Language Selection

எல்லாளன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுதன் ரமேஸ் பிரச்சினையும் என் நிலைப்பாடும்

எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக ரெலோவில் நடந்த பிரச்சினையும் அந்தப் பிரச்சினையில் நான் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுமே இன்று வரையும் என்னை மனிதனாக வாழ வைக்கிறது.

1984 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் ஒருநாள் இரவு சில பொறுப்பாளர்கள் எமது அறைக்கு வந்தனர். எமது தலைவரான சிறி சபாரெத்தினத்தை அடுத்த கட்டத்திலுள்ள உபதலைவர்களான அரசியல் பிரிவை சேர்ந்த சுதன் மற்றும் இராணுவபிரிவைச் சேர்ந்த, ரமேஸ் என்பவர்கள் புலிகளிடம் ஆயுதம் வாங்கிக் கடத்திச் செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் இருவரும் தம்மிடம் தான் உள்ளனர் என்றும் சொன்னார்கள். அதனால் புலிகள் ஆத்திரப்பட்டு சிலவேளைகளில் எமது பாதுகாப்பிற்கே ஆபத்துக்கள் கொண்டு வரலாம், ஆகவே எவரும் வெளியே போக வேண்டாம் என்றும் கூறினார்கள்.

அதன் பின்னர் மனோ மாஸ்ரர் எமது இடத்துக்கு வந்தார். நாம் அவரிடம் அப்பிரச்சினை பற்றிக் கேட்டபோது, கடந்த சில காலங்களாக தலைவருக்கும் உபதலைவர்களுக்கும் மத்தியகுழு அமைப்பது தொடர்பாக சில பிரச்சினைகள் இருந்து வந்ததாகவும், தலைவர் மத்தியகுழு அமைப்பதை தட்டிக் கழித்து வந்தார் எனவும், அதன் காரணமாக அவர்களிடையே உறவுகள் சீர்குலைந்ததாகவும், ஆனால் ரெலோவின் தலைமை கூறுவது போல் நடந்திருக்கச் சாத்தியமில்லை என்றும் கூறினார். அது ஒரு பக்கக் கருத்துத் தான் என்றும் சுதா, ரமேஸ் என்பவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனவும் கூறினார்.

அப்படிச் சொல்லி விட்டு அவர் போனதும் எமக்குள் குழப்பமான எண்ணங்கள் பல வந்தன. எமக்கு என்ன நடக்கப் போகுது என்று எல்லோரும் குழம்பி விட்டோம். இரவு பன்னிரண்டு மணியளவில் எம் போன்று பலவீடுகளில் இருந்தவர்களை வேறு வீடுகளுக்கு இரவோடிரவாக மாற்றம் செய்யத் தொடங்கினர். அது சம்பந்தமாக அவர்கள் எமக்குக் கூறியது, புலிகளிடமிருந்து எம்மைப் பாதுகாக்கவே அதைச் செய்கின்றோம், மாற விருப்பமில்லாவிட்டால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரும், உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றே. எமது வீட்டிற்கு அவர்கள் உடனடியாக வராததினால் நாங்கள் சில முடிவுகளை எடுக்க எங்களுக்கு அவகாசம் இருந்தது.

எமது வீட்டிலிருந்த இருபது பேரில் பலர் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக இருந்தார்கள். எமது வீட்டில் பலர் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்களாகவும் உபதலைவர்களுடன் கூடிய தொடர்புகளையும் கொண்டிருந்தவர்களாகவும் இருந்தனர். அத்துடன் எல்லாரும் தமக்கும் ஏதாவது நடக்கக் கூடும் என்றும் நினைத்தனர். என்னைப் போல் சிலரே தனிநபர்களாக எவருடனும் எதையுமே கதைக்க முடியாதவர்களாக இருந்தனர். எனினும் எமக்குச் சரியென நினைப்பதை எவர் எமது வீட்டுக்கு வந்தாலும் (தலைமை மட்டத்திலிருந்து) பிரச்சினைகளைக் கதைக்க வேண்டும் என்றும், கதைக்கச் சந்தர்ப்பம் கிடைக்காவிட்டால் வீடு மாறுவதை தவிர்ப்பது எனவும் முடிவெடுத்தோம். அதில் முக்கியமாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ராம் (திருகோணமலை), ரகு (மட்டக்களப்பு) யசீர், அரபாத் (கல்முனை) மற்றும் நானும் எதைப்பற்றியுமே கவலைப்படவில்லை. உதாரணமாக, யார் எமக்குள் உளவாளியாக இருப்பார்கள் என்றெல்லாம் பயப்படவில்லை. தலைவர்-உபதலைவர்களுக்கிடையிலான  பிரச்சினையைத் தீர்க்காமல் நாம் வீடு மாறப் போவதில்லை. அதை எமது வீட்டிலிருந்த இருபது பேருக்கிடையே வைத்தோம். அது எவ்வாறு இருந்தாலும் எவர் மேலும் எவருக்கும் நம்பிக்கை அற்ற நிலையில் தான் நாம் இருந்தோம்.

வேறு வீடுகளில் இருந்தும் ஒருவராக அல்லது இருவராக எமது வீட்டிற்கு வந்தனர். அந்தப் பிரச்சினைகள் பற்றிக் கதைத்தனர். அவ்வாறு வந்தவர்கள் வடமராட்சிப் பகுதியினைச் சேர்ந்தவர்களும் சுதா, ரமேஸ் ஆகியோருடன் குறைந்தபட்ச உறவுகளை வைத்திருந்தவர்களுமே. அவர்களும் எமது வீட்டில் இருந்து விட்டனர். அதிகாலையில் எம்மை வீடு மாற்றுவதற்காக ஒரு குழுவினர் வந்தனர். நாலு பேர் வரை அவர்களுடன் சென்றனர். நாம் அந்தப் பிரச்சினை பற்றித் தலைமை மட்டத்தில் யாருடனாவது கதைக்க வேண்டும் எனக் கேட்டோம். பதில் வரவில்லை.

சில மணித்தியாலங்களின் பின்னர் வேறு குழுவினர் வந்து தமது நிலைமையை விளக்கினர். அதாவது தற்பாதுகாப்பிற்காகத் தான் தலைமை வீடு மாற்றச் சொல்கிறது எனவும் புதிய வீட்டில் இந்தப் பிரச்சினையைக் கதைப்போம் என்றனர். அதன் விளைவாக மேலும் நாலு பேர் அவர்களுடன் சென்றனர்.

பின்னர் ஒரு குழுவினர் வந்தார்கள். தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் எனவும் தலைமை வீடு மாறச் சொல்கின்றபோது வீடு மாற வேண்டும், வீடு மாறப் விரும்பாதவர்கள் தலைமைக்கு எதிரானவர்கள் எனவும் அவர்கள் சம்பந்தமாக தலைமை நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினர். இந்த எச்சரிக்கையின் விளைவாக மேலும் பலரை அவர்கள் இடம் மாற்றினார்கள். என்னைப் போல் சிலர் இந்தப் பிரச்சினையைக் கதைப்பதற்கு சந்தர்ப்பம் தாருங்கள். அதன் பிறகு இடம் மாறுவோம். சில நாட்கள் இங்கே இருந்தாலும் பரவாயில்லை எனக் கூறினோம். அதன் விளைவாக, மேலும் எச்சரிக்கைகளாக உங்கள் மீது இரவோடிரவாக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீங்கள் எல்லாரும் புலிகளின் ஆட்கள் எனவும் தலைமைக்கு எதிரானவர்களுக்கு மரணதண்டனை என்றெல்லாம் அவரவர் விரும்பியபடியே எச்சரித்தனர். அதனால் மேலும் சிலர் அவர்களுடன் சென்றனர்.

எமது வீட்டில் இருந்தவர்களில் ஒருவர் தனது உடுதுணிகளை எல்லாம் அவர்களுடன் அனுப்பி விட்டு, எம்மைச் சமாதானப்படுத்திக் கூட்டிக் கொண்டு போவதற்காக நின்றவர் பின்னர் தலைமையின் எச்சரிக்கையைக் கண்டு பயந்து, பிந்திப் போனால் தனக்கு என்ன நடக்குமோ என்று நினைத்து அவரும் எம்முடன் நின்று விட்டார். இவருடன் நாம் 13 பேரானோம். இப் பதினமூவரும் ஸ்ரூடியோ றூம் ஆக்கள் என அடையாளப்படுத்தபட்டவரானோம்.

உயிருக்கு ஆபத்தும் தப்பி ஓடுதலும்

எமது உயிருக்கு ஆபத்து என்ற கட்டத்தில் எங்கள் பிரச்சினையை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிவிப்பது அல்லது குறைந்தபட்சம் பொலிஸ் உதவியை நாடுவது என்ற நிலைக்கு நாம் வந்து விட்டிருந்தோம். எங்களில் ஒருவர் (காந்தராஜா மாஸ்டர்) மண்ணெண்ணெய் உடன் தீக்குளிக்கும் முயற்சியில் வீதிக்கும் வந்து விட்டார். தீக்குளிப்பது என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் பலரின் கவனத்தை ஈர்க்கும் என்பது அவரின் முடிவாகும். அவரைச் சமாளித்து அவரின் முடிவை மாற்றினோம். எதிர்பார்த்தது போல் அன்றைய இரவில் எதுவும் நடைபெறாததால் எமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எம்மைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தினோம்.

அடுத்த வேலையாக எமது பிரச்சினையை ரெலோவுடன் உறவுகளை வைத்திருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃவ், ஈரோஸ் போன்ற அமைப்புக்களுக்கு தெரியப்படுத்த முயற்சித்தோம். ஆனால் எவருக்குமே இவ்வமைப்புக்களின் தொடர்புகள் இருக்கவில்லை. அதே நேரத்தில் தீக்குளிக்க வெளிக்கிட்டவரும் (காந்தராஜா மாஸ்டர்) சுபாஸ் என அழைக்கப்பட்ட நவமும் (ஜேர்மனியில் வசித்த அழகலிங்கத்தின் தம்பி) அதிகாலையில் தப்பி ஓட வெளிக்கிட்டார்கள். அதை அறிந்தவுடன் நானும் அவர்களுடன் ஓட ஆயத்தமானேன். அவர்கள் இருவரும் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள். நான் அந்தப் பகுதியைச் சேராதவன் என்பதால் அவர்களுக்கு என்னில் நம்பிக்கை இல்லாததால் என்னை வெளிக்கிடச் சொல்லிவிட்டு அவர்கள் ஓடிப் போய் விட்டார்கள்.

நான் தப்பி ஓட முடிவெடுத்தவுடன் உடனடியாக ராஜனுடன் இங்குள்ள நிலைமைகள் மோசமாக உள்ளது, நான் தப்பி ஓடப் போகின்றேன், நீங்கள் வரவிரும்பினால் வரலாம், எல்லாரும் தப்புவது பிரச்சினையானது எனவும் எனக்கு யாரிடமும் நம்பிக்கை இல்லை எனவும் கூறினேன். அதற்கு ராஜன் தனது சகோதரர் மனோ மாஸ்ரர் என்பவர் இயக்கத்திலிருப்பதாகவும தான் தப்பி ஓடினால் அதன் விளைவாக அவருக்கு ஏதாவது நடக்கலாம், எனவே தான் வர முடியாதெனவும் கூறினார். இச்சந்தர்பத்திலேயே தான் ராஜன், மனோ மாஸ்ரரின் தம்பி என நான் அறிந்துகொண்டேன். நான் அவரைத் தப்பியோட அழைத்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர் என்னைப்போலவே சிந்திப்பவராகவும் நட்புடன் பழகுபவராகவும் இருந்ததும், அதனால் இரண்டாவது, எனக்கு சென்னையிலுள்ள ஒரேயொரு வெளித்தொடர்பு அவருக்கு மட்டும் தான் தெரியும். அவரை விட்டுப் போனால் அவரைப் பிடித்துச் சித்திரவதை செய்தால் அவர் என்னைக் காட்டிக் கொடுக்கலாம் என்பதால் அவர் என்னுடன் இருப்பது எனக்குப் பாதுகாப்பாகப் பட்டது. ஆனால் விடிந்தால் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் அன்று அப்படிப்பட்ட முடிவைத்தான் என்னால் எடுக்க முடிந்தது.

அந்;த வேளை, காலையில் தப்பி ஓடிய இருவரும் மாலையில் ஆட்டோவில் வந்து இறங்கினர். நாம் நினைத்தோம் அவர்கள் பிடிபட்டுத் தான் வீட்டிற்கு வருகிறார்கள் என்று. ஏற்கெனவே வீட்டில் அடைபட்ட நிலையில், வெளியே ரெலோ உறுப்பினர்கள் காவலுடன் எம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவர்கள் இருவரும் திரும்பி வந்தது எமக்குள் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் தப்பி விட்டார்கள் என்றும் அவர்கள் எங்கள் பிரச்சினையை வெளியே சொல்லி இருப்பார்கள், அதுவே எமக்குப் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி இருந்த எங்களுக்கு அவர்கள் திரும்பி வந்தது பிரச்சினையாக இருந்தது. அதிலும் எனக்குப் பிரச்சினையாக இருந்த விடயம் அவர்களுடன் தப்பியோட காலையில் வெளிக்கிட்டவன் நான் என்பதால் நானும் மாட்டுப்பட்டது போல் உணர்ந்தேன்.

அவர்கள் வீ;ட்டுக்குள் வந்தபோது காவலுக்கு நின்றவர்களுக்கு அவர்கள் கூறிய காரணம், சுகமில்லாததால் பெரிய வைத்தியசாலைக்கு காலையில் சென்று இப்போது தான் திரும்பி வருகிறோம் என்பதே. அவர்கள் இருவரையும் நாம் பிடித்து என்ன நடந்தது, ஏன் திரும்பி வந்தீர்கள் என்று கேட்டபோது அவர்களின் பதில் படு முட்டாள்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. முதலாவதாக தப்பி ஓடுவதற்காக அவர்கள் போன இடம் மீனம்பாக்கம் விமான நிலையமாகும். அங்கு போய் தங்களை இலங்கைக்கு அனுப்புமாறு கேட்டிருக்கிறார்கள். ஏதோ அவர்கள் பாஸ்போட்டுடனும் விசாவுடனும் றிற்றேன் ரிக்கற் வைத்திருக்கிறவர்கள் போலவும் விமான நிலையத்திற்குப் போனால் இலங்கைக்குப் போகலாம் என்று நடைமுறை நிலைமைகளை விளங்கிக் கொள்ளாமல் சென்றிருக்கின்றனர்.

அவர்களின் நிலைமைகளைக் கேட்ட இலங்கையர் ஒருவர் -விமானம் ஓட்டுவதற்கு பயிற்சி பெறுகின்ற மாணவர் - நிலைமைகளை விளக்கி நூறு ரூபா பணமும் கொடுத்து திருப்பி அனுப்பி விட்டிருக்கிறார். அந்த நபர் பின்பு விமான நிலையக் குண்டு வெடிப்புடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர். அதன் பிறகும் அவர்கள் பஸ் நிலையம் சென்று ஏதாவது வழி கிடைக்கிறதா என்று பார்த்து விட்டு வேறு வழியில்லாமல் தான் திரும்பவும் வந்திருந்தனர். அப்போது தான் எனக்குப் பெரும் நிம்மதி ஏற்பட்டது. நல்லவேளை அவர்களை நம்பி நானும் ஓடாதது என்று நான் நினைத்தேன்.

பெண் போராளிகளின் பங்களிப்பு

அவ்வாறு எமது கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி உட்கட்சிப் போராட்டத்தினை நடத்தியோர் ஆண்களில் பதின்மூன்று பேர் மட்டுந்தான். இந்த நிலையில் பெண்கள் குழுவில் இருந்த நாற்பதுக்கு மேற்பட்டவர்களில் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் வேறு வீடுகளில் எமக்குச் சார்பாக எம்முடன் இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடைய போராட்டமும் எமக்கு பலம் அளித்தது. இவர்களில் நினைவில் வருபவர்களாக சுதா, கல்பனா காந்தா, லலிதா, சோபா, ரஞ்சி, மோகனா உள்ளனர்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஆரம்பத்தில் சுதன் ரமேஸ் போன்றவர்களின் நடவடிக்கைகளுக்காக சிறி சபாரெத்தினம் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகளைக் கேட்டு அவர்களுடைய பதில்களைப் பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பின்னர் அவர்களுடைய பயமுறுத்தல்கள், எச்சரிக்கைகள் போன்றவற்றின் மூலம் அடுத்த கட்டத்தினை அடைந்தது. பேச்சுச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் இருக்க வேண்டும். சுதன், ரமேஸ் ஆகியோர்களை உயிருடன் காட்ட வேண்டும். அவர்களுடைய நடவடிக்கைகள் சம்பந்தமாக உட்கட்சி விசாரணைகள் இல்லையேல் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். எம்மீது ரெலோவின் பல குழுத்தலைவர்கள் நடந்து கொண்ட முறை சம்பந்தமான விசாரணை என்றெல்லாம் வளர்ந்து கொண்டே போனது.

நாம் அப்போதும் ரெலோ உறுப்பினர்களே. அந்தப் பிரச்சினைகள் தீர்;க்கப்பட்டால் தான் நாம் மீண்டும் இயங்குவோம் என்ற அடிப்படையில் ஒரு மாதத் தவணையைத் தலைமைக்குக் கொடுத்தோம். அந்த ஒரு மாதத்தில் கூட தலைவர் எம்மைச் சந்தித்துப் பேசத் தயாரில்லை. ஆனால் அவர்கள் எமக்குரிய படிப்பணத்தினை (சாப்பாட்டுச் செலவுகளை) அனுப்பிக் கொண்டே இருந்தனர். அதேநேரம் எம்மைப் போல இருந்த பெண் போராளிகளை பயமுறுத்தத் தொடங்கினர். அதன் விளைவாக அவர்களை எமது இருப்பிடத்துக்கு அழைத்துப் பாதுகாப்பு கொடுத்தோம் என்றும் சொல்லலாம். அல்லது அவர்கள் எமக்குப் பாதுகாப்புத் தந்தார்கள் என்றும் கூறலாம்.

தீர்வுகள் எதுவும் வைக்காமல் மேலும் மேலும் பிரச்சினைகள் வளர்ந்து கொண்டே போயின. அதனால் அவர்களின் பிரதேசத்துக்குள் இருப்பது மேலும் மேலும் பிரச்சனைகளை வளர்த்துவிடும் என்று நினைத்ததால் நாம் வேறு இடத்துக்கு மாறினோம். அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டி எத்தகைய போராட்டத்தினை நடத்துவது என்று தீர்மானித்தோம். சொந்த உறுப்பினர்களுக்கே கருத்துச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையை அந்த இயக்கத்திற்காக நாட்டில் வேலை செய்பவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். ஏனெனில் அவர்கள் நாட்டில் சொன்னதுபோல் இங்கு அமைப்பு இருக்கவில்லை. பல தொகுதிப் பொறுப்பாளர்களும் உடனடியாகத் தமிழ்நாடு வந்தார்கள். எமக்கும் தலைமைப்பீடத்திற்கும் இடையில் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

திருடன் பொறுப்பாளனாகிய அங்கதம்

நாட்டிலிருந்து வந்த தொகுதிப் பொறுப்பாளர்கள் எம்மை வந்து சந்தித்த பின் ரெலோவுடன் இருக்கும் மற்றைய அரசியல் பிரவினரையும் சந்தித்தனர். இருநூறு பேர் அளவில் உள்ள அரசியல் பிரிவில் பதின்மூன்று ஆண்களும் முப்பது பெண்களுமாக ஒரு பக்கமாக போராட்டத்தில் இருந்தோம். எம் பிரச்சினையைத் தீர்த்தபின் தான் ரெலோவுடன் மீண்டும் வேலை செய்யலாம் என்ற நிலையில் நாங்கள் இருந்தோம்.

அந்த நிலையில் ரெலோவுடன் உள்ளவர்களைச் சந்திக்கச் சென்ற மன்னார் ரவி மிகவும் கவலைப்பட்டவராகத் திரும்பி வந்தார். நாம் அவரை ஏன் என்று கேட்டபோது அவர் கூறிய செய்திகள் எம்மைத் திடுக்கிட வைத்தன. தனது தொகுதியில் திருடன் என்று குற்றஞ்சாட்டப்பட்ட ரெலோவிடம் தண்டனை கொடுக்கும்படி அனுப்பப்பட்ட ஒருவரை தான் தன் இருப்பிடத்தில் வைத்திருந்ததாகவும் அவரை மனோ மாஸ்ரர் சும்மா நாம் விரும்பியபடி ஒருவருக்குத் தண்டனை கொடுக்க முடியாது என்றும் விடுதலை செய்யும்படியும் கூறியிருந்தார். அந்த நபரை தனது இருப்பிடத்தில் வைத்திருந்தபடியால் அவரை விடுதலை செய்வது தனது இருப்பிடத்தை இலங்கை அரசிற்குக் காட்டிக் கொடுத்து விடும். அதனால் அதனால் அவரை இந்தியா செல்லும் வள்ளத்தில் ஏற்றிவிடச் சொல்லியும் அவரை இந்தியா சென்றவுடன் தனியாக விட்டு விடவும் சொல்லியிருந்தார்கள். ஆனால் இங்கு வந்து பார்த்தால் அவர் அரசியல் பிரிவில் இருக்கிறார். அத்துடன், அவர் தலைமைக்காக தன்னிடம் கேள்வி கேட்டுத் பிரச்சினைப்பட்டதாகவும் அவரை அங்கு பார்த்தவுடன் தான் குழம்பிப் போனதாகவும் சொன்னார்.

மரினா கடற்கரையில் சாகும்வரை உண்ணாவிரதம். எம்.ஜி.ஆர் தலையீடு

எமது பிரச்சினைகளைத் தலைமைப்பீடம் தீர்ப்பதற்கு முன்வராததால் நாட்டின் பொறுப்பாளர்களில் பலர் எம்முடன் சேர்ந்தனர். அதன் பலனாக நாம் மேலும் பலம் பெற்றவர்களாக மாறினோம். அடுத்த கட்டப் போராட்டமாக சுதன், ரமேஸ் சம்பந்தமாகப் பேசுவது, பேச்சுச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் அற்ற தன்மைகளையும் கண்டித்துச் சாகும்வரை உண்ணாவிரதம் செய்வது, தமிழ் நாட்டு மக்களிடையே இப்பிரச்சினைகளை எடுத்துச் சொல்வது என்ற நிலைக்கு வந்தது.

அப்போது எமக்குள் புதிய பிரச்சினை ஒன்று தோன்றியது. யார் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது என்பது தான் அது. எல்லாருமே தான் இருக்க விரும்புவதாகவும் தமக்குச் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என்றும் கூறினர். எனவே பிரதேசவாரியாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ரகு, ராம் என இருவரும் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த காந்தராசா மாஸ்ரர், ராஜன் என்ற இருவரும் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பது என்று முடிவானது. அதன் முடிவுகளை எதிர்பார்த்து மறுநாள் ஐந்து பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அந்த உண்ணாவிரதம் சென்னை மரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் நடைபெற்றது. அந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக் கொண்டோம். ஒரு சிலர் அங்குள்ள கட்சித் தலைவர்களைச் சந்திப்பது -எம்.ஜி.ஆர், கருணாநிதி போன்றவர்களை –என்று முடிவானது. ஒரு சிலர் நாம் ஏன் உண்ணாவிரதம் இருக்கின்றோம், எங்கு இருக்கின்றோம், எமது பாதுகாப்பற்ற நிலைக்கு பாதுகாப்பும் எமது போராட்டத்திற்கு ஆதரவு தருமாறும் பிரசுரங்களை விநியோகிப்பது என்ற பொறுப்புக் கொடுக்கப்பட்டது. வேறு சிலர் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் வருபவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

உண்ணாவிரதம் நடைபெறுவதை ஒட்டி சுமார் ஆறு வகையான பிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டன. அவற்றின் சாரம்சம் நாம் யார் என்பதே. உண்ணாவிரதம் நடைபெறும் இடம் பொதுவானதாக இருந்தாலும் கருத்துக்களின் உள்ளடக்கத்தில் பெரிய முரண்பாடுகள் இருந்தன. சிறி சபாரெத்தினம், சந்திரஹாசன் ஆகியோரின் கூட்டுவேலையே இந்த சுதன், ரமேஸ் போன்றவர்களின் கைது என்பது போலத் தெரிவிப்பது. மற்றொன்று சந்திரஹாசன் ஒரு சிஐஏ உளவாளி என்று தெரிவிப்பது. இன்னொன்று ரெலோவின் தலைமை இந்தியாவின் விசுவாசிகள் என்று தெரிவிப்பது. மற்றது, தமிழ் ஈழ மக்களின் விடுதலையை விட்டு இங்கு ஏசி கார்களில் வலம் வருகிறார்கள் என்பது.

மற்றைய இயக்கங்கள் இந்த நேரத்தில் எமக்குத் தேவையான சில உதவிகளைச் செய்தனர். ஆனால் எமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க விரும்பவில்லை. மாறாகப் பிரச்சினைகளை வளர்த்து விடவே விரும்பினர். இந்த நிலையில் தான் எம் தமிழ் நாடு கியு பிரிவு பொலிஸ் எங்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கியது. றோ அதிகாரிகள் வந்து எமது உண்ணாவிரதத்தினைப் பார்த்துவிட்டு சென்றனர். எம் குழுவின் மீது பலத்த கண்காணிப்புடனும் அவதானித்துடனும் எமக்குப் பாதுகாப்புத் தருவதற்கான வேலைகளில் ஈடுபடத் தொடங்கினர். மூன்று நாட்களுக்குப் பின் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மிகவும் சோர்வுற்ற நிலைக்கு வந்த பின்னர் தான் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடனடியாக சுதன், ரமேசை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், எம்மை உண்ணாவிரதத்தினை முடிக்குமாறும் திரு ஜனார்த்தனன் மூலம் கேட்டுக் கொண்டார். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எமது சாகும்வரை உண்ணாவிரதத்தை திரு ஜனார்த்தனன் பழரசம் கொடுத்து முடித்து வைத்தார்.

1. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 1

2. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 2

3. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 3

4. ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 4