலிழந்து வருகின்றது. நாட்டின் பொது அதிகாரம் குடும்ப சர்வாதிகாரமாகிவிட்டது. சட்டத்துக்கு வெளியில் இயங்கும் கும்பலின் கண்காணிப்பின் கீழ், நாடு முழுவதிலுமான சட்டத்தின் ஆட்சி கொண்டு வரப்படுகின்றது. சட்டத்தின் ஆட்சி செயலற்றுப் போகின்றது. சிவில் சட்டவாக்க அரச கட்டமைப்பு, சர்வாதிகார கும்பலில் எடுபிடியாக தொங்குசதையாக மாறிவருகின்றது. அத்துடன் சட்டவிரோத குற்றங்களை மூடிமறைக்கும் உறுப்பாகவும், அதை நியாயம் கற்பிக்கும் பொம்மை உறுப்பாகவும் மாறி வருகின்றது. தேர்தல் "ஜனநாயகம்" கூட அப்படித்தான். சட்டவிரோதக் கும்பல் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு ஏற்ற, தேர்தல் நடைமுறைகளையே "ஜனநாயமாக" உருவாக்கி வருகின்றது. அனைத்து சட்டவிரோதமான பாசிச செயற்பாடும், தேர்தல் "ஜனநாயகத்தின்" கூறாக திரிக்கப்படுகின்றது.  இதுதான் இன்றைய நிலை.

2009 முன் பின்னான பண்பு ரீதியான வேறுபாடுகள்

2009 முன் இரண்டு ஒடுக்குமுறைச்சக்திகள் நாட்டில் இருந்தது. இவற்றின் சில முரண்பட்ட பண்புகள் இவ்விரு சக்திகளுக்கும் இடையில் வித்தியாசத்தைக் காட்டினாலும் மக்களை ஒடுக்குவதில் இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. 2009 இல் புலிகள் அரச பாசிசத்தால் விழுங்கி தோற்கடிக்கப்பட்டதன் மூலம், அரசு பாசிசம் வீங்கியதன் மூலம் எஞ்சியது. அது புலியினது பாசிச வடிவங்களையும் உள்வாங்கிக் கொண்டு, ஒரு கொடூரமான அரக்கனாக தன்னை வெளிப்படுத்தி நிற்கின்றது.

புலிகள் இருந்த வரை புலிகளைச் சொல்லி அரசும், அரசைச் சொல்லி புலியும், அனைத்துவிதமான மக்கள்விரோத செயலிலும் மாறி மாறி ஈடுபட்டனர். மக்களுக்கு எதிரான குற்றங்களை, மற்றவர்களைச் சொல்லி செய்தனர்.

இந்தப் பாசிசப் பின்புலத்தில் இங்கும் அங்குமாக, பலர் தலைவைத்து படுப்பதை அரசியலாக்கினர். அங்குமிங்குமாக பாசிசத்துக்கு முதுகு சொறிந்தனர். புலிகளின்  கொடுமைகளைக் கூறி அரச பாசிசத்தை "ஜனநாயகமாக" காட்டியவர்கள், அரச பேரினவாதத்தைச் சொல்லி புலிகளை "தேசியமாக" காட்டியவர்கள் என்று பலவிதம். இவர்கள் மக்களை ஒடுக்குவதையிட்டு அக்கறையற்றவராகவே இருந்தனர்.

2009 இன் பின் அரச பாசிசம் மட்டும் எஞ்சியது. இதன் பின் அது பல முகங்களைக் கொண்டு தன்னை வெளிப்படுத்துகின்றது. புலிகளைச் சொல்லி முன்பு செய்ததை விட, வக்கிரமாக மக்களை மேலும் மேலும் பிளக்கின்றது. இலங்கையில் எண்ணிக்கையில் பெரும்பான்மை மக்களை திருப்தி செய்யும் வண்ணம், தன்னை இனங்காட்டிக் கொள்கின்றது. இனவாதத்தையும்; மதவாதத்தையும் கொண்டு, எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களை ஒடுக்குகின்றது. அதை நியாயப்படுத்துகின்றது. இதன் மூலம் எண்ணிக்கையில் பெரும்பான்மை மக்களை சிறுபான்மையில் இருந்து பிரித்து, அதன் மூலம் ஒடுக்குகின்றது. குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட அதிகார மையத்தை உருவாக்கியுள்ளது. சிவில் சட்டவாக்கத்தை செயலற்றதாக்கி, சட்டத்தின் ஆட்சியை இல்லாதாக்கியுள்ளது. ஒரு சட்டவிரோதக் கும்பலின் சர்வாதிகாரக் கட்டமைப்பை மக்கள் மேல் திணிக்கின்றது. குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளைக் கூட அனுமதிக்காது, அதன் மேலான கண்காணிப்பையும் வன்முறையையும் ஏவுகின்றது. தன்னை அனுசரித்து, தனக்கு இசைவான வகையில் செயற்;படுமாறு கோருகின்றது. இப்படிச் செயற்படுவதையே ஜனநாயகமாகக் கொள்ளுமாறு கோருகின்றது. அரச கட்டமைப்பிலான சிவில் சட்டவாக்க சுயாதீனங்களை அழித்து, எடுபிடித்தனமான பொம்மைக் கட்டமைப்பை உருவாக்குகின்றது. சட்டத்தினதும், நீதியினதும் ஆட்சியை மட்டுமல்ல, சிவில் கட்டமைப்பை தகர்த்து வருகின்றது. சட்டவிரோத கும்பல் கட்டுப்படுத்தும் இராணுவ கட்டமைப்பையும் புலானாய்வு ஆட்சியையும் உருவாக்கி வருகின்றது.

சர்வதேச முரண்பாட்டில் ஒரு பக்கம் சார்ந்து நின்று, அன்னிய தலையீட்டுக்கும் முரண்பாட்டுக்குள்ளும் நாட்டை அடகு வைத்து அடிமைப்படுத்துகின்றது. இவை அனைத்தும் அன்னிய மூலதனத்துக்கு நாட்டை அடிமைப்படுத்துதை அடிப்படையாகக் கொண்டது. இதனை ஊக்கப்படுத்திக் கொண்டு, பேரினவாத பாசிச மத சர்வாதிகாரத்தைக் கட்டமைக்கின்றது.

இன்று எண்ணிக்கையில் பெரும்பான்மையான இனம் மதம் சார்ந்து மட்டும் இந்தக் குடும்ப சர்வாதிகாரம் இயங்கவில்லை. எண்ணிக்கையில் சிறுபான்மையான இனம் மற்றும் மதத்துக்குள்ளான, மக்களின் முரண்பாடுகளை முன்னுக்கு கொண்டு வந்து மோத வைப்பதன் மூலம் தன்னைப் பலப்படுத்தி இயங்குகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களை பல முனையில் பல கூறாகப் பிரித்து, மோதவிட்டும் பாசிசத்தை ஏவுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் அணிதிரண்டுவிடக் கூடாது என்பது தான், அரசின் பொதுக் கொள்கை.

புலம்பெயர் அரசியல்

இலங்கையின் பேரினவாத ஒடுக்குமுறையால் உருவானது தான், புலம் பெயர் அரசியல். பேரினவாத அரசுக்கு எதிரான போராட்டம் சார்ந்து புலம் பெயர் அரசியல் உருவானது. இதற்கு வெளியில் அல்ல. பேரினவாதத்துக்கு எதிராகப் போராடிய இளைஞர் குழுக்களின் ஜனநாயக விரோதக் கூறும், படிப்படியான மக்கள்விரோத செயல்களும், அதற்கு எதிரான போராட்டங்களும், பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தை இரண்டு நேரெதிரான அரசியல் வழியாக்கியது. இது பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் பொதுப் பிளவாகியது.

இளைஞர் குழுக்களின் ஜனநாயக விரோதக் கூறுக்கும், மக்கள் விரோதக் கூறுக்கும் எதிரான போராட்டங்களை ஒடுக்க கையாண்ட வன்முறை, இறுதியில் பாசிச வடிவம் பெற்றது. மக்கள் சார்ந்த கருத்துகளையும், போராட்டங்களையும் வன்முறை மூலம் ஒடுக்கிய போது, புலம் பெயர் நாடுகளிலும் அது பிரதிபலித்தது. இந்தப் பிளவு புலம் பெயர்ந்தோர் மத்தியிலும் ஏற்பட்டது. ஒடுக்குமுறை பாசிச வடிவம் பெற்று அழித்தொழிப்பாக மாறிய போது, போராட்டம் புலம் பெயர்ந்த நாடுகளுக்கும் இடம் மாறியது.

பேரினவாதத்துக்கும் இனவொடுக்குமுறைக்கும் எதிரான போராட்டங்கள், புலம்பெயர் அரசியலை இரண்டாகப் பிரித்தது. இந்த வகையில்

1.பாசிசக் குழுக்களைச் சார்ந்து நின்று அரசுக்கு எதிரான செயற்பாடாகவும், மக்கள் சார்பு போராட்டங்களை எதிர்ப்பதாகவும் மாறியது.

2.மக்கள் விரோத செயலை செய்த பாசிசக் குழுக்களை எதிர்த்தபடி, அரசுக்கு எதிராகவும் மாறியது.

இப்படி இரண்டு அரசியல் போக்குகள் புலம் பெயர் நாடுகளிலும் தோன்றின. மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவது என்ற அடிப்படையில், அதற்கான ஜனநாயகத்தைக் கோரி பல பத்து சிறு சஞ்சிகைகள் வெளியிடப்பட்டது. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் இது முடிவுக்கு வந்தது.

இயக்கங்களின் பாசிசத்துக்கு எதிராக மண்ணில் நடந்த போராட்டம் முற்றாக அற்றுப்போக, அதில் தப்பி வந்த பாசிசத்துக்கும் அரசுக்கும் எதிராகவும் போராடிய அணி மக்களில் இருந்து மெதுவாக தனிமைப்பட்டு வந்தது. அது மக்களைப் பின்தள்ளி தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு, மக்களில் இருந்து தனிமைப்படத் தொடங்கியது. மக்களைச் சார்ந்து ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலை உயர்த்திய போக்கை படிப்படியாக கைவிட்டு, தன்னை முதன்மைப்படுத்தும் அரசியலை முன்வைத்தது. இது ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியலுக்கு பதில், தன்னை முதன்மைப்படுத்தும் மூடிமறைத்த மக்கள் விரோத அரசியலாக இருந்தது. பாசிசத்துக்கு எதிரான மக்களின் ஜனநாயகத்துக்கு பதில், தன் தனிமனித இருப்புச் சார்ந்த  உரிமையை "ஜனநாயகமாக்கிக்" கொண்டனர்.

மறுபக்கத்தில் எஞ்சிய அனைத்தையும் மண்ணில் புலிகள் அழிக்க, புலம் பெயர் நாடுகளில் பாசிசம் பலமாகத் தொடங்கியது. அதன் பின் எல்லா பிழைப்புவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும், வியாபாரிகளும் புலிக்கு பின் அணிதிரண்டு, புலம்பெயர் பாசிச அரசியலை வீங்க வைத்தனர். மாபியாத்தனம் பாசிச அமைப்பின் பொது வடிவமாக, நிதி தீர்மானகரமான அரசியலாக மாற,  புலம் பெயர் நாடுகளின் மாபியா அரசியல் மண்ணில்; போராடியவர்களை வழிநடத்தத் தொடங்கியது. முள்ளிவாய்க்கால் வரை அழைத்துச் சென்று புதைகுழியில் புதைத்தது. 2009 க்குப் பின் அது தொடர்ந்து அன்னிய சக்திகளின் பின் நின்று, அதே புதைகுழியை மீண்டும் மீண்டும் தோண்டுகின்றது.

புலிப் பாசிசத்தை எதிர்த்தவர்கள் படிப்படியாக ஒடுக்கப்பட்ட மக்களையும், அரசியலையும் கைவிட்டு அரசியலற்ற தனிமனித இருப்பு சார்ந்த "ஜனநாயக" வேஷத்தைப் போட்டனர். இது தனிமனிதனை முதன்மைப்படுத்தி நிற்க, அதை அடைய முடியாதவர்கள் புலிப் பாசிசத்தை ஒழித்தலே ஜனநாயகம் என்றனர். புலிப்பாசிசத்தை ஒழிக்க அரசு போராடுவதாகவும், அன்னிய சக்திகள் செயற்படுவதாகவும் கூறிக்கொண்டு அவர்கள் பின் சென்றனர். மறுதரப்பு கோட்பாடற்ற தனிமனித இருப்பு சார்ந்த லும்பன்தனத்தை தமது "ஜனநாயகமாக்கிக்" கொண்டனர். தமக்குத் தாம் பேசிக் கொள்வதையே ஜனநாயகமாக்கினர். மக்களுக்கு ஜனநாயகத்தை கொண்டு வருவது, அதற்காக போராடுவது பற்றி அக்கறை அற்றவராகினர்.

புலிகளிடம் ஜனநாயகத்தை கோரியது அரசுக்கு எதிராக மக்களுக்காக போராடவும் தான் என்பதை, புலிகள் இல்லாத 2009 பின் மிகத் தெளிவாகவே மறத்து நிற்கின்றனர். மக்களுக்காக போராடுவது என்பது தங்கள் நோக்கமல்ல, (தனக்காக) அரசியலில் தம்மை நிலைநிறுத்தி வைக்க குரல்கொடுத்தல் தான் இவர்கள் நோக்கமாகிவிட்டது. 2009 இல் புலிகள் அழிந்த போது, மாற்றுச் செயற்தளம் எதுவும் புலிக்கு எதிரான தளத்தில் இருக்கவில்லை. எமக்கு வெளியில் கோட்பாடுகள், சிந்தனைகள், செயற்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. இதை புலிகள் அழிக்கவில்லை. புலிகளுக்கு எதிரானவர்கள் என்று கூறிக்கொண்டவர்கள், ஜனநாயகத்தின் தூண்கள் என்று கூறிக் கொண்டவர்கள் தான், மக்களுக்கான அரசியலை அழித்தனர். தம்மை தாம் முதன்மைப்படுத்தம் அரசியல் லும்பன்கள் தான், தங்களை முதன்மைப்படுத்தி கொள்ளும் முரண்பாட்டில் எஞ்சி இருந்தனர். மக்களுக்கான மாற்று அரசியல் செயல்தளத்தைக் கோருவதற்கு, அதற்காக ஒருங்கிணைவை உருவாக்குவதற்கு முடியாத, தம்மைத்தாம் முதன்மைப்படுத்திக் கொண்ட அரசியல் வெற்றிடமே காணப்பட்டது.

அரசுக்கு ஆதரவாக செயற்பாடுகள் இங்கிருந்து தான் முதலில் உருவானது. அது ஜனநாயகத்தின் பெயரில் அரச பாசிசத்தை ஆதரித்துக் கொண்டு, இனம், மதம், பிரதேசம் சாதியம் மூலம் தம்மை முடிமறைத்துக் கொண்டு உருவானது. அரச பாசிசத்தை எதிர்க்காத, அரசின் இனவாதம் மதவாதத்தை எதிர்க்காத ஒன்றாகவே தன்னை வெளிப்படுத்துகின்றது.  தமிழ்தேசிய எதிர்ப்பை முதன்மைப்படுத்திக் கொண்டு, புலம் பெயர் நாடுகளில் இருந்து தன்னை முன்னிறுத்துகின்றது.

மற்றொரு முகமூடி அரசுடன் சேர்ந்து மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்; என்பது. இது புலியிலும், புலம்பெயர் "ஜனநாயகவாதிகள்" மத்தியில் இருந்து, அரசுக்குப் பின்னால் இயங்கத் தொடங்கியிருக்கின்றது. அரசைச் சார்ந்த பொருளாதார ரீதியாக உதவுதலில் தொடங்கி இனம் மதம் பிரதேசம் சாதியம் என்று மூகமுடியுடன் பல முகம்கொண்டு மக்கள் விரோத அரசியல் புலம் பெயர் நாடுகளில் காணப்படுகின்றது.

இன்றைய இந்த மக்கள் விரோத பொதுப்போக்குக்கு எதிரான அரசியல் பின்புலத்தில் இருந்து தான், மக்கள் அரசியல் செயற்பாட்டுகான புதிய தேடுதல் உருவாக்கி இருக்கின்றது. இன்று பல தளத்தில் அது முளைவிடுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து தங்களை அணிதிரட்டிக் கொள்ளும் அவசியத்தை உணருகின்ற புலம்பெயர் நாடுகளில் முயற்சிகள் தொடங்கி இருக்கின்றது. இது உண்மையான புலம்பெயர் அரசியலுக்கு முதற்காலடியாகும். இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்களின் நடைமுறைச் செயற்பாட்டுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் புதிய வரலாற்றுக்கு இது இட்டுச் செல்லும்;. இந்த வகையில் புதிதாக உருவாகிவரும் புலம்பெயர் செயற்பாடுகளுக்கான வரலாற்றுத் தளத்தில் நாம் இணைந்து பயணிக்கின்றோம் என்பதை, உணர்வுபூர்வமாக உணர்ந்து செயற்பாடுமாறு வரலாறு எம்மிடம் கோருகின்றது.

 

பி.இரயாகரன்

26.05.2013