வர்க்க நடைமுறையற்ற சூழலில் "சுயநிர்ணயக்" கோரிக்கை என்பது தேசியவாதத்துக்கு உதவுவதே. மார்க்சியம் பேசிக்கொண்டு, வர்க்க நடைமுறையைக் கைக்கொள்ளாதவர்களின் அரசியல் இதைத்தான் செய்கின்றது. இதே அடிப்படையில் தான் மார்க்சியவாதிகள் அல்லாதவர்களும் "சுயநிர்ணயத்தைக்" கோருகின்றனர். மூடிமறைத்த தேசியவாத பிரிவினை அரசியலும், மார்க்சியத்துக்கு எதிரான அரசியலும், மூடிமறைத்த "சுயநிர்ணய" கோசத்துடன் அரங்கில் வருகின்றது. இதன் மூலம், இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான நடைமுறைப் போராட்டத்தை எதிர்க்கின்றனர். மார்க்சியவாதிகள் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று, மார்க்சியவாதிகள் அல்லாதவர்கள் முன்வைக்கும் கோரிக்கை படுபிற்போக்கானது. மார்க்சியத்தை வர்க்க நடைமுறையுடன் ஏற்றுக்கொண்டவர்கள், சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ள கோருவதில் இருந்து, இது முற்றிலும் வேறுபட்டது, நேரெதிரானது.
இந்த இரண்டையும் வேறுபடுத்தி சுயநிர்ணயக் கோரிக்கையை முன்வைக்காத "மார்க்சியவாதிகளின்" அரசியல் என்பது சந்தர்ப்பவாதமாகும். சுயநிர்ணயத்தை மார்க்சியவாதிகள் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று போராடும் மார்க்சியவாதிகள், மார்க்சியவாதிகள் அல்லாதவர்கள் முன்வைக்கும் "சுயநிர்ணயத்தை" எந்த அரசியல் சமரசமுமின்றி எதிர்த்துப் போராட வேண்டும். இரண்டும் ஓரே நேரத்தில் நடக்க வேண்டும். ஒரு பக்கமாக இதைக் குறுக்கிப் போராட முடியாது. அப்படிப் போராடினால் அது சந்தர்ப்பவாதமாகும். அதாவது சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளக் கோரி மார்க்சியவாதிகள் அல்லாத தரப்புடன் நேரடியாகவோ, மறைமுகமாவோ, கண்டும் காணாத மௌனம் மூலமோ, மூடிமறைத்த சந்தர்ப்பவாதமாகவோ கூடி நின்று அதைக் கோர முடியாது. இரண்டு நேர் எதிரான அரசியல் தளத்தில், நடைமுறை மற்றும் கோட்பாட்டு விவாதத்தை சமச்சீராக நடத்தவேண்டும். சுயநிர்ணயத்தை முன்வைப்பதல்ல, அதற்காக நடைமுறையிலும் போராடவும், போராடியபடியும் கோரவும் வேண்டும்.
லெனின் சுயநிர்ணயத்தை முன்வைத்தது வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்காகவே, தேசியவாதிகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டது தான் சுயநிர்ணயம். அதேபோல் திரிபுவாதிகளுக்கும், சந்தர்ப்பவாதிகளுக்கும், வரட்டுவாதிகளுக்கும், அனாகிஸ்டுக்களுக்கும் (அராஜகவாதிகளுக்கும்), நடைமுறையற்ற கோட்பாட்டுவாதிகளுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டது தான் சுயநிர்ணயம். சுயநிர்ணயம் என்பது மார்க்சியவாதிக்கே உரிய, வர்க்க செயல் தந்திரம். இதற்கு அப்பால் இதற்கு வேறு அரசியல் விளக்கம் கிடையாது.
இந்த வகையில் லெனின் முன்வைத்த சுயநிர்ணயத்தை, மார்க்சியவாதிகள் அல்லாத யாரும் கோரமுடியாது. மார்க்சியவாதிகள் அல்லாதவர்கள் லெனின் தர்க்;கங்களைக் கொண்டு "சுயநிர்ணயத்தைக்" கோரி அரசியல் விவாதம் நடத்தவும் முடியாது. அது அப்பட்டமான காரிய வாதமும், திரிப்புவாதமுமாகும். இந்த "சுயநிர்ணயம்" மூடிமறைத்த பிரிவினையாகவும், வெளிப்படையான பிரிவினைவாதமாகவும் தான், எதார்த்தத்தில் செயற்படுகின்றது.
மார்க்சியவாதிகள் சுயநிர்ணயத்தை முன்வைப்பது ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட இரு தேசியவாதத்தை தனிமைப்படுத்தி, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காகவே. மார்க்சியத்தை தங்கள் போராட்ட வழியாக கொண்டவர்கள், சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளும் போது, வர்க்கப் போராட்டத்தை தங்கள் நடைமுறை அரசியலாக கொள்ளாத வரை, "சுயநிர்ணயம்" என்பது இங்கு வெறும் தொங்குதசை தான். வாயில் வைத்து உமிழத்தான் உதவும். அரசியல்ரீதியாக தேசியவாதிகளுக்கு உதவுவதாகவே இருக்கும். வெறும் கோட்பாடு இதைத்தான் செய்யும். ஆக, வர்க்க நடைமுறையற்ற தளத்தில் "சுயநிர்ணத்தைக்" கோரும் போது, அது மார்க்சியமல்லாத தரப்புக்கு உதவுவதாகவே இருக்கின்றது. சுயநிர்ணத்தை முன்வைக்கும் போதும், கோரும்; போதும், செயல்பூர்வமான நடைமுறைபூர்வமான ஒன்றாகவும் அது இருக்க வேண்டும்;. இல்லாத போது செயல்பூர்வமான நடைமுறைபூர்வமான தேசியவாதத்துக்கே அது உதவும்.
இந்த வகையில் செயல்பூர்மற்ற "சுயநிர்ணயத்தை"யே தேசியவாதிகள் மார்க்சியத்திடம் கோருகின்றனர். செயல்பூர்வமற்ற மார்க்சியவாதிகளின் "சுயநிர்ணயம்" தேசியவாதிகளுக்கு உதவுகின்றது. இன்று "சுயநிர்ணயத்தைக்" கோருகின்றவர்கள், அதை முன்வைக்கின்றவர்கள் பாட்டாளி வர்க்கமல்லாத தளத்தில் நின்றும், செயல்பூர்வமற்ற மார்க்சிய சொல்லாடலைக் கொண்ட நடைமுறையற்ற வெற்றிடத்தில் நின்று, தேசியவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் உதவுகின்றவர்களாக இருக்கின்றனர்.
மார்க்சியத்தைக் ஏற்றுக்கொண்டு, லெனின் சுயநிர்ணயத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாத இரு அரசியல் போக்குகள் இன்று இலங்கையில் காணப்படுகின்றது.
1. சுயநிர்ணயத்தில் உள்ள பிரிந்து செல்லும் உரி;மையை மறுத்தபடி, சுயநிர்ணயத்தை பகுதியாக முன்வைக்கும் போக்கு. இப்படி பிரிந்து செல்லும் உரிமையை மறுக்கும் போது, இது லெனின் முன்வைத்த சுயநிர்ணயமல்ல. இங்கு லெனின் சொன்ன பிரிந்து செல்லும் உரிமை இலங்கைக்கு இன்று பொருந்தாது என்கின்றபோது அது சுயநிர்ணயமல்ல.
2.மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள் லெனின் முன்வைத்த சுயநிர்ணயம் இலங்கைக்கு முற்றாக இன்று பொருந்தாது என்ற வாதம்.
இந்த வகையில் சுயநிர்ணயத்தை முற்றாக மறுக்கும், மற்றும் பகுதியாக மறுக்கும் இரு அரசியல் போக்கும் காணப்படுகின்றது. பகுதியாக மறுப்பவர்கள், முழுமையாக மறுப்பவர்களைப் பார்த்து சுயநிர்ணயத்தைக் கோருவது நடக்கின்றது. மறுதளத்தில் சுயநிர்ணயத்தை செயல்பூர்வமானதாக நடைமுறையில் முன்னெடுக்காத போது, அது தேசியவாதிகளுக்கு செயல்பூர்வமான நடைமுறைக்கு உதவுவதாக இருக்கின்றது.
இன்று மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு சுயநிர்ணயத்தை மறுக்கும் மற்றும் பகுதியளவில் மறுக்கும் இரண்டு பிரிவினருடன் முரண்பட்ட வகையில், லெனின் முன்வைத்த சுயநிர்ணயம் இலங்கைக்கு பொருந்தும் என்பதே எங்கள் வாதம். இந்த வகையில் சுயநிர்ணயத்தை உயர்த்திப் பிடித்தபடி, இந்த இரண்டு தரப்புடன் அரசியல் விவாதங்கள் மூலம் சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி வருகின்றோம்.
மறுதளத்தில் மார்க்சியமல்லாத தளத்தில் வர்க்கப்போராட்டத்தை மறுக்கவும், தேசியவாதத்தை உயர்த்தவும், முன்வைக்கப்படும் "சுயநிர்ணய" திரிபுவாதங்களையும், காரியவாதங்களையும் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தி வருகின்றோம்.
நடைமுறைச் சாத்தியமான செயல்பூர்வமான ஒன்றாக சுயநிர்ணயம் எப்போது பிரயோக்கப்படுகின்றது என்றால், பாட்டாளி வர்க்கம் ஆட்சிக்கு வருகின்றபோது தான். அது வரை இனவொடுக்குமுறை (தேசிய ஒடுக்குமுறை), இனவாதம் (தேசியவாதம்) இரண்டையும் எதிர்த்து அது நடைமுறையில் போராடுகின்றது.
இந்தப் போராட்டத்தின் ஒருங்கிணைந்த கோட்பாட்டு வடிவம் தான் சுயநிர்ணயம். தங்கள் வர்க்க ஆட்சியில் எந்த வகையான தீர்வை கொண்டது என்பதை உள்ளடக்கிய வண்ணம், பாட்டாளி வர்க்க அதிகாரத்தை உள்ளடக்கிய ஒன்றாகவே சுயநிர்ணயக் கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. இந்த வகையில் மார்க்சிய தத்துவத்தின் அரசியலின் உட்கூறாகவே சுயநிர்ணயம் செயற்படுகின்றது. சுயநிர்ணயம் வர்க்க அரசியல் இருந்து விலகிய தனிக் கூறுயல்ல.
ஆகவே வெறுமனே "சுயநிர்ணயத்தை" மட்டும் வைத்து அரசியல் நடத்துவது சந்தர்ப்பவாதமும், காரியவாதமாகும்;. இது தேசியவாதத்துக்கு உதவுவதாகும்.
இங்கு லெனின் கூற்றான "சந்தர்ப்பவாதிகளைப் பொறுத்தவரை இது செயல்பூர்வமற்றதாக இருக்கலாம். ஆனால் நிலப்பிரபுக்கள், தேசிய பூர்ஷ்வாக்கள் ஆகியவர்களையும் மீறிய வகையில் தேசிய இனங்களுக்கிடையில் அதிக சம அந்தஸ்தையும் சமாதானத்தையும் உண்டு பண்ண இது ஒன்றுதான் உண்மையான உத்தரவாதத்தை அளிக்கிறது" என்ற தர்க்கத்தின் சாரத்தை மார்க்சியவாதிகள் அல்லாத தங்கள் தரப்பு நியாயத்துக்காக திரிக்கப்படுவதை காண்கின்றோம். லெனின் கூற்று இரண்டு அரசியல் அடிப்படைகளை கொண்டது.
1.இங்கு "செயல்பூவமற்றதாக" இருப்பது குறித்து, அதாவது வர்க்கப் போராட்டத்துக்கு முன் அதன் தீர்வு சாத்தியமற்றதையே குறிக்கின்றது. சுயநிர்ணயத்தின் பிரயோகம் என்பது, பாட்டாளி வர்க்க ஆட்சியில் மட்டும் தான் சாத்தியமானது. அதையே இது குறிக்கின்றது. அதைத்தான் "செயல்பூர்வமற்றதாக இருக்கலாம்" என்று விளக்குகின்றார்.
2.பாட்டாளி வர்க்க நடைமுறையற்ற சூழலில், இது தேசியவாதிகளுக்கு உதவும் கோட்பாடாக இருக்கின்றது. லெனின் வர்க்க நடைமுறையுடன் கூடிய போராட்டத்தில் இதை முன்வைக்கின்றார். அதையே "நிலப்பிரபுக்கள், தேசிய பூர்ஷ்வாக்கள் ஆகியவர்களையும் மீறிய வகையில் தேசிய இனங்களுக்கிடையில் அதிக சம அந்தஸ்தையும் சமாதானத்தையும் உண்டுபண்ண இது ஒன்றுதான் உண்மையான உத்தரவாதத்தை அளிக்கிறது" என்கின்றார். கட்சியின் வர்க்கப் போராட்டச் செயற்தளத்தில் இதைக் கோருகின்றார்.
மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள், மார்க்சியத்தை வெறும் தத்துவமாக மட்டும் ஏற்றுக்கொண்டவர்கள், லெனின் இந்தக் கூற்றை தங்கள் சந்தர்ப்பவாத் காரியவாத நோக்கில் இருந்து இதை திரித்தே முன்வைக்கின்றனர். லெனினின் கட்சி, வர்க்கக் கட்சியாக நடைமுறையில் போராடியபடியே முன்வைத்தது தான் சுயநிர்ணயம். அதை வெறுமனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக கோரவில்லை, மாறாக செயல்பூர்வமாக செயற்படுவதற்காகவே, வர்க்கப் போராட்டத்தின் ஊடாக முன்வைத்தார். இதை நிராகரித்து இதற்கு விளக்கம் கொடுப்பது, தேசியவாதிகளுக்கு உதவுவதற்காகத் தான்.
பி.இரயாகரன்
10.04.2013
1. சுயநிர்ணய உரிமை ஏகாதிபத்தியங்களுக்கு உதவும் கோட்பாடா!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 1)
2. இனமுரண்பாட்டையா, சுயநிர்ணயத்தையா ஏகாதிபத்தியம் பயன்படுத்தும்? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 2)
3. லெனினிய காலத்துக்குரிய ஒன்றா சுயநிர்ணயம்!? (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 3)
4.முதலாளித்துவ தேசியவாதத்துக்கு எதிரானதே சுயநிர்ணயம் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 4)
6. இலங்கையில் சுயநிர்ணயம் பற்றிய அரசியற் புரிதல் (சுயநிர்ணயம் குறித்து பகுதி - 6)