03262023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

சர்வதேச நிதி மூலதனமும், போர்க்குற்றவாளிகளின் நிதி மூலதனமும்

இன்று இலங்கையில் சர்வதேசக் கடன் மூலதனமும், போர்க்குற்ற மூலதனமும், ஓரே திசையில் ஒரு புள்ளியில் பயணிக்கின்றது. இந்த வகையில் தனிவுடைமையிலான இன்றைய இலங்கையில் சொத்துடமையை, மீளப் பங்கிடக் கோருகின்றது. இது வைத்திருக்கும் மையக் கோசம் தான் "அபிவிருத்தி". இன்று இலங்கை அரசியலின் மையமானதும், பிரதானதுமான கோசமாக "அபிவிருத்தி" அரசியல் மாறியிருக்கின்றது. தங்கள் நிதி மூலதனத்தையும் முதலிட முனைகின்ற திசையில் தான், யுத்தத்திற்கு பிந்திய சூழலாகும்;. இது மக்களின் சிறுவுடமைக்கு எதிரான, நீதி மூலதனத்தின் யுத்தமாகவுள்ளது.

யுத்தம் நடந்த பிரதேசத்தில் நடந்தேறும் மீள்கட்டுமானம் என்பது, வெறும் இனவாதம் மதவாதம் சார்ந்த கூறாக மட்டும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. மாறாக நிதி மூலதனத்தின் நலன்களே மையப்படுத்தப்பட்டு, அவை முதன்மைப்படுத்தப்பட்டு முன்தள்ளப்படுகின்றது. இதற்கு இனவாதம், மதவாதம் மூலம் கவசமிடப்படுகின்றது. யுத்தம் நடக்காத பிரதேசத்தில் கூட "அபிவிருத்தி" எனும் பெயரில் நடந்தேறுகின்ற அதே நேரம், முஸ்லிம் மதவாதம் பயன்படுத்தப்படுகின்றது.

போர்க்குற்றம் நடந்தேறியது என்பது, புலிகள் மற்றும் பொதுமக்களைக் கொன்று கொள்ளை அடிப்பதற்காகத்தான். தமிழன் என்பதாலோ, புலிகள் என்பதாலோ மட்டும் இந்தக் கொலைகள் நடந்தேறவில்லை. சாதாரண இராணுவ வீரன் தமிழன் என்பதாலோ, புலிகள் என்பதாலோ கொன்று இருப்பான். ஆனால் இதை திட்டமிட்டவன் கொள்ளையிடவே கொன்றான். அதுதான் இன்று இலங்கையில் பாரிய போர்க்குற்ற மூலதனமாகி முழு மக்களையும் பந்தாடுகின்றது.

இந்த போர்க்குற்றம் சார்ந்து உருவான புதிய மூலதனத்தை சார்ந்து உருவான ஆளும் வர்க்கத்தின் நோக்கம் தான் "அபிவிருத்தி" அரசியலாகி இருக்கின்றது. இந்தப் பாதையில் சர்வதேச நிதி மூலதனமும் இணைந்து பயணிக்கின்றது. இலங்கையில் சர்வதேச நிதி மூலதனம் பயணிக்கின்ற, மிகச் சிறப்பான அரசியல் சூழல் இதுதான்.

இந்த வகையில் உலகில் அதிக நிதி மூலதனத்தைக் கொண்ட சீனா, இலங்கையில் அதிக நிதி மூலதனச் செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் சீனாவின் நலன் என்பது, நிதி மூலதனம் முதலீடு சார்ந்தது. சர்வதேச நிதி மூலதனம் "அபிவிருத்தி" என்ற பொதுக் கோசம் மூலம் ஏற்றுமதி செய்துவந்த போதும், அது இலங்கையில் போர்க்குற்ற நிதி மூலதனத்துடன் பங்காளியாக இணைந்து பயணிக்கின்றது.

நிலங்களைக் கைப்பற்றுவது, குடியேற்றப் பிரதேசங்களில் இருந்து மக்களை அகற்றுவது, பெறுமதியான நிலங்களை கையகப்படுத்துவது.. என அனைத்தும் "அபிவிருத்தி" அரசியலின் ஊடாகவே நடந்தேறுகின்றது. சட்டப்படியான மக்களின் சிறிய தனித்தனியான தனிவுடமையை, மூலதனத்தை கொண்டவர்கள் பறித்து தமதாக்கும் அரசியல் தான் இன்று இலங்கையில் நடந்தேறும் "அபிவிருத்தி" அரசியலாகும். கொழும்பையும், கொழும்பை அண்டிய பகுதிகளிலுமுள்ள பெறுமதியான நிலங்கள் மக்களிடமிருந்து மூலதனத்தைக் கொண்டவர்களால் திருடப்படுகின்றது. இதற்கு தலைமை தாங்குபவர்கள் வேறு யாருமல்ல, யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தான். யுத்தத்துக்கு தலைமை தாங்கி போர்க்குற்றம் மூலம், மூலதனத்தை பெருமளவில் திரட்டியவரின் தலைமையில் தான் மக்களின் சட்டப்படியான சொத்துகளைக் கைப்பற்றும் "அபிவிருத்தி" யுத்தமும் தொடங்கி இருக்கின்றது. மக்களை அவர்களின் சொத்துடமையில் இருந்து விரட்டுவதும், அதன் மேல் வன்முறையை பிரயோகிப்பதும் இன்று நாட்டின் பொதுக் கொள்கையாகி இருக்கின்றது. இதனால் இராணுவத்தை பயன்படுத்துவதும், நாட்டை இராணுவ மயமாக்குவதும் தொடருகிறது.

போர்க்குற்றங்களை விட போர்க்குற்றம் மூலம் திரட்டிய பணம் தான், இன்று நாட்டை பாசிசமாக்குகின்றது. இது இராணுவ மயமாகின்றது. இது சிவில் கட்டமைப்பையும், சட்டத்தின் ஆட்சியையும் இல்லாதாக்குகின்றது. அதை வெறும் பொம்மையாக்கிவிடுகின்றது. பாராளுமன்ற உரிமைகளை பறித்தெடுகின்றது. நீதி மன்றங்களை கைப்பொம்மையாக்குகின்றது. ஜனநாயகத்தின் அனைத்து pதமான சுயமான செயல்கூறுகளை தாமாகவே அடங்கிப் போகவும், அதை மீறினால் அழித்தும் விடுகின்றது.

போர்க்குற்றம் மூலம் திரட்டிய மூலதனத்தை முதலிட, சர்வதேச நிதி மூலதனத்;தை கவசமாகக் கொண்டு பயணிக்கின்றது. வழமையாக சர்வதேச நிதி மூலதனத்தின் முதன்மை முனைப்பு, இலங்கையில் போர்க்குற்ற மூலதனத்தின் முதன்மை முனைப்பாக வெளிப்படுகின்றது. இந்த முரண்பாடு சீன மூலதனத்தை முதன்மையாக்கி தன்னை வெளிப்படுத்துகின்றது.

இலங்கையில் நடந்த போர்க்குற்ற படுகொலைகள் வெறுமனே இனப்படுகொலைகளோ, புலி அழிப்போ அல்ல. மாறாக மூலதனத்தை தமதாக்கும் படுகொலைகளே நடந்தேறியது. அந்த மூலதனம் இன்று "அபிவிருத்தி" என்ற பெயரில் சிறுவுடமை மீதான யுத்தத்தை தொடங்கி நடத்துகின்றது. இதுதான் யுத்தத்துக்கு பிந்தைய இன்றைய இலங்கையில் பிரதான அரசியல் போக்காகும்.

மக்களுக்கும் அரசுக்கும் இடையில் நாடு தளுவிய முரண்பாடுகளும், போராட்டங்களும் இந்த அடித்தளத்தில் கூர்மை பெற்று நடைபெறுகின்றது. புதிதாக உருவான போர்க்குற்ற மூலதனம் சார்ந்தும், சர்வதேச நிதி மூலதனம் இணைந்தும் மக்களுக்கு எதிராக ஓரே திசையில் பயணிக்கின்றது. இதற்கு எதிராக மக்கள் தன்னிச்சையாக அணிதிரண்டு போராடும் போராட்டங்கள் தொடருகின்றது. இதை அமைப்பு ரீதியாக அரசியல் உள்ளடக்கம் கொண்ட போராட்டமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது.

 

பி.இரயாகரன்

19.04.2013


பி.இரயாகரன் - சமர்