ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி 09
அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதும், குறைவான சர்வதேசிவாதிகளாக நாம் மாறி விடுவது தான் கம்யூனிசம் என்றான் குருசேவ்
ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் “எந்த ஒரு சிறு பகுதி யுத்தமும், ஒரு உலக யுத்தம் என்ற காட்டுத் தீயை மூட்டிவிடும்” என்றான். ”அணு ஆயுதமற்ற சாதாரணப் போராக உருவெடுக்கும் எந்த விதமான போரும் சர்வநாசம் விளைவிக்கும் பெரும் அணு ஆயுத எவுகணை யுத்தமாக வளர்ச்சி பெறும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் நிராகரித்தான். குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து கம்யூனிச அடிப்படைகளை கழுவில் எற்றிய நிகழ்வை வரவேற்ற அமெரிக்கா ஜனாதிபதி கென்னடி, “உலகம் முழுவதையும் கம்யூனிச மயப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு தன்னுடைய தேசிய நலன்களை மட்டுமே கவனிக்க வேண்டியிருக்கும், சமாதான சூழ்நிலைமைகளில் கீழ் தன் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தருவதை மட்டுமே அது கவனிக்க வேண்டியிருக்கும்” என்றார்.
ஸ்டாலின் தூற்றப்பட்ட, மார்க்சியம் மறுக்கப்பட்ட நிகழ்வையும் ஏகாதிபத்தியங்கள் கொண்டாடின. ஸ்டாலினிடம் இருந்து மாறுபட எதைச் செய்ய வேண்டும் என்பதை குருச்சேவுக்கு தெளிவாக அறிவுறுத்தினர். ஸ்டாலின் சர்வதேச கம்யூனிச இயக்கத்தை வழி நடத்தியபடி வர்க்கப் போராட்டத்தை நிகழ்ச்சி நிரலாக முன்வைத்து நடத்திய போராட்டங்களையும், உலகளவிய பல்வேறு தொடர்ச்சியான எழுச்சிகளையும் நிறுத்த வேண்டும் என்பதே ஏகாதிபத்தியத்தின் கொள்கை. இதையே குருச்சேவ் கம்யூனிசம் என்றான். டிராட்ஸ்கிகள் ஆசையாக ஸ்டாலின் அதிகாரம் தகர்கின்றது என்று கூறி மகிழ்ந்தனர். அமெரிக்கா ஜனதிபதியின் வேண்டு கோள்களை குருச்சேவ் சிரமேற்றான்.
குருச்சேவ் ஒடுக்கப்பட்ட காலனிய நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையிலான “சமதான சகவாழ்வு” என்பதே கம்யூனிசம் என்றான். சமதான சகவாழ்வு “தேசியப் பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சியடைய” செய்யும் என்றான். இதனால் “அவற்றின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை” உருவாக்கி, உள்நாட்டு சந்தையில் “ஒப்பிட முடியாத அளவு வளர்ச்சியடை”யும் என்றான். இதனால் ஏகாதிபத்தியங்களுக்கு காலனித்துவ பொருட்கள் அதிகம் கிடைக்கும் என்றும் “உயர் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாட்டிலுள்ளவர்களின் வாழ்க்கை தரத்தை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தும் என்றான். எனவே சமதான சகவாழ்வை முன் எடுத்து, கம்யூனிசம் என்ற வர்க்கப் போராட்டத்தை கைவிட அழைத்தான். கட்சிகளை முதலாளித்துவ கட்சியாக்கினான். ஸ்டாலின் பற்றிய மதிப்பை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்த கூவி அழைத்தான். ஆனால் ஸ்டாலின் பாட்டாளி வர்க்கத்துக்கு என்ன சொன்னார். “நமது முன்னேற்றத்தைத் தடுக்க சர்வதேச மூலதனம் தன்னால் இயன்றதனைத்தையும் செய்யும் என்பதால் ரசியத் தொழிலாளி வர்க்கத்தைத் சுற்றி எல்லா நாடுகளின் பாட்டாளி வாக்கத்தையும் ஒடுக்கப்பட்டோரையும் ஒன்று திரட்டும் புரட்சிகர கொள்கையை நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கின்றோம்” என்றார். குருச்சேவோ இதை கைவிடக் கோரினான். நாம் முன்னேற முதலாளிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றான். முதலாளிகளுக்கு அதிகம் உழைத்து கொடுத்து லஞ்சம் பெற்று முன்னேற ஒவ்வொரு நாட்டு கட்சியும் முயல வேண்டும் என்றான். இதை அமெரிக்கா அதிகார வர்க்கத்தைச் சோந்த டல்லல் “…நீண்ட காலக் கண்ணோட்டத்தில், ஆம் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் நிச்சயம் என்று நான் சொல்வேன் – அவர்கள் இன்னும் அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதற்கும், இன்னும் குறைவான சர்வதேசிவாதிகளாகி விடுவதற்கும் எற்ற வகையில் ரசிய ஆட்சியாளர்களின் இன்றைய கொள்கைகளில் பரிணாம வளர்ச்சி இருக்கும்” என்று, குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை வருணித்தான். ஏகாதிபத்தியம் இப்படி வருணித்த போது டிராட்ஸ்கிகள் ஸ்டாலின் அதிகாரம் தகர்கின்றது, சோசலிசம் முன்னேறுகின்றது என்று கூறி குருச்சேவுக்கு பாரட்டுகளை வாரிவழங்கினர்.
அதை எற்றுக் கொண்ட குருச்சேவ் “தற்போது சமாதானம் மற்றும் சகவாழ்வுக்காக மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களும், பல அரசுத் தலைவர்களும் முன்வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, சமாதான சகவாழ்வின் அவசியத்தை மேலும் மேலும் தெளிவாக புரிந்து கொண்டு வருகிறார்கள்” என்றான். “நவீன கால சமுதாயம் முழுமைக்கும் வாழ்க்கையின் அடிப்படை விதியாக இது உள்ளது” என்றான். வர்க்க மோதலற்ற, மார்க்சியத்தை குழி தோன்டி புதைத்த சமாதியின் மேல் நின்று, இப்படி எதார்த்தத்தை தலைகீழாக்கி காட்ட முடிந்தது. இதை பிரதிபலித்த கென்னடி தனது அறிக்கையில்”வேறுபட்ட சமுக அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கிடையில் சமாதான சகவாழ்வின் பகுத்தறிவுக்கு ஒத்த தன்மையையும் நடைமுறை சாத்தியப்பாட்டையும் அங்கீகரித்தை நாம் மெச்சாமல் இருக்க முடியாது” என குருச்சேவை பாராட்டுகிறார். இதில் இருந்து தான் ஸ்டாலின் முற்றாக வேறுபடுகின்றார். இதனால் டிராட்ஸ்கிகள் முதல் குருச்சேவ் மற்றும் ஏகாதிபத்தியவாதிகள் வரை ஸ்டாலினை தூற்றினர்.
ஸ்டாலினை தூற்றியவர்கள் துற்றுபவர்கள் அனைவரும் வர்க்க அடிப்படையைக் கைவிட்டனர். கைவிடுகின்றனர். குருச்சேவ் மட்டும் என்ன விதிவிலக்கா? இல்லை. 1956 இல் “பாட்டாளி வர்க்கம் உழைக்கும் விவசாயிகள், புத்திஜீவிகள், தேசபக்த சக்திகள் ஆகியவர்களை அணிதிரட்டியும், முதலாளிகள், நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்யும் கொள்கையை விட்டுவிடத் திராணியற்ற சந்தர்ப்பவாதிகளை உறுதியோடு தூக்கியெறிந்தும், மக்களின் விருப்பத்துக்கு எதிராக நிற்கும் பிற்போக்கு சக்திகளை முறியடித்தும் பாராளுமன்றத்தில் ஒரு நிலையான பெரும்பான்மையை பெறக் கூடிய நிலை இருக்கின்றது” என்றான். இதன் மூலம் உலகப் புரட்சி வெல்லும் என்றான். சட்டவிரோதமான கட்சி வடிவத்தையே நிராகரித்து சட்டபூர்வமான கட்சியை மட்டும் கட்டவேண்டும் என்றான். பராளுமன்றம் அல்லாத அனைத்து புரட்சிகர வழியையும் பாட்டாளி வர்க்கம் கைவிட வேண்டும் என்றான். ஸ்டாலின் ஒரு கொடுங்கோலனாக இருந்து இதை அனுமதிக்க மறுத்தாக கூறி, தனது முதலாளித்துவ மீட்சிக்கு விளக்கமளித்தான். இந்த முதலாளித்துவ மீட்சிக்கான கூறுகளைப் பற்றி லெனின் “தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாத போக்கை கடைப்பிடிக்கும் நபர்கள் முதலாளிகளைப் பாதுகாப்பதில், முதலாளிகளையே விஞ்சி நிற்கிறார்கள் என்பதை முதலாளிகள் புரிந்து கொண்டுள்ளதை காணமுடியும்” என்றார். இந்த நிலையில் ஏகாதிபத்திய பிரதிநிதிகள் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை முதலாளித்துவ மீட்சியை தெளிவாகவே இனம் கண்டு பராட்டினர். பிரிட்டிஸ் பிரதமர் டக்ளஸ் ஹோம் “ரசிய கம்யூனிசம் கல்வியையும், சாப்பாட்டையும் முதலில் வைத்துள்ளதாக திரு.குருச்சேவ் கூறியுள்ளார். இது நல்லது யுத்த-கம்யூனிசத்தை விட சாப்பாட்டுக் கம்யூனிசம் நல்லது. மெலிந்த, பசியுடன் உள்ள கம்யூனிஸ்டுகளைவிட கொழுத்த, வசதியான கம்யூனிஸ்டுகள் நல்லவர்கள், இதை அறிந்த நான் மகிழ்ச்சியடைகின்றேன்” என்றார். வசதியான ஏகாதிபத்திய கம்யூனிசமே எமக்கு வேண்டும் என்ற முதலாளித்துவ மீட்சியை ஆதாரித்தோர் கொண்டாடினர். டிராட்ஸ்கிகள் இதுதான் சோசலிசம் என்றனர்.
குருச்சேவ் வேகமாகவும் விரைவாகவும் மார்க்சியத்தை மறுத்தான். இதற்காக ஸ்டாலினைத் தூற்றினான். அவன் சொன்னான் “தொழிலாளர் வர்க்கம் நாட்டில் ஒரு வலிமைமிக்க புரட்சிகர இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பிடித்து அதனை ஒரு மக்கள் அதிகாரத்தின் கருவியாக மாற்றுவது என்பதன் பொருள், முதலாளி வர்க்கத்தின் இராணுவ அதிகார வர்க்க இயந்திரத்தை அழித்து அவ்விடத்தில் பாராளுமன்ற வடிவிலான ஒரு புதிய பாட்டாளி வர்க்க மக்கள் அரசை நிறுவுவது என்பதாகும்” என்றான். மார்க்சியத்தின் அடிப்படைகளை எல்லாம் மறுத்து, முதலாளித்துவத்தை கம்யூனிசமாக சித்தரிக்கும் இவன் தான், ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க சர்வதிகாரத்தை தகர்த்தான். பலரை சிறையில் தள்ளியதுடன், பலருக்கு மரண தண்டனையை வழங்கினான். கட்சியை முற்றாக களையெடுத்தான். முன்னாள் முதலாளித்துவ மீட்சியாளர்களை சிறையில் இருந்து விடுவித்ததுடன், பலருக்கு அரசியலில் புனர்ஜென்மம் வழங்கினான். சோவியத்யூனியனின் நிறமே மாறியது. கம்யூனிச இயக்கமே உலகளவில் அமைதி சமாதனம் என்று கூறி, மக்களின் முதுகில் எறிக் கொண்டது.
இதை எதிர்த்த சீனா கம்யூனிச கட்சியையும், உலக கம்யூனிஸ்ட்டுகளையும் தூற்றிக் காட்டிக் கொடுத்தான். டிராட்ஸ்கிகள் இவர்களை ஸ்டாலினிஸ்ட்டுகள் என்று வசைபாடிய படி, ஏகாதிபத்திய முதுகில் தொற்றிக் கொண்டனர். உலக கம்யூனிச இயக்கத்தை தூற்றிய குருச்சேவ் மூலதனத்துக்காக தலைகீழாக நின்றார். இதை ஒட்டி அமெரிக்கா விடுத்த செய்தி மற்றும் உலகம் பற்றிய அறிக்கையில் “அவர் (குருச்சேவ்) சீனாவுடனான உறவைத் தவறாகக் கையாண்டதற்காக, நாம் அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளோம்… சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் அமைதியான பணிகள் மூலமும், பல்வேறு அதிர்ச்சியூட்டும் திடீர் நடவடிக்கைகள் மூலமும் குழப்பங்களைத் தோற்றவித்ததற்காக நாம் குருச்சேவ் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டனர். நியூஸ்வீக் தனது செய்தியில் “செஞ்சீனாவுடன் குருச்சேவ் மேற்கொண்டுள்ள தகராறில் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று அமெரிக்க நிர்வாகம் கருதுகின்றது” என்று ஏகாதிபத்திய கொள்கையை பளிச்சென்று வெளியிடுகின்றது. முதலாளித்துவ மீட்சிக்கு எதிராக உலகில் இருந்தவர்கள் சீனா தலைமையிலான கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே. டிராட்ஸ்கி அவதூறான பொழிப்புரையில் சொன்னான், ஸ்டாலினிஸ்ட்டுகள் மட்டும் தான். மற்றய அனைவரும் எதோ ஒரு வகையில் அமெரிக்காவின் நிலையுடன் ஒன்றுபட்டு நின்றனர். இதையே 1958 இல் அமெரிக்கா செனட்டர் ஹெச்.ஹெச் ஹம்ஃப்ரேயுக்கு குருச்சேவ்வுடன் உரையாடிய போது “சீனாவின் மக்கள் கம்யூன் சராம்சத்தில் பிற்போக்கானவை” என்றார். உலக கம்யூனிச அடிப்படைகள் நிராகரிக்கபட்டன. அவை கொச்சைப்படுத்தப்பட்டன. அவை ஸ்டாலினிசம் என கேவலப்படுத்தப்பட்டது.
இது கீழை நாடுகளில் வெற்றி பெறவில்லை என்று கூறி, டிராட்ஸ்கியம் அங்கலாய்க்கின்றது. அது தம்முடன் மட்டும் சுருங்கிப் போனது என்ற கூறி புலம்பவும் தயங்கவில்லை. இன்று ஸ்டாலினிசம் என்ற பதம் இலங்கை, இந்தியச் சூழல்களில் டிராட்ஸ்கியவாதக் குற்றச்சாட்டாய் மட்டுமே குறுகிப் போய் நிற்கின்றது.”போதிய முதலாளியம் வளர்ந்திராத ஜனநாயகம், மனித உணர்வுகள் பற்றிய போதிய விழிப்புணர்ச்சியற்ற சூழலில் வாழும் பெரும்பாலான கீழைத்தேச ஸ்டாலினிச அமைப்புகள் தாம் வாழும் சமூகத்தின் நிலைகேற்ப விவசாய சமூகக் குணாம்சங்களின் முரட்டுத்தனத்தோடு ஸ்டாலினிசத்தை அரவணைத்துக் கொள்கின்றன” என்று டிராட்ஸ்கியம், மார்க்சியத்தின் வளர்ச்சியைக் கண்டு புலம்புகின்றனர். மேற்கு நாடுகளைவிட மற்றய நாடுகளில் நடக்கும் கூர்மையான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய வர்க்கப் போராட்டங்கள் அனைத்தும், ஸ்டாலினை தமது அரசியல் வழிகாட்டுதலாக கொள்கின்றன. இதனால் தான் ட்ராட்கியம் புலம்புகின்றது. மேற்கில் இந்த போக்கு இல்லாமைக்கு கூறும் விளக்கம் அர்த்தமற்றவை. உண்மையில் மேற்கில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய வர்க்கப் போராட்டங்கள், நிகழ்ச்சிகள் நிரலில் இல்லை என்பதே உண்மை. தன்னெழுச்சியான இயக்கங்கள், மார்க்சிய தத்துவ வழிகாட்டல் அற்ற போக்குகள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய எந்த உணர்வுபூர்வமான செல்பாடுகளும் குறிப்பிடக் கூடிய அளவுக்கு கிடையாது. இந்த போக்கு விதிவிலக்கின்றி நிச்சயமாக ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மார்க்சிய அடிப்படையுடன் மட்டும் தொடர்புடையது. 1950 களில் இறுதியில் தொடங்கிய சீராழிவு, கடந்தகால வர்க்கப் போராட்ட வெற்றிகளைக் கூட காப்பாற்ற வக்கற்றுப் போயுள்ளது. ஸ்டாலின் எந்தளவுக்கு மிதிக்கப்படுகின்றரோ, அந்தளவுக்கு மக்களின் அடிப்படை நலன்களும் மிதிக்கப்பட்டு சிதைக்கப்பட்டதை தாண்டி, தொழிலாளர்கள் எந்த உரிமையையும் மேற்கில் வென்று எடுக்கவும் இல்லை, பாதுகாக்கவும் முடியவில்லை.
டிராட்ஸ்கிகள் “ஸ்டாலினிசம் என்பது… ஸ்டாலினைப் பழிக்கும் அரசியலற்ற வெறும் புனைந்துரையல்ல. மாறாக அது அரசியல் அதிகாரத்துவப் போக்கை குறிப்பதாகும்” என்று கூறி பாட்டாளி வர்க்கத்தின் கம்யூனிச உள்ளடக்கமாக பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகார அமைப்புகளை சிதைப்பதையே குறித்துக் காட்டுகின்றனர். இதை பிரதிபலித்த நியூயார்க் டைம்ஸ் குருச்சேவின் இரகசிய அறிக்கை குறித்த 1956 இல் எழுதிய போது “கம்யூனிச இயக்கத்தின் மதிப்பையும், செல்வாக்கையும் சிதைப்பதற்கான ஆயுதமாக உள்ளது” என்று கூறி, அதை பாதுகாக்க கோரியது. குருச்சேவ் சொன்ன “சமாதான முறையில் பரிணாமம்” என்ற கம்யூனிசத்தையே ரசியாவிலும் மற்றயை சோசலிச நாடுகளிலும் அமுல்படுத்துவதையே, ஜான் பாஸ்டர் டல்லல் என்ற அமெரிக்கா ஏகாதிபத்தியவாதி கோரினான்; அவன் மேலும் “… அதிக அளவு தாராளவாதத்திற்கான கூறுகள் ரசியாவில் இன்று காணப்படுகின்றன. இது தொடர்ந்தால், அவை ரசியாவில் ஒரு அடிப்படை மாற்றத்தையே கொண்டு வரும்” என்றான். இதைத்தான் டிராட்ஸ்கிகளும் கோரினர். அமெரிக்காவும் மற்றைய ஏகாதிபத்தியங்களும் விரும்பிய இந்த அடிப்படையான மாற்றம், முதலாளித்துவ மீட்சிதானே ஒழிய, வேறு ஒன்றும் அல்ல. இதைத்தான் டிட்டோவும், டிராட்ஸ்கியும் விரும்பியதுடன் பரஸ்பரம் ஸ்டாலினை தூற்றுவதன் பெயரில் தம்மைத் தாம் நியாப்படுத்திக் கொண்டனர்.
இந்நூலின் முந்தைய பகுதிகள்
8.ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் பகுதி 08
7.சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - 7
6.இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது? - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6
5.மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது - ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 5
4.யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 4